வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் – பகுதி-3 எனக்குப் பிடித்த எனது உரை

This entry is part 19 of 22 in the series 24 ஜனவரி 2016

collage_3

படத்தில்:

கடிகாரச் சுற்றுப்படி: செ.முஹம்மது யூனூஸ், மு:இராமனாதன், எஸ்.பிரசாத், வித்யா ரமணி

 

வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம்

தொகுப்பு: மு இராமனாதன்

பகுதி-3 எனக்குப் பிடித்த எனது உரை

 

[ரேடியோ டெலிவிஷன் ஹாங்காங்(RTHK) சிறுபான்மை தேசிய இனங்களுக்காக நிகழ்த்திய  தொடர் ஒலிபரப்பில் 19.9.15 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டத்தைக் குறித்த உரையாடல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் எழுத்து வடிவம் இங்கே இடம் பெறுகிறது. இது மூன்றாம் பகுதி]

 

எனக்குப் பிடித்த எனது உரை

 

நேயர்களே! ஹாங்காங் இலக்கிய வட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். அடுத்து நான்கு நண்பர்கள் தாங்கள் இலக்கிய வட்டத்தில் நிகழ்த்திய உரைகளில் தங்களுக்குப் பிடித்தமான உரையைக் குறிப்பிட்டு அதிலிருந்து சில பகுதிகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

 

சதாவதானி செய்குத் தம்பிப் பாவலரின் சிலேடை

செ.முஹம்மது யூனூஸ்

(27 டிசம்பர், 2010 அன்று நடந்த கூட்டத்தில் பேசியது; நினைவிலிருந்து சில பகுதிகள்)

 

சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் ஒரு பெரும் தமிழ்ப் புலவர்.  ஒரே சமயத்தில் நூறு அவதானங்கள் செய்வார். அந்தக்  காலத்தில் வாழ்ந்த பல தமிழ் அறிஞர்கள் அதைப் பார்த்து, கேட்டு ரசிப்பார்கள். கூடவே அவரைச் சோதிப்பார்கள். ஒரு கணக்கைக் கொடுத்துப் போடச் சொல்லுவார்கள். போடுவார். ஒரு பழம் பாட்டில் கடைசி வரியைச் சொல்லிப் பாடலைக் கேட்பார்கள். சொல்லுவார். இன்ன வருடத்தில் இன்ன மாதத்தில் இன்ன நாளில் என்ன கிழமை என்று கேட்பார்கள். சொல்லுவார்.  இடையிடையே இதைப்பற்றிப் பாடுங்கள் அதைப்பற்றிப் பாடுங்கள் என்றும் கேட்பார்கள். அவர் பாடல் இயற்றிப் பாடுவார்.

 

அந்தக் காலத்தில் முஸ்லிம்களை துருக்கர் என்று சொல்லுவார்கள். பின்னாளில் துருக்கர் என்பது துலுக்கர் என்று மாறியது. துருக்கியிலிருந்து வந்தவர்கள் அல்லது அதைச் சார்ந்து வாழ்கிறவர்கள் என்ற பொருளில் துருக்கர்  என்று சொல்லியிருக்க வேண்டும். ஒருவர் கேட்கிறார்:  ‘ராமனுக்குத் துருக்கன் அடிமை- இந்த அடியை வைத்துகொண்டு ஒரு பாட்டு பாடுங்கள்’. செய்குத் தம்பிப் பாவலர் அவதானங்கள் செய்து கொண்டிருக்கும் போதே பாடுகிறார்: “அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்தியின் புதல்வர்கள் பரதன் லட்சுமணன் சத்துருக்கன், ராமனுக்கு அடிமை” என்று. சத்துருக்கர் என்பதில் துருக்கர் என்று வந்து விடுகிறதல்லவா!

 

ஒரு முறை ஜி. சுப்ரமணிய ஐயர் எழுந்து சிலேடையாக கடவுள் வணக்கச் செய்யுள்  ஒன்றை பாடச் சொன்னார். பாவலர்

சிரமாறுடையான் செழுமா வடியைத்

திரமா நினைவார் சிரமே பணிவார்

பரமா தரவா பருகாருருகார்

வரமா தவமே மலிவார் பொலிவார்

-என்று பாடினார். இதில் சிரமாறுடையான் என்பதற்கு சிவன், விநாயகன், முருகன், திருமால், அல்லாஹ் என்று பொருள் வரும்.

 

சிரம் ஆறுடையான் – சிரத்தில் கங்கையாற்றை உடைய சிவபெருமான்,

சிரம்மாறு உடையான் – இயல்புக்கு மாறுபட்ட மனிதத் தலைக்குப்  பதிலாக யானைத் தலைய உடைய விநாயகன்,

சிரம் ஆறுடையான் – ஆறு சிரங்களை உடைய முருகன்,

சிரம் “ஆறு” உடையான் – திருவரங்கத்தில் தலைப்பாகம் காவிரியாற்றையுடைய, பள்ளிகொண்ட திருமால்,

சிரம் ஆறு உடையான் – உலகுக்குத் தலையாய (சிரம்) நல்வழிகளை (ஆறு), மார்க்கத்தை அருளிய அல்லாஹ்

 

காளமேகம்  பாடிய

சங்கரற்கும் ஆறுதலை சண்முகற்கும் ஆறுதலை

ஐங்கரற்கும் ஆறுதலை ஆனதேசங்கைப்

பிடித்தோர்க்கும் ஆறுதலை பித்தாநின் பாதம்

படித்தாற்கும் ஆறுதலைப் பார்

-என்ற  பாட்டிற்கு இணையான பாட்டு இது என்று சொல்வார்கள்.

—-

 

பாரதியின் சவால்

எஸ்.பிரசாத்

(27 ஜனவரி 2007 அன்று நடந்த கூட்டத்தில் பேசியது; நினைவிலிருந்து சில பகுதிகள்)

 

பாரதியார் கவிதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி

அகத்திலே அன்பினோர் வெள்ளம்

பொறிகளின் மீது தனி அரசாணை

பொழுதெலாம் நினது பேரருளின்

நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்

நிலைத்திடல் என்றிவை அருளாய்

குறி குணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்

குலவிடும் தனிப் பரம் பொருளே!

 

இந்தப் பாடலில் கடவுள் வாழ்த்தில் திருவள்ளுவர் சொல்கிற பல குறட்பாக்கள் வந்துவிடுகின்றன.

அறிவிலே தெளிவு-என்பதை

கற்றதனால் ஆய பயன் என்கொல்-வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்?.

என்று குறளில் பார்க்கலாம், ஏனெனில் கடவுள் தூய அறிவானவன், வாலறிவன்

 

பொறிகளின் மீது தனி அரசாணை -என்பதை

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடு வாழ்வார்

என்கிற குறளின் நீட்சியாகப் பார்க்கலாம்.

 

குறி குணம் ஏதும் இல்லதாய்-என்பது

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை

என்கிற குறளில் இருக்கிறது.

 

பாரதி பழந்தமிழ்க் கவிஞர்களைப் போலவே தான் வாழ்ந்த காலத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களையும் பாராட்டினான். 1906ல்  உ.வே.சாமிநாத ஐயருக்கு மகா மகோபாத்யாயா பட்டம் கிடைத்த போது ஒரு வாழ்த்துப்பா பாடினான்.. அப்போது உ.வே.சா விற்கு  வயது 67-க்கு மேல். பாரதிக்கு வயது 24.  மாநிலக் கல்லூரியில் கூட்டம். “இந்தப் பட்டத்தைத் தந்தவர்கள் யார்? ‘அந்நியர்கள் தமிழ் செவ்வி அறியாதார்’. இதற்குப் போயா நீங்கள் சந்தோஷப்படுகிறீர்கள்? சூரியன் உதித்துவிட்டது. சூரியனுக்கு வெம்மை இருக்கிறது என்று சொன்னால் சந்தோஷப்படுவோமா?” என்று கூறி பாரதி கேலி செய்தானாம். .

 

வள்ளுவனுக்கோ, இளங்கோவிற்கோ, கம்பனுக்கோ இல்லாத ஒரு சவால் பாரதிக்கு இருந்தது. அது தமிழ்  மொழியை நவீனப்படுத்தி அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது. பாரதி அதைச் செய்தான். பெர்னாட்ஷா சொன்னாராம்: ஷேக்ஸ்பியர் உயர்ந்த மனிதன்தான். ஆனால் நான் ஷேக்ஸ்பியரைவிட உயர்ந்தவன். ஏனென்றால் நான் அவருடைய தோள்களின் மேல் ஏறிநின்று உலகத்தைப் பார்க்கிறேன். அதுபோல் பாரதியும்  கம்பன், இளங்கோ வள்ளுவனைவிட  மிக உயர்ந்தவன்.  ஏனெனில் அவர்கள் தோள்களின்மேல் ஏறி நின்று இவன்  உலகத்தைப் பார்க்கிறான்.

 

வோர்ட்ஸ்வொர்த்தைப் புரிந்து கொள்வது

வித்யா ரமணி

(12 நவம்பர், 2005 அன்று நடந்த கூட்டத்தில் பேசியதிலிருந்து சில பகுதிகள்)

 

வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் – இயற்கைக் கவிஞன், கற்பனையும் காதலும் பரவி நிற்கும்  ரொமாண்டிக் கவிஞன். அவனது கவிதைகள் என்னைப் பலவிதமாய்ப் பாதித்திருக்கிறது. இலக்கியம் குறித்தும், வாழ்க்கை குறித்தும் என்னுடைய அனுபவங்கள் விரிவடையும் போதெல்லாம், அவனுடைய கவிதைகள் குறித்தான புரிதலும் விரிவடைந்து வந்திருக்கிறது.

வோர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகளுக்கும் காலம் என்பது இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவனது கவிதைகள் அவன் பாடிய காலத்தைக் காட்டிலும் இந்தக் காலத்திற்குத்தான் இன்னும் பொருந்தி வருகிறது. இன்றைக்கு நாம் இயற்கையை மதிப்பது இல்லை, இடைவிடாமல் அதைச் சுரண்டிக் கொண்டும் அழித்துக் கொண்டும் இருக்கிறோம். இந்தப் பின்புலத்தில் தான் வோர்ட்ஸ்வர்த்தின் கவிதைகள் இயற்கையோடு ஒரு உணர்ச்சி மிக்க உறவைக் குறித்துப் பேசுகிறது. அவனது புகழ் பெற்ற The Daffodils கவிதையில் இடம் பெறும் வரிகள் இவை:

 

For oft, when on my couch I lie

In vacant or in pensive mood,

They flash upon that inward eye

Which is the bliss of solitude;

And then my heart with pleasure fills,

And dances with the daffodils.

 

இந்தக் கவிதையை முதன்முதலாக நான் ஐந்தாம் வகுப்பு மாணவியாக இருந்த போது படித்தேன். அப்போது தென்றலில் நடனமிடும் தங்கப்பூக்களின் காட்சி என் இளம் நெஞ்சை குதூகலிக்க வைத்தது. ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு இதே கவிதையைப் படித்த போது, அவன் இயற்கையின் மெய்யான தத்துவத்தை உண்டாக்கி, அதன் மூலம் தன்னையே உணர்ந்து கொள்ள முயற்சிக்கிறான் என்று தோன்றியது.

 

கவிதையின் இறுதியில் Vacant or Pensive mood என்று வருகிறது , இதில் ஆழ்மனதின் ஓட்டங்களைச் சொல்கிறான். Inward eye எனபது  ஆன்மாவைக் குறிக்கும் கவித்துவச் சொல் என்று தோன்றுகிறது. My heart with pleasure fills, And dances with the daffodils எனபதில், கவி ஒரு மகிழ்வான தருணத்தை மீளக் கொணர்கிறான் என்று தோன்றுகிறது. வேறு  தளத்தில் அவனது ‘ஆன்மா மலர்களோடு ஒன்றாகிறது’ என்றும் பொருள்படுகிறது.

 

.முத்துலிங்கத்தின் வெளி

மு.இராமனாதன்

(23 ஏப்ரல், 2006 அன்று நடந்த கூட்டத்தில் பேசியதிலிருந்து சில பகுதிகள்)

 

அ.முத்துலிங்கத்தின்  ‘வியத்தலும் இலமே’ என்கிற புத்தகம் ஆங்கில எழுத்தாளர்களின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பு. இந்த எழுத்தாளர்கள் பிரபலமானவர்கள், எழுத்தை ஆராதிப்பவர்கள், ஆனால் காட்சிக்கு எளியவர்கள் அல்லர். இவர்களை முத்துலிங்கம் விரட்டிப் பிடித்து நேர்கண்டிருக்கிறார்.  இவர் பேட்டி கண்ட எழுத்தாளர்கள் யார் யார்? இந்தப் புத்தகம் வெளியானபோது கனடாவின் அலிஸ் மன்றோவுக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. பிற்பாடு கிடைத்தது. கனடாவின் மார்கிரட் அட்வூட், அமெரிக்காவின் டோபையாஸ் வூல்ப், டேவிட் செடாரிஸ், இன்னும் ஆங்கிலத்தில் எழுதும் பிற மொழிக்காரர்களான ஆப்பிரிக்காவின் அமினாட்டா ·போர்னா, முகமது நஸீகு அலி, முன்னாள் சோவியத் குடியரசின் டேவிட் பெஸ்மாஸ்கிஸ், இலங்கையின் ஷ்யாம் செல்வதுரை-இப்படிப் பலர்.

 

ஆங்கில எழுத்தாளர்களை ஒரு வாசகனாகப் படித்து, ஒரு ரசிகனாக வியந்து, ஒரு விமர்சகனாக நுணுகி ஆராய்ந்து, ஒரு நிருபராகப் பேட்டி கண்டு, ஒரு மொழிபெயர்ப்பாளனாய் உரையாடலைத் தமிழ்ப் படுத்தியிருக்கிறார். இவை எல்லாவற்றையும்விட முக்கியமாய் இந்த நேர்காணல்களை ஒரு படைப்பாளியாகத் தொகுத்துக் கட்டுரையாக்கி வழங்கியிருக்கிறார். எப்படி?

 

இந்த நேர்காணல் கட்டுரைகளின் சிறப்பம்சம் இவற்றின் கட்டுமானம். பெரும்பாலான நேர்காணல்கள் சம்பிரதாயமான கேள்வி-பதில் வடிவத்திலேயே இருக்கிறது. என்றாலும் ஆசிரியர் கூற்றாக எழுத்தாளரையும் அவரது படைப்புகளையும் அறிமுகப்படுத்துகிற முன்னுரையும், நேர்காணல் அனுபவத்தை உள்ளடக்கிய முடிவுரையும் இடம் பெறுகின்றன.

 

டேவிட் செடாரிஸின் நேர்காணல் ஓர் எடுத்துக்காட்டு. நேர்காணல் முடிந்ததும் டேவிட்டுக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் போல் இருக்கிறது. அவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் சிகரெட் பிடிக்க முடியாது. அவர் முத்துலிங்கத்துடன் வெளியே வருகிறார். அடுத்த நேர்காணலுக்காக ஓர் இளம்பெண் வந்திருக்கிறாள். ‘தன்னிடம் இருந்த சிரிப்பில் ஒரு பெரிய சிரிப்பை எடுத்துச் சொண்டிலே வைத்துக்கொண்டு அவள் உள்ளே டேவிட்டுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்’. அப்போது கலைந்த தலைமுடியும் கிழிந்த காலணியும் அணிந்த ஒரு ரோட்டோரப் பெண் டேவிட்டிடம் நேராக வந்து ஒரு சிகரெட் கேட்கிறாள். முத்துலிங்கம் தொடர்ந்து சொல்கிறார்:

 

‘டேவிட் பேசுவதை நிறுத்தவில்லை. திரும்பி அவளைப் பார்க்கக்கூட இல்லை. கால்சட்டைப் பைக்குள் கையைவிட்டார். அவர் பையில் ஒரேவொரு சிகரெட்தான் இருந்தது. அதை எடுத்துக் கொடுத்தார். அந்தப் பெண் வாய் திறக்காமல் நெருப்புக்காக நின்றாள்.அதையும் பற்ற வைத்தார். ஆனால் என்னுடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இந்த விவகாரம் ஒவ்வொரு நாளும் நடப்பதுபோலச் சாதரணமாக நடந்து முடிந்தது. அவள் நன்றி என்னும் வார்த்தையை வெளியேவிடாமல் பத்திரப்படுத்தியபடியே திரும்பினாள்.’

 

‘நானும் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டேன். அவர் அடுத்த பேட்டிக்குத் தயாரானார். எனக்கு முன்னால் அந்தப் பெண் போய்க் கொண்டிருந்தாள். தலைக்கு மேல் புகை வட்டம் குடைபோலப் போனது. அவள் நடையில் ஒரு துள்ளல் இருந்தது.’

 

இந்தக் காட்சியில் இரண்டு பெண்கள் வருகிறார்கள். முன்னவள் ஒரு சிரிப்பை எடுத்து உதட்டிலே வைத்துக் கொள்கிறாள். அந்தச் சிரிப்பு அவள் உள்ளுக்குள்ளேயிருந்து வருவதில்லை. வெளியேயிருந்து எடுத்து வைத்துக் கொள்கிறாள். பின்னவள் நன்றி என்னும் வார்த்தையை வெளியே விடுவதில்லை. அதானாலென்ன? அது அவள் உள்ளேயிருக்கிறது. அவள் வெளிப்படுத்துவதில்லை. அவளுடைய நடையில் ஒரு துள்ளல் இருப்பதாகத் தொடர்ந்து சொல்கிறார். அந்தத் துள்ளல் ஆசிரியரையும் தொற்றியிருப்பதாகத் தோன்றுகிறது. டேவிட் அந்தப் பெண்ணிற்கு நெருப்போடு துள்ளலையும், முத்துலிங்கத்திற்கு இலக்கியத்தோடு உற்சாகத்தையும் பற்ற வைத்திருக்க வேண்டும். அலிஸ் மன்றோ தனது நேர்காணலில், ‘ஒரு படைப்பில் உள்ள வசனம் சொல்லுவது அதில் உள்ள வார்த்தைகளின் சேர்க்கையிலும் பார்க்க அதிகமாக இருக்க வேண்டும்’ என்கிறார். முத்துலிங்கத்தின் வசனங்கள் அதைச் செய்கின்றன. இதனால் நேர்காணல்க் கட்டுரைகளே ஒரு படைப்பாக இலக்கியமாக மாறி விடுகின்றன.

 

அடுத்த இதழில் முடியும்

 

[ஒலியிலிருந்து எழுத்து: கவிதா குமார்]

 

[வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம், தொகுப்பு:மு.இராமனாதன், தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com]

 

Series Navigationஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2016 மாத இதழ்மூன்று எழுத்தாளர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சி
author

மு. இராமனாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *