பி.கே. சிவகுமார்

(திருச்சி தந்தை பெரியார் அரசு கலை, அறிவியல் கல்லூரி தமிழாய்வுத் துறையும், நாகர்கோயில் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து எழுத்தாளர் பெருமாள் முருகன் படைப்புகள் குறித்த இருநாட்கள் பன்னாட்டுக் கருத்தரங்கை ஜனவரி 7-8, 2025 அன்று நடத்தின. இக்கருத்தரங்கில் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு திரையிடப்பட்ட கட்டுரையின் எழுத்து வடிவம் இது.)

நண்பர்களுக்கு வணக்கம்!
வட்டார வழக்கில் கதை சொல்வது என்பது அந்தப் பகுதியில் புழங்கும் பேச்சு வழக்கைக் கவனித்து, பெரும்பாலும் புழங்கும் உச்சரிப்பையும் மொழியாளுகையையும் பிரதியெடுப்பதாகக் குறுகி விட்டது. உதாரணமாக, கொங்குப் பகுதி என்றால் “ங்க” என்ற மரியாதைச் சொல் சேர்த்துக் கொள்வது. இது இல்லாமல் அந்தப் பகுதிக்கேயுரிய சில சிறப்பான சொற்களைச் சேர்த்துக் கொண்டால் வட்டார வழக்காகி விடும் என நம்புகிறார்கள். உதாரணமாக சவுத்து மூதி என்றால் திருநெல்வேலி பக்கம். திரைத்துறையில் வசனத்தைச் சாதாரண உரைநடையில் எழுதி பின்னர் அந்த வட்டாரத்தைச் சார்ந்த ஒருவரை வைத்து அதன் பாணிக்கு மாற்றுகிற ஜிகினா வேலைகள் சகஜம். தமிழில் சில எழுத்தாளர்கள் அவர்கள் வட்டார மொழியில் சிலவற்றைச் சேர்த்தும் குறைத்தும் தங்களுக்கான வட்டார மொழியை உருவாக்கிக் கொண்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் வட்டார மொழி என்கிற அடிப்படையில் கூட இவை வட்டார வழக்கு அல்ல. வட்டார வழக்கு என்பது சொல்லாடல்கள் மட்டுமல்ல. அந்த வட்டாரத்தின் மொழியோடு, மண், பயிர்கள், பறவைகள், விலங்குகள், உணவு என வாழ்க்கையை முழுமையாக அறிந்த ஒருவர் பாவிக்கும் மொழிதான் வட்டார வழக்கின் செழுமையான, முழுமையான மொழி. உதாரணமாக, கிராமத்தில் வளராது அல்லது கிராமத்தை அறியாது நகர்ப்புறத்தில் வளர்ந்த கொங்கு எழுத்தாளருக்கோ நெல்லை எழுத்தாளருக்கோ அந்த வட்டார வழக்கின் மேலடுக்குகள் மட்டுமே தெரியும். அந்த வட்டாரத்தின் மண், பயிர்கள், உயிர்கள், அவை குறித்த சொல்லாடல்கள் என உள்ளடுக்குகள் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் மேலடுக்கைப் பார்த்தே ஆஹா ஓஹோ என்னும் சமூகமாக நாம் மாறியிருக்கிறோம்.
தமிழில் வட்டார வழக்கில், வட்டார வழக்கே அறுகி வரும் நவீன காலத்தில், மொழியோடு அந்தப் பகுதியின் மண்ணையும் பயிரையும் உயிரையும் அறிந்த எழுத்தாளர்கள் என பூமணியையும் பெருமாள் முருகனையும் சொல்லலாம். வட்டார வாழ்க்கையின் புறவயமான சித்திரங்களை நுட்பமாகவும் அப்பகுதி குறித்த விசேட அறிவு இயல்பாக வெளிப்படும் வகையிலும் தீட்டுவதில் இருவரும் வல்லுனர்கள்.
நாமக்கல் – திருச்செங்கோடு பகுதியின் மண்ணும், கிராமத்து வாழ்வும், பயிர்களும், பறவைகளும், விலங்குகளும், கூள மாதாரி நாவலில் அந்த வாழ்க்கையைப் பார்த்து, அந்த வாழ்க்கையை வாழ்ந்த மனிதர் சொல்கிற ஓர் ஆவணம் போல் மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வட்டார வழக்கில் பெருமாள் முருகன் தமிழில் ஒரு நிபுணர். கொங்கு வட்டாரச் சொல்லகராதி தயாரித்து வெளியிட்டவர் என்பது ஒரு சான்று எனில் இந்த நாவல் இன்னொரு சான்று.
இதற்குச் சில உதாரணங்களைப் பார்க்கலாம். அணப்பு, உழவுப் படைக்கால், கொட்டக்கோல்கள், ஆமரம், பொம்மரம், காந்தியது, ஒவைத்தான், வட்டல், சூலான், பண்டம்பாடிகள், ரட்டக்காலி, தலையீத்துப் பிரவை, இட்டேரி, தாக்கோழி, இப்படி இன்னும் பலவாறான வட்டாரச் சொற்களை அந்தப் பகுதியில் வளரும் இன்றைய நவீன நகரத்து இளையர் அறிந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். அப்படியான ஒரு மொழி நம்மிடையே இருந்ததை இன்னும் கொஞ்சம் மிச்சமிருப்பதை இந்த நாவல் சிறப்பாகக் காட்டுகிறது.
அது மட்டுமல்ல, இந்த நாவலில் ஆடு மேய்க்கிறவர்களாக வருகிற, ஒடுக்கப்பட்ட இனமான மாதாரி இனச் சிறுவ சிறுமியர் அவ்வப்போது பேசும் அவர்களது மொழியையும், ஆடுகளுக்கு அவர்கள் தம் மொழியில் இடும் கட்டளைகளையும் பெருமாள் முருகன் இயல்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
என்னுடைய பெற்றோர் பழைய வடாற்காடு மாவட்டத்தின் குக்கிராமம் ஒன்றில் – பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி, அங்கேயே வாழ்ந்தவர்கள். என்னுடைய ஆறாம் வகுப்பின் பெரும்பகுதியை அவர்களுடன் கிராமத்தில் தங்கி தினமும் நகரத்துக்குச் சென்று படித்து வந்தவனாகக் கழித்தேன். எட்டாம் வகுப்பை அங்கேயே தங்கிப் பக்கத்துக் கிராமம் ஒன்றில் படித்தேன். என் பெற்றோருடன் வாழாத காலத்தில் விடுமுறைகளுக்கும், பொங்கல் போன்ற முக்கியப் பண்டிகைகளுக்கும், அல்லது மாதம் ஒருமுறையேனும் அவர்களுடன் சென்று தங்குவேன்.
என் தந்தையார் நாய், பூனை, கோழி, புறா, மாடு எனப் பலவும் வளர்த்தார். வெட்டவெளியில் இயற்கைக் கடன்களை முடிப்பது, நீச்சல் கற்றுக் கொண்டது, கிணற்றில் குதித்து மகிழ்ந்தது, பம்ப்செட் தண்ணீர் முதலில் நிறைந்து பின் ஓடும் தொட்டியில் ஆட்டம் போட்டது, மாடு மேய்த்தது, புல் அறுத்தது, வயலில் பண்ணைக்கீரை தேடிப் பறித்தது, ஓர் நிலக்கடலை அறுவடைக்குக் கலாக்கா புடுங்கப் போனது, ஏர் ஓட்டிப் பார்த்தது, மைனா / சிறுகுருவிகள் பிடித்து விளையாடி வீட்டில் திட்டு வாங்கி பின் அவற்றை விட்டது, கோயில் எருது மேல் விளையாட்டாய் கல்லெறிந்து வாத்தியார் பையன் இப்டிச் செய்யலாமா என அதைப் பார்த்த கிராமத்துப் பெரியவர் கேட்டது, கிராமத்து நண்பர்களுடன் மாங்கா திருடித் தின்றது என என் சிறுவயதின் மறவாத பல அனுபவங்கள் அந்த வாழ்க்கையில் கிட்டின. என் தந்தையார் சொல்கிற கதைகளைக் கேட்க இரவில் கூடுகிற கிராமத்தினரில் ஆடு மேய்ப்பவர்களும், பட்டி போடுகிறவர்களும் இருந்தனர். அதனால் இந்த நாவல் எனக்கு, நான் பார்த்த கதைக் களனைப் பேசுவதுபோல், வாசிக்க ஆர்வமாக இருந்தது. என் பால்யத்துக்கு இந்த நாவல் மூலம் நான் இன்னொருமுறை சென்று வந்தேன். பெருமாள் முருகனும் இந்நாவல் மூலம் அவர் பால்யத்துக்கு மீண்டும் சென்று வந்ததாகச் சொன்னதைப் படித்தபோது, மகிழ்ச்சி உண்டாகியது.
அந்த கிராமத்து வாழ்க்கையில் நான் இந்த நாவலில் வருகிற கூளையன் மாதிரியான முழுநேரப் பண்ணையாள்களையும், வவுறி மாதிரி பகலில் வேலை செய்துவிட்டு, இரவில் வீட்டுக்குப் போய்விடுகிற பகுதிநேரப் பண்ணையாள்களையும் பார்த்திருக்கிறேன். இத்தகைய வேறுபாடுகளை இந்நாவல் கோடிட்டுப் போகிற போக்கில் சொல்லிவிடுகிறது. மேலும் பண்ணையாள்கள் நிலவுடைமையாளர்களின் கண்டிப்பான / தாராள குணத்துக்கேற்பவும், மனநிலைக்கேற்பவும் நடத்தப்படுவார்கள் என்பதையும் இந்நாவல்களின் பாத்திரங்கள் சிறப்பாக வெளிக்கொணர்கிறார்கள்.
பண்ணையாள் முறையைக் குறித்து எழுதும்போது ஆசிரியர் அதைக் குறித்து தன்னுடைய பார்வையை வைக்காமல், அது குறித்த அரசியலைப் பேசாமல், அந்த வாழ்க்கை முறையை நம் முன்னே படம் பிடித்துக் காட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். அதுவே மனதில் ஓர் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.
இந்த நாவலில் பண்ணையாட்களாக இருக்கும் சிறுவச் சிறுமிகளின் கதை மட்டும் இல்லை, பண்ணையார்களின் கதையும் இருக்கிறது, ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை இருக்கிறது, ஆடுகளின் குணாதிசயங்கள் உள்ளன, பதின்ம வயது இளையர்களிடையே எழும் காமம் இருக்கிறது, பண்ணையாள் வேலையிலும் ஆடு மேய்க்கும்போதும் அவர்கள் தங்களுக்கான விளையாட்டுகளை அதன் மூலம் மகிழ்ச்சியைக் கண்டடையும் தருணங்கள் இருக்கின்றன, போட்டிப் பொறாமையுடனே அவர்கள் உணவைப் பங்கிட்டுக் கொள்ளும் பாங்கும் இருக்கிறது, மொண்டி மந்திரம் கற்றுக் கொண்ட கதை இருக்கிறது, அவர்கள் ஆடு மேய்க்கிற நிலப்பகுதியின் செடிகள்-மரங்கள்-பூக்கள்-பறவைகளின் நுட்பமான விவரங்கள் இருக்கின்றன, பண்ணையார் வீட்டுக் குழந்தைகளின் கதை இருக்கிறது, பண்ணையார் குழந்தைகள் சமவயதொத்த பண்ணையாள் குழந்தைகளுடன் விளையாடும் கதை இருக்கிறது, பண்ணையார் குழந்தைகளிடம் வெளிப்படும் நிலப்பிரபுத்துவ குணங்கள் இருக்கின்றன, சோதனைகள் குழந்தைகளைப் பெரியவர்களாக்கும் நிகழ்வுகள் (coming to age) இருக்கின்றன, இன்னும் இப்படி பல என இந்நாவல் பல தளங்களில் விரியும் தன்மை கொண்டதாக இருக்கிறது.
வயதான பண்ணையாருக்கு பீ மூத்திரம் அள்ள விரும்பாத பண்ணையாள் பேரனைப் பார்த்து அவன் பாட்டி சொல்கிறாள். நீ இப்ப உயிரோடு இருக்கவே பெரிய பண்ணையார் தான் காரணம். அதனால் எனக்குச் செய்யறாப்ல நினைச்சு அவருக்குச் செய்யி. இந்த இடத்தில் பண்ணையார் – பண்ணையாள் உறவை மீறி, வாழ்க்கையில் தாழ்ந்திருந்தாலும் குணத்தில் உயர்ந்திருந்த தலைமுறை ஒன்றை அந்தப் பாட்டியின் மூலம் அறிகிறோம். இத்தகைய பாட்டிகளுக்குப் பண்ணையார் மீது குறைகள் இல்லாமல் இருந்திருக்காது. அக்குறைகளை மீறி இப்படி அவர்கள் பேசும் இடத்தில் பேருரு கொள்கிறார்கள். இந்த நாவலின் பலம் இப்படிப் பல விஷயங்களைக் கதையின் போக்கில் நம் மனதில் தனிச்சித்திரங்களாகப் பதித்து விடுவதுதான்.
அடுத்து என்ன ஆகுமோ என வாசகரை எதிர்நோக்க வைக்கும் பல நிகழ்வுகள் இந்நாவலில் சுவாரஸ்யத்தின் முடிச்சுகளைக் கூட்டுகின்றன. காணாமல் போன ஆட்டுக்குட்டிக்கு என்ன ஆனது, குட்டி போட முயலும் ஆட்டின் பிரசவம் நன்றாக நடக்குமா, செவிடி கொண்டுவரும் பண்ணையாரிச்சியின் குழந்தை அவள் விளையாடப் போகும்போது பத்திரமாக இருக்க வேண்டுமே, கிணற்றில் குதித்து ஆடும் விளையாட்டில் யாருக்கும் ஒன்றும் ஆகக்கூடாதே, கலாக்கா திருடப்போகும் இடத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாதே, ஆடுகளுக்கு எதுவும் ஆகக் கூடாதே எனப் பலவாறாக வாசகரை நினைக்க வைக்கும் வகையில் ஆடு மேய்க்கும் கதைக்குள் பல சுவாரஸ்யங்கள் ரகசிய அறைகளாக வைக்கப்பட்டுள்ளன.
கூளையன், வவுறி, செவிடி, மொண்டி, நெடும்பன் என இந்நாவலின் முக்கிய பாத்திரங்களுக்கு அக்கால கிராமத்தில் பொதுவாக நிலவிய காரணப்பெயர்களையே ஆசிரியர் இயல்பாகக் கொடுத்துள்ளார். இந்தப் பாத்திரங்கள் அனைத்தும் ஆளுக்கார வேலை செய்வதால் ஒரே மாதிரியானவர்களாகத் தோன்றினாலும் ஒவ்வொருவரும் தனித்துவம் கொண்டவர்கள் என்பதைக் கதையின் விவரிப்பில் புரிந்து கொள்கிறோம்.
நான் சிறுவனாகப் பார்த்த கிராமத்தில் இத்தகைய காரணப் பெயர்கள் இருந்தன. சிறுவர்களின் சண்டைகளின் போது பீ சூத்தன், ஊளைக் காதன், சளி மூக்கன், சப்பாண்டி, ரெட்டத் தலையன் போன்ற புதிய பெயர்கள் சகஜமாகப் பரிமாறவும் படுவதைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு உருப்படிக்கும் (ஆட்டுக்கும்) ஒரு பெயர் வைக்கும் பழக்கம் இருந்ததையும் இந்நாவல் காட்டுகிறது. கூளையனின் 14 ஆட்டுக்கும் 14 பெயர்கள். நாங்கள் என் தந்தையார் வளர்த்த எல்லா ஜீவராசிக்கும் தனிப்பெயர்கள் வைத்திருந்தோம். கிராமத்தில் எல்லாரும் அப்படித்தான். அது ஒருவகையான பாசப்பிணைப்பு. அதை இந்நாவலில் உணரலாம்.
எந்த அளவுக்கு அந்த வாழ்க்கையை ஆசிரியர் உள்வாங்கியுள்ளார் என்பதற்கு இதல்ல உதாரணம். இப்படிக் காரணப் பெயர்களை நாவலில் இயல்பாக உலவவிடும் ஆசிரியர் ஓரிடத்தில் வவுறியை மட்டும் அவள் தாயார் பெயர் சொல்லித் தான் கூப்பிடுவார் என்கிறார். இது ஆசிரியரின் புரிதலின் ஆழம். நான் பார்த்த கிராம வாழ்க்கையில் யாரும் தங்கள் குழந்தையைக் காரணப் பெயர் சொல்லிக் கூப்பிட்டால் கோபப்பட்ட தாய்மார்கள் உண்டு. அந்தத் தாய்மார்கள் தம் குழந்தைகளை அவர்கள் பெயரிட்டோ, பெயரைச் சுருக்கிச் செல்லமாகவோதான் அழைப்பார்கள். அத்தகைய நுட்பமான தருணங்கள் மிகை நாடக தோரணையின்றி போகிற போக்கில் வெளிப்படுவது இந்நாவலின் இன்னொரு சிறப்பு.
இந்த நாவல் நடக்கிற காலம் 1970களின் பின்பகுதியில் இருந்து 1980களின் நடுப்பகுதி என ஊகித்துக் கொண்டால் – அக்கால கிராமத்தில் படிப்பறிவை மீறிப் பலரும் புழங்கும் வகையில் நுழைந்த ஆங்கில வார்த்தைகள் உண்டு. உதாரணமாக – சைக்கிள், டயர், பஞ்ச்சர், லைட், டிராக்டர், ரேடியோ, சினிமாக் கொட்டாய், டீச்சர் போன்றவற்றைச் சொல்லலாம். முருகன் இந்நாவலில் பெரும்பாலும் இத்தகைய ஆங்கில வார்த்தைகளின் தேவையின்றிக் கதையை நகர்த்துகிறார். கொட்டாயில என்ன படம் போட்டிருக்கான் என்பதுபோல உரையாடல்கள் அமைந்து விடுகின்றன. இந்தக் குழந்தைகள் இத்தகைய ஆங்கில வார்த்தைகளின் தாக்கமே இல்லாமல் இருந்திருப்பார்களா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதேநேரம் அத்தகைய தருணங்களை இயல்பான தமிழ் வார்த்தை கொண்டு கடக்கும் முருகன் பாராட்டுக்குரியவர். அத்தகைய தமிழ் வார்த்தைகள் செயற்கையாகவும் தெரியவில்லை என்பதே முருகனின் பலம்.
வண்டுகள் நோண்டியிழுத்தப் பனம்பழ நார்கள் போலத் தலை செம்பட்டை மயிர்களைக் கொண்டிருந்தது – பார்க்கவே பிசுசுவென்று மனதில் ஒட்டின – கொடங்குகளில் நீர் பட்டுத் திரும்புகையில், ஆலச்சட்டியில் கருப்பட்டிப் பாகு ஆற்றும்போது டிமுக்கடிக்கும் ஓசை போலப் பலமடங்கு எழுந்தது – உடல் சுருட்டித் தலை உயர்த்திய பாம்பொன்று நிற்பதைப் போல – படைக்கால்கள் மண் முகத்தில் விழுந்த சுருக்கங்களென வரிவரியாய் ஓடியிருந்தன – தலை உயர்த்தி நின்ற பயிர் பச்சைகளின் ஆயுள் கழிந்து, எல்லாம் தாறுமாறாய்க் கிடக்கும் இறப்பு வீடுபோல அணப்புகள் அழிகாடாய் மாறியிருந்தன – கைகள் பலவற்றையும் ஒருசேர உயர்த்திக்கொண்டிருக்கும் எருக்கலை, தலை கவிழப் படுத்துக் கிடக்கும் வரப்புகள், காற்றுக்குப் புழுதி கொடுத்துத் தன்னைக் காத்துக்கொள்ளும் மண் – அவள் குரலை எதிர் பார்த்துச் செவி விறைத்த நாயாய்க் காத்திருக்க வேண்டும் – கிறுக்குக்கோழியைப் போலக் கற்களைக் கூட்டி வைத்து – தெளுவுக் காலம் வந்துவிட்டாலே மைனாக்களுக்கும் கொண்டாட்டம், சுண்ணாம்புத் தெளுவை விட்டுவிட்டுக் கள்ளுத்தெளுவாய்ப் பார்த்துத்தான் அவை குடிக்கும் – வெயில் நன்றாக ஏறிவிட்டது. நெருஞ்சிமுள்ளாய்த் தோலில் தைக்கிறது. அதற்குள் தோசை சுடுமளவுக்குப் பாறை சூடேறிவிட்டது – காலையில் பட்டியிலிருந்து வெளிவிடும்போது துடிப்பும் ஆவலுமாய் அலைந்தோடும் ஆடுகளுக்கும் அடித்து வைத்த சிலைகள் போல மேயும் சாயங்கால ஆடுகளுக்கும் எத்தனை வித்தியாசம் – வெண்ணிறச் சாம்பல் பூசிய அதன் இலைகள் அடியிலிருந்து மேல்வரை விளக்கேந்திய கைகள் போலத் தோன்றின- வெள்ளையும் நீலமும் கலந்து மாவிளக்குப்போல் விரிந்திருந்த பூக்களை மட்டும் பறித்துப் பறித்துக் கை கொள்ளாமல் சேர்த்தாள் – தலையில் நட்சத்திரத்தைப் பதித்தாற்போல் தோன்றும் அந்தப் பூவை அழுத்தமாகப் பிடித்துத் தரைக்குக் கொண்டு சென்று மண்ணில் நிறுத்தி வைத்தாள் – அதற்குக் குட்டி போட்ட அந்த உணர்வு ஏதும் இல்லை. ஏதோ கொஞ்சம் கஷ்டப்பட்டுப் புழுக்கை போட்ட மாதிரி ஒன்றுமே உணராமல் மந்தைக்குள் போய் மேயத் தொடங்கிவிட்டது – மற்ற ஆடுகளை எல்லாம் விலக்கிக்கொண்டு அதை நெருங்கவும் காதுகளை விறைத்துக்கொண்டு கண்கள் பிதுங்க வசமாகச் சிக்கிக்கொண்ட எலி போலத் தவித்தது — இவையெல்லாம் நாவல் நெடுக வரும் வட்டார வாழ்க்கை ஊடோடும் வர்ணனைகளுக்கும் உவமைகளுக்கும் சில உதாரணங்கள் மட்டுமே.
அயல்நாடுகளில் கொண்டாடப்படும் பெருமாள் முருகன் குறித்துத் தமிழில் சிலரிடையே அதிருப்தி இருக்கிறது. புலமைக் காய்ச்சலே அதற்குக் காரணம் எனலாம். அவர் எழுத்துகள் சுவாரஸ்யமாக இல்லை என்கிற மேம்போக்கான குற்றச்சாட்டுகள். அவர் எழுதும் அபுனைவுக் கட்டுரைகள் கூட புனைவுபோல் சொல்லப்படுவதே முருகனின் பலம். பெருமாள் முருகன் கல்லூரியில் படிக்கிற போது கவிதைப் போட்டிகளில் மரபுக் கவிதை எழுதி முதல் பரிசு வாங்குவதை, புதுக்கவிதை எழுதி இரண்டாம் பரிசோ மூன்றாம் பரிசோ வாங்குகிறவனாக நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். சொல்வளத்திலும், மரபின் சந்தத்திலும் முருகன் தனித்தேர்ச்சி பெற்றவர். மானே, தேனே, நீதானே என்றோ, செண்டே வண்டே என்றோ இலக்கணத்துக்காக இடம் நிரப்பும் வார்த்தைகள் இல்லாமல், புதிய வார்த்தைகளுடன் செழுமையான மரபுக் கவிதை படைக்கும் ஆற்றல் முருகனிடம் உண்டு. என் தலைமுறையில் முருகனுக்கு இணையாக மரபுக் கவிதையில் மரபின் மைந்தன் முத்தையாவைச் சொல்லலாம். அப்படிப்பட்ட முருகனால் எந்த பாணியிலும் எழுத முடியும். கவனம் பெறுவதற்காக போலியான உரைநடையைச் சுவாரஸ்யம் என்ற பெயரில் முருகன் எழுதுவதில்லை என்பதே அவரின் தனிப்பண்பு. மௌனியையும் நகுலனையும் சுவாரஸ்யம் என்கிறவர்கள் பெருமாள் முருகன் எழுத்துகள் சுவாரஸ்யமில்லை என்பது ஓர் அரசியலே. பெருமாள் முருகனைப் படிக்க அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் போதுமானது.
தமிழில் 1980க்குப் பின் முக்கியப் படைப்பாளிகளாக முன்வைக்கப்படும் மூன்று எழுத்தாளர்களால் – கூள மாதாரி போன்ற ஒரு நுட்பமான சித்தரிப்பு கொண்ட நாவலை எழுதிவிட முடியாது என்பதே முருகனின் சிறப்பு. அதே நேரம் அந்த எழுத்தாளர்களின் எந்தக் கதைக் களன் போலவும் முருகனால் எழுத முடியும். இதைச் சொல்வதன் மூலம் அந்த எழுத்தாளர்களை, அவர்களின் சாதனைகளை, நான் குறைத்து மதிப்பிடவில்லை. அந்த மூன்று எழுத்தாளர்களுடன் ஒப்பிட்டே இங்கே சிலர் முருகனை ஓரங்கட்ட நினைப்பதால் இதைச் சொல்ல வேண்டியதாயிற்று. இதற்காக அந்த மூன்று எழுத்தாளர்களும் என்னை மன்னிப்பார்களாக.
ஒருமுறை தனிப்பேச்சில் அவருக்குப் பிடித்த அவரின் நாவலாகக் கூள மாதாரியை முருகன் சொன்னார். அதை நாவலின் முன்னுரையிலும் சொல்கிறார். “ஏதுமற்ற வெளியே என் ஆதர்சம். வெயில், மழை, குளிர், பனி, காற்று, பொழுது, நிலவு, மலை, புழுதி, பசுமை, வறள் எல்லாம் கூடிக் கலந்த என் மனவெளி அது. அதை உணரும் பேற்றை எனக்கு வழங்கியது இந்நாவலின் களமாகிய மேட்டுக்காட்டு மண். அங்கு உலவும் மனிதர்கள் உயிர் பெறுவதே அந்நிலத்தால்தான்.” – எனக்கும் கூரைக்குக் கீழே நிகழாமல் மண்ணின் மேல், வானத்துக்குக் கீழே திரியும் வாழ்க்கை மிகவும் பிடித்தது. அதனால் இந்த நாவலும்.
புழுதி, கொழிமண், வறள் என்கிற மூன்று பகுதிகள் கொண்ட இந்த நாவலில் திரும்பத் திரும்ப ஆடு மேய்ப்பதே வருகிறதே என்று ஒரு தரப்பு சலித்துக் கொண்டதாக பெருமாள் முருகன் முன்னுரையில் சொல்லியிருந்தார். அப்படிச் சொல்கிறவர்களுக்கு ஆடு மேய்த்தலின் மகத்துவம் தெரியவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆடு மேய்த்தலினூடே இந்த நாவல் ஆடுகள் மேயும் நிலப்பரப்பு போல விரிந்ததொரு கதைப்பரப்பையும் கொண்டிருக்கிறது. அதில் மகிழ்ச்சி, விளையாட்டு, வலி, துன்பம், குரூரம், தண்டனை, மரணம் ஏன் கொலை கூட இடம்பெறுகிறது. அவை எந்தக் கணம் நிகழும் என்கிற எதிர்பார்ப்பில் வாசகரை வைத்திருப்பதில் இந்நாவல் வெற்றியடைகிறது.
நாவலின் கதையை முழுமையாகச் சொல்லாமல் – இந்த நாவல் ஏன் முக்கியமானது, அதனால் பெருமாள் முருகன் ஏன் தமிழின் முக்கியமான எழுத்தாளர் என எடுத்துக் காட்ட இக்கட்டுரை முயன்றது.
கொங்கு நாட்டின் ஒரு பகுதியின் வட்டார வாழ்க்கையின் ஒரு காலத்தின் நுட்பமான சித்திரங்களின் தொகுப்பு என்கிற வகையில் இந்நாவல் செவ்வியல் தன்மை கொண்டது.
இந்த நாவல் குறித்த என் சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி! வணக்கம்!
- பெருமாள் முருகனின் கூள மாதாரி – ஒரு வாசக அனுபவம்
- கலிபோர்னியாவிலொரு கொரில்லா யுத்தம்
- இலக்கியம் என்ன செய்யும்.
- ஆல்ஃபா’ என். யு – 91
- எல்லாமே ஒன்றுதான்
- போலி சிரிக்கிறது
- போகி
- பிடிபடாத தழுவுதல்