தொடுவானம் 123.கைவிடப்பட்ட திராவிட நாடு

This entry is part 8 of 17 in the series 12 ஜூன் 2016

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் பேருந்தில் ஏறினேன். அது கடலூர், திருக்கோவிலூர், திருவண்ணாமலை வழியாக வேலூர் சென்றடைந்தது.நீண்ட பிரயாணம்தான். கையில் ஒரு ஆங்கில நாவல் இருந்ததால் நேரம் இனிமையாகக் கழிந்தது.

வழி நெடுகிலும் தமிழகத்துக் கிராமங்களும் பச்சைப் பசேலென்ற நெல் வயல்களும் கண்களுக்கு குளுமையாக காட்சி தந்தன. மலையில்தான் வேலூர் அடைந்தேன்.

புது உற்சாகத்துடன் விடுதி சென்றேன். கலகலப்புடன் நண்பர்கள் வரவேற்றனர். சம்ருதி முன்பே வந்திருந்தான். அது ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுதியில்தான் பெரும்பாலோர் இருந்தனர்.

பெஞ்சமினும் டேவிட் ராஜனும் அறைக்கு வந்தனர். சிங்கப்பூர் பிரயாணம் பற்றி கேட்டனர். நான் அவர்களுக்குக் கொண்டுவந்திருந்த சட்டைகளைத் தந்தேன். அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். வேலூர் டவுனுக்குப் போய்  அங்கே மெட்ராஸ் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, தினகரன் தியேட்டரில் ஆங்கிலப் படம் பார்த்து  வரலாம் என்று முடிவு செய்தோம்.

          காலையில் புத்தாடைகள் அணிந்து கம்பீரத்துடன் கல்லூரி சென்றேன். என்னுடன் சம்ருதியும் வந்தான். இந்த ஆறு மாதங்களில் உடற்கூறும், உடலியலும் முழுதுமாகப் படித்து தேர்வு எழுத வேண்டும் என்ற சபதத்துடன் செம்மண் வீதியில் நடந்து சென்றேன்.நேராக கல்லூரி அலுவலகம் சென்றோம். அங்கு தேர்வு முடிவுகள் வைக்கப்பட்டிருந்தந. முடிவு என்னவாக இருக்கும் என்பது எங்களுக்கு முன்பே தெரிந்ததுதான்.நாங்கள் இருவருமே தேர்ச்சி பெறவில்லை. அது கண்டு ஆச்சரியமோ கவலையோ கொள்ளவில்லை!
          இந்த இரண்டு பாடங்களும் இப்படிதான். முதல் முயற்சியில் எல்லாரையும் தேர்ச்சி பெற செய்யமாட்டார்கள். கொஞ்சம் குறைவாக செய்தாலும் மீண்டும் வரச் சொல்லிவிடுவார்கள்.
          உடற்கூறு தேர்வுக்கு மும்முரமாக தயார் செய்தோம். பழைய கேள்வித் தாள்களை ஆராய்ந்து அதில் வந்துள்ள கேள்விகளுக்கு சரியான பதில்களைத் தயார் செய்தோம். பெரும்பாலும் முன்பு பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த அதே கேள்விகளைத்தான் கேட்க முடியும். இவ்வாறு பதில்கள் தயார் செய்யும் வேளையில் எப்படியும் உடற்கூறு நூலை மீண்டும் படிப்பதற்குதான் ஒப்பாகும். அதன் பின்பு செயல் முறைத் தேர்வுக்காக பிரேத அறைக் கூடம் செல்வோம். அங்கும் செயல்முறைத் தேர்வுக்காக தயார் செய்வோம். தேர்வில் கேட்கக்  கூடிய அந்தந்த பகுதியை பிரேதத்தில் அறுத்து பழகுவோம். சென்ற தேர்வில் நான் கொஞ்சம் விலகி அறுத்து விட்டேன். அதனால் வந்து வினை இது.
          உடலியல் தேர்வுக்கும் கேள்விகளுக்கு பதில் தயாரிப்பதில் கவனம் செலுத்தினோம். மீண்டும் பாட நூலை நிதானமாகப் படித்தபோது உடலியல் நன்றாக விளங்கியது. அதை மனதில் வைத்திருப்பதும் எளிதாகவே இருந்தது.
           ஆறு மாதங்கள் இந்த இரண்டு பாடங்களை திரும்பப்  பயில்வதில் கவனம் செலுத்தினேன். தேர்வில் வெற்றி பெற்றுவிட்ட என் வகுப்பு மாணவ மாணவிகள் மூன்றாம் ஆண்டில் நுழைந்து விட்டனர். அவர்கள் கழுத்தில் ஸ்டெத்தஸ்கோப் மாட்டிக்கொண்டு கையில் கிளினிக்கல் கோட் ஏந்திக்கொண்டு காலையில் கல்லூரி பேருந்து மூலம் வேலூரிலிருந்த சி.எம்.சி. மருத்துவமனைக்குச் சென்றார்கள்.மாலையில்தான் விடுதி திரும்புவார்கள்.அவர்கள் இனி மருத்துவமனை வார்டுகளில் நோயாளிகளின்  மத்தியில் மருத்துவமும், அறுவைச் சிகிச்சையும் பயில்வார்கள். நான் மீண்டும் இரண்டாம் ஆண்டு தேறியபின்புதான் அவர்களுடன் சேர்ந்து மருத்துவமனை செல்வேன். வருத்தமாகத்தான் இருந்தது. அனால் என்ன செய்வது. வேறு வழியில்லை. என்னுடன் இன்னும் பத்து  பேர்கள் துணைக்கு இருந்தனர். அதனால் கவலை அவ்வளவாகத் தெரியவில்லை.
          எனக்கு இலக்கியம் அரசியல் பேச செல்வராஜ் ஆசிரியர் மாலையில் விடுதிக்கு வருவார். மூளைக்கு ஒரு மாற்றத்துக்கு அது உதவியது. தமிழ் நாடு அறிஞர் அண்ணா தலைமையில் இயங்கியதால் எங்கள் உரையாடல் தமிழகத்தில் உண்டாகும் மாற்றங்கள் பற்றியே இருக்கும். திராவிட இயக்கம் பற்றியும் நிறைய பேசுவோம்.
          அண்ணா டெல்லி பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தபோது தனித் திராவிட நாடு கோரிக்கையை வெளியிட்டு ஒரு சலசலப்பை உண்டுபண்ணினார். அப்போது ” திராவிட நாடு திராவிடருக்கே ” என்ற கொள்கை அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகம் செயலப்பட்டது. ஆனால் அதில் ஒரு குறைபாடும் இருந்தது. திராவிட இனத்தவரான தெலுங்கர்கள், மலையாளிகள்,கன்னடர்கள் அதில் கொஞ்சமும் ஆர்வம் இல்லாமல் திகழ்ந்தனர். அவர்கள் தங்களை திராவிடர்கள் என்று கூட சொல்லிக்கொள்ளவில்லை.தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கத்தினரும் மற்ற தென்னிந்திய திராவிடர் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களில் திராவிடர் உணர்வை பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. அப்படி இருக்கும்போது அவர்களுடைய சம்மதமும் இல்லாமல் எப்படி அவர்களையும் சேர்த்து திராவிட நாடு கேட்க முடியும். மற்ற மாநிலங்கள் இல்லாமல் தமிழ் நாடு மட்டும் தனித் திராவிட நாடாக செயல்படுவது சாத்தியமா என்பதும் கேள்விக்குறியாக இருந்தது. அதனால் அண்ணாவின் பாராளுமன்ற சரித்திரப் புகழ்மிக்க கோரிக்கை எடுபடாமல் போனது. அதே வேளையில் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் மனதில் ஓர் அச்சத்தையும் உண்டுபண்ணியது. எங்கே பாகிஸ்த்தான் மாதிரி இந்தியா வடக்கு தெற்கு என்று மேலும் பிளவு பட்டுவிடுமோ என்ற அச்சம் அது. இத்தகைய பிரிவினை கோரிக்கையை எவ்வாறு ஒடுக்குவது என்று சமயம் பார்த்துக்கொண்டிருந்தார். அதற்கு ஏற்றாற்போல் 1962 ஆம் வருடத்தில் இந்தோ சீன போர் மூண்டது. அப்போது அதையே காரணம் காட்டி, இந்தியா பலம் பொருந்திய நாடாகத் திகழவேண்டும் என்று சொல்லி இனி இங்கு பிரிவினைக்கு இடமில்லை என்று சட்டதிருத்தம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.அதன்படி பதினாறாவது சட்டத்திருத்தத்தின்படி பிரிவினை கேட்பவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது என்று புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பாராளுமன்றத்தில் இருந்த அண்ணா அதை கடுமையாக விமர்சித்து எதிர்த்தபோதிலும் அதனால் எந்த பயனும் இல்லாமல் போனது!
          திராவிட நாடு கோரிக்கைதான் திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சாக இருந்தது. தி. மு. க. அரசியலில் இறங்கியதே திராவிட நாடு பெறுவதற்கே. அனால் இப்போது அடித்தளமே ஆட்டம் கண்டுவிட்டது. தடையை மீறிப்  போராடினால் இனி தேர்தலில் நிற்க முடியாமல் போகும். வெறும் சமுதாய இயக்கமாகத்தான் தொடர்ந்து செயல்படவேண்டியிருக்கும். அப்படி இருந்தால் தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் உதவ முடியாமல் போய்விடும். அதோடு பிரிவினை பற்றி பேசினாலே தேச நிந்தனை குற்றத்திற்காக சிறை செல்ல வேண்டிவரும். கட்சியும் செயலிழந்து போகும்!
         கழகத் தலைவர்களும், உறுப்பினர்களும், தமிழக மக்களும் இந்தகைய சூழலில் அண்ணா என்ன செய்யப்போகிறார் என்று காத்திருந்தனர். அண்ணா எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து தம்முடைய முடிவை வெளியிட்டார்.
” திராவிடர்களுக்கு தனியான திராவிட நாடு உருவாக்குவதுதான் நமது குறிக்கோள். இது பற்றி பேசவோ எழுதவோ முடியாத ஒரு சூழ் நிலை உருவாகியுள்ளது. இந்தத் தடையை மீறி நம்முடைய கழகத்தை அழித்துவிட முடியும். ஆனால் கழகமே இல்லாதபோது நாம் கொண்டுள்ள குறிக்கோள் நிலைக்கவோ பரவவோ வாய்ப்பிருக்காது. அதனால்தான் நாம் அந்த குறிக்கோளை கைவிடுகிறோம். ” என்பதே அண்ணாவின் முடிவு.
           ( To make the Draviidian state a separate state was our ideal. A situation has arisen where we can neither talk nor write about this ideal. Of course we can destroy the party by undertaking to violate the prohibition. But once the party is destroyed there will not be any scope for the ideal to exist or spread. That is why we had to give up the ideal. )
          இந்த முடிவு தெரிந்து திராவிடர் இயக்கத்னர் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் ஆவேசமும் கொண்டனர். காங்கிரஸ் கட்சியினரோ ஏளனம் செய்தனர். உங்கள் திராவிட நாடு இவ்வளவுதானா என்று கிண்டல் செய்தனர். முன்பே அது வெறும் பகல் கனவு என்று பேசியவர்கள அவர்கள்.பெரும் கலவரம் கூட  நடைபெற்றிருக்கலாம். அனால் அண்ணா மிகவும் சாதுரியமாக கழகத்தினரை அமைதி காக்கும்படிக்  கூறிக் கட்டளை விடுத்தார். அதன்மூலம் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.
          அனால் அதைத் தாங்கிக்கொள்ள கழகத்தின் தலைவர்களாலும், உறுப்பினர்களாலும், என்னைப்போன்ற திராவிட உணர்வுகொண்ட  ஆயிரமாயிரம் இளைஞர்களாலும் முடியவில்லை!

          இப்போது இல்லையெனில் இனி என்றுமே தமிழர்களுக்கு தனியாக ஒரு நாடு உலக வரை படத்தில் இருக்கப்போவதில்லை. உலகின்  தொன்று தொட்டு சீரும் சிறப்புடனும் பழமையான கலை, கலாச்சாரம், மொழி, இலக்கியங்கள் கொண்டுள்ள தமிழ் இனத்துக்கு தனியாக ஒரு நாடு இல்லை என்ற அவலத்துடன் நாம் வாழப்போகிறோம். சேர சோழ பாண்டிய நாடுகள் என்று தமிழகத்தை ஆண்ட தமிழ் இனத்துக்கு இனி பெயர் சொல்ல ஒரு நாடு இல்லை. வடக்கே இமயம்வரை, கங்கை வரை படையெடுத்துச் சென்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இனம் இனி  வடநாட்டினரிடம் அடிமைப்பட்டு வாழப்போகிறது. கடல் தாண்டி கடற்படியுடன் கடரதையும்,ஸ்ரீ விஜயத்தையும் கைப்பற்றி ஆண்ட இனம் இன்று நாடில்லா அகதியாய் வாழப்போகிறது உலகின் எல்லா நாடுகளிலும் இன்று குடியேறி புலம் பெயர்ந்த தமிழர்களாக வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு தாய் நாடு என்று ஊரிமையோடு சொல்லிக்கொள்ள ஒரு தனி நாடு இல்லாத குறைபாடு! வெறும் மதத்தை வைத்தே ஆங்கிலேயர்களை மிரட்டி ஒரு பாகிஸ்தானை வாங்கிக்கொண்டனர். ஆனால் கல் தோன்றி மண் தோன்றக்  காலமுதலே தனி இனமாக வாழ்ந்த தமிழினத்துக்கு ஒரு நாடு இல்லை! இதை விட நம் இனத்துக்கு வேறு என்ன இழிவு உள்ளது?

          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationரகுவீரரின் ‘ஒரு கல் சிலையாகிறது’ ஒரு பார்வைஜூன் – 08. உலக கடல் தினக் கவிதை
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

6 Comments

  1. Avatar
    smitha says:

    Anna knew very well that dravida naadu concept was not feasible. Yet he chose to make politics out of it.

    He was looking for a way to get away from EVR since he knew that EVR will never come to politics.

    EVR gave him the opportunity by marrying Maniammai. Anna made use of it to break away & emotionally fool the people by furthering the dravida naadu concept.

    He had no other go than to abandon the idea after Nehru brought in the secession law.

    It was out of compulsion & not out of choice.

  2. Avatar
    ஷாலி says:

    //கல் தோன்றி மண் தோன்றக் காலமுதலே தனி இனமாக வாழ்ந்த தமிழினத்துக்கு ஒரு நாடு இல்லை! இதை விட நம் இனத்துக்கு வேறு என்ன இழிவு உள்ளது?//

    டாக்டர் ஸார்! தமிழினத்திற்கு என்றுமே தனி நாடு இருந்ததில்லையே! இப்ப எப்படி தனி நாடு எதிர்பார்க்கிறீர்கள்? இந்தியா துணைக்கண்டத்தை 64 தேசங்கள் ஆண்ட போதும் தமிழின் பெயரில் தனி நாடு இருந்ததில்லை. அப்படி தனி நாடு கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தாலும் தமிழினத்திற்கு தனி நாடு கிடைக்காது.

    அன்று சேரர்கள்,சோழர்கள்,பாண்டியர்கள் ஆண்டநாடுகள் போன்று,வன்னிய நாடு,தேவர் நாடு,மள்ளர் நாடு,பள்ளர் நாடு,என்று சாதி நாடுகள்தான் உருவாகும்.இது சாதி நாடுகளால் தமிழுக்கு ஒரு பெருமையும் இல்லை.

    அன்று,சேர சோழ,பாண்டியர்கள் அடித்துக்கொண்டு செத்ததுபோல்,சாதி நாடுகளும் சண்டையிட்டே சாவும்.தமிழினம் சாதியின் பேரால் அடித்துக் கொண்டு சாவதற்கு ஒரு நாடு தேவையா?

    சாதி இழிவை நீக்காதவரை, அவன் தமிழனே இல்லை. இல்லாத தமிழனுக்கு ஏன் வேண்டும் நாடு?

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      ஷாலி,

      ///அன்று,சேர சோழ,பாண்டியர்கள் அடித்துக்கொண்டு செத்ததுபோல்,சாதி நாடுகளும் சண்டையிட்டே சாவும். தமிழினம் சாதியின் பேரால் அடித்துக் கொண்டு சாவதற்கு ஒரு நாடு தேவையா?

      சாதி இழிவை நீக்காதவரை, அவன் தமிழனே இல்லை. இல்லாத தமிழனுக்கு ஏன் வேண்டும் நாடு?///

      இப்போது புதியதாய்த் தமிழ் நாட்டில் திராவிடச் சாதி என்றோர் இன வேறுபாட்டைத் திராவிடக் கட்சிகள் வேரூன்றி விட்டன !!!

      மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா திராவிடரா ?

      சி. ஜெயபாரதன்

  3. Avatar
    Rama says:

    //கல் தோன்றி மண் தோன்றக் காலமுதலே தனி இனமாக வாழ்ந்த தமிழினத்துக்கு””
    Lofty statement, going for yonks without an ounce of truth. Primary evidence for this sort of statement will be appreciated. We do not want proof from the “”lost Sangam”” literature or the mythical submerged Kuamri kandam .

  4. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    கல்தோன்றிப் புல்தோன்றாக் காலத்தே
    தொல்தோன்றித் தோற்ற குடி !

    ////தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் தாங்கள் அனைவரும் திராவிட இனத்தவர் என்பதை ஏற்க மறுத்தனர். இவர்கள் அனைவரும் ஓர் உண்மையை மறந்துபோயினர். இந்திய மக்கள் அனைவருமே திராவிடர் என்ற சொல்லுக்கு தங்களையும் அறியாமல் மரியாதை செலுத்துவதை அவர்கள் இன்றுவரை அறியாமல் இருப்பது கேலிக் கூத்தாகும்! (தொடுவானம் – 124. தேசிய கீதத்தில் திராவிடம்)///

    அப்படியானால் இந்தியா திராவிட நாடா ? இந்தியா திராவிட நாடானால், தனித் திராவிட நாடு கோரிக்கை எதற்கு ?

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *