பார்வதி தேவி வாங்கிக் கொடுத்த நஷ்ட ஈடு

This entry is part 7 of 14 in the series 6 நவம்பர் 2016

தாரமங்கலம் வளவன்

கயிலை மலை. சிவபெருமானிடம் பார்வதி தேவியின் விண்ணப்பம்.

“ சுவாமி, பூலோகத்தில் எனக்கு ஒரு இளம் பக்தை. சம்பூர்ணம் என்று பெயர். அவளின் கணவன் மாரி, கிரானைட் கம்பெனியில் வேலை செய்யும் போது, கிரானைட் கற்களை தூக்கும் கிரேன் அறுந்து விழுந்து, அதனடியில் சிக்கி இறந்து போய் விட்டான். சம்பூர்ணத்திற்கு வயிற்றில் ஒரு குழந்தை. கையில் ஒரு குழந்தை. என் பக்தை கதறி அழுகிறாள் சுவாமி…”

“ நான் என்ன செய்ய வேண்டும் தேவி.. அவனை உயிர்ப்பித்து தர வேண்டுமா.. அது முடியாதே..” சிவபெருமான்.

“ உயிர்பித்து தர வேண்டாம் சுவாமி.. அது கூடாது என்று எனக்கும் தெரியும்.. அந்த கம்பெனிக்காரர்களிடம் இருந்து உரிய நஷ்ட ஈடாவது அவளுக்கு பெற்று தர வேண்டும்.. அப்படி நஷ்ட ஈடு வாங்கித் தந்தால், அது அவள் குழந்தைகளை வளர்க்க உதவும். அவளுக்கு நஷ்ட ஈடு பெற்றுத் தர நான் பூலோகம் செல்ல தங்கள் அனுமதி வேண்டும் சுவாமி..” என்றாள் பார்வதி தேவி.

“ சரி பூலோகம் சென்று வர அனுமதி கொடுக்கிறேன்.. எப்படி நஷ்ட ஈடு பெற்று தருவாய்.? யாரிடமிருந்து அந்த நஷ்ட ஈடு பெற்று தருவாய்..? அதற்கு என்ன உபாயம் கையில் வைத்திருக்கிறாய்.?..”

“ அனைத்தும் உணர்ந்த தாங்கள் தான் அதற்கும் உதவ வேண்டும் சுவாமி. நான் யாரைப் போய் பார்க்க வேண்டும் என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும்..”

“ அப்படிக் கேள்.. அந்த கம்பெனிக்கு சேர்மன் என்று ஒருவர் இருப்பார்.. அவர் தான் உன்னுடைய பக்தைக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.. அவரைத்தான் நீ போய் பார்க்க வேண்டும். இப்போது இந்த கம்பெனியின் சேர்மன் தினேஷ் ஒரு குழப்பத்தில் இருக்கிறார்.. சமீபத்தில் அவரின் தந்தை அதாவது முந்தைய சேர்மன் இறந்து போக, இந்த தினேசுக்கு சேர்மன் பதவி கிடைத்து இருக்கிறது. தினேசுக்கு உடன் பிறந்த ஒரே ஒரு தங்கை உண்டு. ஆனால் அந்த தங்கையுடன் சொத்து பிரிப்பதில் தகராறு இன்னும் தீர்ந்த பாடில்லை…”

“ இந்த ஒரு விஷயம் போதும் சுவாமி.. பூலோகம் சென்று மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்..”

“ போய் வா தேவி.. வெற்றியுடன் வா..”

“ ஆசிர்வதியுங்கள் சுவாமி..”

அனுமதியும் ஆசிர்வாதமும் கிடைக்க, பார்வதி தேவி பூலோகம் புறப் பட்டாள்.

பூலோகத்தில் அந்த பக்தை சம்பூர்ணம், எங்கு இருக்கிறாள் என்று பார்வதி தேவி விசாரித்த போது, அவள் தொழிலாளர்களின் யூனியன் ஆபிஸில் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கு வந்து சேர்ந்தாள் பார்வதி தேவி. அந்த கிரானைட் தொழிற்சாலையின் பிரதான வாயிலுக்கு எதிர் வரிசையில் ஒரு ஓலைக் குடிசையில் இருந்தது அந்த யூனியன் ஆபிஸ். யூனியன் லீடர், எழுபது வயது இருக்கும். வாசலில் வந்து நின்ற தேவியை, விசாரித்து விட்டு, உள்ளே கூட்டிக் கொண்டு போனார்.

நடுக்கூடத்தில் தலைவிரி கோலமாய் அழுது கொண்டிருந்தாள் கர்ப்பிணி சம்பூர்ணம். ஒரு வயதுக் குழந்தை பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதுவும் அழுது கொண்டிருந்தது.

“ பிள்ளத்தாய்ச்சி பொண்ணு இப்படி அழக்கூடாது.. அப்புறம் உனக்கு ஏதாவது ஆயிடிச்சின்னா இந்த குழந்தை அனாதை ஆயிடும்..”

கூட்டத்தில் இருந்த பெண்கள் அவளை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

தேவியைப் பார்த்ததும், பேசுவதை நிறுத்திய அந்த பெண்கள்,

“ பாரு.. உன்னப் பாக்க உன்னோட சொந்தக் காரங்க வந்திருக்காங்க..” என்று தேவியை அந்த சம்பூர்ணம் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

அழுகையை நிறுத்திய அந்த சம்பூர்ணம், யார் தன்னை தேடி வந்திருக்கிறது என்று பார்த்தாள்.

தேவி அவளிடம், “ என்னைத் தெரியுதா.. நான் தான் கயிலை மலை அக்கா.. நீ கூப்பிட்டியேன்னு வந்தேன்..” என்றாள்.

திரு திரு என்று முழித்தாள் சம்பூர்ணம். தேவி ஏதோ சமிக்சை செய்தாள். வந்திருப்பது யார் என்று புரிந்து கொண்ட சம்பூர்ணத்திற்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. நம்பவும் முடியவில்லை.

“ கவலைப் படாதே.. கம்பெனிக்காரங்க கிட்ட பேசி, உனக்கு நஷ்ட ஈடு வாங்கித் தர்ரேன்..” என்று தேவி சொல்ல, ஆச்சர்யத்தின் பிடியில் இருந்து விலகாத அந்த பெண்ணுக்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்று புரியவில்லை.

யூனியன் லீடர் தேவியை ஏற இறங்கப் பார்த்தார். பார்ப்பதற்கு அழகாய், ரொம்ப படித்த, பெரிய இடத்துப்பெண் போல் இருக்கிறதே என்று நினைத்தார். சம்பூர்ணத்திற்கு இப்படி ஒரு உறவுக்காரியா என்று நினைத்தார்.

யூனையன் ஆபீஸ் சுவரில் மாட்டி வைக்கப் பட்டிருந்த மார்க்ஸ், லெனின் படங்களை பார்த்த தேவி,

“ இவங்கல்லாம் கடவுள்களா.. என்ன பெயர்..” என்று கேட்டாள்.

ரொம்ப படித்த பெண் மாதரி இருக்கிறது. ஆனால் இந்த பெண்ணுக்கு மார்க்ஸ், லெனின் பற்றி தெரியாமல் இருக்கிறதே என்று நினைத்தார் யூனியன் லீடர்.

“ இவங்க வெளிநாட்டுக்காரங்க..” என்றார் அவர்.

“ அந்த நாட்டில கடவுள்களா..” என்று பார்வதி தேவி கேட்க,

“ ஆமாம்..” என்று சொல்லி வைத்தார் அவர்.

யூனியன் ஆபீஸை விட்டு கீழே இறங்கிய தேவி,

“ நான் கம்பெனியோட சேர்மனை பார்க்கணும். எங்க இருப்பாரு..” என்றாள்.

“ அதோ பாருங்க… பத்தாவது மாடி.. அங்க தான் அவரு ரூமு…” என்று கையைத் தூக்கி காண்பித்தார் அவர். தேவியும் நிமிர்ந்து அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தைப் பார்த்தாள்.

நடக்க ஆரம்பித்தாள் தேவி. உடன் அவரும் நடந்தார்.

“ அவங்க உள்ள வுட மாட்டாங்க..” என்றார் அவர்.

தேவி, ஒரு சிறு புன்னகையுடன், “ அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்..” என்றாள்.

தேவியின் நடத்தை, பேச்சு பிடிபடாமல் இருந்தது அவருக்கு. செத்துப் போன மாரிக்கு, நஷ்ட ஈடு பெற்றுத்தர ஏற்கனவே முயற்சி செய்து பார்த்து முடியாமல் விட்டு விட்டார் அவர். மாரி ஒரு காண்டிராக்ட பணியாளன் என்பதால் நஷ்ட ஈடு கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள். தன்னால் முடியாததை, இந்த பெண் வாங்கிக் கொடுத்தால் நல்லதுதான் என்று நினைத்தார் அவர். அப்படி ஒரு காண்டிராக்ட் பணியாளுக்கு நஷ்ட ஈடு பெற்றுத் தந்தால், தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்றும், வரப் போகும் யூனியன் தேர்தலில் மீண்டும் தான் வெற்றி பெற இது உதவும் என்றும் அவர் கணக்கு போட்டார். அதனால், தனக்கு தெரிந்த சில விஷயங்களை கயிலை மலை அக்காவிடம் சொன்னால், அது அவள் நஷ்ட ஈடு பெற்றுத்தர உபயோகமாய் இருக்கும் என்று முடிவு செய்தார் அவர்.

“ இன்னிக்கி கம்பெனியோட போர்டு மீட்டிங்.. இந்த கிரானைட் கம்பெனியோட முதலாளி, அதாவது, சேர்மன் தினேஷ் பெரிய குழப்பத்தில இருக்கிறாரு. பழைய சேர்மன், அதாவது இவரோட அப்பா ரங்கபாஷ்யம் போன மாசம் தான் இறந்து போனாரு. ரங்கபாஷ்யத்தின் உயில்படி, தினேஷின் தங்கை லலிதாவுக்கு மூன்றில் ஒரு பங்கு ஷேர் கொடுக்கணும்னு எழுதி வைச்சு இருக்கறதா கேள்வி. தினேஷை தங்கச்சி லலிதா எந்த தொந்திரவும் பண்றதில்ல. ஆனா லலிதாவோட கணவன் குமார்தான் தினேஷுக்கு பெரிய தலைவலி.”

“ அந்த குமாருக்கு சொத்து பிரித்ததில் திருப்தி இல்லையா.. இன்னும் கேட்கிறானா..” தேவி கேட்க,

“ ஆமா.. அப்படித்தான் நெனக்கிறேன்..” என்றார் யூனியன் லீடர்.

தொழிற்சாலையின் பிரதான வாயிலை நோக்கி தேவி வேகமாய் நடக்க, வயதான யூனியன் லீடரால் தேவியை தொடரமுடியவில்லை. ஓட வேண்டி இருந்தது அவருக்கு.

இன்னும் ஏதாவது உபயோகமான விஷயம் சொல்லலாம் என்று நினைத்த அவர், மூச்சு வாங்கிக் கொண்டே சொன்னார்,

“ லலிதாவுக்கு சாதகமா அரசாங்கத்தில, சமீபத்தில ஒரு உத்தரவு ஆகி இருக்காம். கம்பெனியோட போர்டு குழுவில கண்டிப்பாய் ஒரு பெண் பங்குதாரர் உறுப்பினராக இருக்கணும்னு..”

“ பெண் சக்தியை அரசாங்கம் உணர்ந்து செயல்படறது எனக்கு மகிழ்ச்சிதான்..” தேவி சொன்னாள்.

மகிழ்ச்சியை தெரிவிக்க யார் இந்த பெண்.. ஏதோ மகாராணி போல் பேசுகிறாளே என்று நினைத்தார் அவர். ஒரு வேளை டில்லியில் ஏதாவது மந்திரி பதவியில் இந்த பெண் இருக்குமோ..

சம்பூர்ணத்திற்கு இப்படி ஒரு சொந்தமா என்று அவர் மனம் நினைத்தது.

“ மாரிக்கு எவ்வளவு நஷ்ட ஈடு கம்பெனிக்காரங்க கிட்ட கேட்கணும்..” தேவி கேட்டாள்.

“ அஞ்சு லட்சம் கேளுங்க..” என்றார் அவர்.

தேவி மேல் அவருக்கு நம்பிக்கை ஏற்பட, தனக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லி விடலாம் என்று நினைத்த அவர் மேலும் பேசினார்.

“ தன் தங்கை லலிதாவை எப்படியாவது சம்மதிக்க வைச்சு, அவளை இந்த போர்டு மீட்டிங்க்கு, பெண் உறுப்பினராக கொண்டு வந்து உட்கார வைத்து விடணும்னு சேர்மன் நெனக்கிறாரு.. அப்படி உட்கார வைச்சுட்டா, மத்த ஷேர் கோல்டர்ஸ், வேலை செய்யற ஊழியர்ங்க, இவங்க மத்தியில, அண்ணன் தங்கைக்குள்ள எந்த தகராறும் இல்லைன்னு காண்பிச்சிக்கலாம்னு திட்டம் போடறாரு..” யூனியன் லீடர் சொன்னார்.

தேவி அவர் பேசியதை காதில் வாங்கிக் கொண்டாளா என்று தெரியவில்லை. அந்த இரும்பு கேட்டை நோக்கி வேகமாய் நடந்தாள் தேவி. யூனியன் லீடர் நின்று விட்டார்.

அந்த இரும்பு கேட்டில் இருந்த காவலாளிகள் அவளை தடுத்து நிறுத்துவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் கயிலை மலை அக்கா கண் இமைக்கும் நேரத்தில் உள்ளே சென்று விட்டாள். காவலாளிகள் அவளை தடுத்து நிறுத்தினார்களா இல்லையா என்று புரியவில்லை அவருக்கு.

அந்த பெண் எப்படி உள்ளே சென்றாள். எல்லாம் மாயமாக இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டே அவர் யூனியன் ஆபீசுக்கு திரும்பினார்.

தன் அண்ணனிடம் சொத்துக்காக தன் கணவன் குமார் சண்டை பிடிப்பது லலிதாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்க வில்லை.

இறந்து போன அப்பாவின் ஆத்மா, இப்படி அண்ணனிடம் தன் கணவன் சண்டை பிடிப்பதைப் பார்த்து நொந்து போகும் என்று நினைத்து லலிதா வருத்தப் பட்டாள்.

காலையில் படுக்கையில் இருந்து எழவில்லை. டிபன் கூட சாப்பிடாமல், அழுது கொண்டிருந்தாள் அவள்.

அவளிடம் வந்த அவள் கணவன் குமார்,

“ நீ போர்டு மீட்டிங்க்கு வராதே.. நான் போய் தினேஷை ஒரு வழி பண்ணிட்டு வர்ரேன்..” என்றான்.

“ அண்ணன் உங்களுக்கு என்னா குறை வைச்சாரு . ஏன் இப்படி அவருக்கு தொந்திரவு கொடுக்கிறீங்க..” அழுது கொண்டே கேட்டாள் லலிதா..

“. அவன் எப்படி உன்ன ஏமாத்தி இருக்கான்னு ஒனக்கு புரியாது.. போனஸ் ஷேர்ல சரியாக பங்கு பிரிச்சு கொடுக்கல.. மத்த டைரக்டர்ஸ் வந்திருப்பாங்க.. நான் போய் அவங்க கிட்ட அவனோட ஏமாத்து வேலையை சொல்லி, உனக்கு நியாயம் கேட்டுட்டு வர்ரேன் ” என்று சொல்லிக் கொண்டே குமார் கிளம்பினான்.

“ அது என்னமோ நீங்க சொல்றது எனக்கு புரியலை.. அண்ணன் கிட்ட சண்டை புடிக்காதீங்க.. சமாதானமாப் பேசி ஒரு முடிவு எடுங்க..” என்றாள் லலிதா கண்களைத் துடைத்தபடியே.

கம்பெனி அலுவலகத்தின் பத்தாவது தளம். போர்டு மீட்டிங் கூடும் போர்டு ரூம். டைரக்டர்கள் யாரும் இன்னும் வரவில்லை. போர்டு ரூம் காலியாக இருந்தது. லலிதாவுக்கு ஒதுக்கப் பட்ட இருக்கையும் காலியாக இருந்தது. ஒவ்வொரு டைரக்டர் பெயரும் எழுதப் பட்ட, பெயர் பலகைகள் அந்த இருக்கைகளுக்கு எதிரே மேஜையில் வைக்கப் பட்டிருந்தன. ஊழியர்களோ, மற்ற டைரக்டர்களோ இதுவரை யாரும் லலிதாவைப் பார்த்தது இல்லை. லலிதா வருவாளா.. இல்லை குமார் மட்டும் வந்து தினேஷிடம் சண்டை பிடிப்பாரா..

ஊழியர்கள் எல்லோரும் இந்த சண்டையை ரசிக்க காத்து இருந்தார்கள்.

போர்டு ரூமுக்கு பக்கத்திலே தான், சேர்மன் தினேஷின் அறை. அவர் மிகுந்த டென்ஷனில் இருந்தார். இன்னும் ஐந்து நிமிடத்தில் போர்டு மீட்டிங் ஆரம்பிக்க வேண்டும்.

மீட்டிங்க்கு தன் தங்கை லலிதா வருவாளா..

மைத்துனன் குமார் அவளை அனுப்புவானா..

அவள் வரவில்லை என்றால், மற்ற பங்குதாரர்களின் முன் தன் நிலை கேவலமாகி விடுமே.. ஊழியர்களின் முன்னும் தன் நிலைமை கேவலமாகி விடுமே, என்று நினைத்து மிகுந்த கவலையில் இருந்தான் தினேஷ். தன் அறையை விட்டு அவன் வெளியே வரவில்லை. லலிதா வந்தால் சொல்லுங்கள் என்று மட்டும் சொல்லி வைத்திருந்தான்.

லலிதாவின் பெயர் போட்டு, ஒதுக்கப் பட்டு இருந்த டைரக்டர் இருக்கையில், பார்வதி தேவி வந்து அமர்ந்தாள்.

பிறகு, மற்ற டைரக்டர்கள், ஒவ்வொருவராக வந்து தங்களுக்காக ஒதுக்கப் பட்ட இருக்கைகளில் உட்கார ஆரம்பித்தார்கள். லலிதாவின் இருக்கையில் தேவி உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து, லலிதா வந்து விட்டதாக மற்ற டைரக்டர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

அதே போல், போர்டு ரூமுக்கு உள்ளே வந்த ஒரு ஊழியர், லலிதாவுக்காக ஒதுக்கப் பட்ட அந்த இருக்கையில் தேவி இருப்பதைப் பார்த்ததும், அவர் தினேஷிடம் ஓடிப் போய்,

“ சார்… லலிதா மேடம் மீட்டிங்குக்கு வந்து விட்டாங்க..” என்றார் மகிழ்ச்சியாய்.

ஆச்சர்யப் பட்ட தினேஷ்,

“ எப்படி வந்தாள்.. எந்த லிப்டில் வந்தாள்.. குமாரும் கூட வந்து இருக்கிறாரா..” என்று பதைபதைப்புடன் கேட்டான்.

இது ஒரு புறம் இருக்க, லலிதாவை அழ வைத்து விட்டு தன் வீட்டிலிருந்து புறப் பட்ட குமாரும், பத்தாவது தளத்திற்கு லிப்டில் வந்து இறங்கினான். அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஊழியர் குமாரிடம், “ சார்.. லலிதா மேடம் வந்துட்டாங்க.. மீட்டிங்கல உட்கார்ந்து இருக்காங்க..” என்று சொல்ல,

கோபத்தின் உச்சிக்கு போன் அவன், “ லலிதா எப்படி வந்தாள்.. வீட்ல படுத்துக்கிட்டு இருக்காளே.. வர வேணாமுன்னு சொல்லிட்டு வந்தேனே.. நா சொன்னதைக் கேட்காம, அவ அண்ணன் சொல்றபடி கேட்டு நடக்கறாளா அவ.. தினேஷ் எங்கே.. அவனை நாக்கு புடிங்கிக்கிற மாதரி நாலு கேள்வி கேட்கணும்… ” கத்திக் கொண்டு, தினேஷின் ரூமுக்கு வேகமாய் போனான் குமார்.

அதே சமயத்தில் லலிதா எப்படி போர்டு ரூமுக்கு வந்தாள் என்பதைப் பார்க்க, ரூமை விட்டு வெளியே வந்த தினேஷ், அந்த ரூம் வாசலில் குமாரின் மீது மோதிக் கொண்டார்கள். தினேஷைப் பார்த்து குமார் கேட்டான், “ நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா.. நா லலிதாவை போர்டு மீட்டிங்க்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டு வீட்ல விட்டுட்டு வந்தேன். நீ போய் அவளை கூட்டிட்டு வந்திருக்கே..”

“ இல்ல.. நா லலிதாவைக் கூட்டிட்டு வரலே.. நீ தான் கூட்டிட்டு வந்திருப்பேன்னு நெனச்சேன்…. பின்னே எப்படி அவ வந்தா.. ஆச்சர்யமா இருக்கே..” என்றான் தினேஷ்.

“ அப்படியா.. நீ கூட்டிட்டு வரலியா.. தனியா எப்படி அவ வர முடியும்..” குமார் ஆச்சர்யப் பட்டான். இருவரும் சேர்ந்து போர்டு ரூமுக்கு ஓடி, கதவைத் திறந்து பார்க்க, அங்கு இருப்பது, லலிதா அல்ல வேறு ஒரு பெண் என்று இருவருக்கும் புரிந்தது.

“ யாரும்மா நீ.. எப்படி உள்ளே வந்தே..” தேவியைப் பார்த்து குமாரும், தினேஷும் ஒரே சமயத்தில் கேட்க,

“ நான் யாரா.. கிரேன் அறுந்து விழுந்து, அதனடியில சிக்கி செத்துப் போன மாரிக்கு சொந்தக் காரி நான். மாரிக்கு நீங்க நஷ்ட ஈடு கொடுக்காம ஏமாத்தப் பாக்கறீங்க.. அதைக் கேட்க வந்தேன்..” என்றாள் தேவி அமைதியாக.

“ எப்படி நீ உள்ளே வந்தே… யாரு உன்ன உள்ளே விட்டது..” என்று கத்திக்கொண்டே, “ செக்யூரிட்டி..” என்று கூப்பிட்டான் தினேஷ்.

திடகாத்திரமான செக்யூரிட்டிகள் மூன்று பேர் வந்தார்கள்.

அந்த மூன்று செக்யூரிட்டிகளும், பார்வதி தேவியின் இருக்கையை பின் பக்கமாய் பிடித்து இழுத்தார்கள்.

தேவி உட்கார்ந்திருந்த இருக்கை, கொஞ்சம் கூட நகரவில்லை.

பயத்தின் உச்சிக்கு போன அந்த செக்யூரிட்டிகள் வேகமாய் பின் வாங்கினார்கள். தினேஷையும், குமாரையும் பார்த்து,

“ சார்.. எறந்து போன மாரியோட ஆவி தான் இதுக்கு காரணம்..” என்றார்கள் திகிலுடன்.

பயத்தில் முகம் வெளுத்துப் போன தினேஷ்,

“ எவ்வளவு நஷ்ட ஈடு வேணும்..” என்று கேட்டான் தேவியைப் பார்த்து.

“ அஞ்சு லட்சம்..” தேவி சொன்னாள்.

உடனே தன் ரூமுக்கு ஓடி வந்து மேஜை டிராயரைத் திறந்து, தன் செக் புக்கை எடுத்து, ஐந்து லட்சத்திற்கு ஒரு செக் எழுதினான் தினேஷ். போர்டு ரூமுக்கு திரும்பவும் ஓடி வந்து, தேவியிடம் அந்த செக்கை நடுங்கும் கைகளால் கொடுத்தான்.

செக்கை வாங்கிக் கொண்ட தேவி, போர்டு ரூமை விட்டு வெளியே வந்தாள். உறைந்து போன தினேஷும் குமாரும் தேவியை பின் தொடரவில்லை.

அதே சமயத்தில் அக்கவுண்ட் கிளார்க் ஒருவர் கையில் பத்து பதினைந்து வெள்ளைக் கவர்களுடன் போர்டு ரூம் வாசலுக்கு வேகமாய் வந்தார். போர்டு மீட்டிங்குக்கு வரும் ஒவ்வொரு டைரக்டர்களுக்கும் கொடுக்கப் படும் ‘சிட்டிங்’ சன்மானமான ஐயாயிரம் ரொக்கப் பணம் அவர் கையில் வைத்திருந்த அந்த கவர்களுக்குள் இருந்தது.

அந்த அக்கவுண்ட கிளார்க்குக்கு போர்டு ரூமுக்குள் நடந்து முடிந்த களேபரம் தெரியாது. அதனால், லலிதா என்று நினைத்துக் கொண்டு, வெளியே வந்த தேவியிடம், டைரக்டர்களுக்கு கொடுக்கப்படும் அந்த சிட்டிங் சன்மான கவரை கொடுத்தார். தேவியும் என்ன அந்த கவருக்குள் இருக்கிறது என்று பார்க்கலாம் என்ற உந்துதலில் அதை வாங்கிக் கொண்டு,

“ என்ன இது..” என்று கேட்க,

“ பணம் மேடம்.. இந்த போர்டு கூட்டத்திற்கு வந்ததிற்கான சன்மானம்.. எல்லா டைரக்டர்ஸ்க்கும் கொடுக்கிறது தான்..” அந்த கிளார்க் சொன்னார்.

ஐந்து லட்சத்திற்கான செக்கையும், அந்த சன்மான பணத்தையும் எடுத்துக்கொண்டு புறப்பட்ட தேவி, மறுபடியும் யூனியன் ஆபிசுக்கு வந்தாள். செக்கை சம்பூர்ணத்திடம் கொடுத்தாள் தேவி. அதிர்ச்சியின் பிடியில் இருந்து மீளாத சம்பூர்ணம் அந்த செக்கை வாங்கிக் கொண்டாள்.

“ சம்பூர்ணம்.. குழந்தைங்கள படிக்க வை.. வீண் செலவு பண்ணிடாதே..”

பிறகு, கையில் இருந்த சன்மானப் பணத்தை யூனியன் ஆபிசில் இருந்த நன் கொடை உண்டியலில் போட ஆரம்பித்தாள் தேவி.

அதைப் பார்த்த யூனியன் லீடர்,

“ எல்லாத்தையும் போட வேண்டாம்.. கையில கொஞ்சம் பணம் வைச்சுகோங்க.. வீட்டுச் செலவுக்கு உபயோகப் படும்.. ஊருக்கு எடுத்துட்டு போங்க….” யூனியன் லீடர் சொன்னார்.

“ எங்க ஊர்ல இந்த பணம் செல்லாது.” என்று சொல்லிக்கொண்டே, முழுப் பணத்தையும் உண்டியலில் போட்டு விட்டாள் தேவி.

பிறகு பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தாள் தேவி. யூனியன் லீடரும் உடன் நடந்தார்.

“ சம்பூரணத்துக்கு நஷ்ட ஈடு வாங்கி கொடுத்ததிற்கு ரொம்ப நன்றிங்க..” என்றார் அவர்.

தேவி பதில் ஏதும் பேசவில்லை.

“ நீங்க சம்பூர்ணத்துக்கு எந்த வகையில சொந்தம்..”

“ நா எல்லாத்துக்குமே சொந்தம் தான்.. உங்களுக்கு கூட சொந்தம் தான்..”

யூனியன் லீடருக்கு தேவி சொன்னது, புரியவில்லை. குழப்பமாய் இருந்தது அவருக்கு. அதற்குள் பஸ் ஸ்டாண்ட் நெருங்கி விட,

“ எந்த ஊருக்கு பஸ் தேடுறீங்க…” யூனியன் லீடர் கேட்டார்.

“ கயிலை மலைக்கு..” என்று பார்வதி தேவி சொன்னாள்.

“ அந்த ஊர் எங்க இருக்குது.. கேள்விப் பட்டதே இல்லையே.. இங்க இருந்து, அந்த ஊருக்கு நேரிடையா பஸ் கெடைக்குமான்னு சந்தேகம் தான்.. பஸ் மாத்தி தான் போகணும்னு நெனக்கிறேன்.. நான் பஸ் ஸ்டாண்டுக்கு உள்ள வந்து, பஸ் ஏத்தி உட்கார வைக்கட்டுமா..” என்றார் யூனியன் லீடர்.

“ இல்ல வேண்டாம்.. நானே போய்க் கொள்கிறேன்..” என்று சொல்லி விட்டு, தேவி வேகமாய் நடக்க, யூனியன் லீடரால் தேவியை பின் தொடர முடியவில்லை.

பஸ் ஸ்டாண்டின் கூட்ட நெரிசலில் பார்வதி தேவி வேகமாய் ஓடி நுழைந்து மறைந்து போக, யூனியன் லீடர் திகைப்புடன் தன்னுடைய ஆபீசுக்கு திரும்பினார்.

—————————————————————————————————-

– எனது ‘ ஐயனார் கோயில் குதிரை வீரன் ’ காவியா வெளியீடு- 2016 -சிறுகதை தொகுப்பிலிருந்து ஒரு கதை

Series Navigationசொர்க்கம்இது பறவைகளின் காலம்
author

தாரமங்கலம் வளவன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *