அத்தியாயம்-26 துரியோதனனின் வீழ்ச்சியும், போர் முடிவும்.

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

 

கர்ணனின் மரணத்திற்குப் பிறகு துரியோதனன் சல்லியனை கௌரவர்களின் படைக்குத் தலைமை ஏற்கச் செய்கிறான்..

இதுவரை நடைபெற்ற யுத்த காலங்களில் போரில் யுத்தம் செய்யும்பொழுது எதிர்த்துப் போட்டியிட முடியாமல் போகும் தருணங்களில் யுதிஷ்டிரர் ஓடி ஒளிந்து கொள்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்பொழுது துணிகரமாக எதையாவது செய்து தன் பெயரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு ஆளாகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் சாதுர்யமாக சல்லியனின் தலைமையின் கீழ் இயங்கும் படையினை எதிர்க்கும்படிக் கட்டளையிடுகிறார். யுதிஷ்டிரர் இந்த முறை திறமையாகப் போரிட்டு சல்லியன் கதையை முடிக்கிறார்.

கிருபர், அசுவத்தாமன் என்ற இரு அந்தணர்களும் கெளரவர்களுடன் சேர்ந்து கொண்ட கிருதவர்மன் என்ற யாதவனையும் மற்றும் துரியோதனனையும் தவிர கௌரவர் அணியில் ஒருவரும் எஞ்சவில்லை. 18ம் நாள் யுத்தத்தில் துரியோதனன் கண்ணில் தென்படாமல் போகவே பாண்டவர்கள் அவனைத் தேடிச் செல்கின்றனர். அவன் துவைபாயனம் என்ற மடுவில் நீருக்கடியில் ஒளிந்து கொண்டிருக்கின்றான். பாண்டவர்களுக்கு அவனை யுத்தத்தில் வெற்றி கொள்ளாமல் இழந்த பூமியை மீட்பதில் விருப்பம் இல்லை. எப்பொழுதுமே தர்மத்தின் வழி நடக்கும் நல்ல மனம் படைத்த யுதிஷ்டிரர் இதைத் தனக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்கிறார். ஏற்கனவே இவருடைய இந்த நல்ல மனம் எதார்த்தமான முடிவுகளை எடுக்க விடாமல் செய்து பாண்டவர்களுக்குப் பலவித இன்னல்களை அளித்துள்ளது. இந்த நேரம் ஒரு சிந்தனை ஓட்டம் அவர் மனதில் எழுகிறது. அதன்படி யுதிஷ்டிரர் துரியோதனனுக்கு ஓர் அழைப்பு விடுக்கிறார். துரியோதனன் மடுவிலிருந்து வெளியில் வந்து பாண்டவர்களில் ஒருவனுடன் துவந்த யுத்தம் புரிய வேண்டும்; யுத்தத்தில் துரியோதனன் தான் விரும்பும் ஆயுதத்தைப் பயன் படுத்தலாம்., அந்த துவந்த யுத்தத்தில் வெற்றி பெற்றால் அவன் தான் இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் பெறலாம் என்பதுதான் அந்த அழைப்பின் சாராம்சம்.

துரியோதனன் தான் கதாயுதத்துடன் போர் புரிய விரும்புவதாக முழங்குகிறான். அந்த நாளைய சத்திரிய வழக்கப்படி துரியோதனன் பாண்டவர்களில் ஒருவனைத் தன்னுடன் போர் புரிய வருமாறு அழைக்கிறான். நல்ல வேளையாக பீமன் அவன் சவாலை ஏற்றுக் கொண்டு அவனுடன் துவந்த யுத்தம் புரிய முன் வருகிறான். துரியோதனன் யுதிஷ்டிரரின் அழைப்பிற்கு இணங்க தனக்குப் பிரியப் பட்ட ஒருவனைத் துரியோதனன் அழைத்திருந்தால் பாண்டவர்கள் கதை முடிந்திருக்கும். ஏன் எனில் பீமன் ஒருவன்தான் துரியோதனனுக்கு இணையாக கதாயுதப் போர் புரிய தகுதி பெற்றவன். கடுமையானக் கோபம் கொள்ளும் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனைத் தலையால் யோசிக்குமாறுக் கூறுகிறார். மேலும் அவர் யுதிஷ்டிரர் அவசரமாக எடுத்த தீர்மானத்திற்காக அவரைக் கடிந்து கொள்கிறார்.

இந்த இடத்தில் சடாரென்று ஒரு மாற்றம் நிகழ்ந்து மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் குணநலன்கள் முற்றிலும் வேறாக மாற்றி அமைக்கப் படுகிறது.

கடந்த பதினெட்டு நாள் யுத்தத்தில் பீமனும் துரியோதனனும் பலமுறை கதாயுத்தம் புரிந்திருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் பீமன் துரியோதனனைப் பின்னடையச் செய்துள்ளான். ஆனால் கடைசி நாள் யுத்தத்தில் துரியோதனன் புகழப்பட்டு இருவரில் அவனே கதாயுத யுத்தத்தில் சிறந்தவன் என்று போற்றப் படுகிறான். யுத்தத்தின் இறுதிப் பகுதியில் தோற்று விடுவோமோ என்று தளர்வுற்று பீமன் தோல்வி பயத்தின் விளிம்பில் நிற்கிறான். தனது யூகத்தின் அடிப்படையில் துரியோதனை பீமனுக்கு இணையாக அல்லது பீமனை விட வல்லமை படைத்தவனாக சித்தரிக்கப் படும்பொழுது ஓர் உத்வேகத்தில் பீமன் துரியோதனன் பொருட்டு தான் செய்த சபதத்தை நிறைவேற்ற முனைவான் என்பதனால் கூட இவ்வாறு திரியோதனன் புகழப் பட்டிருக்கலாம்.

பாண்டவர்கள் பொய்மைச் சூதில் தோற்கடிக்கப்பட்டு ராஜ்ஜியத்தை இழந்த பின்பு, சபைக்கு இழுத்துவரப்பட்ட திரௌபதியை அவமானப் படுத்தும் விதமாக அனைவர் எதிரிலும் அவளைத் தனது தொடையில் அமரச் சொல்லி துரியோதனன் எக்களிக்க, ஆத்திரம் அடைந்த பீமன் எந்தத் தொடையில் அமருமாறு திரௌபதியை துரியோதனன் ஏவினானோ அந்தத் தொடையை சந்தர்ப்பம் நேரும்பொழுது பிளப்பதாக சபதம் செய்திருந்தான். இப்பொழுது அப்படி ஒரு சந்தர்ப்பம் நேரில் வந்து நிற்கிறது. இரண்டு பராக்கிரமசாலிகளும் மோதுவதற்குத் தயாராக தங்கள் கதாயுதங்களை ஓங்கியபடி எதிரெதிர் நிற்கின்றனர். பீமன் நிச்சயமாக துரியோதனின் தொடையைப் பிளப்பதற்கு முயற்சிப்பான். ஆனால் துவந்த யுத்த விதிகளின் படி எதிரியுடன் பொருதுபவன்  எதிரியின் இடுப்பிற்குக் கீழே உள்ள பாகங்கள் எதையும் தாக்கக் கூடாது என்பது முக்கியமான விதியாகும். எனவே காவியத்தை இயற்றியவருக்கு பீமனை விதி மீறச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அந்தக் காட்சி இவ்வாறு விவரிக்கப் படுகிறது.

——பிறகு கௌரவ சிரேஷ்டர்கள் இருவருக்கும் இடையில் பலம் பெற்று வளர்ந்த யுத்தத்தைப் பார்த்து அர்ஜுனன் வாசுதேவரை நோக்கி, “ இந்த இரண்டு வீரர்களில் எவன் சிறந்தவன் என்று உன்னால் எண்ணப்படுகின்றான்? “

ஸ்ரீகிருஷ்ணர் “ முயற்சி இருவருக்குமே சமமானது. ஆனால் பலத்தினால் பீமன் பெரியவன். இந்த துரியோதனன் விருகோதரனைக் காட்டிலும் சமர்த்தன்; முயற்ச்சியுள்ளவன். பீமசேனன் தர்மயுத்தம் செய்வான் என்றால் கண்டிப்பாக வெற்றியடைய மாட்டான். அதர்மமாக யுத்தம் செய்தால் வெற்றி பெறுவான்.” என்கிறார்.——–

இவற்றையெல்லாம் கேட்ட வண்ணம் இருக்கும் அர்ஜுனன் பீமன் பார்க்கும்பொழுது தனது இடது தொடையினைத் தட்டி சமிஞ்ஞை புரிகிறான். பீமனுக்கு உடனே தனது சபதம் நினைவில் எழ மிகவும் உத்வேகம் பெற்று தன் கதாயுதத்தினால் துரியோதனின் இடது தொடையைப் பிளந்து தனது சபதத்தை நிறைவேற்றுகின்றான்.

மகாபாரதத்தின் இந்தப் பகுதியைப் புனைந்த கவி பீமனின் சபதம் நிறைவேறும் வண்ணம் காவியத்தின் மையக் கருத்தையே சற்று மாற்றி விடுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது சில முக்கிய பாத்திரங்களின் அடிப்படை குணா நலன்களின் நம்பகத் தன்மையைக் குலைத்து விடுகிறார். பீமன் அப்படி ஒரு சபதத்தை அவ்வளவு எளிதில் மறந்திருப்பான் என்பதை நம்ப முடியவில்லை. பொய் எதுவும் சொல்லாமல் சத்தியத்தையும், தர்மத்தையும் கடை பிடித்து வாழும் அர்ஜுனன், ஒரு கட்டத்தில் துரோணரின் மகன் அசுவத்தாமன் இறந்துவிட்டான் என்ற பொய்யான தகவலைக் கூற மறுக்கும் அர்ஜுனன் தடம் மாறினான் என்பதையும் ஏற்க முடியவில்லை.அதிலும் இந்த கவிஞர் இப்படி ஒரு கயமையைப் புரிய ஸ்ரீகிருஷ்ணர் சூத்திரதாரியாக விளங்கினார் என்பது சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம். இது மட்டுமன்று. இறந்து கொண்டிருக்கும் துரியோதனனை தூற்றுவதாக வேறு கூறுகிறார். இதுவரையில் அமைதியுடனும், அடக்கத்துடனும் காட்டப் பட்ட ஸ்ரீகிருஷ்ணர் தனது குணத்திற்கு நேர்மாறாக சித்தரிக்கப் படுகிறார்.

தன் தொடைகள் இரண்டும் சிதைக்கப்பட்டு மரணத் தருவாயில் துரியோதனன் தனது எதிரிகளானப் பாண்டவர்களைப் பார்த்து, “ போரினில் வீர மரணம் அடைவதன் மூலம் நான் ஒரு உண்மையான சத்திரியன் என்று போற்றப் படவுள்ளேன். என் சகோதரர்களும், உறவினர்களும், நண்பர்களும் சென்றடைந்த வீர சுவர்கத்திற்கு நானும் செல்லப் போகிறேன். நீங்கள் நிந்திக்கப்படும் எண்ணங்களுடன் துன்பம் கொண்டு வாழப்  போகிறீர்கள் “ என்கிறான்.

இவ்வாறு சாகும் தருவாயில் உள்ள ஒருவன் துக்கப் பட்டு பேசுவதில் வியப்பொன்றும் இல்லை. அளவில்லாத செருக்கினை உடைய துரியோதனன் போன்ற எந்த மன்னனும் இவ்வாறுதான் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். ஆனால் இதில் ஆச்சரியப் பட வைக்கும் சங்கதி என்னவென்றால் அவனது சாவிற்குப் பின்னர் விவரிக்கப் படும் நிகழ்ச்சிகள்தாம். இந்த இடத்தில் கவிஞர் துரியோதனின் மரணத்திற்குப் பின் நிகழ்பவற்றை இவ்வாறு விவரிக்கிறார். “ புத்திசாலியான குருராஜனின் இந்த வாக்கியத்தின் முடிவில் புண்ணிய நறுமணம் கமழும் மலர்களின் மாரி பொழிந்தது.கந்தவர்கள் இனிமையான நான்கு வித இசைக் கருவிகள் மூலம்  இசைத்தனர். அப்சரசுகள் துரியோதனனின் கீர்த்திமையை கானங்களாகப் பாடினார்கள். சித்தர்கள் நல்லது நல்லது என்ற வாழ்த்துக்களை முழங்கினர். எல்லா திசைகளும் மிளிர்ந்தன. ஆகாயம் தூய்மையுடன் விளங்கியது. பாண்டவர்கள் ஸ்ரீகிருஷ்ணருடன் சேர்ந்து தங்கள் செயலுக்காக வெட்கித் தலை குனிந்தனர். “

இதுவரையில் பல வித குற்றங்களைப் புரிந்து முற்றிலும் ஒரு அயோக்கியனாகவே சித்தரிக்கப் பட்ட துரியோதனன் இந்த இடத்தில் அளவுக்கதிகமாகப் போற்றப் படுவது ஏற்புடையாதாக இல்லை. அதேபோல் நேர்மைக்கும், சத்தியத்திற்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்ட பாண்டவ வீரர்கள் தங்கள் கொள்கைகளைத் துறந்து தங்கள் செயலுக்கு வெட்கித் தலை குனிந்தனர் என்பதும் ஏற்புடையதன்று. இந்த முரண் ஆச்சரியமூட்டும் வண்ணம் உள்ளது. இந்த முரண் மகாபாரதத்தின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்ப்பதாக உள்ளது. ஏன் எனில் மகாபாரதமே கெட்ட நடவடிக்கை உள்ள துரியோதனனை நேர்மை, சத்தியம் வழி நடக்கும் பாண்டவர்கள் ஸ்ரீகிருஷ்ணனின் துணையுடன் போரிட்டு வெற்றி கொண்டதைக் கூறும் காவியமாகும்.

துரியோதனனின் மரணம் குறித்து எழுதப் பட்டுள்ள இந்தப் பகுதியானது அடிப்படை விவாதத்திற்குக் கூட தேர்வு செய்யப் படுவதற்கானத் தகுதி உடையதாகத் தோன்றவில்லை. எனது நோக்கம்  வடமொழி நூல்களில் எவ்வளவு ஆச்சரியமான சங்கதிகள் அடங்கி உள்ளன என்பதைப் படம் பிடித்துக் காட்டுவதற்குத்தான். இருப்பினும் இந்த பாரத மண்ணில் துரதிர்ஷ்டவசமாக மக்கள் வடமொழி நூல்களில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் ஞானிகளின் கருத்து என்று கண்மூடித்தனமாக நம்பி வருகின்றனர்.

மகாபாரதத்தின் இந்தப் பகுதி முற்றிலும் மூலப் படிவத்தைச் சேர்ந்தது என்ற இறுதியான தீர்மானத்திற்கு வரலாம். இந்த வகைக் கவிஞன் நான் ஏற்கனவே குறிப்பிட்ட இரண்டு ரக கவிஞ்ரகளிலும் சேராத மூன்றாம் ரகக் கவிஞன். இவன் முதல் இரண்டு ரகக் கவிஞர்களின் அருகில் வருவதற்குக் கூட தகுதியற்றவன். ஏன் என்றால் ஏற்கனவே நான் குறிப்பிட்ட இரண்டாம் ரகக் கவிஞன் ஸ்ரீகிருஷ்ணரின் தீவிர பக்தன் என்று என்னால் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணர் சிறுமைப் படுத்தப் படுகிறார். மேலும் மேலும் அவமானப் படுத்தப் படுகிறார். எனவேதான் இந்தப் பகுதி ஒரு மூன்றாவது ரகக் கவிஞனால் இயற்றப் பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறேன். சைவர்களும், வைணவ எதிர்ப்பாளர்களும் காலம் தோறும் தங்கள் கருத்துக்குகந்த சங்கதிகளை அவ்வப்பொழுது இடைசெருகி வந்திருக்கின்றனர். இந்தப் பகுதி அப்படிப்பட்ட ஒருவரின் கைவண்ணமாகக் கூட இருக்கலாம். எனினும் என்னால் அப்படி ஒரு தீர்மானத்திற்கு உறுதியாக வர முடியவில்லை. புலவர்கள் தங்கள் பாட்டுடைத் தலைவனை இகழ்வது போல் புகழ்வதை ஒரு வழமையாகக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம். அப்படிப்பட்ட ஓர் இடக்கரடக்கலுக்கு இந்த இடம் ஓர் உதாரணமாகக் கூட இருக்கலாம். எனவேதான் துரியோதனன் இறப்பதற்கு முன்னால் அசுவத்தாமனிடம் இரகசியமாகக் கூறினான். “ நான் வாசுதேவரின் மகிமையை அறிவேன். அவர் என்னை என்றும் தீய வழியில் நடத்தியதில்லை. “

பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு கவிஞர்களால் மாறுதலுக்கு உட்படுத்தப் பட்ட மகாபாரதக் காவியத்தில் ஒரு நேர்மையான விமர்சன ஆய்வை மேற்கொல்வதுக் கடினமான செயலாகவே உள்ளது.

தான் இறப்பதற்கு முன்பு அசுவத்தாமனைப் படைத் தளபதியாக நியமனம் செய்து விட்டு துரியோதனன் இறக்கிறான். அப்பொழுது கௌரவர் சபையில் எஞ்சி இருப்பவர் கிருபரும், அசுவத்தாமனும் கிருதவர்மனும் மட்டுமே.

காந்தாரி செய்த புண்ணியத்தின் பலன் அவளுக்கு சில விசேஷ சக்திகளை அளித்திருக்கிறது. அவள் மனது வைத்தால் தன் புதல்வர்களைக் கொன்ற பாண்டவர்களை ஒரு நொடியில் சாம்பலாக்கி விடும் வல்லமைப் படைத்தவள். இது யுதிஷ்டிரருக்கு நன்கு தெரியும். எனவேதான் யுதிஷ்டிரர் முதலில் ஸ்ரீகிருஷ்ணரை அவர்களது மாளிகைக்கு அனுப்பி காந்தாரியை சமாதானம் செய்யச் சொல்கிறார். யுதிஷ்டிரனின் இந்த வேண்டுகோளை விவரிக்கும் இந்தப் பகுதி மகாபாரத்தத்தின் மூலப் படிவம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷ்ணரை ஒரு கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று , “ நீ ஒருவன்தான் நித்திய வியாபி. மாறாதவன். நீயே அனைத்து ஜீவராசிகளின் மூலக் கூறாக இருக்கிறாய்” என்றெல்லாம் புகழ் பாடுகிறான்.

குருக்ஷேத்திர யுத்தம் பதினெட்டாம் நாள் இரவில் ஒரு குரூரத் தாக்குதலுடன் முடிவுக்கு வருகிறது. அந்த பதினெட்டாம் நாள் இரவில் அசுவத்தாமன் பாண்டவர் கூடாரத்தில் காவலை மீறி நுழைந்து அங்கு உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவ வீர்கள், பாண்டவப் படையின் தளபதிகள், பாஞ்சாலியின் ஐந்து புதல்வர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்கள் முதலியோரை வெட்டிக் கொன்று விடுகிறான். இவர்களுள் திருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகியோரும் அடங்குவர்.

யுத்தம் முடிந்ததும் மடிந்த யுத்த வீரர்களின் கைம்பெண் மனைவியர்களின் துக்க ஓலம் பெரிதாகக் கிளம்பத் தொடங்குகிறது. அப்படி ஒரு அவல ஓலம் இதுவரையில் எவரும் கேட்டிருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு பெரும் ஓலமாக அது இருந்தது. இந்த யுத்தத்தின் நிறைவுப் பகுதியில் இரண்டு விஷயங்கள் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி சொல்லப் படுகின்றன.

ஆயிரம் கோடி யானைகளின் பலம் உடையவனான திருதராட்டினன் பீமனை நெஞ்சாரத் தழுவுவது போல் தழுவி அவனைத் தன்னுடைய பலமானப் பிடியினால் இறுக்கிக் கொன்றுவிட திட்டமிடுகிறான். இதனைத் தனது முன்யோசனையினால் அறியப் பெற்ற ஸ்ரீகிருஷ்ணர் பீமனைப் போலவே ஒரு இரும்புப் பிரதிமையை செய்து திருதராட்டினன் முன்பு வைக்கிறார். அதனை பீமன் என்று தவறுதலாக அடையாளம்  கொண்டு திருதராட்டினன் இறுக்கித் தழுவ அந்த இரும்பு பொம்மை சுக்கல் சுக்கலாக உடைந்து போகிறது. இந்த நிகழ்ச்சியை வெறும் கட்டுக் கதை, சுவை சேர்ப்பதற்காகப் புனையப்பட்ட நம்பகத தன்மை இல்லாக் கற்பனை என்றுதான் கொள்ள வேண்டும்.

காந்தாரி தனது புதல்வர்களை இழந்த சோக மிகுதியில் கௌரவர்களின் அழிவுக்கு ஸ்ரீகிருஷ்ணர்தான் காரணம் என்று குற்றம் சாற்றுகிறாள். “ மதுசூதனா! இன்று முதல் சரியாக முப்பத்தாறு ஆண்டுகள் ஆன பின்பு நீயும் , உனது யாதவ குலமும் , உனது மந்திரிப் பிரதானிகளும், உன் புதல்வர்களும் கொல்லப் படுவீர்கள். நீ ஒரு அநாதையைப் போல நாசமடையப் போகிறாய். இது நான் இத்தனை நாள் நான் மேற்கொண்ட தவத்தினால் உனக்கு அளிக்கும் சாபம். “ என்று ஆவேசமாகக் கூறுகிறாள்.

இதைக் கேட்டதும் ஸ்ரீகிருஷ்ணர் சிறிதும் கோபப்படாமல்  புன்னகையுடன் , “ சத்திரியப் பெண்ணே! நானும் இது இவ்வாறுதான் முடியும் என்று அறிந்தவன். விருஷ்ணி குலம் தெய்வத்தினால் நாசம் அடையப் போகிறது. இதில் சந்தேகம் இல்லை. என்னைத் தவிர வேறு ஒருவன் யாதவக் கூட்டத்தை அழிக்க முடியாது.அவர்கள் மற்ற மனிதர்களாலோ, தேவர்களாலோ, தானவர்களாலோ, கொல்லப் படத்தகாதவர்கள். யாதவர்கள் அவரவர் செய்த நாசத்தினால் அழியப் போகிறார்கள் “ என்கிறார்.

எது எப்படியோ மகாபாரதத்தை இயற்றிய இரண்டாம் ரகக் கவிஞன் ஸ்ரீகிருஷ்ணர் மூலம் யாதவக் குல அழிவிற்கு அடித்தளம் அமைத்து விடுகிறான்.

(சத்தியப் பிரியனின் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு சோக நிகழ்வு காரணமாக அடுத்த ஓரிரு வாரங்களுக்கு இத்தொடர் தடைப்படும். – ஆசிரியர் குழு)

Series Navigationஇருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]எறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’பங்காளிகளின் குலதெய்வ வழிபாடு
author

சத்தியப்பிரியன்

Similar Posts

Comments

  1. Avatar
    ஷாலி says:

    //இருப்பினும் இந்த பாரத மண்ணில் துரதிர்ஷ்டவசமாக மக்கள் வடமொழி நூல்களில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் ஞானிகளின் கருத்து என்று கண்மூடித்தனமாக நம்பி வருகின்றனர்.//

    //ஆனால் இந்தப் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணர் சிறுமைப் படுத்தப் படுகிறார். மேலும் மேலும் அவமானப் படுத்தப் படுகிறார். எனவேதான் இந்தப் பகுதி ஒரு மூன்றாவது ரகக் கவிஞனால் இயற்றப் பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறேன். சைவர்களும், வைணவ எதிர்ப்பாளர்களும் காலம் தோறும் தங்கள் கருத்துக்குகந்த சங்கதிகளை அவ்வப்பொழுது இடைசெருகி வந்திருக்கின்றனர். இந்தப் பகுதி அப்படிப்பட்ட ஒருவரின் கைவண்ணமாகக் கூட இருக்கலாம்.//

    பல்வேறு கால கட்டங்களில் பல மனிதர்களின் கைகளினால் சேர்க்கப்பட்டும் செருகப்பட்டும்,உறுவப்பட்டும் மூலம் முற்றிலும் சிதைந்த ராமயாணமும்,மகாபாரதமும் கடவுளின் காவியமாக காட்டியே இன்றும் அரசியல் நடத்தப்படுகிறது.இந்த 21 ம் நூற்றாண்டில் கூட அறிவியல் சிந்தனையை தூக்கி எறிந்து, இல்லாத ராமன் பாலத்தை இருக்கும் நம்பிக்கையால் மீண்டும் கட்டியெழுப்பும் அவலம் இந்தியாவில் மட்டுமே நடக்கும்.இந்திய அறிவு ஜீவிகள் அணுகுண்டு செய்யவும். சந்திரனுக்கும்,செவ்வாய்க்கும் செயற்கை கோள் அனுப்பவும் மூளையை பயன்படுத்துவார்கள். ஆனால் ராமர் கோவில்,ராமர் பாலத்திற்கு மட்டும் மூளையை, நம்பிக்கையில் துவைத்து ஒரு மூலையில் காயப்போட்டு விடுவார்கள்.

    “உண்மையைத் தேடுங்கள் அது உங்களுக்கு விடுதலை கொடுக்கும்” என்கிறது பைபிள்.
    “கல்வியைத்தேடி வீட்டை விட்டு செல்பவன் இறைவனது பாதையில் நடக்கிறான்.” என்கிறது இஸ்லாம்.
    அறிமீன்! விழிமீண்! தெளிமின்! என்றார் விவேகானந்தர்.கடவுள் மனிதனுக்கு மட்டும் கொடுத்த பகுத்தறிவுச் சிந்தனையை தடை செய்து குருட்டு நம்பிக்கையை வளர்ப்பதுதான் தெய்வ பக்தியா? இம்மாபெரும் பிரபஞ்சத்தை,சூரிய, சந்திர, கோள்களை படைத்து ஒரு சீராக,அறிவுப்பூர்வமாக நிர்வகித்துவரும் அந்த மாபெரும் இறைவனை அறிந்து கொள்ள குருட்டு நம்பிக்கை பயன்தருமா?

    “சிந்தனை செய் மனமே! தினமே.. தீவினை அகன்றிடுமே!……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *