தொடுவானம் 208. நான் செயலர்.

This entry is part 12 of 20 in the series 11 பெப்ருவரி 2018

டாக்டர் ஜி. ஜான்சன்

208. நான் செயலர்.

காலையில் மூர்த்தி அமைதியாகக் காணப்பட்டார். இரவு நடந்தது அவருக்கு நாணத்தை உண்டுபண்ணியிருக்கலாம்.வார்டு ரவுண்ட்ஸ் போது வழக்கமான பாணியில் நோயாளியிடம் நன்றாகத்தான் பேசினார். அவர் பெண்கள் மருத்துவ வார்டைக் கவனித்துக்கொண்டாலும் காலையில் நாங்கள் இருவரும் சேர்ந்தே ரவுண்ட்ஸ் செல்வோம். இரவு வேலையின்போது அவரோ அல்லது நானோ அனைத்து மருத்துவ நோயாளிகளையும் தெரிந்துவைத்திருப்பது நல்லது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. மற்ற நேரங்களில் அவரவர் வார்டில் வேலை செய்வோம்.
ரவுண்ட்ஸ் முடித்து வெளி நோயாளிகளைப் பார்க்க அறை எண் பனிரெண்டுக்குச் சென்றோம். அங்கு பல நோயாளிகள் காத்திருந்தனர். அவர்களில் ஆண்களும் பெண்களும் அடங்கினர்.சில தாய்மார்கள் கைக் குழந்தைகளுடன் காத்திருந்தனர்.அங்கு வருபவர்களை நாங்கள் ஆண்கள் பெண்கள் என்று பிரித்துப் பார்ப்பதில்லை. பணியாள் மாணிக்கம் ஒவ்வொருவராக உள்ளே அனுப்புவார். யாரிடம் அவரின் அட்டை உள்ளதோ அந்த நோயாளியை நாங்கள் பார்ப்போம்..சிலர் மூர்த்தி அல்லது என்னைப் பார்க்க விருப்பம் தெரிவித்தால் அப்படியே செய்வோம்..அதுபோன்று பலர் அவரையும் என்னையும் தேடி வருவார்கள்கள். முன்பு வார்டில் சிகிச்சை பெற்றவர்கள் அதே டாக்டரைக் காண வருவார்கள். அதுபோன்று எனக்கு நிறைய பேர்கள் இருந்தார்கள். அவர்களிலில் சிலர் நண்பர்களும் ஆனார்கள்.
மதிய ஒய்வு வரை நோயாளிகள் தொடர்ந்து வந்ததால் மூர்த்தியிடம் அது பற்றி பேசவில்லை. அன்று மாலை பேசிக்கொள்ள முடிவு செய்தென்.
மாலையும் வந்தது. வெளிநோயாளிகளைப் பார்த்துவிட்டோம். நாங்கள் இருவர் மட்டும் தனியாக அறையில் இருந்தோம். மாணிக்கம் விடை பெற்றார்.
” மூர்த்தி. உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டும். ” நான் பேச்சைத் துவங்கினேன்.
” தெரியும்.. நீங்கள் காலையிலிருந்து காத்திருந்தது….”
” நேற்று இரவு நடந்தது உங்களுக்கு நினைவு உள்ளதா? ‘
” ஆமாம். வெரி சாரி. கொஞ்சம் ஓவர் டோஸ். அவளவுதான். காலையில் சரியாகிவிட்டது. அதற்குள் ரோகினி பயந்துவிடடாள். உங்களை அவசரப்பட்டு அழைத்துவிட்டாள். அதற்காகவும் சாரி. ”
” உங்களுக்கு ஓவர் டோஸ்தான். ஆனால் அவரை நீங்கள் காயப்படுத்துவிட்டீர்களே? ”
” அது பற்றி எனக்குத் தெரியாது. ”
” அப்போது உங்களுக்கு நினைவு இல்லை. அதனால்தான் அப்படி.”
” காயத்தை நீங்கள் பார்த்தீரா? “”
” இல்லை. அவர் சொன்னார்….”
அவர் கொஞ்ச நேரம் மெளனமானார்.
” உங்களுக்கு நான் அதிகம் சொல்லவேண்டியதில்லை மூர்த்தி.நீங்கள் இப்படியே தொடர்ந்தால் விபரீதம் ஆகலாம். இதை உடன் நிறுத்திக்கொள்வதே நல்லது. இதை நான் வேறு யாரிடமும் சொல்ல மாட்டேன். ”
” உண்மைதான். நானும் முயற்சிதான் செய்கிறேன். உங்களுக்கு தெரியாதது அல்ல. இதற்கு அடிமையாகிவிட்டால் விடுபடுவது சிரமம். ”
” எப்படியாவது முயன்று பாருங்கள். இது என்னுடைய வேண்டுகோள். தயவு செய்து இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.அதுவே உங்கள் இருவருக்கும் நல்லது. ” நான் மன்றாடினேன்.
” நிறுத்தலாம். ஆனால் அதன் வித்ட்ராவல் சிம்டம்ஸ் அதிகம் இருக்கும். அதையும் சமாளிக்கவேண்டும். ”
” அதை நாம் எதிர்கொண்டு சமாளிப்போம். முயன்று பாருங்கள் மூர்த்தி. ”
அவர் சரி என்று சொன்னபடி இருக்கையை விட்டு எழுந்தார்.பேசிக்கொண்டே வெளியில் வந்தோம். அவர் வீடு நோக்கி நடந்தார். நான் பேசிகொண்டே அவருடன் சென்றேன்.
வீடடை அடைந்ததும், ” வாங்க உள்ளே. ” என்றார். வீட்டில் ரோகினி இல்லை. அறைக்குள் சென்று அந்த பொட்டலத்தைக் கொண்டு வந்தார்.அதில் சிகரெட் தூள் மாதிரி கஞ்சா இருந்தது.
சந்தோஷத்துடன் ஒரு சிகரெட் எடுத்து அதிலுள்ள புகையிலைத் தூளை தட்டி வெளியில் எடுத்துவிட்டு அதனுள் கஞ்சா பொடியை நிரப்பினார். அதுபோன்று இரண்டு கஞ்சா சிகரெட் தயாரித்தார். அவற்றில் ஒன்றை என்னிடம் தந்தார். நான் வாங்க மறுத்தேன்.
” சும்மா ட்ராய் பண்ணுங்கள்.ஒண்ணும் ஆகாது. இந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம் இல்லையா? ”
என்றார்.
நான் வேண்டா வெறுப்புடன் அதை வாங்கிக்கொண்டேன். அதை அவர் பற்றவைத்தார்.
” சும்மா இழுங்கள் . ” அவர் கற்றுத்தந்தார். நான் அந்த வெண் புகையை உள்ளே இழுத்தேன். முதலில் ஒன்றும் தெரியவில்லை.சற்று நேரத்தில் மிதப்பது போன்ற ஓர் உணர்வு உண்டாக்கியது! நான் பயந்துபோய் அதை அணைத்துவிட்டேன் அவரோ முழுக்க இழுத்து புகையை விட்டுக்கொண்டிருந்தார்.
” இதுதான் கஞ்சா அனுபவம். இந்த மயக்கம் தனி சுகமானது. அதனால்தான் இதிலிருந்து விடுபடுவது மிகவும் சிரமம் ” என்று விளக்கம் தந்தார்.
” இதை திடீரென்று விடுவது சிரமம்தான். கொஞ்சம் கொஞ்சமாக இதன் அளவைக் குறைத்து விட்டுவிட முயற்சி செய்யுங்கள். ”
நான் மீண்டும் வற்புறுத்தினேன்.
” ஆமாம். இனிமேல் முயன்று பார்க்கிறேன், ” உறுதியுடன்தான் சொல்வது போன்றிருந்தது.
அப்போது ரோகினி வேலை முடிந்து வந்தார். நான் வந்திருப்பது கண்டு அவரின் முகம் மலர்ந்தது.
” வாங்க. ‘ என்று வரவேற்றார். எங்கள் எதிரே கஞ்சா பொட்டலம் இருப்பதைக் கண்டு முகம் சுளித்தார்.
” இதை மூர்த்தி எனக்கு டெமோன்ஸ்ட்ரேட் செய்து காண்பித்தார். ” நான் சமாளித்தேன்.
” இவருக்கு இது என்ன என்று தெரிய வேண்டும் அல்லவா? அதனால். இவர் இதை நிருத்திவிடும்படி வற்புறுத்துகிறார். நானும் இதோடு நிறுத்திவிட முயல்கிறேன். என்ன சரிதானே? ” ரோகினியைப் பார்த்து கேட்டார்.
” நிறுத்திவிட்டால் நல்லதுதான். எல்லா பிரச்னையும் திறந்துவிடும். ” என்றவாறே சமையல் அறைக்குள் புகுந்தார்.
மூர்த்தி அதைப் புகைத்து முடித்துவிட்டு பொட்டலத்தை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றார்,
ரோகினி எங்கள் இருவருக்கும் காப்பி கொண்டுவந்தார். நாங்கள் பேசிக்கொண்டே அதை அருந்தினோம். அவர் தனக்கு எப்படி அந்த கஞ்சா பழக்கம் உண்டானது என்பதை என்னிடம் விவரித்தார். அவர் மதுரையில் இருந்தபோது அந்த பழக்கம் உண்டானதாம். மதுரையில்தான் அது கிடைக்குமாம்.
நான் விடைபெற்றேன். அவர் என்னை சமாதானப்படுத்த அவ்வாறு கூறுகிறார் என்பது எனக்குத் தெரியும். அதை விடுவது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும் திட மனதும் வைராக்கியமும் இருந்தால் நிச்சயம் விட்டு விடலாம். காரணம் அவர் காலையில் சுறுசுறுப்புடன்தான் வேலைக்கு வருகிறார். அதுவே நல்ல அறிகுறிதான்.
போகும் வழியில்தான் பால்ராஜின் வீடு உள்ளது. அவரை அழைத்தேன். இருவரும் பேசிக்கொண்டே கிறிஸ்டோபர் வீடு சென்றோம். அது சிஸ்டர் பாலின் வீட்டருகே இருந்தது. அங்கிருந்து பேசியபடியே சமாதானபுரம் தாண்டி காட்டு மேட்டுக்குச் சென்றோம்.அங்குள்ள சாம்பல் நிற பாறைகள் மீது அமர்ந்து பேசினோம்.
” டாக்டர். நான் நிறைய ஊழியர்களிடம் பேசிப்பார்த்தேன். மனமகிழ் மன்றத் தேர்தலை ரத்து செய்தது அநியாயம் என்றுதான் பலரும் கருதுகின்றனர். மீண்டும் தேர்தல் வைத்தால் அவர்கள் எல்லாம் உங்களுக்குத்தான் வாக்களிப்பதாகக் கூறுகிறார்கள். ” கிறிஸ்டோபர் ஆரம்பித்தார்.
” ஆமாம் டாக்டர். எனக்கும் அப்படியே தெரியுது.” பால்ராஜ் ஆமோதித்தார்.
” தேர்தல் தேதியை அவர் அறிவிக்கட்டும். இந்த முறை வெளிப்படையாகவே வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரிப்போம். எப்படியும் முதலில் மனமகிழ் மன்றத்தை நாம் கைப்பற்றவேண்டும். ” நான் அவர்களை ஊக்கமூட்டினேன். அப்போது அவர்கள் இருவரும் எனக்கு இரு கரங்களாகச் செயல்படுவது எனக்குத் தெரிந்தது.
அன்று நடந்த தேர்தலில் எனக்கு வாக்களிக்காதவர்களின் பட்டியலைத் தயாரித்தோம். அவர்களையெல்லாம் நான் தனித்தகனியாகப் பார்த்துப் பேசுவது என்றும் முடிவெடுத்தோம். வெற்றி நிச்சயம் என்ற நிலையில் அன்று திரும்பினோம். மேடான அந்த காட்டுப் பகுதி எங்களுக்கு ரகசிய சந்திப்பு இடமாகவே பயன்பட்டது. அந்த இடத்தில் ஏதோ ஒரு சக்தி உள்ளதுபோன்றும் என்னுடைய ஆழ் மனதில் தோன்றியது!
தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஃப்ரடரிக் ஜான் மூன்று மாதங்கள் கழித்து தேர்தல் தேதியை அறிவித்தார். தேர்தலை நடத்தாவிடில் அவருக்கு எதிர்ப்பு வளர்ந்து வரும் என்று யாராவது அவரிடம் சொல்லியிருக்கலாம்.
நாங்கள் திட்டமிட்டபடியே வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தோம்.
தேர்தல் நாளன்று என்னுடைய ஆதரவாளர்கள் ஆர்வத்துடன் அரங்கில் கூடினர். எனக்கு ரகசியமாக ஆதரவு தர முன்வந்தவர்களும் ஏதும் அறியாதவர்கள்போல் வந்து அமர்ந்திருந்தனர். முன்புபோல் ரகசிய வாக்கெடுப்புதான் நடந்தது. முடிவு அறிவிக்கப்பட்டது. சென்ற முறையைவிட நான் இன்னும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுவிட்டுட்டேன்! நான் மனமகிழ் மன்றத்தின் செயலராகிவிட்டேன்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationசின்னச் சிட்டே !படித்தோம் சொல்கின்றோம் குரலின் வலிமையை பேசும் மற்றும் ஒரு குரல் அ.முத்துக்கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் ஃபிடல் காஸ்ரோவின் மறுபக்கம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *