ஓர் அமெரிக்கத் தமிழனின் சிந்தனைகள்

This entry is part 1 of 5 in the series 29 அக்டோபர் 2023

பி.கே. சிவகுமார்

நமது அமெரிக்கக் குழந்தைகள் (மூன்று பகுதிகள்) – 2022ல் எழுதியது

அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொன்னவை – 2022ல் எழுதியது

ஓர் அமெரிக்கக் கனவு – அக்டோபர் 26, 2023ல் எழுதியது

மேற்கண்ட ஜெயமோகன் கட்டுரைகள் ஜெயமோகன்.இன் என்கிற அவர் இணையதளத்தில் கிடைக்கின்றன.

அக்கட்டுரைகளை முன்வைத்து என் சில சிந்தனைகள்..

****

ஜெயகாந்தன் 2000-ஆம் ஆண்டில் அமெரிக்கா வந்தபோது அவரிடம் அறிவுரை கேட்டார்கள். அமெரிக்காவுக்கு அறிவுரை தர வரவில்லை என்ற ஜெயகாந்தன், இங்கிருக்கிற தமிழர்கள் பிற நாடுகளுக்கு உடல் உழைப்புச் செய்யச் சென்ற தமிழர்கள் போல் இல்லை. தம் அறிவின் திறத்தால் அமெரிக்காவுக்கு வந்த cream of intelligentsia. அவர்களுக்கு அறிவுரையோ மோட்டிவேஷனோ தேவைப்படாது. அவர்கள் வாழ்க்கையைப் பார்த்து அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வந்திருப்பதாகச் சொன்னார்.

ஆனால் – ஜெயமோகன் அமெரிக்கா வரும்போதெல்லாம், தன்னை ஓர் அமெரிக்க அல்லது அமெரிக்கத் தமிழர்களின் நிபுணர் என நினைத்துக் கொண்டு, வகைதொகை இல்லாமல் எல்லா விஷயங்களிலும் அமெரிக்கத் தமிழர்களுக்கு அறிவுரை வழங்குவதை மேற்கண்ட கட்டுரைகளில் காணலாம்.

அமெரிக்கத் தமிழர்கள் அவரிடம் கேட்டதால் இப்படி அறிவுரைகளை வழங்குவதாகவும் சொல்கிறார். அமெரிக்கத் தமிழர்கள் தமிழ்த் திரை பிரபலங்கள் அமெரிக்கா வந்தால்கூட இப்படி அறிவுரை கேட்கிறவர்கள் தான்.

பொதுவாகவே அமெரிக்காவுக்கு வருகிற தமிழ் விருந்தினர்கள் பலரும் – தமிழின் தொன்மையையும் மேன்மையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், தமிழர்கள் தம் தமிழ் அடையாளங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்றும், இங்கிருந்தாலும் தமிழ்நாட்டின் விஷயங்களிலும் வாழ்க்கையிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் எதிர்பார்ப்புகளை வைக்கிறார்கள். அதனால் உந்தப்பட்ட முதல் தலைமுறை தமிழர் பலரும் விருந்தினர்களிடம் கூட்டங்களில் இவை சார்ந்த கேள்விகளையும் கவலையையும் எழுப்புவது உண்டு. இதை ஓர் உரையாடலுக்கான களமாகவும் அமெரிக்கத் தமிழர்கள் பார்ப்பதால் அப்படிக் கேட்கிறார்கள். தமிழ் மொழி மீதான ஆர்வத்தை தங்கள் வேருடன் உள்ள தொடர்பாக நினைக்கிறார்கள். அப்படி நினைக்கும்போது அறிந்தோ அறியாமலோ தமிழ்தான் சிறந்த மொழி என்பது போன்ற வாதங்களையும் கேட்க அவர்கள் வேண்டியிருக்கிறது. மொழிப் பெருமை பேசாத மக்கள் எங்கிருக்கிறார்கள்?

அதை அறிவுஜீவித்தனத்துடன் விமர்சிக்காமலும், உணர்வுபூர்வமான பற்று என ஒதுக்காமலும், அக்கேள்விகளில் இருக்கும் genuineness ஐ ஜெயமோகனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஜெயகாந்தன் போல ஜெயமோகனால் அறிவுரை சொல்கிற ஆபத்துகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடிவதில்லை. அதனால் ஜெயமோகன் தானும் தன்னுடைய அரசியலுக்கேற்ப அறிவுரைகளை அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொல்கிறார்.

அமெரிக்காவின் பெரும்பாலான ஊர்களுக்குச் சென்றுவிட்டதாகவும், அமெரிக்கர்களைவிட அமெரிக்காவை அதிகம் பார்த்திருப்பதாகவும் பெருமைப்பட்டுக் கொள்கிற ஜெயமோகன், இதுவரை மொத்தமாக நான்கே நான்கு மாதங்களுக்கு மேல்தான் அமெரிக்காவில் இருந்திருப்பதாகவும் ஒத்துக் கொள்கிறார்.

நான்கு மாதங்களில் (2 x 30 நாட்கள்) + (2 x 31 நாட்கள்) எனத் தாராளமாக வைத்துக் கொண்டாலும் 122 நாட்கள் அமெரிக்காவில் இருந்திருக்கிறார். அமெரிக்காவில் அவர் ஊர் சுற்றிப் பார்க்கவும், பிரசங்கம் செய்யவும்தான் வருகிறார் என்றாலும், பிறர் பேசுவதைக் கேட்பதைவிடத் தான் பேசுவதைப் பிறர் கேட்க வேண்டும் என்பதுதான் ஜெயமோகனின் விருப்பமாக இருக்கும் என்றாலும், சந்தேகத்தின் பலனை அவருக்கு அழைத்து ஒரு நாளைக்கு 5 மணி நேரம் அவர் அமெரிக்காவைக் குறித்து – அமெரிக்கத் தமிழர்களைக் குறித்து – அறிந்து கொண்டார் என்றாலும் கூட 122 x 5 = 610 மணி நேரங்கள் அமெரிக்காவைக் குறித்து அறிந்திருக்கிறார்.

இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. இந்த 610 மணி நேர அமெரிக்க அறிதலை, அவரைச் சுற்றி இருக்கிற சிலரின் கருத்துகள் வழியாகவும், அவர் சந்தித்த சிலரின் வழியாகவுமே அறிந்திருக்கிறார். எந்தப் பல்கலையிலும் அல்லது நூலகத்திலும் உட்கார்ந்து படித்தோ, அல்லது wide variety of data sample என்பார்களோ அப்படி அமெரிக்காவை பிரதிநித்துவப்படுத்தும் அனைத்துத் தமிழர்களிடம் இருந்தோ அவர் அக்கருத்துகளைப் பெறவில்லை. இப்படி அவர் 1000 மணி நேரம் செலவிட்டிருந்தாலும் hearsay மூலம் மிகச் சிலரிடம் மட்டுமே கேட்டுப் பெற்ற முழுமையடையாத பார்வைதான்.

ஆனாலும் – நம்முடைய பெருந்தன்மையால் இந்த 610 மணி நேரம் அமெரிக்காவை மற்றும் அமெரிக்கத் தமிழர்களை அறிய செலவிட்டிருக்கிறார் என இந்தக் கட்டுரைக்காக வைத்துக் கொள்வோம்.

ஒரு விஷயத்தில் மாஸ்டர் ஆக வேண்டுமென்றால் – அந்த விஷயத்தில் ஒருவர் 10,000 மணி நேரங்களைச் செலவிட்டு இருக்க வேண்டும் என்கிற ஒரு கருதுகோள் உண்டு. அதன்படி பார்த்தால் ஜெயமோகன் 100க்கு 6% (610 / 10000) அளவே நேரம் செலவழித்துவிட்டுத் தன்னை அமெரிக்காவின், அமெரிக்கத் தமிழர்களின் நிபுணர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை வாசகர்கள் உணரலாம். அதை நம்பவும் சிலாகிக்கவும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும்.

இப்படித்தான் ஜெயமோகன் முன்னர் எல்லாம் தனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டு அந்தத் துறையைக் குறித்துப் பக்கம் பக்கமாக எழுதுவார். உதாரணமாக இசை குறித்து.

இப்போது தெரியாது என்று சொல்லி எழுதுகிற நிலையைத் தாண்டி தெரியும் என்று சொல்லிக் கொண்டு நிபுணத்துவம் இல்லாத துறைகளில் கருத்துச் சொல்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஜெயமோகனின் இலக்கிய நுண்ணறிவையோ, கதை எழுதும் திறமையையோ, தத்துவப் பரிச்சயத்தையோ அல்லது இந்தியா / தமிழ்நாடு குறித்து அவருக்கு இருக்கும் வரலாற்றுப் புலமையையோ நான் சந்தேகப்பட்டதே இல்லை. ஆனால் இந்த உதாரணத்தை வைத்துப் பிற துறைகளிலும் இப்படித்தான் எல்லாம் அறிந்த மாதிரி ஜெயமோகன் பேசுகிறாரோ என்று பலர் நினைத்துவிடும் அபாயம் இருக்கிறது.

அமெரிக்கக் குழந்தைகளுக்குத் தமிழ் முனகத்தான் வருகிறது. அமெரிக்கத் தமிழர்களின் அடுத்த தலைமுறை தமிழர்கள் என்ற அடையாளத்துடன் வாழவோ எந்த வாய்ப்பும் இல்லை என்கிறார் ஜெயமோகன். இதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. அந்தக் காரணத்துக்காகக் குழந்தைகளுக்குத் தமிழே கற்பிக்காமல் இருக்க வேண்டுமா என்ன? இது தமிழ்க் குழந்தைகளுக்கு மட்டும் பொதுவான விஷயம் இல்லை. என் மகன் குழந்தையாக இருக்கும்போது சதுரங்கம் ஆடப் போகும்போது பிறநாட்டு மொழி பேசும் குழந்தைகளுக்கும் இப்பிரச்னை இருப்பதைப் பார்த்து இருக்கிறேன். ஆனாலும் யூதர்களும் சீனர்களும் ரஷ்யர்களும் தம் குழந்தைகளுடன் தாய்மொழியில் பேச முயல்வதையும், குழந்தைகளுக்குத் தாய்மொழியில் எழுதவும் பேசவுமான அடிப்படைக் கல்வியைத் தருவதையும் முறையாகச் செய்கிறார்கள். அதைத் தான் அமெரிக்கத் தமிழர்களும் செய்கிறார்கள். இங்கே பல இடங்களில் வார விடுமுறை தமிழ்ப் பள்ளிகள் மூலம் பெறும் சர்டிபிகேட்டை அமெரிக்கக் கல்விமுறை அங்கீகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுச் சில இடங்களில் அவை சாத்தியமாகி இருக்கின்றன. தமிழ்க் கல்வி மதிப்பெண்கள் உயர்நிலைப் பள்ளிக் கல்வியின் மதிப்பெண்களுடன் சேர்த்துக் கொள்ளப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில இடங்களில் அவை சாத்தியமாகியும் உள்ளன.

நியூ ஜெர்ஸியிலேயே 8+க்கு மேற்பட்ட வாரவிடுமுறை நாட்களிலான தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்றன. அவை மூலம் 1400+க்கு மேற்பட்ட குழந்தைகள் தமிழ்ப்பயில்கிறார்கள். இப்படித் தமிழர்கள் வாழும் மாநிலங்களில் தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. தமிழ்ப்பள்ளிகளுக்குப் பொதுவான கல்வித் திட்டம் வகுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் உள்ளன. சில கல்லூரிகளில் தமிழ் ஒரு பாடமாகவும் இருக்கிறது.

இன்றைக்குத் தமிழ் இலக்கியத்தையும் இலக்கிய நுண்ணுணர்வை வளர்க்கும் முயற்சியையும் தமிழில் ஜெயமோகன் அளவுக்கு யாரும் செய்வதில்லை என்று ஜெயமோகனும் அவர் ஆதரவாளர்களும் சொல்கிறார்கள். ஒருவர் முயற்சியால் மட்டுமே இவை வளரா, ஜெயமோகனுக்கு அப்புறம் இவை நின்றுவிடும் எனச் சொன்னால், ஜெயமோகன் அதைச் செய்வதை நிறுத்திவிட மாட்டார் அல்லவா? அதே மாதிரிதான் இங்கே எத்தகைய புற, நவீன வாழ்க்கை வாழ்ந்தாலும் தமிழ் குறித்த பாசம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். தமிழ் படித்தால் ஹார்வார்டு போக முடியாது என எண்ணாமல், ஹார்வர்டிலும் தமிழை எப்படிச் சொல்லிக் கொடுக்க முடியும் என முயல்கிறார்கள்.

அமெரிக்கத் தமிழர்கள் மட்டுமில்லாமல் இங்கிருக்கும் இந்தியர்கள் பெருஞ்செலவு செய்கிற இன்னொரு விஷயம் கோயில்கள். இந்தியர்கள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் பல கோயில்கள் உள்ளன. தமிழர்களே பங்கு வகிக்கும் அல்லது முன்னெடுத்துக் கட்டிய கோயில்கள் உள்ளன. “அமெரிக்கத் தமிழர்களின் அடுத்த தலைமுறை தமிழ் பேசவோ, தமிழர்கள் என்ற அடையாளத்துடன் வாழவோ எந்த வாய்ப்பும் இல்லை, அவர்களைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்யப்படும் எல்லா முயற்சிகளும் கடப்பாரைக்குச் சுக்கு நியாயம் கொண்டவை மட்டும்தான். இதுவே உண்மை” என்கிற ஜெயமோகன் அமெரிக்க இந்து கோயில்கள் / அமெரிக்காவில் இந்து மதத்தைக் கோயில்கள் மூலம் பேணச் செய்யப்படும் முயற்சிகள் குறித்து இதே மாதிரியான கருத்தைச் சொல்வாரா? எத்தனை அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மதத்துடன் / கோயில்களுடன் தங்களைப் பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற தரவு ஏதும் இருக்கிறதா? மொழியார்வம் மீது வைக்கப்படும் விமர்சனம் கோயில்கள் மீதான ஆர்வத்துக்குப் பொருந்தாதா?

தமிழுடன் அமெரிக்கக் குழந்தைகள் கொண்டிருக்கும் உறவும் கோயில்கள் மீது கொண்டிருக்கும் உறவும் ஒரேமாதிரியானவை தான். Tamil Children are not indifferent to language or temples but their responses may be lukewarm towards them. எனக்குத் தெரிந்து பாதிக்குப் பாதி தமிழ்க் குழந்தைகள் பிற மதம், பிற நாட்டு இணைகளையே இங்கே தேடிக் கொள்கிறார்கள். குழந்தைகள் பிற மத / மொழி / இனத்தவரை இணையராகத் தேர்வு செய்யும்போது அங்கீகரிக்கிறவர்களாகவே பெரும்பாலான அமெரிக்கத் தமிழர்களும் இந்தியஎகளும் இருக்கிறார்கள்.

மொழியைப் போலவே கோயிலும் ஒரு கலாசார பண்பாட்டு அடையாளம்தான். அமெரிக்காவில் நாம் கோயில்களை – நம் அடுத்த தலைமுறை அதில் பெரிய ஆர்வம் காட்டாவிட்டாலும் வளர்க்கலாம் எனில் மொழியை ஏன் அதேவிதம் வளர்க்கக் கூடாது.

இந்த மொழியார்வமும் இங்கே தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் பிற மொழி பேசுபவர்களுக்கும், பிற நாட்டிலிருந்து வருபவர்க்கும் உண்டு. இதில் தமிழரை மட்டும் குறிவைத்து ஜெயமோகன் எழுத வேண்டிய அவசியமில்லை.

ஆங்கிலோ சாக்ஸன் வெள்ளையர் அல்லாத மொழியையும் பாவனையையும் குழந்தைகள் கற்றுக் கொள்ள ஆரம்பித்தால், அமெரிக்க இந்தியப் பெற்றோர் பதறி விடுகிறார்கள் எனவும் ஜெயமோகன் எழுதுகிறார். ஜெயமோகனுக்குத் தெரிந்த இந்திய அமெரிக்கப் பெற்றோர் சிலர் அப்படி இருக்கக் கூடும். பள்ளியில் கல்வியில் இருந்து, விளையாட்டு வரை, கம்யூனிட்டிகளில் அருகில் வசிக்கிறவர்கள் வரை அமெரிக்க வாழ்க்கை ஒரு பன்மைச் சமுதாய வாழ்க்கையே. குழந்தைகளின் நெருங்கிய நட்புகள் எந்த மத மொழி பாவனை கொண்டவையாகவும் அமையலாம். அந்நட்புகள் மூலம் பிற கலாசாரம் குறித்த அறிமுகத்தையும் குழந்தைகள் இங்கே பெறுகின்றன. யாரும் எந்தக் குழந்தையும் இந்த நிறத்தவரோடு சேராதே என்றெல்லாம் சொல்ல முடியாது. சொன்னால் குழந்தைகள் கேட்கவும் மாட்டார்கள். அப்படிச் சொல்வது எவ்வளவு தவறென்று விளக்குவார்கள். Black lives matter எனச் சொல்கிற, அந்தப் பதாகையை வீட்டுமுன் வைத்திருக்கிற பல தமிழர்கள் இங்குண்டு.

இப்படித்தான் ஜெயமோகன் அமெரிக்கத் தமிழர் குறித்துத் தன் சில அனுபவங்கள் அல்லது தான் கேட்ட சில அனுபவங்களை வைத்து முழுமைபெறாத பொதுப்பார்வையை உருவாக்கிக் கொள்கிறார்.

ஜெயமோகன் அமெரிக்கத் தமிழர்களிடம் குறை காண வேண்டிய முக்கிய விஷயம் – அவர்களின் தமிழ்ச் சினிமா மோகம் மற்றும் பக்தி என்கிற பெயரில் கோயில்களுக்குச் செலவிடுவது அல்லது கோயில்களைக் கட்டுவது. இது தமிழர்கள் மட்டுமல்ல இங்கிருக்கும் இந்தியர்களுக்கே பொதுவானது. அவை குறித்தெல்லாம் ஜெயமோகன் ஏதும் விரிவாக எழுதிய மாதிரி தெரியவில்லை. ஆனால் தாய்மொழி ஆர்வத்தைக் கிண்டல் செய்தும் விமர்சித்தும் பக்கம் பக்கமாய் எழுத முடிகிறது.

இப்போது என்னை இந்தப் பதிலை இப்போதேனும் எழுத வேண்டும் எனத் தூண்டிய ஜெயமோகனின் அக்டோபர் 26, 2023 தேதியிட்ட ஓர் அமெரிக்கக் கனவு கட்டுரைக்கு வருவோம்.

அக்கட்டுரையில் ஜெயமோகன் இதை ஓர் அறிவுரையாகச் சொல்கிறார்:

“தமிழகத்தின் திராவிட அரசியல், இந்தியாவின் இந்துத்துவ அரசியல் இரண்டிலிருந்தும் முழுமையாக விலகிக் கொள்ளுங்கள். நீங்கள் அங்குள்ள கருத்தியலில், அரசியலில் செய்ய ஒன்றுமில்லை. உங்கள் தலைமுறைகளைக் கவனியுங்கள்…”

பெரும்பாலும் அபத்தமான சினிமாக்களை வெளியிடும் தமிழ்த் திரைத் துறையில் இருந்து விலகி நில்லுங்கள் என ஜெயமோகன் சொல்லவில்லை என்பதைக் கவனிக்கவும். திரைத்துறைக்கு இன்னொரு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டாம் என்கிற ஜாக்கிரதை யுணர்வு காரணமாக இருக்கலாம்.

அமெரிக்கக் குழந்தைகளுக்குத் தமிழே தெரியாது – அடுத்த தலைமுறையில் அமெரிக்காவில் தமிழ் இருக்காது என்பவர் – நவீனத் தமிழ் எழுத்தாளர்களிடம் இருந்தும், நவீனத் தமிழ் இலக்கியத்திடம் இருந்தும் விலகி நில்லுங்கள் எனச் சொல்லவில்லை. அமெரிக்க எழுத்தாளர்களின் இலக்கிய மாநாடு நடத்துங்கள் எனச் சொல்லவில்லை. தமிழ் எழுத்தாளர்களின் அமெரிக்கப் பயணங்கள் பாதிக்கப்பட்டு விடுமே.

ஆனால் – அரசியலில் இருந்து விலகி நிற்கச் சொல்கிறார். அரசியல் இல்லாதது எது என்று அறியாதவரா ஜெயமோகன்.

அமெரிக்காவில் தமிழர்கள் மட்டுமா இந்திய அரசியலில் ஆர்வம் காட்டுகிறார்கள். இங்கே இருக்கிற எல்லா முதல் தலைமுறை இந்தியர்களும் அரசியலில் ஆர்வம் காட்டுகிறார்கள். எல்லாச் சந்திப்புகளிலும் அதிகம் பேசப்படுபவை இந்திய அரசியலும் இந்திய சினிமாவும் தான்.

தமிழர்கள் – இந்தியர்களிலாவது அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த முதல் தலைமுறை மட்டும்தான் இந்திய அரசியலில் ஆர்வம் காட்டுகிறது. ஆனால் யூதர்கள், பாலஸ்தீனியர்கள் எனப் பலரும் தலைமுறை தலைமுறைகளாகத் தங்கள் நாட்டு அரசியலில் ஆர்வம் காட்டுகிறவர்களும், இங்கிருந்து அதில் கருத்தியல் ரீதியாகவோ ஆக்டிவிசம் மூலமாகவோ பங்கேற்கிறவர்களும் தான்.

இங்கிருக்கிற யூதர்களும் உக்ரேனியர்களும் இங்கிருந்து கிளம்பிப் போய் அவர்கள் நாட்டுக்காகப் போரிடுகிற செய்திகள் வருவது இங்கே சகஜம். ஆக, இந்தியர்களோ தமிழர்களோ மட்டுமில்ல பிற நாட்டவரும் தங்கள் தாய்நாட்டு அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதும் ஈடுபடுவதும் இயல்பானது, தவிர்க்க இயலாதது.

தாய்நாட்டு அரசியல் மீது கொள்கிற அக்கறை தாய்நாட்டின் மீதான அக்கறை என்பதை ஜெயமோகன் மறந்து இப்படிச் சொல்லக் காரணம் – தற்போது செல்வாக்கோடு இருந்து வரும் திராவிட அரசியல், இந்துத்துவ அரசியல் இரண்டின் மீதும் அவருக்கு இருக்கும் ஒவ்வாமையும் நெருடலும்தான். திராவிட அரசியல் மீது ஒவ்வாமை – இந்துத்துவ அரசியல் மீது நெருடல்.

இப்படி ஜெயமோகன் எதையாவது மனம்போன போக்கில் அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அமெரிக்கத் தமிழர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஒன்றுமே இல்லையா ஜெயமோகன்? ஓர் எழுத்தாளராகத் தமிழ்நாட்டை விட, அல்லது தமிழ்நாட்டுக்கு ஈடாக, நீங்கள் என்ன சொன்னாலும் எழுதினாலும், அமெரிக்கத் தமிழர்களால் கவனிக்கப்படுகிறீர்களே – இதெல்லாம் ஆரோக்கியமான விஷயமாகத் தெரியவில்லையா?

சமீபத்தில்கூட ஜெயமோகன் அவர் தளத்தில் மாற்றுக் கருத்துகளைப் படிப்பதில்லை என்றும், அவை பெரும்பாலும் வசை, வம்புகள் என்றும், நெருங்கிய நண்பர்கள் யாரும் படித்து விட்டுச் சொன்னால் கேட்டுக் கொள்வதாகவும் எழுதியிருந்தார்.

அமெரிக்கத் தமிழர் குறித்து ஜெயமோகன் நிபுணர் போல எழுதிவருகிற விஷயங்களும் பாதிக்கு மேல் இப்படி நெருங்கிய சில நண்பர்கள் சொன்னதை வைத்து எழுதியதுதானோ என்று தோன்றுகிறது.

அமெரிக்காவில் 25 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கிற, அதன் பலதரப்பட்ட மக்கள், நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட, அமெரிக்காவில் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய பெரிய அனுபவம் வாய்க்கப் பெற்ற, அமெரிக்காவின் லாபமற்ற கம்யூனிட்டி ஆர்கனைசேஷன்கள் பலதில் தன்னார்வலர் பணி செய்து அமெரிக்க வாழ்வின் பல முகங்களைப் பார்த்த, தங்கள் குழந்தைகள் தமிழ் அல்லாத பிற மொழி / இன / நாட்டைச் சேர்ந்தவர்களை இணையாகத் தேர்ந்தெடுப்பதைப் பார்த்த பலரும், அமெரிக்கா குறித்தோ அமெரிக்கத் தமிழர் வாழ்க்கை குறித்தோ அதாரிட்டி போலப்

பேசத் தயங்குவார்கள். சொந்த அனுபவத்தையோ சிலரின் அனுபவத்தையோ பொது அனுபவமாக – தரவுகள் இன்றிச் – சித்தரித்துவிடக் கூடாது என்பதால்.

அதிகபட்சம் 610 மணி நேரங்கள் அமெரிக்கா, அமெரிக்கத் தமிழர்கள் குறித்து ஜெயமோகன் அறிந்ததாக வைத்துக் கொண்டாலும், அவர் இதுகுறித்து பேசுபவையும் எழுதுபவையும் 10,000 மணி நேரங்கள் இத்துறையில் பயின்ற மாஸ்டரை விட அதிகமாக இருக்கிறது. அவை எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்த கேள்வியும் எழுகிறது.

அறிந்தவர்கள் கருத்தைச் சொல்லத் தயங்குகிற விஷயங்களில் அறியாதவர்கள் வேகமாக நுழைகிறார்கள் என்ற வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது.

பின் குறிப்பு: இதை எழுதுவதன் மூலம் வம்பர் என்றும், ஜெயமோகன் மீது பொறாமை என்றும், அவதூறு செய்கிறேன் என்றுமே ஜெயமோகன் மற்றும் அவரின் பக்தர்கள் மூலம் பெயர்கள் வரும். ஆனாலும் அமெரிக்காவில் இருக்கிற யாராவது ஒருவர் இதைச் செய்துதானே ஆக வேண்டும்.

Series Navigation  நாவல்  தினை              அத்தியாயம்   முப்பத்தேழு  பொ.யு 5000
author

பி கே சிவகுமார்

Similar Posts

3 Comments

  1. Avatar
    Gomes Barathi Ganapathi says:

    What a powerful write up, Siva!
    I’m simply overwhelmed with your intellectual discussion you’ve brought forth. It’s true I’m one of those who has been so very perturbed by Jeyamohan’s authoritative observation.
    ‘யாராவது எழுத வேண்டுமே’ என்ற நோக்கில் நீங்கள் எழுதியிருப்பது ‘இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்’ குறளை நினைவூட்டுகிறது.
    மிகச் சிறந்த பார்வை.
    நிறைய எழுதுங்கள்
    அன்புடன்
    கோம்ஸ் பாரதி கணபதி

  2. Avatar
    Sundar Gopalakrishnan says:

    கட்டுரையின் தொடக்கத்தில் “அறிந்தவர்கள் கருத்தைச் சொல்லத் தயங்குகிற விஷயங்களில் அறியாதவர்கள் வேகமாக நுழைகிறார்கள்” என்ற மேற்கோளைக் கொடுத்துள்ளீர்கள். அதன் ஆங்கில மூலத்தையும் (Where angels fear to tread, Fools rush in) அடைப்புக் குறிகளுக்குள் கொடுத்திருக்கலாமே! ஜெயமோகனுக்குச் சரியான பதிலடி கொடுத்துள்ளீர்கள்.

  3. Avatar
    தசரதன் says:

    முற்றிலும் தவறான பார்வை.
    நீங்கள் ஒரு மருத்துவரிடம் செல்கிறீர்கள். அவர் ஒரு பத்தே பத்து நிமிடம் உங்களிடம் பேசிவிட்டு, உங்கள் உபாதை தீர ஆலோசனை சொல்வார். நீங்கள் அவரிடம் போய் “அதெப்படி நீங்கள் எனக்கு ஆலோசனை சொல்லலாம்? மொத்தமாக 10 நிமிடம் மட்டும் தானே என்னுடன் பேசினீர்கள்?” என்று கேட்பீர்களா? சிரிப்பாக இருக்கிறதல்லவா? அப்படித்தான் குழந்தைத் தனமாக இருக்கிறது உங்கள் வாதமும்.

    எழுத்தாளர்கள் அவதானிக்க பழகியவர்கள். உங்களையும், என்னையும் போன்ற சாதாரண மக்களுக்கு அவதானிப்பு என்பது கடினமாக இருக்கலாம். எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் அவதானிப்பு சுலபம். அந்த திறனால்தான் அவர்கள் கவிஞர்களாகவும், எழுத்தாளராகவும் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு வாழ்க்கை முறையை பார்க்கும்போது, “எனக்கு இப்படித் தோன்றுகிறது” என்று சொல்வது எல்லாமே மிக மிக முக்கியமானவை. அமெரிக்காவில் பல வருடங்களாக இருப்பதாக சொல்கிறீர்கள். குறைந்தபட்சம் , அமெரிக்க சமூகம் எழுத்தாளர்களின் அவதானிப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்ற ஒரு விஷயத்தையாவது நீங்கள் கற்றுக்கொண்டு பேசலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *