எனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)

This entry is part 17 of 46 in the series 26 ஜூன் 2011

‘எடிட்டிங்’ என்கிற ‘பிரதியைச் செப்பனிடுதல்’ பத்திரிகை ஆசிரியரின் தலையாய உரிமை ஆகும். அது தேவையானதும் ஆகும். மேலை நாடுகளில் பதிப்பாளர்கள் அதில் அதிகமும் கவனம் காட்டுகிறார்கள். இதற்கென்றே ஒவ்வொரு பதிப்பகமும் தனித்திறமை மிக்க எடிட்டர்களை வைத்திருப்பார்கள். எவ்வளவு பெரிய எழுத்தாளரானாலும் இவர்களது கண்டிப்புக்குத் தப்ப முடியாது. தமது வெளியீடு தரமாக அமைய வேண்டும் என்பதில் அவர்கள் காட்டும் அக்கறை பிரமிப்பானது. தமிழ்ப் பதிப்பாளர்களில் ‘க்ரியா’ இதில் தனிக் கவனம் செலுத்துவதாக அறிகிறேன். தங்களுக்குத் திருப்தி ஏற்படுகிறவரை எழுத்தாளரைத் திரும்பத் திரும்ப எழுத வைக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்போது ‘தமிழினி’ அப்படிக் கவனம் காட்டுவதாக அறிகிறேன்.

இலக்கியச் சிற்றிதழ்களில் பக்கக் கட்டுப்பாடு காரணமாக வெட்டுகள் நிகழலாம். அது தவிர்க்க முடியாது தான். அப்படி வெட்டும் போது ‘தீபம் திருமலை’, வெட்டியது தெரியாமல் செப்பம் செய்வதில் வல்லவர். வணிக இதழ்களில் இது ஆசிரியரின் தனியுரிமை. குமுதத்தில் கேட்கவே முடியாது. பெரிய கதையை சின்னஞ் சிறுகதையாய் வெட்டி, ஒரு பக்கக் கதை, அரைப்பக்க கதை, ஏன் துணுக்காகவும் கூட வெளியிடுவது உண்டு. முன்பெல்லாம் அப்படி படைப்பாளியைப் பதற வைக்கிற மாதிரி செப்பம் செய்வதில்லை. அதில் வெளியான என் ஒரே சிறுகதையைக் கூட தலைப்பில் தான் மாற்றம் செய்தார்களே தவிர கதையில் கை வைக்கவே இல்லை. நான் எழுதி அனுப்பியபடியே தான் வெளியானது!

விகடனில் வெளியான பத்துக்கு மேற்பட்ட என் கதைகளில் இரண்டு கதைகள் தான் – ஒன்றில் தலைப்பு மட்டும், மற்றதில் தலைப்பு மாற்றத்துடன் வெட்டும் நிகழ்ந்தது. தலைப்பு மட்டும் மாற்றப்பட்ட கதைக்கு நான் ஆட்சேபம் ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் வெட்டுகள் அதிகம் நிகழ்ந்த கதைக்கு, அனுபவ மின்மையால் ஆத்திரத்துடன் ஆசிரியருக்கு ஒரு ஆட்சேபக் கடிதம் எழுதினேன். ஏனெனில் வெட்டப்பட்ட பகுதிகள் அவசியமானவை என்று கருதினேன். அதோடு கதையின் சில பாராக்கள் முன் பின்னாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தன. சில வார்த்தைகளும் பாத்திரப் பெயர்களும் கூட வெட்டப்பட்டிருந்தன. தலைப்புகூட நான் தந்திருந்த மாதிரி காத்திரமாக இல்லை என்றும் கருதினேன். என் ஆத்திரமான கடிதத்தை ஆசிரியர் பொருட்படுத்தி இருக்கவேண்டியதில்லை. இப்படி வருகிற கடிதங்களுக்கெல்லாம் பதில் எழுதி அவர்களுக்குக் கட்டுப்படியாகாதுதான். ஆனால் அப்போதைய விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியன் அவர்கள் – அவரும் எழுத்தாளர் என்பதால், என் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பரிவுடன் பதில் எழுதி விகடனின் பெருமையை உயர்த்தினார்.

கதைக்கு நான் வைத்த தலைப்பு ‘ஜெயஸ்தம்பம்’. அது ‘வெற்றிக் கம்பம்’ என மாற்றப்பட்டிருந்தது. வடமொழி வார்த்தை என்பதால் அதை மாற்றினீர்களா?’ என்றும், மாசிலாமாணிக்கம் பிள்ளை என்ற ஒரு கிராமத்துப் பாத்திரப் பெயரை வெறும் ‘மாணிக்கம்’ என்று வெட்டியது ஏன் என்றும், சில ரசமான கிராமத்து வர்ணனைகளை வெட்டியுள்ளீர்கள் என்றும், கதையின் நீளத்தையும் வெகுவாகக் குறைத்து விட்டீர்கள், இது எழுத்தாளரது உரிமயைப் பறிப்பதாக ஆகாதா என்றும் கேட்டிருந்தேன். அதற்கு ஆசிரியர் பொறுமையாக, பரிவோடு இப்படி பதிலெழுதினார்;

‘அன்புடையீர்,

வணக்கம். 27-1-90 தேதியிட்ட தங்கள் கடிதம் பெற்றேன். விகடனில் அண்மையில் வெளியான தங்களுடைய ‘வெற்றிக் கம்பம்’ சிறுகதைக்கு வாசகர்களின் ஒரு மனதான பாராட்டுக் கிடைத்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் கதையின் தலைப்பை தாங்கள் கூறியுள்ளபடி அது வடமோழியில் அமைந்திருந்த காரணத்தால் தான் ‘வெற்றிக் கம்பம்’ என்று மாற்றினோம். ‘ஜெயஸ்தம்பம்’ என்று கதைக்குத் தலைப்பு கொடுத்து விட்ட காரணத்தால் கதையின் முடிவுப் பகுதிகளில் இந்த வார்த்தையை நிறைய இடங்களில் பயன் படுத்தி இருக்கிறீர்கள். அதுவே ‘வெற்றிக் கம்பம்’ என்று மாற்றி விட்ட பிறகு கதையினுள் அதைப் பயன்படுத்த இயலவில்லை. தவிர ஏற்கெனவே ‘த்வஜெஸ்தம்பம்’ என்ற சொல் பிரபலமாக இருப்பதால் ‘ஜெயஸ்தம்பம்’ என்ற வார்த்தை தவறாகப் புரிந்து கொள்ளப்படும்.

தவிர, இயன்ற வரையில் கதைகளின் தலைப்புகள் தமிழில் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். கதையின் தலைப்பு மாற்றப்பட்டதாலேயே அதன் சிறப்பு குறைந்து விட்டது என்று தாங்கள் கூறுவது முழுதும் ஒப்புக் கொள்ளக் கூடியதாக இல்லை. ‘மாசிலாமாணிக்கம் பிள்ளை’ என்ற கதையில் வரும் பாத்திரத்தின் பெயர் படிக்கும் போது எங்களுக்கு நெருடியது. இருவருடைய பெயர் ஒன்று சேர்ந்து விட்டது போன்ற பிரமை ஏற்படுத்தியது.

‘சதைப்பற்றும் அழகு அமைப்பும் கொண்ட குழந்தையை வெறும் எலும்புக் கூடாக்கி அனுப்பியது போல…..’ என்று கதையின் நீளத்தை குறைத்ததற்காக வருத்தப் பட்டிருக்கிறீர்கள். எந்தக் கதையையுமே சேதப்படுத்தி வெளியிட வேண்டும் என்பது எங்கள் எண்ணமாக இருக்கமுடியாது என்பதைத் தாங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.

தங்கள் கதையின் தொடக்கத்தில் காலைக்கடன் பற்றிய விளக்கம் நீக்கப் பட்டிருக்கிறது. காரணம், கதையைப் படிக்கத் தொடங்கியவுடன் முகம் சுளிக்க வைக்கும் வர்ணனையாக அது சிலருக்கு அமையலாம். கதைக்கோ, அது சொல்லப்படும் சூழ்நிலைக்கோ தேவையற்றதாக நாங்கள் கருதியதால் கூலி கொடுப்பதில் தாமதம் ஏற்படுவது பற்றிய விவரம் நீக்கப்பட்டது. ‘பாப்பாரத் தெரு’ என்பது போன்ற சாதி சொற்பிரயோகத்தை கூடிய வரையில் நாங்கள் தவிர்க்க விரும்புகிறோம். அதனாலேயே பாப்பாரத் தெரு பற்றிய விவரத்தை நீக்கினோம்.

கருப்பன் கால்காணி பூமி அதிகம் உள்ளவன் என்று சொல்லிவிட்டு, ஊர்ப் பெரியவர்களிடம் அவன் காட்டும் அதிகமான பவ்யம், இந்தத் தொழில்புரிபவர்களை அடிமைகளாகக் காட்டும் தொழில் ஏளனம்’ என சிலருக்கு எரிச்சல் ஏற்படக்கூடும். அந்தவகையில் தான் ‘சவரம்’ என்ற வார்த்தையைக் கூட தவிர்த்தோம். கதை எழுதப்பட்ட முழுவடிவமும் உங்களுக்குத் தெரிந்திருப்பதால் வெளியான கதை எலும்புக்கூடு என்று தாங்கள் சொல்லலாம். ஆனால், அச்சான கதையை மட்டும் படிக்கும் எந்த வாசகருக்கும் இந்த உணர்வு ஏற்படாது.

கதை எடிட் செய்யப்பட்டிருப்பதில் தங்கள் மனம் புண்பட்டிருக்கிறது என்பது புரிகிறது. ‘கதையின் இந்தப் பகுதிகளெல்லாம் நீக்கி வெளியிடப்படும்’ என்று முன் கூட்டியே நாங்கள் சொல்லியிருந்தால் தங்களுக்கு இப்போது இந்த அதிர்ச்சி ஏற்பட்டிருக்காது. அப்படி செயல்படாததற்காக நாங்கள் வருந்துகிறோம். நன்றி.

இப்படிக்கு,

……………….

எனது அயர்ச்சி தரும் நீண்ட கடித்துக்கு இப்படிப் பொறுமையாய்ப் படித்து என் ஒவ்வொரு புகாருக்கும் விளக்கம் சொல்லி 3 பக்க அளவில் நீண்ட கடிதத்தை ஆசிரியர் எழுத வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் ஏதுமில்லை தான். இப்படி எல்லா பத்திரிகை ஆசிரியர்களும் இந்தளவு பொறுப்பும் பொறுமையும் கொண்டிருக்க முடியுமா என்ற வியப்பு ஏற்பட்டது. ஆனால் அது ஆனந்தவிகடனின் பாரம்பரியமான நேர்மை, பெருமை என்பதை சமீபத்தில் ‘ஆனந்தவிகடனும் நானும்’ என்ற தலைப்பில் ஒளி இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களின் இது போன்றதொரு அனுபவத்தைப் படித்தபோது தெரிந்தது. அதோடு எடிட்டிங் பற்றிய மரியாதையும் என்னுள் கூடியது. 0

Series Navigationஇறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்மகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காக
author

வே.சபாநாயகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *