டாக்டர் ஜி. ஜான்சன்
176. முதல் காதலி
சீன உணவகத்தில் ” கொய்த்தியா ” உண்ணலாம் என்றான்.[பன்னீர் என்னைப்பார்த்து. நான் சரி என்றேன். அந்த சீன உணவு மிகவும் சுவையாக இருக்கும். எனக்கு மிகவும் பிடிக்கும். சிங்கப்பூரில் இருந்தபோது அப்பாவின் சம்பள நாள் இரவில் அதை வாங்கி வருவார். அதை பாக்கு மட்டையில் கட்டித் தருவார்கள். அதைப் பிரிக்கும்போதே வாசனை கமகமக்கும். கோவிந்தசாமி சீன உணவு சாப்பிடமாட்டான்.அவன் அடுத்த உணவகம் சென்று அங்குள்ள இந்திய இஸ்லாமியர் தயார் செய்யும் ” மீ கோரேங் ” வாங்கி வந்தான். பன்னீர் ஒரு பெரிய ” அங்கர் பீர் ” கொண்டுவரச் சொன்னான். அதை இரண்டு பெரிய கண்ணாடி கோப்பைகளில் நிரப்பி ஒன்றை எனக்கு நீட்டினான். கோவிந்தசாமி பீர் குடிக்கமாட்டான். அவன் தேநீர் வாங்கிக்கொண்டான்.
நாங்கள் அந்த சுவையான குளிர்ந்த பீரை சுவைத்து பருகியபடி பேசினோம்.தமிழகத்தில் இருந்தபோது இவ்வளவு சுலபமாக பீர் அருந்தமுடியாது. அங்கு மது விலக்கு அமுலில் இருந்தது. ஆந்திராவில் சித்தூர் சென்றால்தான் பீர் கிடைக்கும். சிங்கப்பூரில் மது அருந்துவது சாதாரணமானது. சீன உணவகங்களில் உணவுடன் மதுவும் பரிமாறுவார்கள். அவர்கள் குடும்பத்துடன் அங்கு உண்ண சென்றாலும் குடும்பத் தலைவர் சர்வ சாதாரணமாக மது அருந்திக்கொண்டே உணவு உட்கொள்வார். நண்பர்கள் ஒன்று கூடினாலும் சீனர் உணவகத்தில் இரவில் நீண்ட நேரம் மது அருந்தியவாறு உணவு உண்பது வழக்கம். இங்கு மதுவிலக்கு என்பதற்கு வாய்ப்பே இல்லை. மது அருந்துவது இங்குள்ள கலாச்சாரங்களில் ஒன்றாகிவிட்டது. இங்கு வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் வரும் சுற்றுப்பயணிகளுக்கு மது இருப்பது கேளிக்கைகளில் ஒன்றாகும். அப்போது வியட்நாம் போர் நடந்துகொண்டிருந்ததால் அமெரிக்க போர் வீரர்கள் சிங்கப்பூர் வீதிகளில் நிறையவே காணப்பட்ட்னர். அதனால் இரவு வாழ்க்கைக்கு மது இங்கே இன்றியமையாததாகிவிட்ட்து. இங்கே மதுவுக்கு அடிமையாகி சீர்கேடும் குடும்பங்கள் குறைவு. எப்போதுமே ஒன்றைத் தடுத்தால்தான் அதில் அதிகம் நாட்டம் உண்டாகும். மதுவை இங்கு தடை செய்யாத காரணத்தால் அதை நாடிச் செல்லும் ஆர்வமும் இங்கு குறைவாகவே காணப்படுகின்றது.
” மருத்துவம் படித்து முடித்துவிட்டாயா? இனி சிங்கப்பூர்தானே உனக்கு? ” பன்னீர் கேட்டான்.
” முடித்துவிட்டேன். கட்டாய மருத்துவ பயிற்சியும் முடித்துவிட்டேன். இப்போது கோயம்புத்தூரில் வேலை செய்கிறேன். ” இது என்னுடைய பதில்.
” எதற்கு அங்கு வேலை? அந்த பணம் உனக்கு போதுமா? இந்திய ரூபாயை இங்கே மாற்றினால் ஒன்றுக்கும் உதவாதே? பேசாமல் இங்கேயே வந்துவிடவேண்டியதுதானே? ” பன்னீர்தான் கூறினான்.
” ஆமாம். இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் குறைவு. இங்கு உள்ள வாய்ப்பை விட்டுவிட்டு அங்கு நீ வேலை செய்வது நல்லதில்லை. ” கோவிந்தசாமி பன்னீருக்கு சாதகமாகப் பேசினான்.
” எனக்குத் தெரிகிறது. ஆனால் ஒரு இரண்டு வருட சேவை அங்கேயே செய்தாகவேண்டும். ” நான் விளக்க முயன்றேன்.
” அப்படி என்ன சேவை அங்கே வேண்டிக் கிடக்கிறது? ” பன்னீர் குறுக்கிட்டான்.
” நான் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு முக்கியமாக இருந்தது தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபை. அவர்கள் என்னை பரிந்துரை செய்தது பெரும் உதவியாக இருந்தது. அப்படி நான் அதைப் பெற்றபோது படித்து முடித்தபின்பு அதன் மருத்துவமனையில் இரண்டு வருடங்கள் சேவை புரிவதாக சம்மதம் தெரிவித்தேன். அதோடு அவர்களிடம் நான் கல்வி உதவியாக இரண்டாயிரம் ரூபாய் கடன் வேறு வாங்கியுள்ளேன். அதற்கும் நான் இரண்டு வருடம் சேவையாற்ற வேண்டும். ” நான் விளக்கினேன்.
” ஏன் அவர்களிடம் கடன் வாங்கினாய்> உன் அப்பாதான் இங்கிருந்து பணம் அனுப்பினாரே ? ” கோவிந்தசாமி குறிக்கிட்டான்.
நான் அருமைநாதனால் உண்டான பிரச்னையை விவரித்தேன்.
” அட பரவாயில்லையே? அருமைநாதனும் உன்னைத் தேடி வந்துவிட்டானே ? “வியந்தான் பன்னீர்.
” அந்த அருமைநாதன் மட்டுமல்ல. இன்னொரு அருமைநாதனும் என்னைப் பார்க்க வந்தார். ” நான் புதிர் போட்டேன்.
” யார் அந்த இன்னொரு அருமைநாதன்? ” பன்னீர் கேட்டான்.
” அவர் வேறு யாருமில்லை.உன்னுடைய மூத்த அண்ணன்தான். எஸ்.ஏ.நாதன் . ”
” அட! அவர் எப்படி அங்கு வந்தார்? ” அவன் வியந்துபோய் கேட்டான். அவருடைய தம்பிதான் பன்னீர்.
” அப்பா அவரிடம் ஒரு ஃபிலிப்ஸ் ரேடியோ கொடுத்தனுப்பினார். ” என்றேன்.
” அட பரவாயில்லையே உன் அப்பா. இங்கே நீ இருந்தபோது எப்படியெல்லாம் உன்னைக் கொடுமை படுத்தினார். ஆமாம். இப்போது அவர் அங்கே எப்படி உள்ளார்?இன்னும் அந்த முரட்டுத்தனம் உள்ளதா? ” கோவிந்தசாமி கேட்டான்.
” இல்லை. அங்கே சாதுவாகிவிட்டார். அவர்தான் என்னை இங்கே அனுப்பிவைத்துள்ளார். ”
” வேளையில் சேரச் சொல்லியா? ” பன்னீர் கேட்டான்.
” இல்லை. பெண் பார்க்க. எனக்கு திருமணம் செய்ய? ”
அது கேட்டு இருவரும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்,
” ஆமாம். யார் அந்த பெண்? ” பன்னீர் கேட்டான்.
” அது லாபீசில் உள்ளது. ”
” அன்று விமான நிலையம் வந்தார்களே. அவரின் மகளா? ” என்று கேட்டான் கோவிந்தசாமி.
” ஆமாம். அவருடைய மகள்தான் . அவர் எனக்கு அக்காள் முறை. பெண்ணின் அப்பா என் அப்பாவுக்கு தாய் மாமன். ”
” அப்படியானால் உன் அப்பாவுக்கும் முறைப் பெண் என்று சொல். ” பன்னீர் வினா எழுப்பினான்.
” ஆமாம். அதனால்தான் அக்காள் மகள் உறவைச் சொல்லி மணந்துகொள்ளச் சொல்கிறார்கள் ”
” சரி. பெண் எப்படி? உனக்குப் பிடித்துள்ளதா? ” வினவினான் கோவிந்தசாமி.
” சின்ன பெண்தான். வயது பதினாறு. எனக்கு பிடித்துள்ளது. ”
” சரி. இங்கு லதாவை காதலித்தாயே? அது என்ன ஆச்சு? தொடர்பு உள்ளதா? ” பன்னீர் கேட்டான்.
” என்ன ஆனது என்று தெரியலை. தொடர்பு இல்லாமல் போனது. ”
” நீ வேண்டுமானால் போய் வேலை செய்யும் இடத்தில் தேடிப்பாரேன். நிலைமை என்னவென்றும் தெரிந்துகொள்ளலாமே ? ” கோவிந்தசாமியின் அறிவுரை.
” அப்படிதான் எண்ணியுள்ளேன். இங்கு வரும்போது நாம் வாழ்ந்த ஹெண்டர்சன் மலையைக் காணாமல் விழித்தேன். ”
” ஆமாம். அங்கு வாழ்ந்த லதா குடும்பத்தினர் இப்போது எங்கே குடியுள்ளனர் என்று தெரியவில்லை. ” பன்னீர் சொன்னான்.
” சரி. நீ என்ன செய்கிறாய்? எங்கே உன் வீடு? ” நான் பன்னீரிடம் கேட்டேன்.
” நான் இப்போ இரண்டாம் ஆண்டில் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் உள்ளேன்.ஹாலந்து அவனியூவில் வீடு எடுத்துள்ளேன். ”
” அம்மா உன்னுடன்தான் உள்ளாரா? ” அவனின் அம்மா கிரேசுக்கு என் மீது அன்பு அதிகம்.
” ஆம். தங்கைகளும் என்னுடன்தான் உள்ளனர். ”
” ஜெயப்பிரகாசம்? ‘ அவனுடைய அண்ணண் பற்றி கேட்டேன்.
” அவன் திருமணமானபின்பு தனியாக வேறு பகுதியில் குடியிருக்கிறான்.உன்னை நிச்சயம் அங்கு கூட்டிச்செல்வான். ” என்றான்.
” சரி இங்கே இன்னும் எத்தனை நாள் இருப்பாய். உன்னுடைய திடடம் என்ன? ” கோவிந்தசாமி கேட்டான்.
” நான் இப்போது முக்கியமாக உங்களையெல்லாம் காண வந்துள்ளேன். அதன்பின்பு நாம் அனைவரும் லாபீஸ் சென்று பெண்ணைப் பார்க்கிறோம். அதன்பின்பு திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறோம். அவர்கள் சம்மதித்தால் நான் பெண்ணைக் கூட்டிக்கொண்டு தமிழகம் செல்வேன். நான் எப்படியும் இங்கே இரண்டு மாதங்கள் தங்குவேன். ஆகவே நமக்கு நிறைய நேரம் உள்ளது. ”
” நீ இங்கே தங்குவது பற்றி கவலைப் படாதே. நீ எத்தனை நாள் வேண்டுமானாலும் என்னுடன் தாங்கிக்கொள்ளலாம். ” கோவிந்தசாமி கூறினான்.
” நீ இங்கே இருக்கும்வரை நானும் இங்கேயே தாங்கிக்கொள்கிறேன். ” பன்னீர் கூறினார்.
” நம் மூவரின் நேரமும் இங்கு ஜாலியாக இருக்கும். ” பெருமிதம் கொண்டான் கோவிந்தசாமி.
” எப்போ நாம் என்று லாபீஸ் செல்லலாம் என்பத்தைச் சொல் கோவிந்த். எனக்கு சனி ஞாயிரில் பிரச்னை இல்லை. ” என்றான் செல்வன்.
” சரி. இந்த சனிக்கிழமை செல்வோம். ஞாயிறு திரும்பிவிடுவோம். ” கோவிந்தசாமி சம்மதம் தெரிவித்தான்.
இரண்டாவது பீர் போத்தலையும் காலி செய்தபின் மீண்டும் மாடி சென்றோம். பன்னீர் எங்களுடன் தங்கினான். மூவரும் கூடத்தில் வரிசையாக பாய் விரித்து படுத்தோம். இரவு வெகு நேரம் பழைய கதைகளையெல்லாம் பேசி மகிழ்ந்தோம்.
காலையில் இருவரும் வெளியேறினர். நான் மாலை வரை நன்றாக ஓய்வெடுத்தேன். பின்பு பேருந்து ஏறி லதா வேலை செய்யும் இடம் சென்றேன். அவள் எந்த நிலையில் இருப்பாள் என்பது தெரியவில்லை. அங்குதான் வேலை செய்கிறாளா அல்லது இல்லையா என்பது தெரியவில்லை. முன்புபோல் நான் காத்திருக்கும் இடத்தில் நின்றுகொண்டிருந்தேன். சரியாக ஐந்து மணிக்கு அவள் வெளியேறினாள். அவள் என்னை இன்னும் பார்க்கவில்லை. நான் நிற்கும் இடம் தாண்டிதான் அவள் பேருந்து நிறுத்தம் செல்லவேண்டும். கொஞ்ச தூரம் வந்தவள் என்னைப் பார்த்து அப்படியே அதிர்ந்துபோய் நின்றுவிட்டாள். நான் அவளைப் பார்த்து புன்னகைத்தேன். அவள் முகமோ பீதியில் இருண்டது. அவள் என்னை அங்கு அப்படி கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கமாட்டாள்.
நான் அவளிடம் சென்று. ” என்ன நின்றுவிட்டாய்? சந்தேகம் வேண்டாம். நான்தான் வந்துள்ளேன். ” என்றேன்.
” எப்போது வந்தீர்கள்? ஆச்சரியமாக உள்ளது! ” என்னைக் கண்டு கண்கள் விரிய வியந்தாள்.
” வந்து நான்கு நாட்கள்தான் ஆகிறது. நேராக லாபீஸ் சென்றுவிட்டேன். நேற்றுத்தான் சிங்கப்பூர் வந்தேன். ”
” சரி. இங்கே நின்று நாம் பேசவேண்டாம். ஒரு டாக்சி பிடித்து வேறு எங்காவது போய்விடுவோம். ” என்று சொன்னபடியே கையசைத்து ஒரு டாக்சியை நிறுத்தினாள் .
நாங்கள் இருவரும் பின் இருக்கையில் அருகருகே அமர்ந்துகொண்டோம். அவள் ஆர்ச்சர்ட் ரோடு போகச் சொன்னாள்.
சென்றமுறை நான் சிங்கப்பூர் வந்திருந்தபோது அவள் கூட்டிச்சென்ற அதே உயர்தர உணவகம் அது.
” இங்கு நாம் வந்துள்ளோம் அல்லவா? எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ” என்றேன் நான் அவளைப் பார்த்தவண்ணம்.
” இதுவெல்லாம் நினைவிருக்கும். என்னைத்தான் நினைவிருக்காது. ” கிண்டலாகக் கூறினாள்’
” ஏன் நினைவில்லை? படிப்பும் பரீட்சையும் அப்படி. ஆமாம். உனக்கு என்ன ஆனது? நீ ஏன் கடிதம் போடலை? ”
” நீங்கள் மட்டும் கடிதம் போட்டுவிட்டீரா? உங்களிடமிருந்து ஒன்றும் வரலை. நானும் போடலை. மருத்துவக் கல்லூரியில் இல்லாத அழகிகளா? நீங்கள் என்னை மறந்துபோனீர்கள் என்று எண்ணிவிட்டேன். ” அவள் பதில் சொன்னாள்.
இது பற்றிப் பேசுவதில் அர்த்தம் இல்லைதான். இருவருமே கடிதத் தொடர்பு இல்லாமலேயே இருந்துவிட்டோம். எப்படியும் ஒரு வருடமாவது ஆகியிருக்கும். அவள் வீடு மாறிச் சென்றதையும் என்னிடம் தெரிவிக்கவில்லை. நான் கடிதம் அனுப்பியிருந்தாலும் அவளிடம் அது வந்து சேர வாய்ப்பில்லை.
” இப்போது ஹெண்டர்சன் ரோட்டையே காணவில்லையே? ”
” அது காணாமல் போய்தான் ஒரு வருடம் ஆகிறதே? ”
” உன் புது முகவரியை நீதானே தந்திருக்கணும் ? ஏன் தரவில்லை? ”
” உங்களிடமிருந்து கடிதம் வந்தால்தானே தர முடியும்? நீங்கள்தான் ஒரேயடியாக என்னை மறந்துவிட்டீரே? ”
” சரி.சரி. நம் இருவர் மீதுமே குற்றம்தான். இனி என்ன செய்வது? சரி… நீ எப்படி இருக்கே? ”
” எனக்கு…. எனக்கு…. ..”
” என்ன எனக்கு எனக்கு ? ”
” எனக்கு … திருமணம் ஆகிவிட்டது… ”
( தொடுவானம் தொடரும் )
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–17
- சித்தார்த்தனின் “உயிர்ச்சொல்” – நூல் விமர்சனம்
- வெய்யில்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- அருவம்
- பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 4 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி) – கவிதை, ,ஓவியம் உரைநடை
- தொடுவானம் 176. முதல் காதலி
- இரண்டாவது கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் ஆற்றல் உச்சத்திறனில் இயங்குகிறது
- தந்தையர் தினம்
- ராஜஸ்தான் முதல் பழனி வரை – மாட்டுக்கறி வன்முறை
- நித்ய சைதன்யா கவிதைகள்
- கவிநுகர் பொழுது-16 கவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2017
- இன்னொரு பெரியார் பிறக்க வேண்டுமா?
- தி கான்ட்ராக்ட்
- கரசூர் பத்மபாரதி கவிதைகள் — சில குறிப்புகள்
- வ. பரிமளாதேவியின் கவிதைத்தொகுப்பு பற்றி : ”எளிமையின் குவியல்”
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 19