இதழ்களை வெளியிடும் தொழில் நுட்பம் இன்று எவ்வளோ மாற்றமடைந்து, நவீனமயமாகிவிட்டது என்றாலும் தொடக்கத்தில் அது கடுமையான மனித உழைப்பைச் சார்ந்தே இருந்தது.
ஈயத்தில் வார்த்தெடுத்த தனித்தனி எழுத்துகளைப் பொறுமையாகவும் கண்கள் வலிக்க, வலிக்கவும் ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கி வாசகங்களை உருவாக்கி, ஒரே நேரத்தில் இரண்டு அல்லது நான்கு பக்கங்கள் மட்டுமே அச்சடிக்கத் தகுந்த சட்டங்களில் பொருத்தி, ட்ரெடில் என்கிற ஒற்றைக் காலால் மிதித்து இயக்க வேண்டிய இயந்திரத்தால்தான் ஆரம்ப காலப் பத்திரிகைகளை வெளியிட வேண்டியிருந்தது. இப்படிச் சென்னையில் முதல் முதலாக அமைந்த அச்சகம், நம்புங்கள், கொள்ளையடித்துக் கொண்டு வரப்பட்டதுதான்!
1761-ல் புதுச்சேரியைக் கைப்பற்றிய ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி தளபதி ஐர்கூட் (Eyrecoote), அங்கு சூறையாடிச் சென்னைக்குக் கொண்டு வந்து சேர்த்த பொருள்களில் ஒரு அச்சகத்திற்கு வேண்டிய சாதனங்களும் முக்கியமாகத் தமிழ் எழுத்துருக்களும் இருந்தன. ஆனால் அப்போது சென்னையில் அச்சுக் கோத்து அச்சடிக்கத் தெரிந்த எவரும் இல்லாததால் அதைப் பயன்படுத்த இயலவில்லை. செயின்ட் ஜார்ஜ கோட்டையின் ஒரு மூலையில் போட்டு வைத்திருந்த அவற்றைப் பின்னர் தமிழ் மொழியை அறிந்திருந்த ஃபேப்ரிசியஸ் (Fabricius) என்பவரிடம் கிழக்கிந்தியக் கம்பெனி ஒப்படைத்தது. கம்பெனியின் வேலைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.
ஃபேப்ரிசியஸ் அந்த அச்சகத்தைக் கிறிஸ்தவ மதப் பிரசாரப் பிரசுரங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தார். கிறிஸ்தவ மிஷனரிகளின் மத மாற்ற முயற்சிகள் பல விதங்களிலும் மும்முரமாக நடந்து வந்த காலகட்டம் அது. புதிய தொழில் நுட்பமான அச்சடித்தல் அதற்கு மிகவும் வசதியாக இருந்தது. ஒரே சமயத்தில் ஒரு பிரசுரத்தைப் பல்லாயிரம் பிரதிகள் அச்சடித்துப் பல இடங்களிலும் விநியோகிக்க முடிந்தது. கம்பெனி அதிகாரிகளின் தேவைக்காக 1779, 1786 ஆண்டுகளில் அகராதிகளும் அச்சடித்துக் கொடுத்தார், ஃபேப்ரிசியஸ். கிறிஸ்தவ மிஷனரிகள் தங்கள் மதத்தைப் பரப்புவதற்காகத்தான் அச்சகங்களைத் தொடங்கினார்கள் என்றாலும் நம் நாட்டில் அச்சுத் தொழிலுக்கு வித்திட்டது அவர்கள்தான்..
சென்னையில் முதன் முதலாக ஒரு செய்தித் தாளைத் தொடங்கியவர் சென்னை அரசாங்கத்தில் வேலைபார்த்த ரிச்சர்டு ஜான்ஸன் என்பவர். ‘மெட்ராஸ் கூரியர்’ என்ற பெயரில் 1785 அக்டோபர் 12 ஆம் நாள் அவர் தொடங்கிய ஆங்கிலப் பத்திரிகை, இருபதுக்குப் பன்னிரண்டு அங்குல அளவில் நான்கு பக்கங்கள் கொண்டதாக இருந்தது. அரசின் ஆதரவோடு நடந்த அந்தப் பத்திரிகைக்கு அரசு விளம்பரங்கள் ஏராளமாக வந்து கொண்டிருந்தன. பிரசுரத்திற்கு அதிகச் செய்திகள் வரத் தொடங்கியதும் பக்கங்கள் ஆறாக அதிகரித்தன.. மெட்ராஸ் கூரியருக்கு ஆசிரியராக இருந்த ஹக் பாயிட் என்பவரே சொந்தமாக ‘ஹிர்காரா’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையை 1791-ல் தொடங்கினார். ‘ஹிர்காரா’ என்றால் தூதுவன் அல்லது ஒற்றன் என்று அர்த்தமாம். ஆனால் அது அதிக நாள் நீடிக்கவில்லை. 1794-ல் ஹக் இறந்துவிட, அவர் தொடங்கிய பத்திரிகையும் நின்று போனது. 1795-ல் ஒரு அச்சகம் நிறுவிய ராபர்ட் வில்லியம் கம்பெனி அரசின் அச்சு வேலைகளைப் பெறுவதில் ஜான்ஸனோடு போட்டியிடத் தொடங்கியதோடு, மெட்ராஸ் கூரியருக்குப் போட்டியாக ‘மெட்ராஸ் கெஸட்’ என்ற பத்திரிகையையும் தொடங்கினார். கம்பெனி அரசாங்கம் தனது வேலைகளை இருவருக்கும் பகிர்ந்தளித்து வந்தது., இதற்கிடையில் ஜான் கோல்டிங்ஹாம் என்பவரும் கம்பெனி அரசுக்காக அதிகாரப் பூர்வமாக மெட்ராஸ் அரசாங்க கெஸட்டைத் தொடங்கிவிட்டார்..
மெட்ராஸ் அரசாங்கமே 1800-ல் ஒரு அச்சகத்தை எழும்பூரில் நிறுவி, ‘மெட்ராஸ் அஸைலம் ஆல்மனாக்’ என்ற பெயரில் ஓர் இதழும் வெளியிட ஆரம்பித்து விட்டது. இந்தச் சமயத்தில் அரசின் ஒப்புதலைப் பெறாமலேயே ‘இந்தியன் ஹெரால்டு’ என்கிற பத்திரிகையை ஜி. ஹம்ப்ரீஸ் என்ற ஆங்கிலேயர் ஆரம்பித்தார். கம்பனி அரசை விமர்சிக்கும் பத்திரிகையாக அது உருப்பெறலாயிற்று. அதற்காக அவர் கைது செய்யப்பட்டு நாட்டிலிருந்தே வெளியேற்றப்பட்டுவிட்டார்!
பொது மக்களை எட்டுவதிலும் பொதுக் கருத்தை உருவாக்குவதிலும் பத்திரிகைக்கு உள்ள அபாரமான சாத்தியக் கூறை உணர்ந்துகொண்ட பல்வேறு தரப்பினரும் முக்கியமாக மார்க்கெடிங் நோக்கத்துடன் பத்திரிகை நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அவை வேரூன்ற மாட்டாமல் இடையிலேயே நின்று போயின. பத்திரிகையின் ஆற்றலை நன்கு புரிந்துகொண்டு அதை முறையாகப் பயன்படுத்தியவை கிறிஸ்தவ மிஷனரிகள்தான். அவர்களுக்கு அரசின் ஆதரவும் இருந்தது. அரசு அதிகாரிகள் ஆதரவுடன் மிஷனரிகளின் மத மாற்ற நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெறுவதைக் கண்டு ஹிந்துக்களின் உரிமைகளை வலியுறுத்தும் நோக்கத்துடன் காஜுலு லக்ஷ்மநரசு என்ற தெலுங்கு வணிகர் ‘க்ரெசன்ட்’ என்ற பெயரில் 1844-ல் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். அவரது முயற்சிக்கு மெட்ராஸ் நேடிவ் அஸோசியேஷன் என்ற அமைப்பு ஆதரவு தெரிவித்தது. சென்னை வணிகர்கள் முன்னின்று நடத்திய இச்சங்கம், கிழக்கு இந்தியக் கம்பெனி வர்த்தகத்திற்கு விசேஷச் சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.. 1858-ல் பிரிட்டிஷ் அரசு கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து அதிகாரத்தை மேற்கொண்டு நேரடியாக ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டதால் க்ரெசென்ட்டின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. 1868-ல் லக்ஷ்ம நரசு இறந்துவிட, அவரது பத்திரிகையும் நின்று போனது.
சென்னையில் வசித்த ஆங்கிலேயர்கள் தங்கள் வர்த்தக நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் பிரிட்டிஷ் ஆட்சியின் கொள்கைகளை ஆதரிக்கவும் 1860-ல் ‘மெட்ராஸ் டைம்ஸ்’ என்கிற இதழைத் தொடங்கினார்கள். ஜார்ஜ் ரோமிலஸ் அதன் ஆசிரியர். இதையடுத்து 1868-ல் வசதியுள்ள ஆங்கிலேயர்களால் ‘தி மெட்ராஸ் மெயில்’ தொடங்கப்பட்டது. 1836 லிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘ஸ்பெக்டேடர்’ என்கிற பத்திரிகையை அது இணைத்துக்கொண்டது. இதன் ஆசிரியர்கள் பலரும் இங்கிலாந்திலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டார்கள்! காலனிய நாடுகளில் பிரிட்டிஷ் ஆட்சியை நியாயப்படுத்தும் நோக்கத்தடன் இயங்கிய மெட்ராஸ் மெயில் நம் நாட்டிலேயே முதன் முதலில் வெளியான ஆங்கில மாலை இதழ் என்ற பெருமைக்குரியது. சார்லஸ் லாஸன், ஹென்றி கார்னிஷ் என்ற இரு பத்திரிகை ஆசிரியரகள்தான் இதன் பிதாமஹர்கள்.
தொடக்கத்தில் இரண்டாம் லைன் கடற்கரைச் சாலையிலிருந்தும் பின்னர் மூர் தெருவிலிருந்தும் செயல்பட்ட தி மெட்ராஸ் மெயில், பிறகு முதல் லைன் கடற்கரைச் சாலைக்குக் குடிபெயர்ந்தது. அந்தச் சமயத்தில் மாரிக் காலத்தின்போது கடல் நீர் அது இயங்கிய கட்டிடம்வரை உள்புகுந்து விடுவது வழக்கமாம்! இதைத் தவிர்க்க அந்தப் பகுதியிலேயே ஒரு முறையான துறைமுகத்தை அமைக்க வேண்டும் என்ற பிரசாரத்தை மெட்ராஸ் மெயில் முன்னின்று நடத்தியதாம்!
மெட்ராஸ் மெயில் 1921-ல்தான் மவுண்ட் ரோடுக்கு வந்தது. 1928-ல் அது தன் பிரத்தியேக வட்டார அடையாளத்தைத் துறக்க முடிவு செய்து தனது பெயரை தி மெயில் என்று சுருக்கிக்கொண்டு தேசிய அளவில் தனது ஆகிருதியை வெளிப்படுத்திக் கொண்டது.
மெட்ராஸ் மெயில் தொடங்கப்பட்டக் காலகட்டத்தில் ஆங்கிலோ இந்தியர் என்ற ஒரு தனிப் பிரிவே சமுதாயத்தில்உருவாகிவிட்டிருந்த நிலையில் அவர்களின் நலனைப் பாதுகாத்துக் கொள்ளவும் அவர்களின் கோரிக்கைகளை முன்வைக்கவும் ’ஆங்கிலோ இன்டியன்’ என்ற இதழும் வெளி வந்துகொண்டிருந்தது. இதுவும் அரசுக்குப் பக்க பலமாக நின்றது. நிதி வசதியுடனும் முறையான நிவாகத்துடனும் எல்லாவற்றுக்கும் மேலாக அரசின் பரிவோடும் வெளிவந்து கொண்டிருந்த தி மெட்ராஸ் மெயில் அரசின் ஊதுகுழல் போலவே இயங்கி வந்ததில் வியப்பில்லை. சுதேசிகளுக்குத் தலைமைப் பதவிகளை அளிப்பது உகந்ததல்ல, எல்லாத் துறைகளிலும் அவர்களை அதிக பட்சம் இரண்டாம் நிலைவரை மட்டுமே உயரவிடலாம் என்கிற கருத்தை விடாமல் வலியுறுத்தி வந்த தி மெட்ராஸ் மெயில், 1878-ல் சென்னை உயர் நீதி மன்ற நீதிபதியாக ட்டி. முத்துஸ்வாமி ஐயர் நியமிக்கப்பட்டதைக் கண்டித்துத் தலையங்கம் எழுதியது. அதைப் படித்துக் கொதிப்படைந்த சென்னை இளைஞர்கள் ஆறு பேர், மெட்ராஸ் மெயிலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஆவேசப்பட்டதன் விளைவுதான் ’தி ஹிந்து’ என்ற வார இதழ் வெளிவரக் காரணமாயிற்று. ஜி. சுப்பிரமணிய ஐயரும் அவரது ஐந்து நண்பர்களும் தொடங்கிய ’தி ஹிந்து’ வாரம் இருமுறை, மும்முறை தின இதழ் என்று படிப்படியாக வளர்ந்து தேசியப் பொது வாழ்க்கையில் வகித்த பங்கு விரிவாகவே பதிவாகியுள்ளது. இதே ஜி. சுப்பிரமணிய ஐயர்தான் பின்னர் சுதேசமித்திரன் தமிழ் நாளிதழையும் தொடங்கினார் என்பதும் தெரிந்த செய்தி..
தி மெயில் சுதேசிகள் கைக்கு வந்தது காதில் விழுந்த தகவலின் வாயிலாகத் தான் என்பது சுவாரசியமான செய்தி.
ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கலகலத்துப் போகத் தொடங்கியிருந்த 1945-ல் கன்னிமரா ஹோட்டலில் நடந்த ஒரு விருந்தில் கலந்துகொண்ட சென்னையின் பிரபல தொழில் பிரமுகர் அனந்தராம கிருஷ்ணன், தி மெயில் இதழை வெளி யிட்டு வந்த அஸோசியேட் பப்ளிஷர்ஸ், அது அச்சடிக்கப்பட்ட அஸோசியேட் பிரிண்டர்ஸ், ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடை எல்லாம் விலைக்கு வருவதாக அடுத்த மேஜையில் அமர்ந்திருந்தவர்கள் பேச்சு வாக்கில் சொன்னது காதில் விழுந்த உடனே அவற்றைக் கொத்தாக வாங்கிப் போட்டுக்கொண்டார். இப்படித்தான் ஸிம்ப்ஸன் அமால்கமேஷன் குழுமத்தின் உடைமையாக தி மெயில் 1981-வரை வெளிவந்து கொண்டிருந்தது. அதிகரித்து வந்த தொடர் நஷ்டத்தின் சுமையை ஏற்க அமால்கமேஷன் குழுமம் விரும்பாததால்தான் தி மெயில் 1981-ல் நின்றுபோனது.
1968 -ல் தி மெயில் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள் விழாவில் கலந்துகொண்டு இதழ்கள் நடத்துவதில் உள்ள தொல்லைகள், அவற்றையும் மீறி இதழை நடத்தும் உயர்ந்த நோக்கமும் இலட்சிய வெறியும் ஆகியவை குறித்தெல்லாம் ஆங்கிலத்தில் ஓர் அருமையான உரை நிகழ்த்தினார்கள். சிலர் பதவியினால் பெருமை பெறுவார்கள். வேறு சிலரோ தாம் வகிப்பதாலேயே தமது பதவிக்குப் பெருமை சேர்ப்பார்கள். அண்ணா அவர்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் என்று தலையங்கம் எழுதியது தி மெயில் நாளிதழ்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளிலும் தேசிய உணர்வு பெருக்கெடுத்து சுதேச மொழிகளிலும் ஆங்கிலத்திலும் நாடு முழுவதும் பல இதழ்கள் வெளிவரத் தொடங்கி விடுதலை வேள்வித் தீயில் அவை தங்களை பலிதானம் செய்தது தனியாக விவரிக்க வேண்டிய விஷயம். அதே போல சமூக தளங்களில் உரத்த குரலில் தர்க்கிப்பதற்கென்றே தொடங்கப்பட்ட இதழ்களைப் பற்றியும் தனியாகப் பேசவேண்டும்.
(ஆதாரம்: ஏ கணேசன் எழுதிய ஆய்வு நூல் ‘The Press in Tamilnadu’ (Mittal, Delhi 110 035)
சென்னை வரலாற்று ஆய்வாளர் எஸ். முத்தையா ’தி ஹிந்து’வில் எழுதிய ‘The Memories of The Mail’ ஜூன் 11, 2003.)
நன்றி: நம்ம சென்னை ஏப்ரல் 01, 2012
- புதுவையில் பாவேந்தர் பெருவிழா-2012
- தங்கம் 3 – தங்க விலை ஏற்றம்
- சென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்!
- பஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்
- 2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.
- மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?
- கையோடு களிமண்..!
- ஆலிங்கனம்
- எம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9
- புரட்சி
- நிபந்தனை
- சின்ன மகள் கேள்விகள்
- பழமொழிகளில் தெய்வங்கள்
- முள்வெளி அத்தியாயம் -5
- ஒப்பனை …
- பிறந்தாள் ஒரு பெண்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்
- அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012
- தாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் ?
- ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012
- சுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்
- ஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11
- சாதிகளின் அவசியம்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்
- ஜெயந்தன் இலக்கிய விருது வழங்கும் விழா அழைப்பிதழ்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22
- கலீல் கிப்ரானின் நியாயங்கள்! (சட்டம்)
- கடவுள் மனிதன்.
- கண்ணால் காண்பதும்…
- தூரிகை
- ஊதாப்பூக்கள் கண்சிமிட்டவில்லை
- நிகழ்வு
- உதிரும் சிறகு
- சூல் கொண்டேன்!
- தூறலுக்குள் இடி இறக்காதீர்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தாறு இரா.முருகன்
- ஆர்ய பட்டா மண்
- பவித்திரனின் “ மாட்டுத்தாவணி “
- அம்மா
- விபத்தில் வாழ்க்கை
- இந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை