இது கனவல்ல நிஜம்

This entry is part 5 of 13 in the series 22 ஜனவரி 2017

மு.ப.

பாரத தேசம் பழம் பெரும் தேசம். நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்

அவர் பெயர் அத்வான் பிகார் மாடிபாய். அவரின் செயல்கள் அமைதியும் ரகசியமும் பொதிந்தன. ஒருமுறை ஓர் ஊர் செல்வார். திரும்புவதற்குள் இன்னொரு ஊருக்கு அறிவிக்காமல் சென்றுவிடுவார். காவல் காப்பவர்களுக்கும் தூதர்களுக்கும் பெருத்த விழிப்புணர்வை அவர் தந்தார்.
வங்கிகளுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் அவருக்கும் தலைமுறைக்காலப் பகை. எப்பொழுதோ ஒரு முறை அவர்வங்கிக்குச் சென்று கால்கடுக்க நின்றுவிட்டார். இதன் காரணமாக எல்லோரையும் வங்கிக்கு முன் நிற்க வைத்து மண்ணைத் தூற்றி அவமானப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் வளர்ந்து கொண்டேவந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு நாள் இரவில் அவருக்கு ஞானோதயம் பிறந்தது. வங்கிகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்த அவர் பெரிதும் உதவினார். எல்லா வங்கிகளையும் காலியாக்கினார். நேரடியாக பசர்வ் வங்கி மூலம் பணங்களை முதலைகள் பெற்றுக் கொள்ள வழி வகுத்தார். ஒன்னு ரெண்டு எடுத்தவர்கள் அனைவரும் பொட்டிக்கு முன்னாடி கவலையோடு கை கட்டிநின்று, ஒரு வங்கிக் கணக்கை மற்றொரு வங்கியில் நடத்தி பணம் பெற்று அதற்குக் கமிசன் கொடுத்தார்கள். சில்லறை வணிகத்தை ஒழிக்க சில்லறையையே ஒழித்த பெருமகன் அவர்.
அவரின் இனிய தோழர்கள் ஆகாச லட்சுமி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள். அவர்களும் தூங்கி வழிந்து கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு மங்கி பாத் என்ற புதுவகை உணவைத்தந்து அவர் அவர்களைத் தட்டி எழுப்பினார். அவர்கள் மங்கி பாத் சாப்பிடுவதற்கு முன்னால் பெசிபலா பாத் சாப்பிடலாம் என்று வகை வகையாக மங்கிபாத்தைப் பரிமாறினார்கள்.

இதுபோல மாணவர்களை, இளைஞர்களை ஒன்று கூட வைக்கவேண்டும் என்று அவர் பல நாள் கனவு கண்டார். இதன் காரணமாக ஒரு பிரச்சனை வந்தது. அந்தப் பிரச்சனையைச் சரி செய்ய பன்னீர் தெளித்தார்கள், சந்தனம் பூசினார்கள். இருந்தாலும் போராட்டம் தொடர்ந்தது. அவசர அவசரமாய் சவன்த் ஒலிப்பேழை போலச் செயல்பட்டார்கள். போடி வாசல் திறக்க முயற்சித்தார்கள். நல்ல முயற்சிதான்.

வந்தவர் மாணவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அந்த செல்பியின் ஓரத்தில் தமிழழோசை அவர்களும், பவ்வியமாக கன்னியக்காவிளை தோழரும் தலையாட்டியபடி நின்றார்கள்.
அவருக்கு அன்று இரவு ஒரு கனவு வந்தது. அந்தக்கனவில் அவர் பெரினா கடற்கரைக்குச் சென்று அங்குள்ள குப்பைகளை அள்ளும் இளைஞர்களுடன் போஸ் குடுத்தவாறே குப்பைகளைத் தள்ளினார். நான்கு ஐந்து நாட்களாக வீடு மறந்து கிடந்த அந்த நண்பர்களுக்கு யார் நம்முடன் வந்து இணைந்தது என்று தெரியவில்லை. ஏனென்றால் அவர் யாரையும் சந்திக்க வில்லை. எந்த வெளியூறும் போகவில்லை. இதன் காரணமாக அவரைத் தொலைக்காட்சிகள் காட்ட மறந்துவிட்டன. நம்ம நண்பர்களும் அவரை நாலுநாளாகப் பார்க்காததால் அவரை யாரென்று தெரியாமல் அனுமதித்து விட்டார்கள்.

காலை பத்துமணிக்கு நேரலைகளின் வாயிலாக அவர் வந்தது தெரியவந்தது. அப்போதுதான் அவர் யார் என் நண்பர்களுக்குப் புரிந்தது.

ஒரு மாணவி தலையில் கைவைத்து ஆசிர்வாதம் செய்து ஏதோ பேசினார். அந்த மாணவியிடம் அவர் என்ன பேசினார் எனக் கேட்டபோது அந்த மாணவி சொன்னார். ‘‘அன்றைக்கு அந்தப் படிக்கட்டுகளில் நின்று கொண்டு அந்த பெத்தம்மாவிடம் என்ன பேசினாரோ அதே தான் பேசினார். புரியவில்லை என்று சொன்னார்.

இப்போது அவர் கைகளை ஆட்டினார். தன் உடைகளைச் சரிசெய்து கொண்டார். நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன் என்றால் (எந்த முடிவுக்கும் வரவில்லை என்பது அப்போதுதான் அவருக்கு நினைவுக்கு வந்தது) நான் இங்குவந்தேன் என்றால் …..
ஐயா..நீங்க யாரு உங்க மவுசு என்ன.நீங்க என்ன கட்சி அத சொல்லுங்க பாப்போம். அப்புறம் உங்க தொலைக்காட்சி எந்தத் தலைவரோடது…… நீங்க தலைவர் இல்லைன்னு சொல்லாம் ஆனா நாங்க தலைமை இல்லாம இருக்கக் கூடாதா அ ப்பதான் ஒரு பாட்டு நினைவுக்கு வருது நம்ம கவிஞர் பாரதிக்கு…… வையத் தலைமை கொள். புதிய ஆத்திச்சூடி பாடிக்கிட்டு ஒரு பாரதி வந்தார். புதிய தலைமை ஒவ்வொரு இளைஞனுக்கும் வாய்த்திருக்கிறது.
நீங்கள் அனைவரும் படித்தவர்கள். உங்கள் படிப்பை மதிக்கிறேன். உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன். ஆனால் இந்தத் தீட்டா அலைக்கற்றைகளை மொத்தமாக இந்திய நாட்டு பண்பாட்டுச் சீரழிவுக்கு தாரை வார்த்து விட்டதால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றார்.
அதற்குள் விடிந்துவிட்டது. பெரீனா கடற்கரையில் நண்பர்கள் உறக்கம் கலைந்து எழுந்துவிட்டார்கள். அனைத்து நேரலைகளும் கொட்டாவி துறந்து அங்கு பட்டிமண்டபம், கருத்தரங்கம் நடத்த வந்துவிட்டன.

பாவிநாத் என்பவர் ஒருபக்கம் தீயா, தண்ணியா என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.அவரின் கோட் காணாமல் போய்விட்டதால் அதனை வாங்கச் சென்றபோதுதான் தெரிந்தது இன்று அயல்நாட்டு மதுக்களுக்கு தடை என்ற நிலையில் பந்த் அனுசரிக்கப்படுவது. இதன் காரணமாக பஜய் டிவி புரோகிராம் கான்சல் ஆனது.
அப்புறம் இன்னொருவருவர் அவர்தான் ஜேம்ஸ்பாண்டே. அவர் கேப்பாரு பாருங்ககேள்வி,.. உட்கார்ந்திருக்கறவர் வேட்டி கிழிஞ்சி போயிடும். அவரு கேட்டாரு தலைமை தலைவர் இல்லாம போராட முடியுமா. அதுக்கு ஒரு பொண்ணு பதில் சொல்லுச்சு பாருங்க.
அப்புறம் பிஜடிகாவல்காரர்கள் அவர்கள் மாணவர்களுக்கு உள்ளாக ஊடுருவிப்பார்த்து டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கும் இதுக்கும் தொடர்பு இருக்கும்னு எடுத்து உட்டாங்க பாருங்க ஒரு ஊடான்ஸ். அடேய் சாமி
அதுசரி ஒரு காவல்கார் பேசியதுக்கு அவரை வேலைய காலிபண்ணிட்டோம்ல ….. நல்லத்தான் இருக்கு இந்தியாஇன்னும் நாம பிரச்சனைக்கே வல்லயே. மிக்சர் மென்னுக்குட்டு இருக்கேன். ஆனாலும் அசரலங்க ஆளு. அவன் தோளு புடிச்சு இழுக்கறான். ஒரு ஆள் காட்டுக் கத்தா கத்தறான். ஒருத்தன் எத்தனை முறை தம்பி நாமம் , பெத்தம்மா நாமம் வந்துதுன்னு எண்றான். சிரிச்ச முகம். ஒரு பதட்டமும் இல்லாம பிளைட் டிக்கட்ட காலி பண்றாரு, மதுரை பஸ் ஏறுறாரு
அங்க ஒரு இரண்டுபேரு உண்ணாவிரதம் இருக்கிறாங்க. அவசர மட்டம் அவுங்களாலதான்னு பேசறாங்க. ஐயையோ பிரச்சனை என்னன்னு சொல்லவே இல்லையே

தீட்டா அலை இருக்கும் வரை அறிவியல் பரிட்சை இருக்கும் இதுதான் என் கருத்து.

இது குமுடிப்பிண்டி பௌத்தன் எழுதிய கதை. எங்கோ படித்த ஞாபகம். அதை பதிவிட்டுள்ளேன்

Series Navigationகாரைக்குடி கம்பன் கழகம் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்குஏக்கங்களுக்கு உயிருண்டு
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *