டாக்டர் ஆர் அம்பலவாணன்
Dr. R. Ambalavanan
Professor of Civil Engineering (Retd.)
IIT, Madras
( 23அக்டோபர் 2023, டொரான்டோ, கானடாவில் திரு ஜெயமோகன் ‘அறம்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையை அடியொற்றி எழுதியது)
சமீப காலமாக, சனாதனம் என்ற சொல் பரவலாக எல்லா மட்டங்களிலும் பேசப்படுகிறது.அரசியலில் சூடான விவாதமாகவும் மாறியுள்ளது. சனாதனம் என்றால் பழமை, மாறாத தன்மை, (இந்து மதத்தில் இணைந்த!) வாழ்வியல் என்று ஒரு பக்கமும், மக்களை வருணமாக, சாதிகளாக, பாலினமாக வேறுபடுத்திப் பார்க்கும் முறைமை என்று மற்றொரு புறமாகவும் வாதிடப்படுகிறது.
இணையாக மனு நீதி பற்றியும் பேசுகிறார்கள். நீதி, தர்மம் இவற்றின் உண்மைப் பின்புலம் என்ன? தம்மம் சரணம் கச்சாமி என்ற புத்தக் கோட்பாட்டில் வரும் தம்மம், தர்மம் என்பதன் பாலி சொல் தானே. தமிழில் இதற்கு இணையான சொல் அறம் எனலாமா?
இவ்வறம் பற்றி தமிழ் நீதி நூல்கள் என்ன சொல்கின்றன?
“அறஞ்செய விரும்பு” – ஆத்திச்சூடி.
அதாவது “அறம்” செய்தல் நல்லது. கட்டாயமில்லை.
“அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்” – சிலப்பதிகாரம்
அதாவது தவறு செய்தவர்களை அறம் தண்டிக்கும்.
“நான்மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி விளஙுகுக உலகமெல்லாம்”.
அவ்வாறெனில் அறம் என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. பதிலை அறத்துப்பால் அடக்கிய திருக்குறளில் தேடலாம். அறத்துப்பாலில் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல் மற்றும் ஊழியல் என்னும் நான்கு இயல்களும் 38 அதிகாரங்களும் 380 குறட்பாக்களும் உள்ளன. அறன் வலியுறுத்தல் என்ற ஒரு அதிகாரமும் இதில் அடங்கும் (அறனும் அறமும் ஒன்றே என்று அறிகிறேன்)
கடவுள் வாழ்த்து என்று அறியப்படும் முதல் அதிகாரத்திலேயே “அறவாழி” அந்தணன் (1-8) என்று அறத்தை ஆழியுடன் (கடல்) இணைத்து அறத்தின் பரந்துபட்ட தன்மையைக் கோடி காட்டுகிறார். அறக்கடல் போன்ற இறைவன் தாள்களைப் பற்றினாலன்றி பிறவிப்பெறுங்கடலை நீந்திக்கடப்பது இயலாத காரியமாம். தெளிவு பிறக்கவில்லை. அறன் வலியுறுத்தல் மற்றும் 37 அதிகாரங்கள் உள்ளனவே. நுழைந்து பார்ப்போம்.
வான் சிறப்பில் (குறட்பாக்கள்11முதல்20வரை) அறம் பற்றி ஒன்றும் கூறப்பட வில்லை. வான் சிறப்பையும் அறத்தின் சிறப்பையும் இணைத்து ஒரு குறள் எழுதியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்குமோ என்பது அடியேன் எண்ணம்.
உதாரணமாக 20 வது குறள் இப்படி இருக்கலாம்.
நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
அறனின்றி அமையாது ஒழுக்கு.
மூன்றாவது அதிகாரமாகிய நீத்தார் பெருமையில் மூன்றாவது குறளில் “ஈண்டு அறம் பூண்டார்” என்றும், பத்தாவது குறளில் “அந்தணர் என்போர் அறவோர்” என்றும் குறிக்கப்படுதலின் அறம் என்றால் துறவறம் மட்டுமே என்று புரிந்து கொள்கிறோம்.
நான்காவது அதிகாரம் நமக்கு முக்கியமான “அறன் வலியுறுத்தல்”. எட்டாவது குறட்பாவைத்தவிர மற்ற ஒன்பது குறட்பாக்களிலும் அறம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவைகளின் பொழிப்புரையை சுருக்கமாகப் பார்க்கலாம்.
அறத்தின் பயன் செல்வமும் சிறப்பும் (4-1)
அறம் மறந்தால் கேடு விளையும் (4–2)
அறஞ்செய விரும்பு (4-3)
நற்சிந்தையே அறம் (4-4)
பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல்
நான்கையும் கடிந்து வாழ்தலே அறம் (4-5)
இறப்பின்போது அறம் துணைநிற்கும். ஆதலின்
இளமை முதலே அறம் செய்க. (4-6)
ஒருவர் பல்லக்கைச் சுமப்பதும், மற்றொருவர்அதன்
மீது அமர்ந்து செல்வதும் அறத்தின் பயனால்அல்ல. (4-7)
அறம் ஆற்றலின் பலன் புகழ் மற்றும் இன்பம்.
அறம் மறத்தலின் பலன் துன்பம். (4-9)
செய்யத்தக்கது அறம். தகாதது பாவம் (4-10)
எட்டாவது குறளில் ‘நன்று ஆற்றின்” என்ற சொற்றொடருக்கு அறம் செய்தல் என்று பொருள் கொண்டால் அறம் பிறவிப்பிணியை நீக்கும் பெருமருந்தென்றாகிறது. முதல் அதிகாரம் (கடவுள் வாழ்த்து) பத்தாவது குறளை இத்துடன் இணைத்துப்பார்த்தால் அறம் செய்தல் இறைவனடி சேர்தலுக்கு ஒப்பாகிறது. அறம் பற்றி மேலும் விவாதிக்குமுன், அறத்துப்பாலின் மற்ற அதிகாரங்களிலும் பொருட்பாலிலும் அறம் பற்றி வேறு ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா என்று பார்க்கலாம்.
ஐந்தாவது அதிகாரம் – “இல்வாழ்க்கை”
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. (5-6)
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன். (5-7)
ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. (5-8)
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று. (5-9)
எட்டாவது அதிகாரம் – “அன்புடைமை”
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. (8-6)
என்பு இலதனை வெயில்போலக் காயுமே
அன்பு இலதனை அறம். (8-7)
பத்தாவது அதிகாரம் – “இனியவை கூறல்”
அல்லவை தேய அற்ம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின். (10-6)
பதிமூன்றாவது அதிகாரம் – அடக்கம் உடைமை
கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து (10-10)
பதினைந்தாவது அதிகாரம் – பிறன்இல் விழையாமை
பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்ர்கண் இல் (15-1)
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல். (15-2)
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன். (15-7)
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனன்றோ ஆன்ற ஒழுக்கு. (15-8)
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான்
பெண்மை நயவாமை நன்று (15-10)
பதினாறாவது அதிகாரம் – பொறை உடைமை
திறன்அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று. (16-7)
பதினேழாவது அதிகாரம் – அழுக்காறாமை
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான். (17-3)
பதினெட்டாவது அதிகாரம் – வெஃகாமை
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றுஇன்பம் வேண்டு பவர். (18-3)
பத்தொன்பதாவது அதிகாரம் – புறங்கூறாமை
அறன்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது (19-1)
அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன்அழீஇப் பொய்த்து நகை. (19-2)
புறம்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும். (19-3)
அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்
புன்மையால் காணப் படும். (19-5)
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை. (19-9)
இருபத்தொன்றாவது அதிகாரம் – தீவினை அச்சம்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு. (21-4)
இருபத்தைந்தாவது அதிகாரம் – அருள் உடைமை
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம். (25-9)
இருபத்தொன்பதாவது அதிகாரம் – கள்ளாமை
அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு. (29-8)
முப்பதாவது அதிகாரம் – வாய்மை
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும். (30-6)
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. (30-7)
முப்பத்துமூன்றாவது அதிகாரம் – கொல்லாமை
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும். (33-1)
பொருட்பால்
முப்பத்தொன்பதாவது அதிகாரம் – இறைமாட்சி
அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு. (39-4)
நாற்பத்தைந்தாவது அதிகாரம் – பெரியாரைத் துணைக்கோடல்
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். (45-1)
ஐம்பத்தொன்றாவது அதிகாரம் – தெரிந்து தெளிதல்
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறம்தெறிந்து தேரப் படும். (51-1)
ஐம்பத்தைந்தாவது அதிகாரம் – செங்கோன்மை
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (55-3)
அறுபத்து நான்காவது அதிகாரம் –அமைச்சு
அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
திறன் அறிந்தான் தேர்ச்சித்துணை. (64-5)
அறுபத்தைந்தாவது அதிகாரம் – சொல்வன்மை
திறன்அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின்ஊஉங்கு இல். (65-4)
எழுபத்தாறாவது அதிகாரம் – பொருள் செயல்வகை
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள். (76-4)
தொந்நூற்று ஒன்றாம் அதிகாரம் – பெண்வழிச்சேரல்
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல். (91-9)
நூற்றி ஒன்றாம் அதிகாரம் – நன்றி இல் செல்வம்
அன்புஒரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர். (101-9)
இவ்வாறாக, அறத்துப்பாலில் 37 முறையும், பொருட்பாலில் 9 முறையும் காணப்படும் அறம்/அறன் என்ற சொல் காமத்துப்பாலின் 25 அதிகாரங்களிலும் பயன்படுத்தப் படவில்லை. அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை என்று கூறிய வள்ளுவர், இல்வாழ்வுக்கு முந்தய களவியல், கற்பியல் இரண்டிலும் அறத்தைத் தவிர்த்திருக்கும் காரணம் ஆராய்ச்சிக்குரியது.
அறனை வள்ளுவர் மேலே வரிசையிடப்பட்ட குறட்பாக்கள் மூலம் எங்ஙணம் வரையரை செய்கிறார் என்று பார்க்கலாம். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இந்நான்கையும் தவிர்ப்பதும், மனத்துக்கண் மாசிலன் ஆதலும் அறன். இவை போன்ற எதிர்மறையான வரையரைகளுள் பொய்யாமை, பிறனில் விழையாமை, புறங்கூறாமை, கள்ளாமை, கொல்லாமை இவையும் அடங்கும். நேர்மறையாக இனியவை கூறல், அடக்கமுடைமை, தீவினை அச்சம் ஆகியவவற்றைக் குறிப்பிடலாம். இவை அனைத்தும்
தனி மனித அறமாகக் கருதலாம். அறம் செய்தல் என்பதை பெரும்பாலானவர்கள் கொடை, ஏழை எளியோர்க்கு உதவுதல் என்றே புரிந்து கொள்கிறார்கள். வள்ளுவர் 46 குறள்களில் ஒன்றிலும் இவ்வாறாகக் குறிப்பிடவில்லை என்றாலும் ஈகை, விருந்தோம்பல் என்ற இரு குறட்பாக்களிலும் விரிவாகச் சொல்லியிருக்கிறார், மேலும், சமூக அறம், தொழில் அறம் போன்ற அறங்கள் பற்றி மற்றைய குறட்பக்களிலிருந்து அறியலாம்.
அறம் என்பதின் வேர்ச்சொல் ‘அற’. இதன் பொருளாவது- அறுதி/முடிவு/அச்சம். அதாவது, அறுதியிட்டு சொல்லப்பட்டது. இயைந்த பொருளாக, முறைமை, நெறி, முன்னோர் வகுத்த வழி (ஆசாரம்) ஆகியவற்றையும் குறிப்பிடலாம். மனிதகுல பரிணாம வளர்ச்சி வழி, அறம் என்பதன் கூறுகள் மாற்றம் அடைந்து கொண்டே வந்துள்ளன.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. (22-5)
அறத்தின் பரிமாணம் அறிவின் பரிமாணம் என்று இக்குறள் காட்டுகிறதாகக் கொள்ளலாம். கால, தேச வர்த்தமானம் சார்ந்தும் அறத்தின் செயற்பாடுகள் வேறுபடும். செயற்கை நுண்ண்றிவு என்ன மாற்றங்களை உண்டாக்கப் போகிறதோ தெரியவில்லை. அவரவர் அறத்தை அவர்களே தேடிக்கொள்ள வேண்டியதே.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீரபிற. (4-4)
————————————
- ஜெயபாரதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
- திருக்குறளில் அறம் – ஒரு யதார்த்தப் பார்வை
- ஒருவருள் இருவர்
- புத்தாண்டில் இளமை