பங்குச்சந்தை வர்த்தகத்தில் “Insider Trading” என்கிறதொரு சமாச்சாரம் இருக்கிறது. ஒரு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவன் தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்களை வைத்துக் கொண்டு திருட்டுத்தனமாக நிறையப்பணம் சம்பாதிப்பது. இது மிகப்பெரிய குற்றம் மட்டுமில்லை, மிகக் கேவலமான நம்பிக்கைத் துரோகமும் கூட.
உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்.
நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தில், மைக்ரோசாஃட் என்று வைத்துக் கொள்வோம், பெரிய அதிகாரி. உங்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கண்டுபிடித்த புதியதொரு மென்பொருளைக் குறித்து தெரியும். அது விற்பனைக்கு வந்தால் மைக்ரோசாஃப்டின் வருமானம் பல மடங்கு கூடும் என்பதுவும், அப்படி வருமானம் கூடினால் பங்குச்சந்தையில் மைக்ரோசாஃப்டின் விலையும் கணிசமாக உயர்ந்துவிடும். இந்த புதிய மென்பொருளைக் குறித்த அறிவிப்பை மைக்ரோசாஃப்ட் சீ.இ.ஒ. இன்ன தேதியில், இன்ன நேரத்தில் அறிவிக்கப்போகிறார் என்கிற முக்கிய தகவலும் ஒரு அதிகாரியான உங்களுக்கு நன்றாகத் தெரியும் என வைத்துக் கொள்வோம்.
இந்தச் சூழ்நிலையில் உங்கள் கடமை ரகசியம் காப்பது. அதனை எந்த விதத்திலும் உபயோகித்து தனிப்பட்ட முறையில் பணம் சம்பாதிக்காமலிருப்பது. அதற்கு மாறாக நீங்கள் செயல்படுவது மைக்ரோசாஃப்டிற்கு மட்டுமல்லாமல், அதன் பங்குகளை வாங்கிய பல பொதுமக்களுக்கும் சேர்த்து நம்பிக்கை துரோகம் செய்கிறீர்கள் என்று பொருள். மிக, மிகக் கேவலமானதொரு செயல் அது.
ராஜ் ராஜரத்தினம் என்கிறவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ராஜரத்தினம் இலங்கைத் தமிழர். அமெரிக்காவின் நியூயார்க்கில் Galleon Group என்கிறதொரு பங்கு வணிக நிறுவனத்தை நடத்தினவர். 2008-ஆம் வருடத்திற்குப் பிறகு அமெரிக்கப் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்த காலத்திலும் அவரது நிறுவனம் பெரும் லாபம் ஈட்டிக் கொண்டிருந்தது. இந்த மாதிரியான விஷயங்கள் அமெரிக்க அதிகாரிகளின் கண்களில் படத் தவறுவதில்லை என்பதால் அவரைக் கண்காணிக்க ஆரம்பித்தார்கள்.
ராஜரத்தினம் பெரும் அமெரிக்க நிறுவனங்களில் வேலை செய்கிற முக்கியஸ்தர்களில் ஒருவரைத் தனது கைக்குள் போட்டுக் கொள்வார். அதாகப்பட்டது அவர்கள் கொடுக்கிற தகவல்களால் வரும் லாபத்தில் ஒரு பங்கு கொடுப்பது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு அமெரிக்க நிறுவனமும் தனது லாப, நஷ்ட கணக்குகளை வெளியிடும். அப்படி வெளியிடுவது பெரும்பாலும் மாலை நான்குமணிக்கு அமெரிக்கப் பங்குச் சந்தை மூடிய பிறகுதான் நடக்கும். ஆனால் அதனை வெளியிட வேண்டிய நிறுவன அதிகாரிகளுக்கு மூன்றே முக்கால் மணியளவில் தங்கள் நிறுவனம் லாபம் சம்பாதித்ததா அல்லது நஷ்டமடைந்ததா என்பது தெரியவரும்.
உடனடியாக அந்த ஆள் ராஜரத்தினத்திற்கு சிக்னல் அனுப்புவார். நேரடியாக யாருக்கும் ஃபோன் செய்வது இயலாது என்றாலும் வேறு ஏதோவொரு வகையில் ராஜரத்தினத்திற்கு சிக்னல் வந்துவிடும். அந்தத் தகவலின் அடிப்படையில் பங்குச் சந்தை மூடுவதற்கு சில நிமிடங்களே இருக்கிற சமயத்தில் ராஜரத்தினம் தகவலுக்கு ஏற்றார்ப் போல பங்குகளை வாங்கவோ அல்லது விற்கவோ (shorting) செய்வார். இப்படிச் செய்ததில் பணமழை கொட்டி ராஜரத்தினத்தின் நிறுவனம் கொள்ளை லாபம் ஈட்டியது.
உலகின் மிகப்பெரும் நிறுவனஙளில் ஒன்றான IBM நிறுவனத்திலும் ராஜரத்தினத்தின் ஆள் இருந்தார். ரஜத் பாட்டிய என்கிற அந்த ஆசாமி ராஜரத்தினத்துடன் ஒன்றாகக் கல்லூரியில் படித்தவர். இவர்கள் இருவருக்கும் இருக்கிற தொடர்பையும் அதற்கு முந்தைய காலத்தில் ஐ.பி.எம். பங்குகளில் ராஜரத்தினம் சம்பாதித்த கோடிகளையும் கண்டுபிடித்து அவர்களிருவரையும் கண்காணிக்க ஆரம்பித்தார்கள். எண்ணியது போலவே ரஜத் பாட்டியா முக்கியத் தகவலை ராஜரத்தினத்திற்கு பங்குச் சந்தை மூட சில நிமிடங்களுக்கு முன்பு அனுப்பி வைக்க, ராஜரத்தினம் கோடிகளைக் குவிக்க, இரண்டு பேருமே சிக்கிக் கொண்டார்கள்.
ராஜரத்தினம் இன்னமும் சிறையில் இருக்கிறார். அப்ரூவராக மாறிய ரஜத் பாட்டியா இரண்டு வருட சிறைவாசத்திற்குப் பிறகு “தன்னம்பிக்கை” குறித்த புத்தகங்களை எழுதி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அமெரிக்கச் சட்டங்கள் இதுபோன்ற குற்றங்களை மிக எளிதாக மன்னிப்பதில்லை. ஏனென்றால் இது ஒரு மாபெரும் நம்பிக்கைத் துரோகம். தன்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட ஒரு பதவியை துஷ்பிரயோகம் செய்து சுய லாபம் பார்ப்பது மன்னிக்கவே முடியாத குற்றம்.
இதே அதிகார துஷ்பிரயோகத்தை, நம்பிக்கை துரோகத்தை, நேர்மையற்ற முறையில் பணம் சம்பாதிக்கும் கீழ்த்தர அநியாயத்தை இந்தியாவின் முன்னாள் நிதி மந்திரியான ப.சிதம்பரமும் அவரது மகனான கார்த்தி சிதம்பரமும் செய்து பல்லாயிரம் கோடிகளைக் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்று பலரும் பேசி வந்திருக்கிறார்கள். இதனைக் குறித்து இந்திய மீடியாக்கள் பேசுவதில்லை. அப்படிப் பேசினாலும் பெரும்பாலான இந்தியர்களுக்கு இது புரியப்போவதில்லை. இந்தியச் சட்டங்களோ அல்லது நீதிமன்றங்களோ இவர்களை ஒன்றும் செய்ய இயலாது. அது உண்மையெனில் பல்லாயிரம் கோடி ஏழை இந்தியர்களின் வயிற்றில் அடித்தவர்கள் இந்த இருவரும் என்பதினை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.
ஆனால், தெய்வம் நின்று கொல்லும். அதனைப் பூரணமாக நான் நம்புகிறேன்.
- இந்தியர்களின் முன்னேற்றம்?
- என்னுடன் கொண்டாடுவாயா?
- 20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு
- உயிர்த்தெழ வில்லை !
- முதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பை வானியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்
- Insider trading – ப சிதம்பரம்
- வாட்ஸப் தத்துவங்கள்
- தமிழ் நுட்பம் – 15 – செயற்கை அறிவும் மனித வளங்களும்