– பி.கே. சிவகுமார்
கவிதா பப்ளிகேஷன்ஸ் 1956ல் இருந்து 2000 வரை அசோகமித்திரன் எழுதிய சிறுகதைகளை இரு தொகுதிகளாக 2003-ல் வெளியிட்டது. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டபின், கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட தொகுதிகள் இவை. அதற்கு முன் அசோகமித்திரன் படைப்புகளை நர்மதா பதிப்பகமும் கலைஞன் பதிப்பகமும் வெளியிட்ட நினைவு. 2003க்குப் பிந்தைய காலத்தில் கிழக்கு பதிப்பகம் வந்தபின் பல பிராமண எழுத்தாளர்கள் அதற்கு மாறிக் கொண்டார்கள். அசோகமித்திரனின் கட்டுரைத் தொகுதிகளும் அப்படிக் கிழக்கு பதிப்பகத்தின் வழியே வந்த நினைவு.
என்றாலும் அசோகமித்திரனின் சிறுகதை எழுத்தின் வளர்ச்சியைப் பார்க்க இந்த இரண்டு தொகுப்புகளும் நல்ல உதாரணம்.
இன்று அவர் 1956ல் எழுதிய தொகுப்பின் முதல் கதையாக இருக்கிற, நாடகத்தின் முடிவு, என்கிற கதையை வாசித்தேன். புதுமைப்பித்தனின் பாதிப்பு உள்ளதோ எனத் தோன்றவைத்த கதை. இடையே – “நிலவு பால்போல் காய்ந்து கொண்டிருந்தது” போன்ற தேய்வழக்கு கொண்ட வரி உண்டு. அடுத்தவரியாகவே, “உடற்பிணியும் மனப்பிணியும் உள்ளவர்களைத் தவிர மற்ற எல்லாரும் உறங்கியாகிவிட்டது” போன்ற நல்லவரியும் உண்டு.
ஒரு நாடக ஆசிரியரிடம் அவர் எழுதிய நாடகத்தின் கதாபாத்திரம் உயிர்பெற்றுப் பேசுவதே கதையின் கரு. கொஞ்சம் நாடகீயமான வசனங்களும் தருணங்களும் கதையில் உண்டு. பின்னாட்களில் இவற்றை வடிகட்டிக் கொடுப்பதில் அசோகமித்திரன் நிபுணர் ஆகிவிட்டார். கதையின் முடிவும் நாடகீயமானதுதான்.
ஆனால் ஒரு நல்ல எழுத்தாளராக அசோகமித்திரன் வருவார் என கதை வந்த காலத்தில் இதைப் படித்தவர்களுக்குத் தோன்றியிருக்கும். ஆறரைப் பக்கங்களில் கதை முடிந்துவிடுகிறது. அது அசோகமித்திரன் ஆரம்பம் முதல் சிறுகதை குறித்துக் கொண்டிருந்த வடிவ பிரக்ஞையைக் காட்டுகிறது.
இந்தக் கதையில் கதாபாத்திரம் நாடக ஆசிரியருடன் பேசினாலும் இலட்சியவாத கதாபாத்திரத்துக்கும் அதைப் படைத்த யதார்த்தவாத ஆசிரியருக்கும் இருக்கிற இடைவெளி, அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும், ஆகிய கேள்விகள் உரையாடலில் அலசப்படுகின்றன. கடைசியில் நாடக ஆசிரியரை அதிர்ச்சியில் இறக்க வைத்து உன்னதமாக்காமல் இருந்திருந்தால், இயல்பாக இருந்திருக்குமோ என்கிற கேள்வி எழுகிறது.
கதாபாத்திரம் உயிர்பெற்று வந்து நாடக ஆசிரியருடன் பேசுகிற மாய யதார்த்தவாத கதையை அசோகமித்திரன் 1956லேயே எழுதிவிட்டார் என யாரும் கிளம்பாமல் இருந்தால் சரி.
– பி.கே. சிவகுமார்
ஜூலை 5, 2025
#அசோகமித்திரன்