சிறகு இரவிச்சந்திரன்.
Little drops make an ocean என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. Little scenes make a Mishkin film என்பது புதுமொழி. முகமூடி அக்மார்க் தமிழ்ப் படம். ஆனால் டைட்டில் கார்டில் காட்டப்படும் பெயர்கள் எல்லாம் ஆங்கிலத்தில்! புதுமை அத்தோடு குளோஸ். மற்றபடி, படத்தில் வருவது எல்லாம், வழக்கமான உட்டாலக்கடிதான்.
வழக்கமான கதைகள் இப்படி இருக்கும். அண்ணன் கடத்தல்காரன். தம்பி போலீஸ்காரன். இது எம் ஜி ஆர், நம்பியார், அசோகன் பார்முலா. ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இரட்டையர். ஒருவன் நல்லவன். இன்னொருவன் கெட்டவன். இது சிவாஜி + சிவாஜி (அ) எம் ஜி ஆர் + எம் ஜி ஆர் பார்முலா. உருவம் ஒன்று. ஆனால் ஒரு பாத்திரம் வீரம். இன்னொரு பாத்திரம் கோழை. ஆள்மாறாட்டத்தில் கோழை இடத்தில் வீரம். இதில் ரஜினி, கமல் வரை, வாணிஸ்ரீ, ஜெயலலிதா வரை பதம் பார்த்த பார்முலா.
முகமூடியில் உருவ ஒற்றுமை கிடையாது. ஒருவன் நல்லவன். ஆனால் அவன் கதை நாயகன் அல்ல. அவன் குங்பூ மாஸ்டர். அவனது முதன்மை மாணவன் நாயகன். கெட்டவனுக்கும் மாஸ்டருக்கும் ஒரே குரு. இருவரும் குங்பூ கலை விற்பன்னர்கள். கெட்டவன் மாஸ்டரைக் கொலை செய்ய, அவனைக் கொல்லும் மாணவ நாயகன் என்பது முடிவு.
சந்துரு (ஜீவா) என்கிற புரூஸ் லீக்கும் பூஜா (ஹெக்டே) வுக்கும் நடுவே மோதல். பின்பு காதல். பூஜா, கவ்ரவ் ( நாசர் ) என்னும் அசிஸ்டெண்ட் கமிஷ்னரின் பெண். இந்தியா முழுவதும் வீடு புகுந்து நகைகளை மட்டும் கொள்ளையடித்து, வீட்டிலிருப்போரைக் கொலை செய்யும், கும்பலின் தலைவன் அங்குச்சாமி ( நரேன் ) என்கிற டிராகன். தன் யூகத்தாலும், வியூகத்தாலும், டிராகனை நெருங்கும் நாசரைப் போட்டுத்தள்ளும் முயற்சியில், டிராகனுக்குப் பதில் லீ மாட்டிக் கொள்ளும் வழக்கமான திருப்பம். போலீசிடமிருந்து தப்பிக்க, முகமூடியாக உருமாறும் லீ, ஜெயிப்பது பழைய சோறு.
ஆனாலும், பச்சை மிளகாய் போல, சில பிரில்லியன்ஸ் உண்டு மிஷ்கினிடத்தில். ஜீவாவின் தாத்தாக்களில் ஒருவர் ஜோடனைக்கலை தெரிந்தவர். இன்னொருவர் (கிரீஷ் கர்னாட்) எலெக்ட்ரானிக்ஸ் எக்ஸ்பெர்ட். நாசர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக ஒரு போக்குக்காட்டி, தன் உதவியாள எட்டப்பனையே பிடிக்கும் ட்விஸ்ட். முகமூடிக்கு குங்பூ தவிர வேறு ஏதும் தெரியாது என்பதை வன்முறை தவிர்த்த காட்சிகளால் உணர்த்திய முறை. கடோசியாக, கெட்டவன் என்றாலும், ஒரு வீரன் தன்மானத்தை இழக்காதவன் என்று காட்டிய ‘நச் ‘ கிளைமேக்ஸ்.
படத்தின் கூட்டல்கள்: துல்லிய ஒளிப்பதிவு, ஸ்லிக் எடிட்டிங். மிரட்டும் பின்னணி இசை. கேயின் மூன்று பாடல்களும் வெவ்வேறு ஜானர். டாஸ்மாக் பாட்டில், இதுவரை வந்த மிஷ்கின் படங்களின் டிரேட் மார்க் அசைவுகளை எல்லாம், ஜீவா ஒருவரே செய்து காட்டி விடுகிறார். அடுத்த படத்திலிருந்து புதிய அசைவுகளை எதிர்பார்க்கலாம் என்பது போல இருக்கிறது அது. இளையராஜாவின் ‘ ருக்குமணி வண்டி வருது ‘ பாணியில் வரும் “ வாயை மூடி சும்மா இருடா “, மற்றும் ஒரேஒரு டூயட் புதிய கதவுகளைக் ‘கே’யுக்கு திறந்து விடும்.
கழித்தல்கள் : படத்தின் நீளம் 157 நிமிடங்கள். சூப்பர் ஹீரோ படங்கள், அவனைப் போலவே பரபரவென இருக்க வேண்டும். இது மிஸ்ஸிங். ‘நான் ஈ’ யில் முதல் அரை மணி நேரத்திலேயே ஈ வந்து விடுகிறது. இதில் முகமூடி கிளம்புவதற்குள் பாதி படம் முடிந்து விடுகிறது. முடிவு எப்படி இருக்குமோ என்கிற பரபரப்பு ‘அஞ்சாதே’வையும், ‘யுத்தம் செய்’யையும் ஓட வைத்தது. முடிவு தெரிந்த முகமூடியில் நோ டென்ஷன்.
துப்பறியும் கதைகளை எடுப்பதில் மிஷ்கினின் நிபுணத்துவம் சான்றிதழ் பெற்றாகி விட்டது. சூப்பர் ஹீரோ கதைகளுக்கு லாயக்கில்லை என்று, இன்னொரு சான்றிதழ் கொடுக்க வேண்டிய கட்டாயம் தமிழ் ரசிகனுக்கு.
விறகடுப்பில் வேக வைத்து, வடித்துக் கொட்டத் தெரிந்த ஒருவன், ரொட்டி செய்யப் போய், மாவைக் கையில் அப்பிக் கொண்ட கதையாக இருக்கிறது படம். மொத்தத்தில் மூடி மட்டும்தான் இருக்கிறது. சரக்கு பாட்டிலைக் காணோம் டோய்!
0
கொசுறு
பரங்கிமலை ஜோதியில் டிக்கெட் கொடுப்பவரிடம் “ மையப் பகுதியில் ஓர சீட் கொடுங்க “ என்றேன். “ ஓரமென்ன? எங்கிட்டு வேணும்னாலும் ஒக்காந்துகிடுங்க “ என்றார். 600 சொச்ச இருக்கை கொண்ட அரங்கில் 60 பேர் இருந்தால், எல்லா ஓர சீட்டையும் ஒக்காந்து பார்த்து விடலாம் தான். இது இமாலய வெற்றி பெற்ற படத்தின் ஐந்தாவது நாளில். முகமூடியின் பாதிப்பில் பின் இருக்கையில் இருந்த ஒருவர் தவ்வித் தவ்வி, படம் முடியும்போது திரைக்கு முன்னால் போனதுதான் மிஷ்கின்னஸ் சாதனை!
0
- கருணையினால் அல்ல…..!
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -1
- கதையே கவிதையாய்! (4) செவிடாக இருந்தவள்
- கேள்விகளின் வாழ்க்கை
- இடைவெளிகள் (11) – மாறும் சூழல்களும் சபலங்களும்
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -42
- மொழிவது சுகம் செப்டம்பர் -6 பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்
- அஸ்லமின் “ பாகன் “
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 36) அடுத்த ஓர் முறையீடு
- உறு மீன் வரும்வரை…..
- 2016 ஒபாமாவின் அமெரிக்கா
- தகழியின் பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்
- மிஷ்கினின் “ முகமூடி “
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 27
- இந்த நேரத்தில்——
- Kobo Books தளத்தில் ரெ.கா.வின் மின்னூல்கள்
- முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)
- சத்யானந்தன் மடல்
- தாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி.
- (99) – நினைவுகளின் சுவட்டில்
- திமுகவின் மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறு
- காலம்….!
- கவிதை பாடு குயிலே இனி வசந்தமே..!
- இஸ்லாமிய பெண்ணியம்
- 35 ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பு கடந்து புதிய மைல் கல் நாட்டிய நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள்.
- ஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா!
- கர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிற
- Bharathiar-Bharathidasan Festival 2012,Singapore