அசோகமித்திரன் சிறுகதைகள் – 11

This entry is part 15 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

பி.கே. சிவகுமார்

அசோகமித்திரன் சிறுகதைகள் ஒவ்வொன்றயும் குறித்து எழுதி வருகிறேனே, ஒவ்வொரு கதையிலும் இருக்கிற எல்லா நுட்பங்களையும், குறைகளையும் குறிப்பிடுகிறேனா என்றால் இல்லை. அது என் நோக்கமும் இல்லை.  என் நோக்கம் அசோகமித்திரன் குறித்த என் வாசிப்பு அனுபவங்களைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்வதுதான். அசோகமித்திரனைப் புரிந்து கொள்ள ஒவ்வொரு கதையிலிருந்தும் எனக்குத் தோன்றுகிற பகுதிகளை மட்டும் எடுத்துக் காட்டுகிறேன். நான் சொல்லாத ஆனால் நுட்பமான பிற பகுதிகள் அதே கதையில் இருக்கலாம். நுட்பங்களைச் சொல்வதோடு மட்டும் நில்லாமல், அசோகமித்திரன் கதைகளில், கருக்களில் காணப்படும் பொதுச்சரடு, அவர் கதைகளை,  வாழ்க்கையை எப்படி அணுகினார் ஆகியவற்றையும் தொட முயல்கிறேன். ஒவ்வொரு கதையைக் குறித்தும் இன்னும் நீளமாகக் கூட எழுத முடியும். உதாரணமாகச் சென்ற அம்மாவுக்கு ஒருநாள் கதையில் ரகுவின் சகோதர சகோதரி என அ.மி. சொல்வதில்லை. நாமாகப் புரிந்து கொள்ளப் பெயர்கள் மட்டும் தருகிறார். ரகு வீட்டுக்கு எப்படி வந்தான் என்பது முக்கியமில்லை என்பதைத் தேர்ந்த எடிட்டர் போல எழுதாமல் தவிர்க்கிறார். இப்படி ஒவ்வொரு கதையிலும் சொல்ல இன்னும் விஷயங்கள் இருக்கலாம். நான் இதை எழுதி என் மேதாவிலாசத்தைக் காட்டிக் கொள்வதைவிட, அசோகமித்திரனை அறியாத புதிய வாசகருக்கு அவரை அறிமுகப்படுத்தவும், அசோகமித்திரனுக்கு என் மரியாதையைச் செலுத்தவுமே விரும்புகிறேன்.  அசோகமித்திரன் இப்போது இல்லை. அதனால் இதை எழுதி அவருக்கு சோப்பு போடப் பார்க்கிறேன் என யாரும் சொல்லிவிட முடியாது.

தமிழ்ச் சிறுகதைகளில் முனைவர் பட்டத்தோடு தொடர்ந்து வாசிக்கிறவருமான ஆசிரியை இத்தொடரைக் குறித்து, “தொடர்ந்து எழுதுங்க தோழர். நூலாக்கம் செய்யலாம். நீங்க பேராசிரியர்கள விட சிறப்பாக எழுதியிருக்கீங்க” என்றார்.

அறிந்த நாள் முதல் நான் எந்த முகம் காட்டியபோதும் என்னிடம் கனிவையும் பொறுமையையும் காட்டிவரும் என் நலம் விரும்பியான எழுத்தாளர் மதுமிதா ஒன்றுக்கு மேற்பட்ட முறை, “மிகவும் சிறப்பு. தனி புத்தகமாக கொண்டு வரலாம் சிவா” என்றார்.

எனக்குப் புத்தகம் போடுகிற முனைப்பும் பெரிதாக இல்லை. ஏற்கனவே இரண்டு புத்தகங்கள் வந்துவிட்டன. வராமல் இருக்கிறவற்றைத் தொகுத்தாலே இன்னொரு கட்டுரை, கவிதைத் தொகுதிகளுக்கு ஏற்கனவே எழுதியவை இருக்கும். ஆதலால், அதுவாக நடந்தாலொழிய, புத்தகம் போடுகிற முதன்மையான நோக்கத்திலும் இதை எழுதவில்லை. 

எத்தனைக் கதைகளைக் குறித்து என்னால் தொடர்ந்து இப்படி ஒரு கமெண்டரி கொடுக்க முடிகிறது எனப் பார்க்கலாம் என எழுதுகிறேன். இன்ஷா அல்லாஹ்।

1958-ல் எழுதப்பட்ட அசோகமித்திரனின் ஒன்பதாவது கதை மழை. மூன்றே முக்கால் பக்கங்கள். முடிவு ஒரு நல்ல கவிதையின் நிறைவைத் தருகிறது. நன்றாக எழுதப்பட்ட சிறுகதை ஒரு நல்ல நீண்ட கவிதைதானே.

இந்தக் கதையும் ரமணி என்கிற வளரும் பையனைக் குறித்துதான். ஆனால் அசோகமித்திரன் குழந்தைகளைக் குறித்த கதையில் அவர்கள் வயதை வெளிப்படையாகச் சொல்வதில்லை. சில நேரங்களில் வேறு விஷயங்களைக் கதையில் நீட்டினாலும் கதைக்கு எதைச் சொல்ல வேண்டியதில்லை என்கிற பிரக்ஞை அசோகமித்திரனிடம் இருந்து கொண்டே இருக்கிறது.

இதுவரை எழுதிய 9 கதைகளில் இது குழந்தைகள் வரும் நான்காவது கதை. இதனாலும் எனக்கு அசோகமித்திரன் மீது வாத்சல்யம் அதிகமாகிறது.

குழந்தை ரமணியின் பார்வையில் கதை போகிறது. ஐந்து சின்னச் செடிகள். ஒன்பது மிகச் சின்னச் செடிகள், ஒரு பெரிய மரம் ஆகியவற்றை அவன் பார்க்கிறான். இப்படி ஒரு கதாசிரியர் விவரித்தால், கதையில் நுண்தகவல் இல்லை. புறவாழ்க்கைக் காட்சி குறித்த பொதுவான அலுப்பூட்டுன் சித்திரம் என்றெல்லாம் இப்போது சொல்லி விடுவார்கள். பறவையைப் பார்த்தேன் / பெயர் தெரியவில்லை / அதனால் என்ன / பறவை எனத் தெரிகிறதே / மனம் விரிந்து கொள்ள. இந்த இடத்தில் பறவைக்குப் பதில் மரம் என்று கூட போட்டுக் கொள்ளலாம். இத்தகைய கவிதைகள் (இதே வார்த்தைகளில் அல்ல) தமிழில் உண்டு. அவை பெயர் தெரியாவிட்டாலும் பறவையையும் மரத்தையும் கண்டால் மனம் விரிந்து கொள்கிற மனிதர்களைக் குறித்த நல்ல கவிதைதான். ஆனால் சிறுகதையில் பூமணி போலவோ பெருமாள் முருகன் போலவோ புறக்காட்சிகளை, நிலத்தை, அதன் வகையை, நிறத்தை, செடி கொடிகளை, மரங்களை, பறவைகளை அவற்றின் பெயரோடும் அவை குறித்த நிபுணத்துவத்துடனும் சொல்லும்போது, அந்தக் கதையாசிரியர் மேல் பெருமதிப்பு வருகிறது. அசோகமித்திரன் இந்த இடத்தில் பொதுவாக எழுதியிருந்தாலும் மிக புத்திசாலித்தனமாகச் செய்திருக்கிறார். அவற்றைப் பார்க்கிற குழந்தையான ரமணிக்கு எப்படி அவை என்ன செடி, என்ன மரம் எனப் பெயர்கள் தெரிந்திருக்க முடியும் என அப்படி எழுதியதற்குக் காரணம் இருக்கிறதே . இவையெல்லாமும் கூடத்தான் அசோகமித்திரனிடம் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டியவை.

புறக்காட்சிகளைக் காணும் பொருட்கள், ஜீவராசிகள் குறித்த நிபுணத்துவத்துடன் விவரிப்பதில் அசோகமித்திரன் மாஸ்டர் இல்லை. அதே நேரம் அந்தக் குறை தெரியாதவண்ணம் அவரால் புறக்காட்சிகளை வர்ணித்துவிட முடியும். மேலே சொன்னது போலவோ, மாம்பலம் ஸ்டேஷனில் 9:27 ரயிலுக்குச் சுமார் 200 பேர் காத்திருந்தார்கள் என்பது மாதிரி நம் மனதில் எழுப்புகிற காட்சி போலவோ.  கூடவே கதை நிகழ்ந்த காலத்தில் அந்த இடம் எப்படி இருந்தது என்பது குறித்த குறிப்புகளைக் கொடுப்பதன் மூலமோ, அல்லது அந்தப் புறக்காட்சியில் வருகிற மனிதர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று சொல்வதன் மூலமோ அ.மி. புறவாழ்க்கையையும் நன்றாகச் சித்தரித்த பெயரைப் பெறுகிறார். இப்படிப் புற வாழ்க்கையின் காட்சிகளைச் சொல்வதற்கு அசோகமித்திரன் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி அதை ஒரு குறையாகத் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார். அவர் அதில் ஒரு பூமணி இல்லை. அதே நேரம், பல எழுத்தாளர்களைப் போல, புற வாழ்க்கையைக் குறைவாகப் பேசிவிட்டு, அக வாழ்க்கையை அல்லது நனவோடையை அல்லது உரையாடலைப் பெரிதும் நம்பிக் கதையை நகர்த்துகிறவரும் அல்ல.

இந்தக் கதையில் குழந்தை ரமணி மழையைப் பார்க்கிறான். மழையில் நனைந்தால் சுரம் வருமென அம்மா உள்ளே வரச் சொல்கிறார். “சுரம் வந்தால் ஒவ்வொரு சமயம் நன்றாகக் கூட இருக்கும்” எனக் குழந்தைகள் நினைப்பதைச் சரியாக அ.மி. பதிவு செய்கிறார். பின்னர் அவன் மேகம் பார்க்க யானை மாதிரி இருப்பதை நினைக்கிறான். நிஜயானையையும் இருமுறை பார்த்திருக்கிறான். நிஜயானையிடம் அவனுக்கு பயமில்லை. மேக யானை பயமாக இருக்கிறது. கோவில் யானைக்கு அம்மா தேங்காயும் வெல்லமும் கொடுத்ததைப் பார்த்திருக்கிறான். அதைவிட, இந்த இடத்தில் அ.மி. யானை போன பிறகு அம்மா அவனுக்குக் கூட கொஞ்சம் வெல்லமும் தேங்மாயும் கொடுத்தாள், மிகவும் ருசியாக இருந்தது என எழுதுகிறார். யானைக்குக் கொடுத்தபின் குழந்தைக்கும் கொஞ்சம் கொடுத்தாள் என்று அசோகமித்திரன் சொல்வதை வாசிக்கும்போது ஆஹா என இருக்கிறது. 

பின்னர் மேகம் எருமை போல் இருப்பதைப் பார்க்கிறான். அம்மாவிடம் எருமை ஏன் அழுக்காக இருக்கிறது என்றெல்லாம் கேட்டு உரையாடுகிறான். அவனுக்கு இணையாகப் பதில் சொல்கிற அம்மாக் குழந்தையையும் அ.மி. காட்டுகிறார்.

கதை இப்படி ஓர் அருமையான இசை போல நீள்கிறது. அவன் வளர்வதால் அவனுக்குப் புதிய உடை தேவைப்படுகிறது எனப் பெற்றோர் சொல்கிறார்கள். 

மழைக்கு அடுத்த நாள் வெளியே போய்ப் பார்க்கும்போது, சின்னச் செடிகளும் மிகச் சின்னச் செடிகளும் வளர்ந்திருப்பதைப் பார்க்கிறான். தொட்டுப் பார்த்தால் அவை நனைந்திருந்தன.   கதையை அ.மி. இப்படி முடிக்கிறார்.

ஓடி வந்து அவன் அம்மாவிடம், “அம்மா, நான் ஏன் பெரியவன் ஆகிறேன் தெரியுமா?” என்று கேட்டான்.

“நீ சமத்தாகச் சாப்பிடுகிறாய்”

“அதனால் மட்டும் இல்லை”

“பின் எதனால்?”

“மழையினால்.”

அசோகமித்திரன் எழுதிய சிறப்பான கவிதை இந்தச் சிறுகதை. வள்ளுவர் மழை குறித்து எழுதிய குறள்களுக்கு ஈடான ஒரு சிறுகதை இது.

– பி.கே. சிவகுமார்

-ஜூலை 17, 2025

– அசோகமித்திரன் சிறுகதைகள் – தொகுதி 1 – கவிதா பப்ளிகேஷன்

#அசோகமித்திரன்

Series Navigationஅசோகமித்திரன் சிறுகதைகள் – 10அசோகமித்திரன் சிறுகதைகள் – 12

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *