குறுநாவல் இளைய ராணியின் நகைப் பெட்டி – 1

This entry is part 12 of 20 in the series 4 செப்டம்பர் 2016

(தாரமங்கலம் வளவன் எழுதிய குறுநாவல் நான்கு பகுதிகளைக் கொண்டது. மூன்று பகுதிகள் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளன. நான்காவது இறுதிப் பகுதி சில நிர்வாகக் காரணங்களால் விடுபட்ட்து குறித்து வருந்துகிறோம். நான்கு பகுதிகளையும் இந்த வாரம் தொடராக அளித்துள்ளோம். ஆசிரியருக்கு எங்கள் நன்றி.)

1

தொலைக்காட்சியில் வெங்கட் என்ற ராஜ வம்சத்தை சார்ந்த ஒரு இளைஞனின் பேட்டியை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

 

தங்கள் குடும்பம் ஒரு பழைய ராஜ வம்சத்தைச் சார்ந்தது என்றும், தங்கள் அரண்மனையில் புதிதாய் நகைப் பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப் பட்டதாகவும், தங்கள் குடும்பம் இப்போது வறுமையில் இருந்தாலும், கண்டு பிடிக்கப் பட்ட அந்த நகைகளுக்கு உரிமை கொண்டாடப் போவதில்லை என்றும், அந்த நகைகளை விதவைகளின் மறு வாழ்வுக்கு  நன்கொடையாக  கொடுக்கப் போவதாகவும் பேட்டியில் சொல்லிக் கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

 

தன்னுடைய கொள்ளுப் பாட்டி பெயர் ரூபவதி என்றும், அந்த ரூபவதி இளம் வயதிலேயே விதவையாகி, தாங்க முடியாத துயரங்களை அனுபவித்தாகவும், அந்த ரூபவதியின் ஞாபகமாக இந்த மறுவாழ்வு சேவையை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

 

அவனுடன் ஒரு வயதான தம்பதியரும், நெற்றியில் சந்தன பொட்டுடன் ஒரு நபரும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். தாங்கள் நால்வரும்  சேர்ந்து இந்த நகைகளை கண்டுபிடித்ததாகக் கூறி, அவர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினான் அந்த வெங்கட். முதிய தம்பதியினரை சுதாகர் ராஜா, அவரது மனைவி என்றும் சந்தன பொட்டை பரந்தாமன் என்றும் அறிமுகப் படுத்தி,   அந்த நகைகள் எப்படி கண்டுபிடிக்கப் பட்டன என்பதைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தான்.

பிரிட்டிஷ் ஆட்சி முடிவதற்கு பத்து வருடம் முன்பு இருக்கும்.  மதுரைக்கு தென் பகுதியில் அமைந்த ஒரு குறுநில மன்னரின் அரண்மனை.  மழை கொட்டிக் கொண்டிருந்த ஒரு இரவு. மரணப் படுக்கையில் இருக்கும் அந்த நரசிம்ம ராஜாவுக்கு அறுபது வயது இருக்கும். அந்த ராஜாவின் படுக்கை அறைக்குள் ஒரு இளம் பெண் கைக்குழந்தையுடன் பயந்து பயந்து நுழைந்து,  ராஜாவை எழுப்பி,

 

“ நான் தான் ரூபவதி…” என்றாள்.

 

திடுக்கிட்டு எழுந்த அந்த ராஜா,

 

“ வந்து விட்டாயா ரூபா.. எங்கே நம் மகன்… ஒரு முறை அவனைக்காட்டு..” என்றார்.

 

ரூபவதி அந்த குழந்தையைக் காட்டினாள். அந்த குழந்தையைப் பார்த்தவுடன் ராஜாவின் முகத்தில் ஒரு பரவசம் ஏற்பட்டது. ரூபவதி குழந்தையோடு வருவாள்,  அவளிடம் ஏதோ ஒரு முக்கியமான ரகசியம் சொல்ல வேண்டும் என்பதற்காகவே உயிரை வைத்துக் கொண்டிருந்தது போல பரபரப்பு அடைந்தார். குரலைத் தாழ்த்திக் கொண்டு, அவளிடம் பேச ஆரம்பித்தார்.

 

“ என் உயிர் போனவுடன், இவர்கள் உன்னையும், நம் மகனையும்  இங்கே வாழ விடமாட்டார்கள். உங்கள் இருவரையும் கொன்று விடுவார்கள். இந்த அரண்மனையில் அதிக நாட்கள்  இருக்காதே.. மற்ற ராணிகளுக்கு கொடுத்த அதே அளவு நகைகளை உனக்கும் நான் கொடுக்க விரும்புகிறேன். உனக்கு உரிய அந்த நகைகளை ஒரு பெட்டியில் வைத்து இருக்கிறேன். அந்த நகைப்பெட்டியை இந்த அரண்மனையில் ஒரு இடத்தில் ஒளித்து வைத்து இருக்கிறேன்.”

 

பேசுவதை நிறுத்திவிட்டு மூச்சு வாங்கினார் நரசிம்ம ராஜா.

 

பிறகு, தன் தலையணைக்கு அடியில் கையை விட்டு தடவி, ஒரு காகித சுருளை எடுத்தார் அவர்.

 

“  அந்த நகைப் பெட்டி இருக்கும் இடத்தை இந்த வரைபடத்தில் வரைந்து வைத்து இருக்கிறேன்.  நீ படித்தவள். டீச்சராக வேலை பார்த்தவள். இந்த வரைபடத்தை உன்னால் புரிந்து கொள்ள முடியும். சமயம் பார்த்து, அந்த நகைப் பெட்டியை எடுத்துக் கொண்டு, இந்த அரண்மனையை விட்டு போய் விடு… நம் மகனை நல்லபடியாக வளர்த்து பெரியவனாக்கு.. சில நகைகளை விற்று பணமாக கையில் வைத்துக் கொள். தேவைப் படும் போது மட்டும் அந்த நகைகளை விற்றுக் கொள்.  நம் மகனை பெரிய படிப்பு படிக்க வைத்து, ஒரு கலைக்டராகவோ, டாக்டராகவோ கொண்டு வா..”

 

தன் கணவர் கொடுத்த அந்த வரைபடத்தை வாங்கிப் பார்த்தாள். சன்னமான சிகப்பு துணியின் மேல் அந்த வரைபடம் ஒட்டப்பட்டு நான்காக மடிக்கப் பட்டு இருந்தது.

 

“ உன்னுடைய வெற்றிலைப் பெட்டிக்குள்,  யாரும் கண்டு பிடிக்க முடியாதபடி இப்போதைக்கு இந்த வரைபடத்தை மறைத்து வைத்துக் கொள்.. பிறகு நிதானமாய் படித்துப்பார்த்து, இந்த அரண்மனையில் எங்கே அந்த நகைப் பெட்டி வைத்துள்ளது என்பதை புரிந்து கொள்.. யாருக்கும் தெரியாமல் ஒரு நாள் அந்த நகைப்பெட்டியை எடுத்துக் கொண்டு உன் தாய் வீட்டுக்கு போய் விடு..”  என்றார் ராஜா.

 

பேசுவதை நிறுத்திவிட்டு மூச்சு வாங்கினார் ராஜா. எதையோ யோசிப்பது போல் இருந்து விட்டு,

 

“ நான் காகிநாடாவுக்கு போன வருடம் வராமல் இருந்திருந்தால், உன்னை நான் அந்த ஜில்லா போர்டு ஸ்கூலில் பார்க்காமல் இருந்திருந்தால், நீ வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொண்டு நல்ல படியாக வாழ்ந்திருப்பாய்.. நான் உன் வாழ்க்கையை பாழடைத்து விட்டேன், இல்லையா.. நான் பாவி.. என்னை மன்னித்து விடு ரூபா..” என்றார்.

 

ராஜா இறந்து போன மூன்றாவது நாள். துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் கிளம்பி போனவுடன், அந்த அரண்மனையில் ரூபவதியின் அலறல் கேட்டது.

 

“ அந்த நகைப் பெட்டி எங்கேடி.. கொடுத்துடு… இல்லேன்னா கொன்னுடுவேன்..” என்று அந்த இறந்து போன ராஜாவின்  மூத்த மகன் பிரேம் குமார், தன் சித்தியான ரூவதியை குதிரை சாட்டையில் அடித்துக் கொண்டே கேட்க,

 

“ எனக்கு தெரியாது.. எனக்கு தெரியாது..” என்று திரும்ப திரும்ப  கதறிக் கொண்டிருந்தாள் ரூபவதி.

 

அவளின் உடம்பெங்கும் சாட்டையடிகள். ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. பக்கத்தில் தரையில் கிடக்கும் அந்த ஆண் குழந்தை, தெரிந்தோ தெரியாமலோ தன் தாயின் மீது விழும் ஒவ்வொரு அடிக்கும் வீல் என்று கத்திக்  கொண்டிருந்தது.

 

ராஜாவின் முதல் இரண்டு மனைவிகளும், அவர்களின் மற்ற மகன்களும் ரூபவதியைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் அந்த ரூபவதியை அடிப்பதற்கான ஆயுதங்கள் இருந்தன. சிலர் கையில் குதிரை சாட்டை. சிலர் கையில் பெல்ட். இடைவெளிவிட்டு, ஒவ்வொருவராக அவளை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

 

தொடர்ந்து அடி வாங்கிய ரூபவதி மயக்கமாகிப் போய் விட,

 

“ விடுடா.. அவ செத்து போயிட்டா நமக்கு தான் நஷ்டம்.. அப்புறம் அந்த நகைப் பெட்டி எங்கே இருக்குன்னு தெரியாம போயிடும்.. மயக்கம் தெளியட்டும்.. அப்புறம் அடிச்சி கேக்கலாம்.. மூஞ்சில தண்ணி அடிங்கடா..” என்றாள் செத்துப் போன ராஜாவின் முதல் மனைவி.

 

1937 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். காகிநாடா.

 

ரூபவதி டீச்சராக வேலை செய்த பள்ளியின் ஹெட்மாஸ்டர் வீடு. சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு ஆங்கில செய்தித்தாளை அவர் தன் வீட்டு விலாசத்திற்கு தபாலில் தருவித்துக்  கொண்டிருந்தார். செய்தித்தாள் இரண்டு நாள் கழித்து தான் வந்து சேரும்.

 

அன்று வந்த அந்த ஆங்கில செய்தித்தாளில் ரூபவதியின் கணவர் நரசிம்மராஜா இறந்து போன செய்தி வந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார் அவர்.

 

அந்த செய்தித்தாளை கையில் எடுத்துக் கொண்டு, ரூபவதியின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

 

ரூபவதியின் பிறந்த வீடு ஒரு ஓலைக் குடிசை. திண்ணையில் ரூபவதியின் அண்ணன் ராமண்ணாவும், அவளின் அப்பா அம்மாவும் உட்கார்ந்திருந்தார்கள்.

 

“  நான் அப்பவே சொன்னேன்.. நீங்களும் கேக்கல.. இந்த ஊர்க்காரங்களும் கேட்கல..” ரூபவதியின் அண்ணன் ராமண்ணாவைப் பார்த்து சொன்னார் ஹெட்மாஸ்டர்.

 

“ என்ன விஷயம் சார்..” பதறிப் போய் ராமண்ணா கேட்டான்.

 

அவனுக்கு நெஞ்சு படபட வென்று அடித்துக் கொண்டது. ஹெட்மாஸ்டர் ஏதோ சொல்ல வந்திருக்கிறார் என்பது தெரிந்தது. ரூபவதியின் அப்பா அம்மாவுக்கும் ஏதோ கெட்ட செய்தி என்பது புரிந்து அதிர்ச்சி அடைந்து முழித்தார்கள்.

 

“ வயசானவருக்கு ரூபவதியை கொடுக்காதீங்கன்னு சொன்னேன்.. நீங்க யாரும் கேட்கல..” என்றார் ஹெட்மாஸ்டர்.

 

“ சீக்கிரம் சொல்லுங்க.. என்ன விஷயம்..” என்றான் ராமண்ணா மறுபடியும் பதட்டம் தணியாமல்.

 

“ ரூபவதியோட புருஷன்,  அதாவது அந்த நரசிம்ம ராஜா செத்துட்டாராம்.. இங்கிலீஷ் பேப்பர்ல வந்திருக்கு.. இந்தா பாரு..” என்று அந்த ஆங்கில பத்திரிக்கையைக் காட்டினார்.

 

“  ஐயோ.. எனக்கு இங்கிலீஷ் படிக்க வராதுங்களே..  ரூபவதியோட புருஷன் செத்துட்டாரா.. ஐயோ கடவுளே.. வயசானவருக்கு ரூபவதியை கொடுக்காதீங்கன்னு நானும் சொன்னனே..” அழுது கொண்டே சொன்னான் ராமண்ணா.

 

அப்பா அம்மா பிரமை பிடித்தது போல் இருந்தார்கள்.

 

தன் இருபது வயது தங்கை ரூபவதியை அந்த வயதான ராஜாவுக்கு கல்யாணம் செய்து கொடுக்க தன் அப்பா அம்மா முடிவு செய்த போது, அதை எதிர்த்தவன் ராமண்ணா.  இப்படி யெல்லாம் நடக்கும் என்பதை முன்கூட்டியே எதிர்பார்த்தான். .

 

“ ராஜா எறந்த செய்தியை கூட நமக்கு யாரும் சொல்லலை.. ரூபவதி எப்படி இருக்காளோ..” அப்பாவும் அம்மாவும் குரலெடுத்து அழ ஆரம்பிக்க,

 

ராமண்ணாவுக்கும், தங்கை ரூபவதிக்கும் பனிரெண்டு வயது வித்தியாசம். ரூபவதி அவனுக்கு மகள் போல.

 

சின்ன வயதில் இருந்து படிப்பு அவளுக்கு உயிர் மூச்சு. நன்றாக படிப்பாள். பெண்ணுக்கு எதற்கு படிப்பு என்று அவளை படிக்க வைக்க அப்பா, அம்மா, உறவினர், எல்லோரும் எதிர்ப்பு காட்டினார்கள். அனைவரின் எதிர்ப்பையும் மீறி,  படிப்பில் அவள் காட்டிய அக்கறையைப் பார்த்து, ராமண்ணா தான் ரூபவதியை படிக்க வைத்தான்,.

 

அவர்கள் ஊரில் எஸ் எஸ் எல் சி படித்து முடித்த முதல் பெண் ரூபவதி தான். படித்து முடித்தவுடன் அவள் படித்த அதே ஜில்லா போர்டு ஸ்கூலில் அவளை டீச்சராக சேர்த்துக் கொண்டார்கள்.

 

அப்போது, அந்த நரசிம்ம ராஜா காகிநாடாவுக்கு தன் பரிவாரங்களுடன் வந்து இருந்தார்.

 

ஜில்லா போர்டு பள்ளியில் ஆண்டு விழா. பள்ளி நிர்வாகம் மாணவ மாணவியருக்கு பரிசளிப்பதற்கு அந்த ராஜாவை அழைத்திருந்தார்கள்.

 

அந்த ஆண்டு விழாவில் மாணவ மாணவியரை வரிசையாக நிற்கச் சொல்லுவது, மேடைக்கு அழைத்து வருவது என்று சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டு இருந்தாள் ரூபவதி.

 

இதைப் பார்த்த அந்த ராஜா,

 

“ யாருங்க அந்த பொண்ணு.” என்று கேட்டார் பக்கத்தில் இருந்த ஹெட்மாஸ்டரிடம்.

 

அவருக்கு விஷயம் புரிந்து விட்டது. ஏதோ சொல்லி மழுப்பினார். தன்னுடைய எண்ணத்துக்கு ஹெட்மாஸ்டர் ஒத்துழைக்க மாட்டார் என்று தெரிந்தவுடன், மற்ற நிர்வாகிகளை வைத்து ரூபவதியின் வீட்டைக் கண்டுபிடித்து விட்டார் அந்த நரசிம்ம ராஜா.

 

ரூபவதியை ராஜாவுக்கு கல்யாணம் செய்து தரவேண்டும் என்று அவர்கள் மிரட்ட, ஹெட்மாஸ்டர் ஒருவரைத் தவிர ஆதரவு தர யாரும் வரவில்லை.

 

பள்ளி நிர்வாகிகளோ ஊர் பெரிய மனிதர்கள். அவர்கள் ராஜாவின் பக்கம். அவர்களை எதிர்க்க அவளின் அப்பா அம்மாவுக்கு தைரியம் இல்லை. அவசர அவசரமாக ரூபவதியின் அந்த கல்யாணம் அடுத்த நாளே முடிந்து அந்த ராஜாவோடு, ரூபவதி கிளம்ப வேண்டியதாகி விட்டது.

 

 

“ ராமண்ணா.. நீ போய் ரூபவதியை பாத்து கூட்டிகிட்டு வந்துடு..”

ஹெட்மாஸ்டர் சொல்லிவிட்டு கிளம்ப, தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு, தன் தங்கையைக் காண உடனே புறப்பட்டான் ராமண்ணா.

 

படாத பாடு பட்டு, ரூபவதி இருக்கும் அரண்மனைக்கு வந்து சேர்ந்தான் அவன்.

 

ஏற்கனவே சொல்லி வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. அரண்மனையின் காவலாளிகள் அவனை உள்ளே விடவில்லை.

 

ராமண்ணா அரண்மனை வாசலில் நின்று கொண்டு இருப்பதை ரூபவதியிடம் வேலைக்காரர்கள் வந்து சொன்னார்கள். அவள் அடைந்த சந்தோசத்தை பார்த்த பிரேம் குமார்  ரூபவதியிடம் வந்து,

 

“ அந்த நகைப் பெட்டியை கொடுத்திட்டா, நீ உன் அண்ணனோட போகலாம்..” என்றான்.

 

-தொடரும்

Series Navigation‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ – 2காப்பியக் காட்சிகள் ​18. சிந்தாமணியில் சகுனம் சோதிடம் மந்திரம் குறித்த நம்பிக்கைகள்
author

தாரமங்கலம் வளவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *