நாவல் தினை அத்தியாயம் முப்பத்துநாலு CE 5000
வைத்தியர் பிரதி நீலன் ஆல்ட் க்யூவில் இருந்து வந்திருக்கிறார். ஆல்ட் க்யூ அவர் வசிக்கும் பிரபஞ்சமாகும். நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சம் காஸ்மோஸ் என்ற பெயர் கொண்டது.
ஆல்ட் க்யூ, காஸ்மோஸுக்கு மாற்றுப் பிரபஞ்சமாகும். Alternate Universe. அங்கே மற்றொரு பெருந்தேளரசர், மற்ற குயிலி, மற்றொரு வானம்பாடி, மற்றொரு குழலன் இன்னும் கோடிகோடி உயிர்கள் ஆல்ட் க்யூ பிரபஞ்சத்தின் எண்ணிறந்த நட்சத்திர மண்டலங்களில் கிரகங்களிலும் உப கிரகங்களிலும் இந்த நிமிடம் வாழ்ந்திருக்கலாம். பிறந்து வாழ்ந்து இறந்திருக்கலாம். இன்னும் பிறந்திருக்கவில்லை என்று கூட இருக்கலாம்.
அவர்களின் ஆளுமையும், வாழ்க்கையும் நம்முடையவற்றை விட வேறாக இருக்கக் கூடும். அவர்களில் ஒருவரான இந்த நீலன் பிரபஞ்சம் விட்டு பிரபஞ்சம் வந்து, என்றால் ஆல்ட் க்யூவில் இருந்து காலப் பயணப்பட்டு உறவும் நட்புமாட இந்த காஸ்மோஸ் வந்திருக்கிறார்.
குழலன், குயிலி போல அவர் யார் என்று தெரிந்தவர்களால், பிரதி நீலன் ஆல்ட் க்யூ என்று இங்கே அடையாளம் காட்டப்படுகிறார்.
பிரதி நீலன் செயற்கை அறிவுத் திட்டங்களை உள்ளங்கை பயோ கணினியில் இருந்து கண்ணுக்குள் காட்சியாக மாற்றிச் சத்தம் இன்றி படித்துக் கொண்டிருக்கிறார்.
ஆல்ட் க்யூ பிரபஞ்சம் காலக்கோடு விஷயத்திலும் உயிரினங்கள் விஷயத்திலும் கொஞ்சம்போல இந்தப் பூவுலகு உள்ள காஸ்மாஸ் பிரபஞ்சத்தை ஒத்திருக்கும்.
மனத்தோடு மனம் தொடர்பு மூலம் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டு பழைய அந்தக் காலத்திலிருந்து வந்த ஆல்ட் க்யூ பிரதி நீலனுக்கு செயற்கை அறிவு அமைப்பில் இருந்து, உள்ளங்கைக் கணினி வரை அறிவும் அனுபவமும் கடத்தி விட்டான் நம் காஸ்மோஸ் குழலன்.
குழலன் சொன்னபடி கேட்பார் பிரதி நீலன். அவர் மனம் அந்த வகையில் தற்காலிகமாகக் குழலனால் கட்டமைக்கப் பட்டிருக்கிறது.
பிரதி நீலன் முதலில் அந்த செயற்கை அறிவு அமைப்பிடம் கேட்டது இறந்து போகாமல் எப்படி இருப்பது என்பதுதான். அது சாத்தியமில்லை என்று அந்த அமைப்பு திட்டவட்டமாகச் சொல்லி விட்டது.
என் போன்ற மின்னணு அமைப்புகளே சாசுவதமானவை அல்ல என்கிறபோது அற்பப் பிறப்பான உடல்-உயிர் கட்டுமானத்தில் பட்ட எலும்புகளும், சதையும், இதயமும், பார்வை, பேச்சு, ருசி, கேள்வி, தொடுதல், பிற உணர்ச்சிகள், அறிவு, நரம்பு மண்டலம் என்று எல்லாம் இசைந்து நடமாடும் இயந்திரமான மனிதன் எப்படி இறப்பின்றி உயிர்க்க இயலும்?
அந்த செயற்கை அறிவு அமைப்பு கேட்டது.
அடுத்துக் கேட்டார் பிரதி நீலன் ஆல்ட் க்யூ-
சரி, போகட்டும் உயிர்த்து இருக்கும் காலத்தை நீட்டிக்க முடியுமா
அதை நிறைவேற்ற முடியுமா என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.
என்ன செய்து நீடிக்க முயல்வது?
குறிப்பிட்ட உணவைத் தினம் குறிப்பிட்ட நேரத்தில் உண்பது, பசிக்கும்போது உண்ணாவிரதம் இருந்து, பசியாத நேரத்தில் உண்பது, ஒரு நாளைக்கு பதினாறு இருபத்து நான்கு குவளை தண்ணீர் குடிப்பது, ஒரு நாளைக்கு இருபது குவளை மோர் பருகுவது, பூங்காவில் தன்னிச்சையாக வளர்ந்திருக்கும் புல், பூண்டுகளைத் தன்னிச்சையாக உண்பது, மனிதன் தன்னை நாயாகக் கற்பனை செய்து குக்கல் உணவை உண்பது, பசுவாக, நரியாக, புலியாக, அரிமாவாகக் கற்பனை செய்து அவைபோல் உண்ணுதல், கழுகு போல் கற்பனை செய்து பச்சை மாமிசம் உண்டு சுனைநீர் பருகுதல் என்றும் இன்னம் பலவாகவும் உண்டு ஆரோக்கியம் மிகுந்து, குறைந்தது ஒரு ஆண்டாவது ஆயுள் நீடிப்பது என்று கிடைக்க முயல்வது இப்படியான முயற்சிகள் நிறைய நடக்கின்றன.
இதெல்லாம் கடைப்பிடித்து உயிர் உடலில் இன்னும் கொஞ்சம் நாள் தங்கிப் போகுமா?
அங்கே தான் சிக்கல். ஏற்கனவே உடலிலும் உயிரிலும் பதிவான இறுதி தினம் தெரியாது என்பதால், நீடிப்பு ஒரு நாள் நிகழ்ந்தாலும், இருபது வருடம் நிகழ்ந்தாலும், அந்த முயற்சியின் வெற்றி தெரிய வராது.
அதை நான் சொல்ல வேண்டும்.
எதை?
போகட்டும். நீ என்ன யோசனை சொல்கிறாய் ஆயுள் நீடிக்க, அதாவது ஆயுள் நீடிக்க ஆய்வு செய்ய?
எனக்கு இது குறித்து யோசனை ஏதுமில்லை.
நாம் நல்ல நண்பர்கள். எனக்காக யோசித்துப் பார்க்கலாமே.
எனக்கு அப்படியான பிரியம், நட்பு, அன்பு போன்ற உணர்வுகள் கிடையாது.
வினோதமான யோசனை இருந்தால் கூட சரிதான்.
எப்படி, மங்களபுரத்தில் தவளை விழுங்குவது போலவா?
பிரதி நீலன் ஆல்ட் க்யூ சுறுசுறுப்பானார். இந்த தவளை விழுங்குவது பற்றி அவருக்குக் கடத்தப்பட்ட அறிவில் ஒரு வாக்கியத்தில் கூறப்பட்டிருந்தது. அவர் அதைப் படித்துவிட்டு, சிரித்துவிட்டு மறந்தும் விட்டிருந்தார்.
மங்களபுரத்தில் வருடம் இரண்டு தடவை இரண்டு குடும்பங்களாக சாமியார்கள் –ஆமாம், அவர்கள் குடும்பத்தோடு இருப்பவர்கள் – இமயமலையின் பனிச் சிகரங்களிலிருந்து வந்து குத்திருமலுக்கு வைத்தியம் பார்ப்பார்கள். ஒரு சல்லிக் காசு தான் வைத்தியருக்குத் தரவேண்டியது.
வரிசையில் விடியல்காலையில் வந்து அமர வேண்டும். ரிஷிபத்னிகள் போல் கூந்தலை இறுக்க வாரி உயர்த்திக் கொண்டை போட்ட இரண்டு ஸ்தூல சரீரப் பெண்கள் பாத்திரங்களில் மூங்கில் மூடி கொண்டு மூடி எடுத்து வருவார்கள்.
மூங்க் கோலோ என்று மந்திரச்சொல் கூறக் கண் மூடி வாய் திறந்திருக்க வேண்டும். திறந்த வாயில் ஒரு தவளை உயிரோடு ஆமாம் உயிரோடு இடப்படும்.
அடுத்த பத்து நிமிடம் நோயாளியோடு கூட வந்த நட்பும் சுற்றமும் அவர் இந்தத் தவளைக் குஞ்சை மென்று தின்ன வைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். வாயும் வயிறும் பிரட்டி உண்டது திரும்ப வெளியேறாமல் வந்தால் மறுபடி அதை விழுங்க வைக்க உறவினர்கள் கவனமாக இருக்க வேண்டும். சரியாக விழுங்க வைக்க கருப்பு கோலா பானம் ஒரு மிடறு புகட்டலாம்.
இப்படி தவளை சாப்பிட்ட ஒரு மண்டலத்தில் நோயாளி நோய் குணமாகிறதாக நம்பிக்கை. அதற்கப்புறம் எப்போதாவது, குத்திருமல் திரும்பி வந்தால் ஊர்க் குட்டையில் தவளை பிடித்து உண்ண வேண்டியது தான்.
வருடம் இரண்டு நாள் தவளையை சூப் செய்து குணமான நோயாளிகளுக்கு அதைப் பருகக் கொடுத்தலும் நயம் பயக்கும்.
இந்த தவளை வைத்தியத்தை செயற்கை அறிவு அமைப்பு அதைப் போகிற போக்கில் கோடி காட்டிய காரணம் என்ன?
பிரதி நீலன் ஆல்ட் க்யூ யோசித்துப் பார்க்க அவருக்கு இன்னும் புரியவில்லை. வேறு ஏதாவது எளிய போம்வழி இருக்கக் கூடும்
செயற்கை அறிவு அமைப்பிடம் கேட்டார் – வேறு என்ன செய்யலாம்?
சஞ்சீவனி குடிக்க நாளாகலாம் என்றால் இப்போதைக்கு வேறு ஏதாவது கொடுக்கலாமே.
தவளையா?
கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனால் தவளை அத்தனை கோடி கிடைக்காது என்பதால் அவற்றுக்குப் பதிலாக மாட்டு ஈ என்ற உன்னிகளே அவை. மேலும் தவளைகள் பெருந்தேளரின் தேளரசில் கீழ்மட்ட குழு உயிர்ப்பு கொண்ட உயிரினங்கள் என்பதால் அவற்றை வேட்டையாடி மருந்து தயாரிப்பது தவறல்லவா? (மேலும்)
இப்போதைக்கு சகல இன சஞ்சீவனி விலையில்லாததாக அளிக்கப்பட வேண்டும். யாருக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கத் தான் மிகக் கடினமான யோசனை செய்ய வேண்டியிருக்கும். (மேலும்)
மருந்து சஞ்சீவினிக்கு மாற்று அல்ல அதன் துணைமருந்து என்று எல்லா ஊடகங்களிலும் திரும்பத் திரும்ப அ றிவிக்கப் பட வேண்டும்.
(மேலும்)
சஞ்சீவனிக்கு மாற்று சகல இன சஞ்சீவினி இல்லை, இது இருமல், அரிப்பு, காதுவலி போன்ற வேதனைகளை நீக்கும். மேலும் சஞ்சீவனிக்காக சீரணக் கால்வாயை எந்த நோய்த் தாக்கும் இல்லாமல் தயாராக்கி வைக்கும் என்று குறைந்த பட்ச நிவாரணம் தருவதாக சகல இன சஞ்சீவனி இனம் காட்டப்பட வேண்டும்.
எல்லாம் சரிதான், மருந்து சேர்மானம், செய்முறை என்ன?
உன்னி நிறைந்த இடங்களில் இது பொது யுகம் CE 5000 காலத்தில் கிடைக்காது என்பதால் CE 300 போய் மாட்டுத் தொழுவங்களில் பூவுலகமெங்கும் சேகரிக்கப்பட வேண்டும். (மேலும்)
அவற்றின் இறகு பர்ர்ர்ர் என ஒலியெழுப்பும் வரை அந்த உன்னிகளும், மிளகு விழுதும் உப்பும் கலந்து காடியோடு சேர்த்து அடுப்பில் ஏற்றிக் காய்ச்சப்படும். அடுத்து நூறு தவளைகள் அடுப்பில் ஏற்றி.வேண்டாம் தவளைக் கூச்சல் சகிக்க ஒண்ணாமல் போகும். (மேலும்)
மேலும் இந்த மருந்து குத்திருமலுக்கானது இல்லையே. மருந்து காய்ச்ச மேடை மேல் நான்கைந்து இரும்புச் சட்டிகள் கரியடுப்போ அல்லது போவென்று எரியும் கோட்டையடுப்போ வைத்து கிழக்குப் பார்த்து வைத்து நெருப்புச் சுடரை சிக்கிமுக்கிக் கல்கொண்டு ஏற்றிக் காய்ச்சப்படும். (மேலும்)
மெல்லிய இசை மேடையில் ஒலித்துக் கொண்டிருக்க அடுப்பு பொங்கி வழியும்போது அந்தப் பானைகள் இறக்கி வைக்கப்படும். ஒரு படி மருந்து காய்ச்சினால் இருபது பேருக்கு அதைக் கொடுக்க முடியும்.
எல்லாம் சரி, மருந்து என்ன சுவையோடு இருக்கும்?
பருகிப் பார்த்தால் தான் தெரியும். நான் மின்னணு அமைப்பு, சுவை எனக்குத் தெரியாது.
பின்னே கசப்பா இனிப்பா உப்பா உரைப்பான்னு தெரியாமல் அதை எப்படி விநியோகம் செய்யறது.
கேட்ச் தெம் யங்.
எதுக்கு இந்த பரங்கி பாஷை இங்கே?
You asked for it! ரொம்ப சின்னப் பையன்களாக இல்லாமல் ரொம்ப இளைஞர்களும் இல்லாமல் நடுவாந்திர வயது மாணவர்களைப் பிடிக்கணும். அவர்களுக்கு நல்ல ஆகாரம் கொடுத்து இந்த மருந்தையும் சுடச்சுட ஆளுக்கு ஒரு கரண்டி வாயில் ஊட்டிவிடணும்.
என்ன ஆகும்?
யாருக்குத் தெரியும்?
அப்புறம் ஏன் இத்தனை தடபுடல்?
கஜானாவுக்கு காசு வரும். சஞ்சீவனியையும் அதற்காகக் கட்டி வச்சிருக்கும் பணத்தையும் கொஞ்சநாள் மறந்திருப்பாங்க.
இதைச் செயற்கை அறிவு அமைப்பு திரையில் துப்பியபோது குழலன் அரூபமாக உள்ளே வந்திருந்தான்.
என்ன ஆச்சு, செயற்கை அறிவு அமைப்பு எல்லா திசையிலும் எழுத்து சிதறித் தெரியுதே. கேட்கக் கூடாத கேள்வி எதாவது கேட்டீர்களா என்று சிரித்தபடி பிரதி நீலன் ஆல்ட் க்யூவின் தோளில் தட்ட அவர் விதிர்விதித்து எழுந்தார்.
அவர்கள் பிரபஞ்சத்தில் தோளில் தட்டுவது அவமானப்படுத்துவதாகும் என்று தாமதமாக நினைவு வந்ததும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.
இதுக்கே இவ்வளவு சாங்கோபாங்கமாக மன்னிப்பு கேட்கறியே கசாப்புக் கடையை வச்சுக்கிட்டு நான் எத்தனை விலங்குகள் கிட்டே தினம் தினம் மன்னிப்புக் கேட்கணும்.
உங்க பிரபஞ்சத்திலே இன்னும் மனுஷர்கள் தானே அதிகாரத்தில் என்று பென்சிலால் கன்னத்தில் தட்டிக்கொண்டு கேட்டான் குழலன்.
ஆமா
அங்கே இருந்து தேளும் கரப்பும் ஆட்சி செய்யற இங்கே ஏன் வந்தீர்?
பார்த்தியா என்கிட்டேயே நூல் விட்டுப் பாக்கறியே .. அங்கே இருந்து இங்கே நீ கூப்பிட்டு விட்டியேன்னு தான் இந்த விநோதம் எல்லாம் பார்க்க வந்தேன். இங்கே இருக்க டிஜிட்டல் காசு தரேன்னு நீ சொன்னதும் பிடிச்சிருந்தது.
கரடி மாதிரி கச்சிதமாக வேலையை முடியுங்க, கரெக்டாக பணம் வாங்கிப் போங்க.
புரியலே. கரடியும் இந்த ஒப்பந்தத்தில் உண்டா என்றார் பிரதி நீலன் ஆல்ட் க்யூ
ஓ, அது பழமொழி, கரடியோடு தேன் எடுக்கப் போனால் நமக்குத்தான் முதல்லே தேன் எடுத்துத் தரும். தேன் இனிக்காட்ட காசு வாங்காது.
எனக்குத் தெரிஞ்சு கரடிக்கு இவ்வளவு மரியாதை கொடுக்கற ஒரே கிரகம் நீங்கதான் ஒரே பிரபஞ்சமும் தான் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே செயற்கை அறிவு அமைப்பு திரையில் ஒரு சமவெளிக் கரடியையும் ஒரு பனிக்கரடியையும் காட்டி ஹோலோகிராம் அல்லது விடியோ வேண்டுமா என்று விசாரித்தது.
எதுவும் வேண்டாம் நீ உறங்கப் போ என்று குழலன் கைகாட்ட, Rapid Eye Movement slee ரெம் தூக்கம் வேண்டுமானால் இன்னும் ஒரு மணி நேரம் சென்று உறங்குக என்று அடுத்த தலைப்பைச் சொல்லத் தொடங்கியது.
பிரதி நீலன் துயிலரங்கத்துக்கு வெளியே வந்து விட்டார். குழலனோடு உற்சாகமாகப் பேசினார். அவன் மாட்டு ஈ வேகவைத்து மருந்து காய்ச்சுவதெல்லாம் பிரயோஜனமில்லாத சமாசாரம் என்று புறம் தள்ளினான். அதைத் தேளரசர் நம்பி நாசமாகப் போகட்டும் என்றான்.
அவன் பிரதி நீலன் ஆல்ட் க்யூவுக்கு உபதேசித்தது இப்படி இருந்தது-
குழலன் சொற்படி பெருந்தேளரை சந்தித்து அவருக்கு ஆதரவாகப் பேசப் போகிறார் பிரதி நீலன் ஆல்ட் க்யூ. கூட இருந்து குழி பறிக்கும் வேலை அது. எப்படிச் செய்ய வேண்டும் என்று அரூபனாகவும், மனத்தில் பேசியும் வழிநடத்துவான் அவன். பெருந்தேளரை இக்கட்டில் விட்டுவிட்டு பிரதி நீலன் போன தடம் தெரியாமல் கிளம்பி விடுவார்.
சும்மா இல்லை. ஆல்ட் க்யூ கசாப்புக்கடைக்கார பிரதி நீலன் பத்தாயிரம் டிஜிட்டல் அவரது பிரபஞ்ச வங்கிக் கணக்கில் வரவு பெற்றுக்கொண்டு தன் பிரபஞ்சம் திரும்புவார். குழலனும் அவனுக்குக் கொடையாளர்களும் அளிக்கும் செய்கூலி அது.
******************************
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த சந்திப்பு அடுத்த நாள் மாலை நடந்தது. பெருந்தேளரை ஆல்ட் க்யூ நீலன் சந்தித்தபோது கூட யாரும் இல்லை.
சகல இன சஞ்சீவனி என்ற பெயரே பெருந்தேளருக்குப் பிடித்துப் போனது.
சகல உயிருக்குமான சஞ்சீவனி உண்டா, இருந்தால் அதை எப்படிப் பயனுறுத்தலாம்? பெருந்தேளர் கேட்டுக் கொண்டபடி துயிலுணர்ந்து எழுந்து வந்த நீலன் இவை குறித்து ஆய்வு நடத்தினார். மருத்துவச் சுவடிகள் போன்ற ஆயிரமாண்டு பழமை சார்ந்த அறிவு, அனுபவப் பகிர்வு ஆகியவற்றில் முழு ஈடுபாட்டோடு ஒன்றியிருந்து சகல இன சஞ்சீவினி உருவாக்க வழி கண்டுபிடித்திருக்கிறார். இதை மகிழ்ச்சியோடு பெருந்தேளர் நாடு முழுக்க அறிவித்திருப்பார்.
அவருக்கும் அரண்மனையில் சிலருக்கும், முதியோரில் பலருக்கும் தவிர அவருடைய உற்சாகம் பரவலாகப் பற்றிப் பீடிக்கவில்லை.
பெருந்தேளரசர் நீலனிடம் உரக்க யோசித்தார் –
சஞ்சீவனி விஷயமாக ஒவ்வொருத்தரும் கட்டாயமாகப் பதினைந்தில் இருந்து இருபது டிஜிட்டல் நாணயங்கள் தேளரசுக்குக் கட்டணமாகக் கட்டியிருக்கிறார்கள். அது சஞ்சீவனியாக வரும்போது வரட்டும் என்று அடுத்த மருந்து சகல இன சஞ்சீவனி வெளியாகப் போகிறது. அதற்கு நாட்டு மக்களிடமிருந்து கட்டாயக் கட்டணமாக இன்னும் ஒரு பத்து நாணயம் கேட்டுத் தொல்லைப் படுத்துவார்கள். கேட்கக் கேட்க விளையக் காசு எங்கே வீடு வீடாக வீட்டுப் பின்புறம் தோட்டத்தில் அகழ்ந்து எடுக்கப்படுகிறதா என்ன? கொடுத்த காசை எல்லாம் தேளரசர் சந்தியில் செருகிக் கொண்டாரா என்ன, அடுத்த பிச்சைக்கு வந்து நிற்கிறான்கள்.
சொல்வார்கள். தேளரசர் பின்னால் தடவிப் பார்த்துக் கொண்டார். கர்ப்பூரன் வாசலில் ஒரு நிமிடம் நின்றான். ராஜன், குலகுரு தூங்கி எழுந்துவிட்டார் போலே இருக்கே!
உள்ளே வந்து பிரதி நீலன் ஆல்ட் க்யூ காலைத் தொட்டு வணங்கினான்.
நீங்கள் இல்லாவிட்டால் நான் எங்கே இங்கே இப்படி வந்திருப்பேன்! அவன் நெக்குருகி நின்றான்.
உன்னையும் தெரியும் உங்கப்பனையும் தெரியும் போடா என்று பிரதி நீலன் ஆல்ட் க்யூ மனதில் நினைத்தான்.
அரச ஆலோசகர் கர்ப்பூரம் அடுத்து எதற்குப் புது வரி விதிக்கலாம் என்று ஆலோசனை தரவுமான நேரம் தான் இது.
மாணவர்களிடம் சகல இன சஞ்சீவனி பிரயோகித்தல் வேணுமா என்று ஆவேசமாக விவாதித்தான் அவன்.
இதை வாத்தியார்களிடம் விட்டு விட்டு தினசரி இருபது பேரை, எந்த இனமாக இருந்தாலும் சரி, அவர்களை அழைத்து வந்து மருந்து பருகத் தரவேணும் என்றும் இன்னமும் சொல்லிக் கொண்டிருந்தது எப்படியோ அப்போதைக்கு அப்போது வெளியே தெரிந்து கொண்டிருந்தது. உள்ளங்கை பயோகணினியில் அவசரச் செய்தியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது,
அரண்மனையில் சமையல் செய்யும் வெள்ளைக் கரப்புக் கிழத்தின் கொழுத்த உடம்பில் பெருந்தேளருக்கு ரொம்ப நாளாக ஒரு ஈர்ப்பு. இது இனக்கவர்ச்சி சார்ந்ததில்லை என்று சொல்ல வேண்டியதில்லை.
ஆக, அரண்மனை ரகசியம் அங்காடி பரஸ்யமானது ஒரு கரப்பி சேடிப் பெண் மூலம் என்றிருக்க, சமையல் கிழத்தைக் குற்றவாளியாக்கி உடனே உயிர் நீக்கும் தண்டனை கொடுக்கப்பட்டது.
அன்று ராத்திரி வெள்ளைக் கரப்புக் கிழம் அரண்மனையில் சமையல் செய்யவில்லை. அவர் அரண்மனைச் சமையலாகி விட்டார்.
- நாவல் தினை அத்தியாயம் முப்பத்துநாலு CE 5000
- இந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி