டிரைவர் மகன்

This entry is part 12 of 15 in the series 27 மே 2018

 

ன்று தீர்ப்பு நாள்.

உயர் நீதிமன்ற வளாகம்.

நடிகர் ஆஸீஸ் குமார் வீட்டில்  ஒரு விநியோகஸ்தர் கொலை செய்யப் பட்ட வழக்கின் தீர்ப்பு. மீடியா மற்றும் பொது மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பார்வையாளர்கள் வரிசையில் தனது பள்ளிக்கூட நண்பன் சுப்ரமணியின் பக்கத்தில் பாலு உட்கார்ந்திருந்தான். நடு ஹாலில் வக்கீல்கள் கருப்பு அங்கிகளுடன் உட்கார்ந்திருந்தார்கள். இளம் வக்கீல் சுந்தரம் தனது அம்மா பாக்யலட்சுமி பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். பாக்யலட்சுமி சீனியர் கிரிமினல் வக்கீல். கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள சுப்ரமணியின் அப்பா கந்தசாமிக்காக வாதாடிக் கொண்டிருப்பவர்.

இரு தரப்பு வாதங்கள் எல்லாம் முடிந்து விட்டது.  தீர்ப்பு மட்டும் தான் பாக்கி. பாலுவுக்கு நம்பிக்கை இருந்தது. தாங்கள் கொடுத்த ஆதாரங்கள் மீதும் பாக்யலட்சுமியின் வாதத் திறமையின் மீதும்.

அந்த நம்பிக்கை பொய் ஆகவில்லை.

நீதிபதி வந்து தனது ஆசனத்தில் உட்கார்ந்து, குற்றம் சாட்டப்பட்ட கந்தசாமியை நிரபராதி என்று விடுதலை செய்தார்.

மூன்று மாதத்திற்கு முன்பு இதே யர் நீதி மன்ற வளாகம்.

கைவிலங்கோடு குற்றவாளி ஒருத்தனை இரண்டு போலீஸ்காரர்கள் அழைத்துப் போக, அவர்களுக்கு பின்னால் கண்களில் நீர் ததும்ப ஒரு இளைஞன்.

அந்த இளைஞனை பாலு எங்கோ பார்த்திருக்கிறான். நினைவுக்கு கொண்டு வர முயன்றான். முடியவில்லை. அதற்குள் மக்கள் கூட்டத்தில் அந்தக் காட்சி மறைந்து விட்டது.

யாராக இருக்கும்..

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தன்னால் அவர்களுக்கு ஏதாவது உதவ முடியுமா..

அன்று இரவு பாலுவுக்கு உறக்கம் வரவில்லை..

பாலுவுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் எச். ஆரில் உதவி மேனேஜர் வேலை. சமீபத்தில் தான் கல்யாணம் நடந்தது. புது மனைவியுடன் குடித்தனம் போக வீடு பார்த்தாயிற்று. இது வரை தங்கியிருந்த மான்ஸன் ரூமை காலி செய்து கொண்டு கிளம்ப வேண்டும். ரூமைக் காலி செய்யும் போது தான் பாலுவுக்கு அந்த போட்டோ கிடைத்தது.

ஊட்டிக்கு டூர் போன போது எடுத்தது.  ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். அந்த டூருக்கு சுப்ரமணியால் பணம் கொடுக்க முடியவில்லை. வகுப்பில் முதல் மாணவனான சுப்ரமணியை விட்டு விட்டுப் போக கிளாஸ் டீச்சருக்கு மனமில்லை. கிளாஸ் டீச்சர் தன் கையில் இருந்து பணம் போட்டு சுப்ரமணியைக் கூட்டிக் கொண்டு வந்தார்.

அந்த போட்டோவைப் பார்த்தவுடன் பாலுவுக்கு புரிந்து விட்டது,  அன்று கோர்ட்டில் பார்த்த அந்த இளைஞன் சுப்ரமணி தான் என்று.

அப்படி என்றால் கைவிலங்கோடு போலீஸால் அழைத்துப் போகப் பட்ட அந்த நபர் யார்… கண்ணீரோடு அந்த நபருக்கு பின்னால் சென்று கொண்டிருந்த சுப்ரமணிக்கும், அந்த நபருக்கும் என்ன சம்மந்தம்..

என்ன நடந்து இருக்கும்..

மீண்டும் சுப்ரமணியைப் பார்க்க முடியுமா..

அவனுக்கு ஏதாவது உதவ முடியுமா..

மறுபடியும் ஹைகோர்ட்க்கு போனால் அவனைப் பார்க்கமுடியுமா..

சுப்ரமணியை அவனுடைய அப்பா  சென்னைக்கு கூட்டிக் கொண்டு போய் அங்கே படிக்க வைக்க முடிவு செய்து  இருப்பதாக வகுப்பில் எல்லோரும் பேசிக் கொண்ட போது பாலுவுக்கு வருத்தமாக இருந்தது. முக்கியமாக பேச்சுப் போட்டிக்கு தனக்கு இனிமேல் யார் எழுதி தரப் போகிறார்கள்…

சுப்ரமணி படிப்பில் படுசுட்டி. வகுப்பில் முதல் மார்க்.

அவனுடைய அப்பா கந்தசாமி சென்னையில் ஒரு சினிமா நடிகருக்கு கார் டிரைவராம். சம்பளப் பணத்தை குடித்தே அழித்துவிடுவாராம். கிராமத்தில் இருக்கும் மனைவி குழந்தைகளுக்கு பணம் அனுப்புவது கிடையாதாம். சுப்ரமணியின் அம்மா கூலி வேலைக்கு போய் சுப்ரமணியையும் அவனுடைய இரண்டு தங்கைகளையும் காப்பாற்றி வருகிறாளாம்.  சுப்ரமணியை படிக்க வைக்க அவனுடைய அம்மா ரொம்ப சிரமப் படுவதாகச் சொல்லுவார்கள்.

“ ஏண்டா.. அம்மா தங்கச்சிங்க எல்லாம் சென்னைக்கு கூட வர்ராங்களா.. ஸ்கூல்ல சீட் கெடச்சிடிச்சா.. எங்க தங்கப் போறீங்க.. உங்க அப்பா வீடு பாத்திட்டாரா…”

“ இல்லைடா.. அம்மாவும் தங்கச்சிகளும் இங்க தான் இருப்பாங்களாம்.. என்ன மட்டும் தான் அப்பா கூட்டிக்கிட்டு போறாரு..”

பாலு கேட்ட கேள்விகளுக்கு, முக்கியமாக சென்னை ஸ்கூல்ல சீட் கெடைச்சிடிச்சா என்ற கேள்வியை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சென்னையில் நடிகர் ஆஸீஸ் குமார் வீட்டில் அவர்கள் தங்குவதற்கு கார் ஷெட்டுக்கு பக்கத்தில் ஒரு ரூம் கொடுத்து இருந்தார்கள்.

வந்ததிலிருந்து பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்ப்பது பற்றி அப்பா எதுவும் பேசவில்லை. இன்னொரு விஷயம் உறுத்தலாக இருந்தது சுப்ரமணிக்கு. அது சமையல்காரனைப் பற்றியது. தினமும் காலையில் ஐந்து மணிக்கே அவன் சுப்ரமணியை வந்து எழுப்பி,

“ இன்னுமா தூக்கம்.. எந்திரிச்சு வேலையைப் பாரு.” என்று அதட்டுவான்.

இவன் யார் என்னை மிரட்ட..  அந்த சமையல்காரனை அப்பா ஏன் கண்டிக்காமல் இருக்கிறார்.

மூன்று நாட்கள் இப்படி ஓடின..

நான்காவது நாள்.. சமையல்காரன் வந்து சுப்ரமணியை எழுப்பும்போது, பக்கத்தில் படுத்திருந்த அவன் அப்பா கந்தசாமி, தனது தூக்கமும், போதையும் கலைந்து விட்ட கோபத்தில்  சுப்ரமணியை பளார் என்று கன்னத்தில் அறைந்து,

“ சீக்கிரம் எந்திரிச்சி போடா..” என்று கத்தி விட்டு தனது தூக்கத்தை தொடர்ந்தார்.

சுப்பிரமணி  வந்து சேர்ந்து ஒரு மாதம் ஆகி விட்டது.

நாள் முழுவதும் எக்கச்சக்கமாய் வேலை. தினமும் இரவு பதினொரு மணி ஆகிவிடும் படுக்க.

கையில் மளிகை சாமான் லிஸ்ட்டோடு, சுப்பிரமணி வீட்டை விட்டு வெளியே வரும் போது, அங்கு நின்று கொண்டு இருந்த ஒரு பையன் கேட்டான்.

“ உனக்கு எவ்வளவு சம்பளம் பேசி இருக்காங்க.. நான் சம்பளத்தை கொஞ்சம் கூட்டிக் கொடுங்கன்னு கேட்டேன்.. அதுக்கு உங்க அப்பா சொன்னாராம்.. நான் என் பையனக் ஊர்ல இருந்துகூட்டிக் கிட்டு வர்ரேன். அந்த சம்பளத்தை என் கிட்டே கொடுத்திடுங்கன்னு…”

ன்று கம்பெனியின் வழக்கு விஷயமாக பாலு மறுபடியும் ஹைகோர்ட்டுக்கு  வரவேண்டி இருந்தது. வழக்கு இது தான். ஒரு ஸ்டிரைக்கின் போது, யூனியன் ஆள் ஒருத்தன், எச் ஆர் மேனேஜரை அடித்து விட்டான். நிர்வாகம் அந்த யூனியன் ஆளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க அதை ஒரு கிரிமினல் வழக்காக நடத்திக் கொண்டிருக்கிறது.

அந்த வழக்குக்காக சீனியர் பெண் வக்கீல் பாக்யலட்சுமியை அமர்த்தி இருந்தார்கள். அட்வகேட் சேம்பரில் தன்னை வந்து பார்க்கும் படி அந்த பெண் வக்கீல் சொல்லி இருந்தார். போய் பார்க்கும் போது அவர் இல்லை.

விசாரிக்கும் போது, அந்த பெண் வக்கீலின் மகன் என்று ஒருவர்  வந்து தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். பெயர் சுந்தரம் என்று சொன்ன அந்த இளம் வக்கீல்.

“ வெளியே போய் பேசலாம்..” என்று குரலைத் தாழ்த்திச் சொன்னார்.

இருவரும் கேண்டீனுக்கு வந்தார்கள்.

“ அட்வகேட் சேம்பர், சீனியர் அட்வகேட்டுக்களுக்கு தான். அம்மா இப்ப டெய்லி இங்க வர்ரதில்லை. தன்னோட கேஸ்களை கொஞ்சம் கொஞ்சமா என்ன பாத்துக்கச் சொல்லிட்டாங்க.. இனிமேல் உங்க கம்பெனி கேஸ்ஸை நான் தான் பாப்பேன்.. பெரிய கேஸ் மட்டும்தான் அம்மா பாப்பாங்க.. ஆனா அம்மாவுக்கான சேம்பர்ல உட்கார்ந்து கேஸ் பத்தி நாம பேச முடியாது.. அதுக்கு தான் உங்கள இங்க கூட்டிக் கிட்டு வந்தேன். உங்க கம்பெனி கேஸ் பத்தின விபரம் எல்லாம் அம்மா என்கிட்டே சொல்லி இருக்காங்க…”

கம்பெனி சம்மந்தப் பட்ட அந்த கேஸைப் பற்றி சுந்தரம் சொல்லி முடித்தவுடன்,  சுப்ரமணியைப் பற்றிச் சொன்னான் பாலு அந்த  வக்கீல் சுந்தரத்திடம்.

பொறுமையாக கேட்டுக் கொண்டார்.

“ போன தடவை இதே ஹைகோர்ட்டுக்கு வரும் போது உங்க பிரண்ட் சுப்ரமணியை பாத்தேன்னு சொலறீங்களே..  எந்த தேதின்னு சொல்ல முடியுமா.. வெப்சைட்ல அந்த தேதியில என்ன என்ன கிரிமினல் கேஸ்ங்க வந்துச்சுன்னு பாக்கலாம்..”

“ போன வாரம் செவ்வாய்க் கிழமை.. அதாவது பதினேழாம் தேதி..”

“ வேற ஏதாவது விபரம் உங்க பிரண்டை பத்தி…”

“ அவனோட அப்பா நடிகர் ஆஸீஸ் குமார் வீட்ல டிரைவரா வேலை பாத்துக் கிட்டு இருந்தாரு..”

“ ஆஸீஸ் குமார் வீட்டிலா. அவர் வீட்ல ஒரு கொலை நடந்துச்சே.. அது சம்மந்தமான கேஸா..”

“ ஐயோ.. கொலையா..” பாலு அதிர்ந்து போனான்.

“  என்ன கேஸ்னு, அம்மாகிட்டே கேட்டுப் பாக்கலாம்…. எல்லா கொலைக் கேஸைப் பத்தியும் அவங்களுக்கு தெரியும்.. இந்த கேஸைப் பத்தியும் அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கணும்.. வீட்டுக்கு போனவுடனே கேட்டுப் பாக்கிறேன்.. விஷயம் தெரிஞ்சவுடனே உங்களுக்கு போன் பண்றேன்..”

இரவு சுந்தரத்திடம் இருந்து போன் வந்தது.

“ அம்மாவுக்கு இந்த கேஸ் பத்தி தெரியுமாம்..  உங்களுக்கு ஒரு குட் நீயூஸ்.. உங்க பிரண்டோட அப்பா கந்தசாமிக்காக  அம்மாவை ஆஜராக சொல்லிக் கேட்டுக்கிட்டேன்.. அம்மா ஒத்துக்கிட்டாங்க..   இது வேற யாரோ செஞ்ச கொலைன்னு அம்மா நம்பறாங்க.. அதனால பீஸ் ஒன்னும் வாங்கிக்காம அம்மா இந்த கேஸை எடுத்து நடத்த ஒத்துக்கிட்டாங்க..”

“ என்னால முடிஞ்ச அளவுக்கு பீஸ் நான் கொடுக்கிறேன்..” என்றான் பாலு.

அதற்கு பதில் எதுவும் சொல்லாமல், சுந்தரம் தொடர்ந்து பேசினார்.

“ முதல்ல அந்த நடிகரோட வீட்டுக்கு போவோம்.. அக்கம்பக்கத்தில விசாரிச்சா விஷயம் தெரிய வரும்.. சாயங்காலம் அஞ்சு மணிக்கு போகலாம்.” என்று சொல்ல, பாலு கம்பெனியில் சொல்லி பர்மிஷன் வாங்கிக் கொண்டு சுந்தரத்தை கூட்டிக் கொண்டு சாலி கிராமம் போய்ச் சேர்ந்தான்.

முதலில் வீட்டைக் கண்டுபிடித்தார்கள். பிறகு பக்கத்தில் இருந்த ஒரு இஸ்திரி கடையில் விசாரித்தார்கள்.

சுப்ரமணியின் அப்பா கந்தசாமி ஜெயிலில் இருப்பதாகவும், சுப்ரமணி சமையல்காரனாக இன்னொரு நடிகர் வீட்டில் இருப்பதாகவும் கூறினார்கள்.

சுப்ரமணியை கண்டுபிடித்த போது, அவன் இருந்த குழப்ப நிலையில் பாலுவை அடையாளம் கண்டுபிடிக்கவே முதலில் சிரமப் பட்டான்.

தன் அப்பாவுக்கும் ஆஸீஸ்குமார் வீட்டில் நடந்த கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் அவருடைய குடிப் பழக்கத்தினால் அவர் சம்மந்தப் படாத இந்த கொலையில் அவரை சிக்க வைத்து விட்டார்கள் என்றும் சுப்ரமணி சொன்னான்.

“ கொலை நடந்த அந்த சமயத்தில அப்பா என்னோட தான் இருந்தாரு.. எனக்கு டிரைவிங் லைசென்ஸ் வாங்கித் தர ஆர் டி ஓ ஆபீஸ்ல என் கூட இருந்தாரு. ஆனா அதை எங்களால புரூப் பண்ண முடியல.. போலீஸ் விசாரிக்க வந்தப்ப அப்பா போதையில இருந்திருக்காரு.. அதனால பயத்தில ஏதோ உளறி இருக்காரு.. அதை எல்லோரும் தங்களுக்கு சாதகமா உபயோகிச்சு யாரோ செஞ்ச கொலையை என் அப்பா தலையில போட்டுட்டாங்க.. இதுக்கு போலீசும் உடந்தை..”

சுந்தரம் சொன்னார்.

“ எனக்கு ஒரு ஐடியா வருது.. கொலை நடந்த அந்த சமயத்தில ஆர் டி ஓ ஆபீஸ்ல கந்தசாமி இருந்ததை புரூப் பண்ணிடலாம்.. ஏன்னா  அந்த அபீஸ்ல லஞ்சம் அதிகமா புரளறதினால, சிசிடிவி கேமரா எல்லா எடத்திலேயும் வைச்சிருக்காங்க.. கண்டிப்பா எல்லாம் பதிவு ஆயிருக்கும்..”

சுந்தரத்தின் அந்த பேச்சில் அப்போது பாலுவுக்கு ஏற்பட்ட அந்த நம்பிக்கை பொய் ஆகவில்லை.

 

———————————————————————

Series Navigationஉயர்த்திமருத்துவக் கட்டுரை – தசைப் பிடிப்பு
author

தாரமங்கலம் வளவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *