தொடுவானம் 125. முன்றாம் ஆண்டின் முதல் நாள்..

This entry is part 16 of 21 in the series 27 ஜூன் 2016
         

மீண்டும் தேர்வுகள் நெருங்கி வந்தன. இரண்டே பாடங்கள்தான். உடற்கூறும் உடலியலும். இரண்டுமே மருத்துவம் பயில மிகவும் இன்றியமையாதவை. அதனால்தான் தேர்வு சற்று கடினமாக இருந்தது. இந்தத் தேர்வைத் தாண்டினால்தான் மூன்றாம் ஆண்டு வகுப்புகளுக்குச் செல்ல முடியும். பலர் இதைத் தாண்ட முடியாமல் பல வருடங்கள் மருத்துவக் கல்லூரியில் தஞ்சம் புகுவதுண்டு.

நான் மீண்டும் இந்த இரண்டு பாட நூல்களையும்  படித்து முடித்தேன். வரக்கூடிய கேள்விகளுக்கு பதில் எழுதியும் பார்த்தேன்.  பிரேத அறுவையிலும் அதிகம் கவனம் செலுத்தினேன். தேர்வுகள் வந்தபோது அதிகம் தன்னம்பிக்கை கொண்டிருந்தேன்.

என்னைப்போலவே மற்றவர்களும் தேர்வுக்கு தயார் நிலையில் இருந்தனர். சம்ருதியும் என்னோடு சேர்ந்து படித்து தேர்வுக்கு தயாரானான்.

எழுத்துத் தேர்வுகள் நான் எதிர்பார்த்தபடியே சுலபமாக இருந்தன.  நிதானமாக பதில்கள் எழுதினேன். ஆறு கேள்விகளுக்கும் சிறப்பாக பதில் தந்துவிட்டேன்! நிச்சயம் இதில் வெற்றிதான்!

செய்முறைத் தேர்வுக்கு நாங்கள் திருவள்ளுவர் பேருந்து மூலம் சென்னை சென்றோம். எழும்பூரில் தங்கும் விடுதியில் அறைகள் எடுத்துக்கொண்டோம். தேர்வில் எனக்கு தரப்பட்ட பகுதியை கச்சிதமாக அறுத்து ஒவ்வொரு பகுதியையும் விளக்கினேன். பரிசோதனையாளர் மலர்ந்த முகத்துடன் என்னை வாழ்த்தினார். அதன்பின் வாய்மொழித் தேர்விலும் கேட்ட கேள்விகளுக்கு தகுந்த பதில்களை தடுமாறாமல் கூறினேன். கேள்விகள் கேட்டவர் என்னை வாழ்த்தி விடை தந்தார். நான் உடற்கூறில் தேர்ச்சி பெற்றுவிட்டேன்! எனக்கு மட்டற்ற  மகிழ்ச்சி.

அடுத்த நாள் உடலியல் செய்முறைத் தேர்வு. அதிலும் அதே நிதானத்துடன் செய்து முடித்தேன். வாய்மொழித்  தேர்விலும் சிறப்பாக பதில் சொன்னேன். நான் உடலியலியும் தேர்ச்சி பெற்றுவிட்டேன்!

அதிகாரப்பூர்வமாக தேர்வு முடிவுகள் வெளி வராதபோதிலும் தேர்ச்சி பெற்றது அப்போதே தெரிந்தது! என்னுடன் தேர்வு எழுதிய மற்றவர்களும் தேர்ச்சி பெற்றுவிட்டனர்! எல்லையில்லா ஆனந்தத்துடன் அன்று மாலை சம்ருதியுடன் மூர் மார்க்கெட் சென்றேன். அங்கு பழைய புத்தகக் கடையில் சில ஆங்கில நாவல்களை வாங்கிக்கொண்டேன். இரவு எழும்பூர் புகாரியில் சுவையான பிரியாணி உட்கொண்டோம். நாளை காலையில் மீண்டும் வேலூர் நோக்கி வெற்றியோடு திரும்புவோம்.

இப்போது விடுமுறை இல்லை. இன்னும் ஒரு வாரத்தில் முடிவுகள் வந்துவிடும். உடன் நாங்கள் மூன்றாம் ஆண்டுக்குள் நுழைந்து விடுவோம். அதற்கு நாங்கள் தயாரானோம்.

முதலில் வேலூர் சென்று ” கிளினிக்கல் கோட் ” தைக்க அளவு கொடுத்தோம். இது வெள்ளைத் துணியில் முழங்கால் வரை நீளமாக இருக்க வேண்டும். கலர் சட்டை அணிந்து சென்றாலும் வார்டுகளில் நுழையும்போது இதை அணிந்துகொள்ள வேண்டும். மற்ற நேரத்தில் கையில் ஏந்தி அல்லது தோளில் போட்டுக்கொண்டு செல்லலாம்.

ஸ்டெத்தஸ்கோப் நான் சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்துள்ளேன். இதை கழுத்தில் மாட்டிக்கொண்டு செல்லலாம். அல்லது மடித்து சட்டைப் பாக்கட்டில்கூட வைத்திருக்கலாம். மூன்றாம் ஆண்டு துவக்கத்திலேயே அதை பயன்படுத்த ஆரம்பித்துவிடுவோம்!

உண்மையில் நான் மூன்றாம் ஆண்டு என்பது கல்லூரியில் சேர்ந்து நான்காம் ஆண்டாகும். முதல் வருடம், பின்பு உடற்கூறும் உடலியலும் இரண்டு ஆண்டுகள் பயின்றதால் இப்போது நாங்கள் மூன்றாம் ஆண்டு என்று நுழைவது நான்காம் வருடமாகும்.

இப்போதிலிருந்து பொது மருத்துவமும் ( General Medicine ), அறுவைச் சிகிச்சையும் ( Surgery ) இரண்டு ஆண்டுகள் பயிலவேண்டும். இந்த இரண்டு பாடங்களும் உடற்கூறு, உடலியல் போன்று கடினமானவை. இவற்றில்  முதல் முயற்சியிலேயே தேர்வது சிறப்பானது. ஆனால் பலரால் அவ்வாறு முடியாமல் போய் மீண்டும் மீண்டும் முயன்று பார்ப்பதுண்டு. அதனால் ஒவ்வொரு முறையும் தேர்வில் தோல்வியடையும்போது மேலும் ஆறு மாதங்கள் வீணாகும். படித்து முடித்து வெளியேறும்போது  வருடங்களும் அதிகமாகும்.

பொது மருத்துவம், அறுவை சிக்கிச்சைப் பாடங்களுடன் கண்ணியல்  ( Ophthalmology ), மருந்தியல் ( Pharmacology ) ஆகிய இரண்டு பாடங்களையும் ஓராண்டு பயிலவேண்டும். கண் வகுப்புகள் மேரி டேபர் ஷெல் நினைவு கண் மருத்துவமனையில் ( Mary Taber Schell Memorial Eye Hospital ) நடைபெறும். அது வேலூரில் ஊரீஸ் கலைக் கல்லூரியின் பின்புறத்தில் இருந்தது. மருந்தியல் வகுப்பு கல்லூரி வகுப்பறையில்  நடக்கும். மற்ற நேரங்களில் நாங்கள் முழுதுமாக மருத்துவமனையில்தான் கழிப்போம்.

காலையில் ஏழரை மணிக்கெல்லாம் கல்லூரி பேருந்து விடுதிக்கு வந்துவிடும். அதில் எங்கள் வகுப்பு மாணவிகள் அமர்ந்திருப்பார்கள். எங்களை ஏற்றிக்கொண்டு வேலூரில் உள்ள சி. எம்.சி. மருத்துவமைக்குச் செல்லும். அது சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வேலூர் மத்திய சிறைச்சாலை தாண்டி, தொரப்பாடி, வேலூர் கோட்டை வழியாக மருத்துவமனைச் சென்றடையும்.

அங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக இளைப்பாறும் கூடம் உள்ளது. காலையில் வார்டுகளில் பயின்றுவிட்டு மதியம் அங்கு சென்றுவிடுவோம். அங்கு விடுதியிலிருந்து மதிய உணவு வந்திருக்கும். உணவு உண்டபின் இரண்டு மணிவரை ஓய்வெடுக்கலாம். பின்பு மீண்டும் வார்டுக்குச் செல்லவேண்டும். மலை ஐந்து மணிக்கு கல்லூரி பேருந்து நிற்குமிடம் வந்து விடுதிக்கு ஐந்தரைபோல் திரும்பிவிடலாம்.

இத்தகைய உற்சாகமான வாழ்க்கைக்கு ஆவலுடன் காத்திருந்தேன்! மருத்துவம் பயில்வது சிரமம் என்றபோதிலும் அதில் காணும் உற்சாகம் அந்த சிரமத்தை மேற்கொண்டுவிடும்!  மருத்துவக் கல்லூரி மாணவ வாழ்க்கை வாழ்க்கையில் என்றுமே மறக்கமுடியாத அனுபவமாகும்!

          தேர்வு முடிவுகள் வந்தன. எதிர்பார்த்தபடியே நாங்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுவிட்டோம்!

மூன்றாம் ஆண்டின் முதல் நாள்! காலையிலேயே எழுந்து மிகுந்த உற்சாகத்துடன் புத்தாடை உடுத்தி, கையில் கிளினிக்கல் கோட்டுடனும், கழுத்தில் ” லித்மேன் ஸ்டெத்தஸ்கோப்புடன் ” கம்பீரமாகக்  கிளம்பினேன். காலை உணவை உண்டபின் கல்லூரி பேருந்துக்கு விடுதி வாசலில் காத்திருந்தேன். பல சீனியர் மாணவர்கள் கைகுலுக்கி வாழ்த்தினர்.

சரியாக ஏழரை மணிக்கு பேருந்து வந்து நின்றது. அது பெண்கள் விடுதியிலிருந்து புறப்பட்டு வந்தது. முன்பே பெண்கள் பலர் அமர்ந்திருந்தனர். காலியான இடத்தில் நான் அமர்ந்துகொண்டேன்., இடம் இல்லையேல் நின்றுகொண்டே செல்லலாம். இது முதல் பேருந்து. இதைத் தொடர்ந்து இன்னொரு பேருந்தும் வரும். மருத்துவமனை செல்லும் அனைத்து மாணவ மாணவிகளும் காலையிலேயே .சென்றாக வேண்டும்.

நாங்கள் மருத்துவமனையில் நுழைந்ததுமே அதன் நுழைவாயிலில் இறங்கினோம்.அதன் வழியாக சிற்றாலயம் சென்று அமர்ந்தோம். அங்கு அச்சன் ஊமன் எங்களை வரவேற்றார். அவருடன் மருத்துவமனையின் இயக்குநர் இருந்தார். அவர் மேல்நாட்டவர். எங்களுக்காக சிறு தியானம் நடந்தது. வேதத்திலிருந்து ஒரு பகுதி வாசித்து  அது பற்றி விவரித்தார் அச்சன் ஊமன். பிறகு ஒரு கீர்த்தனை பாடியபின்  ஜெபத்துடன் முடிந்தது. மருத்துவ சேவை புனிதமானது என்பதை அந்த அமைதியான சிற்றாலயச் சூழலில் நான் உணர்ந்தேன்.எங்கள் அனைவரோடும் கைகுலுக்கி வரவேற்று வாழ்த்தினார் இயக்குநர்.

இன்றிலிருந்து நான் இந்தப் புனிதமான மருத்துவப் பணியில் ஈடுபடப்போகிறேன். நான் பலதரப்பட்ட நோயாளிகளின் பிணி தீர்க்கும் மருத்தவனாகப்போகிறேன். இன்றிலிருந்து நோயாளிகளை வார்டுகளில் தொட்டு அவர்களின் நோய்களின் தன்மை அறிந்து  அதற்குத் தேவையான சிகிச்சை பற்றியும் தெரிந்துகொள்ளப்போகிறேன். சிற்றாலயத்தில் நான் உணர்ந்துகொண்ட  புனிதத்தை நான் கடைசிவரைக் கடைப்பிடிக்க உறுதி .கொண்டேன்!

இயக்குநர் அலுவலகத்திலிருந்து வந்த ஒருவர் எங்களை அழைத்துக்கொண்டு மருத்துவமனையின் வார்டுகளையும், அறுவைக் கூடங்களையும், பரிசோதனைக் கூடங்களையும், வகுப்புகளையும் காட்ட அழைத்துச் சென்றார்.

சி.எம். சி. மருத்துவமனை மிகவும் பெரியது.பல்வேறு கட்டிடங்களில் வெல்வேறு பிரிவுகள் இயங்கின. நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் நிறைய காணப்பட்டனர். மருத்துவர்களும்., பயிற்சி மருத்துவர்களும், மருத்துவ மாணவ மாணவிகளும் சுறுசுறுப்புடன் நடந்து சென்றனர். ஆண்கள் மருத்துவ வார்டு, பெண்கள் மருத்துவ வார்டு, ஆண்கள் அறுவைச் சிகிச்சை வார்டு, பெண்கள் அறுவைச் சிகிச்சை வார்டு, பிரசவ வார்டு, குழந்தைகள் வார்டு, பிரமுகர்கள் வார்டு, புற்று நோய் வார்டு, இதயவியல் வார்டு, சிறுநீரகவியல் வார்டு, நரம்பியல் வார்டு என பல வார்டுகள்  இயங்கின.
அவை  மிகவும் சுத்தமாக இருந்தன. அங்கு பணிபுரிந்த தாதியர் வெள்ளை நிற சேலையில் தேவதைகள்போல் காட்சி தந்தனர். தாதியர் பயிற்சி மாணவியர் நீல நிற சேலை அணிந்திருந்தனர். மருத்துவமனைக்குள்ளேயே தாதியர் பயிற்சிக் கல்லூரியும் இருந்ததால் ஏராளமான தாதியர் பயிற்சி மாணவிகள் நடமாடிக்கொண்டிருந்தனர்.

பயிற்சி மருத்துவர்களுக்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே மாடிக்கட்டிடங்களில் விடுதிகள் இருந்தன. தாதியர்களுக்கும், பயிற்சி தாதியர்களுக்கும் விடுதிகள் இருந்தன.

வளாகத்தினுள்ளேயே பொதுமக்கள் தங்கும் விடுதியும் உணவகமும் கிறிஸ்துவ வாலிபப் பெண்கள் இயக்கத்தினர் நடத்தினர்.அதன் அருகில்தான் மாணவர்களின் ஓய்வுக் கூடமும் அமைந்திருந்தது.

மருத்துவமனையைச் சுற்றிப்பார்த்துவிட்டு அங்கு வந்து சேர மதியமாகிவிட்டது. நாங்கள் அங்கு சென்றோம். பெண்கள் வேறு இடம் சென்றுவிட்டனர். அங்கு ஆண்கள் விடுதி மாணவர்கள் பலர் முன்பே வந்திருந்தனர். மதிய உணவும் விடுதியிலிருந்து வந்துவிட்டது. நாங்கள் வரிசையில் நின்று உணவைப் பெற்றுக்கொண்டோம்.

உணவருந்தியபின் அங்கேயே அமர்ந்து ஓய்வு எடுத்தோம். சிலர் அங்கு கேரம் ஆடினார்கள்.சிலர் படித்துக்கொண்டிருந்தார்கள். வேறு சிலர் அரட்டையடித்தனர்!

மீண்டும் நாங்கள் மதியம் இரண்டு மணிக்கு மருத்துவ வகுப்பு செல்லவேண்டும்!

( தொடுவானம்  தொடரும் )

Series Navigationபாடம் சொல்லும் கதைகள்அம்மா கணக்கு – இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரியின் வரவு
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *