பஞ்சவடியும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும்

This entry is part 9 of 9 in the series 6 அக்டோபர் 2019

முனைவர் மு.பழனியப்பன்

இணைப் பேராசிரியர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

திருவாடானை

            இயற்கையும் மனிதனும் இரண்டறக் கலந்து வாழ்ந்த வாழ்க்கைக் காலம் சிறந்த வாழ்க்கைக் காலம் ஆகும். இயற்கையோடு இணைந்து, தானும் இயற்கையை வளர்த்து ஒரு காலத்தில் மனிதன் வாழ்ந்து வந்தான். இக்காலத்தில் இயற்கையை எதிர்த்து இயற்கையைச் சுரண்டி அதன் வளத்தைக் கெடுத்து விடும் சூழல்களே உள்ளன. பழைய இலக்கியங்களில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற விழிப்புணர்வு இல்லாத நிலையிலும் சுற்றுச் சூழலைப் பாடுவது என்பது ஒரு மரபாக இருந்துள்ளது. காடு, மலை வருணனை, இரு சுடர் தோற்றம் என்ற படைப்பு உத்திகள் காப்பியத்திற்கான உத்திகளாகக் கொள்ளப்பெற்றிருந்தன. இதன் காரணமாக இயற்கையை அதன் இனிமையைப் புலவர்கள் பாடினர்.

            கம்பராமாயணத்தில் இயற்கையைப் பாடும் வாய்ப்பு கம்பருக்குப் பல இடங்களில் கிடைக்கின்றது. இராமன் காடேகும் நிலையிலும், சீதையைப் பிரிந்து தேடும் நிலையிலும், இராவணனுடன் போர் புரியச் சென்ற நிலையிலும் பல இடங்களில் இயற்கையைப் போற்றியே கம்பர் தம் கம்பராமாயணக் காப்பியத்தை நடத்திச் சென்றுள்ளார்.

பஞ்சவடி

            இராமனும் சீதையும் பதினான்கு ஆண்டுகள் தாங்கரும் தவம் மேற்கொண்டு, புண்ணிய துறைகள் ஆடி வந்திடக் கூறிய அன்னை கைகேயின் வாக்கை ஏற்றுக் காடேகுகின்றனர். அவர்களுடன் இளையவனான இலக்குவனும் வருகிறான். இவர்கள் காட்டின் எல்லையில் முனிவர்களைக் கண்டு, குகனின் தோழமையைப் பெற்று வரும் நிலையில் பஞ்சவடியில் தங்குகின்றனர். அது தங்குவதற்கான சிறந்த இடம் என்று இராமனுக்குச் சுட்டப்பெறுகிறது.

            தண்டகாரணியத்தில் பத்து ஆண்டுகள் கழித்த இராமன், சீதை, இலக்குவன் அகத்தியரைச் சந்தித்து அவரின்வழி பஞ்சவடி என்னும் குன்றினைப் பற்றி  அறிகின்றனர். அதுவே தங்க இனிய இடம் என்ற நிலையில் அதனைப் பற்றிய செய்திகளை அகத்தியர் இயற்கை நலம் கொஞ்ச வழங்குகிறார்.

‘ஓங்கும் மரன் ஓங்கிஇ மலை ஓங்கிஇ மணல் ஓங்கிஇ

பூங் குலை குலாவு குளிர் சோலை புடை விம்மிஇ

தூங்கு திரை ஆறு தவழ் சூழலது ஓர் குன்றின்

பாங்கர் உளதால்இ உறையுள் பஞ்சவடி – மஞ்ச!

என்ற நிலையில் பஞ்சவடி இராமனுக்கும் அவன் உடன் வந்தோருக்கும் அறிமுகம் செய்யப்படுகிறது. மரங்கள் ஓங்கி நிற்கும் இடமாகவும், உயர்ந்த மலையை உடைய இடமாகவும், விளையாடுவதற்கு ஏற்ற நல்ல மணற்பாங்கான இடமாகவும், பூக்கள் பூக்கின்ற குளிர் சோலைகளை உடைய இடமாகவும், குன்றின் மேல் உள்ள இடம் பஞ்சவடி என்று அறிமுகம் இவ்விடம் அறிமுகம் செய்யப்படுகிறது.

            மேலும் அவ்விடத்தில் இயற்கை பல காய்களையும் கனிகளையும் தந்து நிற்பதால் தவ உறைவிடத்திற்குச் சிறப்பான இடம் என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

            வாழை இளம் கனிகள் தொங்கும் வாழைமரங்களும், செந்நெல் விளையும் வயல்களும், பூக்களில் தேன் வழியும் நிலைப்பாடும், தெய்வத்தன்மை உள்ள பொன்னி நதி போன்று கோதாவரி நதியும் உடைய இடம் பஞ்சவடியாகும். இவைமட்டுமில்லாமல் சீதையுடன் விளையாட அன்னங்கள் பயிலும் இடமாகவும் அது விளங்குகின்றது என்று கம்பர் பாடுகின்றார்.

‘கன்னி இள வாழை கனி ஈவ; கதிர் வாலின்

செந்நெல் உள; தேன் ஒழுகு போதும் உள; தெய்வப்

பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள; போதாஇ

அன்னம் உளஇ பொன் இவளடு அன்பின் விளையாட.

இத்தகைய இடத்தில் நீங்கள் மகிழ்வுடன் தங்கலாம் என்று அகத்தியர் இராம குழுவினருக்கு அடையாளம் காட்டுகின்றார். இவ்விருபாடல்கள் வழியாக தங்குவதற்கு இனிமையான இடம் பஞ்சவடி என்பதும் அங்கு உணவிற்குத் தட்டுப்பாடு வராத நிலையில் தேனும். செந்நெல்லும், நீரும், வாடைக்கனிகளும் நிறைந்திருக்கும் என்பதும் கம்பரால் காட்டப்படும் வளங்கள் ஆகும்.

            இவ்வாறு அகத்தியர் சொல்லால் வளம் பெற்ற இடமாக பஞ்சவடி விளங்குகின்றது. இவ்விடம் பற்றி இராமன் குறிப்பிடும்போது அவனின் சொற்களில் சூழல் என்ற சொல் இடம் பெறுவது இக்காலத்தின் சுற்றுச் சூழல் நிலைப்பாட்டிற்குப் பெரிதும் பொருந்துவதாக உள்ளது.

இறைவ! எண்ணிஇ அகத்தியன் ஈந்துளது

அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரைத்

துறையுள் உண்டு ஒரு சூழல்; அச் சூழல் புக்கு

உறைதும்’ என்றனன் -உள்ளத்து உறைகுவான்.

                                               (சடாயு காண் படலம், பாடல்எண் 39)

என்ற நிலையில் இராமன் தான் தங்க உள்ள சூழல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது என்று குறிப்பிடுகிறான். சூழலியல் நிலையில் இப்பாடல் சிறப்பிற்குரிய பாடலாகும்.

கோதாவரி ஆறு

            பஞ்சவடி கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கோதாவரி ஆற்றின் வளமையைக் கம்பர் பலபடப் பேசுகின்றார்.

            சான்றோர்கள் படைத்த கவிதைகள் சொல்நலம், பொருள்நலம், இசைநலம் கொண்டு உயிர்களுக்கு நன்மை செய்கின்றதோ அதுபோன்று கோதாவரி ஆறு நன்மை செய்கிறது என்று கம்பர் கோதாவரியின் நீரோட்டச் சிறப்பினைக் கவிதையோட்டச் சிறப்பினுடன் ஒப்பு வைத்துப் பாடுகின்றார். அவர் ஒப்பு வைத்த நிலையைப் பின்வருமாறு பொருத்திக்காட்ட இயலும்.

கவிதை

            புவியில் தோன்றும் கவிகள் அணி பெற்றுத் திகழ்கின்றன. ஆன்ற பொருள் தரக்கூடியது அகத்துறைகளைப் பாடக் கூடியது. ஐந்திணை நெறிகளைப் பாடவல்லது. அழகுற விளங்குவது. இனிய ஒழுக்கத்தைப் பாடுவது.

கோதாவரி

            கோதவாரி ஆறு புவிக்கு ஒரு அணிகலம் போன்றது. அது பல பொருள்களைத் தன்னுள் கொண்டுள்ளது. பல படித்துறைகள் கொண்டது. குறிஞ்சி முதலான ஐந்து நிலங்களைத் தழுவி ஓடுவது. இனிய நீரோட்டம் உடையது.

            இவ்வாறு இரட்டுற மொழியும் நிலையில் கவிதையையும் பாராட்டி, நீரையும் பாராட்டும் சிறப்பில் கம்பர் கவிதை யாத்துள்ளார். அக்கவிதை பின்வருமாறு.

புவியினுக்கு அணி ஆய் ஆன்ற பொருள் தந்துஇ புலத்திற்று ஆகி

அவி அகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி

சவி உறத் தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவி சான்றோர்

கவி என கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.  (சூர்ப்பனகைப் படலம், பாடல்எண். 1)

            கோதவரி ஆறு, ஒரு பெண்ணாக நின்று தன் அலைக்கரங்களால் மலர்களை வீசி இராம, சீதை, இலக்கவரை வரவேற்கிறதாம். கோதாவரியில் தாமரை மலர்களும் குவளை மலர்களும் பூத்துக்குலுங்குகின்றன. இன்னும் பல நீர்ப்பூக்கள் மலர்ந்துள்ளன. தாமரை ஆகிய முகத்தில் கருங்குவளை போன்ற கண்களைக் கொண்டு நீர்கொடி போன்று கோதாவரி ஆறு விளங்குகின்றது. அது தன் அலைக்கரங்களால் இராம குழுவினரை வருக வருக என்று சொல்லி மலர் தூவி வரவேற்கும் நிலையில் உள்ளதாகக் கம்பர் உருவகம் செய்கிறார்.

வண்டு உறை கமலச் செவ்வி வாள் முகம் பொலிய வாசம்

உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின்

தெண் திரைக் கரத்தின் வாரிஇ திரு மலர் தூவி செல்வர்க்

கண்டு அடி பணிவது என்னஇ பொலிந்தது கடவுள் யாறு.  (சூர்ப்பனகைப் படலம் 2)

அதே நேரத்தில் கோதாவரி ஆறு தன் துன்பத்தையும் வெளிப்படுத்துகிறதாம். குவளை மலர்களில் நீர்த்துளிகள் காணப்படுகின்றன. அவை கோதாவரியின் கண்ணீர்த்துளிகளாக விளங்குகின்றனவாம். இராம குழுவினரின் நாடுவிட்டு காடு வந்த நிலையை எண்ணி, ஏங்கி ஏங்கி அழுவதாகவும் கோதவரியின் ஓட்டம் இருந்தது என்கிறார் கம்பர்.

எழுவுறு காதலரின் இரைத்து இரைத்து ஏங்கி ஏங்கி

பழுவ நாள் குவளைச் செவ்விக் கண் பனி பரந்து சோர

வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி

அழுவதும் ஒத்ததால் அவ் அலங்கு நீர் ஆறு மன்னோ.  (சூர்ப்பனகைப் படலம், 3)

இவ்வாறு பாடல்கள் தோறும் இயற்கை நலம் கொழிக்கும் வகையில் பஞ்சவடியின் இருப்பினைக் காட்டுகிறார் கம்பர்.

            இதன்பின் இராமனும், சீதையும் பஞ்சவடியின் இயற்கை அழகைக் கண்டு மகிழ்கின்றனர். அவர்களின் கண்கள் வழி கண்ட இயற்கை நலத்தைக் கம்பர் நான்கு பாடல்களில் காட்டியுள்ளார்.

            கோதாவரி ஆற்றில் சக்கரவாளப் பறவைகள், தாமரை மலர்கள் போன்றன நிறைந்திருந்தன. தாமரை மலர்களில் சக்கரவாளப் பறவைகள் படுத்துக்கிடந்தன. இந்தக் காட்சியைக் கண்டு சீதையை நோக்கினான் இராமன். அவளின் மார்பழகினைக் கண்டு அவன் மகிழ்ந்தான். சீதையோ அவனின் நீலமணி போன்ற குன்று போன்ற தோள்களைக் கண்டாள்.

நாளம் கொள் நளினப் பள்ளி நயனங்கள் அமைய நேமி

வாளங்கள் உறைவ கண்டு மங்கைதன் கொங்கை நோக்கும்

நீளம் கொள் சிலையோன்; மற்றை நேரிழை நெடிய நம்பி

தோளின்கண் நயனம் வைத்தாள் சுடர் மணித் தடங்கள் கண்டாள்.

(சூர்ப்பனகைப் படலம் 4)

என்று கம்பரின் கவிதை இராமனின் சீதையின் பார்வைகளைப் பதிவுசெய்கின்றது.

ஓதிமம் ஒதுங்க கண்ட உத்தமன் உழையள் ஆகும்

சீதைதன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான்;

மாதுஅவள்தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும்

போதகம் நடப்ப நோக்கிஇ புதியது ஓர் முறுவல் பூத்தாள். (சூர்ப்பனகைப் படலம. 5)

 கோதாவரி ஆற்றில் அன்னங்கள் மெல்ல நீந்தியும் நடந்தும் விளையாடின. அவற்றின் நடையையும் சீதையின் நடையையும் ஒன்று வைத்துப் பார்த்து இராமன் மகிழ்ந்தான். இதன் விளைவாய் அவனின் வாயினின்று புதிய சிரிப்பு தோன்றியது.

            அவளும் கோதாவரி ஆற்றில் நீர் உண்டு மீண்டு செல்லும் யானையின் நோக்கி அதனை இராமனின் நடையுடன் ஒப்பு வைத்து புதிய முறுவல் பூத்தாள்.

            மேலும் இராமன் கோதாவரி ஆற்றில் கொடிகள் மடங்கி ஆடிச் செல்வதைக்கண்டான். அவற்றின் காட்சி சீதையின் இடையின் தோற்றத்தைப் பார்க்கச் செய்தது. சீதை நீரில் மலர்ந்த தாமரையைக் கண்டாள். அக்காடசியில் இராமனின் தாமரை வடிவினைக் கண்டாள்.

வில் இயல் தடக் கை வீரன் வீங்கு நீர் ஆற்றின் பாங்கர்

வல்லிகள் நுடங்கக் கண்டான் மங்கைதன் மருங்குல் நோக்க

எல்லிஅம் குவளைக் கானத்து இடை இடை மலர்ந்து நின்ற

அல்லிஅம் கமலம் கண்டாள் அண்ணல்தன் வடிவம் கண்டாள். (சூர்ப்பனகைப் படலம்.6)

என்ற நிலையில் இராமனும் சீதையும் இயற்கையுடன் பிறரது அழகைக் கண்டு மகிழ்ந்தனர். இதனால் இயற்கையும் சிறந்தது. அவர்களின் நினைவெழுச்சியும் சிறந்தது.

            இதன்பிறகு இலக்குவன் இயற்கைப் பொருள்களைக் கொண்டு கட்டிய பர்ணசாலைக்குச்சென்றனர். அவன் அமைத்த பூஞ்சாலையில் மகிழ்ச்சியுடன் இருக்க விழைந்தனர் என்ற நிலையில்  கம்பர் பஞ்சவடியின் நலத்தை எடுத்துரைக்கிறார்.

அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர்

பனி தரு தெய்வப் ‘பஞ்சவடி’ எனும் பருவச் சோலைத்

தனி இடம் அதனை நண்ணி தம்பியால் சமைக்கப்பட்ட

இனிய பூஞ் சாலை எய்தி இருந்தனன் இராமன். இப்பால் (சூர்ப்பனகைப் படலம் 7)

            இப்பாடலில் இனிய பூஞ்சோலையை இலக்குவன் புனைந்த நிலையைக் கம்பர் பாடுகின்றார். இயற்கை அன்னை தந்த இயற்கைச் செல்வங்களை வைத்து இராம சீதையர் தங்கும் இடம் மிகக்குளிர்ச்சியுடன் கட்டப்பெற்றுள்ளது.

            மனிதன் இருக்கும் இடம் இயற்கை சார்ந்து இருக்கும் நிலையில் அது இனிமை பயப்பதாகவும்,அமைதி தருவதாகவும் உள்ளது என்பதற்குப் பஞ்சவடி ஒரு எடுத்துக்காட்டு. ஒரு குறியீடு.
M.Palaniappan
mail address: muppalam2006@gmail.com
blog address; manidal.blogspot.com
face book:https://www.facebook.com/palaniappan.mutrhappan
address: 106, M,M,street, A1 sethu flats, Karaikudi 630001 Phone Number 9442913985
whatsapp : 9442913985

Series Navigationசனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *