அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை அந்த ராஜ்ய சபை உறுப்பினர்களுக்குப் புதுமையாக இருந்திருக்கும். அவர்கள் கேள்விப்படாத ஒன்றாகக்கூட இருந்திருக்கலாம். காரணம் தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட இந்த கோரிக்கையை தமிழக மக்கள்தான் அதுவரை அறிந்திருப்பார்கள். திராவிட ஏடுகளைப் படித்தவர்கள் மட்டுமே அதுபற்றி அதிகம் தெரிந்திருப்பார்கள். பாமர மக்கள் அது பற்றி மேடைகளில்தான் கேட்டிருப்பார்கள். பலருக்கு அதன் உண்மையான பொருள் தெரிந்திருக்க வாயிப்பில்லை. திராவிடர் இயக்கத்திற்கு எதிரானவர்கள் அதை ஒரு மாயை என்று கூறினர்.
திராவிட நாடு என்பது இருந்ததில்லைதான். அப்படிப் பார்த்தால் இந்தியா என்ற ஒரு நாடும் இல்லாமல்தான் இருந்தது.இந்தியா முழுதும் ஒரே ஆட்சிக்குள் அசோகர் காலத்தில்தான் ஆளப்பட்டுள்ளது. முகலாயர்கள் இந்தியாவை இந்துஸ்தான் என்று கூறி ஆண்டுள்ளனர் அதன்பின்பு ஆங்கிலேயர்கள் கைவசம் வந்தபின்புதான் இந்தியா என்ற ஒரு நாட்டை உருவாக்கி அதை ” பிரிட்டிஸ் இந்தியா ” என்று அழைத்தனர்.
திராவிடர் என்ற சொல்லை முதன்முதலாகக் கூறியவர் கால்டுவெல் என்னும் மேல்நாட்டு மிஷனரி ஆவர். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னாட்டு மொழிகளைக் கற்றறிந்து, அவற்றை திராவிட மொழிகள் என்றார். இவை வடமொழி கலப்பின்றி தொன்றுதொட்டே தனித்தியங்கி வருபவை என்றார். திராவிட மொழிகளுக்கெல்லாம் மூலம் தமிழ்தான் என்றார். இது ஆராய்ச்சிப்பூர்வமான உண்மை என்றாலும், இதை மற்ற மாநிலத்தவர் அவ்வளவு ஆர்வத்துடன் ஏற்றதாகத் தெரியவில்லை.
ஆனால் தந்தை பெரியார் இதை வைத்து தென்னாட்டவர் அனைவரும் திராவிட இனத்தவர் என்றார். திராவிடர் கழகம் அமைத்தார். அதன் பிறகுதான் திராவிடர் என்ற பெயர் தமிழகத்தில் பிரபலமானது. இது மற்ற தென் மாநிலங்களில் பிரபலம் ஆகவில்லை. திராவிட இயக்கத்தைத் துவங்கியவர்கள் மற்ற மாநிலங்களில் கவனம் செலுத்தாமல் போனது பெருங்குறையே.
இது போததென்று மற்றொரு புதிய கண்டுபிடிப்பும் ஆங்கிலேயரின் ஆட்சியின்போது வெளியானது. அது சிந்து வெளிப் பள்ளத்தாக்கில் நடந்த அகழ்வாராய்ச்சியின் முடிவு. இன்றைய பஞ்சாப், பாகிஸ்தான் பகுதிகளில் உள்ள ஹாரப்பா, மொஹஞ்சந்தாரோ என்னும் பகுதிகளில் நடந்த அந்த ஆராய்ச்சிகளில் மண்ணுக்கடியில் புதைந்துபோன ஒரு பழம்பெரும் நாகரிகம் இருந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கிடைத்த உடைந்த மண் பாத்திரங்களில் சில சின்னங்களும், இலச்சினைகளும், சித்திர வடிவிலான எழுத்துக்களும் கிடைத்தன. அவற்றை ஆராய்ந்த ஹீராசு பாதிரியார் அவை திராவிட எழுத்துகள் என்றும் அதிலும் குறிப்பாக அவை பழைய தமிழ் எழுத்துகள் என்பதையும் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கும் நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்றும் அது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்றும் நிர்ணயம் செய்தார்.
தந்தை பெரியார் ஒரு ஆராய்ச்சியாளர் இல்லைதான். ஆனால் எதையும் பகுத்தறிவுடன் பார்க்கும் தன்மையவர். இந்த இரண்டு கண்டுபிடிப்புகளையும் வைத்து அவர் திராவிடர்கள்தான் இந்தியாவின் பூர்வீக குடிமக்கள் என்பதை ஆணித்தரமாகக் கூறவும் எழுதவும் மேடைகளில் பேசவும் செய்தார். அப்படிக் கூறும்போது வடநாட்டினர் அனைவரும் வந்தேறிகள்தான் என்றும் கூறலானார். அதோடு திராவிட நாகரிகத்தை அழித்தவர்கள் கைபர் கனவாய் வழியாக வந்த ஆரியர்கள் என்றார். அவர்கள் வடக்கே குடி புகுந்ததால் திராவிடர்கள் தெற்கே தள்ளப்பட்டனர் என்றும் விளக்கம் கூறினார். இது நடந்து பல நூற்ற்றண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் அப்படி வந்த ஆரியர்கள் இன்னும் அரியாசனத்தில் ( அரசாங்க உயர் பதவிகளில் ) அமர்ந்துகொண்டு திராவிடர்களை அடிமையாக்கி வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார். அப்படி அவர்கள் செய்வதற்கு அவர்கள் கொண்டுவந்த மதத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தாங்களே கடவுளின் நெற்றியிலிருந்து வந்த கடவுளின் புதல்வர்கள் என்றும், தாங்களே மந்திரங்களை ஓதும் உரிமையுடைவர்கள் என்றும் சொல்லி மக்களை ஏமாற்றி நம்ப வைத்தனர். அதே தந்திரத்தைக் கையாண்டு சமூகத்தின் உயர்ந்த நிலையில் தங்களைத் தக்கவைதுக்கொண்டனர். அதோடு நில்லாமல் தாங்கள் கொண்டு வந்த வேதங்களின்படி மக்கள் நான்கு வகையான சாதியின் அடிப்படையில்தான் வாழவேண்டும் என்று சொல்லி பிராமணர் அல்லாதவர் அனைவரையும் சூத்திரர்கள் என்று தாழ்த்தி வைத்தனர். காலப்போக்கில் இந்த சாதிப் பிரிவினைகள் தீவிரமாகி மக்களுக்குள் ஒற்றுமை அடியோடு அழிந்துபோனது. இதுபோன்ற கருத்துகளை தந்தை பெரியார் மிகுந்த துணிச்சலுடன் பிராமணர்களுக்கு எதிராகவே பிரச்சாரம் செய்தார்.
பேசும் மொழியாலும், ஜாதிப் பெயரால் செய்யும் தொழிலாலும், பிளவுபட்டுக்கிடந்த மக்களை ஆயுத பலத்தால் எளிதில் அடிமையாக்கி ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்டனர். அவர்களையும் தங்களுக்குச் சாதகமாகப் படன்படுத்திக்கொண்டனர் பிராமணர்கள். ஆங்கில அரசின் முக்கிய பணிகளில் அவர்கள் அமர்த்தப்பட்டனர். உயர்நிலைக் கல்வியையும் பரம்பரை பரம்பரையாக அவர்கள் பெற்றனர். அவர்களால் தாழ்த்தப்பட்ட மக்கள் தாழ்ந்த நிலையிலேயே இருந்தனர்.
இத்தகைய அடிமைத்தனத்திலிருந்து தமிழ் மக்கள் விடுபட வேண்டும் என்று பகுத்தறிவு பிரச்சாரம் செய்தார் தந்தை பெரியார். மதங்களால் மூட நம்பிக்கைகள் பரப்பப்படுகின்றன என்று மதத்தை வெறுத்தார். கடவுள் இல்லை என்றார். தமிழர்கள் வடநாட்டினரிடம் அடிமைப் பட்டுள்ளதாக கூறினார். அதிலிருந்து விடுதலை வேண்டும் என்றுதான் தனித் திராவிட நாடு வேண்டும் என்று குரல் எழுப்பினார். ” திராவிட நாடு திராவிடருக்கே! ” என்ற கோரிக்கை தமிழக மக்களிடையே பிரபலமானது!
பெரியாரின் வழிவந்த அண்ணாவும் அதே பாணியில்தான், ஆனால் மிகுந்த லாவகமாக ராஜ்ய சபையில் தனித் திராவிட நாடு கேட்கலானார். அதுவரை தமிழ் நாட்டிலேயே ஒலித்த தனித் திராவிட நாடு கோரிக்கை அன்று டெல்லியில் இந்தியா முழுதும் கேட்கும்படி ஒலித்தது! அது கேட்டு இந்தி பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிரண்டுபோயினர். இவ்வளவு துணிச்சலாக பிரிவினைக் கோரும் இவர் யார் என்று அன்றுதான் அண்ணாவை வியந்து பார்த்தனர். இந்தியப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருகூட அப்போதுதான் அண்ணாவைக் கூர்ந்து நோக்கலானார். இந்திய சுதந்திரத்தின்போது பாகிஸ்தான் பிரிந்து சென்றபோது நடந்த மதக் கலவரத்தை அவர் மறந்துவிடவில்லை. ஆனால் அப்படியெல்லாம் மீண்டும் நடக்காது என்றும் அண்ணா முன்கூட்டியே தமது உரையில் கூறிவிட்டார். காரணம் அதுபோன்று தென்னாட்டில் வாழும் வடநாட்டினர் வடக்கு நோக்கியும் வடநாட்டில் வாழும் தென்னாட்டவர் தெற்கு நோக்கியும் புறப்படத் தேவையில்லை என்பதையும் கூறிவிட்டார். அப்போது உடனடியாக பண்டிதர் நேரு கருத்து ஏதும் தெரிவிக்காவிட்டாலும் அது பற்றி நிச்சயமாக தீவிரமாக சிந்தித்திருப்பார்.
திராவிட இயக்கத்தினரைப் பொருத்தவரை அண்ணா தனித் திராவிட நாடு கோரிக்கையை டில்லியிலேயே எழுப்பியதைப் பெரும் வெற்றியாகக் கருதலாயினர். பரவாயில்லை. இப்போது தமிழ் நாட்டில் எதிர் கட்சியாகத்தானே தி. மு. க. உள்ளது? முதலில் ஆட்சியைப் பிடிப்போம். பின்பு தனித் திராவிட நாடு கோரிக்கையை மேலும் வலிமையுடன் கோரிப் போராடுவோம் என்று திருப்தி அடைந்தனர். அவர்களின் எண்ணப்படியே இப்போது தமிழகம் தி.மு. க. கைகளில் வந்துவிட்டது. அண்ணாவும் தமிழக முதல்வராகி விட்டார்.
அந்த அண்ணாதான் இன்று எங்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் இன்னுமொரு ஆங்கில உரையாற்ற வந்துள்ளார்.அண்ணாவுக்கு அணிவகுப்பு மரியாதைபோல் நான்காம் ஆண்டு மருத்துவ மாணவ மாணவிகள் நீண்ட மல்லிகைச் சரத்தை தோள்களில் ஏந்தியவண்ணம் இருமருங்கிலும் மெதுவாக நடந்துவர நடுவில் புதிய பட்டதாரிகள் வரிசையாக நடந்து வந்தனர்.
அண்ணா அரங்கத்தினுள் சென்றபோது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். பட்டம் பெறுவோர் முதல் வரிசையில் அமர்ந்தனர். பேராசிரியர்களும் மாணவ மாணவியரும் அடுத்தடுத்த வரிசைகளில் அமர்ந்தனர்.
பட்டமளிப்பு விழா தொடங்கியது. அச்சன் ஊமன் சுருக்கமாக ஜெபம் செய்தார். அடுத்து ” Silver and Blue ” என்னும் கல்லூரிப் பாடலை அனைவரும் பாடினர். கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தியபோது அண்ணாவுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
அண்ணா எழுந்து நின்று ஒலிவாங்கியைக் கம்பீரமாகப் பிடித்தார். அப்போது அவருடைய தன்னம்பிக்கை அப்படியே அவருடைய முகத்தில் பிரதிபலித்தது. கையில் எந்த குறிப்பும் இல்லாமல் திறந்து விட்ட மடை போன்று அழகான இலக்கிய ஆங்கிலத்தில் உரையாற்றினார். தேனுண்ட வண்டுபோல் அனைவரும் அவரையே பார்த்தவண்ணம் கிறங்கிப்போயினர்!
( தொடுவானம் தொடரும் )
- முற்பகல் செய்யின்……
- சுவை பொருட்டன்று – சுனை நீர்
- சொற்களின் புத்தன்
- அபினென்று அழைக்க முடிகிறது எனக்கு
- பிரேமம் ஒரு அலசல்
- அவியல்
- பிரான்சிலே உலகத்தின் பிரமிக்கத் தக்க வானுயர்ப் பட்டாம்பூச்சிப் பாலம்
- தொடுவானம் 112. திராவிட நாடு திராவிடருக்கே!
- ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச் 2016 மாத இதழ்
- தேடிக்கொண்டிருக்கிறேன்
- இரண்டாவது புன்னகை
- நீங்காப் பழி!
- கூடு – இலக்கியத்திற்கான இணைய இதழ்
- எதையும் எதிர்பார்க்காத கலைஞர்கள் – வெளி ரங்கராஜனின் ‘வெளிச்சம் படாத நிகழ்காலப் படைப்பாளிகள்’