முனைவா் த. அமுதா
கௌரவ விரிவுரையாளா்
தமிழ்த்துறை
முத்துரங்கம் அரசினா் கலைக்கல்லூரி(தன்னாட்சி)
வேலூர் – 2
புலனம் 9677380122
damudha1976@gmail.com
முன்னுரை
தமிழல் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம். இது சாதராண வணிகக் குடிமக்களை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட காவியம் ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மைக் காப்பியமாகும். கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் தோன்றியவையாகும். இந்நூலில் அரசியலில் அறம், தமிழரின் வாழ்க்கை முறை, மக்களின் அறவொழக்கங்கள், வரலாற்றுச் செய்திகள் ஆகியவை காணப்படுகின்றன. “தமிழன்னையின் காலணியாம் செம்பொற்சிலம்பு“ என்று போற்றப்படும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், மூவேந்தா்களின் வீரம், கொடை, அறம் போன்றவற்றையும் எடுத்துரைத்துள்ளார். இந்நூலின் வரலாற்றுச் செய்திகளைான புலிக்கொடியோன்களின் வாழ்வியலை அறிவதே இக்கட்டுரையின் நோக்கம்.
புலிக்கொடியோன்கள்
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் மங்கள வாழ்த்துப் பதடலில் புலிக்கொடியோன்களின் ஆட்சி முறையனைக் குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரம் முழுவதிலும் கரிகாலன். தூற்கெயிலெறிந்து செம்பியன், சிபிச்சக்கரவா்த்தி, மனுநீதி மன்னன், முககுந்தன் என்ற புலிக்கொடியோன்களைப் பற்றிய வரலாற்றுறுச் குறிப்புகள் இளங்கோவடிகள் எடுத்துரைத்துள்ளார்.
கரிகாலப் பெருவளத்தான்
பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய சங்க இலக்கியங்களில் கரிகால் வளவனனின் கொடை, வீரம் அறச்செயல்கள் போன்றவற்றை விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் கரிகால் வளவனின் வரலாறு காணப்படுகிறது. கரிகால வளவனின் மற்றொரு பெயா் திருமாவளவன் இளங்கோவடிகள் இந்திர விழா ஊா் காதையில் திருமாவளவன் வெற்றியைக் குறிப்பிட்டுள்ளார்.
இருநில மருங்கிற் பெருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின், திருமா வளவன்
வாளும். குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயா்த்து நண்ணார்ப் பெறுக – இம்
மண்ணக மருங்கின், என் வலிகெழு தோள் எனப்
புண்ணிய திசைமுகம் போகிய அற்றாள் (இந“திரவிழப 89 -94)
என்ற வரிகள் மூலம் தன்னை எதிர்த்துப் போரிட தமிழ்நாட்டில் அரசா்கள் எவரும் இல்லாததால், தன் வலிமைக்கும் வீரத்திற்கும் தகுதியான பகைவனைத் தேடி வடநாட்டிற்குச் சென்றான் என்ற செய்தியினை அறியமுடிகிறது.
அசைவுஇ ஊக்கத்து நடைபிறக்கு ஒழியப்
பகைவிலக் கியது இப்பயங்கெழு மலை என
இமையவர் உறையும் சிமையப் படர்த்தலை ( இந்திர விழா 95 – 97)
இப்பாடல் வரிகளில் கரிகாலன் வடநாட்டு அரசர்களை வென்று மேலும் அவன் செல்லும்போது இடையூராக இருந்த இமயமலையின் மீது சினம் கொண்டு, பின் இம்மலையில் தனது கொடியான புலியின் முத்திரையைப் பொறித்தான் என்ற குறிப்பை அறியமுடிகிறது.
வச்சிர நாட்டு வேந்தன் கரிகாலனுக்கு அடி பணிந்து, முத்துப்பந்துரைக் கப்பமாகக்கொடுத்தான். மகதநாட்டு மன்னன் கரிகாலனஜடம் தோற்று, தனது பட்டி மண்டபத்தைத் திறையாகக் கொடுத்தான். அவந்தி நாட்டரசன் கரிகாலனுடன் போர்செய்யாமல் நட்புக்கொண்டு வாயில் தோரணம் ஒன்றைக் கொடுத்தான். இக்குறிப்புகளை,
மாநீர் வேலி வச்சீர் நல்நாட்டுக்
கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும்
மகதநல் நாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டி மஒ்டபமும்
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்து ஓங்கு மரபிக் தோரண வாயிலும் (இந்திர விழா 99- 104)
என்ற வரிகளின் மூலம் இளங்கோவடிகள் எடுத்துரைத்துள்ளார். மேலும், கரிகாலனைப் பற்றி ஆய்ச்சியர் குரவை காதையில்,
பொன்இமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ஆண்டான்
மன்னன் வளவன் மதில்புகார் வாழ்வேந்தன் ( ஆய்ச்சியர் குரவை 30)
என்ற பாடல் வரிகளின் மூலம் காிகாலன் இமயத்தில் புலி முத்திரையிட்டதைக் குறிக்கிறது.
தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன்
நீர்ப்படைக் காதையிலும் வாழ்த்துக் காதையிலும் தூங்கெயில் எறஜந்து தொடித்தோள் செம்பியன் என்ற சோழ அரசனைப் பற்றிய செய்திகள் காணப்படுகிறது.
வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப
எயில் மூன்று எறித்த இகல்வேல் கொற்றமும் (நீா்ப்படை 164 – 165)
என்ற வரிகளின் மூலம் ஒளிவீசுகின்ற மணிகள் அணிந்த தேவர்கள் வியக்கும்படி, வானத்தில் தொங்கிய மூன்று மதில்களை அழித்துப் பேராற்றலை நிரூபித்தவன் தூங்கெயில் எறித்த தோடித்தோள் செம்பியன் என்ற செய்தியை அறிய முடிகிறது.
வீங்குநீர்வேலி உலகுஆண்ட விண்ணவர்கோன்
ஓங்குஅரணம் காத்த உரவோன் யார்? அம்மானை
ஓங்குஅரணம் காத்த உரவோன், உயர்விசும்பில்
தூங்குஎயில் மூன்று எறித்த சோழன் காண், அம்மானை
( வாழ்த்து – 7)
இப்பாடல் வரியானது, கடலை வேலியாகக் கொண்ட உலகினை ஆட்சி செய்து இந்திரனுடைய கோட்டையைக் காத்த வலியோன்யார்? உயர்ந்த கோட்டையைக் காத்த வலியோன் யாரெனில் உயர்ந்த வானின்கண் தொடங்கிய மூன்று மதில்களை அழித்த சோழனாவான் என்ற செய்தியானது தூங்கெயில் எறித்த தொடித்தோள் செம்பியனையே குறிக்கும் செய்தியாகும்.
முசுகுந்தன்
கடலாடு காதையிலே முசுகுந்தன் என்ற சோழ அரசனின் வரலற்றுக் குறிப்புக் காணப்படுகிறது.
கடுவிசை அவணர் கணம்கொண்டு ஈண்டிக்
கொடுவர் ஊக்கத்துக் கோநகர் காத்த
தொடுகழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகி
……. ……….. ……….. ……….. ………. ………… ……… ……… ………
அமரா பதிகாத்து அமரனிற் பெற்றுத்
தமரில் தந்து. தகைசால் சிறப்பிற்
பொய்வகை இன்றிப் பூமியில் புணர்த்த
ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும் ( கடலோடு 7 – 16)
என்ற வரிகளில் மூலம், இந்திரன் தலைநகரமாகிய அமராவதி நகருக்கு அசுரா்களால் அழிவு வராமல் பாதுகாத்தான் முசுகுந்தன், அப்போது தோற்ற அசுரா்கள் ஒள்றுகூடி முசுகுந்தனுக்கு எதிராக இருள் செய்யும் கணையைத்தும் மாயையால் ஏவினர். அந்த வஞ்சகத்தை ஒழிக்க,பூதம் தோன்றி முசுகுந்தனுக்கு மத்திரத்தை உபதேசித்தது, அம்மந்தரத்தால் அசுரா்களை அழித்து வெற்றிடையந்தான்.நடந்ததை முசுகுந்தன் இந்திரனிடம் சொல்ல, இந்திரன் அப்பூதத்தைக் காவிரிபூம்பட்டினத்தைக் காக்கும்படிக் கட்டளையிட்டு, முசுகுநடதனட செய்த உதவிக்கு ஐவகை மன்றங்கழள அளித்தான் என்ற செய்தியினை அறியமுடிகிறது.
சிபிச்சக்கரவர்த்தியும், மனுநீதி மன்னனும்
சிபி கொடையிலே சிறந்தவன், குறுகுறு என நடக்கும் புறாவினது துன்பத்தைத் தீர்த்தவன், அப்புறாவினைக் கொல்வந்த பருந்துவின் பசித்துன்பம் நீக்க தன் உடம்பின் தசையை அரிந்து கொடுத்த சிபியின் அறச்செயலை,
குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க
அரிந்துஉடம்பு இட்டோன் அறந்தரு கோலும் (நீர்ப்படை 166 -168)
என்ற பாடல் வரிகளில் மூலம அறியமுடிகின்றது. இச்செய்தியை,
…… கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தினேறு குறுத்தொரீஇ
தன்னகம்புக்க குறுநடை புறாவின்
தபுதி யஞ்சிச் சிரைபுக்க
வரையர் ஈகை யுரவோன் மருக (புறநானூறு பாடல் – 43)
என்ற புறநானூற்றுப்பாடல் மூலம் சிபியின் வரலாறடறை அறிய முடிகிறது.
புறவு நிறைபுக்குப் பொன்உலகம் ஏந்த
குறைவுஇல் உடம்புஅரிந்த கொற்றவன்யார்? அம்மானை
குறைவுஇல் உடம்புஅரிந்த கொற்றவன் முன்வந்து
கறவை முன்செய்த காவன்னாண் அம்மானை (வாழ்த்துக்காதை 17 – 20)
இப்பாடல் வரிகளின் மூலம், புறாவின் துயர் நீக்கத் தன் உடம்பில் தசையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவத்தியும் தன் வாயிலின் முன் பசுவுக்கு நீதி வழங்கிய மனுநீதி மன்னனும் ஒருவரே எனக் குறிப்பிடப்படுகிறது.
எள்ளுறு சிறப்பின் இழமயவா் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீா்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுவா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீா் நெஞ்சுகடத்தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் (வழக்குரைக்காதை 50 -54)
இப்பாடலில் கண்ணகி பாண்டியனை அறிமுகப்படுத்தும் போது இகழ்தல் இல்லாத சிறப்பினை உடையவரான இமையவரும் வியப்படையுமாறு புறாவின் துயரினைத் தீா்த்தவன் (சிபிச்சக்கரவா்த்தி), அவனல்லாமலும் கடைவாயில் மணியன் நாவானது அசைய பசுவின் கடைக்கண்களினின்றும் வழிந்த கண்ணீரைக் கண்டு காரணம் அறிந்து தானே தன் பெறுதற்கரிய புதல்வனைத் தோ்ச்சக்கரத்திலிட்டுக் கொன்றவன் (மனுநீதிச்சோழன்) ஆகிய சோழா்களது பெரும்பெயா் பெற்ற புகார் நகரமே என் ஊராகும் என்று சொல“கிறாள். இதிலிருந்து பசுவுக்கு நீதி வழங்கிய சோழன் வேறு, புறாவின் துயரை நீக்கிய சிபிச்சக்கரவா்த்தி வேறு என்பதை அறியமுடிகிறது. கறவைக்கு முறைசெய்த சோழனையே மனுநீதி மன்னன் என்று அழைக்கப்பகிறது.
முடிவுரை
திருமாவளவன், தூங்கெயில் எறிந்த சோழன் என்ற இரண்டு அரசா்களின் பெயரைச் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் முசுகுந்தன், சிபிச்சக்கரவா்த்தி? மனுநீதி மன்னன் ஆகிய அரசா்களின் பெயா் குறிப்பிடப்படவில்லை. புலிக்கொடி மன்னா்களின் கதைகள் சங்க இலக்கியத்திற்கு அடுத்த சிலப்பதிகாரத்திலே காணப்படுகிறது. மேற்கண்ட புலிக்கொடி மன்னா்கள் கொடை, வீரம், அறம் போன்றவற்றைச் சிலப்பதிகாரம் பல இடங்களில் பாராட்டிப் பேசுவதை அறியமுடிகிறது.
பயன் பட்ட நூல்
புலியூா்க்கேசிகன் (தெளிவுரையுடன்) சிலப்பதிகாரம் )
பாரி நிலையம்
184, பிராட்வே
சென்னை – 108
பதினான்காம் பதிப்பு 1991