துஆ

This entry is part 7 of 13 in the series 24 ஏப்ரல் 2022

 

இஸ்லாமிய கலாச்சாரத்தின் பின்னணியில் நோன்புப் பெருநாள் சிறுகதை

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆமினாவும் மஹ்முதாவும் டன்லப் தெரு அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் ரமலானின் தராவீஹ் தொழுகையில் கலந்துகொள்கிறார்கள். 2020,2021ல் கொவிட் கெடுபிடிகள். பாதுகாப்பு இடைவெளி, முன்பதிவு என்று பள்ளியில் சந்திப்பதையே அவர்கள் நினைத்துப் பார்க்கமுடியாத வகையில் இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. பள்ளிகள் மீண்டும் வழக்கம்போல் செயல்படவேண்டும் என்ற அவர்களின் துஆவை அல்லாஹ் கபுல் செய்துவிட்டான். 2022 ஏப்ரல் 2ஆம் தேதி அவர்கள் பள்ளியில் சந்தித்துக் கொண்டார்கள்.

இருவருக்கும் இடையே 30 ஆண்டுகால நட்பு. ஆமினாவுக்கு வீராசாமி ரோட்டில் வீடு. மஹ்முதா இருப்பது சந்தர் ரோட்டில். மஹ்மூதா உண்மையில் பாவம். 30 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் மீகோரிங் வியாபாரம் செய்யும் சேக்தாவூதுக்கு வாழ்க்கைப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள குடவாசலிலிருந்து சிங்கப்பூர் வந்து, சிங்கப்பூரிலேயே நிரந்தரமாகிவிட்டார். குடவாசலில் தன் தகப்பனாரின் பூர்வீக வீடு இப்போது மஹ்முதா தம்பியிடம். குடவாசல் சென்றால் தம்பி மனைவிக்கு பயப்படவேண்டிய நிலை. பெற்ற தாயும் அவர்களோடுதான். அம்மாவைப் பார்ப்பதற்காக அவர் குடவாசல் போகத்தானே வேண்டும். தன் அம்மாவைப் பார்க்கத்தான் மஹ்முதா செல்வார். அந்த வீட்டில் எந்த உரிமையும் இல்லாததுபோல்தான் இருக்க வேண்டிய சூழ்நிலை. சிங்கப்பூரில் தன் கணவர் சேக்தாவூது சென்ற ஆண்டு வஃபாத் ஆகிவிட்டார். வஃபாத்துக்குக்கூட ஆமினா செல்லமுடியவில்லை. கொவிட் அனுமதிக்கவில்லை. இப்போது சிங்கப்பூர் வீடு தன் மகன் பொறுப்பில். ஆனாலும் மருமகளுக்கு பயந்து இருக்கவேண்டிய நிலை. இது பாவம்தானே? ஆனால் மஹ்மூதா ‘இது அல்லாஹ்வின் திட்டம்’ என்று ஏற்றுக் கொண்டுவிட்டார்.

ஆமினா 30 வருடங்களுக்கு முன் கணவரோடு கூடவே சிங்கப்பூர் வந்துவிட்டார். இருவரும் வீராசாமி ரோட்டில் இருக்கிறார்கள். மகள் நிக்காஹ் முடிந்து, புதிய வீடு வாங்கி பக்கத்திலேயே தனிவீட்டில் இருக்கிறார். ஆமினா எல்லா உரிமையோடும் தன் வீட்டில் இருக்கிறார்.

அவர்கள் சந்திப்பதும், மனம்விட்டுப் பேசுவதும் இந்த தராவீஹ் தொழுகை முடிந்த பிறகுதான். ஆமினா சுடச்சுட இஞ்சிடீ போட்டுக்கொண்டு வருவார். மஹ்முதா அன்று செய்த ஜாலா தோசை, வடை, வாடா, சமோசா என்று ஏதாவது கொண்டுவருவார். பகிர்ந்துகொள்வார்கள். மஹ்முதாவுக்கு ஊர்த் தொடர்பு இன்னும் நெருக்கமாக இருக்கிறது. குடவாசலில் பல சிங்கப்பூர்வாசிகள் இருக்கிறார்கள். அவ்வப்போது மஹ்முதாவின் தாயார் காய்ந்த கறி (உப்புக்கண்டம்) காய்ந்த குடல் கறி, கைஅப்பளம், பரங்கிப்பேட்டை ஹல்வா, பதுர்பேணி, சீப்புப்பணியாரம், நானஹத்தா என்று நிறைய ஊர்ப்பண்டங்கள் கொடுத்தனுப்புவார். அடிக்கடி குடவாசலிலிருந்து பலர் சிங்கப்பூர் வருவதால், மஹ்முதாவின் தாயாருக்கு அது எளிதாகவே இருந்தது. அவர் நிறைந்த பரோபகாரி. தன் வீட்டின் ஒரு பகுதியையே பிள்ளைகள் ஓதுவதற்கான அரபி மதரஸாவுக்கு கொடுத்துவிட்டார். இப்பவும் பெரிய அளவில் ஜகாத் கொடுக்கும் குடும்பம் மஹ்முதா குடும்பம்தான். ஊரிலிருந்து எது வந்தாலும் அதிகமான பங்கை ஆமினாவுக்குக் கொடுப்பார் மஹ்முதா. ஆமினாவுக்கு ஊர்ப்பண்டம் என்றால் உயிர். ஆயிரம் வெள்ளியையும், உப்புக்கண்டத்தையும் ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தால், உப்புக்கண்டத்தைத்தான் எடுப்பார். அந்த உறவு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளியில் தொடர்வது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி. நீண்டநாள் முடிக்கமுடியாமல் கிடந்த வீடு முடிக்கப்பட்டு குடியேறியதுமாதிரி.

ஆனால் அன்று மஹ்முதா முகத்தில் மகிழ்ச்சி இல்லை. ஏதோ ஒன்று அவரை அழுத்திக் கொண்டிருக்கிறது.தொழூகை இடைவெளிகளில் இமாம் துஆ கேட்கும்போதெல்லாம் கண்ணீரை அடக்கமுடியாமல் முகம் பொத்தி அழுதார். அவரிடம் எதுவுமே பேசமுடியவில்லை. பேசுவதற்கு தொழுகை முடியவேண்டும். தொழுகை முடிந்துதானே பேசமுடியும். 9 மணிக்கு ஆரம்பிக்கும் தொழுகை 10.30க்குத்தான் முடியும். இறுதியில் இமாம் துஆ செய்யும்போது, பொங்கிப்பொங்கி அழுத மஹ்முதாவை தன் தோளோடு அணைத்து பொத்திக்கொண்டார் ஆமினா. ஏதோ ஒரு பெரிய கவலை, தாங்கமுடியாத வலி இருக்கவேண்டும். மஹ்முதா சொல்வார் என்ற நம்பிக்கை ஆமினாவுக்கு உறுதியாக இருந்தது. அது வீண்போகவில்லை.

மஹ்முதா சொன்னார்.

‘ஊர்ல அம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல ஆமினா. ஏதோ இருதயக் கோளாறாம். தம்பி, அம்மாவெ மருத்துவமனையில சேத்துட்டாரு. ஒரு லட்சம் உடனே அனுப்புங்க மத்ததெ நா பாத்துக்கிறேங்றாரு. மகன்ட கேட்டேன். ஊர்ல சொத்தையெல்லாம் எடுத்துக்கிட்டாரு. நீங்க போனாலும் பயந்துபயந்து போய் அம்மாவெப் பாத்துட்டு வர்றீங்க. சொத்துகளெ அனுபவிக்கிறவரு கொடுக்கட்டுமேங்கிறாரு. அதுவும் நியாயம்தான். ஆனா பெத்த அம்மாவாச்செ. அவங்களுக்கு ஒன்னுன்னா நா  எப்புடிம்மா சும்மா இருக்கமுடியும்.’

வார்த்தைகள் மிகச்சிரமப்பட்டு வந்தன. தோளில் சாய்ந்து மீண்டும் தேம்பினார். பேசமுடியாமல் தொண்டை அடைத்தது. ஆனாலும் தொடர்ந்தார்

‘ஆமினா எனக்கு ஒரு ஒதவி செய்ங்க. என்கிட்ட கொஞ்சம் நகெ இருக்கு. எடுத்துட்டு  வந்திருக்கேன்’

என்று சொல்லி, தன் கைப்பையைத் திறந்து காட்டினார். எல்லாம் பெரிய பெரிய நகைகள். ஆமினா திடுக்கிட்டுப் போனார்.

மஹ்முதா தொடர்ந்தார்

‘எனக்கு இந்த நகெயெ எங்கெ விக்கிறதுங்கிறதெல்லாம் தெரியாது. இது எல்லாம் என் சொந்த நகை. என் மகனுக்குக்கூடத் தெரியாது. எப்படியாவது இதெ வித்து எனக்கு 2000 வெள்ளிதாங்க. பணமாற்று யாபாரம் செய்ற சிராஜு நம்ம சொந்தக்காரருதான். காலைல குடுத்தா சாயந்தரமே என் தம்பிக்கிட்ட காசெ சேத்துருவாரு.’

மீண்டும் முகம் பொத்தி அழுதார். ஆமினா சொன்னார்

‘என்ன மஹ்முதா இப்புடியெல்லாம் பேசுறிங்க. ஒங்க அம்மா என் அம்மா மாதிரி இல்லியா. ஒங்க நகைகளெ வித்துத்தான் நா குடுக்கணுமா? என் சொந்தக்காசே 2000 வெள்ளிக்கு மேலெ இருக்கு. நாளெக்கி காலைல கொண்டுவந்து தர்றேன். இது நமக்குள்ள இருக்கட்டும். நகைகளெ எடுத்துக்கிட்டு சந்தோஷமா போங்க. அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது.  ஒங்க துஆவெ என்னோடெ துஆவெ அல்லாஹ் கண்டிப்பா கபுல் செய்வான். தைரியமா இருங்க.’காலைல பத்து மணிக்கெல்லாம் நா வந்துருவேன். ‘

சொன்னபடியே அடுத்தநாள் ஆமினா 2000 வெள்ளியை மஹ்முதாவிடம் கொடுத்துவிட்டு திரும்பிவிட்டார். ஆமினா, மஹ்முதா இருவருமே 60ஐத் தாண்டியவர்கள். பள்ளிவாசலில். அடுத்தடுத்த நாற்காலியில் உட்கார்ந்துதான் தொழுவார்கள். ஆமினாவுக்கு ரத்த அழுத்த நோய் உண்டு. அதற்காக அவர் மருந்து எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். காசைக் கொடுத்து வந்ததும் இஃப்தாருக்கான சமையலில் இறங்கிவிட்டார். ஒரு குக்கரை அடுப்பில் ஏற்றியபோது தலை சுற்றி தடுமாறினார். வயிற்றைக் கலக்கிக்கொண்டு வந்தது. கழிவறை சென்றார். வியர்த்துக் கொட்டியது. ஏதோ செய்கிறது. மகள் வீடு பக்கத்தில்தான். கணவர் வேறு வேலையாக தூரத்தில் இருக்கிறார். நிற்கக்கூட முடியவில்லை. சுவற்றைப் பிடித்தே நடந்துவந்து படுத்துக்கொண்டார். மகளை அழைத்தார். இன்னும் மயக்கமாகத்தான் இருக்கிறார். ரத்த அழுத்தம் அதிகமாகியிருக்கலாம். தொலைபேசிச் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் அடுத்த நிமிடமே மகள் வந்துவிட்டார். ரத்த அழுத்தம் பார்த்தார் 190ஐத் தொட்டது. அதிர்ந்துபோனார். அது மிகவும் ஆபத்தான அளவல்லவா? அத்தாவிடம் செய்தியைச் சொல்லிவிட்டு ஆம்புலன்ஸை அழைத்துவிட்டார் அடுத்த சில நிமிடங்களில் மூன்று மருத்துவர்களுடன் ஆம்புலன்ஸ் சங்கூதிக்கொண்டு வந்துவிட்டது.

வீட்டு வாசலில் செருப்பு கிடந்தாலும் ஆமினாவுக்குப் பிடிக்காது. அவ்வளவு சுத்தம் பார்ப்பார். மூன்று மருத்துவர்களும் பூட்ஸ் காலுடன் ஏகப்பட்ட கருவிகளோடு உடல்முழுக்க ஒரு ஊதா நிற கவசத்துடன் அறைக்கே வந்துவிட்டார்கள்.  கிடுகிடுவென்று ஈசிஜியை ஓடவிட்டார்கள். உடம்பில் பல இடங்களில் எதையெதையோ பொருத்தினார்கள். ஒருவர் ஈசிஜியைக் கண்காணித்தார் ஒருவர் ஆக்‌ஸி மீட்டரை வைத்தார். இன்னொருவர் ரத்தத்தில் சக்கரை அளவைப் பார்க்க ஊசியோடு தயாரானார். ஆக்ஸி மீட்டர் பார்த்தவர் ஏஆர்டி எடுக்கத் தயாரானார். எல்லாம் மளமளவென்று முடிந்தது. ரத்தழுத்தம் இப்போது 180 காட்டியது. ரத்தத்தில் சர்க்கரை 7.8 என்றது. ஏஆர்டி நெகடிவ் என்றது. எதுவுமே அபாயமல்ல. ஈசிஜியும் பயங்காட்டவில்லை. மூத்த மருத்துவர் சொன்னார்.

‘எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. பயப்பட ஒன்றுமில்லை. ஆனாலும் தீடீரென்று 190 காட்டுகிறதென்றால் நரம்புப் பிரச்சினை இருக்கலாம். சி.டி ஸ்கேன் மற்றும் சில சோதனைகள் செய்தால்தான் தெரியும்.’

சொன்னதோடு சக்கரநாற்காலியை ஒருவர் வீட்டுக்குள் கொண்டுவந்தார். ஆமினாவை ஏற்றிக்கொண்டிருக்கும்போது கணவர் வந்துவிட்டார். ஆமினாவுக்குத் துணையாக கணவர் இருந்துகொண்டார். ஆம்புலன்ஸ் டன்டாக்சென் மருத்துவமனைக்கு விரைந்தது. சிறிது நேரம் காத்திருப்புக்குப்பின் சிறப்பு அறை ஒதுக்கப்பட்டது. உடன் சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது எதுவும் பயப்படும்படியாக இல்லை. மருத்துவர் சொன்னார்

‘மூத்த மருத்துவர் வேலை முடிந்து சென்றுவிட்டார். நாளைக்காலை அவர் வந்தபிறகு அவர் ஒப்புதலுடன் நீங்கள் வீட்டுக்குச் செல்லலாம். ஸ்கேன் முடிவுகள் பயப்படும்படியாக இல்லை. ஆனாலும் மூத்த மருத்துவர்தான் முடிவெடுக்க முடியும்.’

அன்று இரவு ஆமினா தொழுகைக்குச் செல்லவில்லை. செல்லவும் முடியாது. மஹ்முதாவிடம் கொடுத்த காசு அன்று மாலையே மஹ்முதா தம்பியிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆமினாவுக்கு  இப்படி ஆகிவிட்டது மஹ்முதாவுக்கு பேரதிர்ச்சியாகிவிட்டது. அன்று தொழுகை முடிந்து அல்லாஹ்விடம் ஏந்திய கைகளை மஹ்முதா இறக்கவே இல்லை. கண்ணீர் கொட்டியது.

‘அல்லாஹ் ஏந்திய என் கைகளை வெறுங்கைகளாக ஆக்கிவிடாதே. ஏதாவது பாவங்கள் தவறுகள் இருக்கலாம். இந்த ரமலானின் பரக்கத்தைக் கொண்டு ஆமினாவையும் என் தாயாரையும் நலமோடு என்னிடம் சேர்த்துவிடு……’

மனசுக்குள்ளேயே கதறினார் மஹ்முதா. அடுத்தநாள் காலை 10 மணி.  மூத்த மருத்துவர் வந்துவிட்டார். எல்லா சோதனைகளையும் பார்த்தார். பின் சொன்னார்.

‘ஒன்றும் பிரச்சினை இல்லை. சில பேப்பர்கள் தயாராக வேண்டும் எல்லாம் முடிந்ததும் கையெழுத்துப் போட்டுவிட்டு உங்கள் மனைவியைக் கூட்டிச் செல்லுங்கள்.’

ஆமினா இயல்பு நிலைக்கு வந்துவிட்டார். 11 மணி. மஹ்முதா தொலைபேசியில் அழைத்தார். ஆமினாவுக்கு சலாம் சொல்லியபோது குரல் உடைந்தது.

‘பயப்படாதீங்க மஹ்முதா. ஒன்னும் பிரச்சினை இல்லென்னு மூத்த மருத்துவர் சொல்லிட்டாரு. இன்னிக்கு சாயந்தரம் வீட்டுக்கு வந்துருவேன். ஒடம்புல தண்ணிச்சத்து இல்லியாம். நெறையா தண்ணி குடிக்கச் சொன்னாரு. வேறெ ஒன்னுமில்ல மஹ்முதா. இன்னிக்கு ராத்திரி பள்ளியில சந்திப்போம். தைரியமா இருங்க. அல்லாஹ் நம்மல அவ்வளவு எளிதா கைவிட்றமாட்டான். அதுவும் ரமலான் மாதம்.’

மஹ்முதா சொன்னார்

‘நீங்க எனக்கு செஞ்ச ஒதவி சாதாரணமானதில்ல ஆமினா. நிச்சயமா நம்ம துஆவெ இந்த ரமலானின் பரக்கத்தைக் கொண்டு அல்லாஹ் கபுல் செய்துவிடுவான்.’ என்று சொல்லிக் கலங்கினார்.

அன்று  இரவு இருவரும் பள்ளியில் சந்தித்துக் கொண்டார்கள். ஆனந்தக் கண்ணீர் கயிறாக இருவரையும் கட்டிப்போட்டது. மஹ்முதா சொன்னார்

‘அம்மாவுக்கு பயப்படும்படி ஒன்னும் இல்லியாம். இன்னிக்கி ராத்திரி வீட்டுக்கு வந்துருவாங்கலாம். ஏதோ அடப்பு இருக்குறது மாரி இருந்துச்சாம். ஸ்டன்ட் வக்கனும்னு சொன்னாங்க. இப்ப அதுவும் தேவையில்லையாம். எல்லாமே கனவுமாரி வந்து பயங்காட்டிட்டுப் போயிருச்சு’

அன்று இரவுத் தொழுகை முடிந்து இமாம் சில நிமிடங்கள் பயான் செய்தார். அன்றைய தலைப்பு துஆவின் மகிமை. இமாம் பயானை இந்த வார்த்தைகளோடு முடித்தார்.

‘இந்த ரமலான் மாதத்தின் பரக்கத்தைக் கொண்டு  நீட்டும்  கைகளை தன் அருட்கொடையால் அல்லாஹ் நிறைத்துவிடுவான்.’

யூசுப் ராவுத்தர் ரஜித்   

Series Navigationஉலகப் புத்தகத் தினத்தை ஒட்டி                                   நனவிலி
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *