கவிதை என்பது மொழியின் செயல்பாடு மட்டுமன்று; அது மனத்தின் செயல்பாடு. மொழியின் வாயிலாக நிகழ்த்திக்காட்டும் மனத்தின் செயல்பாடு. தன்னை தன்கருத்தை, தன்எண்ணத்தை எழுதிப்பார்க்கிற ஏற்பாடு. அதில் ஒரு கவிஞன் வெளிப்படுவது என்பது தான் அவனின் தனித்துவம். அது,அவன் சார்ந்தது. அவனின் திறன், மொழிவளம் சார்ந்தது. கவிதைப் போக்கின் எண் திசைக் கோணத்தில் எதில் பொருத்திக் கொள்வதென்பது அவனின் உரிமை. கவிதையாக்கத்தின் வாயிலாக சிலர் கொண்டாடக்கூடும். சிலர் நகர்ந்து செல்லக்கூடும். அவரவரின் எதிர்பார்ப்பும் அவாவும் கவிதை பற்றிய முன்முடிவுகளும் அவற்றின் காரணிகளாகளாம். நான் கவிதையின் மீதான என் பார்வையை, பொருளின் புரிதலோடும் கவித்துவத்தின் மனத்தோடும் பொருத்திப் பார்த்து அதன் மையம் கண்டடைவதை வாசிப்பின் வழிமுறையாகக் கொண்டவன். செய்யும் கவிதைகள் எளிதில் அறிந்து கொள்ளத்தக்கவையே. அதிலும் மொழிநுட்பச் சிறப்பு கருதி சிலாகிக்க இடங்கள் உண்டு .
சூரியதாஸின் ,’ எனது சட்டையில் இன்னொருவர் வாசனை’, நூலினை வாசிக்கத் தொடங்கிய போது அதன் வெளிப்பாட்டுத் தன்மையில் இயல்பான இணக்கம் உருவானது.
இந்த நூல், ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது பெற்றது. திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் விருது பெற்றது. பலரது கவனத்தைப் பெற்றது. அதற்கு முக்கியமான காரணமாக நான் கருதுவது இவரின் கவிதைகள் கொண்டிருக்கும் பாடு பொருள்கள். அவற்றை முன்வைக்கிறபோது இயல்பாய்த் தெறிக்கும் சமூகக் கோபம்.
உடைகளுக்கென ஒரு வாசம் உண்டு. அது உடுத்துவதால் ஒட்டிக் கொள்கிற வாசனையல்ல. அது, உடையும் அணிதலும் நிகழ்த்தும் உணர்வின் வாசனை. துவைத்தாலும் போகாது. ஏனெனில் அது நினைவின் வாசனை.
இத்தொகுப்பில், பலரின் முன்னுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. அவை , அவர்கள் இவர் மீதும் இவரின் கவிதைகள் மீதும் அவர்கள் கொண்டிருக்கும் மதிப்பீட்டை முன்மொழிகின்றன.
தற்கொலை என்பது
பேரின்பக் கொண்டாட்டம்
என்ற வரிகளில் இருந்து என் விமர்சனத்தைத் தொடங்குவதென்பது என் வசதிக்காகத்தான். இதன் வாயிலாக இவரின் பிற கவிதைகளைக் கண்டடைவதற்கான உத்தி மட்டுமே. ஏனெனில் இந்தக் கவிதை அதற்கே உரிய பிரத்யேக சொல்லாடலோடு முடிந்து விடும் தனிக்கவிதை தான். ஆயினும் மேற்கண்ட வரிகளின் மன உள்ளீடு பிறகவிதைகளின் பால் என் கவனத்தைக் குவிக்கத் தேவைப்படுகிறது.
தற்கொலை என்பது
பேரின்பக் கொண்டாட்டம்
தாரைத் தப்பட்டையுடன் தற்கொலைக்கான
தேதியும் இடமும் குறித்து அதற்கான
அழைப்பிதழும் அச்சடித்துத் தரப்படும்
இத்தனைக்கும் சம்மதமென்றால்
என்னிடம் வருவோர்க்கு வழிகாட்டப்படும்.
எதற்கு வழிகாட்டப்படும்? தற்கொலைசெய்து கொள்ள வழிகாட்டப்படும். தற்கொலை செய்து கொள்ள வழிகாட்டப்படுமெனில் அதற்கான சூழல் இருக்கிறது என்பதை கவிமனம் உறுதியாக நம்புகிறது எனக் கொள்ளலாமா?. எனில் இதிலிருந்து இவரின் சமூகம் குறித்த வேதனையின் புள்ளியைத் தொட முடியும். அதனாலே தான் இக்கவிதையொரு தனிக்கவிதை யெனினும் இதிலிருந்து இழையினைப் பிடிக்க விழைந்தேன். சரி. தற்கொலைக்கான காரணங்களைக் கொண்டு அதற்கான பின்புலத்தை ஊகித்துவிட முடியும். எப்படி? வறுமை தான் காரணமெனில் அரசியல்வாதிகள் முதலாளிகள். வதந்தியே காரணமெனில் வாயுள்ள மனிதர்களின் வம்பு. நோய்களெனில் மருத்துவ இயலாமை. தேர்வில் தோல்வியா கல்வித்துறையின் சீர்கேடு. குற்ற உணர்ச்சியெனில் மதவாதிகளின் மதம். எனவே தற்கொலைக்குக் காரணமாகத் தற்கொலையே இருக்கவேண்டும் என அங்கதமாய்ச் சொல்கிறார். இவ்வாறான காரணங்கள் தான் தற்கொலைக்கான விஷயங்களாக இருக்கும் சமூகத்தில் தற்கொலை என்பது தீர்வாகுமாவென்னும் கேள்வியை, எழுதாத சொற்களின் மூலம் எழுப்புகிறார்.
ஆனால், இப்படிச் சொன்னவுடன் தற்கொலைக்கான காரணங்கள் இருக்கும்பட்சத்தில் அல்லது இல்லாதபட்சத்தில்கூட தற்கொலைக்கான மனோபாவம் குறித்த பார்வை இதுதானா? அவ்வாறெனில் அது சரிதானா?
இல்லை. அங்கதமாய்க் கூறும் இக்கவிதைக்கு எழும் எதிர் வினையில் மிகுந்த ஆக்ரோஷத்தோடு பதிகிறார், பிறிதொரு கவிதையில். அது தான் கவியின் குரல். அதுவே அவரின் செய்தி. தலைப்பிலிருந்தே உருவாகும் கோபத்தோடு.
‘நீ ஒரு மயிரும் புடுங்க வேண்டாம்’, என்னும் கவிதை. சாவினைத் தவிர வேறு வழியில்லையென்னும் மனநிலைக்கு வருவது அபத்தம். என்னதான் இருக்கட்டுமே? வாழ்ந்தாக வேண்டாமா? அப்படித்தான் செத்துமடிவதைத் தவிர வேறு வழியில்லையென்று எண்ணுவதற்கு என்ன நேர்ந்தது? இவரின் கேள்விகள் சுவார்ஸ்யமானவை.ஹெர்குலஸைப் போல உலகத்தைச் சுமக்கிறாயா? ஏசுநாதரைப் போல சிலுவையில் அறையப்பட்டு விட்டாயா என்ன? சாக்ரடீஸா? விஷக் கோப்பை வழங்கப்பட்டவனா நீ?காரல் மார்க்ஸா? பகத்சிங்கா? காந்தியா தெரசாவா? எத்தனை சோதனைகளை எதிர் கொண்டு நிலைத்தவர்கள் இவர்கள். நீ யார்? உன் பிரச்சனை தான் என்ன? என்று அடுக்கிய பின்,
ஒருத்தியை/ஒருவனை/உலகத்தை
நேசித்துத் தோற்றாயோ
யாசித்துத் தோற்றாயோ
தற்கொலை ஆயுதத்தைக் கழுத்தில்
தொங்கவிட்டுத் திரிகிறாய்
பிறரை உண்மையாய் நேசித்தவர் பலரும்
கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்
எவனும் தற்கொலை
செய்து கொண்டதாய்த் தகவலில்லை
என்று கூறும் வரிகளுக்குப் பின் கட்டளையாக அதுவும் கோபத்தின் உச்சம் சென்று உரக்கப் பேசுகிறது இப்படி.
போடா/போடி போ
நீ ஒரு மயிரும் புடுங்க வேண்டாம்
முதலில்
உன்னை நேசிக்கக் கற்றுக்கொள்
ஆமாம். இதுதான் கவியின் குரல். தன்னை நேசிக்கக் கற்றவன் யாரும் தற்கொலை குறித்து எண்ணவே மாட்டான்/ள் என்பதே தத்துவம்.
கடவுளை விமர்சிப்பது இரண்டு வகை. ஒன்று, இச்சமூகத்தில் நிலவுகிற சாதி மத இன்ன பிற மூட நம்பிக்கைகளுக்கெல்லாம் கடவுள் என்கிற கற்பிதமே காரணம் என்னும் கருத்தியலோடு முற்றிலும் மறுப்பது. இல்லை என்பது. பிறிதொன்று இருப்பதான மனநிலையோடு விமர்சிப்பது. அதிலும் இரண்டு வகை உண்டு.
ஒன்று கடவுளை உயரிய நிலையில் வைத்தபடி உரையாடுவது.
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்
என்று உயர்ந்த தன்மையில் இருக்கும் நீ எங்களில் ஒருவனாய்ப் பிறந்தால் தான் தெரியும் என்பதாக. அல்லது
படைப்பதனால் என்பேர் இறைவன்
என்று அவனின் நிலைக்கு நம்மை உயர்த்த எண்ணுவது. இரண்டும் கண்ணதாசன்.
மற்றொன்று, கடவுளுக்கான தனி அந்தஸ்து ஏதும் தராமல் கடவுள் ஒன்றிருக்கும் பாவனையோடு உரையாடுவது. இந்த தொனியில் தான் சூரியதாஸ் கடவுளை அணுகிறார்.
கடவுளிடம் உருக்கமாய் வேண்டினேன்
எங்களுக்கு ஒரு நல்ல கடவுள் வேண்டுமென்று
கடவுள் என்னிடம் உருக்கமாய் வேண்டினார்
தமக்கு ஒரு நல்ல மனிதன் வேண்டுமென்று
இருவரும் உருக்கமாய் வேண்டுகிறார்கள். அப்படித்தானே வேண்டுதல் இருக்க முடியும். நல்ல கடவுள் வேண்டுமெனில் இப்போது இருக்கும் கடவுள் இவருக்கு ஏற்புடையவர் அல்லர். நல்ல மனிதரைக் கடவுள் கேட்கிறார் எனில் இப்போதிருக்கும் மனிதர் கடவுளுக்கு ஏற்புடையவர் அல்லர். இரண்டும் சரியில்லை. அல்லது இல்லை. ஆமாம். காரணம் இருக்கிறது.
கடவுள் மனிதனைப்
படைத்துக் கொண்டிருந்த போது
சாத்தான் நிறையக் கடவுள்களைப்
படைத்துக் கொண்டிருந்தான்
கடவுள் இறந்து வெகு காலமாகி விட்டது
முதன் முதலாய் மதக் கலவரத்தின் போதே
அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார்
எனவே தான் நல்ல கடவுளையும் நல்ல மனிதையும் வேண்டுகிற சூழல் உருவாகியிருக்கிறது. கடவுள் இறந்து விட்டார் என்பதற்கான சாட்சியங்கள் நாள்தோறும் கிடைக்கின்றன.
காதல் துறை அறிவிப்பு என்கிற கவிதை.
நகரத்தின் மையத்திலிருந்து
நான்கு கல் தொலைவில்
முத்தங்கள் சிதறிக் கிடக்கின்றன
என்பதாகத் தகவல்
அதன் அருகே இரத்தச்சகதியில்
வீழ்ந்து கிடப்பவை
காதலரின் பிணங்கள் என்பது
நேரில் பார்த்தவர் சாட்சியம்
பிணங்களின் மீது சாதியின் ரேகைகள்
படிந்திருப்பதாகத்
தடயவியல் துறை உறுதி செய்துள்ளது
தடயவியல் துறை உறுதி செய்ய வேண்டியதில்லை. சிதைந்துகிடக்கும் காதலர் தம் உடலில் மொய்க்கும் ஈக்கள் கூட அறியும் சாதிய ஆணவத்தில் நிகழ்த்தப்படும் கொடூரத்தினை. காதல் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது காதலுக்கான எதிர்ப்பு. மானுடத்தின் சாபக்கேடு இது. இரண்டு பேரின் தனிவாழ்வில் குறுக்கிட மூன்றாமவர்க்கு உரிமையில்லை என்பதை சாதியென்னும் நோய்மைக்கூறு மறக்கிறது. கௌரவம் என்னும் போலிக்கட்டமைப்பைச் சாதி உருவாக்குகிறது.
ஆகவே தான்,
சாதியோ வெறிபிடித்து வீதிகளில்
மதங்களைப் போலவே
பயித்தியமாய்த் திரிவதாகவும்
நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“ஒரு குழந்தையைப் போல முத்தமிடுவது அப்படியொன்றும் எளிதானதல்ல”, என்று தொடங்கும் முத்தங்களின் பாடல் கவிதை முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடு. பிரியத்தின் பிரதிபலிப்பு. குழந்தையின் முத்தம் மழைத்துளிபோல தூய்மையான அன்பின் தூறல். ’குழந்தையின் முத்தம் போல் இதமாய் இயல்பாய் எதுவும் இருப்பதில்லை’, என்கிறார்.
ஆனால் காதலின் முத்தம்,
ஒரு பூவின் மீதான பட்டாம்பூச்சி அமர்வில்
வேர்வரை சிலிர்த்துப் போயிற்று
காதலின் முதன் முத்தத்தில்
என்னும் கவிதையின் பூ சிலிர்ப்பு,
முள்ளம்பன்றியின்
முட்களென சிலிர்க்கச் செய்யும்
என்பதாக இன்னொரு கவிதையில் மாறுவதும் கவனம் கொள்ளத்தக்கது. அப்படித்தான். முத்தம்.
லிபியறியா ஆதிமொழியொன்றை
உணர்கின்ற உச்சத்தில்
அத்தனை செல்லும் ஆர்ப்பரிக்கும்.
‘முத்தங்களின் பாடல்’,கவிதையில் முத்தம் குறித்த இரண்டு விஷயங்களைக் குறிப்பிட வேண்டும்.
அரபிக்கடலில் கலக்கும் நீராய்
வீணாகும் முத்தங்களைத் திருப்பிவிட வேண்டும்
வறட்சிப் பிரதேசங்களை நோக்கி
முத்தங்கள் யூதாஸைப் போன்றவை
சிலசமயம்
நம்மையே காட்டிக்கொடுத்து விடுகின்றன.
பிறிதொரு கவிதையில், சாமிக்கண்ணுவும் அந்தோணிசாமியும் சந்தித்துக் கொள்கிற கவிதை மிகுந்த அங்கதமானது. மரித்துப்போன இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். எரிந்து பிடி சாம்பலாய்ப் போனவர் சாமிக்கண்ணு. மண்ணுக்குள் புதையுண்டு போனவர் அந்தோணிசாமி. அவர்கள் இருவரும் இணக்கமாய்த்தான் இருக்கிறார்கள். மரணம் அவர்களுக்கு, மதத்தின் பேரால் பரிசளிக்கப்பட்டது. அதைப் பிரகடனப்படுத்தும் சுவரொட்டியில் இருக்கும் விரக்திச் சிரிப்பு , தொடர்பற்ற மனநிலையில் இருப்போரையும் தொடர்பாக்கி மடியச்செய்யும் மத வன்முறையின் அடையாளமாகிறது.
இன்றைக்கு, சமூக அரசியல் சூழல் குறித்த கவலை மானுடத்தின் மீது போர்த்தப்பட்ட இருளாய் இருக்கிறது. எதையும் செய்யத் துணிந்தவர்களின் களமாய் மாறியிருக்கிறது. கேவலத்தின் உச்சத்தில் இருக்கிறது. நடப்பு. சொல்வதற்கேதுமற்ற அறமற்ற நடவடிக்கைகள். சொல்பவர்கள் பாயும் கடும் சட்டங்கள். கேள்வி கேட்போர் மீது ஏவப்படும் அடக்குமுறைகள். விரல்கள் குறித்த கவிதையில் வருகிற கீழ்க்காணும் வரிகள்,
உயிர்போகும் என்றறிந்தும்
தீமைக்கு எதிராகத் திடமாக முன் நீளும்
துப்பாக்கி விரல்கள்
இதயத்தில் நட்டு வைத்து
நான் வணங்கும் நடுகற்கள்
என்கிறார். ஆம். இன்றைக்கு, குற்றத்தை நேர்படப் பேசுவோர் அரிதாகிப் போய்விட்டனர். குற்றம் கூறுவோர் முன் முடிவுகளோடு சொல்கின்றனர். சில நாட்களில் அவர்க்குச் சாதகமான சூழலை உருவாக்கக் கூடிய காரணிகளே குற்றச்சாட்டுகள் என்றாகி விட்டது. அப்படியான காலத்தில், கொடுமை கண்டு சுட்டும் விரல்கள் வணக்கத்திற்குரியவையே.
’ஏனென்று இப்போது புரிகிறது’, என்னும் கவிதையின் இறுதி வரிகள் இப்படி முடிகிறது.
வெடித்த பருத்திக்காட்டில்
முனியடித்து இறந்த
முதிர்கன்னி அக்காவின் அருகில்
பாலிடாயில் பாட்டில் கிடந்தது
ஏனென்று இப்போது புரிகிறது.
முனி அடிக்கவில்லை என்பது இப்போது புரிகிறது. பாலிடாயில் குடித்துத்தான் இறந்து போனாள் என்பது இப்போது புரிகிறது. முதிர்கன்னி தனக்குக் குடும்ப வாழ்க்கை அமையவில்லை என்பதால் மரணித்த தேர்வு செய்தால் என்பது இப்போது புரிகிறது. இது முதிர்கன்னி குறித்து எழும் சமூகப் பார்வையின் பாற் பட்ட, பலரும் பேசுகிற விஷயம்தான். ஆனால் அதற்கு முன் மிக நுட்பமாகவும் இயல்பான நிகழ்வு அடுக்குகளோடும் பெண்களின் மனத்தில் ஒளிந்திருக்கிற, வெளிப்படுத்துவதில் மறைபொருளுற்ற ஏக்கத்தின் உள்ளுணர்வுச் சித்திரத்தை மிக நேர்த்தியாகக் கூறி, பின் இந்த முதிர்கன்னியின் வரிகளை வாசிக்கிற போது முழு அர்த்தம் விளங்கக்கூடும்.
சமூகத்தில், அரசியலின் பேராலும் மதத்தின் பேராலும் சாதியின் பேராலும் நிகழும் வன்முறைகள் பற்றிய பெருங்கவலையும் கடும் கோபமும் இவரின் கவிதைகளில் வெளிப்படுகின்றன.
ஒரு துப்பாக்கியைக்
குழந்தைக்குக் குறிவைக்கும் எவனும்
முதலில்
தன்னைத்தானே சுட்டுக்கொண்டவனே
மானுடத்தின் மீதான கவிமனத்தின் உயிர்ப்புதான் குழந்தையை நோக்கி துப்பாக்கி நீட்டுபவனை, மரித்துப் போனவனாய் முடிவுசெய்கிறது.
சக மனிதர்களின் மீதான அக்கறையே அக்கோபத்துக்குக் காரணமாகிறது. கோபத்தைக் கவிதையாக்கும் போது கட்டுப்பாட்டுடன் சிலவும் அவை, மீறிய சொற்களின் ஆவேசத்தோடு சிலவும் தகவமைந்திருப்பதை உணர முடியும்.
நிறைய கவிதைகளை மேற்கோள் காட்டலாம். கவிதை வடிவம்கூட கருத்தின் பாற்பட்டதாய் மாறியிருக்கின்றன. உள்ளத்தின் உண்மை ஒளியாய் தரிசிக்கும் வாய்ப்பாகவே இவரின் கவிதைகள் கிடைக்கின்றன.
கவிஞர் சூர்யதாஸுக்கு எப்போதும் என் அன்பும் வாழ்த்தும்.
- கம்பனின்[ல்] மயில்கள் -4
- கருந்துளை பற்றி புதிய விளக்கம் : பிரபஞ்ச பெருவெடிப்பில் நேர்ந்த இருட்டடிப்புக்கு ஒளி ஊட்டின கருந்துளைகள்
- கவிநுகர் பொழுது-24( கவிஞர் சூரியதாஸின் ,’எனது சட்டையில் இன்னொருவர் வாசனை’, கவிதை நூலினை முன்வைத்து)
- மின்மினிகளின் வெளிச்சத்தின் பாதைகள் – கவிஞர் இரா.இரவி
- தொடுவானம் 185. கனவில் தோன்றினார் கடவுள்
- மின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை
- சென்னை தினக் கொண்டாட்டம்
- ஹாங்காங் தமிழ் மலரின் ஆகஸ்டு 2017
- காதலி இல்லாத உலகம்.
- கவிதைகள்