குரு அரவிந்தன்

கனடா, தொல்காப்பிய மன்றமும் தமிழ்நாடு, இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்திய ‘முதலாம் உலகத் தொல்காப்;பிய ஆராய்ச்சி மாநாடு’ கனடாவில் உள்ள ரொறன்ரோவில் 2024 செப்ரெம்பர் மாதம் 20, 21, 22 ஆகிய தினங்களில் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இறுதிநாள் நிகழ்வு கனடா தமிழ் இசைக் கலாமன்ற அரங்கில் நடைபெற்றபோது, பிரதம விருந்தினராக மாண்புமிகு திரு. சித்தார்த் நாத் கனடா இந்தியத்தூதரகத் தலைமைத்தூதர் கலந்து உரையாற்றிச் சிறப்பித்தார்.

இந்த நிகழ்வின் போது கண்காட்சி, ஆய்வரங்கம், சிறுவர் பேச்சு போட்டி, சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்குமான விநாடி வினா, தமிழ்த்திறன் போட்டிப் பரிசளிப்புகள், சதிராட்டம், நடனம், நடன ஆசிரியை திருமதி அற்புதராணி கிருபாராஜ் அவர்களின் மாணவிகளின் குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகம், கவி ஆசான் சண்முகராசன் சின்னத்தம்பி அவர்களின் தலைமையில் அன்பின் ஐந்திணை கவியரங்கம், திருமதி மாலினி பரராஜசிங்கம் அவர்களின் நெறியாள்கையில் பறையிசை, திரு கஜேந்திரன் சண்முகநாதனின் ஒருங்கிணைப்பில் கலாலயக் கலைஞர்கள் வழங்கிய காத்தவராயன் சிந்துநடைக் கூத்து, திரு இராச்குமார் குணரட்ணத்தின் நெறியாள்கையில் தொல்காப்பியம் வில்லுப்பாட்டு, சிறுவர் நாடகம் போன்ற பல நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதைவிட முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் ஒருங்கிணைப்பில் ‘ஓலைச்சுவடி முதல் இணையத்திரை வரை’ என்ற கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது.
இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கான பல போட்டிகளும், நிகழ்ச்சிகளும் தமிழில் இடம் பெற்றுப் பரிசுகள் வழங்கப்பட்டன. கடந்த 35 வருடங்களாக ஆசிரியர்களாகிய நாங்களும், பெற்றோரும் கனடிய மண்ணில் தமிழ் மொழியை நிலைநிறுத்த எடுத்துக் கொண்ட முயற்சியின் பலனை எமது இளைய தலைமுறையினர் மேடையில் தமிழ் மொழியில் முழங்கிய போது, அதைப் பார்த்துப் பரவசமடைய முடிந்தது.
இதைவிட திருமதி வனிதா குகேந்திரன் அவர்களின் கலைக்கோயில் நுண்கலைக் கல்லூரி மாணவியரின் நடனம், திருமதி கௌசல்யா ராஜகுமார் அவர்களின் சிவசக்தி நாட்டியாலயா குழுவினரின் நடனம், திருமதி தயாளினி ஜீனராஜ் அவர்களின் சலங்கை நர்த்தனாலயா கலைக்கூடக் குழுவினரின் நடனம், திருமதி நிரஞ்சனா சந்துரு அவர்களின் நடனக்குழுவினரின் நடனம், திருமதி செந்தில்செல்வி அவர்களின் நாட்டியக்குழுவினரின் நடனம் ஆகியனவும் இந்த நிகழ்வின்போது இடம் பெற்றன.
முக்கிய நிகழ்வாக உலகெங்கும் இருந்து கிடைக்கப்பெற்ற தொல்காப்பிய ஆய்வுக்கட்டுரைகளில் மலருக்குத் தெரிவான ஆய்வுக்கட்டுரைகள் நேரடியாகவும், மெய்நிகர் வழியாகவும் வாசிக்கப்பட்டன. செயற்குழு உறுப்பினர், தன்னார்வத் தொண்டர் மற்றும் முனைவர் இல. சுந்தரம் அவர்களதும் திட்டமிட்ட கடின உழைப்பையும் மூன்றுநாள் நிகழ்வின் போதும் காணமுடிந்தது. மூன்று நாட்களும் விருந்துபசாரமும் சிறப்பாக இடம் பெற்றிருந்தது. ஆய்வரங்கத்தில் ஆய்வுக்கட்டுரை வாசித்தவர்களுக்கும், போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்கும் தொல்காப்பியரின் சிறிய உருவச்சிலை விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தி முடித்த மன்றத்தலைவி, முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களுக்கும், செயற்குழுவினருக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும் கனடா தமிழ் ஆர்வலர்கள் சார்பில் எமது பாராட்டுக்கள் உரித்தாகுக!
- தெறிப்பு
- ஆய்ச்சியர் குரவை – பாகம் நான்கு
- கனடாவில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு.
- அறுவடைக்கு ஆட்படாத அய்யாவின் கண்டுமுதல்