6.ஔவையாரும் பேயும்

This entry is part 7 of 18 in the series 11 ஜூலை 2021

 

 

முனைவர் சி. சேதுராமன்,

தமிழாய்வுத் துறைத்தலைவர்,

மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை.

மின்னஞ்சல்: malar.sethu@gmail.com

ஔவையாரைப் பற்றி வழங்கும் கதைகளுள் அவர் பேயுடன் பேசியதாக ஒரு கதை வழங்கி வருகின்றது. இக்கதை தொடர்பான பாடல் தனிப்பாடலில் காணப்படுகின்றது. கால்நடையாகவே நடந்து பல ஊர்களுக்கும் சென்று வந்த ஔவையார் ஒருநாள் ஒரு ஊருக்கு வந்தார். அவருக்கு மிகுந்த களைப்பு. களைப்பு நீங்கித் தங்கிச் செல்ல ஓர் இடம் கிடைக்காதா என்று பார்த்தவருடைய கண்ணில் பாழடைந்த மண்டபம் ஒன்று தென்பட்டது. அவரும் அந்த மண்டபத்தில் இரவு தங்கி காலையில் செல்லலாம் என்று கருதி அந்த மண்டபத்தினை நோக்கிச் சென்றார்.

 

அப்போது அவ்வூர்க்காரர்கள் அவரைத் தடுத்து, ‘‘அம்மா அங்கு பேய் ஒன்று உள்ளது. அங்கு தங்குபவர்களை அடித்துத்துக் கொன்றுவிடுகின்றது. அதனால் அங்கு செல்லாதீர்கள்’’ என்று கூறி் தடுத்தனர். ஆனால் ஔவையாரோ, ‘‘நானே ஒரு பேய். ஒரு பேயை இன்னொரு பேய் அடித்துவிடுமா? எப்படி அடிக்கின்றது என்று பார்ப்போம்’’ என்று கூறிவிட்டு ஊரார் பேச்சைக் கேட்காது அந்த மண்டபத்திற்குச் சென்று படுத்துறங்கினார்.

 

உடல் அசதியால் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த ஔவையாரை முதல் சாமத்தில் பேய் வந்து மிரட்டியது. ஔவையார் அந்தப் பேயின் பூர்வ ஜென்மக் கதையை உணர்ந்து, பேயைப் பார்த்து,

‘‘வெண்பா இருகாலில் கல்லாளை, வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதாளை – பெண்பாவி
பெற்றாளே பெற்றாள், பிறர்நகைக்கப் பெற்றாள்,என்(று)
எற்றோ,மற்(று) :எற்றோ,மற்(று) எற்று.’’

என்ற பாடலைப் பாடி, ‘‘படிக்கத் தெரியாத அறிவிலியைப் பெற்றாளே அவளைப் போய்த் தாக்கு’’ என்று முற்பிறவியில் பேயின் காதலனைப் பெற்ற தாயைக் குறித்து மறைவாகச் சுற்றி வளைத்துப் பழித்துப் பேசினார்.

 

       அதனைக் கேட்ட பேய் துணுக்குற்று அவரைத் தாக்காமல் போயிற்று. ஔவையார் பேய் போனபின்னர் உறங்கத் தொடங்கினார். ஆனாலும் அந்தப் பேய் அம்மண்டபத்தை விட்டுப் போகாமல் இருந்தது. இரண்டாம் சாமமும் வந்தது. உடனே மீண்டும் வந்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஔவையாரைக் காலால் எத்தித் தள்ளித் தாக்கத் தொடங்கியது. அதனைக் கண்ட ஔவையார்,

       ‘‘எண்ணாயிரத் தாண்டு நீரிற் கிடந்தாலும்

       உண்ணீரம் பற்றாக் கிடையேபோல் – வண்ணமுலைப்

       பொற்றொடி மாதர் புணர்முலை மேற்சாராரை

       எற்றோ மற்றெற்றோ மற்றெற்று’’

என்று ‘‘எட்டாயிரம் ஆண்டுகள் கருங்கல்லின் உள்ளே ஈரம் பற்றாது. அதுபோன்று உன்னைச் சேராது மாண்டொழிந்த காதலனைப் போய் நீ எத்தித் தாக்கு’’ என்று மறைபொருள் வைத்துப் பாடினார். அதனைக் கேட்ட பேய் குழப்பமடைந்து அவரைத் தாக்காமல் சென்றது. ஔவையாரும் மீண்டும் உறங்கத் தொடங்கினார்.

 

       ஆனால் பேய் அம்மண்டபத்தை விட்டுப் போய்விடவில்லை. ஔவையார் கூறியதைக் கேட்டு யோசனையில் ஆழ்ந்திருந்தது. மூன்றாம் சாமமும் வந்தது. மீண்டும் அந்தப் பேய் வந்து நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த ஔவையாரைத் தாக்கத் தொடங்கியது. திடுக்குற்று எழுந்த ஔவையார்,

       ‘‘வானமுளதான் மழையுளதான் மண்ணு லகில்

       தானமுளதால் தயையுளதால் ஆனபொழு தெய்த்தோ

இளைத்தோ மென்று ஏமாந்தி ருப்போரை

எற்றோ மற்றெற்றோ மற்றெற்று’’

என்று பேயைப் பார்த்துப் பாடினார். ஔவையாரின், ‘‘பேயே யாராவது ஏமாந்திருந்தால் அவரைப் போய் எற்றுவாயாக’’ என்று அப்பேயின் முற்பிறவியினைப் பற்றி மறைபொருள் வைத்துப் பாடினார். அதனைக் கேட்ட பேய் துணுக்குற்று அவரைத் தாக்காமல் திரும்பவும் போயிற்று.

 

       மீண்டும் ஔவையார் நன்கு உறங்கத் தொடங்கினார். பேய்க்கு ஔவையார் கூறிய கருத்துக்களே எண்ண ஓட்டமாக ஓடிக் கொண்டிருந்தது. அப்பேயால் இருப்புக் கொள்ள இயலவில்லை. இவர் யார்? இவரிடமிருந்து இன்னும் தெரிந்து கொண்டு இவரின் அருளைப் பெற வேண்டும் என்று கருதியது. அதனால் நான்காம் சாமத்தில் வந்து தூங்கிக் கொண்டிருந்த ஔவையாரைத் தாக்கியது. உறக்கத்திலிருந்து விழித்த ஔவையார் பேயின் நிலையினை அறிந்து,

       ‘‘கருங்குளவிச் சூறைத் தூறீச் சங்கனிபோல

       விருந்தினர்க் கொன்றீயாதான் வாழ்க்கை – அரும்பகலே

       இச்சித்திருந்த பொருள் தாயத்தார் கொள்வாரே

       எற்றோ மற்றெற்றோ மற்றெற்று’’

ஈயாதான் விரும்பிய பொருட் செல்வம் அவனது உறவினர்களால் கவரப்படும். நீயும் வஞ்சகத்தால் உன்னை விரும்பியவனை இழந்தாய். உன்னை விரும்பியவனை நீ அடையவிடாமல் செய்த வஞ்சகனைப் போய்த் தாக்குவாயாக’’ என்று மறைபொருள் வைத்துப் பாடினார்.

 

       அதனைக் கேட்ட பேய் மனம் வருந்தி அவரிடம் மன்னிப்புக் கோரித் தனது கதையைக் கூறத் தொடங்கியது. ‘‘அம்மையீர் நான் முற்பிறவியில் அளகாபுரத்து அரசனினி மகளாகப் பிறந்தேன். எனது பெயர் ஏலங்குழலி. நான் உப்பரிகையில் (மாடி) பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது கீழே வீதியில் ஒரு இளைஞன் நடந்து சென்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவுடன் என் மனதில் காதல் எழுந்தது. அவனைப் பார்த்ததிலிருந்து காதலிக்கத் தொடங்கினேன்.

 

       அவனைச் சந்தித்து எனது காதலைத் தெரிவித்து அவனைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதனால் நான் எனது விருப்பத்தை ஒரு ஓலையில் எழுதி அவன் கையில் கிடைக்குமாறு அனுப்பினேன். அவனும் ஓலையை வாங்கிக் கொண்டான். ஆனால் அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அந்த ஓலையில் என்ன எழுதி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள அவன் ஆசைப்பட்டு எவனோ ஒரு கிழவனிடத்தில் சென்று அவனிடம் ஓலையைக் காட்டி அதில் உள்ளதைப் படித்துக் காட்டுமாறு கூறினான்.

 

       வஞ்சக எண்ணம் கொண்ட அந்தக் கிழவன் அதில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு என்மேல் ஆசை கொண்டு என்னை அடைவதற்குத் திட்டம் தீட்டினான். தன்னிடம் ஓலையைக் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொன்ன இளைஞனைத் திசைதிருப்ப எண்ணி, ‘‘தம்பி இவ்வோலையில் உன்னை வெறுப்பதாக அந்தப் பெண் எழுதி இருக்கின்றாள். வேறொன்றும் இல்லை’’ என்று பொய் கூறி அவனை அனுப்பி வைத்தான்.

 

       எழுதப் படிக்கத் தெரியாததால் அந்த இளைஞன் போன பின்னர் அந்த வஞ்சக எண்ணமுடைய கிழவன் ஓலையினைப் படித்து அதில் உள்ள விபரத்தை அறிந்து கொண்டு நான் இளைஞனை வரச்சொல்லியிருந்த இரகசிய இடத்திற்கு வந்தான்.

 

இளைஞன் எனது ஓலையைப் படித்துவிட்டு நான் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து என்னைச் சந்திப்பான் என்று மனக்கோட்டை கட்டிய நான் அரண்மனையில் யாரும் அறியாது இளைஞனைச் சந்திப்பதற்காக என்னை அலங்கரித்துக் கொண்டு இரகசிய இடத்திற்குச் சென்று அவனுக்காகக் காத்திருந்தேன்.

 

குறிப்பிட்ட நேரமும் வந்தது. என் மனம் அடித்துக் கொண்டது. நாம் விரும்பியவனைக் காணப்போகிறோம் என்று மகிழ்வோடு அவனை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் என் ஆசையில் மண்ணள்ளிப் போடுவதைப் போன்று அந்தக் கிழவன் நான் இருக்கும் இடத்திற்கு வந்தான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

 

நாம் இளைஞனை வரச் சொன்ன இந்த இரகசிய இடத்திற்கு எப்படி இந்தக் கிழவன் வந்தான்? என்று நான் குழப்பிப் போயிருந்த நிலையில் என்னை நெருங்கி வந்த அந்தக் கிழவன் நடந்தவற்றைக் கூறி தனது விருப்பத்திற்கு இணங்குமாறு கூறினான். நானோ மறுத்து அவ்விடத்தைவிட்டு அகல நினைத்தேன். அவனோ என்னைப் போகவிடாது என்னை அடைவதிலேயே குறியாக இருந்தான். என்னால் அவனிடமிருந்து தப்பிக்க இயலவில்லை. அவனது ஆசைக்குப் பலியாகிவிடுவேனோ என்று அஞ்சிய நான் என்னை நானே மாய்த்துக் கொண்டேன். வஞ்சகத்தால் நான் இறப்பதற்குக் காரணமான அந்தக் கிழவன் எங்கே தனது தகாத செயல் வெளிப்பட்டு விடுமோ என்று எண்ணி நான் விரும்பிய இளைஞனையும் கொன்றுவிட்டான். அவனும் என்னைப் போன்று ஆவியாய் அலைந்தான்.

 

எங்களது ஆசை நிறைவேறாது நாங்கள் இறந்ததால் நாங்கள் ஆவியாக அலைந்து திரிகிறோம். நான் முற்பிறவியில் நன்கு கல்வி கற்றிருந்ததனால் தாங்கள் கூறிய பாடலின் பொருளை அறிந்து எனது வரலாற்றையே தாங்கள் கூறுகிறீர்கள் என்று உணர்ந்து கொண்டேன். நாங்கள் இதிலிருந்து விடுபடவும் எங்களது முற்பிறவி ஆசையானது நிறைவேறவும் தாங்கள் அருள்புரிய வேண்டும்’’ என்று அந்தப் பேய் அழுதது.

 

அந்தப் பேயின் முற்பிறவிக் கதையைக் கேட்ட ஔவையார் மனமிரங்கி அரசகுமாரியாகிய ஏலங்குழலியை தமிழறியும் பெருமாளாகவும் அவளது காதலனை விறகுத் தலையனாகவும் பிறந்து இருவரும் சேர்ந்து வாழ்க என வாழ்த்தி அருள்புரிந்து அங்கிருந்து சென்றார்.

 

ஔவையாரின் அருள்திறத்தால் அடுத்த பிறவியில் அப்பெண்ணானவள் தமிழறியும் பெருமாள் என்ற பெருமாட்டியாக பிறந்தாள். அவளது முற்பிறவிக் காதலன் விறகு வெட்டியின் மகனாகப் பிறந்து விறகு வெட்டிக் கொண்டிருந்தான். தமிழறியும் பெருமாள் அவனைத் தேடிக் கண்டு, காதல் கொண்டு, திருமணம் செய்து கொண்டாள். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

 

இதில் வரக்கூடிய கதையில் ஔவையாரே தன்னைக் காலால் எற்றி உதைத்த பேயின் வரலாற்றைக் கூறிய அருளியதாகவும் கூறுவர். மேலும் இக்கதையில் வரும் இளைஞன் அரச குமாரன் என்றும் அவனையே அந்தக் கிழவன் வஞ்சகத்தால் ஏமாற்றி அரசகுமாரியையும் அவனையும் கொன்றான் என்றும் கூறுவதும் உண்டு. பேயின் முற்பிறவியினை உணர்ந்து அதற்கு இரங்கி அதன் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிய ஔவையாரின் அருட்திறம் வியந்து போற்றுதற்குரியதாக விளங்குகின்றது. (தொடரும்…)

 

 

 

Series Navigationஎவர்சில்வர் வாங்க  கதைக்கலாம்…
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *