3. சின்ன டிராகன் புரூஸ் லீயுடன் சாகச நாயகன்

This entry is part 4 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

ஆம். உங்கள் ஊகம் சரியே. அந்தக் கதாநாயகன் புரூஸ் லீ தான். படம் எல்லோர் மனதையும் கவர்ந்த பிக் பாஸ். புரூஸ் லீயின் சண்டையிடும் திறம், அவரது வலிமை, உடற்கட்டு அனைத்துமே திரையுலக ரசிகர்களையெல்லாம் எளிதில் அவர் பக்கம் சாய்த்தது.

புரூஸ் லீ யை – லீ சியூ லொங் என்று அழைப்பர். லீ சின்ன டிராகன் என்று பொருள். டிராகன் என்பது சீனாவில் கற்பனையாக வடிக்கபட்ட சிங்கத் தலையும் பாம்பு போன்ற நீண்ட உடலும் கொண்ட வலிமையான மிருகம். சில வருடங்களே வாழ்ந்த போதும், நில நடுக்கமென ஹாங்காங் திரைத்துறையை ஆட வைத்தவர் லீ.

படம் வெளி வந்து ஓடிக் கொண்டு இருக்கும் போது, ஹாங்காங் திரைத் தொழிலாளர்கள் மத்தியில் அதேப் பேச்சாக இருந்தது.

ஸ்டண்ட் கலைஞர்கள் அனைவரும் புரூஸ் லீயின் ஸ்டைலைக் கண்டு பிரமித்து நிற்கும் வேளையில், தங்களிடம் இல்லாதது புரூஸ் லீயிடம் என்ன இருக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தனர்.

அதை அறியும் வாய்ப்பு நம் சாகச நாயகன் சானுக்கும் கிட்டியது.

சாமோ தான் அதைத் தொடங்கி வைத்தது. ஒரு நாள் தொலைபேசி அழைப்பு. கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனியிலிருந்து.

“உனக்கு ஒரு வேலை கிடைக்கும் போல தெரியுது” என்றான்.

“அப்படியா? என்ன வேலை..” என்று கேட்டான் சான்.

“புதுப் படம் ஒண்ணு.. சீனாவில் ஜப்பானியர் ஆக்கிரமிப்பு நடத்திய போது, இரு நாடுகளின் வன்மக் கலை பள்ளிகளுக்கிடையேயான எதிர்ப்பும் வஞ்சமும் பற்றிய கதை அது. பிஸ்ட் ஆப் புயூரி என்று பெயர். அதில் நிறைய ஸ்டண்ட் பாத்திரங்கள் இருக்கு” என்று சாமோ சொல்ல, சான் கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்தான்.
“உனக்கு விருப்பம் இருந்தால், நீயும் அதில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கலாம்” என்றான்.

சான் சரி என்று சொல்வதற்கு எத்தனிக்கும் போது, “சொல்லாமல் விட்டுட்டேனே.. படத்தின் நாயகன் புரூஸ் லீ” என்றான் சாமோ.

இதைக் கேட்ட சான் “ஓ..” என்ற கத்த, அதைக் கேட்ட சாமோ, “அப்போ சம்மதம் தானே.. நாளை காலை விடிந்ததுமே செட்டுக்கு வந்துடு. இல்லாட்டா உன்னோட அதிர்ஷ்டத்தை வேறே யாராவது தட்டிட்டு போயிடுவாங்க..” என்றான் எதையும் பேசவிடாமல்.

அந்தச் சின்ன டிராகனுடன் வேலை. நல்ல சந்தர்ப்பம். நடித்துப் பார்த்து விட வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தான் சான். சான்டாங் சிறுவனால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்ட வேண்டும் என்று மனதிலே எண்ணிக் கொண்டான்.

அடுத்த நாள் காலை.

செட் ஆட்களால் நிரம்பியிருந்தது.

சான் அங்கே நுழைந்ததுமே, ஸ்டண்ட் ஆட்களிலே சிறந்தவர்கள் பலரும் அவனுக்கு முன்பாகவே வந்து நின்றிருப்பதைக் கண்டான். யூன் பியாவ்வும் இருந்தான். அவனருகே நின்றிருந்த ஆளைக் கண்டதும் சானுக்கு ஆச்சரியம். அவர் கழகத்தின் மற்றொரு பெரியண்ணா யூன் வா. புரூஸ் லீக்கு நகலாக அவர் நடிக்கிறார் என்று தெரிந்து கொண்டான்.

உடல்வாகும் நடையும் அசைவும் புரூஸ் லீக்கு ஒத்ததாக இருந்ததால், அவரது இரட்டை என்று சொல்லும் அளவிற்கு இருந்தான் ய+ன் வா. புரூஸ் லீ செட்டுக்குள் நுழையும் போதே, சுற்றிலும் மின்சாரம் பாய்ச்சியது போன்ற அதிர்வு ஏற்படும். முக்கியமான அது மட்டுமே யூன் வாவிடம் இருக்கவில்லை.

பிஸ்ட் ஆப் புயூரியில் சானின் பாத்திரம் மிகச் சிறியது. நிறைய ஸ்டண்ட் கலைஞர்களின் நடுவே சானும் ஒருவனாய் கேமிராவில் முகந்தெரியாத மனிதனாய் நடித்தான். குறிப்பிட்டுக் கூறும்படியான பாத்திரமாக இல்லாத போதும், படத்தின் இறுதியில் வரும் சண்டைக்காட்சியில் தனக்கென ஒரு முத்திரையைச் சான் பதித்தான்.

பெரிய இறுதிச் சண்டையைப் படம் எடுக்கத் தயாரானார்கள். லோ வெய் தான் படத்தின் இயக்குநர் என்றாலும், படத்தின் முக்கிய சண்டைப் பகுதிகளின் இயக்குநர் புரூஸ் தான். புரூஸ் பொறுமையாக ஸ்டண்ட் கலைஞர்களின் நடுவே நடந்து போனார்.

“நான் ஒரு குத்து குத்தியதும் சூசுகி இங்கே நகர வேண்டும். பிறகு பொவ்.. மற்றொரு குத்து. அப்புறம் பியாவ்.. பெரிய உதை..” என்று கூறி விட்டு காற்றிலேயே ஓங்கி உதைத்துக் காட்டினார். பிறகு அங்கு அமைக்கப்பட்டு இருந்த காகிதத்தாலான ஜப்பானியக் கதவைக் காட்டி, “சூசுகி இதை உடைத்துக் கொண்டு..” என்று சொல்லிவிட்டு, அடுத்தப் பக்கம் ஓடிச் சென்று ஒரு இடத்தைக் காட்டி, “இங்கே வந்து விழ வேண்டும்” என்று கூறினார்.

அந்த இடம் இருபதடி தூரத்தில் இருந்தது.

ஸ்டண்ட் கலைஞர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். உண்மையாக யாரும் ஒருவரை அத்தனை தூரத்திற்கு போய் விழும் அளவிற்கு உதைக்க முடியாது. அப்படி உதைத்தால் நிச்சயம் நெஞ்சுக்கூடு கிழிந்துவிடும். புரூஸ் சொன்னது போல் காட்சியைப் படமாக்க வேண்டுமென்றால், ஸ்டண்ட் கலைஞர் இடுப்பில் கம்பியைக் கட்டிக் கொண்டே செய்ய வேண்டும். உதைபட்டதும், ஸ்டண்ட் கலைஞர் கம்பி மூலமாக வேகமாக தூக்கப்பட்டு கீழிறக்கப்பட வேண்டும். ஆனால் கம்பியால் கலைஞரைக் காற்றில் நிற்க வைக்க முடியாது. பறப்பது போல் தான் செய்ய முடியும்.

அதை இயல்பாகக் காட்ட வேண்டும் என்று புரூஸ் விரும்பினார். அதனால் ஸ்டண்ட் கலைஞர் குத்துப்பட்டதுமே, கம்பி மேலே இழுக்கப்படும். மேலே சென்றதும் கலைஞர் முதுகைச் சற்றே உள்ளிழுத்துக் கொண்டு பிறகு கம்பியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இருபதடி தூரத்தில் வேகமாக போய் விழ வேண்டும்.

இது போல் அது வரை யாரும் செய்ததில்லை. விழ வேண்டிய இடமும் அத்தனை பாதுகாப்பானதாகவும் இல்லை. மிகவும் கடினமான தரையாக இருந்தது.

“யார் அதைச் செய்கிறீர்கள்?” என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டே கேட்டார் புரூஸ்.

செட் முழுவதும் அமைதியானது. அனைவரும் இதைச் செய்தால் உயிர் பிழைக்க முடியுமா என்று கணக்கிட்டு யோசித்தனர். பொறுமையாக யோசிக்க விருப்பமில்லாத சான், இதைச் செய்ய முன் வந்தான். சும்மா நிற்பதற்கு எதையாவது செய்வது நல்லது என்ற எண்ணத்தில், புரூஸ் பக்கமாக தலையை அசைத்துத் தன் சம்மதத்தை வெளியிட்டான்.

புரூஸ் அதை ஏற்றுக் கொண்டு கவசத்தை அணியச் சொன்னார். இது சான் செய்த முந்தைய பின்பக்க விழுதல் போலிருக்கவில்லை. திடீரென கம்பி ஆளை மேலே தூக்கும். கம்பி மேலேப் போகும் போது எந்தப் பக்கம் போகும் என்பது தெரியாது. பிறகு அப்படியே சுதாரித்துக் கொண்டு கம்பியிலிருந்து விடுவித்துக் கொண்டு, கீழே விழ வேண்டும். கீழே விழும்போது தடாலென விழ வேண்டும். அதுவும் உயிர் போகாமல்.

கவசத்தை அணிந்ததும், அது வெளியேத் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளதா என்பதை புரூஸ் பார்த்து விட்டு, “நல்வாழ்த்துக்கள் சிறுவனே..” என்று மெதுவாக அவனருகே முணுமுணுத்து விட்டு காட்சிக்காகத் தயாரானார்.

பிறகு கேமிரா ஓடலாம் என்று புரூஸ் சொன்னதும் சான் தயாரானான். லீயின் கால்கள் சானின் நெஞ்சைத் தொட்டதும், அவனது சகாக்கள் முழு பலத்துடன் சானை மேலே இழுத்தனர். கவசம் உடலை இறுக்கி, அப்படியே மேலே எழுந்தான் சான். காகிதக் கதவும், அத்தோடு இணைக்கப்பட்டிருந்த மரப்பட்டிகளும் உடைய, சான் கீழே விழ ஆரம்பித்தான்.

மனம் தரையைத் தொடப் போகிறது என்று கூறியதும், உடலைச் சற்றே தளர்த்திக் கொண்டு, அப்படியே உருள முயன்றான். ஏனென்றால் தரையில் விழும் போது, முதுகோ கழுத்தோ காலோ தரையில் படாமல் இருக்க வேண்டுமே.

சானுக்கு அப்படியே ஒரு காரின் மேல் மோதியது போன்ற உணர்வு. அப்படியே உடலில் வலி ஜிவ்வென்று ஏறியது. கத்தியிருப்பான். அப்படிக் கத்தியிருந்தால், இன்னொரு முறை அதைச் செய்ய வேண்டியிருக்குமே என்ற எண்ணம் மின்னலெனத் தோன்றியதும், கத்துவதை நிறுத்தி பற்களை அழுத்திக் கடித்துக் கொண்டு, அப்படியே விழுந்தான். மயக்கமானான்.

சில விநாடிகளுக்குப் பின் சான் கண் திறந்தான். தலையில் கட்டு போடப்பட்டு இருந்தது. புரூஸ், சாமோ, இயக்குநர் மூவரும் அவனைச் சுற்றி நின்றிருந்தனர்.

“ரொம்ப நல்லாச் செய்தாய். அப்படியே பிரிண்ட் போட்டது போல” என்று புரூஸ் பாராட்டினார்.

சாமோவும் சானின் திறமையைக் கண்டு அசந்து போனான்.

இயக்குநரும் “மோசமில்லை.. குழந்தே.. மோசமில்லை” என்று கூறிக் கொண்டே தன் நாற்காலியில் சென்று அமர்ந்தார்.

உலகத்தின் தலை சிறந்த சீன நடிகர், பெரியண்ணா, கோடீஸ்வர இயக்குநர் என மிகச் சிறப்பான மூன்று மனிதர்களிடம் பாராட்டைப் பெற்றது சானுக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அப்போது அந்தப் படப்பிடிப்புக் காட்சியை மேலும் ஒருவர் கவனித்துக் கொண்டு இருந்தது சானுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை.

சான் லீயிடம் இரண்டு விஷயங்களைக் கற்றுக் கொண்டதாகச் சொல்லுவார்.

ஒன்று, மிகவும் உயர்வான நோக்கம் கொண்டிருந்தால் மட்டுமே மாபெரும் வெற்றியை அடைய முடியும் என்பது.

புரூஸ் லீயிடம் உலகத்தையே மாற்றிவிட வேண்டும் என்ற வேகம் இருந்தது. வெற்றியின் மேல் கொண்ட லீயின் ஆசை, மற்றவர்களின் பாராட்டுதலையும் அன்பையும் பெற்றுத் தந்தது. அவரை நினைவில் நிறுத்தியது.

சானுக்கு சிறு வயதில் திரைத்துறைக்கு வரும் எண்ணமே இருந்ததில்லை. இளைஞனாய் இருந்த போது, உண்ண உறங்க தன்னிச்iசாகத் திரிவது மட்டுமே வாழ்க்கைக்கு போதுமானது என்ற எண்ணம் இருந்தது. கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன் குடியும் கூத்துமாக நாட்களை கடத்த விரும்பி, அதையே செயல்படுத்தவும் செய்தான். அந்த எண்ணத்துடனேயே வாழ்ந்திருத்தால் ஸ்டண்ட் கலைஞனாகவே மீதி வாழ்க்கையை கழித்திருப்பான். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராக ஆகியிருப்பான்.

புரூஸ் லீயைக் கண்ட பின்னால், அந்த எண்ணம் மாறியது. தான் நினைத்ததை, நினைத்ததை விடவும் இன்னும் பெரிதாக, மிகப் பெரிய எண்ணங்களைக் கனவு காண முடியும் என்பதை உணர்ந்தான். புரூஸ் லீயால் செய்ய முடியும் போது தன்னாலும் செய்ய முடியும் என்ற மன உறுதி வந்தது. சான் லீயிடம் கற்ற இந்த முக்கிய பாடம் தான் பின்னாளில் அவரை உலகம் போற்றும் கலைஞராகச் செய்தது.

சான் கற்றுக் கொண்ட இரண்டாவது விஷயம் டிராகன் வெறும் கதையல்ல. கடவுள் அல்ல. உண்மையான மனிதன். புகழத் தகுந்தவர். ஆனால் வணங்கத் தகுந்தவர் அல்ல. செட்டில் இருக்கும் போது, எப்போதுமே லீயைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்த வண்ணம் இருக்கும். நீங்கள் தான் சிறந்தவர், நீங்கள் தான் சாதனையாளர் என்று சொல்லிய வண்ணம் இருப்பார்கள்.
அந்தக் கூட்டத்துடன் சேர சானுக்கு எப்போதும் பிடித்ததில்லை. அதனால் எப்போதும் நூறடி தள்ளியே நின்று நடப்பதைப் பார்ப்பதுண்டு. நிறைந்த அனுபவம் மிக்க ஸ்டண்ட் கலைஞர்களும் அவரை அப்படிப் போற்றுவது ஏனோ சரியாகப் படவில்லை. புரூஸ் லீ போடும் சண்டைகள் பிரமாதமாக இருக்கும். ஆனால் அதைவிடவும் சிறப்பாகச் சண்டை செய்பவர்களும் அங்கே இருக்கவேச் செய்தனர்.

புரூஸ் லீ நிச்சயம் மாமனிதர் தான். அதை மறுக்கவே முடியாது.

புரூஸ் லீ ஒரு நல்ல மனிதர். நல்ல ஆசான். இளகிய மனம் படைத்தவர்.

அதனால் புரூஸ் லீ இத்தகைய உபசாரத்தை என்றும் எதிர்பார்த்ததில்லை. அவருக்கு இந்தப் புகழாரம் வெறும் வாய் வார்த்தை என்பது தெரிந்தேயிருந்தது. இருந்தாலும் பணமும் புகழும் பெற இதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார். இதையெல்லாம் கண்ட சானால் சூப்பர் ஸ்டாராக இருக்கும் போது மக்கள் சுற்றி நின்று சாதாரண மனிதனை மாமனிதராக்க முயல்வதைக் கண்ணாரக் காண முடிந்தது.

அப்படிப்பட்ட சூழலில் லீ எப்படி நடந்துக் கொண்டார் என்பது சானுக்கு ஒரு பாடமாக இருந்தது. போற்றுவோர் போற்றினாலும் மிகுந்த கர்வம் இல்லாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்ட விதம் சானுக்கு பிடிக்கவேச் செய்தது.

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)நடுங்கும் என் கரங்கள்…
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *