அசோகமித்திரனின் “ஒற்றன்”

அசோகமித்திரனின் “ஒற்றன்”
This entry is part 6 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

பி.கே.சிவகுமார்

அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை இந்த வாரம் படித்து முடித்தேன். நாவல் என்பதை விட நடைச்சித்திரம் அல்லது பயணக்கட்டுரை எனலாம். இதில் வருகிற கதை சொல்லிகூட அசோகமித்திரனே என்பதற்கு நாவலிலேயே பல தடயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, கதை சொல்லிக்கு மூன்று மகன்கள் என்ற விவரம், தியாகராஜன் என்ற கதைசொல்லிப் பெயரை பிற நாட்டவர் எப்படித் தவறாக உச்சரிக்கிறார்கள் என்பது போன்றவை.

அதனால் இதை நாவல் எனச் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. இதை நாவல் என வகைப்படுத்துவதில் அசோகமித்திரனுக்கும் தயக்கம் இருந்ததை அவர் முன்னுரையில் நேர்மையாகக் குறிப்பிடுகிறார். அசோகமித்திரனின் இத்தகைய சுயவிமர்சனம் அவர் எழுத்துகளிலேயே வெளிப்படும் தருணங்களில் அவரை நமக்கு இன்னமும் பிடித்துப் போகிறது.  ஆனால், இது, ஒரு நாயகன், ஒரு களம், ஒரு காலகட்டம் – குறித்துப் பேசும் படைப்பு என்பதால் – இது நாவலுக்கு அருகில் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். 

இதை நாவல் எனக் கொண்டால் – தன் வரலாற்று நாவல் என வகைப்படுத்தலாம். அப்படியெனில் இதன் முதற்பதிப்பு 1985 நவம்பரில் நர்மதா பதிப்பகம் மூலம் வெளிவந்தது. அதை வைத்துத் தமிழில் தன் வரலாறு வகை நாவல்களின் முன்னோடி அசோகமித்திரன் எனலாம். அவருக்கு முன் யாரும் இந்த வகையைத் தொட்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. ஆனால் தமிழ் இலக்கிய உலகில் பலர் தவறாக அவருக்குப் பின் இத்தகைய தன் வரலாற்றுப் புனைவை எழுதிய சாரு நிவேதிதாவை தன் வரலாறு வகை புனைவின் முன்னோடி என நினைத்துக் கொண்டுள்ளார்கள். அது ஆதாரபூர்வமாகத் தவறு எனச் சொல்ல இதை எழுதுகிறேன்.

இந்த நாவல் – நாவல் என்கிற வகையில் – அசோகமித்திரனின் சிறந்த படைப்பு அல்ல. அசோகமித்திரன் நாவலில் தொட்டிருக்கிற உயரங்களுக்கு முன்னே, இந்த நாவல் நிற்க முடியாது. ஆனால் சாரு நிவேதிதாவின் எந்தத் தன் வரலாற்று நாவலை விடவும் இது மேலானது. 

இந்த நாவலையே இது அசோகமித்திரனின் சிறந்த படைப்பு அல்ல எனத் தெரியும் என்பதால் இவ்வளவு வருடங்களாகப் படிக்காமல் ஒத்திப் போட்டேன். இப்பொது என் அசோகமித்திரன் வாசிப்புக்காக, படிக்காத இதையும் படித்துவிடுவோம் எனப் படித்தேன்.

ஒரு பயணக்கட்டுரை போல கதைசொல்லி பேசுகிற / எழுதி வைத்த டயரிக் குறிப்பு போல இருக்கிற இந்த நாவலில் அசோகமித்திரனின் முத்திரையான அந்தக் கால காலமும், இடமும், மனித குணங்களும், வாழ்க்கையும் ஆவணம்போல் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1973ல் 7 மாதங்கள் அமெரிக்காவின் அயோவா பல்கலையில் – ஒரு உறைபனி குளிர்காலம் உட்பட – பிற நாடுகளில் இருந்து வந்த – வருகைதரு எழுத்தாளர்களில் ஒருவராக அ.மி வாழ்ந்த வாழ்க்கையின் பதிவு இந்த நாவல். அயோவாவில் இருந்தபோது அசோகமித்திரன் கான்சாஸ் சிட்டி, டென்வர், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட இடங்களுக்கும் போயிருக்கிறார். அந்த இடங்கள் குறித்த குறிப்புகளும் உண்டு.

இதில் 1973/1974-ல் அமெரிக்கா அதுவும் முக்கியமாக அதன் மத்திய மேற்கு (mid-west) மாநில வாழ்க்கையை, சீதோஷ்ண நிலையை, அதன் பெரிதும் சிறிதும் இல்லாத suburban நகர்ப்புறத்தை, அங்குள்ள மனிதர்களை, அவர்களின் வாழ்க்கையை, அங்கே பயணிகளாய் வந்திருக்கும் பிறநாட்டு எழுத்தாளர்களின் குணங்களை, சைவ உணவு உண்பவராய் இருந்த அ.மி சரியாக சமைக்கத் தெரியாமலும், சைவ உணவு வகைகள் அதிகம் கிடைக்காமலும் எப்படி காபியிலும் கார்ன் ப்ளேக்ஸிலும் பழங்களிலும் காலம் தள்ளினார் என்பதையெல்லாம் இந்த நாவல் விவரிக்கிறது.

கதைசொல்லி அமெரிக்க உறைபனி குளிர்காலத்தில் படும் அவஸ்தைகள், பனியில் சறுக்கி விழுந்து விடுவது, 2000கள் வரை இருந்த இப்போது இல்லாத கே-மார்ட் என்கிற சூப்பர் மார்க்கெட்டிம் தட்டச்சுப் பொறி, ஜோடு (ஷூ) வாங்கிய அனுபவங்கள், ஷூ வைத்து அவர் பட்ட கஷ்டங்கள், பிற எழுத்தாளர்களுடன் அவருக்கு இருந்த உறவுகள், அவர் மீது அன்பு கொள்ள முயல்கிற ஒரு பெண்ணை அவர் எப்படி மென்மையாக மறுக்கிறார் எனப் பல விஷயங்கள் இன்னொருவர் டயரியை நாம் படிக்கிறோம் என்கிற குறுகுறுப்புணர்வுடன் (curiosity) ஆர்வத்துடன் படிக்க வைக்கின்றன.

இவற்றில் பல அசோகமித்திரனுக்கே உரிய மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லப்பட்டுள்ளன. கதைசொல்லியைப் பாடச்சொன்னபோது, தமிழின் முப்பது எழுத்துகளை அவர் பாடியது போன்ற ஹாஸ்யங்களும் உண்டு.

வாசிக்கச் சுவாரஸ்யமாக இருக்கிறது என்கிற அளவில் இந்த நாவல் வெற்றியடைந்திருக்கிறது. 

ஓரிடத்தில் கதைசொல்லியை இன்னொரு நாட்டு எழுத்தாளர் பொறாமையில் தவறாகப் புரிந்து கொண்டு கன்னத்தில் அறைந்து பனி படந்த புல்வெளியில் தள்ளிவிடுகிறார். அதை அ.மி. அப்படி அடித்த எழுத்தாளர் மீது வெறுப்போ, கசப்புணர்வோ, வஞ்சமோ, குற்றச்சாட்டோ இல்லாமல் பதிவு செய்திருக்கிறார்.

ஜவஹர்லால் நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியா நூலுக்கு எழுதிய முன்னுரையில் சோனியா காந்தி, ஆங்கில அரசாங்கத்தால் தொடர்ந்து இடர்களுக்கு உள்ளான போதும், ஏறக்குறைய 9 வருடங்கள் அவர்களால் சிறையில் அடைக்கப்பட்ட போதும், அவர்களைக் குறித்து எழுதும்போது நேருவின் எழுத்தில் வெறுப்பும், பகையுணர்வும், வஞ்சமும் தெரிவதில்லை என்கிற சிறப்பான அவதானிப்பை முன்வைத்திருப்பார். நேரு மட்டுமல்ல, மகாத்மா காந்தியை நன்றாகப் புரிந்து கொண்ட, பின்பற்றிய தொண்டர்கள், காந்தியிடமிருந்து பெற்றுக் கொண்டது அது. அதை வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த, அதனால் இந்தியர் அல்ல என எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டு வருகிற, சோனியா காந்தி தான் தன் அவதானிப்பின் மூலம் எனக்கும் உணர்த்தினார். நான் இந்தியாவில்தான் பிறந்து வளர்ந்தேன். அதைப் படிப்பதற்கு முன் எனக்கு இந்தக் கோணம் தோன்றவே இல்லை.

இந்த நாவலில் கதைசொல்லி அடிவாங்கிய நிகழ்ச்சியை விவரிக்கும்போது எனக்கு சோனியா காந்தியின் மேற்கண்ட முன்னுரை நினைவுக்கு வந்தது. அசோகமித்திரனில் காந்தியம் செலுத்துகிற தாக்கம் இத்தகைய முதிர்ச்சியான எழுத்துமுறை.

இன்னோர் இடத்தில் – கூட வந்த எழுத்தாளர் அதிகம் சாப்பிட்டும் குடித்தும் எடுத்த வாந்தியை, சுற்றுலா அமைப்பாளர் வேண்டாம் எனச் சொல்லியும் அவர் கூட தானாகச் சேர்ந்து சுத்தம் செய்கிற கதைசொல்லியைப் பார்க்கிறோம். நடிப்புக்காகவோ நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றோ இல்லாமல், நிஜமான அக்கறையுடனும் உதவும் உள்ளத்துடனும் எந்த அசூயையிம் இன்றி, அசோகமித்திரன் அப்படிச் செய்யக் கூடியவர்தான் என்கிற நம்பிக்கையை அவர் வாழ்க்கையும், ஆளுமையும், எழுத்தும் எனக்குக் கொடுத்திருக்கிறதே, அது அசோகமித்திரனின் மிகப் பெரிய வெற்றி. காந்தியும் இப்படிப் பிறரின் மலத்தைச் சுத்தப்படுத்தியவர்தான்.

எந்த இடத்திலும் தன்னைக் காந்தியவாதி என்றோ தான் எவ்வளவு நல்லவன் என்றோ அ.மி. பிரகடனப்படுத்திக் கொண்டதில்லை அதனால் வெளிச்சம் பெற முயன்றதில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.

இந்த இரு இடங்கள் அசோகமித்திரன் என்கிற எழுத்தாளரை, மனிதரை நாம் வரையறை செய்து கொள்ளப் போதுமானவை. பிற்காலத்தில் தெரிந்தோ தெரியாமலொ அ.மி. சொல்லிவிட்ட சில ஏற்றுக் கொள்ள இயலாத, தான் பிறந்த பிராமண சாதியை ஆதரிப்பதுபோன்ற கருத்துகளுக்காக, அசோகமித்திரன் மேல் வெறுப்பு கொள்வது நம் அறியாமையையே காட்டும். அவர் அத்தகைய கருத்துகளைத் தெரிந்தே சொல்லியிருந்தாலும், it was just a slip. It happens to all. அப்படிப் பார்த்தாலும் அ.மி மிகக் குறைவான தப்படிகளையே எடுத்து வைத்திருக்கிறார். அ.மி.க்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே ஒருவர் இதே அளவுகோலைத்தான் பயன்படுத்த வேண்டும்.

அப்புறம் நாவலின் இன்னொரு இடத்தில் – “எல்லாம் தெரிந்தால் மட்டும் என்ன? நான் சாதாரணமாகவே தடுமாற்றம் கொண்டவன்.”  என்றொரு வரி வருகிறது. அசோகமித்திரன் தன் ஆளுமையை இந்த இரு வரிகளில் கச்சிதமாகச் சொல்லிவிடுகிறார் என எடுத்துக் கொள்ளலாம். அதனால் அவர் நேர்காணல்கள், சந்திப்புகளில் அவரிடம் திணிக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்கிற காரணத்தால், தெரிந்தும் பதில்களில் தடுமாற்றம் அடைந்திருந்தால் நாம் அதைப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர பழி சொல்லக் கூடாது என்பது என் நிலைப்பாடு.

இன்னோர் இடத்தில் – “நாம் நினைப்பதைக்கூட அவ்வளவு நம்புவதற்கில்லை. அது மாறிக்கொண்டே இருக்கும்.” – இதுவும் அசோகமித்திரனின் சிந்தனைமுறையையும் ஆளுமையையும் சொல்லும் வரிகள் தான். இத்தகைய வரிகளே வேறு வேறு வடிவங்களில் அவர் படைப்புகள் முழுக்க வருகின்றன. தன்னைக் குறித்த இத்தகைய திறந்த மனமும், எளிமையும், சுயதரிசனமும் (self-reflection) கொண்ட ஓர் எழுத்தாளர் என்கிற வகையில் அசோகமித்திரன் தமிழில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார்.

சைவரான கதைசொல்லியின் இந்த அவதானிப்பும் முக்கியமானது: இது அசோகமித்திரனின் புரிந்துணர்வையும் முதிர்ச்சியையும் காட்டுகிறது: “ஒரு காலத்தில் இறைச்சியைப் பார்த்தாலே எனக்கு வயிற்றைக் கலக்கும். ஆனால் பாதிக்கு மேல் விதவிதமான ஜந்துக்கள் நிறைந்த ரெப்ரிஜரேட்டரை நான் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்! ஆனால் பொட்டலமாகக் கட்டப்பட்ட இறைச்சி எந்த நாற்றமும் கிளப்பவில்லை. அதுவும் பூண்டைப் போல.”

நாவலில் எல்லா எழுத்தாளர்களுன் காபரேவுக்குப் போவது குறித்த குறிப்பொன்று வருகிறது. ஆனால் அதை அசோகமித்திரன் விவரித்து, நீட்டித்து எழுதுவதில்லை. அப்படி எழுதி இந்த நாவலைப் பலர் படிக்குமாறு செய்கிற வித்தை அசோகமித்திரனுக்குத் தெரியாதது அல்ல. ஆனால் அத்தகைய – மனித மனதின் சபலங்களுக்கு ஆசை தூவுகிற வித்தைகளில் அவருக்கு நம்பிக்கை இல்லை. 

இந்த நாவல் அசோகமித்திரனைத் தனிப்பட அறியாதவர்கள், நேரில் சந்திக்காதவர்கள் அவரை அறிந்தும் புரிந்தும் கொள்ள முக்கியமான திறவுகோல். கதைசொல்லியின் மென்மையான அணுகுமுறையும், கனவான் நடத்தையும் எப்படி அவரைப் பிற எழுத்தாளர்கள் சாய்ந்து கொள்ள தோள் தேடியும், பிற உதவி நாடியும் வரவைக்கின்றன என்பதற்கான பல நிகழ்ச்சிகள் இந்நாவலில் உள்ளன. கதைசொல்லி இதையெல்லாம் இப்படிச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டுச் செய்யாமல், தன் இயல்பான போக்கால், பிறரின் இத்தகைய நம்பிக்கையைப் பெறுகிறார் எனப் பார்க்கிறோம்.

இந்த நாவலில் மிகவும் திட்டமிட்டு, அட்டவணை போட்டு, அத்தியாயத்துக்கு அத்தியாயம் என்ன வரும் என குறித்து வைத்து, நாவல் எழுத முடிகிற ஓர் வெளிநாட்டு எழுத்தாளரைக் கதைசொல்லி பார்க்கிறார். அது அவருக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அப்படி எழுதப்பட்ட நாவல் சரியாக வரவில்லை என்றும் பின்னர் அறிகிறோம்.

இப்படித் திட்டமிட்டு நாவலோ, திரைக்கதையோ எழுதுவது மேற்குலகின் கல்வித்துறை சார்ந்த பயிற்றுவிப்பு. 1973 / 1974-ல் அசோகமித்திரனுக்கு மட்டுமல்ல பல இந்திய எழுத்தாளர்களுக்கும் அது ஆச்சரியமாகவே இருந்திருக்கும். ஆனால் இப்போது இது இந்தியாவில் எல்லா மொழிகளிலும் வந்துவிட்டது. இப்படி எழுதப்படுகிற நாவல்களில் தொழில்முறையான செய்நேர்த்தி (கிராப்ட்) நிச்சயம் இருக்கும். அதோடு கலையும் கைகூடும் அதிசயம் நடந்தால் அப்படைப்பு வெற்றி பெறும். கலையம்சத்தைத் திட்டமிட்டு ஒரு படைப்பில் கொண்டுவந்து விட முடியாது என்பதே என் புரிதலும். உதாரணமாக – கன்னடத்தில் நேமிசந்திரா எழுதித் தமிழில் கே. நல்லதம்பி மொழிபெயர்த்த யாத்வஷேம் நாவல்,  பன்னிரண்டு வருடங்கள் ஆய்வுகள் செய்து, திட்டமிட்டு எழுதப்பட்ட செய்நேர்த்தி கொண்ட நாவல் என்றாலும், அதில் கலையம்சம் கொண்ட பல பகுதிகள் உண்டு. அதனாலேயே அது படைப்பாக வெற்றி பெற்றது.

ஒற்றன் என்ற நாவல் தலைப்பு எப்படி இதற்குப் பொருத்தமானது? முதலில், ஏழு மாதங்கள் இன்னோர் நாட்டு வாழ்க்கையை, மனிதர்களைக் கவனித்து ரிப்போர்ட் தருகிற ஒற்றன் போன்ற கதைசொல்லி. இரண்டாவதாக, நாவலில் வருகிற்ந் இன்னொரு நாட்டு எழுத்தாளர், தன் படைப்புக்குத் தலைப்பு மகா ஒற்றன் என்கிறார். இது அசோகமித்திரனைக் கவர்ந்திருக்க வேண்டும்.

ஒற்றன் நாவலை நான் படிக்கும்போது, அடிக்கோடிட்டு வைத்தவற்றில் இருந்து சிலவற்றை – ஏற்கனவே மேலே பகிராத – அசோகமித்திரனின் முத்திரை தெரியும் சில வாக்கியங்களைக் கீழே பகிர்ந்து கொள்கிறேன் : 

“இப்படித்தான் நான் அமெரிக்கா போனேன். ஏழு மாதம் அங்கிருந்தேன். எனக்குத் தெரிந்த சமையலைச் சமைத்துக்கொண்டு சமாளித்தேன். எனக்கு மனிதர்கள் பிரச்சனையாக இருக்கவில்லை. நிறையவே மனிதர்கள். கறுப்பு, சிவப்பு, மஞ்சள், மாநிறம், கண்ணைப் பறிக்கும் வெள்ளை. ஆங்கிலம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், கொஞ்சம் தெரிந்தவர்கள், நிரம்பப் படித்தவர்கள், படித்தவர்கள் போலப் பாவனை செய்பவர்கள். ஆனால் துக்கம், சங்கடம் என்று வந்தபோது எல்லாரும் ஒரே மாதிரிதான் இருந்தார்கள். நான் மெத்தத் தெரிந்தவன் என்று என்னிடம் யோசனை கேட்க வரும்போது எனக்குக் கூச்சமாக இருக்கும். நான் ஒவ்வொரு கணமும் அவர்களிடமிருந்துதான் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று அவர்களுக்குத் தெரியாது.”

“வயது ஆகஆக ஒருவன் முகத்தில் அவன் முகம் மட்டும் தெரிவதில்லை. அவனுக்குத் தெரிந்து பிரிந்தவர்கள், உறவுகள், இழப்புகள், அன்பு, கோபம், மரணம், பயம், வியாதி, விரோதம், வேலை போய்விடுவது, வேலை கிடைத்துவிடுவது, சந்தேகம், குழந்தைகள் பிறப்பது, குழந்தையால் பலவிதப் புதுப் பொறுப்புகள், பிரச்னைகள், கெட்ட கனாக்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், அவமானங்கள், ஊருக்கே பொதுவான ஆபத்துக்கள், புயல், வெள்ளம், ரேஷன் கார்டு தொலைந்துவிடுவது, கழுத்து சுளுக்கிக்கொண்டு விடுவது, அடுத்த தெருவில் படுகொலை, தேர்தல்கள், துப்பாக்கிச் சூடு . . . எல்லாம் தெரிகின்றன. இள வயதில் அவ்வளவு தெரிகிறதில்லை. அதனால்தான் அப்போது எடுத்த புகைப்படம் அழகாக இருப்பதுபோலத் தோன்றுகிறது. ஆனால் எந்தப் புகைப்படமும் அதை எடுத்த நாளில் திருப்தி தருவதில்லை. அது அழகாக மாற அந்த மனிதனுக்கு வயது கூடவேண்டியிருக்கிறது. ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை போலிருக்கிறது. அவர்களை எப்போது எடுத்த புகைப்படமும் அவர்களுக்குத் திருப்தி தராது போலிருக்கிறது.”

“மார்க் ட்வெயினின் மிஸ்ஸிஸ்ஸிப்பி என்று என்னருகில் நின்றவர் சொன்னார். ஆமாம், என்றேன்.”

“நமக்குத் தெரிந்த ஒன்றிரண்டு நபர்களைக் கொண்டும் ஊர்களைக் கொண்டும் இப்படித்தான் கோடானுகோடி ஆண்டுகளாக இருந்துவரும் இயற்கைச் சின்னங்களைப் பெயரிட்டுக் குறுக்கி விடுகிறோம். பத்துக் கோடி ஆண்டுகளில் ஒரு மனிதனின் ஆயுட்காலம் எந்த மூலை?”

“‘பசி ஒரு நல்ல பயிற்சி’ என்று தன் 1926ஆம் ஆண்டு வாழ்க்கையைப் பற்றி 1956இல் ஹெமிங்வே கூறினான்.நான் அன்று பல்கலைக்கழகத்திலிருந்து பிற்பகல் என் அப்பார்ட்மெண்டுக்குத் திரும்பியபோது அந்தப் பயிற்சி என்னிடம் பரிபூரணமாக இருந்தது. எனக்கு அமெரிக்க ஹோட்டல்களில் ஒழுங்கான சைவ உணவு கிடைக்கப்பெறத் தெரியவில்லை. அவர்களுடைய ‘பை’ மிகவும் இனிப்பாக இருந்தது. ஐஸ்கிரீம் தாங்கமுடியாத குளிர்ச்சி கொண்டிருந்தது. சாதம் வடிக்கத் திரும்பத்திரும்பப் பாடுபட்டேன். அடியில் பிடித்துக்கொள்ளும்; மேலே வெந்திருக்கும், உள்ளே அரிசியாகவே இருக்கும். எந்த அளவு தண்ணீர் விட்டுச் சமைப்பது என்பது எனக்கு விளங்காப் புதிராக இருந்தது. அடுப்பு ஜுவாலையை ஏற்றித் தணிக்க முடியும் என்பதைக் கற்றுக்கொள்ளவில்லை. ஆதலால் பழரசத்தையே காலை, பகல், மாலை குடித்தேன். கண்ட நேரமெல்லாம் காபி குடித்தேன். இன்றும் சாதம் வடித்துக் களி போன்ற ஒரு உருண்டையைத் தட்டில் போட்டுக் கொண்டு உட்கார்ந்தேன். தயிர்க் கிண்ணத்திற்கு அழுத்தமான மூடியிருந்தது. ஆதலால் அதில் எந்த நாற்றமும் வரவில்லை. ஆனால் அந்தக் கிண்ணத்தின் வெளிப்புறம் ஒரே பூண்டு நாற்றமாக அடித்தது. தட்டில் தயிரைக் கவிழ்த்துக்கொண்டு கிண்ணத்தை மூலையில் வைத்தேன்.”

“கவலைப்படாதே என்று நான் ஆறுதல் சொல்லவில்லை. அது பயனற்றது என்று அவனுக்குத் தெரியும்.”

“அவனுக்கும் அவன் அம்மாவின் சடலத்திற்கும் இடையில் ஒரு நீண்ட கண்டமும், மிக நீண்ட கடலும் இருந்தன.”

“அவன் என்னை மறந்திருக்கமாட்டான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. நான் அவனை மறக்கவில்லை. அயோவா சிடியில் எங்கள் நாடுகளிலிருந்து பத்தாயிரம் மைல் தள்ளியிருந்த அந்த அப்பார்ட்மெண்ட் அறையில் அவனைக் கட்டிப்பிடித்து உட்கார்ந்திருந்ததை நான் மறக்கவில்லை. அந்நேரத்தில்கூட அவனிடமிருந்து இலேசாகப் பூண்டு வாசனை வந்துகொண்டிருந்தது.”

“உன்னுடைய துக்கத்தைப் பார்த்து எனக்கும் மிகவும் துக்கமாக இருக்கிறது. அதனால் உன் துக்கம் குறையப் போவதில்லை.”

“துக்கம் முழுக்கமுழுக்க அதுவாக நம்மிடம் வந்தடைவதில்லை. நாமும்தான் இடம் தருகிறோம். நீயும் கொஞ்சம் யோசித்துப் பார்”

“ஒருவன் மணமானவனா இல்லையா என்றுகூடத் தெரிந்துகொள்ளாமல் நீயும் துக்கத்தை வரவழைத்துக்கொண்டு அவனையும் ஏன் துக்கத்தில் ஆழ்த்துகிறாய்?”

“ஒருவன் ஒழுங்காக உயிர் தரித்து இருப்பதற்குப் பிராண வாயுவுக்கு அடுத்தபடி கடிகாரந்தான் என்று தோன்றியது”

“நான் பிரமித்துப்போயிருந்தேன். நானும்தான் எவ்வளவோ ஆண்டுகளாக எழுதி வருகிறேன். அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்று உறுதியாகத் தெரியாது. அந்த அத்தியாயம் நீளமா குட்டையா என்று உறுதியாகத் தெரியாது. முதலில் அடுத்த அத்தியாயம் என்று ஒன்று இருக்குமா என்றே உறுதியாகத் தெரியாது. இதோ ஒருவன், முதல் பிள்ளையார் சுழியிலிருந்து இறுதி முற்றுப்புள்ளி வரை ஒவ்வொரு எழுத்தையும் ஆரம்ப முதலே திட்டமிட்டு நிர்ணயித்து விடுவதோடு நாவலின் அனைத்து அம்சங்களும் ஒரு கணத்தில் மனக்கண்ணாடியில் தெரியும்படி ஓர் அபார ‘சார்ட்’ வரைந்திருக்கிறான்!”

“குழந்தைத்தனமாக உள்ளவர்கள்தான் டிஸ்னிலாண்டுக்குப் போய் நேரத்தை வீணடிப்பார்கள். விஷயம் தெரிந்தவர்கள் ஃபிரீவேயில் ஒரு மணி நேரம் செல்வார்கள்,” என்று ஜிம் சொன்னான்.”

“ஓரிடத்தின் உயிரினங்களை அறியச் சில மாதங்கள் போதுமா? ஒருவேளை போதுமோ என்னவோ, நான் அப்பறவைகளின் பெயர்களை அறிய முயன்றதில்லை. ஆனால் நிறையக் கூர்ந்து கேட்டிருக்கிறேன். அவை என்ன சொல்ல முயல்கின்றன என்றுகூட அவ்வப்போது தெரிய வருவதாகத் தோன்றிற்று. சிரிப்பும் கும்மாள மும்தான். அவற்றின் கூவலை அவ்வளவு எளிதாகக் கூற முடியுமா? வேடிக்கையும் விஷமமும் சீண்டலும் வம்பும் கொஞ்சம் கிண்டல்கூட அல்லவா இருக்கின்றன! பறவைகளுக்கு நன்றாகப் பேசத் தெரியும்; அதுவும் காலை நேரங்களில்.”

– பி.கே. சிவகுமார்

– ஒற்றன் – அசோகமித்திரன் – காலச்சுவடு வெளியீடு – கிண்டில் மின்னூலாகக் கிடைக்கிறது.

#அசோகமித்திரன்

Series Navigationபூஜ்யக் கனவுகள்அப்பாவின் திண்ணை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *