தொடுவானம் 138. சமூக சுகாதாரம்

This entry is part 11 of 19 in the series 2 அக்டோபர் 2016

மருத்துவம் என்பது நோயைக் குணப்படுத்துவது மட்டுமல்ல. நோய்கள் வராமல் தடுப்பதுவும் அதன் முக்கிய குறிக்கோளாகும். இதுவே  சமூக சுகாதாரம் என்பது. இதைத் தனிப் படமாக ஓராண்டு பயில வேண்டும்.கல்லூரி விளையாட்டு மைதானத்தின் எதிர்புறம்.அமைந்துள்ள சமூக சுகாதார நிலையத்தில் இதன் தலைமையகம் இருந்தது. அந்த சுகாதார நிலையம் ஒரு கிராம மருத்துவமனைபோல் இயங்கியது. அங்குதான் நாங்கள் சமூக சுகாதாரம் பயின்றோம். சற்று தொலைவிலிருந்த கல்லூரி வகுப்பறையில்தான் வகுப்புகள் நடந்தன. அவற்றை நடத்தியவர் டாக்டர் வீ.பெஞ்சமின்.மலையாளிதான். மிகவும் அன்பானவர். எல்லாரிடமும் இயல்பாகப் பழகுபவர்.

சமூக சுகாதாரம் மருத்துவக் கல்வியின் ஒரு பிரிவு. பொது மருத்துவம் என்பது தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சை பற்றியது. சமூக சுகாதாரமோ ஒரு சமுதாயத்துக்கு தேவையான மருத்துவம் பற்றியது. சமுதாயம் என்பது ஒரு பகுதியில் வாழும் அனைத்து மக்கள் எனலாம். ஒரு கிராமத்தில் வசிக்கும் எல்லா மக்களுக்கும் வழங்கப்படும் மருத்துவ வசதியை சமூக சுகாதாரம் எனலாம். சமூக சுகாதாரம் ஒரு பகுதியில் வாழும் மக்களுக்கு சுகாதாரம் பற்றிய  விழிப்புணர்வைத் தருவதோடு, அப்   பகுதியில் நிலவும் சுகாதாரச் சீர்கேடுகளைக் களைவதுமாகும். இதில் சுற்றுச் சூழல் முக்கியமானதாகும். உதாரணமாக கிராமத்தில் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தி பெருகி கிராமத்தினர் பலருக்கு டெங்கி காய்ச்சலை உண்டுபண்ணலாம். அதுபோன்று பாதுகாக்கப்படாத குடிநீரை அவர்கள் குடிப்பதால் பலருக்கு வயிற்றுப்போக்கு உண்டாகலாம்.

ஒரு சமூகத்தின் சுகாதாரத்தைப் பேணுவதென்றால் அந்தச் சமூகத்தை முதலில் ஆராயவேண்டும். அங்கெ எத்தகைய சுகாதாரச் சீர்கேடு உள்ளது என்பதை அதன்மூலம் கண்டறியலாம். அதன்பின்பு அவற்றைக் களையும்  முயற்சியில் ஈடுபடலாம். இதற்கு கிராம மக்களும் அரசு அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

இந்தியா கிராமங்களால் ஆனது. ஆதலால் சமூக சுகாதாரம் கிராமங்களுக்கு இன்றியமையாதது.அதனால்தான் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கிராமங்களில் உருவாக்கப்பட்டன.அந்த பாணியில்தான் பாகாயத்திலும் எங்களுடைய சமூக சுகாதார நிலையம் இயங்குகிறது.  இங்கு பாகாயம் வாழ் மக்களின் சுகாதாரம் கண்காணிப்படுகிறது. மருத்துவர்கள் நோயாளிகளை பரிசோதனைச் செய்து எளிய முறையில் மருந்துகள் தருவதோடு, நோய் தடுப்பு முறைகள் பற்றியும் அவர்களுக்கு பயிற்றுவிக்கின்றனர்.இங்குதான் நாங்களும் நான்காம் ஆண்டு மருத்துவ மாணவர்களாக பயிற்சி பெற்றோம்.

கிராமங்களில் பரவலாகக் காணப்படும் சுகாதார குறைபாடுகள் என்னென்ன என்பதைக் கற்றோம். முக்கியமாக பாதுகாக்கப்படட குடி நீர், கழிவு நீர் வெளியேற்றம், முறையான கழிவறைகள்,சத்துள்ள உணவு, குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி, கர்ப்பவதிகளுக்கு மருத்துவப் பரிசோதனை, போதுமான மருத்துவ வசதி, பிரசவம் போன்றவை கிராமங்களுக்கு முக்கியமாகத் தேவை. இவை அனைத்தும் எல்லா கிராமங்களுக்கும் கிடைத்துள்ளதா என்பது கேள்விக்குறியே!

இவை பற்றி பாடநூலில் நாங்கள் படித்து, வகுப்பறையில் பாடங்களைக் கேட்டும் தெரிந்துகொண்டாலும், நேரடியான கிராமத்தின் அனுபவமும் எங்களுக்குத் தரப்பட்டது. கல்லூரியிலிருந்து ஆரணி ரோட்டில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு குக்கிராமம் எங்களுக்குத் தரப்பட்டது. அங்கு நாங்கள் சென்று அந்த கிராமத்தைத் தத்தெடுத்து அங்குள்ள மக்களின் பிரச்னைகளைக் கண்டறிந்து சுகாதார ரீதியில் அவர்களின் நிலையை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டோம். எனக்கு எங்கள் தெம்மூர் கிராமத்தின் அனுபவம் இருந்ததால், இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

கிராமப்புறங்களில் மக்களிடையே அதிகமாகக் காணப்படுவது இரத்த சோகை. அதிலும் குறிப்பாக இரும்புச் சத்து குறைவினால் உண்டாகும் இரத்தச் சோகையாகும். இது கர்ப்பமுற்ற பெண்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. சத்தான உணவு உட்கொள்ளாதது ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. அது பலருக்குத் தெரியாது.காரணம் அது கண்ணுக்குத் தெரியாமலேயே நடந்துகொண்டிருந்த சிவப்பு இரத்த இழப்பாகும்.பல வருடங்களாக இரத்த கசிவு உண்டாவதால் இரத்த சோகை உண்டாகிறது.

இவ்வாறு வயிற்றிலும் குடலிலும் இரத்தக் கசிவை உண்டுபண்ணுவது கொக்கிக் புழு ( Hook Worm ). இது கண்ணுக்குத் தெரியாது. இது மலத்தின்மூலம் வெளியேறும். கிராமங்களில் முறையான கழிப்பறைகள் கிடையாது. திறந்த வயல்வெளிகளில் வரப்புகளிலும் மலம் கழிக்கும் பழக்கம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. வயலுக்குச் செல்பவர்கள் காலணிகள் அணிந்து செல்வதும் கிடையாது. வெறும் கால்களால் அவர்கள் வயல்களிலும் வரப்புகளிலும் நடந்து செல்லும்போது அங்கு மலத்தில் கிடக்கும் கொக்கிக் புழுக்கள் அவர்களின் கால் பாதத்தின் தோலில் கொக்கி போட்டு உள்ளே புகுந்துவிடும். அது மிக நுணுக்கமாக நடைபெறுவதால் புழு தோலைத் துளைத்துக்கொண்டு உள்ளே புகுவதை உணரமுடியாது. கண்ணுக்கும் அது தெரியாது. அவ்வளவு சிறியது கொக்கிக் புழு.

தோல் வழியாக துளைத்துக்குக்கொண்டு செல்லும் புழு இரத்தக்குழாயின் சுவற்றையும் துளைத்துக்கொண்டு இரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இரத்த ஓட்டத்தின் வழியாக இருதயத்தின் வலது பக்கம் சென்று நுரையியலுக்குள் புகுந்துவிடுகிது. அங்கு நுரையீரலின் உட் சுவருக்குள் துளைத்து புகுந்து காற்றுப் பைகளுக்குள் சென்று சுவாசம் மூலம் வெளிவருகியது. அவ்வாறு வெளியேறும்போது தொண்டைப் பகுதியில் சுவாசிக்கும் குழாயிலிருந்து உணவுக்குழாய்க்குள் பாய்ந்துவிடுகின்றன. அங்கிருந்து வயிற்றுக்குள்ளும் சிறுகுடலுக்குள்ளும் சென்று தஞ்சமடைகின்றன. அங்கு அவை இனப்பெருக்கம் செய்து ஏராளமான புழுக்களை உற்பத்திச் செய்கின்றன. அப் புழுக்கள் வயிற்றுச் சுவரிலும், குடல் சுவரிலும் கொக்கி போட்டுக்கொண்டு இரத்தத்தை உறிஞ்சி வெளியேற்றுகின்றன. இப்படி ஆயிரக்கணக்கான கொக்கிக் புழுக்கள் இரத்தத்தை உறிஞ்சி வெளியேற்றினால் நாளடைவில் இரத்தக் கசிவு உண்டாகி , இரத்தத் சோகை ஏற்படுகிறது.

நாங்கள் தத்தெடுத்த கிராமத்தில் இருந்த கர்ப்பமுற்ற பெண்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் விநியோகம் செய்வோம். இரத்த சோகையாக உள்ளவர்களுக்கும் அவ்வாறே செய்தொம். தேவையானவர்களுக்கு இரத்தப் பரிசோதனைகள் செய்தோம்.

மாலையில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து கொக்கிக் புழு பற்றி சொற்பொழிவுகள் மூலம் விழிப்புணர்வு உண்டுபண்ணினோம். காலணிகள் பயன்படுத்துவதின் அவசியத்தை வலியுறுத்தினோம்.

அந்த கிராமத்தில் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்பம் தரப்பட்டது. அதிலுள்ள உறுப்பினர்களின் உடல்நலம், சுகாதாரம், பொதுநலம் பேணும் பொறுப்பு எங்களுடையது.

இவ்வாறு வகுப்பு, ஆரம்ப சுகாதார நிலையம், கிராமம் ஆகியவற்றில் ஓராண்டு சமூக சுகாதாரம் பயின்றோம்.

          ( தொடுவானம் தொடரும் )

Series Navigationவிலாசம்கதை சொல்லி
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *