தொடுவானம் 186. நண்பர்களிடம் பிரியாவிடை

This entry is part 1 of 12 in the series 10 செப்டம்பர் 2017

 

          என்னைக் கண்டதும் நண்பர்கள் இருவரும் உற்சாகத்துடன் வரவேற்றனர். அன்று மாலையில் நாங்கள் மூவரும் சீனர் உணவகத்தில் அமர்ந்துகொண்டோம். பன்னீர் அங்கர் பீர் கொண்டுவரச் சொன்னான். அதைப் பருகியது இதமாக இருந்தது. கோவிந்த் தேநீர் அருந்தினான்.
          நான் கண்ட கனவு பற்றி கூறினேன்.
          ” நீ இதைப் பற்றியே எண்ணிக்கொண்டு படுக்கச் சென்றதால் இத்தகைய கனவு வந்துள்ளது. ” கோவிந்த் தன் கருத்தைச் சொன்னான். அது ஓரளவு உண்மைதான். படுக்கும்போது எதைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்கிறோமோ அது கனவிலும் வருவது இயல்பானது. ஆனால் இதுபோன்று கடவுள் கனவில் வருவது சாதாரணமானது அல்ல.
          ” அப்படியில்லை கோவிந்த். இதில் ஆழ்த்த அர்த்தம் உள்ளது. இவன் முன்பு கடவுளை நம்பாதவன். இப்போது மருத்துவம் படிக்க இடம் கிடைத்ததும் அதை கடவுளின் அழைப்பாகக் கருதுகிறான். அதனால் இங்கேயே இருப்பதா அல்லது இந்தியா சென்று கிறிஸ்துவ மருத்துவமனையில் பணியாற்றுவதா என்ற குழப்பத்தில் இருந்த இரவில் கனவில்  இயேசு ஒரு வழிப்போக்கனாகத் தோன்றி எது புதையல் என்பதைக் காட்டியுள்ளார். இங்கு கிடைக்கும் பணம் பெரிதல்ல. அங்கு செய்யும் சேவையே பெரிய புதையல் என்பதைச் சொல்லியுள்ளார். ஆகவே இனியும் குழப்பம் இல்லாமல் இந்தியா செல்வதுதான் நல்லது. ” கனவுக்கு பன்னீர் விளக்கம் தந்தான்.
          ” ஆமாம். நானும் இப்போது  கப்பலில் செல்ல பயணச் சீட்டு வாங்கதான் வந்துள்ளேன். இப்போதே கோயம்புத்தூர் கண் மருத்துவமனையில் நான் எடுத்துள்ள விடுப்பு முடிந்துவிட்டது. அந்த வேலை என்ன ஆகுமோ தெரியவில்லை. கப்பல் பயணம் மேலும் ஒரு வாரமாகும்.” நான் என்னுடைய அவசரத்தை எடுத்துச் சொன்னேன்.
          அதுதான் நல்லது என்று இருவரும் ஆமோதித்தனர்.
          ” நாளை ஜும்மாபாய் கம்பனிக்கு போய் கப்பல் டிக்கட் எடுக்கணும். ” என்றேன்.
          ” இப்போது ரஜூலா கப்பல் இல்லை. ஸ்டேட் ஆப் மெட்ராஸ் கப்பல்  விட்டுள்ளனர். அதில் போகலாம். ” என்றான் கோவிந்த்.
          ” ஆமாம். .அதில்தான் போவேன். எப்படியும் ஒரு  வாரம் ஆகிவிடும். ” என்றேன்.
          ” புதுப் பெண்ணை உடன் கூட்டிச் செல்கிறாய். தேன் நிலவு போன்றிருக்கும் நடுக்கடலில். ” பன்னீர் கிண்டல் செய்தான். அவன் சொன்னது உண்மைதான். கடல் பயணத்தின்போது கடலும் வானும் மட்டும் தெரியும் ஏகாந்த சூழலில் அவளுடன்  பேசுவதும் இனிமையாகவே இருக்கும்! அது மறக்க முடியாத அனுபவமாகவும் அமையும்!
          அன்று இரவும் நாங்கள் மூவரும் ஹாலில் படுத்துக்கொண்டு தூக்கம் வரும்வரை எதிர்காலம் பற்றியே பேசிக்கொண்டிருந்தம். நாங்கள் மூவருமே சிறு வயதிலிருந்து ஒன்றாக ஹெண்டர்சன் மலை வட்டாரத்தில் வளந்தவர்கள். எங்கள் மூவருக்குமே ஒரே விதமான குறிக்கோள் இருந்தது. அது எழுத்தாளன் ஆகவேண்டும் என்பதே. கோவிந்த் என்னைப் பார்த்துதான்  எழுத ஆரம்பித்தான். இப்போது  தொடர்ந்து எழுதி வருகிறான். அவன் நிச்சயமாக எதிர்காலத்தில் சிங்கப்பூரில் ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளன் ஆகிவிடுவான். பன்னீர் ஆங்கில எழுத்தாளன் ஆகவேண்டும் என்று கூறுகிறான். அவன் ஆங்கிலத்தில் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்று வருவதால் நிச்சயமாக அவனும் தனது கனவை நனவாக்குவான். நண்பர்களான நாங்கள் மூவரும் அவ்வாறு அருகருகே படுத்துக்கொண்டு வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தது மறக்கமுடியாததாகும்.எங்களுக்கெல்லாம் மணமானபின்பு இப்படி படுத்திருப்பது இயலாத காரியமாகும்.
          மாரு நாள் காலையிலேயே நான் வாடகை ஊர்தி மூலம் ஜும்மாபாய் கம்பனிக்குச் சென்றேன். அங்கு நிறைய பேர்கள் காத்திருந்தனர்.
          நான் எங்கள்  இருவரின் கடப்பிதழ் கொண்டுவந்திருந்தேன்.( அவளுக்கு முன்பே அதை எடுத்து வைத்திருந்தனர். )  இருவருக்கும்  பங்க் ”  டிக்கட் எடுத்தேன். பங்க் என்பது படுக்கை வசதி கொண்ட ஒரு அறை .அதில் இருவர் அல்லது நால்வர் தங்கலாம். இந்த கப்பலில் ” டெக் ” என்னும் தரையில் படுக்கும் இடம் இல்லை. முன்பெல்லாம் நான் கப்பலில் பிரயாணம் செய்தபோது மெட்ராஸ் துறைமுகத்தில் இறங்குவேன். அங்கிருந்து தாம்பரம் சென்று அத்தை வீட்டில் தங்கிவிட்டுதான் ஊருக்குச் செல்வேன். இப்போது நான் நாகப்பட்டணத்துக்கு பிரயானச் சீட்டு வாங்கினேன்.காரணம் தரங்கம்பாடியில் அண்ணன் அண்ணி இருந்தனர். நாகப்பட்டண த்திலிருந்து ஒரு மணி நேரத்தில் தரங்கம்பாடி சென்றுவிடலாம். இப்படிச் செய்வதால் ஒரு நாள் மிச்சமாகும். நாகப்பட்டணம்  வந்த அடுத்த நாளில்தான் கப்பல் மெட்ராஸ் துறைமுகம் அடையும்.
          பயணச் சீட்டுகள் வாங்கியபின்பு ஜெயப்பிரகாசம் வேலை செய்யும் ” டெலிகாம்ஸ் ” அலுவலகம் சென்றேன். அவன் மதிய உணவுக்கு அழைத்துச் சென்றான். சிங்கப்பூர் நதியோரத்தில் வரிசையாக இருந்த தள்ளு வண்டி கடைகளில் ஒன்றுதான் அது.தமிழ் இஸ்லாமியர் சுவையான ” மீ கோரேங் ” தயாரித்துத் தந்தார். அதை சுவைத்தபடியே பேசினோம். எனக்கு இங்கு வேலை கிடைக்கவில்லை என்பதை அறிந்து அவன் வருந்தினான்.மலேசியாவிலும் வேலை கிடைக்கவில்லை என்பதைச் சொன்னபோது அவன் ஆச்சரியப்பட்டான்.
          ” அங்குதான் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளதே. உன் படிப்புதான் அங்கு செல்லுமே. அதோடு அந்த நாட்டுப் பெண்ணைதான் பதிவுத் திருமணம் செய்துள்ளாயே? பிறகு ஏன் உன்னை வேண்டாம் என்கிறார்கள்? இது வேடிக்கையாக இல்லை? ”  கொஞ்சம் ஆவேசத்துடன்தான் கேட்டான். ஜெயப்பிரகாசம் இயற்கையிலேயே கொஞ்சம் முரட்டு சுபாவம் கொண்டவன். சீக்கிரம் கோபம் வந்துவிடும். அனால் நல்ல மனம் கொண்டவன். நாங்கள் இணைபிரியா நண்பர்களாகவே இருந்துள்ளோம். ஏக்காரணத்தைக்கொண்டும் எங்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு இருந்ததில்லை. பயண நாளைக் கேட்டுக்கொண்டான். அநேகமாக துறைமுகத்திற்கு வர இயலாது என்று தெரிவித்தான். அந்த வரிசையில் இருந்த ஒரு துணிக்கடையில் ஒரு சட்டை வாங்கித் தந்தான். நீண்ட நேரம் கைகுலுக்கி எனக்கு விடை தந்தான். கனத்த மனதுடன்தான் நான் அவனிடமிருந்து விடை பெற்றேன்.
          அங்கிருந்து வாடகை ஊர்தி மூலம் பிராஸ் பாசா வீதிக்குச் சென்றேன். அங்கு ” ராபிள்ஸ் ஹோட்டல்  ”  அருகில் இருந்த ஒரு உயர் ரக பல்லங்காடிக்குள் நுழைந்தேன். என்னைக் கண்டுவிட்ட சார்லஸ் தலைகால் புரியாமல் மகிழ்ச்சி கொண்டவனாக என்னை கை  குலுக்கி வரவேற்றான். சார்லஸ் எனக்கு சித்தப்பா முறைதான். அனால் என்னைவிட இளையவன். அவன் நன்றாக பாடுவான். குரல் ஏ.எம்.ராஜா மாதிரியே ஒலிக்கும். இவன் அப்போது சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பாடி சிங்கப்பூர் ஏ.எம். ராஜா என்று புகழ் பெற்றவன். நான் மருத்துவம் பயில தமிழகம் செல்லுமுன் கண்ணீர்த்துளிகள் என்ற நாடகம் எழுதி அரங்கேற்றினேன். அதில் டாகடர் வேடத்தை சார்லசுக்குத் தந்தேன். உண்மையில் கோவிந்துக்குதான்   அந்த பாத்திரம் தந்திருந்தேன். இரண்டு மூன்று ஒத்திகைகளும் பார்த்துவிட்டோம்.. ஆனால் கோவிந்தின் உடல் அமைப்பு எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அவன் நோஞ்சானாக இருந்தான். அதனால் அந்தப்  பாத்திரத்தை சார்லசுக்கு மாற்றித்  தந்துவிட்டேன். அதனால் கோவிந்துக்கு என் மேல் கோபம்கூட. அதை எப்போதும் மறக்காமல் பன்னீரிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.சார்லஸ் ஒரு பஞ்சாபி பெண்ணை காதலித்து மணந்துகொண்டான் . மிகவும் நல்ல பெண். என்னிடம் அன்பாகப் பேசுவாள். சார்லஸ் என்னை தேநீர்க் கடைக்குக் கூட்டிச் சென்றான். நான் நடந்தவற்றையெல்லாம் கூறினேன். ஊர் திரும்பப்போவதையும் சொன்னேன். அவன் வருத்தமடைந்தான். மீண்டும் கடைக்கு அழைத்துச் சென்று எனக்கு ஒரு விலையுயர்ந்த நீல நிற  ” டை ” தந்தான். ஊர் செல்லுமுன் என்னுடைய மனைவியுடன் வீட்டுக்கு கட்டாயம் வரச்சொல்லி முகவரி தந்தான்.
          அன்று மாலை கோவிந்த் என்னை ஒரு சீனர் தையல் கடைக்குக் கூட்டிச் சென்றான். அங்கு ” ரெடிமேட் ” முழுக்கால்சட்டைகள் இரண்டு வாங்கித் தந்தான். பன்னீர் ஒரு சட்டை வாங்கி வந்தான்.
          அன்று இரவு உணவு உண்ண ” நியூ டவுன் ” உணவு அங்காடிக்குச் சென்றோம். அங்கு ஏராளமான விதவிதமான உணவுக் கடைகள் இருந்தன. பெரிய இறால்கள் பொறித்து தந்தனர். சீன ” கொய் தியாவ் ” உண்டோம். அங்கர் பீர் பருகினோம். கோவிந்த் பரோட்டாவும் தேநீரும் வாங்கிக்கொண்டான். சிங்கப்பூரில் இருந்துகொண்டு கோவிந்த் இன்னும் சீனர் உணவைச் சுவைக்காதது விநோதம். அதன்  காரணம் அதில் பன்றி இறைச்சி உள்ளது என்பதால்தான். பீர் அருந்துவது கெட்ட பழக்கம் என்றும் கருதினான். அதுபோன்றுதான் பெண்களுடன் பழகுவதையும் அவன் தவிர்த்தான்.எனக்குத் தெரிந்து அவனுக்கு பெண் தோழி இருப்பது தெரியாது. அப்படியே இருந்தாலும் அதை  வெளியில் சொல்லாத சுபாவம் கொண்டவன். நான் அப்படியில்லை. எல்லாவற்றையும் எதையும் மறைக்கமால் நண்பர்களிடம் சொல்லிவிடுவேன். பன்னீர் எதையும் யோசித்தபின்பு சொல்லும்  இயல்பு கொண்டவன். ஜெயப்பிரகாசம் என்னிடம் மட்டும் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளுவான்.அன்று இரவு நண்பர்கள் இருவரும் எனக்கு பிரியாவிடை விருந்து தந்தனர்.
          லாபீஸ் திரும்பிய நான் பிரயாண ஏற்பாடுகளைக் கவனித்தேன். அவளுடன்  இப்போது தாராளமாக பேசமுடிந்தது. அவளுக்கு வேண்டிய துணிமணிகள், இதர சாமான்கள் கொண்ட ஒரு பெட்டி தயார் ஆனது. நான் என்னுடைய பெட்டியையும் தயார் செய்தேன்.
பயணத்தின் முதல் நாளே நாங்கள் இருவரும் அக்காளுடன் வாடகை ஊர்தி மூலம் சிங்கப்பூருக்குப் புறப்பட்டோம். ” ஆயர் ஈத்தாமில் ” வேறொரு வாடகை  ஊர்தி மாறினோம். நேராக ” மார்கிரட் ட்ரைவ் ” சென்றோம். அங்கு சார்லஸ் வீட்டைக் கண்டுபிடித்தோம். சாலமோன் தாத்தாவுக்கு எங்களைக் கண்டத்தில் மகிழ்ச்சி. அவர் சார்லசின் தந்தை. தெம்மூர் மோசஸ் சித்தப்பாவின் தந்தை ஞானஅதிசயத்தின் இளைய சகோதரர். உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவர். சார்லசின் அம்மா, மனைவி, தங்கை, தம்பி ஆகியோர் எங்களுடன் அன்பாகப் பேசினார்கள்.. திருமணமானபின்பும்  சார்லஸ் தனிக்குடித்தனம் செல்லாமல் பெற்றோருடன் வாழ்வது சிறப்பாகும். பெற்றோரை நன்றாகக் கவனித்துக்கொண்டான். சார்லஸ் மிகவும் நல்ல சுபாவம் கொண்டவன். என் மீது அவனுக்கு நல்ல மரியாதை இருந்தது.
          அன்று மாலையில் கடைசியாக ஒருமுறை கோவிந்த் வீடு சென்றேன். பன்னீரும் வந்திருந்தான். மீண்டும் சீனர் உணவகத்தில் வெகு நேரம் இரவைக் கழித்தோம். இரவு கோவிந்த் வீட்டிலேயே கழித்தேன்.
          காலையில் சார்லஸ் வீடு திரும்பினேன். துறைமுகம் செல்ல தயார் ஆனோம்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationசெவ்வாய்க் கோளில் உயிரின மூலவிப் பூர்வத் தோற்ற இருப்பைக் கரிக்கலவை இரசாயன மூலகக் கண்டுபிடிப்பு ஆதாரம் அளிக்கிறது.
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *