போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 8

This entry is part 26 of 30 in the series 17 பிப்ரவரி 2013

“நேற்றிரவு இளவரசி யசோதரா மாளிகையில் ராஜ வைத்தியர் விரைந்து வந்தாராமே? இரவில் நீங்கள் யாருமே தூங்கவில்லையா?” என்றாள் ரத்ன மாலா. பெரிய மர உரலில் கெட்டித்தயிர். அதன் மத்தியில் மூன்றடி நீளமுள்ள ஒரு மத்து. அவள் லாகவமாக கயிற்றால் கட்டி முன்னும் பின்னுமாய் அசைக்கக் கடைந்து கொண்டிருந்தது மத்து. அது சரியாமல் சுவரிலிருந்து நீண்ட ஒரு வெண்கலக் கொக்கியின் முனையில் இருந்த வளையத்துள்ளே சுழன்றது.

“அதை ஏன் கேட்கிறாய்? இளவரசிக்கு சித்தார்த்தர் காடுகளில் வைராகியாகத் திரிகிறார் என்று தெரிந்தது முதல் உணவு உண்ணவே விருப்பமின்றி இருக்கிறார். அடிக்கடி ராகுலனுக்கு தாதிகளே பாலூட்ட வேண்டி வருகிறது. நேற்றிரவு மகாராணி அழைத்தன் பேரில் ராஜ வைத்தியர் வந்தார்” சந்திரிகா ரகசியமான குரலில் பதிலளித்தாள்.

“இளவரசர் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்?” வெண்ணையை ஒரு மட்பாண்டத்தில் இட்டு நிரப்பினாள்.

“சொல்லு ரத்னா? உன் கணவர் உன்னைக் கேட்டுத்தான் முடிவெடுக்கிறாரா?”

‘சந்திரிகா.. குறைந்த பட்சம் தன் தாய் தந்தை சொல்லை மீற மாட்டார் அவர்”

“சரி. இருக்கட்டும். ஆண்கள் வெளி தேசம் செல்வதில்லையா? ஆண்டுக்கணக்கில் அலைவதில்லையா ரத்னா?”

“என்ன சந்திரிகா.. துறவறம் என்று போனால் எந்த மனைவி ஏற்பாள்? யோசித்துப் பார்”

***************
இருளும் மாயையும் இல்லாத யுகம் இருந்ததா? தேடல் வாய்ப்பதும், நழுவுவதும் சம்சார சாகரத்திலேயே உழல்வதும் ஒருவனது கட்டுப்பாட்டுக்குள்ளாகவா இருக்கின்றன? வெளிச்சம் இது இருள் இது என விண்டு அறிவது தான் எளிதா? இருளில் இருக்க நேர்பவனும் மனிதனே. தேடலில் போராடி ஞானதீபம் ஏற்ற முயலுபவனும் மனிதனே. இவர்கள் இருவருக்குமாகப் பொதுவானது, மாறாத சத்தியமானது எது? எல்லா ஜீவிகளும் அறிய வேண்டிய அந்த அரிய ஒளியை, அதற்கானஒரு பாதையை என்னால் காட்ட இயலுமா? முதலில் எனக்கேனும் அது தென்படுமா? தந்திகளைச் சுண்டியதுமே ஒரு நல்ல இசைக் கலைஞன் அதில் சுருதி சேர்ந்ததா இல்லையா என்று கண்டு கொள்கிறான். சுருதி இல்லையென்றால் அதை சுருதி சேர்த்து மீட்ட அவன் பயிற்சியும் திறமையும் கொண்டுள்ளான். கண்களை மூடினாலும் திறந்திருந்தாலும் மனம் அதன் போக்கிலே தான் போகிறது. நான் தேடுகிற ஞானமோ பளிங்கின் மீது பனிக்கட்டி போல வழுக்கிக் கொண்டுதான் போகிறது. எந்தப் பயிற்சியில் என் தேடலில் சுருதி சேரும்? எந்த நிலையில் இந்த மனம் சுருதிபேதமில்லாத தந்தி போல ரம்மியமான இசையை உலகுக்கு வெளிப்படுத்தும்? இந்தக் காட்டில் தனிமையில் எனக்கு அது கை கூடுமா? நல்ல குருவின் வழிகாட்டுதலில் தான் அகப்படுமா?

சித்தார்த்தன் இமைகள் திறந்த போது வயதான ஒருவரும் ஒரு இளைஞனும் பாறைக்குக் கீழே அமர்ந்திருந்தனர். எழுந்து நின்று வணங்கினர். “தவசீலரே! நாங்கள் மகத நாட்டு வணிக குலத்தவர்கள். மிளகு, தேன், குங்குமப்பூ, சந்தனம் என காட்டிலிருந்து பொருட்களை ராஜகஹ நகரத்துக்குக் கொண்டு சென்று விற்பது வழக்கம். காட்டில் வழி தவறி விட்டோம். இரவு தங்கள் குடிலில் தங்கலாமா?”

“குடிலா?” சித்தார்த்தன் மனதுள் முறுவலித்தான். “அருகில் உள்ள குகையில் தான் நான் இரவு படுத்துக் கொள்கிறேன்” என்று குகையை நோக்கி நடந்தான். இருள் கவியத் தொடங்கியது. ஒரு தடிமனான மரக் கட்டையின் மையத்தில் குழிவான இடம் தீப்பட்டுக் கருகி இருந்தது. அதில் இலைச் சருகுகளை சித்தார்த்தன் இட்டு நிரப்பிய போது தான் அது ஆழமானது என்று தெரிந்தது. சித்தார்த்தன் ஓரளவு கூரமையான மூங்கிற் கழியை அதனுள் நுழைத்து வேகமாகக் கடைவது போல் சுழற்ற சிறிது நேரத்தில் புகையும் பின் தீயும் எழுந்தது. அதை அப்படியே காய்ந்த குச்சிகளால் ஆன ஒரு குவியல் மீது கொட்டினான். தீ கொழுந்து விட்டு எரிந்தது. மரக்கடைமீது தனது கப்பரையில் இருந்த நீரில் சிறிது ஊற்றி அந்தத் தீயை அணைத்தான். ஒரு பெரிய கழியை எடுத்து அதன் ஒரு முனையில் காய்ந்த கொடிகளைச் சுற்றினான். “இதை நீங்கள் தீப்பந்தமாகப் பயன்படுத்தலாம். சுனைகள் இரண்டு அருகிலேயே குகைக்கு வலது பக்கம் உள்ளன. அவற்றையும் தாண்டிப் போக வேண்டாம்” என்று குகையில் அமர்ந்து கொழுந்து விட்டு எரியும் தீயையே அவதானித்தபடி இருந்தான்.
****************
கங்கைக் கரையில் ராஜகஹத்தின் புறநகர்ப்பகுதிக்கு வந்ததும் வணிகர் இருவரும் விடை பெற்றனர்.

சித்தார்த்தன் நதியில் நீராடி வெளியே வந்த போது துணி துவைப்பவர்கள் இருவர் ஒரு கழுதை ஈரத்துணிகளைச் சுமந்து செல்ல, அதனுடனேயே நடந்து சென்றனர். அவர்களைப் பின்பற்றி சித்தார்த்தனும் அவர்கள் குடியிருப்பு வரை சென்றான். நல்ல தூரம். மிகவும் களைப்பாக இருந்தது. முதலில் தென்பட்ட குடிசைக்கு வெளியே இட்டிருந்த மூங்கிற் கதவைத் தள்ளித் திறந்து குடிசை வாசலில் இருந்த மர நிழலில் அமர்ந்தான். வீட்டின் முன்பக்கம் பல கயிறுகள் கொடிகளாய்க் கட்டப்பட்டுத் துணிமணிகள் காய்ந்து கொண்டிருந்தன. காலில் பெரிய வெள்ளித் தண்டை அணிந்த ஒரு இளம் பெண் குடிசக்கு வெளியே வந்தாள். சித்தார்த்தனைப் பார்த்ததும் மறுபடி குடிசைக்குள் சென்றாள். அவளது கணவனை அழைத்து வந்தாள். “குடிப்பதற்கு நீர் வேண்டும்” என்றான் சித்தார்த்தன்.

“தாங்கள் ஷ்ரமணரா?” என்றான் அந்த வீட்டு எஜமானன்.

“ஆம்”

“அது தான் எங்கள் வீட்டில் கூடத் தண்ணீர் கேட்டுக் குடிக்கிறீர்கள்” என்றபடியே மனைவி கொண்டு வந்த சிறிய மட்பாண்டத்தை சித்தார்த்தனிடம் கொடுத்தான்.

*****************

“காந்தாரத்திலிருந்து வந்த பேரீச்சம் பழங்கள் இவை. நம் நாட்டுத் தேனில் ஊறியிருக்கின்றன. சாப்பிடு” என்றார் ராணி பஜாபதி கோதமி. யசோதரா மௌனமாக அமர்ந்திருந்தாள். ராணி தங்கப் பாத்திரத்தில் இருந்து ஒரு சிறு கரண்டியால் ஒரு பேரீச்சம்பழத்தை எடுத்து நுனி விரலால் அதைப் பற்றி “வாயைத்திற” என்றபடி யசோதராவை நெருங்கினார். அவளது முகத்தை இடது கையால் பற்றி அன்புடன் அவள் வாயில் அதை ஊட்டி விட்டார். யசோதராவின் கண்கள் கலங்கின. ராணி அவளுக்கு அருகாமையில் நகர்ந்து அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டார். யசோதரா குலுங்கிக் குலுங்கி அழுதாள். ஓரிரு நிமிடங்கள் அவளது துயரம் வெளிப்படக் காத்திருந்து ராணி கையை அசைத்தார். ஒரு பணிப்பெண் உணவுத் தட்டுக்கு அருகில் இருந்த பெரிய வெண்கலப் பாத்திரத்தில் கைகழுவும் தண்ணீர் மற்றும் அதனருகே இருந்த பருத்தித் துணியையும் கொண்டு வந்தாள். முதலில் வலது கையால் சிறிதளவு நீரை எடுத்து யசோதராவின் கண்களையும் ராணி துடைத்து விட்டார். குறிப்பறிந்து செந்தூரம் எடுத்து வந்தாள் ஒரு பணிப்பெண். யசோதராவின் நெற்றியில் திலகம் இட்டார். பிறகு மற்றொரு பாத்திரத்திலிருந்து ஒரு கரண்டியில் இனிப்பை எடுத்த படி “இந்த பால் திரட்டையும் சாப்பிடு” என்று ஊட்டி விட்டார். தரையின் மீது இருந்த விரிப்பின் மீதுதான் அரையடி உயர பெரிய முக்காலியும் அதன் மீது தண்ணீரும் உணவும் இருந்தன. சாமரம் வீசுபவர்கள் பின்பக்கம் நின்றபடி வீசிக் கொண்டிருந்தார்கள்.

“ராணி மகாமாயா என் சகோதரி என்பது பிறந்த வீட்டோடு முடிந்து போன விஷயம். நான் மன்னருக்கு இரண்டாவது மனைவி ஆவேன் என்று கருதவேயில்லை.

மாயா மணமான புதிதில் குழந்தைப் பேறு தாமதமானது. குழந்தையே இல்லாமற் போனால் என்ன செய்வது என்று என்னையும் மகாராஜா கைப்பிடித்தார். நல்லதிர்ஷ்ட்டமாக அவளுக்கே முதலில் குழந்தை பிறந்த போதும் எந்தத் தருணத்திலும் அவள் மனதுள் அதீதமான மகிழ்ச்சி கொள்ளவில்லை. சித்தார்த்தன் விஷயமாக எவ்வளவோ ஜோதிடம் பார்க்கும் நம் மகாராஜா மாயாவின் ஆயுள் பற்றி விசாரித்து வைக்கவில்லை. சித்தார்த்தன் பிறந்து சில நாட்களிலேயே மாயா காலமானாள். ஆனால் அவளது குறுகிய கால வாழ்க்கை நிறைவானதாக, அர்த்தமுள்ளதாகவே இருந்தது.

தனது முடிவின் படி ஞானத்தை தேடும் சித்தார்த்தனை மட்டும் நீ நினைத்தபடி இருக்கக் கூடாது. இறைவன் விருப்பப்படி உன் மடியில் மகனாக வந்திருக்கும் ராகுலனைப் பற்றியும் நினைக்க வேண்டும்.

இரவு கவியும் போது தான் நாம் மாளிகை எங்கும் தீபங்களையும் தீப்பந்தங்களையும் ஏற்றுகிறோம். நம் பணிகள் தொடர்கின்றன. இந்த அதிர்ச்சி உன் மனதில் கொண்டு வந்திருக்கும் இருளை நீ ராகுலன் என்னும் விளக்கை வைத்துத் தான் போக்க வேண்டும். நாம் ஷத்திரியப் பெண்கள் நமது வீரம் குடும்ப வாழ்க்கையில் மட்டுமே வெளிப்படும்”

***********
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையான நெற்பயிர் நீண்டிருந்தது. களத்து மேட்டிலிருந்த குடியானவர்களுக்கு தூரத்திலிருந்து கேட்ட குதிரைக் குளம்பொலி அச்சத்தை ஏற்படுத்தியது. அது நெருங்க நெருங்க அங்கே இங்கே இருந்தவர் அனைவரும் எழுந்து ஒன்றாக ஒரு மரத்தடியில் சென்று ஒதுங்கிக் கொண்டிருந்தார்கள்.

குதிரை மேல் இருந்து படைவீரன் “ஒரு துறவி இங்கே வந்தாரா?” என்றான். யாரும் பதில் பேசவில்லை. “யாராவது வந்து பதில் சொல்லுங்கள். மாமன்னரின் கோபத்துக்கு ஆளாகாதீர்கள்”

விவசாயத் தொழிலாளிகளுள் வயதான ஒருவர் ” இந்த நிலம் கிராமணியுடையது. அவரைத் தவிர ராஜாவின் சேவகரிடம் பேச யாருக்குத் துணிவு வரும்?” என்றார்.

“கிராமணி உன்னைக் கோபிக்க மாட்டார். சொல். துறவி இங்கே வந்தாரா?”

“ஆமாம்”

“காண்பதற்கு எப்படி இருந்தார்?”

“சிகப்பாக உயரமாக இருந்தார். மொட்டையடித்திருந்தார்.”

“என்ன பேசினார்?”

“ஒன்றும் பேசவில்லை”

“பிறகு?”

“பிச்சை கேட்டார்”

“உங்களிடமா?”

“மன்னியுங்கள் மாவீரரே. நாங்களும் எவ்வளவோ எடுத்துச் சொன்னோம். அதை அவர் ஏற்காமல் பசி என்று பிச்சை கேட்டார். நீராகாரமே இருந்தது. அதை பச்சைமிளகாயுடன் விரும்பி உண்டார்”

“முட்டாளே. வந்தவர் யார் தெரியுமா? கபிலவாஸ்துவின் இளவரசர் சித்தார்த்தர். உங்கள் கஞ்சிக்கலயத்தை அவரியம் நீட்ட உங்களுக்கு வெட்கமாயில்லையா?”

“அறியாமல் நடந்த தவறு ஐயா. அவர் ராஜ வம்சம் என்று எங்களுக்குத் தெரியாது. எங்களை தண்டித்து விடாதீர்கள்.”

“இனி அவர் தென்பட்டால் ராஜகஹத்தின் வெளிப்புறமுள்ள பாடியில் எந்தப் படைவீரனிடமோ தலைவனிடமோ யாரிடமாவது சொல்ல வேண்டும். புரிகிறதா?”

“துறவி உணவு அருந்திய பிறகு எந்தப் பக்கம் சென்றார்?”

“கங்கை இருக்கும் திசையில் சென்றார் ஐயா”

“நான் சொன்னவை கவனத்தில் இருக்கட்டும்” என்று வீரன் குதிரையின் வயிற்றுப் பகுதியை இரு கால்களால் உதைக்க தூசியைக் கிளப்பிக் கொண்டு அது விரைந்தது.

மீண்டும் ராஜாவின் சேவகர் வருவாரோ? சவுக்கடியோ? சிறைவாசமோ? என மனத்துக்குள் இருந்த பதட்டத்தைக் காட்டிக் கொள்ளாமல் குடியானவர் கலைந்து வீடு சென்றனர்.

****************************

தென்னை மரத்து கிளையின் அடிப்பக்கம் தலையணையாகவும் ஓலைப்பக்கம் படுக்கையாகவும் படுப்பது மழை நாட்களில் ஈரத்திலிருந்து சிறு பாதுகாப்பு அளிப்பதாக இருந்தது.

தூரத்தில் நிறைய தீப்பந்தங்களின் சுடர் ஒளி நகருவதிலிருந்து தீப்பந்தம் ஏந்திய ஆட்கள் நகருவதை யூகிக்க முடிந்தது. நல்ல உயரத்தில் தீப்பிழம்பு தென்பட்டதால் அது குதிரைவீரர்கள் வரிசை என்றே தோன்றியது.

இரவு காட்டில் தங்கிய வணிகர்கள் இருவர் வேண்டுகோளை ஏற்று ராஜகஹ நகருக்குள் வந்த பிறகு புதிதாக ஒரு கேள்வி மனதுள் நுழைந்தது. தனிமனிதன் ஒருவனுக்கு தேடலில் ஞானம் சித்திக்கும் என்றால், நிர்வாணம் அல்லது ஜீவன்முக்தி கிடைக்கும் என்றால் சமுதாயம் எந்த விதத்தில் பயன் அடையும்?

சமுதாயம் முழுவதையும் வழி நடத்தவென்றோ வைதீக மதத்தில் பூசைமுறைகள் வருணாசிரம சாதி முறைகளை ஏற்படுத்தினார்கள்?

சமுதாயம் இவற்றால் ஏற்றத்தாழ்வுகளையும் வறட்டு வழிபாட்டு முறைகளையும் மட்டும் தானே கண்டது? எனக்குள் ஏற்றப்படும் ஞானதீபத்தை ஏந்தி எல்லா மக்களுக்கும் இருளிலிருந்து வெளிச்சத்துக்கு என்னால் வழிகாட்ட முடியுமா?

எந்தப் பயிற்சி அந்த ஞானத்துக்கு இட்டுச் செல்லும்? எந்த அளவு போராட்டம் அந்த இலக்கை அடைய உதவும்?

குருவாக அல்லது வழிகாட்டியாக ஒருவரை அண்டித்தான் தீர வேண்டும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக.

Series Navigationநேர்த்திக்கடன்சும்மா கிடைத்ததா சுதந்திரம்?
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *