காப்பியக் காட்சிகள் 12- சிந்தாமணியில் ​வாணிகம்

This entry is part 12 of 21 in the series 10 ஜூலை 2016

 

முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com

செல்வம் என்பது உயர்ந்தது. இதனைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான இன்பத்தையும் மேலுலக வாழ்க்கைக்குத் தேவையான வீடுபேற்றையும் அடையலாம். ஆலமரம் அழிந்தாலும் அதனை விழுதுகள் தாங்குவது போல தாங்கள் சேர்த்து வைத்த செல்வம் முதுமைக்காலத்தில் தங்களைத் தாங்கும் என்று மக்கள் நம்புகின்றனர். பெருங்செல்வத்தையும் பெருஞ்செல்வர்களையஙம் உருவாக்கும் தொழிலாக வணிகம் விளங்குகின்றது. சீவகசிந்தாமணியில் வணிகம் பற்றிய பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளன.

சிந்தாமணியில் கடல் வணிகத்தைப் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. உள்நாட்டு வணிகத்தில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் ஈடுபட்டனர். இதனை, “வாணிக மகளிர் தாமே வாணிகம் வல்லர்” என்ற தொடரிலிருந்து உணரலாம். வணிகப் பொருகள்களாக நெல், கரும்பு, வெல்லம், உப்பு வெற்றிலை, பாக்கு, உணவுப் பொருள்கள் முதலியன இருந்தாலும் அவற்றை வணிகர்கள் கடைகளில் விற்பனை செய்யவில்லை.

முத்து, மாணிக்கம், நீலக்கற்கள், தங்க அணிகலன்கள் ஆகியவற்றை வணிகர்கள் தங்கள் கடைகளில் வைத்து வணிகம் செய்தனர்(114). மேலும் வாணிகம் செய்வதற்குரிய பொருள்களைப் பிற இடங்களில் இருந்து வாங்கி வந்து விற்றனர். இதனை,

“தம்முடைப் பண்டம் தன்னைக் கொடுத்தவருடைமை கோடல்

எம்முடை யவர்கள் வாழ்க்கை”(771)

என்ற சிந்தாமணியின் வரிகள் எடுத்தியம்புகின்றன.

கடைகளின் தோற்றமும் வணிக நெறியும்

வணிகர்கள் தங்களின் கடைகளை மிகவும் அழகாக வைத்திருந்தனர்(113). வணிக வீதியில் அழகு செய்யப்பட்டகடைகள் பல இருந்தன. ஒரே நாளில் ஆறாயிரம் கோடிக்கு விற்பனை செய்யும் தகுதி மிக்க கடைகள் அன்று இருந்தன(1973). வணிகர்கள் நேர்மையோடும் நீதியோடும் தங்கள் தொழிலைச் செய்து வந்தனர்(547).

வணிகர்கள் தங்கள் தொழில் முதல் (அசல்) இலாபம் இரண்டையும் நிறையப் பெற முயற்சி செய்வர் இதில் இலாபம் கிடைக்கவில்லை எனில் முதலையாவது தக்க வைத்துக் கொள்வர். இது வணிகர்களின் வணிக நெறியாக இருந்தது என்பதை,

“வாணிக மொன்றுந் தேற்றாய் முதலொடுங் கேடு வந்தால்

ஊணிகந் தீட்டப் பட்ட வூதிய வொழுக்கி னெஞ்சத்

தேணிகந் திலேக நோக்கி யிருமுதல் கெடாமை கொள்வார்

சேணிகந் துய்யப் பொநின் செறிதொடி யொழிய வென்றார்” (770).

என்ற சிந்தாமணிப் பாடல் உணர்த்துகின்றது.

கடல் வணிகம்

கடல் வணிகம் கப்பல்களின் உதவியோடு நடைபெற்றது. கடல் வாணிகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களில் மூன்று பாய்மரங்கள் பயன்படுத்தப்பட்டன(501). கப்பல்களில் பாய்மரங்கள் பயன்படுத்தப்படாதபொழுது துடுப்புகள் பயன்படுத்தப்பட்டன(501). இக்கப்பல்கள் ஐந்நூறு காதத் தூரங்களுக்கும் மேலாகச் செல்லக்கூடியனவாக இருந்தன(506).

கடல் வணிக்தில் ஈடுபட்ட வணிகர்கள் தங்கள் தொழிலை நல்ல நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்துத் தொடங்கினர்(499). இரேவதி நட்சத்திரமும் வியாழ ஓரையும் தனுர் இலக்கணமும் வணிகப் பயணனம் மேற்கொள்ளச் சிறந்ததாகக் கருதப்பட்டது(506). வணிகர்கள் தங்களின் வணிகம் சிறப்பாக நடைபெற பயணம் மேற்கொள்ளும் நாளில் பெரும் பொருளை ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்துவிட்டுப்ப பயணத்தைத் தொடங்கினர்(500). சங்கும் பறையும் முழங்க வணிகர்களின் கடல்வணிகப் பயணம் தொடங்கியதாக சிந்தாமணி குறிப்பிடுகின்றது(501).

வணிகர்கள் பயணத்தின் முடிவாகப் பல நாடுகளைச் சென்றடைந்தனர். அந்நாடுகளில் தாங்கள் கொண்டு சென்ற பொருட்களை விற்பனை செய்ய அந்நாட்டு மன்னர்களின் உதவியை நாடினர். மன்னர்களுக்கு வணிகர்கள் விலையுயர்ந்த அணிகலன்களைப் பரிசாக வழங்கினர். இவ்வாறு பரிசுப் பொருள்களை மன்னர்களுக்கு வழங்குவதால் வணிகர்களுக்கும் அவர்தம் தொழிலுக்கும் பாதுகாப்பும் அரசர்களின் ஆதரவும் கிடைத்து வந்தது.

வணிகம் வெற்றிகரமாக முடிந்ததும் அந்நாட்டிலிருக்கும் பொருள்களை வாங்கிக் கொண்டு வணிகர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கினர்(505). இவ்வாறு கடல் வாணிகத்தின் வாயிலாக இங்குள்ள பொருள்களை வெளிநாடுகளில் கொண்டு சென்று விற்பனை செய்தும் அங்கிருக்கும் பொருள்களைத் தம்நாட்டில் கொண்டுவந்து விற்பனை செய்தும் வணிகர்கள் வாணிகம் செய்தனர். சீவகசிந்தாமணியில் வணிகம் குறித்த செய்திகள் அனைத்தும் கதைவழியே திருத்தக்கதேவரால் குறிப்பிடப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது.

(தொடரும்………………13)

Series Navigationபனுவல் புத்தக விற்பனை நிலையம்ஜூலை – 04. சுவாமி விவேகானந்தர் நினைவு தின கவிதை
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *