வானம்பாடியின் பயோ தொலைபேசி உள்ளங்கையில் அழைத்தது. காலை நான்கு மணிக்கு குழலனின் அழைப்பு அது. அவனோடு பேசாமல் இரண்டு நாட்கள் அவளுக்கும் குயிலிக்கும் கடந்திருக்கின்றன. எல்லாம் குயிலியும் வானம்பாடியும் ஒரு வாரமாகக் கட்டில் பகிர்ந்து கொண்டதை குழலன் பகடி செய்த பிறகுதான்.
வானம்பாடியின் கட்டிலில் சிறு ஒலி ஏதோ வந்ததில் தொடங்கியது இது. ராத்திரி முழுக்க அவள் புரண்டு படுக்கும் போது வந்த ஒலி என்று ஆறடி தூரத்தில் அடுத்த கட்டிலில் துயின்றிருந்த குயலி சொல்ல, நடுராத்திரிக்கு லேஸர் உபகரணம் பயன்படுத்து வானம்பாடி கட்டிலைப் பிரித்துப்போட்டாள். உள்ளே சிறு ஒற்றுபார்க்கும் கருவி.
எங்கிருந்து வந்த ஒற்றுக் கருவி என்று அறிய வானம்பாடி லேசர் கதிர் அனுப்பியதும் அந்தக் கருவி கர்ப்பூரம் பெயரும் விலாசமும் ஒற்றாடுவதாகச் சொல்லி அமைதியானது.
குயிலி கட்டிலில் கருவி எதுவும் பொருத்தப்படவில்லை என்று லேசர் மற்றும் அல்ட்ரா வயலட் கதிர் அனுப்பி உறுதி செய்யப்பட்ட பின் குழலனிடம் இதைப் பேச காலையில் அழைக்கலாம் என்று இரு பெண்களும் முடிவு செய்து கருவியை முன்னறையில் செயலிழக்கச் செய்து சுவரைப் பார்த்து இட்டனர்.
திரும்பி வந்த வானம்பாடி குயிலியோடு அவள் கட்டிலைப் பகிர்ந்து கொண்டாள். இருவரும் உறங்காத, பின்னிரவு அதிகாலையாக நீட்சி கொண்ட இனிய பொழுது அது.
அடுத்த நாள் காலையில் குழலனிடம் இதைச் சொல்லி அவர்கள் கூடுதலாக எப்படி இன்னும் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்று கேட்க குழலனை அழைத்தாள் குயிலி. தொலைபேசி வேண்டாம் நானே வருகிறேன் என்று உருவம் மறைத்து வந்துவிட்டான்.
வந்ததும் பலகை பலகையாகப் பிடுங்கி எடுத்து அடுக்கப்பட்ட குவியல் வானம்பாடியின் கட்டில் என்று மேலே டர்க்கி டவல், ஸ்டிக்கர் பொட்டு, பேன் சீப்பு அலங்காரங்களோடு அந்தக் குவியல் விளங்கியதிலேயே புரிந்துவிட்டது குழலனுக்கு.
நேற்று எப்படி உறங்கினாய் என்று குறுநகையோடு வானம்பாடியைக் கேட்டான். குயிலி ஒரு சின்னப் புன்னகையோடு வானம்பாடியைக் கட்டி அணைத்துக் கொண்டு சொன்னாள் –
இப்படித்தான் இருந்தோம். அது பதிலாக வரவேண்டும் என்று தானே எதிர்பார்க்கிறாய்? வேறு என்னவாவது தகவல் வேண்டுமா? எப்படி நாங்கள் உறவு கொண்டோம் என்றும் நிகழ்த்திக் காட்டணுமா?
அவள் முகம் சிவக்கச் சொல்ல, வானம்பாடி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் என்று குயிலி முதுகில் தட்டி சிரசில் முத்தமிட்டாள். குழலன் ஒரு நிமிடம் அவர்களை நோக்கிவிட்டு இதெல்லாம் எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லாதது என்பதுபோல் சுவரைப் பார்த்தபடி பேசினான்-
கர்ப்பூரம் வானம்பாடியிடம் ஏதோ எதிர்பார்க்கிறான் ஆனால் குயிலி பற்றி அவனுக்கு அந்த விதமான தகவல் ஆர்வம் இல்லை என்று அவள் கட்டிலில் ஒற்றுக் கருவி பதிக்காததின் மூலம் தெரியவருகிறது. அல்லது வானம்பாடிமேல் அவனுக்குப் புது ஈர்ப்பு வந்திருக்கலாம். நான் இன்றைக்கு இந்த ஒற்றின் பின் யார் எல்லாம் இருக்கின்றார்கள் எதற்கு ஒற்றாடுகிறார்கள் என்று கண்டு பிடித்து விடுகிறேன். நீங்கள் இதைப் பொருட்படுத்தாமல் சேர்ந்து கிடந்து துயிலுக.
இந்த ஆதரவான பேச்சில் நடுவில் வந்த ‘சேர்ந்து’ தான் அதற்கப்புறம் பேச்சு இல்லாமல் ஆக்கியது. குழலன் இன்னொரு பத்து நிமிடம் இருந்து ஒரு காப்பி குடித்து ’சோர்ந்து கிடந்து துயிலுக அது’ என்று பிழை திருத்தம் சொல்லி, குயிலியையும் வானம்பாடியையும் மாறிமாறிப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தான். அவன் சொன்னான் –
கர்ப்பூரம் வீட்டில் சஞ்சீவனி மூலத் தகவல் – core information – இருக்கும் என்று யாரோ சந்தேகப்படக்கூடும். அவர்கள் கர்ப்பூரத்தின் வீடு தவிர அவனுக்கு வேண்டப்பட்டவர்கள் என்று கருதப்படும் உங்கள் வீட்டிலும் சஞ்சீவனி ரகசிய மருந்து உண்டாக்கும் வழிமுறை ஆவணத்தைத் தேடிக் கொண்டிருக்கலாம். வேண்டுமென்றே கர்ப்பூரத்தின் பெயரைத் திசைதிருப்பக் கொடுத்திருக்கலாம். ஆகவே இன்னும் கொஞ்ச நாள் கொஞ்சும் நாளாக்கிக் கொள்ள வேண்டாம்.
சொல்லி விட்டு உடனே காணாமல் போனான் குழலன். வரும்போது ‘எப்படி உறங்கினாய்’. அப்புறம் ‘சேர்ந்து’ கிடப்பீர். போகும்போது ‘கொஞ்சாமல்’ உறங்கு. ஒரே பதிலாக நிகழ்த்திக் காட்டிவிடலாம் என்ன என்று வானம்பாடி குயிலியைப் பார்த்தாள்.
குழலன் சொன்ன வேறே எவ்வளவோ கடைப்பிடிக்க இருக்க, இந்த உடல் உறவு விஷயத்தை மட்டும் பிடித்துக்கொண்டு இருக்கக் காரணம் என்ன?
வானம்பாடி கேட்க குயிலி சொன்னாள் – சொல்வேன். உனக்குக் கோபம் வரும்.
சொல்லு சொல்றியா இல்லையா சொல்லுடி.
நாம ரெண்டு பேரும் முயங்கறதைப் பத்தி அவன் பேச்சு மூலமாக் கேட்க உனக்கு பிடிச்சிருக்கு. இதையே கொஞ்சம், ஷிட் கொஞ்ச-றதை நானும் விடமாட்டேன் போல. நானும் நீயும் விளையாடறதை அவன் பார்க்கணும்னு ஆழ்மனதிலே நினைக்கறே. இன்னும் கூட்டினால் அவனும் நம்மோட கிடந்து ஆடணும்னு ஆசை அந்த உள்மனத்தில் இருக்கு உனக்கு.
உனக்கு? வானம்பாடி கேட்டாள்.
எனக்கா, உள்மனம் என்ன வெளிப்படையாகவே தோணுது சில சமயம்.
குயிலி வானம்பாடியை இழுத்து அருகில் கிடந்தாள். நீ யட்சி தான் வானம்பாடி என்றாள் அவளுக்கு முத்தமீந்து கொண்டு. வானம்பாடிக்கு கூர்மையான இரு பற்கள் முளைத்தன. நகங்கள் நீண்டு வளர்ந்தன. அவள் அணைப்பு இறுக்கம் மிகுந்து வாயில் நிணவாடையும் கிராம்பு வாசனையுமாக அடித்தது. நான்கு விழிகள் மிக அருகில் இமைக்காமல் காமம் செப்பின. நோய் தரும் பார்வை. மருந்து தரும் பார்வை. இமைகள் மூடின. கரங்கள் எங்கும் ஊர்ந்தன. கூந்தல் இரு உடலும் மறைத்துக் கிடக்க யட்சி என்னில் வா என்று குயிலி விளித்து அணைத்தாள். ஏதோ குறைகிறது. என்றாலும் ஏறக்குறைய நிறைவுதான்.
கட்டில் அருகே யாரோ இருப்பது போல் தோன்றியது. இருவருக்கும் அப்படித்தான் தோன்ற, குயிலி தான் புதியதாக உருவாக்கிய மின்னணுக் கருவியைத் தலையணைக்கு அடியிலிருந்து எடுத்துக் கதிர் வெள்ளம் பாய்ச்சினாள்.
குழலன் தான். உருமாறும் ஷேப் ஷிப்டராக அவன் அவசரமில்லை அவசியமில்லை என்றால் மாற மாட்டான். என்றால் ஏதோ அவசரச் செய்தியோ நிகழ்வோ அவர்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் வந்திருக்கிறான்.
என்றால் சொல் என்ற பாவனையில் இரண்டு பெண்களும் கட்டிலில் எழுந்து அமர்ந்தார்கள். குழலன் ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் மெல்லிய குரலில் சொன்னான் –
நேற்று ராத்திரி துயிலகத்தில் இருந்து பெருந்தேளரசர் அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு அலுவலரை அனுப்பியிருந்தார். என்னை பெருந்தேளரசர் உடனே சந்திக்க விருப்பம் விருப்பம் என்று கூட இல்லை, அவசியமாக என்னோடு பேச வேண்டும் என்று அந்த நம்பிக்கை ஊழியர் மூலம் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
வானம்பாடி சொன்னாள் –
நீ மாட்டேன் என்று சொல்லி அவமானப்படுத்தி அனுப்பியிருப்பாய் அந்த ஊழியரை. பெருந்தேளர் மேல் குரோதமும் விரோதமும் நாளுக்கு நாள் கூடி வருகிறது. எங்களை எங்கள் இரண்டு பேரையும் அசல் சஞ்சீவனி திட்டம் தோல்விக்கு நாங்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டி வலிக்காமல் உயிர்போக்க உறக்கத்திலேயே உயிர்பிரிய வைக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார் தேளர். (மேலும்)
அவர் பாததூளியை நெற்றியில் பூசி போயும் போயும் சாக்கடைப் பூச்சியாக கொடுக்கோடு அலையும் இழிபிராணியான தேளை வணங்கி வழிதொடர்ந்து இத்தனை நாள் அவருக்காகப் பாடுபட்டதற்கு இதுதான் பலன். வலிக்காமல் உயிர் போக்குவாராம். (மேலும்)
தேளனுக்காக நான் என்னையே கொடுத்திருக்கிறேன். சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் வந்திருப்பதால் சொல்கிறேன். (மேலும்)
என் உடம்பில் துணி உரித்து பயங்கரமான தேள் மேலே ஊர்ந்து கால்களுக்கு இடையில் அருவருப்பான அசுத்தமான வேறு இனமாக தேங்கிக் கிடந்து அரைமணி நேரம் சென்று இறங்கியது அந்தச் சாக்கடைப் பிறவி. (மேலும்)
அப்பொழுதும் விடவில்லை என்னை. என் முகத்தில் தன். எப்படிச் சொல்வேன் அதை குமட்டாமல். (மேலும்)
எனக்கு நிகழ்ந்த அவமானமெல்லாம் உன்னிடம் ஏனோ இப்போது சொல்லத் தோன்றியது. அவ்வளவுதான் நான் செய்ய முடியும். பழி வாங்க எல்லாம் எனக்கு வலிமை இல்லை, எப்படியும் எனக்கு இந்த உடம்பும் அதை இயக்க உயிரும் அவசியம்.
இவ்வளவு நேரம் தரையைப் பார்த்து அமர்ந்திருந்த குயிலி பார்வையை மேலாக்கினாள். எனக்கும் சொல்ல வேண்டியுள்ளது என்றாள்.
வானம்பாடிக்கு ஒரு பெருந்தேளர். எனக்கோ ஒரு பெருந்தேளர், இரண்டு செந்தேளர் ராணுவ அதிகாரித் தேள்கள் மூன்று நாள் அடைத்து வைத்து என்னமோ செய்ய நினைத்து வராமல் என்னைக் கொடுக்கால் என் தொடைகளிலும் குறியிலும் கொட்டி சித்தரவதை செய்து என் அழுகைக்கு ஆனந்தம் காட்டின. சிறு வண்டுகளை எனக்குள் போய்த் திரும்ப வைத்து யார் அனுப்பிய வண்டு குகையிலிருந்து கடைசியாக வருகிறது என்று போட்டி. ஒரு மாறுதலுக்காக சிறு இனத் தேள் ஒன்றை உள்ளே அனுப்பினார்கள். தேள் அங்கேயே இறந்து இரண்டு நாள் ஆனது தேள்சவத்தைக் கெல்லி எடுக்க.
பகைவனுக்கு அருள்வாய் என்றான் குழலன். வானம்பாடி கண்ணில் நீரோடு குயிலியின் தோளில் சாய்ந்து அழுதாள். அழுகையூடே சொன்னாள் –
நீங்கள் ஆண்கள். பகைமை என்பீர்கள். நட்பு என்பீர்கள். ஒரு நிமிடத்தில் பரம வைரி, ஜன்ம சிநேகிதனாக ஆக முடியும். பிறந்த தினம் முதல் நண்பன், பெரிய எதிரி ஆகவும் முடியும். ஒரு மன்னிப்பில் இழைக்கப்பட்ட துரோகம் எல்லாம் பனியாகக் கலைந்து போகும். ஆண்மொழியும் பெண்மொழியும் வேறுவேறுதான்.
குழலன் சொல்ல உத்தேசித்தது சொல்லப்படாமல் இன்னொரு முறை போனது. ஏமாற்றத்தோடு அவன் ஷேப் ஷிப்டராக கதவுக்குக் கீழே நகரும் புழுவாக மாறப் போகும் நிமிடத்தில் குயிலி அழுதபடி குழலா நில்லு என்றாள். ஏதோ சொல்ல வந்து பாரத்தை இறக்கிவைக்காமல் போகிறாயே. எதுவும் சொல்லிவிட்டுப் போ என்றாள் குழலனிடம்.
அவன் திரும்பி வந்து சொன்னான் – நான் நேற்றிரவில் இருந்து பெருந்தேளருக்கு ஆதரவு தருகிறேன்.
அதிர்ச்சி அடைந்து இரண்டு பெண்களும் ஒரே நேரத்தில் எழுந்து நின்றார்கள். அச்சம் ஏனோ சூழ உடுப்பை இரண்டு பேரும் நனைத்துக் கொண்டு குழந்தைகள் போல் அழுதார்கள். நீயுமா குழலா? நீயும் இன்னொரு பெருந்தேளரசரா?
உள்ளே ஓடி உடை மாற்றி வரும் பத்து நிமிடத்தில் அவர்கள் சாதாரணமாக இருந்தார்கள்.
குழலன் மெல்லத் தொடர்ந்தான்.
கர்ப்பூரம் நடத்திய ஆட்சியை நேற்று இரவு கலைத்து விட்டேன். பெருந்தேளரசர் என் ஆதரவோடு மீண்டும் ஆட்சிக்கு வந்தார்(மேலும்)
எல்லோரும் அசல் நீலன் என்று நம்பியிருக்கும், நான் அஞ்சல் அனுப்பி வரவழைத்த ஆல்ட் க்யூ பிரபஞ்ச கசாப்புக்கடை பிரதி நீலனை அவரது ஆல்ட் க்யூ பிரபஞ்சத்துக்கு நாளை விடிகாலையில் அனுப்பப் போகிறேன். (மேலும்)
ஏற்றுமதி ஆகும் சகல இன சஞ்சீவனியை அதி வீர்யமாக்க, தீவிர சந்தைப்படுத்தலுக்கு, ஆல்ட் க்யூ பிரபஞ்சத்துக்கு அவர் வணிகப் பயணம் மேற்கொள்வதாகச் சொல்லப்படும். (மேலும்)
கர்ப்பூரத்தையும் அங்கே அனுப்பி விடலாம். ஆல்ட் க்யூ பிரபஞ்ச பிரதி கர்ப்பூரம் அங்கே இன்னும் பிறக்கவில்லை. அவனுடைய மனைவியும் வைப்பாட்டியும் அங்கே பிறந்து வளர்ந்திருப்பதால் அவர்களோடு நேரம் கழிக்கட்டும். (மேலும்)
அவனை எங்கேயும் அனுப்பாமல் இங்கேயே பாதுகாப்பாக வைத்திருந்தாலும் சரிதான். சுவாரசியமான பிரக்ருதி. தனியாக எந்தச் சேட்டையும் பண்ண முடியாது; அவன் கிடக்கட்டும். (மேலும்)
நீங்கள் இருவரும் இன்னும் சிலநாள் உருவம் இன்றி நாற்பரிமாணக் கூறுகள் மாற்றி இருக்க வேண்டும். உங்கள் பாதுகாப்புக்குத்தான். அசல் நீலனோடு பொது யுகம் 300 சென்று அவரை அங்கே திரும்ப விட்டு வருவீர்.
ஆழ்ந்த மௌனம் நிலவியது. வானம்பாடி கூறினாள் – என்னால் முடியாது. உடல் வலியும் மனவலியும் அதிகமாக உள்ளது.
குழலன் கூறுவான் – கொஞ்சம் நான் சொல்வதைக் கேள். நீயும் குயிலியும் இன்னும் ஒரு மாதமாவது இந்த விநோத பூமியில் இருக்கக் கூடாது. தீர்க்கமான உயிர் ஆபத்து உண்டு உம்மிருவருக்கும். தயை செய்து நான் சொல்வதைக் கேளுங்கள்.
வாசலில் ஹோ என்று சத்தம். ஜன்னல் வழியாகப் பார்த்தாள் வானம்பாடி. ஒரு பேட்டை நிறைய இருந்த கிட்டத்தட்ட ஐயாயிரம் கரப்புகளை அரசுப் படைகள் மேலே மிதித்து, கற்களால் நசுக்கி, வெந்நீரைக் கொட்டி, சகல இன சஞ்சீவனி சீசாவில் அடைத்து மூச்சு முட்டவைத்து எத்தனை முறைகள் உயிர்பறிக்க உண்டோ அத்தனையையும் பிரயோகித்துக் குட்டிக் கரப்புகள் முதல் கிழட்டு கரப்புகள் வரை நசிப்பித்துக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது.
வானம்பாடி பார்த்த காட்சியின் அச்சமூட்டும் தன்மை மனத்தில் படர சும்மா நின்றாள். கரப்புகள் தேளரசர் அணிக்கு எதிரணியாக நேற்று தேள் இனப் படுகொலை செய்ததற்கான பழிவாங்கும் நடவடிக்கை இது என்றான் குழலன். நீங்கள் இதெல்லாம் அனுபவிக்க வேண்டாம்.
சரி வருகிறேன். கூடியவரை யார் பார்வையிலும் படாமல் இந்த இக்கட்டான காலத்தைக் கடந்தாக வேண்டும். உங்கள் இருவருக்கும் பயோ ட்ரான்ஸீவர்கள் எடுத்து வந்திருக்கிறேன். என்னோடு மட்டும் எந்த நேரத்திலும் காது மடலில் பேசலாம். என்னோடு பொருதாமல், பொருத்திக் கொள்ளுங்கள். நான் பெருந்தேளனைக் கண்டு வருகிறேன். என் நண்பர்களுக்கு எதிரி எனக்கு நண்பன் ஆனது விதிவசமா? மன்னிக்க வேண்டும் பெண்களே.
அவன் அடுத்த வினாடி காணாமல் போனான்.
தொடரும்
- புவி மையத்து அணு உலை எரிமலை, பூகம்பம் எழுப்புகிறது
- நாவல் தினை அத்தியாயம் நாற்பத்துமூன்று பொ.யு 5000
- ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 7