24 டிசம்பர் 2016 அன்று சிங்கப்பூரில் எம்ஜியார் நூற்றாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்பாடு செய்தவர் திரு அருமைச் சந்திரன். 8 பாயிண்ட் எண்டர்டைன்மென்ட் பி லிட். நிர்வாக இயக்குநர் சமீபத்தில் ‘பறந்து செல்ல வா’ என்ற திரைப்படத்தை முழுதுமாக சிங்கப்பூரிலேயே தயாரித்தவர். தன் கலையுலக வாரிசு என்று எம்ஜியாரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பன்முகக் கலைஞர் திரு பாக்யராஜ் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். அவருடன் எம்ஜியாரோடு நெருங்கிப் பழகியவர் என்ற முறையிலும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்ற முறையிலும் திருமதி சரோஜாதேவி, திருமதி லதா, வெண்ணிறஆடை நிர்மலா, குமாரி சச்சு, மற்றும் ஆனந்த் பாபு, கவிஞர் முத்துலிங்கம், நீயா நானா கோபிநாத் என்று பெரிய நட்சத்திரக் கூட்டமே அழைக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் எங்களுக்கு பாக்கியராஜுடன் நெருங்கிப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ‘அந்த ஏழு நாட்கள்’ படம் பார்த்துவிட்டு நான் அன்னாந்து பார்த்த பாக்யாவை தோளோடு தோள் உரச பேசும் வாய்ப்பு அப்போதுதான் எனக்குக் கிடைத்தது. அப்போதுதான் பட்டிமன்ற ஏற்பாடு என்ற சேதியை ஆரம்பித்தோம்.
சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தமிழ் மொழி விழா நடத்துகிறோம். அந்த விழாவில் பெரிய அளவில் தமிழ் நிகழ்ச்சிகளை ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் படைத்துக் கொண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த ஆண்டு பாக்யாவின் பட்டிமன்றம் என்று முடிவு செய்தோம். எடுத்த எடுப்பிலேயே அவர் ஏற்றுக்கொண்டது ‘வெற்றிகரமாக அமையும்’ என்ற நம்பிக்கையை எங்களுக்கு ஊட்டியது. சன் மற்றும் விஜய் தொலைக்காட்சி கலைஞர்கள் சிலரையும் பேச அழைப்பதாகவும் சிங்கப்பூர் பேச்சாளர்களும் இருவர் இருப்பார்கள் என்றும் சொன்னோம். பேச்சாளர்களை முன்கூட்டியே உங்களுக்கு அறிவிக்க வேண்டுமா? அவர்களை முன்கூட்டி நீங்கள் சந்திக்க வேண்டுமா? அல்லது பேச்சாளர்களை நீங்களே முன்னுரைக்கிறீர்களா? என்று கேள்விகளை அடுக்கினோம். எல்லாவற்றிற்குமாக ஒரே பதில் பளிச்சென்று சொன்னார். ‘வசதிப்படி பேச்சாளர்களை அழைத்துக் கொள்ளுங்கள். முன்கூட்டி அவர்களை சந்திக்க வேண்டிய அவசியமில்லை. நிலைமைக்குத் தகுந்தாற்போல் தான் பேச்சு இருக்கும். அவர்களைக் கட்டுப்படுத்தக் கூடாது, தலைப்பை மட்டும் எனக்குத் தெரிவித்து விடுங்கள். அது என் உடுப்பு மாதிரி. எனக்கு சரியாகப் பொருந்த வேண்டும்’ என்றார்.
எங்கள் நிகழ்ச்சி ஏப்ரல் 8ல் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. சரி. ஒப்புதல் ஓகே. இனி அடுத்த காரியங்களை கவனிக்கு ஏற்பாடுகளை முடுக்கினோம். மதுரை முத்து, அறந்தாங்கி நிஷா, அன்னாபாரதி மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோரிடம் பேசி சம்மதம் பெறப்பட்டது. சிங்கப்பூர் பேச்சாளர்களாக முனைவர் திரு ராஜகோபாலன், திருமதி அகிலா ஹரிஹரன் ஆகியோர் முடிவு செய்யப்பட்டார்கள். எல்லாச் செய்தியும் பாக்யாவுக்கு உடனுக்குடன் அறிவிக்கப்பட்டது. ஷூட்டிங்கில் இருந்தபோதும் எங்கள் தொலைபேசித் தொந்தரவுக்கு உடனுக்குடன் பதில் சொன்னது எங்களை எந்த இடத்திலும் தேங்கவிடாமல் ஓடவைத்தது.
மார்ச் மாதம் முதல் வாரம். தலைப்பை முடிவு செய்ய வேண்டும் ‘தமிழ்த் திரைப்படங்களால் தமிழ்மொழி பலமடைகிறதா? பலவீனமடைகிறதா?’ என்ற ஒரு தலைப்பை முடிவு செய்தோம். அறிவித்தோம். உடனே கேட்டார்
‘பலவீனம்னு எதச் சொல்லப்போறீங்க.’
‘என்ன! அர்த்தமில்லாத சொற்கள்! கலாச்சாரத்துக்கு ஒவ்வாத கதை! ரெட்ட அர்த்த வசனம்! இன்னும் சில’ என்றோம்.
‘ஒரு சில படங்க தாங்க இதெல்லாம். ஒரு படம் எடுக்க தயாரிப்பாளர் ரத்த வாந்தி எடுக்கணும் தெரியுமா? அவங்கள நாம வேற கஷ்டப்படுத்தணுமா? வேணாங்க. யாரையும் பாதிக்காம வேற ஏதாச்சும் சொல்லுங்க’
எங்களின் அடுத்த தலைப்பைச் சொன்னோம். ‘குடும்பச் சண்டைகளை ஆரம்பிப்பது கணவன்மார்களா? மனைவிமார்களா?’ நிச்சயம் மறுக்க மாட்டார் என்று எங்களை தட்டிக் கொடுத்துக் கொண்டோம். அதற்கும் விழுந்தது அடி.
‘ரெண்டு பேருக்கும் சமமான பங்குங்க. கணவன்னு சொன்னா ஆம்பளங்க வருத்தப்படுவாங்க. மனைவின்னு சொன்னா பொண்ணுங்க வருத்தப்படுவாங்க. வேணாங்க. நாம பட்டிமன்றம் நடத்தப்போறோம். பள்ளிக்கூடமில்ல’ என்ற குட்டு அதிகமாகவே வலித்தது.
‘எங்களுக்கு வேற டைட்டில் இல்ல சார். எங்க சரக்கு இவ்வளவுதான். நீங்களே சொல்லிடுங்க’
‘சரி. இன்னிக்கு ராத்திரி 9 மணிக்கு சொல்றேன். நாலஞ்சு சொல்றேன். எல்லாருக்கும் சரியா வர்றது மாரி ஒன்ன சூஸ் பண்ணுவோம்’
‘டபுள் ஓகே சார்’
அந்த 9 மணிக்கு காத்திருந்தோம். அதற்கு முன்னாடியே வாட்ஸ் அப்பில் தலைப்பு ஒவ்வொன்றாக எட்டிப் பார்த்து கண் சிமிட்டியது. பாக்யாவே அனுப்பினார். எல்லாவற்றையும் எழுதிக் கொண்டோம். எங்களுக்குள் குடைந்தோம். ஒரு தலைப்பு எல்லாரையும் நலம் விசாரித்தது. அதுதான் ‘கல்யாண வைபோகம் என்பது காலாகாலத்தில் நடப்பது நல்லதா? சம்பாத்தியங்கள் உறுதியானபின் நடப்பது நல்லதா?’ இரணடு பக்கமும் சமமான வாய்ப்பு, சரியாக உடைத்த தேங்காய் மாதிரி. யாரையும் பாதிக்காது. நம்ம சமுதாயத்துக்கு ஒரு நல்ல சேதி. அந்த 9 மணி வந்தது. அழைத்தோம். தேர்ந்தெடுத்ததைச் சொன்னோம். ‘ரொம்ப நன்றி சார். சிங்கப்பூருக்கு ஏற்ற தலைப்பு சமூகம் சிந்திக்க வேண்டிய தலைப்பு. ‘ என்றோம். அப்பாடா! ஒருவழியாக தலைப்பு தயாராகிவிட்டது. அடுத்து 1000 பேர் அமரக்கூடிய ஒரு அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நுழைவுச்சீட்டு 5 வெள்ளி. யாரையும் அந்தக் கட்டணம் கடிக்காது என்று எங்களுக்குத் தெரியும். பின்னணி பேனர்கள், ஒலி, ஒளி, உணவு தொண்டூழியர்கள் என்று வேலைகளைப் பிரித்துக் கொண்டு மளமளவென்று காரியத்தில் இறங்கினோம். நுழைவுச்சீட்டு வெளியிட்ட ஒரே வாரத்தில் அத்தனை சீட்டும் விற்றுத் தீர்ந்தன. இத்தனைக்கும் நாங்கள் செய்தது ஒன்றே ஒன்றுதான். நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் 3 சமூக மன்றங்களில் பேனர்களை தொங்கவிட்டோம். துண்டுப் பிரசுரங்களை சமூக மன்ற அலுவலகத்திலேயே வைத்து விட்டோம். அதை விநியோகிக்கும் சிரமம் கூட நாங்கள் எடுத்துக்கொள்ள வில்லை. நுழைவுச்சீட்டுகள் முடிந்த பின்னும் டிக்கட் கேட்டு ஏராள அழைப்புகள். முடிந்து விட்டது முடிந்து விட்டது என்று முடிந்தவரை சொன்னோம். இப்படி ஒரு நிலமை எங்களுக்கு இதற்கு முன் ஏற்பட்டதில்லை. எந்த அளவுக்கு சிங்கைத் தமிழ்ச் சமுதாயம் பாக்யாவை நேசிக்கிறது என்பது எங்களுக்கு நன்றாகவே புரிந்தது.
8ஆம் தேதி காலை பாக்யா சிங்கை வருவதாக ஏற்பாடு. அன்று மாலைதான் நிகழ்ச்சி. பாக்யாவை அழைக்க முன்கூட்டியே விமான நிலையம் சென்றுவிட்டோம். விபூதிக்கீற்று. குங்குமப் பொட்டுடன் பூப்போட்ட அரைக்கை சட்டையில் ஏதோ வீட்டிலிருந்து வருவதுபோல் முதல் ஆளாக கசங்காமல் வெளியேறினார். கை குலுக்கிக் கொண்டோம். புன்னகை பரிமாறினோம். இடை இடையே எங்களின் தொலைபேசி அவ்வப்போது நச்சரித்தது. ‘முடிஞ்சிருச்சுங்க’ ‘முடிசஞ்சிருச்சிங்க’ என்றும் பாக்யாவுடன் பேசிக்கொண்டே சொன்னோம்.
‘சார் இங்க ஆனந்த பவன் இருக்கு. மெக்டொனல்ட் இருக்கு ஏதாச்சும் சாப்பிட்டுட்டு போகலாமே’
‘ஒன்னும் வேணாங்க. ஃபிளைட்லேயே சாப்புட்டுட்டேன். நேரா ரூமுக்கு போயிடுங்க’
எங்கள் கார் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டலுக்கு விரைந்தது. இதோ ஹோட்டல். நுழைந்தோம். மின்தூக்கியில் எண் 9 ஐ அழுத்தினோம். அறைக்குள் அடி வைத்தோம்.
‘நல்லா ரெஸ்ட் எடுத்துக்கங்க சார். சரியா 2 மணிக்கு வர்றோம். சேர்ந்து சாப்பிடப் போவோம்’.
‘யாரும் வரவேணாங்க. ஒங்களுக்கு நெறய வேல இருக்கும். ஒரு சாப்பாடு மட்டும் மத்தியானம் அனுப்பிடுங்க. நேரா நா அரங்கத்துக்கே வந்துர்றேன். நிகழ்ச்சி முடியுற வரக்கும் என்னால வேற எதயுமே சிந்திக்க முடியாதுங்க. ஒரு வாரத்துக்கு முன்னாடியே டிக்கட் முடிஞ்சிருச்சுங்கிறீங்க. என் மேல வச்சிருக்க நம்பிக்கைய புரிஞ்சுக்கோங்க. நிகழ்ச்சி முடியட்டும். அப்புறம் நா ஃப்ரீ யாயிருவேன்.’
இந்த அளவுக்கு பாக்யாவை அவருடைய ரசிகர்கள் மதிப்பதற்கான காரணம் எங்களுக்கு சட்டென்று புரிந்தது. இனிமேலும் நாம் இங்கே நிற்க வேண்டாம். அவர் சொன்னபடியே மற்ற ஏற்பாடுகளைச் செய்வதாகச் சொல்லி நாங்கள் அங்கிருந்து விடைபெற முயன்றபோது. ‘கொஞ்சம் இருங்க’ என்று சொல்லி தன் பெட்டியின் சங்கேத எண்களைச் சுழற்றித் திறந்தார். அட்டைப்பெட்டிகளில் சில இனிப்புகள். ‘சிங்கப்பூருக்காக பிரத்யேகமா செய்யச் சொன்னேன். இது வெளிய கெடக்காது.’ என்று சொல்லி எனக்கும் சந்திரனுக்கும் ஒன்றொன்று கொடுத்தார். இனிப்பைப் பெற்றுக்கொண்டு இனிப்பாகப் பிரிந்தோம். பாக்யா கேட்டுக் கொண்டபடி மதிய உணவு அவர் விரும்பியபடி வாங்கி எடுத்துச் சென்றோம். வெளி உணவை யாரும் அறைக்கு எடுத்துச் செல்லக் கூடாதாம். விருந்தினர்தான் இறங்கி வந்து வாங்கிக் கொள்ள வேண்டுமாம். அது அந்த ஹோட்டலின் விதி. ‘அவர் ஒரு செலிப்ரிட்டி. அவர கீழ வரச்சொல்றது மரியாதயா இருக்காது. தயவுசெஞ்சு அவர தொந்தரவு பண்ணாதீங்க. நாங்களே போயி குடுத்துட்டு ஒடனே வந்துர்றோம்’ என்றோம். அந்த வரவேற்பு அதிகாரி ஒரு நளினமான பெண். நளினமாகவே மறுத்துவிட்டார். எங்களைக் கேட்காமலேயே பாக்யாவைத் தொடர்பு கொண்டார். பாக்யா உடனே ஃபோனை எடுத்துவிட்டார். தகவல் சொல்லப்பட்டது. அடுத்த நிமிடம் அவர் இறங்கிவிட்டார். விடைபெறும்போது எப்படிப் பார்த்தோமோ அப்படியேதான் இருந்தார். அந்த நெற்றிச் சுருக்கம் அவ்வப்போது வந்து மறைந்தது. தன் ரசிகர்களை எப்படித் திருப்திப் படுத்துவது என்ற ஒரு சிந்தனை தவிர அவருக்கு வேறும் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ‘மன்னிக்கவும். எங்களை உங்கள் அறைக்கு விட மறுத்துவிட்டார்கள்.’ என்று நடந்ததைச் சொன்னோம். ‘பரவாயில்ல. நன்றி’ என்று அவர் மின்தூக்கியில் மேலே செல்ல நாங்கள் அரங்கம் சென்றோம்.
5 மணியிலிருந்தே கூட்டம் சேரத் தொடங்கிவிட்டது. சரியாக 6 மணிக்கு பாக்யா உள்ளே நுழைந்தபோது ஆரவாரம் அடங்க ஆறேழு நிமிடங்கள் ஆயின. சிறப்பு அழைப்பாளராக சோசூகாங் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சாக்கி முகமட் வந்துவிட்டார் அடுத்து வந்த சிறப்பு அழைப்பாளர்கள் அவரவர்கள் இருக்கையில் அமரவைக்கப்பட்டார்கள். நெறியாளர் நிகழ்ச்சிகளைக் கோர்த்துக் கொண்டிருந்தார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகள் திரையில் ஓட பதிவு செய்த பாட்டு ஒலிக்கத் தொடங்கி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தது. தொடர்ந்து ஒரு பரதநாட்டியம். அந்த மேடையின் எதிரே இருந்த ஒரு சிறு வெற்றுப் பகுதியில் ஒரு சிறுவன். அவ்வளவு பெரிய கூட்டமும் நட்சத்திரங்களும் நாடாளுமன்ற உறுப்பினரின் வருகையும் கூட அவனைப் பாதிக்கவில்லை. 6 வயதிருக்கும். அந்த நடனத்தின் முத்திரைகளை அதே பாவனையில் தரையில் நின்றபடி அவன் இஷ்டத்துக்கு ஆடிக்கொண்டிருக்கிறான். சிலர் அந்தப் பையனைக் கூப்பிடடார்கள். அவன் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. நாட்டியத்திலேயே பாக்யாவின் பார்வை இருந்தாலும் இடை இடையே அந்தப் பையனையும் பார்க்க அவர் தவறவில்லை. பார்த்தார். ரசித்தார்.
‘இப்போது மேடையை பன்முகக் கலைஞர் திரு பாக்யராஜிடம் ஒப்படைத்துவிட்டு நான் விடைபெறுகிறேன்’ என்று நிகழ்ச்சி நெறியாளர் சொன்னதும் பலத்த ஆரவாரத்துக்கிடையே பாக்யா மேடையேறினார். அவர் இப்படி ஆரம்பித்தார். ‘இங்க ஒரு சின்னப் பையன் ஆடிய நடனத்த முன் வருசைல இருக்கிறவங்க பாத்திருப்பீங்க. இந்த சூழ்நிலையப் பத்தியே அவனுக்குத் தெரியல. நடனத்தில எத்தன ஈடுபாடு பாத்தீங்களா? இந்தப் பையனோட பெற்றோர்கள் நிச்சயமா இங்கதான் இருப்பீங்க. ஒங்களுக்கு நன்றி. அந்தப் பையன இவ்வளவு சுதந்திரமா விட்டதுக்கு. அவன ஏதாவது நடனப்பள்ளில சேத்துவிடுங்க. பிற்காலத்தில பெரிய கலைஞனா வருவான்’ பாக்யராஜின் வாழ்த்து பலிக்கட்டும். பிறகுதான் அவர் தலைப்புக்கே வந்தார்
வயசு வந்ததும் திருமணமா? இல்ல சம்பாத்தியங்கள் உறுதியானபின்தான் திருமணமா? என்று கேட்டு தன் திரைப்பட அனுபவங்களை கோர்த்து, வாழ்க்கை அனுபவங்களையும் சேர்த்து அவர் பேசிய விதத்தை கூட்டம் ரசித்தது என்பதை விடாமல் எழுந்த கரவொலி நமக்குக் காட்டியது. முந்தானை முடிச்சின் முருங்கக்காய் சமாச்சாரம் போல நகைச்சுவை வெடிகள் ஏராளம். எங்களுக்கு ஒரு உண்மை புரிந்தது. பாக்யா சொல்லும்போது அது யாருக்கும் விரசமாகவே தெரிவதில்லை. சொல்லும் விதம் அப்படி. அது எல்லாருக்கும் வருவதில்லை. மதுரை முத்து, அறந்தாங்கி நிஷா, அன்னபாரதி, ஜெயச்சந்திரன் ஆகியோரின் பேச்சு பலர் தொலைக்காட்சியில் ரசித்ததுதான். அதே பாணியில் வெளுத்து வாங்கினார்கள். சிங்கைப் பேச்சாளர்களும் சற்றும் குறைந்தவர்களல்ல என்பது அங்கே நிரூபணமானது. இடை இடையே பாக்யாவின் குறுக்கீடுகள், குட்டிக் கதைகள் அரங்கத்தை அதிர வைத்தது.
தீர்ப்பு சொல்லும் நேரம் வந்தது. அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை எங்களால் ஊகிக்கவே முடியவில்லை. சம்பாத்தியங்கள் உறுதியானபின் நடப்பதுதான் நல்லது என்பது மாதிரி தீர்ப்பைக் கொண்டுபோனார். சடக்கென்று பிளேட்டைத் திருப்பினார். ‘வயசுக்கு வந்ததும் சட்டுபுட்டுனு முடிக்கிறதுதாங்க நல்லது. எனக்குத் தெரிந்து எத்தனையோ கணவன்மார்கள் திருமணத்துக்குப் பின் தன் மனைவியின் நகைகளையெல்லாம் விற்று தொழிலில் இறங்கி கோடீஸ்வரர்கள் ஆகியிருக்காங்க. காத்திருந்தா அதுக்கு முடிவு இல்லீங்க. கல்யாணம்ங்கிற கதவத் திறங்க. இளசுங்கதானே. ரெண்டு பேர்ட்டயுமே முன்னேறனும்ங்கிற துடிப்பு இருக்கும். சக்தி மசாலா முதலாளி இன்னிக்கு இவ்வளவு பெரிய முதலாளியா உயர்ந்ததுக்கு அவர் மனைவியோட நகைகள் தாங்க காரணம். அதுபோல எத்தனையோ பேரு. வயச விட்ராதீங்க. அது அவங்களுக்கு நல்லதில்ல. குடும்பத்துக்கும் நல்லதில்ல.’ என்று முடித்தார்.
தம்படம் (செல்ஃபி) எடுக்க அலைமோதிய ரசிகர்களிடமிருந்து பாக்யாவைப் பாதுகாத்து, தம்படமும் எடுத்து மீண்டும் அவரின் அறைக்கு அனுப்பிவைக்க பெரும்பாடாகிவிட்டது. ஒரு கலைஞன் தன் அபிமானிகளை எந்த அளவுக்கு நேசிக்கிறான் என்பதை பாக்யாவின் ஒவ்வொரு அசைவிலும் நாங்கள் புரிந்து கொண்டோம்.
சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடத்தப்படும் தமிழ்மொழி விழாவுக்காக
நிகழ்ச்சி ஏற்பாடு.
திரு அருமைச் சந்திரன், நிர்வாக இயக்கநர், 8 பாயிண்டு எண்டர்டைன்மெண்ட் பிரைவேட் லிமிடெட், மற்றும் தலைவர் கேட் ஹாங் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு
திரு ரஜித், தலைவர் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் சிங்கப்பூர்.
எழுத்து ரஜித்
- பழிபரப்பிகள்: இனாம் கொடுத்த ஸிஐஏவுக்கு இளித்த இந்திய ஸஞ்சிகைகளும், அவற்றுக்கு உழைத்த உத்தம எழுத்தாளர்களும்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! அத்யாயம் 12
- வறு ஓடுகள்
- இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [நிகழ்ச்சி எண் : 168]
- சிங்கப்பூரில் பாக்யாவுடன் ஒரு பட்டிமன்றம்
- அண்ணே
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
- பூமிபோல் கண்டுபிடித்த புதிய செங்குள்ளி விண்மீன் குடும்பத்தின் ஏழு கோள்கள் சீரொழுக்க முறையில் சுற்றி வருகின்றன
- தொடுவானம் 169. சமூக மருத்துவப் பயிற்சி
- அம்மா
- அம்மா