எதுக்கும் நான் இப்பவே பாலு வாத்யாருக்கு ஃபோன் பண்ணி விஷயம் சொல்லிடறேன். அவர் சொல்ற மாதிரி ப்ளான் பண்ணியே டிக்கெட்ஸ் புக் பண்ணிக்கலாம்…என்றவள் கைபேசியில் அவரை அழைத்துப் பேசி விஷயங்களைக் கேட்டுக் கொண்டவள்…..
அம்மா….டிக்கெட்ஸ் புக் பண்ணியாச்சு….ஈஸியா கிடைச்சுடுத்து. இங்கேர்ந்து நேரா டெல்லி….ஏர்போர்ட்ல கனெக்டிங் ப்ளைட் டு வாரணாசி. மூணு நாட்கள் காசில தங்கறோம். நடுப்பற அலகாபாத்துல திரிவேணி சங்கம் ,கயா, எல்லாம் லோக்கல் கார் வெச்சுக்கலாமாம் , அப்பிடியே புத்த கயாவும் போயிட்டு மறுபடியும் டெல்லி வரோம். டெல்லில ஒரு நாள் ஸ்டே ….அங்க ஒரு பியூட்டிஃபுல் டெம்பிள் ஒண்ணு …அதை உனக்கு நான் காமிச்சுத் தரணமாக்கும். நீ…அதைப் பார்த்ததும் அப்படியே அசந்து போயிடுவே. நமக்கு சொர்க்கம்ன்னு பேரு மட்டும் தான் தெரியும்.அந்த சொர்க்கம் எப்படி இருக்கும்னு நேராப் பார்த்தாப்பல ஒரு பிரமையை அந்தக் கோவில் உண்டாக்குமாக்கும். அங்க குழந்தைகளை வைத்து எனக்கு போட்டோ எடுத்துக்கணம்னு ஆசையாக்கும்.அதுக்காகத் தான் ஒரு நாள் டெல்லில தங்கறோம்.சரியா…? சித்ராவைப் பார்க்கிறாள் கௌரி.
எல்லாம் நம்ப வாத்தியார் சொன்னப் பிரகாரம் தானே..பண்றே ? நன்னாப் பார்த்துப் பண்ணு, எதுவும் விட்டுப் போயிடப் படாது. அப்பறம், நான் இதை ஊறவெச்சேன் , அதைக் காயப்போட்டேன்னு சொல்லி தலையை சொரியப்படாது…இது அப்பாக் காரியமாக்கும்…கேட்டியா..?
அம்மா….எல்லாம் நேக்குத் தெரியும். நம்ப பாலு வாத்தியார் சொன்னதை எழுதி வெச்சுண்டென். காசிலயே அவர் ரெண்டு பேரோட ஆத்து அட்ரெஸ் வேற தந்தாராக்கும். நாம தங்கறதுக்கு, காரியம் பண்ணித் தர ப்ரோஹிதர் ஆத்து அட்ரஸ் எல்லாம் சொல்லிருக்கார். நீ ஒண்ணத்துக்கும் கவலைப் படாதே. எல்லாம் நான் பார்த்துப்பேன்.
ஆமாம்….அதென்னடி அப்படி ஒரு கோவில்…? சொர்க்கமாட்டமா…? நீ எப்பவாக்கும் அங்க போனே…? தனியாவா….? அந்தக் கோவிலோட பேர் என்னவாக்கும்..?
அதெல்லாம் சஸ்பென்ஸ்…! நீயே பார்த்து தெரிஞ்சுக்கோ..!….அந்த மாதிரி ஒரு கோவில் நம்ப இந்தியாவில் அது ஒண்ணு தான் இருக்கு. அப்பப்பப்பா….என்ன சுத்தம்….என்ன சுத்தம்…! என்ன ஒரு அழகு….கண்ணுக்கு எட்டற தூரம் வரைக்கும் சுத்தமும் அழகும் தான்ன்னா பார்த்துக்கோயேன். நான் தனியாத் தான் போய்ட்டு வந்தேன்.. அப்பவே நினைச்சுண்டேன்…உனக்கு காட்டித் தரணம்னு. டோன்ட் மிஸ் இட் மா…!
அக்ஷர்தாமா…?
அட…அதே தான்மா…எப்படி அவ்ளோ சரியாச் சொன்னே…? நீ கிரேட் மா..! ஆத்துக்குள்ளயே இருந்துண்டு ‘அக்ஷர்தாம்’ கூட தெரிஞ்சு வெச்சுண்டு இருக்கியே..!
அதென்னடி பிரமாதம்….! நோக்குத் தெரியுமோ…தெரியாதோ .? ஹைதராபாத்தில் ‘சுரேந்த்ரபுரி’ இருக்கே..அதான் சொர்க்கம்…நரகம் கோவில்..!.நீ லண்டன் போயிருந்த போது, நானும் அப்பாவும் போயிட்டு வந்தோமே….அது என்ன ஒரு பிரம்மாண்டம்…! அதை விடவா….நீ சொல்ற அக்ஷர்தாம்…இருந்துடப் போறது?
ம்ம்ம்…ம்ம்ம்… அதைப் பத்தி நேக்கு ஒண்ணும் தெரியாது…..நீங்க தான் எங்க போனாலும் போட்டோவே எடுக்க மாட்டேளே..அதோட கூட அப்போ தானே உங்களுக்கும் மாமாவுக்கும் எதோ மனஸ்தாபம் வந்து பின்னே அது தகராறா மாறி கடைசிலப் பேச்சு வார்த்தை கூட நின்னு போச்சே….அப்பா போனதுக்குக் கூட அவா ஏதோ கடனுக்கு வந்து நின்னுட்டு அப்டியே கிளம்பிப் போனாளே … நேக்கு நன்னாயிட்டு ஒர்மைல இருக்கு.
ஆமாண்டி…கௌரி…அவனை என் தம்பின்னு சொல்லிக்கவே நேக்கு வெக்கமாருக்கு. ஒரு பத்தாயிரம் ரூபாய்க் காசுக்கு இவரோட தொந்த யுத்தம் பண்ணினானே ….அவனான்னு இருந்தது நேக்கு…! எல்லாம் அவனுக்குப் பின்னாடி இருந்துண்டு ரிமோட் கண்ட்ரோல்ல அவனை ஆட்டி வைக்கிறாளே அவளைச் சொல்லணம்..என் அம்மாவையும் கூட்டிண்டு போயாச்சு.அப்போலேர்ந்து நாம இருக்கோமா…செத்தொமான்னு கேட்கக் கூடத் தோணலை அவாளுக்கு..!
சரி..சரி…விடும்மா…..! இப்ப எதுக்கு அவாளைப் பத்தி…பேசிண்டு. நாம இருக்கற இருப்புக்கு நம்மளோட யாரும் பேசாமல் இருந்தால் தான் நமக்கு பெட்டர்.
க்கும்….அதுக்காக, தாய் மாமாங்கற உறவு விட்டுப் போகாதுடி. நம்ப கௌசிக்கையும்,கௌதமையும் பார்த்தால் அவன் விட மாட்டான்..அவாளுக்குத் தான் குழந்தைகளே இல்லையே…! நீ மனசு வெச்சா, இதுல கெளசிக்கை அவாட்ட தத்து கொடுத்து வளர்த்துக்கச் சொல்லலாம். இழந்த உறவு திரும்பும்.ரொம்பவே எதார்த்தமாகச் சொல்கிறாள் சித்ரா.
என்ன பேச்சு இதும்மா…! எப்டிம்மா நோக்கு இப்படிச் சொல்ல மனசு வந்தது..? நோக்கு வேணா இந்த ரெண்டு குழந்தையும் பாரமா, பாவமா மனசுக்குள்ள தோணலாம். ஆனால் நேக்கு அப்படியில்லை. இப்பச் சொல்றேன் கேட்டுக்கோ. இனிமேல் இவா தான் நேக்கு எல்லாம்..என் ஜீவன், உயிர்,உலகம்….எல்லாமாக்கும். இவனைக் கொடுத்துட்டு நேக்கு எந்த மாமன் மச்சான் உறவும் வேண்டாம். அப்படி என்ன உன் மனசுக்குள்ள உறுத்தறது ? அதைக் இந்தக் கொழந்தைகள் மேல காட்டறே..? நோக்கு நாங்க உன் கண்ணு முன்னாடி இருக்கறது பிடிக்கலைன்னா இப்பவே சொல்லு..நாங்க மூணு பேரும் எங்கயாவது கண் காணாத இடத்துக்கு போயிடறோம் . கண்கள் கலங்க நா தழு தழுக்கப் பேசினாள் கௌரி.
நோக்கென்ன பிராந்து கீந்து பிடிச்சிருக்கா? நான் ஒரு பேச்சு வார்த்தைக்குச் சொன்னால் இப்படி குதி குதின்னு குதிக்கற ?
நான் ஒண்ணும் குதிக்கல ….நீ பேசறது அந்த லட்சணத்துல இருக்கு. சொன்னவள் சமாதானக் குரலில், சரி…உன்னை மாதிரி அம்மாவுக்கு என்னை மாதிரி பொண்ணு இருந்திருக்கக் கூடாதும்மா…நான் தான் தப்பு பண்ணிட்டேன்…எனக்கு இப்ப உன்னைப் பேச எந்த வாயும் இல்லை. ஐம் ஸாரிம்மா ….! எழுந்து வந்து சித்ராவின் கன்னத்தைத் தடவியபடி கெஞ்சுகிறாள் கௌரி/
போதும்….போதும்….உன் கெஞ்சலும் கொஞ்சலும்…..ஷணச் சித்தம் ஷணப் பித்தம்…! கௌசிக் எழுந்துண்டு அழறான் பார்….எடுத்துண்டு வரேன்…..என்று கௌரியின் கைகளை எடுத்துவிட்டு , சிரித்தபடியே எழுந்து ஓடியவள், அடடா……மூச்சா போய்ட்டியாடா…சுட்டிப் பயலே ….தோ …பாட்டி வந்தாச்சு…..இரு…இரு…அழா
குழந்தை சித்ராவின் புடவைத் தலைப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இழுத்தது. ம்மா…ங்கா என்று பேசியது.
அம்மா….பார்த்தியோ, இவனுக்கு உன் மேலே எத்தனை பாசம்னு…!
கௌரியின் கண்களில் பனித்துளி மின்னுகிறது.
குழந்தையும்,தெய்வமும் கொண்டாடும் இடத்திலேன்னு சொல்வா…..இவா தான் பரப் பிரம்மம்..! என்றவள் “மன்னிச்சுக்கோடி’ என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு தலை குனிந்தபடி வேகமாக தன்னை அந்த இடத்திலிருந்து விடுவித்துக் கொண்டு அறைக்குள் செல்கிறாள்.
சித்ராவின் கண்கள் கலங்கியது..! பந்தம் இதயத்தை அசைத்தது.
கௌரி…..கெளசிக்கை தன் முகத்துக்கு நேரே கொண்டு நிறுத்தி….சின்னக் கண்ணா…செல்லக் கண்ணா…சிங்காரக் கண்ணா…என்று ராகம் பாடுகிறாள்.
குழந்தைகள் அந்த வீட்டை கோகுலமாக்கியது .
கௌரி, எல்லாம் ரெடியா எடுத்து வெச்சுக்கோ, நாளன்னிக்கி விடிகார்த்தால தானே நாம கெளம்பறோம்? சித்ரா கௌதமைத் தூக்கி கொண்டு அறையிலிருந்து வருகிறாள்.
ஆமாம்ம்மா…..நாளன்னிக்கி கார்த்தால மீனம்பாக்கம் போகணம் . நாம மத்தியானம் பன்னெண்டு மணிக்கெல்லாம் அங்க வாரணாசில இருப்போம். ஹனுமான் காட்ல தான் அவர் வீடு. நாம காஞ்சி காமகோடி சத்திரத்துல தான் தங்கறோம். ரூம் புக் பண்ணியாச்சு. சேம் டே காரியம் ஸ்டார்ட் பண்ணிடுவாராம்.கௌரி கட கட வென்று சொல்லுகிறாள்.
சும்மாச் சொல்லக் கூடாது…இந்த விஷயத்துல நீ எள்ளுன்னா எண்ணையா இருக்கே…இத்தனை பொறுப்பு உனக்கு எப்படி திடீர்னு வந்ததுன்னு நேக்கே ரொம்ப ஆச்சரியமா இருக்கு …?
ம்ம்ம்…முதல்ல எனக்கு திருஷ்டி சுத்திப் போடு….உன்னோட கண்ணே பட்டுடுத்து…! கௌரி வெட்கத்தோடு பெருமை ததும்பச் சிரிக்கிறாள்.
கண்டிப்பா போடறேன்….ஊரு கண்ணை விடத் தாய்க் கண் தான் பெரிசுன்னு சொல்வா….என்றவள் அடுக்களைக்குள் நுழைகிறாள்.
0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
எந்தாது கௌரி…இப்படித் தொப்பமா நனஞ்சுண்டு வந்து நிக்கறாய் ….? இப்ப நீ கிட்சன்லேர்ந்து வரயா இல்லைன்னா முகம் அலம்பிண்டு வரயான்னு டௌட்டா இருக்கு….அப்டி வேர்த்து கொட்டிருக்கு நோக்கு..! அப்படி என்னவாக்கும் சமைச்சே..? கிண்டலும் நையாண்டியுமான குரலில் கேட்டுக் கொண்டே சித்ரா, குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்.
ஹபப்பப்பப்பப்பா….! என்ன புழுக்கம்……என்ன புழுக்கம்….! ஃபேனைப் போடு….ஏசியைப் போடு…டர்க்கி டவலால் துடைத்துக் கொண்டே,
வந்தவள்….ஒண்ணுமில்லை வெறும் இவாளோட பாட்டில்களை ஸ்டெரிலைஸ் பண்ணினேன்….அவ்ளோதான். நீ எப்படித் தான் வித விதமா சமைக்கிறாய்? சிம்னி, ப்ளோவர் எல்லாம் இருந்தும் இப்படி வதங்கறது அடுக்களை.
நான் வேற வாய்க்கு ருசியா…காரமா சேப்பங்கிழங்கு ஃப்ரை பண்ணு, அப்பளாம் பொரிச்சுடு , பூரியைப் பண்ணுன்னு மெனு ஆர்டர் பண்ணுவேனே…நீ கொஞ்சம் கூட அலுத்துக்காமல் சிரிச்ச முகமாப் பண்ணித் தருவே…அம்மான்னா கூடவே சகிப்புத் தன்மையும் வந்துடுமோ…? என்ன இருந்தாலும் நான் உன்னை ரொம்பப் படுத்தி எடுத்திருக்கேன், இல்லையாம்மா.
ஒண்ணுமில்லை…..நீயும் இப்போலேர்ந்தே ஆரம்பிச்சுட்டியே….! என்னடா….கௌசிக், கெளதம்….நான் சொல்றது சரி தானே..?
ங்கா ……அத்ததா ….ம்மா….! பதிலாககிறது.
கௌரி, நாம பாட்டுக்கு இப்படி திடுதிப்புன்னு ப்ளானைப் போட்டு காசிக்குப் போறோமே தனியா, கைக்குழந்தைகளையும் தூக்கீண்டு வசந்தியையாவது கூட மாட ஒத்தாசைக்கு அழைச்சுண்டு போலாமோ?
அதெல்லாம் சரிபட்டு வராதும்மா…மடி, விழுப்பு, ஆச்சாரம்…இதெல்லாம் இருக்குமே…காரியம் பண்றச்சே. அதான் அவளைக் கேட்கலை.
ஓ …..அது சரி…! அப்போ…நீ எத்தனை நாள் லீவு சொல்லிருக்கே….?
டென் டேஸ் லீவ்….போட்ருக்கேன். எல்லாம் சரியாப் போகும்…பார்த்துக்கலாம்..வா..
மணி பன்னிரெண்டைத் தாண்டியும் வேலைகள் நீண்டது , காலை நாலு மணிக்கு அலாரம் வைத்து விட்டுப் படுத்தாள் சித்ரா.
0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
விடியுமுன்னே அவர்கள் வீட்டு வாசலில் கால்டாக்ஸியின் ஹாரன் சத்தம் அந்தத் தெருவின் அமைதியைக் கிழித்தது. சிறிது நேரத்தில்
மீனம்பாக்கத்தில் அவர்களை இறக்கி விட்டுவிட்டு கணக்குக் காட்டியது.
அத்தனை இருளிலும் விமான நிலையம் வெளிச்சத்தில் மூழ்கிக் கிடந்தது.தள்ளு வண்டியைத் தள்ளியபடி கௌரி நடக்க அவள் நெஞ்சோடு கௌசிக் கங்காரூ பையில் ஒட்டியபடி முழித்துக் கொண்டு வர, சித்ரா கௌதமைத் இடுப்பில் தூக்கிக் கொண்டு மூச்சிரைக்க நடந்து வந்தாள் .
ஒரு வழியாக லக்கேஜை தள்ளிவிட்டு ,செக்யூரிட்டி செக்கிங் எல்லாம் கடந்து, வெய்டிங் ஹாலில் அமர்ந்து வரிசையில் நின்று பஸ்ஸில் ஏறி கடைசியாக ஃப்ளைட்டிலும் ஏறி அமர்ந்து பெல்டால் கட்டிக் கொண்டாயிற்று.
சித்ரா பயத்தில் ஏதோ ஸ்லோகம் சொல்லிக்கொண்டே தொழுது கொண்டிருந்தாள். கௌரி தான் ‘கொஞ்சம் சும்மா இரேன்மா…..ஸீன் போடாதே..’ என்று நெளிந்து கொண்டிருந்தாள்.
ஏர் ஹோஸ்டஸ் கொடுத்த தட்டுக்கள் காலியாகும் போதே டெல்லி வந்தாச்சு என்ற நிம்மதியும் வந்தது.
இவ்ளோ தானா…? என்ற சித்ரா…ரொம்பச் சீக்கிரமா கொண்டு வந்துட்டான்…நல்ல டிரைவர் என்றபடி படி இறங்கினாள் .
டெல்லி ஏர்போர்ட் உள்ளே ஏதோ அயல் நாட்டில் இருப்பது போன்ற உணர்வைத் தந்தது.
உள்ளயே பார்த்துக் கொண்டு .நடந்தார்கள்……லிப்டில் ஏறினார்கள்…..நடக்க நடக்க நீண்டது பாதை…ஒரு இடத்தில் ‘ஓடும் நடை பாதை’
வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.
அப்பாடி….ஒரு வழியா நடக்காமல் நின்னால் போதும்….அதுவே அங்கே கொண்டு விடறது….என்னைப் பிடிச்சுக்கோ கௌரி….என்று அதில் ஒரு காலை யோசித்து வைக்கவும், அது ஓடியது. சித்ரா விநோதமாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள் .
அடுத்த பகுதியில் ஒரு அயல் நாட்டு தம்பதிகள் ஓடும் பாதையிலும் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தார்கள்.
அதோ பாரேன்…அவாளை…என்றவள், நமக்குத் தான் நடக்கக் கூட மெஷின் வேண்டும்…சொல்லிக் கொண்டே சித்ரா நின்று கொண்டே நடந்தாள் .
“வாரணாசி ஜானே வாலே பாசெஞ்சர் கேலியே.”.. யாரோ ஒருத்தி மைக்கில் தேனினும் இனிய குரலில் குழைந்து கொண்டிருந்தாள்.
ஒண்ணுமே புரியலைடி கௌரி…..வாரணாசி மட்டும் புரிஞ்சுடுத்து…என்னவாக்கும் சொல்றா…? டெல்லில என்னால குப்பை கூட கொட்ட முடியாதுன்னு சொல்றாளா?
அதோ தண்ணீர் பாட்டில் கொட்டி வைச்சிருக்கா அந்த கண்ணாடிப் பொட்டிக்குள்ள ஒரு பாட்டில் எடுத்துத் தாயேன்…ஒரே தாகம்….நேக்கு தொண்டை காயறது..!
காசைப் போட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்த கௌரி, இங்கல்லாம் கூட ஃபாரின் மாதிரியே வந்தாச்சு…சொல்லிக் கொண்டிருந்தவள்,
அவசரமாக, சீக்கிரம் வா..ஃப்ளைட் வந்தாச்சு என்று அவசரப் படுத்தினாள் .
அதே நேரம், குஜராத்திக் காரன் போல வெள்ளை வெளேரென்று பைஜாமா ஜிப்பாவுடன், நிலவுக்கு மீசையும் ,தாடியும் முளைத்த மாதிரி, கண்களில் டன் சோகத்தைத் சுமந்து கொண்டு அது தெரியாத வண்ணம் கூலிங் கிளாஸ் சகிதம் சாக்குத் துணியால் செய்த ஜோல்னா பையோட கூடவே ஒரு பெட்டியை இழுத்துக் கொண்டே வந்தவன் இவர்களைப் பார்த்ததும் முகத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள் ஒளிர, அதே சமயம் ஏகப்பட்ட குழப்பம் மனதைச் சூழ்ந்து கொள்கிறது.
‘இவள்….இவள்…..அந்த கௌரியை நினைவு படுத்துகிறாளே….. கௌரி’….! கௌரி தானா? வாட் எ லவ்லி சர்ப்ரைஸ் …! தனக்குள் சொல்லிக் கொண்டான் பிரசாத். கேட்கலாமா….வேண்டாமா..? என்று குழம்பித் தவித்த போது ….
இந்தா… கௌரி கொஞ்சம் கௌதமை பிடிச்சுக்கோ, நான் இந்தப் புடவையை சரியாச் சொருகிக்கறேன்..கீழத் தழைஞ்சு புரள்றது ….எங்கயாவது கால் தடுக்கி விழுந்து வைக்கப் போறது…என்ற சித்ரா கௌரியின் கைகளுக்குள் குழந்தையைத் திணித்தாள் .
அப்போ…..சந்தேகமேயில்லை….
யாரிவன்……? என்னைப் பார்த்ததும் இவன் ..ஏன்…..???!!!!!
டிக்கெட்ஸ்….ப்ளீஸ்…..கேட் கீப்பர் குரல் கொடுக்கவும், தன்னை சுதாரித்துக் கொண்டு திரும்புகிறாள் கௌரி.
அவளது பின்னால் பிரசாத்….தொடருகிறான்.
(தொடரும்)
- ஜெயந்தன் விருது அழைப்பிதழ்
- டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 20
- ஆகஸ்டு-15. நாவல். குமரி.எஸ்.நீலகண்டன் – எளிமையும் இலட்சியமும்
- மருத்துவக் கட்டுரை இளம்பிள்ளை வாதம்
- குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..
- சேவை
- க.மோகனரங்கனின் அன்பின் ஐந்திணை –
- முக்கோணக் கிளிகள் [6] [நெடுங்கதை]
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34
- தாகூரின் கீதப் பாமாலை – 82 ஆத்மாவின் அமுதம் .. !
- ஆன்மீகக் கனவுகள்
- அப்பா ஒரு நாய் வளர்க்கிறார்
- சிவகாமியின் சபதம் – நாட்டிய நாடகம்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி – அத்தியாயம்-2 பகுதி-2 பிருந்தாவனம்
- பேசாமொழி 10வது இதழ் (செப்டம்பர்) வெளிவந்துவிட்டது..
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 28
- ஜாக்கி சான் 8. தற்காப்புக் கலை குங்பூவைப் பற்றி
- நீங்களும்- நானும்
- திண்ணையின் இலக்கியத் தடம் – 1
- விஸ்வநாதன், வேலை வேண்டாம்…..?
- அகநாழிகை – புத்தக உலகம்
- அருளிச்செயல்களில் மச்சாவதாரம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூமியின் சிக்கலான உட்கருவின் நூதனச் சுழற்சி இயக்கங்கள்
- கற்றல்
- கவிஞர் தமிழ் ஒளி 90 அழைப்பிதழ்
- புகழ் பெற்ற ஏழைகள் 25