அன்னா ஹால்
அமெரிக்க பெரும்பான்மை கலாச்சாரத்தில் பழங்குடி அமெரிக்கர்கள் பற்றிய உரையாடலே இல்லாமல் இருக்கிறது. பள்ளிக்கூட பாடங்களில் பழங்குடி அமெரிக்கர்களின் கலாச்சாரம் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. அமெரிக்க அரசியலிலோ அது பேசப்படுவதே இல்லை. சமீபத்தில் நான் அறிய நேர்ந்த ஒரு விஷயம், எவ்வாறு கிறிஸ்துவ நிறுவன பள்ளிகள் பழங்குடி அமெரிக்கர்களின் கலாச்சாரங்களின் மீது ஒரு அழிவை திட்டமிட்டு உருவாக்கின என்பதை பற்றியது.
ஒரு காலத்தில் ஐரோப்பிய கலாச்சார விழுமியங்களே உயர்ந்தவை என்றும், எல்லோரும் ஒரே மாதிரி இருப்பது நல்ல விஷயம் என்றும் கருதப்பட்டது. இவ்வாறு ”நல்ல நோக்கங்கள்” கொண்டு உருவான கிறிஸ்துவ போர்டிங் பள்ளிகள் (உணவு இருப்பிடம் தந்து பெற்றோர்களிடமிடமிருந்து பிரித்து விடுதியில் ப் மாணவர்களை வைத்துகொண்டு கல்வி கற்பிக்கும் முறை) வெகு விரைவிலேயே கட்டாய மதமாற்றம், கட்டாய கலாச்சார அழிப்பு என்று சீரழிந்தன.
பழங்குடி அமெரிக்க சிறுவர் சிறுமிகள் அவர்களின் குடும்பங்களிலிருந்து கட்டாயமாக பிரித்தெடுக்கப்பட்டு இப்படிப்பட்ட கிறிஸ்துவ போர்டிங் பள்ளிகளில் கல்வி கற்க வைப்பது 1800களில் துவங்கி 20 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது. இந்த போர்டிங் பள்ளிகள் குடும்பங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தன. இந்த குழந்தைகள் தங்கள் குடும்பங்களிடம் சென்று தங்கள் கலாச்சாரத்தை அறிந்துகொள்ளக்கூடாது என்பதற்காகவே இப்படிப்பட்ட தொலைவில் பள்ளிகள் அமைந்தன.
ஆரம்பத்தில் இந்தப் பாடசாலைகள் இந்த பழங்குடியினர் வாழுமிடங்களுக்கு அருகே (ரிசர்வேசன் என்று அழைக்கப்படும் பகுதிகள்) அமைந்திருந்தன. இந்த குழந்தைகள் வார இறுதியில் தங்கள் குடும்பங்களுக்கு செல்லவும் வழி இருந்தது. ஆனால் தங்கள் குடும்பங்களுக்கு சென்று அங்கு அவர்களது கலாச்சாரங்களை பற்றி அறிந்துகொள்கிறார்கள் என்று அறியப்பட்டதும், ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கும் போர்டிங்க் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டனர். இது அந்த குழந்தைகள் தங்கள் பாரம்பரியத்தையும் குடும்ப உறவுகளையும் புதுப்பித்துகொள்ளக்கூடாது என்ற காரணங்களுக்காகவே இது செய்யப்பட்டது.
போர்ட் ஆஃப் இந்தியன் கமிசனர்ஸ் என்னும் அமைப்பு அமெரிக்க காங்கிரஸால் 1872இல் உருவாக்கப்பட்டது. இது முழுக்க கிறிஸ்துவ மிஷனரிகளால் நிரப்பப்பட்டு பழங்குடி அமெரிக்கர்கள் 73 கிறிஸ்துவ அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டனர். இந்த அமைப்பின் ஒரே நோக்கம் இவர்களை கிறிஸ்துவர்களாக ஆக்குவதே (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இதனை 1947 ஏறத்தாழ பழங்குடியினராகவும் கிறிஸ்துவர்களல்லாதவர்களாகவும் இருந்த வடகிழக்கு இந்திய மாநில மக்களை ஒப்பிடலாம். இன்று வடகிழக்கு இந்திய மாநிலங்கள், நாகாலாந்து, மிஸோரம், மேகாலயா போன்ற மாநிலங்கள் கிறிஸ்துவ மாநிலங்களாக 60 வருட காங்கிரஸ் ஆட்சியால் ஆக்கப்பட்டுள்ளன) இந்த கிறிஸ்துவ அமைப்புக்களில் மெத்தடிஸ்ட், பிரைஸ்பைட்டரியன், எபிஸ்கோப்பலியன், கத்தோலிக், பாப்டிஸ்ட், யுனிட்டேரியன், லுத்தரன் சர்சுக்கள் அடக்கம். ஒவ்வொரு கிறிஸ்துவ பிரிவும் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் தன் பிரிவு மதத்தை பரப்ப அனுமதியும் அதன் பள்ளிக்கூடங்களில் கலாச்சார அழிவை செய்ய அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
பூர்வீக குடிகள் தங்கள் அடையாளத்தை நினைத்து வெட்கப்படும்படி பயிற்றுவிக்கப்பட்டனர். (மொ.கு: கிறிஸ்துவ நாகாலாந்து மக்கள் கிறிஸ்துவம் வருவதற்கு முன்னால் தாங்கள் காட்டுமிராண்டிகளாக இருந்தோம் என்று பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்) பள்ளிக்கு வந்ததும், தங்களது இந்திய அடையாளத்தை (அமெரிக்க பழங்குடிகளை இந்தியர்கள் என்று அமெரிக்கர்கள் இன்னமும் அழைத்துகொண்டுள்ளனர்) நிராகரிக்கும் படி பழக்கப்படுத்தப்பட்டனர். அவர்களது முடி வெட்டப்பட்டது. அவர்களது உடைகள் மாற்றப்பட்டன. தங்களது பாரம்பரிய மொழியை பேசக்கூடாது என்று பயிற்றுவிக்கப்பட்டனர் (இன்றைய நாகாலாந்து மாநிலத்தின் அரசுமொழி ஆங்கிலம். மேகாலயா மாநிலத்தின் அரசு மொழியும் ஆங்கிலமே. சொந்த மொழி பேசுவது அங்கே கீழானதாக பார்க்கப்படுகிறது. பெரியாரும் இதே போல தமிழர்கள் தங்கள் வீடுகளில் வேலைக்காரியிடமும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள் என்று கூறியதை குறிப்பிடலாம்) தங்களது மதத்தை இழிவாக பேசும்படி பயிற்றுவிக்கப்பட்டனர். “உனக்குள் இருக்கும் இந்தியனை சாகவிடு” என்று ரெவரண்ட் ஏ லிப்பின்காட் அவர்கள் கார்லிஸ்லே பள்ளிக்கூட இறுதி உரையின் போது கூறினார்.
பழங்குடி இன பள்ளிச்சிறுவர்கள், சிறுமிகள், உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் இந்த கிறிஸ்துவ போர்டிங் பாடசாலைகளில் துன்புறுத்தப்பட்டது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவர் சிறுமிகளை அடிப்பதும், விலங்குகளை போட்டு பூட்டி வைப்பதும், அவர்களை இருட்டு அறைகளில் அடைத்து வைப்பதும், சாதாரணமான விஷயங்களாக இருந்தன. பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் அங்கிருந்து ஓடிவிட முயன்றனர்.
கூடவே, வேண்டுமென்றே அதிகப்படியான சிறுவர் சிறுமிகளை, இடப் பற்றாக்குறை உள்ள பள்ளிக்கூடங்களில் வைப்பது சுகாதாரமற்ற வாழ்க்கை நிலைகளுக்கு இட்டுச்சென்றது. போதுமான உணவோ, இடமோ இல்லாததால், சுகாதாரமற்ற சூழ்நிலையும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளும் அதிகரித்தனர். கார்லிஸ்லே இந்தியன் ஸ்கூல் என்னும் பென்ஸில்வேனியா பள்ளிக்கூடத்தில் இறப்பு விகிதம் பென்ஸில்வேனியாவில் மற்ற இடங்களை காட்டிலும் 4 மடங்கு அதிகமாக இருந்தது. இறந்த குழந்தைகள் அந்த பள்ளிக்கூடத்திலேயே ஒரே குழியில் பெயர் சொல்லப்படாத கல்லறைகளில் புதைக்கப்பட்டனர் என்று அந்த பள்ளியில் படித்த மற்ற சிறார்கள் கூறினார்கள். கார்லிஸ்லே இந்தியன் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் பள்ளியின் ஸ்தாபகரான கேப்டன் ரிச்சர்ட் ப்ராட் சொன்ன “இந்தியனைக் கொல், மனிதனைக் காப்பாற்று” என்ற கோஷம் உண்மையாகவே ஆகியிருந்தது.
அமெரிக்க பழங்குடியினரின் துயரமான கலாச்சார அழிவின் விளைவு இன்றும் பழங்குடி அமெரிக்கர்களின் வாழ்க்கையில் நீங்காத புண்ணாக புரையோடியிருக்கிறது. தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்பி வந்த பின்னாலும், இந்த பள்ளிக்கூடங்களின் முன்னாள் மாணவர்களால் தங்களது பாரம்பரிய கலாச்சாரத்துடன் ஒன்றிணைய முடியவில்லை. தங்களை தனிமைப்பட்டவர்களாக இவர்கள் உணர்ந்தார்கள். வாழ்நாள் முழுவதும் வெறுக்க சொல்லிக்கொடுக்கப்பட்ட அமெரிக்க பழங்குடி கலாச்சாரத்துடன் இவர்களால் சேரமுடியவில்லை. தங்களது வரலாறும் தெரியாமல், தங்களது மொழியும் தெரியாமல், தங்களது பாரம்பரியமும் தெரியாமல், இவர்கள் இரண்டுபக்கமும் இணைய முடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் அனுபவித்த வன்முறையின் காரணமாகவும், தங்களது பாரம்பரியத்தின் இழப்பாலும் மன அழுத்தத்துக்கு உந்தப்பட்ட இவர்கள் மது, போதை மருந்துகள், தற்கொலைகள் என்று தங்களது வலியை தீர்த்துகொள்ள பல வழிகளை நாடியிருக்கிறார்கள். மற்றவர்களோ பாவ்லோ ப்ரேயரின் (Paulo Freire) கருத்தை நடத்துபவர்களாக ஆகி, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டவர்களே அடக்குமுறையாளர்களாக ஆகின்ற கருத்தின்படி, தங்களுக்கு நடந்த வன்முறையை உள்வாங்கிகொண்டு, தங்களது குடும்பத்தினர் மீதும், தங்களது குலத்தின் மீதும் வன்முறையை பிரயோகிப்பவர்களாக ஆகியிருக்கிறார்கள். இந்த போர்டிங் பள்ளிக்கூடங்களால் பழங்குடி சமுதாயத்தின் மீது நடத்தப்பட்டுள்ள வன்முறையையும் அழிவையும் குறைத்து மதிப்பிட முடியாது. (மொ.கு: மிக அதிகமாக போதை மருந்து பழக்கம் வடகிழக்கு இந்தியாவில் இருக்கிறது என்பதும் அது மிகப்பெரிய பிரச்னையாக ஆகியிருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. இணைப்பு 1)
100 வருடங்களுக்கு பின்னாலும் ஏன் இந்த பள்ளிக்கூட விஷயமும் அதன் சமூக பாதிப்பும் முக்கியமானதாக இருக்கிறது? ஏனெனில், அதன் விளைவு இன்னமும் பழங்குடி அமெரிக்க சமூகங்களில் காணக்கிடைக்கிறது. இந்த பள்ளிக்கூடங்களில் வன்முறைக்குள்ளாக்கப்பட்டவர்கள் இன்று அந்த பழங்குடிகளின் மூத்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களது குழந்தைகளுக்கும் தங்கள் பேரக்குழந்தைகளுக்கும் இதே வன்முறையை எடுத்து செல்கிறார்கள். இதன் எதிரொலி இன்னமும் பழங்குடி சமூகங்களில் கேட்கிறது.
அடையாள அழிப்பு, பழங்குடிகளின் பரந்துபட்ட கலாச்சார அழிப்பு ஆகியவற்றை சரி செய்யவேண்டுமென்றால்,இந்த பிரசனையில் சம்பந்தப்பட்ட அனைவரின் ஒத்துழைப்பும், தேவை. இதில் பாதிக்கப்பட்டவர்களும், பாதித்தவர்களும் சேரவேண்டும். பழங்குடிகளும், அமெரிக்காவுக்கு புதியதாக வந்த ஐரோப்பியர்களும் இணைந்து பேசவேண்டும். அப்போது மட்டுமே தன் தவறுகளுக்கு வருந்துவதும், அதற்கு பரிகாரம் செய்வதும், மன்னிப்பதும், நிவாரணமும் ஆரம்பிக்கும்.
அமெரிக்க பழங்குடி சகோதர சகோதரிகளுக்கு எந்த முறையில் சர்ச்சுகள் நிவாரணம் அளிக்க முடியும்? தலைமுறை தலைமுறையாக உருவாக்கிய சீரழிவுக்கும் துயரத்துக்கும் எந்த முறையில் பரிகாரம் செய்யமுடியும்?
முதலாவதாக, நாங்கள் இவ்வாறு தவறு செய்துவிட்டோம் என்று இந்த சர்ச்சுகள் பகிரங்கமாக அறிவித்து தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். உண்மையை சொல்ல வேண்டும். மனமார்ந்த மன்னிப்பு கோரலே இதனை ஆரம்பிக்கும் நல்ல இடம். இதுவரை அமெரிக்க பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட தீமைகளை சரி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். கிறிஸ்துவ அமைப்புக்களே இப்படிப்பட்ட போர்டிங் பள்ளிகளை உருவாக்கின. தங்கள் கிறிஸ்துவ பிரிவு இதில் எந்த பங்கு வகித்தது என்று இந்த அமைப்புகளே ஆராய்ந்து உண்மையை கூற வேண்டும். இதன் மூலமே இதில் பாதிக்கப்பட்டவர்களும் பாதித்தவர்களும் நிவாரண நடவடிக்கைகளை அடையாளம் காணமுடியும்.
அமெரிக்கர்களின் வரலாற்றில் இது ஒரு பகுதி. இது அமெரிக்க தேசியத்தின் உள்ளே இருக்கும் புண். இதை பார்க்க கண்களும், கேட்க காதுகளையும், சரி செய்ய கைகளையும், உடைந்த இடங்களை சரி செய்ய இதயங்களையும் நமது ஆன்மா தரட்டும்.
—
- வன்மம்
- துணைவியின் இறுதிப் பயணம் – 7
- அம்ஷன் குமார் “ஆவணப்பட இயக்கம்” நூல் வெளியீடு
- சபரிமலை – தொடரும் போராட்டங்களும் வாதங்களும்
- பழங்குடி அமெரிக்கர்களின் மீது கலாச்சார வன்முறையை நடத்திய கிறிஸ்துவப் பள்ளிகள் – மறுவிசாரணை தேவை
- 3. இடைச்சுரப் பத்து
- செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – பகுதி 1
- சூரியப்ரபை சந்திரப்ரபை