ஏக்கங்கள்

This entry is part 17 of 17 in the series 12 டிசம்பர் 2021

 

‘அப்பா, ஒரு வழியா வீடு வாங்கியாச்சு. டிசம்பர் 10ஆம் தேதி பால் காய்ச்சப்போறோம். நீங்களும், அம்மாவும் நாலஞ்சு நாள்ல புறப்பட்றது மாதிரி இருக்கும். இன்னிக்கு தேதி நவம்பர் 10. 15 ஆம் தேதி வந்தாலும், கிருஷ்துமஸ், புத்தாண்டு வேடிக்கை எல்லாம் பாத்துட்டு ஊருக்குப் போகலாம். நா ஒடனே ஒங்களுக்கு விமானப் பயணச்சீட்டு வாங்கணும். கடவுச்சீட்டு எப்ப காலாவதி ஆகுதுன்னு பாருங்க. கொறஞ்சது ஒரு ஆண்டு இருக்கணும்.  இல்லாட்டி புது கடவுச்சீட்டு எடுக்கணும்.’

சான்ஃபிரான்ஸிஸ்கோவிலிருந்து, மகள் சங்கீதா பேசினாள்.

‘கடவுச்சீட்டுன்னு ஒன்னு இருக்குங்குறதே மறந்துபோச்சும்மா. ரொம்ப மகிழ்ச்சிமா. காலாவதி ஆண்டு……. இருமா. ஒங்க அம்மாக்கிட்ட கேட்டு சொல்றேன். அணு…. நம்ம கடவுச்சீட்டு எப்ப முடியுது?’

‘2025’

‘2025ஆம். காதுல விழுந்திருக்குமே.’

‘சரிங்கப்பா. இன்னும் 4 ஆண்டு  இருக்கு. ஒடனே கடவுச்சீட்ட புகைப்படம் எடுத்து என்னோட புலனத்துக்கு அனுப்பி வையுங்க. நா பயணச்சீட்டுக்கு ஏற்பாடு பண்ணனும். மத்ததெ அப்புறம் பேசிக்கலாம்.’

‘அனுப்பிட்டேம்மா’

‘சரிங்கப்பா. ஆங். வந்துருச்சு. ஒங்க பயணச்சீட்டு இன்னிக்கு ராத்திரி ஒங்க மின்னஞ்சலுக்கு வரும். ஒரு பிரதி எடுத்து வச்சுக்கங்க. இன்னிக்கு தேதி 10. 15ஆம் தேதி புறப்பட்றது மாதிரி ஏற்பாடு பண்றேன். 14ஆம் தேதி நீங்க பிசிஆர் சோதனெக்கு போங்க. சரியா இருக்கும். அதுக்கு பயணச்சீட்டு முக்கியம். அன்னிக்கு சாயங்காலமே முடிவு தெரிஞ்சுரும். அது பத்தி எனக்கு கவலெ இல்லெ. ரெண்டு பேருமே, தடுப்பூசியும் போட்டுட்டீங்க, காப்பூசியும் போட்டுட்டீங்க. கோவிட்டும் வந்து போயிருச்சு. நீங்க யாருக்கும் கிருமியப் பரப்பமுடியாது, எந்த நிகழ்ச்சிக்கும் முன்கூட்டிய சோதனெ அடுத்த 8 மாதத்துக்கு தேவெயில்லேன்னு சான்றிதழே தந்துருக்காங்க. அதுனால அதுல எந்தப் பிரச்சினையும் இருக்காது.’

‘சரிமா. நாங்க மத்த ஏற்பாடுகளெ பண்றோம். ‘

சிவக்குமாரும், அணுவும் புறப்பட, முதலில் இரண்டு பெட்டிகளைத் தயார் செய்தார்கள். ஒரு பெரிய பட்டியல் போட்டார்கள். சிவக்குமார், முதலில் சர்க்கரை மாத்திரை என்று எழுதினார். 15ஆம் தேதி தானே பயணம். 14ஆம் தேதிக்குள் பெட்டி கட்டிவிடலாம். அதற்குள் சாமான் களையெல்லாம் வாங்கிவிடவேண்டும். அது என்ன பெரிய வேலையா என்ன? தேக்காவில் இருந்துகொண்டு யோசிக்கும் பிரச்சினையா அது? 10ஆம் தேதி  இரவு மின்னஞ்சலில் பயணச்சீட்டு வந்துவிட்டது. அனுப்பிய கையோடு மகள் சங்கீதா அழைத்தாள்.

‘அந்தப் பயணச்சீட்ல நாலஞ்சு பக்கம் இருக்கும். அதுல முதல் பக்கம், பயணச்சீட்டு எண், உங்க விமான எண், புறப்படும் நாள், தேதி, திரும்பும் நாள், தேதி இருக்கும்.அதை மட்டும் பிரதி எடுத்துக்கங்க. பிசிஆர் சோதனெக்கி அது ரொம்ப முக்கியம்.’

‘அப்புடியா?’

‘என்னப்பா இது. ஒங்களுக்கு எல்லாமே தெரிஞசிருக்கனும்பா.’

‘ஹெஹ்ஹெஹ்ஹே…. சரிம்மா.’

பயணச்சீட்டு பிரதி எடுத்தாகிவிட்டது. மீண்டும் சங்கீதா அழைத்தாள்.

‘அப்பா ஒங்களுக்கும் அம்மாவுக்கும் விசா எடுக்கணும். ‘

‘விசாவா? சிங்கப்பூருக்கு விசா இல்லியேம்மா.’

‘அது எனக்குத் தெரியும்பா. ஆனா நீங்க ரெண்டு பேரும் அமெரிக்கா வர்றதுல, இந்த நாடு எந்த ஆட்சேபனையும் இல்லேன்னு சொல்லணும். அவ்வளவுதான். குடிநுழைவுக்குத் தேவையில்லெ. அதையும் எடுத்து ஒங்க மின்னஞ்சலுக்கு அனுப்பிர்றேன். அதுலேயும் முதல் பக்கத்தெ மட்டும் பிரதி எடுத்து வச்சுக்கங்க. ‘

‘சரிமா’

அன்று மாலையே ஒரு மின்னஞசல் no-reply@ cbp….என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து  வந்தது. உடனே சங்கீதாவை அழைத்தார் சிவக்குமார்

‘என்னம்மா என்னமோ ‘நோ ரிப்ளை’ ங்கிற முகவரிலேருந்து வந்துருக்கு’

‘அப்பா. முகவரி எப்புடி இருந்தா என்னப்பா. ஒடனே தெறந்து படிங்கப்பா. அதான் விசா.’

‘ஹெஹ்ஹெஹ்ஹே…. சரிம்மா. அட ஆமாம்மா. அதான் விசா. என்னம்மா ஏதோ ஐஏஎஸ் தேர்வுத்தாள் மாரி நாலஞ்சு பக்கம் இருக்கும்மா’

‘முதல் பக்கம் மட்டும் ஒங்க பேரு அம்மா பேரு இருக்கும் அது போதும்ப்பா’

12ஆம் தேதி. சங்கீதா அழைத்தாள்.

‘அப்பா ஒங்க ரெண்டு பேருக்கும் காப்புறுதி முக்கியம். கொவிட் இருக்குறதுனால அது கட்டாயம். அதையும் எடுத்து அனுப்பிர்றேன். பிரதி எடுத்துக்கங்க. அடுத்த ஒரு மணிநேரம் தொலைபேசிலேயே இருங்க. இணையத்துலதான் காப்புறுதி வாங்குறேன். அவன் என்னென்ன கேப்பான்னே தெரியாது.’

‘சரிம்மா’

‘அப்பா ஒங்க முதல் பேரு பாலசுப்ரமணியம்தானே. இரண்டாவது பேர் சிவக்குமார்’

‘ஆமாம்மா’

‘ஒங்க அம்மா பேரு என்னப்பா?’

‘அம்மா பேருமா வேணும்’

‘ஆமாப்பா. நாம காசு கொடுக்காட்டி ஒங்க அம்மாக்கிட்ட வாங்கிக்கிருவான் போல. சொல்லுங்கப்பா’

‘ஹெஹ்ஹெஹ்ஹே…. காமாட்சி மா’

‘அப்பா, அம்மாவுக்கு மொதப்பேரு ஒங்க பேருதான் தெரியும். அம்மா பேரு கடவுச்சீட்ல உள்ளதுமாரி அணுராதான்னு போட்டுர்றேன். அம்மாவோட அப்பா பேரு சீனிவாசன் தானே?’

‘ஆமாம்மா’

‘அம்மாவோட அம்மா பேரு என்னப்பா?’

‘அம்மாவோட அம்மா பேரா…. அணு…ஒங்க அம்மா பேரு என்ன?’

‘மாமியார் பேரு தெரியல. 30 வருஷமாச்சு கல்யாணமாகி. கண்றாவி. அம்மா பேரு கோகிலா’

‘அம்மாவோட அம்மா பேரு கண்றாவி, இல்லே, கோகிலா. சே! ஏன் இப்புடி ஒளர்றேன். பேரு கோகிலாவாம்.’

‘காதுல விழுந்துச்சு. எல்லாமே காதுல விழுந்துச்சு. ‘

‘இவ்வளவு சேதியா வேணும்’

‘என்னப்பா பண்றது. நமக்குத்தானே காரியம் ஆகணும். சரி. இப்ப விண்ணப்பிச்சிக் கிட்டிருக்கேன். தொலைபேயிலேயே இருங்க. ஒரு மறைச்சொல் வரும். மூணு நிமிஷத்துக்குள்ள என்னோட புலனத்துக்கு நீங்க அதெ அனுப்பீறணும். மின்னஞ்சல்ல வரும்.’

‘சரிம்மா’

‘ஆங். வந்துருச்சும்மா. TPK121” புலனத்துக்கு அனுப்பிட்டேம்மா’

‘அட! ஒரு நிமிடம் கூட ஆகலேப்பா. ரொம்ப வேகம்பா. எனக்கே நேரடியா வந்தாலும் இவ்வளவு வேகமா பாக்கமுடியாதுப்பா’

‘அம்மாக்கிட்ட சொல்லும்மா’

‘அடுத்து அம்மாவுக்கு விண்ணப்பிக்கிறேன்பா. இன்னொரு மறைச்சொல் வரும். அதையும் இதே மாரி அனுப்பீருங்க.’

‘வந்துருச்சும்மா TPK658. புலனத்துக்கு அனுப்பீட்டேம்மா’

‘பிரமாதம்பா. எல்லாம் முடிஞசிருச்சு. காப்புறுதியும் வாங்கியாச்சு. என் பக்கத்துல எல்லாம் முடிஞ்சிருச்சு. இனிமே நீங்க புறப்பட்ற வேலைய பாக்க வேண்டியதுதான்.’

13ஆம் தேதி. எல்லாச் சாமான்களும் வாங்கியாக வேண்டும். பிசிஆர் எடுக்க வேண்டும். 14ஆம் தேதி பிசிஆர் வேலை மட்டும்தான் இருக்கவேண்டும். 13ஆம் தேதி எல்லா வேலைகளும் முடிந்து புறப்படத் தயாராகிவிட வேண்டும். 14ஆம் தேதி இரவு பிசிஆர் முடிவுடன் 15ஆம தேதி விமான நிலையம் புறப்பட வேண்டும். சங்கீதா அம்மாவை அழைத்தாள்.

‘அம்மா, இன்னிக்குள்ள எல்லாச் சாமானும் வாங்கீரணும். நாளக்கி எந்த வேலையும் வச்சுக்காதீங்க.’

‘நீ சொன்ன சாமான்கள் எல்லாத்தையும் வாங்கிட்டேம்மா. எல்லாத்தெயும் பட்டியல் போட்டு எழுதி வச்சிருக்கேன். சொல்லவா’

‘ம் சொல்லுங்கம்மா’

‘அப்புச்சி கடைல ஒரு கிலோ எறச்சி மசாலா, ஒரு கிலோ மீன் மசாலா, ஒரக்கிற மிளகாய்தூள் புதுசா அரச்சது 1 கிலோ. சுண்டவத்தல், சங்கீதா அப்பளம், மிளகா வத்தல், காதிப்பெருங்காயம் 2 டப்பா. மாப்பிள்ளெக்கு லேசா இருக்குற பருத்தித்துணில 3 சட்டை, ஒனக்கு தேக்கா மார்க்கெட் மாடில 3 நைட்டீ. குமாருக்கு 12 வயசுன்னு சொல்லி ரெண்டு சட்டை டவுசர் வாங்கீருக்கேன். சரியா இருக்கும். கருவேப்பில பொடி, கோமதி கடைல பக்கோடா 1 கிலோ. ஊர் நெலக்கடலெ, ஈக்கான் பிளிஸ், பெரிய கருவாடு, அவ்வளவுதாம்மா பட்டியல்ல இருக்கு. வேறெ எதுவும் வேணுமா?’

‘ம். எல்லாம் சரியா இருக்கும்மா. இதையும் சேத்து இப்பவே வாங்கீருங்க.  செட்டியார் ஹால் கடைல ஒரு பட்டுச்சேலெ. மஞ்சத்தூளெ கழுவி ஊத்துனதுமாரி இருக்கணும். அதே மஞ்சள்ல ஒரு சட்டெ. என் அளவுதான் ஒங்கள்ட இருக்கே. அந்த வாயாடி வள்ளிக்கிட்ட குடுத்து இன்னிக்கே தச்சு வாங்கீருங்க. இங்கெ என்னோட தோழிகள்லாம் மஞ்சள் பட்டு உடுத்துறாங்க. 1கிலோ லட்டு, 1கிலோ ஜாங்கிரி வாங்கீருங்க. வெத்தலெ, பாக்கு, சுண்ணாம்பு கொஞ்சம் வாங்குங்க. மாசக்கா, ஜாதிக்கா அப்புறம் மருதாணி கூம்பு நாலஞ்சு. அட. மறந்துட்டேன். ஒங்க மருமகன் ஜெகனுக்கு ப்ரட்ல தடவுற ‘காயா’ 2 பாட்டில். அது இங்க கெடெக்காது. எல்லாம் எழுதிக்கிட்டீங்களா. அவ்வளவுதான்.’

இன்று தேதி 14. சிவகுமாரும், அணுராதாவும் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குச் சென்றனர். பிசிஆர் சோதனைக்கு என்று எழுதி நூற்றுக்கணக்கான அம்புக்குறிகள் வழிகாட்டின. வழிகாட்டிய பாதையில் நடந்தார்கள். இரண்டாம் தளத்தில் ஒரு வகுப்பறை மாதிரியான இடத்தில் அம்புக்குறி முடிந்தது. ஏற்கனவே சிலர் அமர்ந்திருந்தார்கள். சிவக்குமாரும், அணுராதாவும் ஒரே மேசையில் எதிரெதிரே அமர்ந்தனர். சீருடையில் இருந்த ஒரு உதவியாளர் பெண், ஓடோடி வந்தாள். முதலில் ராஃபிள்ஸ் மருத்துவமனையின் இணைய தளத்தை பதிவிறக்கும் செய்யச் சொன்னாள். பிறகு பிசிஆர் சோதனைக்கான விண்ணப்பத்தை அதிலிருந்து எடுத்து பூர்த்தி செய்யச் சொன்னாள். விண்ணப்பத்தை எடுத்துத் தந்ததுவரை அவளே செய்துவிட்டாள். இப்போது சிவக்குமார் அதை பூர்த்தி செய்ய வேண்டும். கையில் கடவுச்சீட்டு, விமானச்சீட்டு எல்லாம் தயார். பெயர் அடையாள அட்டை எண், வசிப்பிட முகவரி, ஊசி போட்டுக்கொண்டதற்கான ஆதாரம். அது தொலைபேசியிலேயே இருக்கிறது. மின்னஞ்சல் முகவரி, பயணச்சீட்டு எண். புறப்படும் தேதி. நேரம் எல்லாம் பூர்த்தி செய்தாகிவிட்டது. சிவக்குமாருக்கு ஒரு விண்ணப்பம். அணுராதாவுக்கு ஒரு விண்ணப்பம். எல்லாம் முடிந்தது

உள் அறையில் வரிசையாக சிலர் மடிகணினியுடன் அமர்ந்திருந்தார்கள். உதவியாளர் பெண் அவர்களை உள்ளே அனுப்பினாள். ஒரு மடி கணினிக்கு முன் இருவரும் நின்றார்கள். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தந்தார்கள். அவர்கள் சொன்ன தகவலை மீண்டும் சரிபார்த்தார்கள். சில நிமிடங்கள் எதையோ தேடினார். பிறகு அவரே சமாதானம் ஆனார். எல்லாம் முடிந்தது. அந்த வரிசையில் கிட்டத்தட்ட 10 மடிகணினிகள். கடைசியாக அமர்ந்திருதந்த பெண்ணுக்கு முன்னால் ‘காசாளர்’ என்று எழுதியிருந்தது. அவளிடம் இருவரும் சென்றார்கள். அந்தப் பெண்

 ‘சிவக்குமார் அணுராதா சரிதானே’ என்று உறுதிப்படுத்திக் கொண்டாள்.

‘உங்களுக்கான கட்டணம் மொத்தம் 360 வெள்ளி. எப்படிச் செலுத்துகிறீர்கள்?’

‘நெட்ஸ்’

‘சரி. உங்கள் எண்ணைப் பதியுங்கள். எதிரே அமருங்கள். அழைக்கும்போது உள்ளே செல்லுங்கள்.’

அவரை அடுத்து, ஒரு நீலநிறப் படுதா தொங்கிக் கொண்டிருந்தது. அதற்குள்தான் சோதனை செய்வார்கள் என்று சிவக்குமார் நினைத்தது சரிதான். அந்த நீலப்படுதாவை விலக்கி ஒரு பெண் எட்டிப்பார்த்தாள்.

‘சிவா கு மா ர்’

‘நான்தான்’

‘உள்ளே வாருங்கள்’

சிவக்குமார் உள்ளே சென்றார்

‘அனு ரா டா ‘

‘நான்தான்’

அணுராதா உள்ளே சென்றார்

காது குடையும் பஞ்சிலேயே ஒரு பெரிய அளவுப் பஞ்சால் இடது வலது என்று மூக்கைக் குடைந்தாள். கிடைத்த மாதிரியில் திருப்தி அடைந்தாள். அதை ஒரு கண்ணாடிக் குழாயில் பொத்திக் கொண்டு ‘செல்லலாம்’ என்றார்கள்

14ஆம் தேதி இரவு 8மணி.

‘பிசிஆர் முடிவு வந்துருச்சா?’  சங்கீதா கேட்டாள்.

‘வரும் என்று சொன்னார்கள். எதிர்பார்க்கிறேன்.

8.00

8.05

8.10

ஆங் வந்துவிட்டது. ராஃபிள்ஸ் மருத்துவமனையிலிருந்துதான். ஏதோ doctor world என்று வந்திருக்கிறது. மின்னஞ்சலை வெடவெடக்கும் விரல்களால் திறந்தார் சிவக்குமார்.

‘உங்களுக்குக் கிருமி இருக்கிறது. நீங்கள் பயணம் செய்ய முடியாது’

 

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationஎழுத்தாளர் குரு அரவிந்தனிடமிருந்து “சிறுகதை எழுதுவது எப்படி?” பயிற்சிப்பட்டறை.
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *