காப்பியத் தலைவனான இராமனின் தோள்வலியோடு, அவன் தோளழகையும் ஆங்காங்கே நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறான் கவிஞன்
இருகுன்றம் போன்று உயர்ந்த தோள்
விசுவாமித்திரமுனிவர் தான் இயற்றப் போகும் யாகம் காக்க இராமனைத் தன்னுடன் அனுப்பும்படி தயரதனிடம் விண்ணப்பம் செய்கிறார். முதலில் மன்னன் தயங்கினாலும் குல குரு வசிட்டனின் அறிவுரையின்படி அனுப்ப சம்மதிக்கிறார். அண்ண னைப் பிரியாத இலக்குவனும் உடன் கிளம்புகிறான்
, இரு
குன்றம் போன்று உயர் தோளில், கொற்ற வில்
ஒன்று தாங்கினான்—உலகம் தாங்கினான்
(பாலகாண்டம்) (கையடப் படலம் 20)
ஆடவர் பெண்மையை அவாவும் தோள்
யாகம் காப்பதற்காக இராம இலக்குவர் களைத் தன்னுடன் அழைத்து சென்ற விசுவாமித்திரர் செல்லும் வழி யில் பாலைவனமாக இருந்த ஓர் இடத்தைக் கடக்கும் பொழுது அந்த இடம் பாலைவனமானதற்குத் தாடகை என்ற அரக்கி தான் காரணம் என்று அவளைப் பற்றிய விபரங்களை யெல்லாம் சொல்கிறார். சொல்லும் பொழுதே இராமனின் தோளழகு அவர் கண்களைக் கவர் கிறது.
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!—
”தாடகை” என்பது அச் சழக்கி நாமமே;
(பாலகாண்டம்) (தாடகை வதைப் படலம் 24)
முற்றும் துறந்த முனிவருக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள் என்ன பாடு படுவார்கள்?
மரகதப் பெருங்கல் எனும் இரு புயம் யாகத்திற்கு இடையூறு செய்த சுபாகுவைக் கொன்று மாரீசனை விரட்டிக் கடலில் தள்ளி, யாகம் வெற்றிகரமாக முடிய வழி செய் கிறார்கள் இராம இலக்குவர்கள். அவர்களை அழைத்துக் கொண்டு மிதிலை மன்னன் செய்யும் சுயம் வரத்திற்குச் செல்கிறார் முனிவர். செல்லும் வழியில் கன்னி மாடத்தில் மின்னல் கொடி போல் நின்ற சீதையை, இராமன் நோக்க அவளும் நோக்கினாள். கண்ணோடு கண்ணிணை நோக்க இருவரும் மாறிப்புககு இதயம் எய்து கிறார்கள்.
’அல்லினை வகுத்தது ஓர் அலங்கற் காடு’;
’வல் எழு; அல்லவேல், மரகதப் பெருங்
கல் எனும், ‘இரு புயம்’; கமலம் கண்’ எனும்
வில்லொடும் இழிந்தது ஓர் மேகம் என்னுமால்.
(பாலகாண்டம்) (மிதிலைக் காட்சிப் படலம்)
சுந்தர மணிவரைத் தோள்
இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,
சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்;
சுந்தர மணி வரைத் தோளுமே, அல;
முந்தி என் உயிரை, அம்முறுவல் உண்டதே!
(பாலகாண்டம்) (மிதிலைக் காட்சிப் படலம் 57)
இப்படி இராமனின் தோளழகில் ஈடுபட்டுப் பலவாறாகப் புலம்புகிறாள் சீதை.
புய வலி..
மறுநாள் இராம இலக்குவர்களோடு முனிவர் ஜனக மன்னன் வேள்விச் சாலையை அடைகிறார். ஜனக மன்னனுக்கு இராம இலக்குவர்களை அறிமுகம் செய்து வைத்த பின்,
அலை உருவக் கடல் உருவத்து
ஆண்தகை தன் நீண்டு உயர்ந்த
நிலை உருவப் புய வலியை
நீ உருவ நோக்கு ஐயா!
(பால காண்டம்) (குலமுறை கிளத்து படலம் 26)
என்று இராமனின் புயவலிமை பற்றிப் பாராட்டிப் பேசுகிறார்
தூண் உலாவு தோள்
விசுவாமித்திரர் இராமனின் தோள்வலி பற்றி தயரதனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது சீதையும் அவன் தோள்களின் அழகையும் வலிமையையும் பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறாள்
நாண் உலாவு மேருவோடு நாண் உலாவு பாணியும்,
தூண் உலாவு தோளும், வாளியூடு உலாவு தூணியும்,
வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும், மீளவும்
காணல் ஆகும்? ஆகின், ஆவி காணல் ஆகுமேகொலாம்.
(பாலகாண்டம்) (கார்முகப் படலம் 47)
சீதை இங்கே இப்படித் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது இராமன் சிவதனுசை நாண் ஏற்றி முறித்து விடுகிறான். இந்தச் செய்தியை முதலில் சென்று தெரிவிக்க வேண்டும் என்று தோழி நீலமாலை ஓடி வருகிறாள்.
மராமரம் என வலிய தோள்.
மராமரம் இவை என வலிய தோளினான்;
அரா—அணை அமலன்” என்று அயிர்க்கும் ஆற்றலான்
இராமன் என்பது பெயர்; இளைய கோவொடும்,
பராவ அரு முனியொடும், பதி வந்து எய்தினான்;
(பாலகாண்டம்) (கார்முகப் படலம் 59)
வில் முறித்தவன் முனியோடு வந்தவன்என்றகிறாள்
தவழ் தடங் கிரிகள்
இராமன் சிவதனுசை முறித்து சீதையைத் திரு மணம் செய்யவிருப்பதைத் தூதர்கள் வந்து சொல்ல, தயரதன் மிதி லைக்குக் கிளம்புகிறான். தயரதனை இராமன் எதிர்கொண்டு வர வேற்று வணங்குகிறான்.. வணங்கிய ராமனை வாரி யெடுத்து அணைத்துக் கொள்கிறான்.
அனிகம் வந்து அடி தொழ, கடிது சென்று, அரசர்கோன்
இனிய பைங்கழல் பணிந்து எழுதலும், தழுவினான்;
மனு எனும் தகையன் மார்பிடை மறைந்தன, மலைத்
தனி நெடுஞ் சிலை இறத் தவழ் தடங் கிரிகளே.
(பாலகாண்டம்) (எதிர்கொள் படலம் 23)
கொற்ற நீள் புயம்
தந்தையை வணங்கிய பின்
கற்றை வார் சடையினான் கைக்கொளும் தனு இற,
கொற்ற நீள் புயம் நிமிர்த்தருளும் அக் குரிசில், பின்
பெற்ற தாயரையும்
[பாலகாண்டம்] [எதிர்கொள் படலம் 25] 1053
தொழுகிறான்
வரைத்தடந்தோள்
சீதையை மணக்கப் போகும் இராமனை ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள். புது மாப்பிள்ளையைக் காண மிதிலை நகர்ப் பெண்கள் ஓடி வருகிறார்கள்.
விரைக்கருங் குழலிக்காக வில் இற நிமிர்ந்து வீங்கும்
வரைத் தடந் தோளும் காண, மறுகினில் வீழும் மாதர்,
இரைத்து வந்து, அமிழ்தின் மொய்க்கும் ஈ இனம்
என்னலானார்
(பாலகாண்டம்) (உலாவியற் படலம் 5)
தோள் கண்டார் தோளே கண்டார்
மானினம் போலவும் மயிலினம் போலவும் வந்த மிதிலைப் பெண்கள் இராமனைப் பார்க்கிறார்கள்.
ஆனால் அவர்களில் ஒருவராவது இராமனை முழுவதுமாகப் பார்க்கவில்லையாம் ஏன்?
தோள் கண்டார், தோளே கண்டார்
தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார், தாளே கண்டார்;
தக்கை கண்டாரும் அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்?—
(பாலகாண்டம்) (உலாவியற் படலம் 19)
இராமனின் இடது தோளைப் பார்த்தவர்கள் அதிலிருந்து கண் களை எடுக்கமுடியாததால் வலது தோளைக் கூடப் பார்க்க வில்லையாம்! இப்படியிருக்க அவனுடைய முழு அழகையும் யார் தான் பார்த்திருக்க முடியும் என்று அதிசயிக்கிறான்
கவிஞன். தோள் கண்டார் தோளே————–கண்டார் என்கிறான்.
சுந்தரத் தோள்
மணமகனான இராமனுக்கு அலங்காரம் செய்கிறார்கள் குன்றென உயர்ந்த தோள்களுக்குத் தோள்வளைகள் அணிவிக்கிறார்கள்
சுந்ரத் தோள் அணி வலயம், தொல்லை நாள்
மந்தரம் சுற்றிய அரவை மானுமே.
(பாலகாண்டம்) (கடிமணப் படலம் 55)
. இராமபிரானின் திருத்தோள்களுக்கு மந்தரமலையும் அவற்றைச் சுற்றியிருந்த தோள்வளைக்கு வாசுகி யும் உவமை. தோள் வளையின் பதிக்கப் பெற்றிருந்த மணிகள் வாசுகியின் தலையில் ஒளிவிடும் மாணிக்கத்திற்கு உவமை.
இடம் படுதோள்
சனகமன்னன் தாரைவார்த்துக் கொடுத்தபின் இடம் படு தோளவனோடு, இயை வேள்வி
தொடங்கிய வெங்கனலை
[பால காண்டம்] [கடிமணப் படலம் 90] 1249
இராமன், சீதை இருவரும் சுற்றி வருகி்றார்கள்
பொன்தோள் வலிக்குச் சோதனை
. மணமுடித்து அயோத்தி செல்லும் இராமனுக்கு வழியிலேயே ஒரு சோதனை! பரசுராமன் வழி மறிக்கிறான்
இற்று ஓடிய சிலையின் திறம் அறிவென்; இனி யான் உன்
பொன்தோள் வலி நிலை சோதனை புரிவான் நசையுடையேன்
(பாலகாண்டம்) (பரசுராமப் படலம் 18)
என்கிறான். இதைக்கேட்ட இராமன்,“நாரணன் வலியின் ஆண்ட வென்றி வில் தருக என்று தோளுற வாங்கி,”அம்பிது பிழைப்பது அன்றால் யாது இதற்கு இலக்கம்? என்கிறான். பரசுராமன் தன் செய்தவம் அனைத்தையும் அதற்கு இலக்காக்குகிறான். இராம பாணம் பரசுராமனின் மை அறு தவம் எல்லாம் வாரி, இராம னிடம் மீண்டது.
விலங்கல் அன்ன திண் தோள்
தனக்கு முதுமை வந்து விட்டதை உனர்ந்த தயரதன், இராமனுக்கு முடி சூட்டி, வானப் பிரஸ்தம் செல்ல நினைக்கிறான். அமைச்சர்களோடு ஆலோசனை செய்த பின் இராமனை அழைத்து தன் எண்ணத்தைத் தெரிவிக்கிறான்.தன்னை வணங்கிய இராமனை ஆரத் தழுவிக் கொள்கிறான். கம்பனுக்கோ வேறு விதமான கற்பனை!
விலங்கல் அன்ன திண் தோளையும் மெய்த்திரு இருக்கும்
அலங்கல் மார்பையும், தனது தோள், மார்பு கொண்டு
அளந்தான்.
(அயோத்தியா காண்டம்) (மந்திரப் படலம் 59)
இராமனுடைய தோள்களையும், மார்பையும் அளக்க எந்த ஒரு கருவியையும் தேடவில்லை தயரதன். தன்னு டைய தோளையும் மார்பையுமே அளவு கருவி களாகக் கொண்டு அளந்தான்! கம்பனின் கற்பனை இது பின் இராமனிடம்
நீண்ட தோள்
நீண்ட தோள் ஐய! நிற்பயந்தெடுத்த யான், நின்னை
வேண்டி எய்திட விழைவது ஒன்று உளது
[மந்திரப் படலம் 60] 1373
என்று இராமனுக்கு முடி சூட்ட விழைவது பற்றிக் கூறாலானான்
வில் இயல் தோளவன்
அமைச்சரவையிலும் இராமனிடமும் சம்மதம் பெற்ற பின், தயரதன்,வசிட்டனை அழைத்து
நல் இயல் மங்கல நாளும் நாளை; அவ்
வில் இயல் தோளவற்கு ஈண்டு, ‘வேண்டுவ
ஒல்லையின் இயற்றி, நல் உறுதி வாய்மையும்
சொல்லுதி பெரிது’ என, தொழுது சொல்லினான்
(அயோத்தியா காண்டம்) (மந்தரை சூழ்ச்சிப் படலம் 11)
ஏந்து தடந்தோள்
விடிந்தால் மகுடாபிஷேகம் என்ற நிலை யில் கைகேயி தயரதனிடம் முன்னரே பெற்றிருந்த இரண்டு வரங்களில் ஒன்றின் படி பரதனுக்கு அரசும் இராமனுக்கு 14 ஆண்டுகள் வனவாசமும் என்று தீர்மானிக்கப் படுகிறது. இராமனைப் பிரியவேண்டும் என்ற தயரதன் மயங்கி விடுகிறான்.
குன்று இவர் தோள்
தயரதனை அழைத்துவரச் சென்ற சுமந்திரனிடம் இராமனை அழைத்து வரும் படி கைகேயி சொல்ல, மகிழ்ச்சி யோடு சுமந்திரன் சென்று
குன்று இவர் தோளினானைத் தொழுது
ககேயி, இராமனை அழைத்துவரச் சொன்னது பற்றித் தெரிவிக் கிறான். இராமன் உடனே செல்கிறான். வந்தவனிடம், பரதன் நாடாளப்போவதையும் இராமன் பதினான்கு ஆண்டுகள் வனம் சென்று வர வேண்டும் என்றும், இது அரச கட்டளை என்பதையும்
தெரிவிக்கிறாள்.
குன்றினும் உயர்ந்த தோளான்
இதைக் கேட்ட ராமன், மின்னொளிற் கானம் இன்றே போகின் றேன் விடையும் கொண்டேன் என்று
குன்றினும் உயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான்
கோசலை ராமன் வனம் செல்லப் போவதை அறிந்து திடுக்கிடு கிறாள். இதில் ஏதோ சூழ்ச்சி இருக்குமோ என்று சந்தேகித்து மன்னனைக் காண கைகேயியின் அரண்மனை வருகிறாள்
நடந்ததை அறிந்து வருந்துகிறாள் வசிட்டனும் கைகேயியிடம்
எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவள் மனம்மாறவில்லை. .தயரதன் மூர்ச்சையாகிறான்.முன்பு தனக்கேற்பட்ட சாபம் பற்றி
கோசலையிடம் சொல்கிறான் கோசலை கதறுகிறாள்.வசிட்டன் அரசவை வந்து
ஏந்து தடந்தோள் இராமன், திரு மடந்தை
காந்தன், ஒரு முறை போய்க் காடுறைவான் ஆயினான்
(அயோத்தியா காண்டம்) (நகர் நீங்கு படலம் 91
என்றும் பரதன் அரசாள்வான் என்றும் நடந்த விஷயத்தைச் சொல்கிறான்
குன்றன தோள்
இலக்குவனும் சீதையும் மிகவும் வாதம் செய்து இராமனுடன் வனம் செல்ல அனுமதி பெற்று விடுகிறார்கள். வசிட்டன் வந்து இராமனை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று முயல் கிறான். சகல சாத்திரங்களூம் அறிந்த நீங்களே தந்தை சொல்லை நிறைவேற்றப் போகும் என்னைத் தடுப்பது சரியா? என்று கேட்க வசிட்டன் ஒன்றும் பேச இயலாமல் கண்ணீர் மல்க நிற்கிறான்..
குன்றன தோளவன் தொழுது, கொற்றவன்
பொன் திணி நெடு மதில் வாயில் போயினான்
[நகர் நீங்கு படலம் 165] 1770
வீரத்தோள்
வனவாச காலத்தில் இராமன், சீதை இலக்குவன் இருவரோடும் பஞ்சவடியில் தங்கியிருக்கிறான். இராவணன் தங்கையான சூர்ப்பணகை அங்கு வருகிறாள். இராமனின் தோளழ கைக் கண்டு அவனை அடைய ஆசைப்படுகிறாள்.
வில் மலை வல்லவன் வீரத்தோளொடும்
கல்மலை நிகர்க்கல; கனிந்த நீலத்தின்
நல் மலை அல்லது, நாம மேருவும்
பொன்மலை ஆதலால் பொருவலாது’ என்பாள்
சூர்ப்பணகைப் படலம் 15] 2746
இவன் தோளுக்குக் கல்மலையும், பொன் மலையும் ஒப்பாகாது. இந்திர நீல மலையே ஒப்பாகும் என்று அவன் தோளழகில் மனதைப் பறிகொடுக்கிறாள். சூர்ப்பணகை, இவன்
தோளொடு தோள்
தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின்
நீளிய அல்ல கண்
எனப் பிரமிப்பாள்
சுடர் மணித் தோள்
புலர்ந்தனள்; புழுங்கும் நெஞ்சினள்
தோன்றல் தன் சுடர் மணித் தோளில் நாட்டங்கள்
ஊன்றினள், பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள்.
[ஆரணிய காண்டம்] (சூர்ப்பணகைப் படலம் 27)
குன்று அன தோள்
தன்னைத் திருமணம் செய்து கொள்ளூம் படி இராமனைப் பல வாறு வற்புறுத்துகிறாள். இராமனும் அவளைக் கொஞ்சம் சீண்டி
வேடிக்கையாகப் பேசுகிறான்.
வரிசிலை வடித்த தோள்
நிருதர்தம் அருளும் பெற்றேன்;நின்
நலம் பெற்றேன். நின்னோடு
ஒருவ அருஞ்செல்வத்து யாண்டும் உறையவும்
பெற்றேன் ஒன்றோ? செய்தவம் பயந்தது என்னா
வரிசிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க
[சூர்ப்பணகைப் படலம் 56] 2787
சிரிக்கிறான்
குவவுத் தோள்
இராமனையே நினைத்து ஏங்கும் சூர்ப்பணகை. சீதையைப் பார்த்ததும் இவ்வளவு அழகான பெண்ணை மனைவி யாகக் கொண்டவன் தன்னை ஏறெடுத்தும் பாரான் என்று உணர் கிறாள் அதனால் சீதையை வெருட்ட அவள்
குஞ்சரம் அனைய வீரன் குவவுத் தோள்
தழுவிக் கொண்டாள்
[சூர்ப்பணகைப் படலம் 66] 2797
இதனால் சீதைமேல் பொறாமை கொண்ட சூர்ப்பணகை,அவளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவளை நெருங்கு கிறாள். இதைக் கண்ட இலக்குவன் சூர்ப்பணகையின் மூக்கு, காது, முலைக்காம்புகளையும் அறுத்து விடுகிறான். சூர்ப்பணகையின் சகோதரன் கரன் போர் செய்ய வர. அவனோடு இராமன் போர் செய்கிறான்
குன்று அன தோள்,
ஏந்தும்
குன்று அன தோளின் ஆற்றல் உள்ளத்தில் உணரக்
கொண்டான்
அன்றியும், அண்ணல் ஆணை மறுக்கிலன், அங்கை கூப்பி
[ஆரணிய காண்டம்) (கரன் வதைப் படலம் 64
நிற்கிறான் இலக்குவன்
தோள் எனும் மந்தரம்
இராமனும் கரனும் எதிரெதிராக மிக உக்கிரமாகப் போர் செய்கிறார்கள். நூறு அம்புகளால் இராமன், கர னுடைய தேரைப் பொடியாக்குகிறான்.
எந்திரத் தடந்தேர் இழந்தான்; இழந்து
அந்தரத்திடை ஆர்த்து எழுந்து, அம்பு எலாம்
சுந்தரத் தனி வில்லிதன் தோள் எனும்
மந்தரத்தில் மழையின் வழங்கினான்
(ஆரணிய காண்டம் (கரன் வதைப் படலம் 181)
துங்க வரைப் புயம்
கரன் மாண்ட பின்னும் சூர்ப்பணகையின் காமவெறி அடங்கவில்லை.
, போர் இராமன் துங்க
வரைப் புயத்தினிடைக் கிடந்த பேர் ஆசை
மனம் கவற்ற, ஆற்றாள் ஆகி,
திரைப் பரவைப் பேர் அகழித் திண்
நகரில் கடிது ஓடி, ‘சீதை தன்மை
உரைப்பென்’ எனச் சூர்ப்பணகை
இராவணனிடம் தலைவிரி கோலமாகச் செல்கிறாள்
(ஆரணிய காண்டம்) (சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 1)
வயிரக் குன்றத் தோள்
வயிரக் குன்றத்
தோள் எலாம் படி சுமந்த விட அரவின்
பட நிரையின் தோன்ற,
[ஆரணிய காண்டம்] [சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 5 3071
கொலு வீற்றிருக்கிறான் இராவணன்
சூர்ப்பணகையின் கோலத்தைக் கண்ட இராவணன் திடுக்கிட்டு
உன்னை இக்கோலம் செய்தவர் யார்? என்ன காரணம்? என்று கேட்க
மன்மதனை ஒப்பர், மணி மேனி; வடமேருத்
தன் எழில் அழிப்பர், திரள் தோளின் வலிதன்னால்;
என், அதனை இப்பொழுது இசைப்பது? உலகு ஏழின்
நல்மதம் அழிப்பர், ஓர் இமைப்பின், நனி, வில்லால்
(ஆரணிய காண்டம்) (சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 52)
இராம இலக்குவர்களின் தோள் அழகு, வலிமை இரண்டையும் புகழ்ந்து பேசுகிறாள். காரணம் சொல்ல வந்தவள் சீதையின் மொத்த அழகையும் விரிவாகச் சொல்லி, “நாளையே காண்டி” என்று அவன் மனதில் ஆவலைத் தூண்டி விடுகிறாள்.
சந்து ஆர் தடந் தோள்
கரனையும், உரனையும் உற்ற பழியையும் மறந்த இராவணன் கேட்ட நங்கையை மறக்க முடியாமல் தவிக் கிறான். சீதையின் உருவெளியைக் கண்டவன் அது சீதை தானா என்று உறுதி செய்வதற்காக சூர்ப்பணகையை வர வழைத்து தன் சந்தேகத்தைக் கேட்கிறான். அவளோ
செந்தாமரைக் கண்ணொடும், செங்கனி வாயினோடும்
சந்து ஆர் தடந் தோளொடும், தாழ் தடக் கைகளோடும்
அம்தார் அகலத்தொடும், அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவன் ஆகும், அவ்வல் வில் இராமன்’ என்றாள்
(ஆரணிய காண்டம்) (சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 149)
இராவணன் மனதில் சீதையைப் பற்றிய எண்ணம் ஆழப் பதிந்து விடுகிறது உடனே இராவணன் மாரீசன் உதவியை நாடு கிறான். மாரீசன் எவ்வளவோ அறிவுரை சொன்னபோதிலும் இராவணன் தன் எண்ணத்தை விடுவதாயில்லை. மாரீசனையே கொன்றுவிடுவதாக வாளை உருவிய போது மாரீசன் வேறு வழி யில்லாமல் மாயமானாகச் சீதைமுன் நிற்கிறான்.
பொன் நின்ற வயிரத் தோள்
சீதை, அம்மான் வேண்டுமென்று கேட்க, இலக்குவன், அது மாயமான் என்று எவ்வளவோ சொல்லியும் கேளாமல் இராமன் மானைப் பிடிக்கத் தயாராகிறான். இலக்குவன்
முன் நின்ற முறையின் நின்றார் முனிந்துள வேட்டம் முற்றல்
பொன் நின்ற வயிரத் தோளாய்! புகழ் உடைத்தாம் அன்று’
என்றான்
(ஆரணிய காண்டம்) (மாரீசன் வதைப் படலம் 64)
சிகரச் செவ்விச் சுந்தரத் தோள்
சந்திரற்கு உவமை சான்ற வதனத்தாள் சலத்தை நோக்கி,
சிந்துரப் பவளச் செவ்வாய் முறுவலன் சிகரச் செவ்விச்
சுந்தரத் தோளினான், அம் மானினைத் தொடரலுற்றான்.
(ஆரணிய காண்டம்) (மாரீசன் வதைப் படலம் 70)
வீங்கு தோள் கல்
இலக்குவன் சொன்னதைப் பொருட் படுத்தாமல் மான் பின் சென்ற இராமன் சீதையைப் பறிகொடுக்க நேரிடுகிறது. சடாயுவும் மாண்டு போக, வெதும்புகிறான்
வில்லை நோக்கி நகும்; மிக வீங்கு தோள்
கல்லை நோக்கி நகும்
(ஆரணிய காண்டம்) (அயோமுகிப் படலம் 14)
வீங்கிய தோள்
சபரியும் கவந்தனும் சொன்னபடி சுக்கிரீவனைத் தேடி வருகிறார்கள் இராம இலக்குவர்கள்.வழியில் அனுமனை சந்திக் கிறார்கள்.. இராமனுக் கும் சுக்கிரீவனுக்கும் நட்பு ஏற்பட இராமன் சுக்கிரீவனுக்குத் தாரமும் தலைமையும் வாலியிடமிருந்து பெற்றுத் தருவதாக உறுதியளிக்கிறான். சுக்கிரீவன் , ஒரு முடிப்பை இராம னிடம் கொடுக்கிறான். அதிலிருந்த சீதையின் நகைகளைக் கண்ட இராமன் மூர்ச்சையாகிறான். இதைக் கண்ட சுக்கிரீவன்
வீங்கிய தோளினாய்! வினையினேன் உயிர்
வாங்கினென், இவ் அணி வருவித்தே
என்று வருந்துகிறான்
குன்று இவர் தோள்
(கிஷ்கிந்தா காண்டம்) (கலம் காண் படலம் 11)
வன் திறல் மாருதி வணங்கினான்; நெடுங்
குன்று இவர் தோளினாய்! கூற வேண்டுவது
ஒன்று உளது; அதனை நீ உணர்ந்து கேள்!
(கிஷ்கிந்தா காண்டம்) (கலன் காண் படலம் 28)
என்கிறான்.வாலியைக் கொன்று சுக்கிரீவனை அரசனாக்கி வானரப் படையைக் கூட்டினால் தான் சீதையைத் தேட முடியும் என்று அனுமன் ஆலோசனை சொல்ல வாலிவதம் நிகழ்கிறது. அதன் பின் அங்கதன் தலைமையில் வானரப் படைகள் பிராட்டியைத்தேடப் புறப்படுகிறார்கள்.
வீங்கு தோள்
கடலைத் தாண்டிச்சென்று திரும்பும் வலிமை யுள்ளவன் அனுமன் ஒருவனே என்பதை உணர்ந்த வீரர் கள் அனு மனை வாழ்த்தி இலங்கைக்கு அனுப்புகிறார்கள். இலங்கை சென்ற அனுமன் பல இடங்களிலும் தேடிய பின் அசோகவனத்தில். பிராட்டி இருப்பதைப் பார்க்கிறான்.அவள். ஒவ்வொரு காட்சியாக எண்ணிப் பார்க்கிறாள்.
வடவரை வார் சிலை;
ஏங்கு மாத்திரத்து, இற்று இரண்டாய் விழ
வீங்கு தோளை நினைந்து மெலிந்துளாள்.
(சுந்தர காண்டம்) (காட்சிப் படலம் 21)]
சீதை உயிர்விடத் துணிந்தநேரம் தக்க சமயத்தில், “அண்டர்நாயகன் அருட்தூதன் யான்” என்று அனுமன் தோன்றுகிறான். சீதை அபகரிக்கப்பட்ட பின் நடந்தவற்றை யெல் லாம் விரிவாகச் சொல்கிறான். சீதைகேட்க இராமனின் மேனி யழகை விரிவாகச் சொல்கிறான் அனுமன்.
ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன்
(சுந்தர காண்டம்) (உருக்காட்டுப் படலம் 52)
என்று தோளழகைச் சொன்னவன்
பொன்மொய்த்த தோளான்
சீதையின் பிரிவைத் தாங்காமல் இராமன் எப்படியெல்லாம் தவிக்கிறான் என்பதை
பொன்மொய்த்த தோளான், மயல் கொண்டு,
புலன்கள் வேறாய்,
உன்மத்தன் ஆனான்,
(சுந்தர காண்டம்)(உருக்காட்டுப் படலம் 84)
என்கிறான்
விற் பெருந் தடந் தோள்
இராமன் கொடுத்த கணயாழியைச் சீதையிடம் கொடுத்து சீதை தந்த சூளாமனியைப் பெற்றுக் கொண்ட அனுமன் இராவணனையும் சந்தித்துவிட்டு இலங்கையையும் எரி யூட்டிய பின் இராமனிடம் வந்து சேருகிறான். தான் கண்ட சீதையைப் பற்றி
விற் பெருந் தடந் தோள் வீர!
இற் பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை
என்பது ஒன்றும்,
கற்பெனும் பெயரது ஒன்றும் களி நடம்
புரியக் கண்டேன்
(சுந்தர காண்டம்) (திருவடி தொழுத படலம் 29)
என்று தெரிவிக்கிறான்
மெலிந்த தோள்கள்வீங்கின!
.இலங்கைக்கு வந்து அனுமன் செய்த சாகச நிகழ்ச்சிகளை யெல்லாம் வீடணன் வாயிலாகக் கேட்ட இராமன், தன் தூதன் அனுமனைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறான்.
மயிலை,
நாள்கள் சாலவும் நீங்கலின், நலம் கெட மெலிந்த
தோள்கள் வீங்கி, தன் தூதனைப் பார்த்து, இவை
சொன்னான்
(யுத்த காண்டம்) (இலங்கை கேள்விப் படலம் 69)
மலை போல் வீங்கு தோள்
இலங்கை செல்ல, கடலைத்தூர்த்து
அணை கட்ட விரும்புகிறார்கள் இராம இலக்குவர்கள். பாலம் கட்ட அனுமதி வேண்டி வருணனை வழிபடுகிறான் இராமன். ஆனால் வருணன் வருவதாகத்தெரியவில்லை பொறுமையிழந்த இராமன்.
வாங்கி வெஞ்சிலை, வாளிபெய் புட்டிலும் மலைபோல்
வீங்கு தோள்வலம் வீக்கினான்;
(யுத்த காண்டம்) (வருணனை வழி வேண்டு படலம் 16)
வீரத் தோள்கள்
இராம இராவணப் போர்முழக்கம் கேட்கத் தொடங்கிவிட்டது.. இராவணன் போர்க்களம் நோக்கி வருகிறான் என்ற. செய்தியைக் கேட்டதும்,
தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற
வீங்கின, இராகவன் வீரத் தோள்களே.
[யுத்த காண்டம்] [முதற் போர் புரி படலம் 108] 7124
மரகதச் சிகரத்து இரண்டு தோள்
இராம இராவண யுத்தம் துவங்கி விட்டது! முதல்நாள் போரில் இருவரும் நேருக்கு நேர் மோதுகிறார் கள். தேர்களும், யானைகளும் குதிரைகளும் வீரர்களும் வானளாவ மலைபோல் வீழ்ந்து கிடப்பதைக் கண்ட இராவணன் வெகுண்டு
திரண்ட வாளிகள் சேவகன் மரகதச் சிகரத்து
இரண்டு தோளினும் இரண்டு புக்கு அழுந்திட எய்தான்
(யுத்த காண்டம்) (முதற் போர் புரி படலம் 239)
பெருவலி இராமன் தோள்கள்
இதைக் கண்ட இராமன் முறுவலோடு இராவணன் வில்லை அநாயாசமாக அறுத்ததோடு அமையாமல், அவனுடைய கொற்ற வெண்குடை, கொடி, கவசத்தையும் அறுத்து விட அனைத் தையும் இழந்த இராவணன். மகுடத்தையும் இழந்து வெறுங்கையோடு இலங்கை சேர்கிறான். கும்பகருணனைப் போருக்கு அனுப்பத் தீர்மானிக்கிறான் இராவணன். கும்பகருணன், இராவணனுக்குப் பலவிதமாக அறிவுரை கூறுகிறான்
; பெரு வலி இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது, சீதை மேனியை
புல்லலாம் என்பது போலுமால்—ஐயா!
(யுத்த காண்டம்) (கும்பகருணன் வதைப்படலம் 81)
சீதையை அடைவது என்பது எப்படி ஒருக் காலும் முடியாதோ அதேபோலவே இராமனை வெல்வதும் முடி யாது என்று பெரு வீரனான கும்பகருணன் அறிவுறுத்துகிறான்.
கும்பகருணமைப் போருக்கு அனுப்பிய பின் மகோதரன் ஆலோ சனையின் பேரில் மாயா சனகனை உருவாக்கி சீதையிடம் செல் கிறான்.
வயிரத் தோள்.
இராவணன் விருப்பத்தை ஏற்றுக் கொள்ளும்படி அறிவுரை சொன்ன மாயாசனகனை
வயிரத் திண் தோள்
ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு அடிமை செய்வேன்
நாயினை நோக்குவேனோ, நாண் துறாந்து ஆவி நச்சி?
[யுத்த காண்டம்] மாயா சனகப் படலம் 67] 7698
என்று சீறுகிறாள் சீதை.
சுந்தரத் தோளன்
போர்க்களத்தில் அனுமனும் கும்ப கருணனும் நேருக்கு நேர் மோதுகிறார்கள். அனுமன் எறிந்த வயிரக்குன்றை கும்பகருணன் தன் தோள் மேல் ஏற்கிறான். உலகம் அஞ்சி வியக்குமாறு அக்குன்று சுக்குநூறாக உடைந்தது. இதைக் கண்ட அனுமன்
; சுந்தரத் தோளன் வாளி
பிளக்குமேல், பிளக்கும்’ என்னா, மாருதி பெயர்ந்து போனான்
(யுத்த காண்டம்) (கும்பகருணன் வதைப்படலம்)
சுந்தரப்பொன் தோளான்
பின் இராமனும் கும்பகருணானும் வெகு நேரம் கடுமையாகப் போர் செய்கிறார்கள். கைகளையும் கால்களையும் இழந்த பின்னும் மனம் தளராமல் கும்பகருணன் போர் செய்வதைக் கண்ட இராமன் அவனை வியந்து பாராட்டு கிறான். உள்ளுணர்வு தோன்றிய கும்பகருணன்
சுந்தரப் பொன் தோளானை நோக்கி இவை சொன்னான்
[கும்பகருணன் வதைப் படலம் 352] 7623
கண் கடந்த தோள்
கும்பகருணன் மாண்ட செய்தியறிந்த இராவணன் அசோகவனத் திலிருந்து அலறியபடி வெளியேறுகிறான். சீதை
கண்டாள் கருணனை, தன் கண் கடந்த தோளானை
[மாயா சனகப் படலம் 89] 7720
, பேருருவம் படைத்த கும்ப கருணனைப் பற்றி சீதை முன்பு அச்சம் கொண்டிருந்தாள். இப்போது இராமன் அவனை வீழ்த்தியதைக் கேட்டு உடல் பூரித்துப் போகிறாள்
சுந்தரத் தோளினான்
கும்பகருணன் மாண்டபின் இராவணன் புதல்வனான அதிகாயன் வந்து இலக்குவனுடன் போர்செய்து இலக்குவனால் கொல்லப்படுகிறான். தந்தையைக் கொன்றதற்குப் பழி வாங்கும் பொருட்டு கரன் மைந்தன் மகரக்கண்ணன் வரு கிறான் அவனை இந்திரஜித்தோ என்று சந்தேகிக்கிறார்கள்.
சுந்தரத் தோளினானை நோக்கி நின்று
(யுத்தகாண்டம்) (மகரக் கண்ணன் வதைப் படலம் 16)
என்னுடைத்தாதை தன்னை இன் உயிர் உண்டாய்
இன்று அது நிமிர்வென் என்றான்
இசையினுக்கு இசைந்த தோளான்
’நீ கரன் புதல்வன் கொல்லோ? நெடும் பகை நிமிர
வந்தாய்;
ஆயது கடனே அன்றோ, ஆண் பிறந்து அமைந்தார்க்கு? ஐய!
ஏயது சொன்னாய்’ என்றான் இசையினுக்கு
இசைந்த தோளான்
(யுத்த காண்டம்) (மகரக் கண்ணன் வதைப் படலம் 18)
வீங்கிய தோள்கள்
போர்க்களத்தில் இலக்குவனும் இந்திரஜித் தும் சற்றும் சளைக்காமல் போரிடுகிறார்கள். பொறுமையிழந்த இந்திரஜித் பிரும்மாஸ்திரத்தை ஏவுகிறான். இலக்குவனோடு வானரவீரர்களும் மயங்கி வீழ்கிறார்கள்.அனுமன் கொணர்ந்த மருத்து மலை காற்றுப் பட்டதுமே அனைவரும் மயக்கம் தெளிந்து எழுகிறார்கள்.
ஓங்கிய தம்பியை, உயிர் வந்து உள் உற
வீங்கிய தோள்களால் தழுவி, வெந்துயர்
நீங்கினான், இராமனும்;
(யுத்த காண்டம்) (மருத்துமலைப் படலம் 104)
மந்தரம் புரை தோள்
மூலபலப் படையும் அழிய இராவணன் போர் செய்ய வருகிறான். இந்திரன் இராமனுக்குத் தேர் அனுப்புகிறான். இராமன் எத்தனை யெத்தனை பாணங்களை மாறி மாறி ஏவி னாலும் இராவணன் அவற்றை யெல்லாம் அழித்து விடுவதைக் கண்ட இராமன்
அந்தணன் படை வாங்கி அருச்சியா,
சுந்தரன் சிலை நாணில் தொடுப்புறா,
மந்தரம் புரை தோள் உற வாங்கினான்.
(யுத்த காண்டம்) (இரவணன் வதைப் படலம் 191)
இராகவன் தன் புனிதவாளி, செருக்கடந்த புயவலியும், தின்று, மார்பில் புக்கு ஓடி உயிர்பருகி புறம் போயிற்று. குருதி பொங்க தேரிலிருந்து விழுகிறான் இராவணன்.
புய வலி
இராவணன் வீழ்ந்ததும் வீடணன் வந்து அழுது புலம்புகிறான்.
பொன்றினையே! இராகவன் தன் புய வலியை
இன்று அறிந்து போயினாயோ!
(யுத்த காண்டம்) (இராவணன் வதைப் படலம் 220)
இராவணனுக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களையெல் லாம் முறையாக வீடணன் செய்து முடித்தபின்
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன்(வீடணன்)
அரியணைப் பொலிந்தான், தமர் ஆர்த்து எழ.
[யுத்த காண்டம்] மீட்சிப் படலம் 7] 9958
நீலக்குன்று அன தோள்
இராமன், ”சென்று தா, நம தேவியை, சீரொடும்” என்று சொல்ல, வீடணன் செல்கிறான். ஆனால் பிராட்டியோ,”மேல்நிலை கோலம் கோடல் விழுமியது அன்று” என்கிறாள் இதைக்கேட்ட வீடணன்
நீலக் குன்று அன தோளினான் குறிப்பு இது
[மீட்சிப் படலம் 41] 9992
என்று மீண்டும் சொல்ல, உடன்படுகிறாள். ஆனால் அவள் சற்றும் எதிர்பாராதவிதமாக இராமன் அவளைக் கடிந்து பேசத் தொடங்கு கிறான்.
ஊண் திறம் உவந்தனை, ஒழுக்கம் பாழ்பட,
மாண்டிலை, முறை திறம்பு அரக்கன் மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை, அச்சம் தீர்ந்து, இவண்
மீண்டது என் நினைவு? எனை விரும்பும் என்பதோ?
[மீட்சிப் படலம் 61] 10013
நெருப்பில் தோய்ந்தது போன்ற வார்த்தைகளால் பிராட்டியைச் சுடுகிறான். உன்னை மீட்பதற் காகக் கடல் தூர்த்து இங்கு வர வில்லை. நான் செய்த தவறைத் திருத்தி, என்னை மீட்பதற்காகத் தான் இலங்கை வந்தேன். உன் ஒழுக்கச் செய்தியால் சாதித்துக் காட்டமுடியுமென்றால் சாதித்துக் காட்டு இல்லையென்றால் உன் வழியில் போ என்று என்று சீறுகிறான்
இராமன் வார்த்தைகளிலிருந்த சூட்டைப் பொறுக்கமுடியாத பிராட்டி, சாதலின் சிறந்தது ஒன்று இல்லை என்று தீர்மானித்துஇலக்குவனை அழைத்து, “இடுதி தீ” என்று கூற இராமனின் கண்ணசைவைப் புரிந்து கொண்ட இலக்குவன் தீயை மூட்டுகிறான். தீயை வலம் வந்த பிராட்டி,
”மனத்தினால், வாக்கினால், மறு உற்றேன் எனின்
சினத்தினால் சுடுதியால், தீச்செல்வா! என்றாள்
மீட்சிப்படலம் 84] 10035
வாள் பெருந்தோள் [
பிராட்டியின் கற்பு என்னும் வெம்மையைத் தாங்கமுடியாத தீக் கடவுள்,
“வாள் பெருந்தோளினாய்!”
கையுறு நெல்லி அம் கனியின் காட்டும் என்
மெய்யுறு கட்டுரை கேட்டும், மீட்டியோ?
பொய் உறா மாருதி உரையும் போற்றலாய்!
[மீட்சிப்படலம் 92&93] 10044 தேவர்கள் வாழ்த்துக்களுக்கிடையே பிராட்டியை இராமனிடம் ஒப்படைக்கிறான் தீக்கடவுள்
திரள் தோள் வீரன்
அனைவரும் அயோத்தி திரும்புகிறார்கள். இராமனுக்கு மகுடாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்கிறார்கள்.
, அழகுறச் சமைத்த பீடம்,
ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர்; அதனின் மீது
பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும்
பொலிந்தான் மன்னோ
(யுத்த காண்டம்) (திருமுடி சூட்டு படலம் 32)
இப்படி இராமனின் தோள்வலியையும் தோள் அழகையும் அழகுறப் பாடியிருக்கிறான் கம்பன்
====================================================================
- கைக்கட்டு வித்தை
- இந்தியாவில் ‘முப்பெரும் விழா’ நிகழ்வில் இலங்கை எழுத்தாளருக்கு விருது
- ‘ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- ஒரு துளி காற்று
- “வெறும் நாய்” – கு. அழகிரிசாமி. (சிறுகதை பற்றிய பார்வை)
- “அப்பா! இனி என்னுடைய முறை!”
- ஒரு கதை ஒரு கருத்து – கு.அழகிரிசாமியின் கல்யாண கிருஷ்ணன்
- மேரியின் நாய்
- தோள்வலியும் தோளழகும் – இராமன்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 24 – தூரப் பிரயாணம்
- தோள்வலியும் தோளழகும் – இராவணன்
- ”அரங்குகளில் பூத்த அரிய மலர்கள்” – வல்லம் தாஜ்பால் கவிதைகள்