பஞ்சதந்திரம் தொடர் 50 -அடைந்ததை அழித்தல்

This entry is part 17 of 32 in the series 1 ஜூலை 2012

 

இங்கே அடைந்ததை அழித்தல் என்ற நான்காவது தந்திரம் தொடங்குகிறது. அதன் முதற்செய்யுள் பின்வருமாறு:

கிடைத்த பொருளை முட்டாள் தனத்தினால்
இழக்கிறவன் துயரப்பட வேண்டியதுதான். மூல
முதலையைக் குரங்கு வஞ்சித்தது.

அரசகுமாரர்கள், ‘’அது எப்படி?’’ என்று கேட்க, விஷ்ணுசர்மன் சொல்லத் தொடங்கினார்;

ஒரு கடற்கரையிலே பெரிய நாவல்மரம் ஒன்றிருந்தது. அதில் எப்பொழுதும் பழங்கள் இருந்துகொண்டேயிருக்கும். அந்த மரத்தில் ரக்தமுகன் என்றொரு குரங்கு இருந்துவந்தது.

ஒருநாள் கராலமுகன் என்ற பெரிய முதலை ஒன்று நீரிலிருந்து வெளிவந்து அந்த நாவல் மரத்தின் கீழிருந்த மென்மையான மணலில் உடலைப் புதைத்துக்கொண்டு கிடந்தது. ரக்தமுகன் அதைப் பார்த்து, ‘’நீ என் விருந்தாளி. அமுதத்துக்கொப்பான நாவற்பழங்களைத் தருகிறேன். சாப்பிடு!

வந்த விருந்தாளி இனியவனாகவோ வெறுக்கத்தக்கவனாகவோ மூடனாகவோ அறிவாளியாகவோ இருக்கலாம். என்றாலும் அளித்த விருந்துபசாரத்தை அவன் பெற்றுக்கொண்டால் குடும்பஸ்தன் சுவர்க்கத்துக்குச் செல்வதற்கு அவன் வழிகோலுகிறான்.

சிரார்த்தத்தில் விஸ்வேதேவனாக வரும் விருந்தாளியின் நாடு எது, கல்வி எவ்வளவு, குலம் என்ன, கோத்திரம் என்ன என்று விசாரிக்கக் கூடாது என்று மனுநீதி சொல்கிறது.

வெகுதூரம் நடந்து களைப்படைந்துபோய் விஸ்வேதேவனாக வந்த விருந்தாளியை யார் உபசரிக்கிறார்களோ அவன் மேலுலகை அடைகிறான்.

வந்த விருந்தாளி உபசாரம் கிடைக்கப்பெறாமல் பெருமூச்செறிந்து வீட்டைவிட்டுப் போகும்படி யார் செய்கிறார்களோ அவர்களுடைய முன்னோர்களைத் தேவர்கள் புறக்கணிக்கின்றனர்.

என்று குரங்கு கூறி, நாவற்பழங்களை முதலைக்குக் கொடுத்தது. பழங்களை முதலை சாப்பிட்டது. வெகுநேரம் குரங்குடன் பேசி இன்பமடைந்தபின் தன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றது. இப்படியே நாள்தோறும் முதலையும் குரங்கும் நாவல்மரத்தின் நிழலையடைந்து நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசி இன்புற்றுக் காலம் கடத்தி வந்தன. தான் சாப்பிட்டதுபோக மிஞ்சிய நாவற்பழங்களை முதலை வீட்டுக்குக் கொண்டுபோய் தன் மனைவிக்குக் கொடுத்து வந்தது.

ஒருநாள் முதலையின் மனைவி, ‘’நாதா, அமிருதம் போலிருக்கும் இந்த நாவற்பழங்கள் உங்களுக்கு எங்கே கிடைக்கிறது?’’ என்று முதலையைக் கேட்டது. ‘’அன்பே, ரக்தமுகன் என்றொரு குரங்கு இருக்கிறது. அது என் நெருங்கிய நண்பன். அதுதான் இந்தப் பழங்களை எனக்கு அன்போடு தருகிறது’’ என்றது முதலை.

அதற்கு முதலையின் மனைவி, ‘’அமிர்தம்போல் இருக்கும் இந்தப் பழங்களை எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுடைய நெஞ்சும் கட்டாயம் அமிர்தம் போலத்தான் இருக்கும். நீ என்னை மதிக்கிறாய் என்றால் எனக்கு அந்தக் குரங்கின் நெஞ்சைக் கொண்டுவந்து கொடு. அதை நான் சாப்பிட்டு நோயும் முதுமையும் இல்லாமல்  என்றும் உன்னோடு விளையாடிக்கொண்டிருப்பேன்’’ என்றது.

‘’அன்பே, முதலாவதாக அது நமக்குச் சகோதரன்மாதிரி. இரண்டாவதாக, அது நமக்குப் பழங்களைத் தருகிறது. எனவே அதை நான் கொல்லமுடியாது. இந்த வீணான ஆசையை விட்டுவிடு.

நம்மைப் பெற்றெடுத்தவள் நமது முதல் தாய்; எழுத்தறிவித்தவன் நமக்கு இரண்டாவது தாய்; சொந்த சகோதரனையும் உறவினரையும்விட எழுத்தறிவித்தவனையே மேலாகப் போற்று!

என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்’’ என்றது முதலை.

‘’நீ எப்போதும் என் பேச்சுக்கு எதிராக நடந்ததில்லையே, இப்போதும் மட்டும் ஏன்? நிச்சயமாக அந்தக் குரங்கு ஒரு பெண் குரங்காகத்தான் இருக்கவேண்டும்! அதன்மேல் உனக்கு அன்பு, அதனால்தான் தினசரி அங்கே போகிறாய். அதனால்தான் நான் விரும்புகிறதைப் பெற்றுத்தர முடியாது என்கிறாய். இரவில் என்னோடு படுத்திருக்கும்போது நெருப்புப்போல் பெருமூச்சு விடுகிறாய். எனக்கு முத்தம் கொடுக்கும்போது நீ என்னை இறுகத் தழுவிக் கொள்வதில்லை. ஆகவே நிச்சயமாக உன் மனதில் வேறு யாரோ ஒருத்தி குடி கொண்டிருக்கிறாள்’’ என்றது முதலையின் மனைவி.

அதைக்கேட்ட முதலை தாழ்மையுடன்,

என் ஆருயிரே, உன் காலடியில் விழுந்து வேலையாள் போல் இருக்கும் என்னிடம் ஏன் கோபிக்கிறாய், ஏன் பொறாமை கொள்கிறாய்?

என்று மனைவியிடம் சொல்லிற்று. அந்தத வார்த்தைகளைக் கேட்டதும் அதன் கண்களில் நீர் நிறைந்தது. தன் கணவனைப் பார்த்து,

தூர்த்தனே! நீ அவளைப் பலவாறாக விரும்பி நேசிக்கிறாய். அவளும் தன் வஞ்சகமான காதல் சேஷ்டைகளால் உன் மனதைக் கவர்ந்துவிட்டிருக்கிறாள். உன் மனதில் எனக்குச் சிறிதுகூட இடமில்லை. ஆகவே என் கால்களில் விழுந்து என்னை ஏமாற்றுவது போதும்!

இன்னொன்று: அது உன் காதலி இல்லையென்றால், பின் ஏன் நான் சொல்லியுங்கூட அதைக் கொல்லமாட்டேன் என்கிறாய்? அது ஆண் குரங்கு என்றால் அதன்மேல் உனக்கு அத்தனை அன்பு ஏன்? உன்னிடம் பேசியதுபோதும். அதனுடைய நெஞ்சை நான் சாப்பிடவில்லையானால் உன் வீட்டில் பட்டினி கிடந்து உயிரை விடுவேன்’’ என்றது மனைவி.

அதன் முடிவைக் கேட்டு முதலை கவலையடைந்தது. ‘’ஐயோ, இப்படிச் சொல்லி வைத்துள்ளதும் சரியாகவேயிருக்கிறது:

சிமிட்டி, நீலச்சாயம், கள், நண்டு, மீன், மூடன், பெண்  ஒரு தடவை பற்றிக்கொண்டால் போதும், பிறகு பிடியை விடவே மாட்டார்கள்.

இனி நான் என்ன செய்வேன்? அந்தக் குரங்கை எப்படிக் கொல்வது?’’ என்று சிந்தித்தபடியே குரங்கிடம் போயிற்று. வெகுநேரம் கழித்து முதலை கவலையோடு வருவதைக் குரங்கு பார்த்தது. ‘’நண்பனே, ஏன் இவ்வளவு நேரம்? ஏன் சந்தோஷத்தோடு பேசமாட்டேன் என்கிறாய்? நல்ல நீதிகளையும் சொல்ல மாட்டேன் என்கிறாய்?’’ என்று குரங்கு கேட்டது.

‘’நண்பனே, உன் அண்ணி (முதலையின் மனைவி) என்னை நிஷ்டூரமாகச் பேசிவிட்டாள். அவள் சொன்னாள்: ‘ஏ நன்றி கெட்டவனே, என் முகத்தில்  விழிக்காதே. தினந்தோறும் நீ நண்பனிடம் பழங்களைப் பெற்றுச் சாப்பிடுகிறாய். ஆனால் அதற்குப் பதில் உபசாரம் செய்யும் முறையில் அதை உன் வீட்டு வாசலுக்கும் நீ அழைத்து வரவில்லையே! இந்தத் தோஷத்துக்குப் பிராயசித்தம் கூடக்கிடையாது.

பிராம்மணனைக் கொன்றவனுக்கும், குடிகாரனுக்கும், திருடனுக்கும், பொய்யனுக்கும் பெரியோர்கள் பிராயச்சித்தம் விதித்துள்ளனர். ஆனால்  செய்நன்றி கொன்றவனுக்குப் பிராயச்சித்தமே கிடையாது.

ஆகவே நீ என் மைத்துனரை நம் வீட்டுக்கு அழைத்து வா. அப்போதுதான் நீ பதில் உபசாரம் செய்ததாகும். இல்லாவிட்டால் நீ என்னை இனிமேல் உயிரோடு பார்க்க முடியாது. மறு உலகத்தில் தான் பார்க்க முடியும்’ என்று சொன்னாள். அவள் சொற்களைக் கேட்டுவிட்டு உன்னிடம் வந்திருக்கிறேன். உன் விஷயமாய் அவளோடு சண்டை போட்டதிலே இவ்வளவு நேரமாகிவிட்டது. நீ என் வீட்டுக்கு வா! உன் அண்ணி ஒரு விதானத்தை அமைத்து அதில் துணியும், மணியும் மாணிக்கமுமாக ஜோடித்து வாயிற்புறத்தில் மாலைகளையும்கட்டித் தொங்கவிட்டு விருந்தாளியை வரவேற்பதற்குரிய ஏற்பாடுகள் செய்திருக்கிறாள். ஆவலோடு உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்கிறாள்’’ என்றது முதலை.

‘’நண்பனே, அண்ணி சொன்னது சரிதான். எவ்விதமெனில்,

தருவது, பெறுவது; மனம்விட்டுப் பேசுவது, கேட்பது; விருந்து உண்பது, படைப்பது; இவை ஆறும் நட்புக்கு அடையாளங்கள் அல்லவா?

ஆனால், நான் காட்டிலும் இருப்பவனாயிற்றே! உங்களுடைய வீடு நீருக்கடியில் அல்லவா இருக்கிறது! அங்கே நான் எப்படி வரமுடியும்? நீ ஒன்று செய். அண்ணியை இங்கே அழைத்துவா, நான் வணங்கி அண்ணியின் ஆசிகளைப் பெறுகிறேன்’’ என்றது குரங்கு.

‘’நண்பனே, கடலுக்கடியில் ஒரு அழக்¢ய மணல்திட்டில் என்வீடு இருக்கிறது.  எனவே என் முதுகில் ஏறிக்கொண்டு பயமில்லாமல் இன்பமாய் வா!’’ என்றது முதலை.

குரங்குக்கு ஆனந்தம் பிறந்தது. ‘’நண்பனே, அப்படியானால் சீக்கிரமாகக் கிளம்பலாமே, ஏன் தாமதிக்கவேண்டும்? இதோ நான் உன் முதுகின்மேல் ஏறிக்கொள்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, குரங்கு முதலையின் முதுகின்மேல் ஏறிக்கொண்டது. ஆனால், ஆழமான கடலில் முதலை போவதைப் பார்த்துக் குரங்கு பயந்து நடுங்கிப்போயிற்று. ‘’அண்ணா மெதுவாகப் போ! அலைகள் அடித்து என் உடம்பெல்லாம் நனைந்துவிட்டது’’ என்றது.

அதைக் கேட்டதும் முதலைக்கு ஒரு யோசனையுண்டாயிற்று.இந்தக் குரங்கு என் முதுகிலிருந்து நழுவினால் ஒரு அங்குலம் கூட  அப்பால் செல்லமுடியாது, அத்தனை ஆழமான கடல் இது. என் பிடியில் சிக்கிக் கொண்டுவிட்டது. ஆகவே இதனிடம் என் நிஜ நினைப்பைச் சொல்லிவிடுகிறேன். தன் இஷ்ட தெய்வத்தை அது நினைத்துப் பிரார்த்தித்துக் கொள்ளட்டும்’’ என்று எண்ணியது. குரங்கைப் பார்த்து, ‘’நண்பனே, என் மனைவி சொல்லியபடி உன்னை நம்பவைத்து, உன்னைக் கொல்வதற்காக வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். இனி உன் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தித்துக்கொள்’’ என்றது முதலை. ‘’அண்ணா, உனக்கோ அண்ணிக்கோ நான் என்ன தீங்கு செய்தேன்? என்னை ஏன் கொல்லப்பார்க்கிறீர்கள்?’’ என்று குரங்கு கேட்டது. ‘’கேள், நீ கொடுத்த பழங்கள் அவளுக்கு அமிர்தம் போல் ருசியாயிருந்தன. ஆகவே உன் நெஞ்தைத் தின்ன வேண்டும் என்று அவள் ஆவலாயிருக்கிறாள். அதனால்தான் இப்படிச் செய்தேன்’’ என்றது முதலை. உடனே சமயோசித புத்தியுள்ள குரங்கு, ‘’அடடா அப்படியா சங்கதி? அதை நீ ஏன் அங்கேயே என்னிடம் சொல்லவில்லை? நண்பனே, என் ருசி மிகுந்த நெஞ்சை நாவல்மரத்தின் பொந்தில் மறைத்து வைத்திருக்கிறேன். முன்பே சொல்லியிருந்தால் அண்ணிக்காக அதை எடுத்துக்கொண்டு வந்திருப்பேனே! அந்த ருசி மிகுந்த நெஞ்சு இல்லாமல் இப்போது நெஞ்சில்லாத என்னை அங்கே அழைத்துப்போவது வீண் வேலையாயிற்றே!’’ என்றது குரங்கு.

அதைக் கேட்டதும் முதலைக்கு ஆனந்தம் ஏற்பட்டது. ‘’நண்பனே, அப்படியானால் அந்த நெஞ்சை எனக்குக் கொடு, என் துஷ்ட மனைவி அதைச் சாப்பிட்டு தன் உபசாவத்தை முடிப்பாள். உன்னை நாவல் மரத்துக்கே திரும்ப அழைத்துச் செல்கிறேன்’’ என்று சொல்லிற்று.

சொன்னபடியே முதலை நாவல்மரத்தடியை நோக்கித் திரும்பிச் சென்றது. வழி நெடுக குரங்கு ஒவ்வொரு தெய்வத்தையும் நூற்றுக்கணக்கான முறை வேண்டிக்கொண்டே போயிற்று. எப்படியோ ஒருவிதமாக கரைக்கு வந்ததும், உயர உயரத் தாவிக் குதித்துச் சென்று அந்த நாவல் மரத்தின்மேல் ஏறிக்கொண்டது. ஏறிக்கொண்டே, ‘’நல்லகாலம்! நான் பிழைத்துக்கொண்டேன்.

நம்பிக்கை வைக்கத் தகாதவனிடம்  நம்பிக்கை வைக்காதே! நம்பிக்கையானவனையும் நம்பாதே! நம்பிக்கை வைப்பதால் விபத்து ஏற்பட்டு வேரோடு அழித்து விடுகிறது.

என்று சொல்வதில் நியாயமிருக்கிறது. ஆகவே, இன்றைக்கு நிஜமாக நான் மறுபிறப்பெடுத்திருக்கிறேன்’’ என்று குரங்கு எண்ணியது.

குரங்கிடம் முதலை, ‘’நண்பனே, நெஞ்சைக் கொடு எனக்கு! உன் அண்ணி அதைத் தின்று உபவாசத்தை முடித்துக்கொள்வாள்’’ என்றது. குரங்கு சிரித்துவிட்டு நிர்ப்பயமாகப் பதில் சொல்லிற்று. ‘’சீ, மூடா! நம்பிக்கைத் துரோகி! யாருக்காவது இரண்டு இதயங்கள் இருக்குமா? உன் வீட்டைப் பார்த்துக்கொண்டு போய்விடு. இனிமேல் இந்த நாவல்மரத்தடிக்கு வராதே!

ஒரு நண்பன் எதிரியாக நடந்துகொண்டபிறகு மீண்டும் அவனோடு சிநேகம் கொள்ள விரும்புகிறவன். பெண்குதிரை சாவதற்காகக் கர்ப்பமடைவதுபோல், சாவைத்தான் தேடிக்கொள்கிறான்.

என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்’’ என்றது குரங்கு.

அதைக்கேட்டு முதலை மிகுந்த வெட்கமடைந்தது. ‘’முட்டாள்தனமாக இதனிடம் என் எண்ணத்தை ஏன் வெளியிட்டேன்? எப்படியாவது இதனுடைய நம்பிக்கையைப் பெற வழியுண்டா? நம்பவைக்கப் பேசிப்பார்க்கிறேன்’’ என்று எண்ணியது. ‘’நண்பனே, விளையாட்டுக்காகத்தான் அப்படிச் சொன்னேன். உன் மனதையறிய விரும்பினேன். அவ்வளவுதான். உன் நெஞ்சினால் அவளுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை. என் வீட்டுக்கு விருந்தாளியாக வா! அண்ணி  உன்னைப் பார்க்க ஆவலோடிருக்கிறாள்’’ என்று முதலை சொல்லிற்று.

‘’துஷ்டா, உடனே நீ போய்விடு. நான் வரமாட்டேன்.

பசித்தவன் எந்தப் பாவச்செயலையும் செய்வான். நலிந்தவன் தயையில்லாதவனாக ஆகிறான். ‘அன்பே! கங்கதத்தன் மீண்டும் கிணற்றுக்கு வரமாட்டான் என்று பிரியதரிசனனிடம் சொல்’ (என்றொரு பேச்சு உண்டு)

என்றது குரங்கு. ‘’அது எப்படி?’’ என்று முதலை கேட்க, குரங்கு சொல்லிற்று:

Series Navigationஉள்ளோசை கேட்காத பேரழுகைதுரத்தல்
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *