முக்காடு போட்ட நிலா

This entry is part 3 of 4 in the series 24 மார்ச் 2024

                                                                        மீனாட்சி சுந்தரமூர்த்தி     

                                                         

வானவீதியில் முழுநிலா வெள்ளை நிறமெனச் சொல்ல முடியாது பழுப்பு நிறத்தில்  வெண்ணையைத் தட்டி மெழுகியது போல் நகர்ந்து கொண்டிருந்தது. . அழகு நங்கை ஒருத்தி தன் சேலைத் தலைப்பால்  முகத்தை மூடிக்கொண்டது போல் அன்னத்தின் மெல்லிய தூவி மேகம் ஒன்று அதை மறைத்தது. சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகமில்லை, பெரிய கடை வீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தேனீர்க்  கடைகள் திறந்திருந்தன. காய்கறி, பழங்கள் ஏற்றி வந்தவர்களும், மயக்கம் தெளிந்து எழுந்த குடிமகன்களும், அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து பழகியிருந்த பெரியவர்களும் தேனீர்  அருந்திக் கொண்டிருந்தனர். மகிழுந்து கடைத்தெரு விநாயகரைக் கடந்து சுரங்கப் பாதையில் நுழைந்தது.பேருந்து நிலையத்தில் சலசலப்பு இருந்தது. புறப்பட்ட பேருந்துகள் பக்திப்பாடல்களை இசைத்துக்கொண்டு சென்றன. இங்கும் நான்கைந்து தேனீர்க் கடைகள் இயங்கிக் கொண்டிருந்தன.

ஆஞ்சநேயரைக் கடந்து சிதம்பரம் சாலையில் வண்டி திரும்பியது. முன்னிருக்கையில் அமர்ந்திருந்த என்னவர், கொஞ்சநேரம் தூங்கு’ என்றார். மேகத்தில் நுழைந்து வெளியில் வரும் நிலாவின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் இலயித்திருந்த நான் எப்படி உறங்கினேன் தெரியவில்லை. வடலூரில் தேனீர் அருந்த வண்டியை நிறுத்தியபோது ஐந்துமணி ஆன தைத் தர்காவிலிருந்து வந்த தொழுகை உறுதிப்படுத்தியது. இந்த நினைவுக்கு மட்டும் எப்படி இந்த வேகமென்று தெரியவில்லை, இருபது ஆண்டு பின்னோக்கி  முன்னேறியது. எல்லைக்குச் சற்று  அருகாமையில் என்பதால் பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒளிபரப்பு பத்தான் கோட்டில் கிடைக்கும் .அதில் தொழுகை கேட்டதும் எங்கள் மூன்று வயது மகன்  கருங்குவளை விழிகளை மூடி, கரங்களைச் சேர்த்து தாமரை இதழ்போல் ஏந்தி மண்டியிடுவான்.ஒரு நாளும் இது தவறாது. எதனால் இந்த ஈர்ப்பு என்று அறியோம். ஒருவேளை முற்பிறவியின் ஞாபகமோ என்று அலசும் நட்பு வட்டம்.

நாகப்பட்டினம் செல்லும் பேருந்து ஒன்று எங்கள் வண்டிக்கு முன்னால் வந்து  நின்றது. கூட்டம் அதிகமில்லை. இரண்டு பெண்கள் வேகமாகச் சென்று ஏறினார்கள் பச்சைப் பட்டும், நீலப்பட்டும் செம்புச் சரிகையில் பளபளத்தது. ஒரு முழம் நூறு ரூபாய்  விற்கும் முகூர்த்த நாளில் தலை நிறைய மல்லிகை. அதன்  மேல் இரண்டு மஞ்சள் ரோஜாக்கள். எங்கள் ஓட்டுநர் திருநாவு இலாவகமாகப் பேருந்தைக் கடந்து  மகிழுந்தின் வேகத்தைக் கூட்டினார்.  

‘திருநாவு முகூர்த்தம் ஒன்பது பத்தரை ‘

‘சார் நாம் ஏழுமணிக்கு அங்கே  இருப்போம்’

‘நேற்றே போயிருக்கணுங்க . அத்தாச்சி நடக்க முடியாம வந்து பத்திரிகை வச்சாங்க’

‘ என்னமா செய்யறது, வேலை அப்படி? கதவுல சாயாம உட்காரு ‘

‘சரிங்க’   இருக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடியவேளையில்  வானொலியில் ‘ சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி’ என்றெடுத்தார்  சீர்காழி.

நமசிவாயம்  சாரின் குடும்பம்  எங்களுக்கு நெருங்கிய நட்பு .என்னவர் அக்கா என்றழைப்பார்,

‘மேகலா நான் தம்பிக்கு  அக்கா ,ஒனக்கு அத்தாச்சி”

‘ சரிங்க அத்தாச்சி’

அந்த வருடமும் ஒன்பதாம் வகுப்பு தேறவில்லை குமரன்

‘ பெரியவன் நல்லா படிச்சான், தொல்லையே இல்லை,

இவனால மானம் போகுது’

‘வெளையாட்டு அதிகமா போச்சு’

‘சரியாகும் சார்.  இந்த வருஷம் அவனைப் படிக்க வைக்கற  பொறுப்பை நாங்க எடுத்துக்கறோம்’

அன்பான, நல்ல பண்பான பையன் குமரன். படிப்பான் ஆனால் மறந்து விடுவான் இதுதான் அவனுடைய குறைபாடு.

குமரனுக்கு  கணிதத்தை என்னவரும்  மற்ற பாடங்களை நானும் எடுத்தோம். பள்ளி செல்லும் முன், பள்ளியிலிருந்து வந்தபின் என  முழுவீச்சில்  பயிற்சி தொடர்ந்தது. காலை நான்கு மணிக்கு வரச் சொன்னாலும் சரியாக வந்து நிற்பான். எளிதாகச் சொல்லிவிட்டோம். ஆனால் நடைமுறையில் கடினமாக இருந்தது. எங்கள் குழந்தைகளுக்கான  நேரமும் அவனுக்காகச் செலவானது. பகீரப் பிரயத்தனம்தான். அந்த ஆண்டு சராசரியாக எழுபது விழுக்காடு பெற்றுத் தேறிவிட்டான். அத்தாச்சியும், சாரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அடுத்து பத்தாம் வகுப்பும் நீங்கள்தான் பார்த்துக்கணும் என்ற போது என்னவர் நல்ல டியூஷன் வாத்தியாரை ஏற்பாடு செய்து தந்து விட்டார். அதற்குப் பின்னர் சமாளிக்கப் பழகிவிட்டான். கடும் முயற்சியில் பொறியியல் பட்டதாரியாகி கொச்சினில் பெரிய நிறுவனத்தில் வேலையில் சேர்ந்திருக்கிறான். இன்று அவனுக்குத் திருமணம் .

‘மேகலா ஜாதிமல்லியா, குண்டுமல்லியா என்ன வாங்கட்டும்?’

வண்டி சன்னாநல்லூர் வந்திருந்தது. பால்நிறம் பூசிக் கொண்டிருந்தது வானம்.’

ஜாதிமல்லி ஒரு முழம் போதுங்க’ கடைவீதியில் பரபரப்பு தொற்றியிருந்தது. சாமந்தி, அரளி, குட்டி ரோஜா,  பலவண்ண ரோஜா,மல்லிகை, வயலட் நிற டேலியாப் பூக்கள் குவியல் குவியலாய்  இருக்க மாலைகள் தொங்கிக் கொண்டிருந்த பூக்கடை, ஒருபக்கத்தில், பெரிய அலுமினிய இட்டிலிப் பாத்திரத்தில் ஆவி பறந்து கொண்டிருந்தது., ஒரு புறம். தேனீர் தயாராகிக் கொண்டிருந்தது, , இரண்டு மூன்று மேசை ,நாற்காலிகளோடு அம்புஜம் மெஸ். பக்கத்தில் ‘வசமாய்ச் சிக்கிய அதிகாரி’ ‘பிடிபட்ட காட்டு யானை’ என்று பரபரப்புக் காட்டிக் கொண்டிருந்த செய்தித் தாள்களோடு பெட்டிக்கடை, நடிகையரின் அழகுப் படங்களோடு அருகில் ஒரு போட்டோ கடை. நான்கு  சாலைகள் கூடும்  இடம் அது.

மெல்லிய ஞெகிழிப் பையில்  சுருண்டிருந்த மல்லிகையை என்னிடம் தந்தார். முன்பெல்லாம் வாழையிலையில் கட்டித் தருவார்கள்.

இடது புறம் திரும்பிப் புறப்பட்டது வண்டி,இங்கிருந்து திருமருகல்  அதிக தூரமில்லை, திரும்பியபின் ஊரின் முகப்பிலேயே,’காவேரி மகால்’ கண்ணில் பட்டது.இருள் விலகியும் விலகாமலும் இருந்த விடியலில் வண்ண விளக்குச் சரங்களின் அலங்காரத்தில் மின்ன வேண்டியது, ஏனோ சந்தடியற்று இருந்தது.. வாய்க்காலைக் கடந்து செல்ல சற்றே அகலமான செம்மண் சாலை. மண்டப  வாசலில் எங்களை இறக்கி விட்டு  வண்டியை நிறுத்தச் சென்றார் திருநாவு. இருபுறமும் குத்து விளக்கு விட்டு விட்டு எரிய வருக,வருக என அழுது வடிந்தது அலங்காரத் தட்டி. கல்யாணக் களையில்லை, ஒருவருமே இல்லை,மண்டபம் மாறி வந்து விட்டோமா என்ற திகைப்போடு நீளமான மரப்பெஞ்சில் தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பினார் இவர்.

தூக்கக் கலக்கத்தில் போர்வையை உதறிக் கொண்டு எழுந்தார் அவர்.

‘ ஏம்பா இங்க எத்தன காவேரி மண்டபம் இருக்கு?’

‘இது ஒண்ணுதான் சார்’

‘அப்ப இங்கே கல்யாணம் நடக்கணுமே?’

முழுவதுமாய் தெளிந்த மனிதர்.’ சார், அந்தக் கல்யாணம் நிண்ணு போச்சு’

‘என்னப்பா சொல்ற நீ?’

‘போஸ்ட் மாஸ்டர் வீட்டுக் கல்யாணந்தானே , ராத்திரியே காலி பண்ணிட்டாங்க, வாரவுங்களுக்கு என்னைய சொல்லச் சொன்னாங்க.’

‘அடக் கடவுளே என்ன ஆனது?’அலைபேசியில் அழைத்தார்,’ தம்பி வந்துட்டீங்களா வாங்க வீட்டுக்கு’

குரல் உடைந்தது அத்தாச்சிக்கு.

வீட்டில் நெருங்கிய  ஒன்றிரண்டு உறவுகள் மட்டும் இருந்தனர்.

வண்டி நின்றதுமே நமசிவாயம் காரின் கதவைத் திறந்து விட்டார் இறங்கிய இவரைக் கட்டிக்கொண்டார், ‘இந்தப் பையன் இப்படி ஏமாத்திட்டாம் பா’

ஒரு திருமணமே நடத்தலாம் அத்தனை பெரிய கூடத்தில் அத்தாச்சியைச் சுற்றி நான்கைந்து பெண்கள்.’ வாடா எஞ்செல்லமே நம்பள மோசம் பண்ணிட்டாம்மா’ என்று கரங்களை நீட்டினார் அத்தாச்சி. என்னைக் கட்டிக் கொண்டு பெருங்குரலெடுத்தார்.

‘தம்பி உங்களதான் எதிர்பார்த்துட்டிருந்தேன் பன்னெண்டு மணிக்குப் போலீஸ் ஸ்டேஷன் போகணும்’

அதிர்ச்சியில் உறைந்திருந்த என்னவர்,’ குமரன் எங்கே’  ‘மொதல்ல சாப்பிடுங்க, சொல்றேன்’

‘மாமா , அத்தே நீங்களும் வாங்க, மாத்திரை போட்டுக்கணுமே’

காவ்யா பெரிய மருமகள் இட்டிலியும் ,சாம்பாரும் பறிமாற ஏதோ ஒரு கட்டாயத்தில் உண்டு முடித்தோம். குமரன்  யார் வம்புக்கும் போக மாட்டான்.கடின உழைப்பாளி, நேர்மையான பண்பு, உதவும் குணம் அதிகமாயிருந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை.  தாய்தந்தையரின் மரபணு அது. வாங்கும் சம்பளத்தை அப்படியே அப்பாவிடம் தந்து மகிழ்வான். மாதச்செலவுக்கு அவர்தந்து வாங்கிக் கொள்வான். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை கிளம்பி இரவு வந்து சேர்ந்து விடுவான். திங்களன்று அதிகாலை புறப்படுவான். நமசிவாயம் அவனுக்கு கார் ஒன்று வாங்கித் தந்திருந்தது வசதியாக இருந்தது. ஒரு வருடத்திற்குப் பின்  கல்யாணப் பேச்சு எடுத்தார்கள்.

அவனுக்காகவே  அத்தை மகள் மைதிலி காத்திருந்தாள்.

‘இந்த ஆவணியில கல்யாணம் வச்சிக்கலாமா குமரா?’

‘இல்ல மா இன்னுங் கொஞ்ச நாள் ஆகட்டும்’

‘மைதிலியும் படிச்சு முடிச்சிட்டா பா’

‘என்னால அவள கட்டிக்க முடியாது’  ‘ஏன்டா அவளுக்கு என்ன கொறச்சல்’

‘அப்பா வேண்டாம்னா விட்டுடுங்களேன்’

ஒருவழியாக மைதிலி  கும்பகோணத்து மாப்பிள்ளையை மணந்து துபாய் சென்றிருக்கிறாள்.

மூன்று மாதத்திற்கு முன் இவனிடம் கேட்டு  அழைத்துச் சென்று நாகையில் ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். கல்பனாவைப் பிடித்துவிட்டது, நிச்சயத்தன்று இன்று திருமணம் நடத்த முடிவு செய்தார்கள். ஒரு மாதமாக  குமரன் சரியாகப் பேசுவதில்லை, ஏதோ வேலை என்று சில வாரங்கள் வரவுமில்லை. திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன. ஒரு வார விடுமுறையில் வந்தான் குமரன்.

பந்தக்கால் நடுவது நலங்கு  என்று களைகட்டியது இல்லம். நேற்று மதியம் மூன்று மணிக்கு மணப்பெண்ணை அழைத்துவரச் செல்லும் நேரம் குமரனைத் தேடினார்கள் உறவுகள். அப்பாவின் சட்டைப் பையில்  செருகி வைத்திருந்த கடிதம் மட்டும் தலை நீட்டியது.

ஒருநாள் மாலை ஐந்து மணிக்குப் பணி முடிந்து தங்கியிருந்த அறைக்குத் திரும்பும்போது ,

‘ குமரன் என்னை அழைத்துச் செல்ல முடியுமா?

‘  வந்தனா மேடம் வாங்க ‘

‘என் மகளுக்குக் காய்ச்சல், வீட்டிலிருக்கிறாள்  அவசரமாகப் போகவேண்டும்’

‘பரவாயில்லை, வாங்க’ அன்று வந்தனாவின் வீட்டிற்குச் சென்ற குமரன்   ஏழாம் வகுப்புப் பயிலும் அவளுடைய மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவினான். வரவேற்பாளராகப் பணிபுரியும் வந்தனா கணவனை இழந்தவள். திருச்சூரிலிருந்து வந்தவள். அவளுடைய  வருமானம் ஐந்து வயது மகனையும்,பன்னிரண்டு வயது  மகளையும் வளர்க்கப் பற்றாக் குறையாகத்தான் இருந்தது. முப்பதைந்து வயதில் ஆதரவின்றி இருப்பது பெரிய கொடுமை என்று பகிர்ந்து கொண்டாள் குமரனிடம். கடந்த இரண்டு மாதங்களாக அடிக்கடி வந்தனாவின் இல்லம் சென்றான் குமரன். பிள்ளைகளும் இவனிடம் ஒட்டிக் கொண்டார்கள்,

வந்தனாவின் அழகில் ஒரு ஈர்ப்பு இருந்தது. இந்த நிலையில் ஒருவாரத்திற்கு முன்னர் அலுவலகத்தில் அனைவருக்கும் திருமண அழைப்பிதழைத் தந்தான் குமரன் வந்தனாவிற்கும்தான்.

அவன் திருமருகல் வந்தது முதல் தினமும் இரவு பகல் பாராது வந்தனா அலைபேசியில் அழைப்பாள். பேசிவிட்டு வரும் குமரன்  முகம் சரியாக இருக்காது. நேற்று  காலையில் சன்னாநல்லூர் வந்து இறங்கிய வந்தனா குமரனை அழைத்துப் பேசினாள். ஒரு நண்பனை அழைத்து வரவேண்டுமென்று   காரில்  சென்றவன் திரும்பவில்லை.

இது மூன்று மணிக்கே அம்பலமானது.

கடிதத்தில் இந்த விவரங்களைச் சொல்லி,’ஆதரவற்ற அந்தக் குடும்பத்திற்கு ஆதரவாகப் போகிறேன் அம்மாவும், அப்பாவும் என்னை மன்னியுங்கள், என்னைத் தேடவேண்டாம்’ என்று முடித்திருந்தான் குமரன்.கடிதத்தைக் காட்டி அழுதார்கள் பெற்றவர்கள். திருமணம் நின்றுபோனதற்கு நஷ்ட ஈடாக  இரண்டு இலட்சம் காவல் நிலையத்தில் வைத்துப் பெண்வீட்டாருக்குத் தர ஏற்பாடானது.

கலகலப்பாக களைகட்டியிருந்த வீடு துக்க வீடாகிப் போனது.

‘இப்படி மோசம் பண்ணிட்டியே,பெற்ற வயிறு பற்றி எரியுதடா சின்னவனே’ அத்தாச்சி மயங்கிச் சரிந்த நேரத்தில்,

திருமருகலைவிட்டு நெடுந்தொலைவு வந்திருந்தது குமரனின் கார்.

‘அப்பா நாம எங்க போறோம்?’

இருபத்தைந்து வயதில் பன்னிரண்டு வயது மகளுக்குத் தந்தையானான் அவன்.

‘மைசூருக்குப்  புதுவீட்டிற்கு’ என்ற வந்தனா வண்டி ஓட்டிக் கொண்டிருந்த குமரனின் நெற்றி வியர்வையைத் தன் முந்தானையால் துடைத்தாள்.

Series Navigationஜானிஎன்ன யோசிச்சுட்டு இருக்க?
author

மீனாட்சி சுந்தரமூர்த்தி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *