ஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்

This entry is part 18 of 46 in the series 19 ஜூன் 2011

ஏலாதி என்ற நூல் நீதி நூல்களில் ஒன்றாகும். இதனுள் ஆண்களுக்குரிய நீதிகளும் பெண்களுக்கு உரிய நீதிகளும் இடம் பெற்றுள்ளன. இந்நூல் வழியாகப் பெறப்படும் இந்த நீதிகளைக் கொண்டு அந்தக் காலத்தில் ஆண்சமுகம்  மற்றும் பெண் சமுகம் ஆகியன எவ்வாறு இருந்தன என்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது. இந்தக் கட்டுரையின் வழியாக ஏலாதி என்ற நீதி நூல் காலத்தில் ஆண்களுக்கு உரிய நீதிகளாகக் காட்டப் பெற்ற செய்திகள் எடுத்துரைக்கப்படுகின்றன.

ஏலாதி ஆண்களைச் சிறந்தவர்களாக ஆக்குவதற்காக அவர்களுக்கு உரிய நல்ல குணங்களை எடுத்துக்காட்டி அவற்றுடன் நல்ல நீதிகளையும் சுட்டிக் காட்டி நிற்கிறது. இது தரும்  ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்களைப் பின்வரும் துணைத்தலைப்புகள் கொண்டு அறிந்து கொள்ள முடிகின்றது.

ஆண்களின் பணிசார் நீதிகள்
ஏலாதியின் காலத்தில் ஆண்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். மேலும் நாட்டைக் காக்கும் பணி செய்பவர்களாகவும் இருந்துள்ளனர். இதன் காரணமாக பல பொறுப்புள்ள பணிகள் ஆண்களிடம் மட்டுமே இருந்துள்ளன. அவற்றில் குறிக்கத்தக்க பணிகள் பின்வருமாறு.

1.    மன்னன்
2.    அறிஞர்
3.    அமைச்சர்
4.    துறவோர்
இந்நான்கு வகைப் பணிநிலைகளும் குறிக்கத்தக்க பணிகளாக ஏலாதி காலத்தில் இருந்துள்ளன. இப்பணிகளுக்கு உரிய நீதிகளை ஏலாதி வழங்குகின்றது.

மன்னன்
மன்னனை ஏலாதி இருவகையாகப் பிரிக்கின்றது. செங்கோல் அரசன், கொடுங்கோல் அரசன் என்பன அவை இரண்டு ஆகும்.

செங்கோல் நடத்தும் அரசனுக்கு வழி காட்டுபவனாக செங்கோல் அமைச்சன் அமைகிறான். இவனுடைய வழிகாட்டலின்படி நாட்டில் செல்வம் பெருகும். குடிகள் அமைதியாக வாழ்வர்.

கொடுங்கோல் நடத்தும் அரசனுக்கு கொடுமைக் குணம் கொண்ட அமைச்சன் துணையாகின்றான். இவர்களது வழிகாட்டலால் கொடுமை ஒரு நாட்டிற்கு வந்துவிடுகிறது.

இருப்பினும் செங்கோல் அரசனும், கொடுங்கோல் அரசனும், இவர்களின் அமைச்சர்களும், மற்ற குடிகளும் நேரம் வரும்போது தானே அழிந்து போகின்றன. இதற்கு உரிய காரணம் யாது என்று விளங்கவில்லை என்று ஒரு ஏலாதி பாடல் அரசமுறைமை  பற்றி எடுத்துரைக்கின்றது.

செங்கோலான் கீழ்க்குடிகள் செல்வமும் சீரிலா
வெங்கோலன் கீழ்க்குடிகள் வீந்துகவும்  வெங்கோல்
அமைச்சர் தெழிலும் அறியலம்ஒன்றாற்ற
எனைத்தும் அறியாமை யான். ( 10)

ஏலாதியின் இப்பாடல் வழி நல்லவர்கள் நிலைத்து நிற்கவேண்டும். தீயவர்கள் விரைவில் அழியவேண்டும். ஆனால் இருவரும் அழிந்து போவது ஏன் எனத் தெரியாமல் இருக்கும் புதிரை இப்பாடல் எடுத்துரைக்கின்றது.

அரசர்களுள் அரசனாக ஒருவன் வருவதற்கான பண்புகள் சில உள்ளன. அவை பற்றிய செய்திகளைப் பின்வரும் பாடல் எடுத்துரைக்கின்றது.

கொல்லான் உடன்படான் கொல்லார் இனம் சேரான்
புல்லான் பிறல்பால் புலான் மயங்கல் செல்லான்
குடிப்படுத்துக் கூழ் ஈந்தான் கொல்யானை ஏறி
அடிப்படுப்பான் மண்ணாண்டு அரசு ( 42)

கொல்லாமை, உயிர்கொல்ல உடன்படாமை, கொலைசெய்வார் கூட்டத்தில் சேராது ஒழிதல், ஊண் உண்ணாதிருத்தல் தன் குடும்பம் காத்து பிறர்க்கு உணவளிப்பவன் என்ற செயல்களைச் செய்பவன் அரசர்கள் வணங்கும் அரசன் ஆவான் என்று இப்பாடலின் பொருள் அமைந்துள்ளது.

அமைச்சன்
நல்ல அமைச்சனுக்கான குணங்கள் பலவற்றை ஏலாதி எடுத்துரைக்கின்றது.

குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம்
மடியோம்பு மாற்றலுடைமை முடியோம்பி
நாற்றம் சுவை கேள்வி நல்லார் இனம் சேர்தல்
தேற்றானேல் ஏறு அமைச்சு. ( 17)

நல்ல அமைச்சனுக்கு இருக்க வேண்டிய குணங்கள் என்று பின்வருவனவற்றை மேற்பாடல் எடுத்துரைக்கின்றது.

1.    குடிகாத்தல்
2.    ஆண்மை.
3.    நூலறிவு
4.    வன்மை
5.    கரவு, சோம்பல் முதலியன சூழாமல் காத்தல்
6.    அரசன் முடியைக் காத்தல்
7.    நாற்றம் அறிதல்
8.    சுவை அறிதல்
9.    கேள்வி உணர்தல்
10.    நல்லார் இனத்தில் சேர்தல்

இந்தப் பத்து குணங்களிலும் வல்லவன் அமைச்சன் ஆகலாம் என்பது ஏலாதியின் கருத்தாகும்.

அறிஞர்
அறிஞர்களாக ஆகத் தகுதி பெற்றவர்களின் இயல்புகளைப் பின்வரும் ஏலாதிப் பாடல் எடுத்துரைக்கின்றது.

கற்றாரைக் கற்றது உணரார் என மதியார்
உற்றாரை அன்னணம் ஓராமல் அற்றார்கட்
குண்டியும் உறையுளும் உடுக்கை இவை ஈந்தார்
பண்டிதராய் வாழ்வார் பயின்று (9)

கற்றவர்கள் கற்றறிந்தமையால் அறிஞர் ஆகமாட்டார்கள். உறவினர்களையும் இவ்வகையில் ஏற்கமுடியாது. ஆனால்  ஆதரவற்றவர்களுக்கு உண்டியும் (உணவும்), தங்கும் இடமும், ஆடையும் கொடுத்து வாழ்பவரே பண்டிதர் எனப்படக் கூடியவர் ஆவர்.

கல்வி, உறவு இவைதாண்டி ஆதரவற்றவர்களுக்கு உதவுவர்களே அறிஞர்கள் ஆவர் என்ற இனிய நீதியை ஏலாதி வழங்குகின்றது.

துறவோர்

துறவறத்தோரும் ஏலாதியின் காலத்தில் வாழ்ந்துள்ளனர். இவர்களுக்கான இலக்கணத்தையும் இந்நூல் வழி அறியமுடிகின்றது.

1.    உழவால் பயிர்விளைவிக்காமை
2.    களிப்புற உண்ணாமை
3.    பயனில் சொற்கள் கூறாமை
4.    பிறரால் விளையும் தீமைகளுக்கு மிகவும் வருந்தாமை
5.    நாணத் தருவனவற்றை வெல்லுதல்
6.    ஒழுக்கங்களை விடாமை
ஆகிய ஆறு நீதிகள் துறவோர்க்கு உரிய நீதிகள் ஆகும்.

விளையாமை உண்ணாமை ஆடாமை ஆற்ற
உளையாமை உட்குடைத்தாம் என்று  களையாமை
நூற்பட்டார் பூங்கோதாய் நோக்கி இவையாறும்
பாற்பட்டார் கொண்டொழுகும் பண்பு  ( 12)

இப்பாடலின் வழியாக துறவு நெறி என்பது ஏலாதி காலத்தில் இருந்துள்ளது என்பது தெரியவருகிறது.

இவ்வாறு மன்னர் தொடங்கி துறவறத்தோர் வரையான பல நிலைப்பட்ட சமுகக் கட்டமைப்பைப் பற்றிய பல செய்திகள் ஏலாதியின் வழியாகத் தெரியவருகின்றன.

இந்தக் கட்டமைப்பு ஆண்சார்புடையதாகவே ஏலாதியில்படைக்கப் பெற்றுள்ளது. பொறுப்பு மிக்கப் பதவிகளை அக்காலத்தில் ஆண்களே வகித்தனர் என்பதும் இதனுடன் தெரியவருகிறது.

ஆண்களுக்கான பொதுவான நீதிகள்
இதுதவிர ஆண்களுக்கு உரிய பொது நீதிகளைத் தருவதாகவும் ஏலாதி விளங்குகின்றது. அவை பற்றிய செய்திகள் பின்வருமாறு.

ஆண் அழகு
ஆண்களுக்கு உரிய அழகுகள் ஆறு என்று ஏலாதி எடுத்துரைக்கின்றது. அவை

1.    புகழ்,
2.    செல்வம்,
3.    வலிமைமிக்க சொற்கள்,
4.    பணி,
5.    க ல்வி,
6.    வள்ளல்தன்மை
ஆகிய ஆறு பண்புகளும் ஆண்களுக்கு உரிய அழகுகள் என்று ஏலாதி எடுத்தியம்புகிறது.

சென்ற புகழ்செல்வ மீக்கூற்றம் சேவகம்
நின்றநிலைக்கல்வி வள்ளண்மை என்றும
வழிவந்தார் பூங்கோதாய் ஆறு மறையின்
வழிவந்தார்  கண்ணே வனப்பு ( 1)

இப்பாடலின் வழியாக மேற்காட்டிய ஆறு பண்புகளும் ஆண்களுக்கு உரிய பண்புகள் என்று வரையறுக்கப் பெற்றுள்ளது. இவை அக்காலத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தன என்பதும் எண்ணுதற்கு உரியது.

மேல் உலக வாழ்வு
மேல் உலக வாழ்வுக்கு உரியவனாக ஆண் விளங்குகிறான் என்றும் ஒரு பாடல் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

கொலைபுரியான், கொல்லான் புலால் மயங்கான் கூர்த்த
அலைபுரியான்  வஞ்சியான் யாதும்  நிலைதிரியான்
மண்ணவர்க்கு மன்றி மதுமலி பூங்கோதாய்
விண்ணவர்க்கு மேலாய் விடும் (2)

கொலை செய்யாமை, ஒரு உயிரைக் கொல்லாமை, புலால் உண்ணாமை, பிறர் மனம் புண்படும் தொழிலைச் செய்யாமை, வஞ்சனை செய்யாமை, சிறிதும் நிலை வழுவாமை ஆகிய இந்தப் பண்புகளைப் பெற்றிருப்பவர்கள் மேல் உலக வாழ்வைப் பெறுவார்கள் என்பது இப்பாடலின் கருத்தாகும்.  இப்பண்புகள் அனைத்தும் ஆண்பாலுக்கு உரியனவாகவே காட்டப் பெற்றுள்ளன. ஏனெனில் `ஆன்’  விகுதியைப் பெற்று இந்தத் தொழில்கள் சுட்டப் பெற்றுள்ளன. ஆன் விகுதி என்பது ஆண்பாலுக்கு உரியதாகும். எனவே மேல் உலகம் செல்லும் மேன்மை பெண்களுக்கு அந்தக் காலத்தில்இல்லை என்பது தெளிவாக இப்பாடலின் வழித் தெரியவருகிறது.

மற்றொரு பாடலில் வானோர்க்கு விருந்தாகும் முறைமை சுட்டப் பெற்றுள்ளது.

இன்சொல் அளாவல் இடமினிது ஊண் யாவர்க்கும்
வன்சொற் களைந்து வகுப்பானேல் மென்சொல்
முருந்தேய்க்கு முட்போல் எயினிற்றினாய் நாளம்
விருந்தேற்பர் விண்ணோர் விரைந்து ( 6)

விருந்தினர்க்கு இன்சொல் உரைத்தல், இடம் தருதல், அறுசுவை உணவு தருதல், மென்சொல் பேசுதல் போன்ற செயல்பாடுகளைச் செய்பவன் வான் வாழும் தேவரால்விரும்பப்படுவான் என்று இப்பாடல் உரைக்கிறது. விருந்து புரத்தல் என்ற பெண்மைக்கு உரிய பண்பும் இங்கு ஆணுக்கு உரியதாக ஆக்கப் பெற்றுள்ளமை கருதத்தக்கது. இங்கும் ஆன் என்ற ஆண்பாலுக்கு உரிய முறைமை தரப்பெற்றுள்ளமை எண்ணிப்பார்க்கத்தக்கது ஆகும்.

மற்றொரு பாடல் குறையுடையோர்க்கு உதவுவர்கள் வான் உலகம் செல்வர் எனக்கூறுகின்றது.

காலில்லார் கண்ணில்லார்   நாவில்லார் யாரையும்
பாலில்லார் பற்றிய நூலில்லார்  சாலவும்
ஆழப் படும் ஊண் அமைத்தார் இமையவரால்
வீழப்படுவார் விரைந்து ( 36)

இப்பாடல் கருத்தில் அமைத்தார் என்று பொதுமை விகுதி தரப்பெற்றுள்ளது. இவ்வேற்றுமை நுணுகி ஆராயத்தக்கது. ஆண்களில் குறைபாடுடையவர்களுக்கு மற்றவர்கள் உதவவேண்டும் என்ற எண்ணத்தில் இங்குப் பெண்களையும் உளப்படுத்தி இந்நீதி உரைக்கப் பெற்றுள்ளது என்பது கருதத்தக்கது.

இவ்வாறு ஆண்கள் வயப்பட்ட சமுக கட்டமைப்பினை ஏலாதி அமைத்துள்ளது என்பதற்கு இப்பாடல்கள் சான்றுகளாக உள்ளன. இவற்றின் வழியாக அக்கால ஆண்சமுகம் சார் நடைமுறைகளை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

Series Navigationதியாகச் சுமை:புள்ளி கோலங்கள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *