நீர் வழிப்பாதை

This entry is part 18 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

(போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி 2014 முதல் பரிசு கதை)

இன்று தீர்ப்பளிக்க வேண்டிய தினம். எந்த வழக்கும் இந்த அளவுக்கு மனதை நெருடியதில்லை. எனக்கு கிடைக்கப் பெற்ற இந்த பதவிக்கு சாதி.. மதம்.. இனம்.. மொழி.. மாநிலம்.. என்ற எந்த பாகுபடுதலுமின்றி தார்மீக நியாயங்களின் அடிப்படையில் நியாயம் செய்திருக்கிறேன் என்ற பெருமிதம் எப்போதும் எனக்கு உண்டு. அதை எந்நாளும் தொடர செய்ய வேண்டும் என்பதில் ஏற்பட்ட பதட்டம் தான் இந்த நெருடலோ என எண்ணிக் கொண்டேன்.
வெகு சாதாரணமான வழக்கு தான். பத்தோடு பதினொன்றாக அடுக்கப்பட வேண்டிய ஒன்று தான். ஆனாலும் அந்த பெண் பேச தொடங்கிய பிறகு அது அசாதாரணமாக தோன்றி விட்டது. அவள் முப்பது வயதிற்குட்பட்டவளாக இருந்தாள். வெகு எளிமையான தோற்றம். புலன்களின் உபயோகத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டிருப்பவளாக தோன்றினாள். அவளுக்கு ஆதரவாக அவள் பக்கம் யாருமில்லை. அதை உணர்ந்தவள் போலவும் தெரியவில்லை. வழக்கறிஞர் வைத்து வாதாடும் வசதியற்றவள். அரசாங்க உதவியை நாட வேண்டிய அவசியமிருந்தது.
எதிர் தரப்பு வாதம் அவளுக்கு எதிராக பலமாக வைக்கப்பட்டிருந்தது. வாத பிரதிவாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதென்றால் நிச்சயம் அவளுக்கு எதிராக தான் அளிக்க முடியும். ‘பட்டப்பகலில் ஒரு தாய் தனது ஐந்து வயது மகனை கழியால்; அடித்துக் கொன்றிருக்கிறாள்.. இதற்கு அவளது கிராமம்.. உற்றார்.. உறவினர்.. அனைவருமே சாட்சி.. இம்மாதிரியான வன்முறை சுபாவம் வளர்த்து விடப்பட்டால் சமுதாயமே சீரழிந்து போகும்..’ என்பதாக எதிர் தரப்பு வாதம் எடுத்து வைக்கப்பட்டது. ‘நல்லதொரு சமுதாயத்தை வளர்த்தெடுக்க இம்மாதிரியான களையெடுப்புகள் அவசியம் எனவும் இக்குற்றத்திற்கு வழங்கும் அதிகபட்சமான தண்டனை பிறருக்கு பாடமாக அமையும் எனவும் பேசி ஓய்ந்தார் எதிர்தரப்பு வழக்கறிஞர்.
இதற்கு முந்தைய வழக்கில் தீர்ப்பு சொல்லும் போது நல்லதொரு சமுதாயம் என்பதை நோக்கி நானும் சில கருத்துக்களை சொல்லியிருந்தேன். மனிதனுக்கு ‘நிறைவு’ என்ற உணர்வு மனதளவில் உணரப்படும் வரை தேவைகள் எழும்பிக் கொண்டேயிருக்கும். காலங்கள் புனரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்படும் போது அதற்கேற்ப வாசல்களும் விரிவடைகின்றன. இச்சைகளுக்கும் பெறுதல்களுக்குமான இடைவெளியை ‘உலக மயமாக்கல்’ என்ற கருத்தாக்கம் அதிகப்படுத்தி தனது சந்தையை அதனுள் தந்திரமாக விரிக்கிறது. நிலம்.. நீர்.. காற்று.. உணவு.. என்ற அடிப்படை தேவைகள் வணிகமயத்திற்குள் கொண்டு வரப்படுவதை நடுத்தர மக்களும் உயர் வகுப்பினரும் உணர்ந்தோ உணராமலோ எந்த அதிர்வுகளுமின்றி அதற்குள் பயணிக்க தளைப்படுகிறார்கள். பொருளாதார கீழ்நிலை வர்க்கத்தினரோ மேலும் மேலும்; கீழே பயணிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்களை பொறுத்தளவில் வாழ்வாதாரங்களே எட்டாக்கனிகளாகின்றன. ஆக, ஒட்டு மொத்த சமுதாயத்திலும் நிறைவு என்ற வார்த்தையே பொதுத் தேடலாகி போவது தான் குற்றங்களுக்கான பின்னணிகளாக அமைந்து விடுகின்றன என்ற என் ஆதங்கத்தை கொட்டியிருந்தேன்.
கீழ்த்தட்ட மக்களின் பிரதிநிதியாக குற்றவாளி கூண்டில் நின்றுக் கொண்டிருந்தாள் அந்த பெண். அவளுக்கு ஆதரவாக பேச வேண்டிய அரசு வழக்கறிஞர் அதிகமாக குரலெழுப்பவில்லை. அதற்காக அவள் வருத்தப்படுவதாகவும் தெரியவில்லை. வழக்கம் போல தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கும் ஆதரவான வாதத்துக்கும் எதிர்வினையாற்றாமல் அமைதியாக நின்றிருந்தாள். மற்றவர் பார்வைக்கு அழுத்தமானவளாக தெரிவது குறித்த பிரக்ஞை ஏதும் அவளிடம் இல்லை.
கோர்ட் அமைதி காத்தது. “நீ எதும் சொல்ல விரும்புறீயாம்மா..?” என்றேன். என் கனிவில் என் பதவியும் கலந்திருந்தது. சட்டென நிமிர்ந்தாள். அவளின் சலனமற்ற கண்கள் ஏனோ பனித்தது போலிருந்தது. பிறகு ‘ஒண்ணுமில்லைங்கய்யா..’ என்று வெறுமையாக தலையசைத்தாள். ஏதோ ஒரு உணர்வின் கலவையை விழுங்கியது போல தொண்டையை செருமிக் கொண்டாள். ஒரு பெண் போலீஸ் அவளுக்கு தண்ணீர் அளித்தார்.
“சொல்லும்மா.. பயப்படாம பேசு.. இனிமே தீர்ப்பு தான் சொல்லணும்.. உன் தரப்புல எதும் சொல்லணும்னா சொல்லலாம்..” உலக நிலையிலிருந்து தன்னை வெட்டிக் கொண்டு விட்டது போலிருந்த உடலை சற்றே தளர்த்திக் கொண்டாள். என்னை நேருக்கு நேராக பார்த்தாள். பிறகு சொல்ல தொடங்கினாள்.
அவள் பெயர் தனலெட்சுமி. ஒரு காணி விவசாய நிலமும் சிறியதொரு கூரை வீட்டுக்கும் சொந்தக்காரனான மாரியப்பனின் மனைவி. மாமியார்.. மாமனார் இருவருமே பாடுபடும் வயதை கடந்திருந்தாலும் மருமகளை தன் பிடிக்குள் வைத்துக் கொள்ள தவறவில்லை. மாமியாரின் தங்கை ஒருவரும் பராமரிக்க ஆளின்றி அந்த குடும்பத்தில் சேர்ந்திருந்தாள். திகட்ட திகட்ட கிடைக்கும் கணவனின் அன்பு மாமியார்களின் பேச்சை சட்டை பண்ண விடுவதில்லை.
பாடுபடும் விவசாய நிலம் படிப்படியாக நீரின்றி வறண்டு போக தனலெட்சுமியின் தாய் வீட்டில் தட்சணையாகவும் கடனாகவும் பெற்று வயலில் போர்வெல் தோண்டினர். அதிலிருந்து வெளியே சிதறிய பாறைத்துகள்கள் நீர் முகம் பார்க்காதவைகளாக இருந்தன. ஐந்து வயிறுகளை நிரப்பியாக வேண்டிய கட்டாயம்.  வேறு வழியின்றி விவசாய கூலியாகி போயினர் தனலட்சுமியும் மாரியப்பனும். உழைப்பும் ஊதியமும் பொருந்தி வராத சூழ்நிலையோடு தனலெட்சுமி சூல் தரிக்காத நிலையும் சேர்ந்துக் கொண்டது.
உண்ணுவதற்கு வாய் திறக்கும் நேரத்தில் தனலெட்சுமியின் மலட்டுத் தனத்தை சுட்டிக் காட்டவும் நேரம் ஒதுக்கினார்கள் வீட்டு பெரியவர்கள். ‘எந்தம்பி மவள கட்டுனாலும் வம்சம் வெளங்கியிருக்கும்.. வெள்ள தோலுக்கு ஆசப்பட்டுட்டுட்டான் பாவின்னு இந்த மலட்டு சனியன கட்டுனதுக்கு நல்லா தான் அனுவிக்கிறோம்..’ மாமியாரின் பேச்சு தனலெட்சுமியை தாய் வீட்டிற்கு அனுப்பியது. எந்நேரமும் காலை சுற்றிக் கொண்டிருந்த மனைவி நகர்ந்து போனதாலோ பாவப்பட்ட வாழ்க்கையில் மிஞ்சும் உடல் சுகமும் கனவாகி போனதாலோ மாரியப்பன் குடிக்கு அடிமையானான். கணவனின் புதுப்பழக்கம் கலவரத்தை தர தரிக்காத கருவிற்கு தண்டனை தொகை பெற்றுக் கொண்டு கணவன் வீடு வந்து சேர்ந்தாள் தனலட்சுமி. செய்த பிரார்த்தனைகளோ அல்லது தனலெட்சுமியின் நிலைமைக்கு இரங்கியோ இரண்டொரு வருடங்களில் மகன் சேதுபதி வயிற்றில் தரித்தான். குழந்தை தரித்ததை கூட குடித்தே கொண்டாட பழகியிருந்தான் மாரியப்பன்.
நீர் வரத்துக் குறைந்துக் கொண்டே போனதில் விவசாயம் முற்றிலுமாக ஒடுங்கியிருந்தது அந்த பகுதிகளில். நீரற்று கிடந்த ஊருணியை வேலிக்கருவை ஆக்கிரமித்து, எஞ்சியிருந்த நிலத்தடி நீரையும் வேர்களை அனுப்பி உறிஞ்சிக் கொண்டது. மூச்சடக்க போகும் உயிரை சுற்றி திரியும் கழுகு போல தனியார் கம்பெனியொன்று உள்ளே நுழைய, நிலத்தை வந்த விலைக்கு விற்று விட்டு அருகாமை டவுனுக்கு பிழைக்க போயினர் சிலர். வருவது வரட்டுமென தங்கி விட்ட சிலரில் தனலெட்சுமியின் குடும்பமும் ஒன்று. தனலெட்சுமி ஆண் மகவாக பெற்றதில் வம்சம் விருத்தியடைந்த சந்தோஷம் குடும்ப பெருசுகளுக்கு. ஆண் மகவை பெற்று விட்டதில் குடும்ப பெருசுகளை மிஞ்சி விட்ட சந்தோஷம் தனலட்சுமிக்கு.
மாரியப்பன் பக்கத்து டவுனிலிருக்கும் ஒரு ஜெராக்ஸ் கடைக்கு வேலைக்கு போக துவங்கியிருந்தான். இரவு ஒன்பது மணி வரைக்கும் வேலையிருக்கும். மீள வீடு திரும்பும் போது போதையையும் சேர்த்தே அழைத்து வருவான். குடிப்பதற்கு வருமானம் போதாத நிலையில் வட்டிக்கு கடன் வாங்கி அதை போதையில் மறந்து போனான். நிலைமையை சமாளிக்க தனலெட்சுமி உணவகம் ஒன்றில் பாத்திரம் துலக்கும் வேலைக்கு செல்ல துவங்கினாள். ஆறு மணிக்கு உணவகத்தில் இருந்தாக வேண்டும். இரவு ஏழு மணி வரை நீடிக்கும் அவளின் பணி நேரம். குடிக்க.. குளிக்க.. சமைக்க.. துவைக்கவென  எல்லா தேவைகளுக்கும் தண்ணீர் வெளியிலிருந்து எடுத்து வர வேண்டிய தேவை ஏற்பட்டதும் அப்போது தான். இவர்களுக்கு ஊறாத நீர் அருகாமை பகுதிகளில் பெரிய பெரிய மிஷின்களை வைத்து உறிஞ்சி எடுக்கும் தண்ணீர் லாரிகளுக்கு மட்டும் ஊறியது.
அதிகாலை மூன்று மணிக்கு எழுந்துக் கொண்டால் தான் காற்றும் நீருமாக வரும் குழாயிலிருந்து ஓரளவாவது தண்ணீரை பிடித்துக் கொள்ள முடியும். போதையில் கைகால்கள் வேறு வேறாக கிடப்பான் மாரியப்பன். சேலை தூளியில் தூங்கும் மகனை பார்த்துக் கொள்ளுமாறு உறங்கும் மாமியாரை எழுப்பி சொல்லி விட்டு செல்வாள் தனலெட்சுமி. கருக்கல் விலக தொடங்கும் போது விறுவிறுவென மற்ற பெண்கள் பைப்பை நோக்கி காலி குடங்களோடு விரைவார்கள். அதற்குள் இரண்டு மூன்று குடங்களை நிரப்பியிருப்பாள் தனலெட்சுமி.
நீரடித்து ஓய்ந்து போன கைகளால் விறகடுப்பை பற்ற வைத்து சோறாக்கி விட்டு நிமிர்கையில் மகன் தாய்ப்பாலுக்கு அழுவான். இல்லாத பாலை உறிஞ்சி இழுக்கும் மகனுக்கு முலைக்காம்பின் உதிரம் வழியே உயிரையும் கடத்தி விடுவாள். மகனை அள்ளி சேர்த்து அணைத்துக் கொள்ளும் போது கருக்கல் விலகி பொழுது பொலபொலத்து நிற்கும். மகனை மாமியார் பொறுப்பில்; ஒப்படைத்து விட்டு ஓடுவாள். ஓட்டமும் நடையுமாக சென்றாலும் அரை மணி நேரமாகி விடும் சென்று சேர்வதற்கு.
சேதுபதிக்கு வயது மூன்று ஓடி போனது. தண்ணீர் சேகரிப்பு என்பதே பெரிய வேலையாகி போனதால் அந்த உணவக வேலையை அவளால் தொடர முடியவில்லை. வேறு ஒரு உணவகத்தில் மதிய ஷிப்ட் வேலையில் சேர்ந்தாள். எழுநூறு ரூபாய் வருமானம்.  உடல் அசந்து போகும். ஆனால் அங்கு மீந்து போகும் பழைய உணவு இப்படியும் அப்படியுமாக குடும்பத்தாரின் அரை வயிற்றையாவது நிரப்பி விடுகிறது. தேரை குஞ்சு போல இருக்கும் மகனை அவ்வப்போது வேலை பார்க்குமிடத்திற்கு அழைத்துச் செல்வாள். தாயின் முந்தானைக்கு பின்னாலிருந்து உணவுப் பொருளை ஆர்வமாக பார்க்கும் மகனின் ஆசையை யாரும் அறியாது ஒரு நாள் பூர்த்தி செய்திருந்தாள். நல்லவேளை.. தனலெட்சுமியை வேலையை விட்டு தூக்கவில்லை அந்த முதலாளி. இனிமேல் மகனை அழைத்து வரக் கூடாது என்பது தாமதித்து வரக் கூடாது என்ற போன்ற நிபந்தனைகளில் ஒன்றாக மாறி போனது அதற்கு பிறகு.
ஊரார் யாரும் வேலை செய்ய அஞ்சுபவரல்ல. விவசாயம் பிடித்து வைத்திருந்த உழைப்பையும் நேரத்தையும் இப்போது நீர் சேகரிப்பு இழுத்துக் கொண்டது. ஊரில் அடிபைப்பு தனது மூச்சை நிறுத்திக் கொண்டதிலிருந்து தண்ணீர் தேடி அலைவதே பெரிய வேலையாகி போனது அனைவருக்கும். பாசமும் பண்பும் எங்கோ ஓடி மறைய கோபம் மட்டுமே அம்மக்களின் பொதுவான குணமாக மாறியது.
எங்கோ இருக்கும் ஆற்று மணலில் ஆங்காங்கே ஊற்று பறித்து நீர் சேகரித்தனர். அதோ இதோ என்று தெரிந்த நீர் இப்போது பத்தடி ஆழத்திற்கு குறைவாக தெரிவதில்லை என்று சம்மணமிட்டு உட்கார்ந்துக் கொண்டது. ஒரு அமாவாசை இரவில் ஆழம் தெரியாது கையை விட்டதில் தேள் ஒன்று பொட்டென போட்டது தனலெட்சுமியை. குடித்து விட்டு எங்கோ விழுந்து கிடந்தான் மாரியப்பன். நடு இரவு நேரத்தில் முதலுதவி செய்த பங்காளியை கள்ள புருஷனாக்கியது குடத்தில் தண்ணீர் சேகரிக்க முடியாத உறவுகள். அவர்களை சொல்லியும் குறையில்லை. தண்ணீர் கிடைக்காத ஆதங்கம் ஏதோ ஒரு வகையில் வெளிப்பட்டு தானே ஆக வேண்டும். தண்ணீர் சண்டையில் பங்காளிகளெல்லாம் பகையாளிகளாகினர்.
இரவுகள் நீர் தேடலின் நடமாட்டத்தால் பகல்களாகி போயின. இறுதியில் அதற்கும் கேடு வந்தது. திடுதிப்பென்று ஒருநாள் லாரிகள் வர தொடங்கின. அதிலிருந்தவர்கள் தண்ணீர் சேந்த வந்தவர்களை காலி குடங்களோடு விரட்டியடித்தனர். ‘தண்ணி.. கிண்ணின்னு இனிமே ஒரு பய இந்த பக்கம் வரக் கூடாது.. இங்க மணல் குவாரி ஆரம்பிக்கறதுக்கு பர்மிட் வாங்கியாச்சு..’ மீறி ஊற்றுக்குள் இறங்கியவர்களை தடியால் அடித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நீரை மிச்சம் பிடித்து தலைக்கு குளிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தாள் தனலெட்சுமி. தினமும் கொஞ்சம் சேமித்தும் வைத்திருந்தாள். எப்படியாவது நீரெடுத்து விடும் ஆசை நிராசையாகி போனதில் மேலே விழுந்த பலத்த அடி அவளுக்கு வலிக்கவில்லை.
தான் வேலை செய்யும் உணவகத்தில் பொலபொலவென்று நீர் கொட்டுவதை பரவசமாக பார்ப்பாள் தனலெட்சுமி. அங்கு தண்ணீர் லாரி நீர் இறக்கி விட்டு போகும். உண்ண வருபவர்கள் குடித்தும் குடிக்காமலும் டம்ளரில் மீதம் வைக்கும் நீரை சேகரித்து செல்ல தோன்றும் அவளுக்கு. மேனேஜர் மேசையின் மீது பரத்தி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் பாட்டில்கள் அவள் கருத்தை கவரும். உணவகத்திற்கு வருபவர்கள் முழு வேகத்தில் பைப்பை திறந்து கை கழுவுவதை பார்க்கும் போது மனம் பதைத்து போகும் தனலெட்சுமிக்கு. சிலர் திறந்த பைப்பை மூடாமல் கூட சென்று விடுவர். கழிவறை பைப்பும் அதே கதி தான். தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டாலே பைப்பை மூடுவதற்காக அனிச்சையாக அவளின் கால்கள் ஓடும். உணவிற்கு பதில் வயிறு முட்ட முட்ட தண்ணீர் அருந்துவது ஒன்று தான் தனலெட்சுமியால் முடிந்த ஒரே வழி.
சேதுபதிக்கு வயது ஐந்தை தொட்டிருந்தாலும் உடம்பு நறுங்கி போய் மூன்று வருட வளர்ச்சியையே காட்டியது. வீட்டில் இருந்த பெரியாட்களில் இருவர் உயிரை விட்டு விட மிஞ்சியது மாமியார் மட்டும் தான். கிடைத்த வேலைக்கு சென்று அதன் மூலம்; கிடைத்த கூலியை குடியால் நிரப்பிக் கொண்டிருந்தான் மாரியப்பன்;. தண்ணீருக்கான அலைச்சல் அவளை குடும்ப கவலைகளிலிருந்து தள்ளி வைத்திருந்தது. யாருக்கும் காத்திருக்காத காலம் மாரியப்பனை நோயில் வீழ்த்த இப்போது அவன் அரசாங்க மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தான்.
“அரிசி வாங்க காசில்ல.. பருப்பு வாங்க காசில்லேங்கிறீங்க.. குடிக்கறதுக்கு மட்டும் காசை எங்க தான் முடிஞ்சு வச்சுருக்கீங்களோ..” அலுத்துக் கொண்டே வைத்தியம் பார்த்தார் மருத்துவர். “இத பாரும்மா.. ஒன் வீட்டுக்காரனுக்கு குடலெல்லாம் வீணா போயிருக்கு.. ஒரு வாரம் தங்க வச்சு பாப்போம்.. சரிப்பட்டு வர்லேன்னா வீட்டுக்கு கூட்டிட்டு போயிடு..” சரசரவென்று ஏதோ எழுதிக் கொடுத்தார். அதற்குள் மாரியப்பன் வயிற்றை பிடித்தப்படியே துடித்துக் கொண்டிருந்தான்.
வரிசை வரிசையாக படுக்க வைக்கப்பட்டிருந்தனர் நோயாளிகள். கட்டில்கள் நிறைந்து.. கட்டில்களுக்கு இடையே.. நடைப்பாதைகளில்.. என நோயாளிகள் பாய்களை விரித்து படுத்திருந்தனர். “இந்தாம்மா.. பாயி தலவாணி கொண்டாந்திருக்கீள்ல..?” என்றாள் நர்ஸ் ஒருத்தி சிடுசிடுப்பாக. “தோ.. போயி எடுத்தாந்திடுறம்மா..” என்றாள் தனலெட்சுமி. அடுத்த மாத சம்பளத்தை முதலாளியிடமிருந்து அட்வான்ஸாக பெற்றிருந்தாள்;. அதிலிருந்து இருபது ரூபாய் நோட்டு ஒன்றை உருவி அந்த நர்ஸிடம் கொடுத்தாள். சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டே அந்த நர்ஸ் ஊசி போட்டதில் வயிற்று வலி குறைந்திருந்தது மாரியப்பனுக்கு. வெறுந்தரையில் ஒரு ஓரமாக சுருண்டு படுத்துக் கொண்டான்.
“ஒன் ஒடம்புல புத்து வைக்க.. வேலய பாப்பனா.. ஒன்ன பாப்பனா.. புள்ளிய பாப்பனா.. ஒரேமுட்டா போய் தொலச்சுட்டீன்னா கூட நிம்மதியா புடுவன்.. அரஉசுரு.. கால் உசுரா கெடக்கறவன பொளக்க வச்சு கொண்டாந்து போட்டமுன்னா மறுதபா ஊத்திக்கிட்டு என் கொலய அறுக்கிறியேடா பாவீ..” கணவனை திட்டிக் கொண்டே வாங்கி வந்திருந்த இரண்டு பன்னையும் கண்ணாடி கிளாஸ்; டீயையும்;; அவனிடம் நீட்டினாள் தனலெட்சுமி. ஆவலாக எழுந்து உட்கார்ந்து பன்னை பிய்த்து டீயில் நனைத்து தின்றான் மாரியப்பன்.
“சீக்கரம் குடிச்சுட்டு குடு.. கௌhச கடையில குடுத்துட்டு வூட்டுக்கு போயிட்டு வாரன்..” என்ற மனைவியை பரிதாபமாக ஏறிட்டான் மாரியப்பன்.
“போவாம..? பாயி.. போருவ.. தலவாணி.. யாரு எடுத்தாறது..? தண்ணீ வேற புடிக்க போவுணும்.. ரவைக்கு வாரன்..”
சற்றே கருணைக் காட்டிய மழை அங்கிருக்கும் கிணற்றில் நீராய் சேகரமாக ஊர் சனம் மொத்தமும் கிணற்றடியிலேயே கிடந்தன. ஆளாளுக்கு முறை வைத்து தண்ணீர் எடுத்தாலும் சண்டை ஒரு போதும் நிற்பதில்லை. சமயங்களில் சண்டை தடித்த வாய் வார்த்தைகளோடு முடிந்து போகும். சில சமயங்களில் தலைமுடி பிய்ந்து போகும் அளவிற்கு நீண்டும் விடும். தனலெட்சுமியும் வருகிற சண்டையை விடுபவள் அல்ல.
“வர்றப்ப ஒரு குடம் தண்ணீ கொண்டாந்துடு..” என்றாள் நர்ஸ் இயல்பாக. ‘உன் உயிரை கொடு..’ என்று கேட்பவளை நோக்குவது போல அந்த நர்ஸை பார்த்தாள் தனலெட்சுமி.
“பாக்குறள்ல்ல.. ஆஸ்பத்திரி எப்படி நாறி கெடக்குன்னு பார்த்தேல்ல.. அதான்.. ஒனக்கு மட்டுமில்ல.. எல்லாருக்கும் கண்டிஷன் போட்டாச்சு.. இங்க வைத்தியம் பாத்துக்குணும்னா தினத்துக்கு ஒரு குடம் தண்ணி குடுக்கணும்..” விருட்டென்று நகர்ந்து கடந்தாள் அந்த நர்ஸ்.
உள்ளுர் என்பதால் நடை மிச்சமாகி போனாலும் கிணற்று நீரை சேகரிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. பழைய பிளாஸ்டிக் கடையில் பிளாஸ்டிக் கேன் ஒன்றை வாங்கி அதை சரிபாதியாக வெட்டி ஒரு சிறிய கழியால் இருப்பக்கத்தையும் இணைத்து அதில் கயிற்றை கட்டி கிணற்றுக்குள் அனுப்பி தண்ணீர் எடுத்தனர். அடி மண்ணை பரித்து கொண்டு வரும் நீரை குடத்திற்குள் நிரப்புவார்கள். இரண்டு குடம் நீர் எடுக்க எப்படியும் ஒரு மணி நேரம் பிடிக்கும். பத்து பத்து பேராக நீரெடுக்க வேண்டும் என்பது ஊர் கட்டுப்பாடாகி போனது.
ஆச்சர்யமாக இருந்தது தனலெட்சுமிக்;கு. ‘நோவுக்காரவுங்களுக்கு வைத்தியம் பாக்கணும்னா தண்ணீ கொண்டார்னுமாமுள்ள தண்ணீ..’
“புதுசா கேக்கற.. ஆறு மாசமா இந்த கூத்துல்ல நடக்குது.. கொலயறுத்த பாவி.. குடிச்சுப்புட்டு ரோட்டு மேல கெடந்தான் என் புருசன்.. எவனோ ஆட்டோவ வுட்டு ஏத்தினதுல காலு கூளாயி போச்சு.. ஆசுத்திரிக்கு வர்றதும் போறதுமா பாடாத பாடுபடுறோம்.. இதுல தண்ணீ எடுத்தாருணுமாம் தண்ணீ…” பக்கத்தில் இருந்த ஒரு பெண்மணி இவளிடம் சொல்ல தொடங்கி புலம்பலில் முடித்தாள்.
அங்கிருந்தே கணவனை திரும்பி பார்த்தாள் தனலெட்சுமி. ‘எம்புட்டு உசிரா இருக்கும் எம்பேருல.. எளவெடுத்த பளக்கம் மாமனை சுருட்டி போட்டுடுச்சு..’ தன்னை பிறந்த வீட்டிற்கு அனுப்பி கணவனை குடிக்கு பழக்கப்படுத்திய மாமியார் மீது அடக்க மாட்டாத கோபம் எழுந்தது. உருக்குலைந்து கிடந்தவனை பார்க்க முடியாமல் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. ‘எப்டியாது மாமன காப்பாத்திபுடணும்..’ இடுப்பில் முடிந்து வைத்திருந்த சில்லறைகளை பார்த்தாள் தனலெட்சுமி. ஏழெட்டு ரூபாய் தேறியது. அருகிலிருந்த கடையில் இரண்டு வடையை வாங்கியவள் அங்கேயே ஒன்றை தின்று விட்டு படுத்திருந்த கணவனின் அருகில் மீதியொன்றை வைத்தாள். “த்தே.. பசிச்சா எடுத்து தின்னு.. வந்துடறன்..”
மகனின் நினைவு வந்தது. ‘பாவம்.. சேதுபதி பய.. பசியில துடிச்சு கெடப்பான்..’ கால்களை எட்டி வைத்து நடந்தாள். நடக்க நடக்க பசி கூடிக் கொண்டே போனது. சற்று நேரத்திற்கு முன் வயிற்றுக்குள் சென்ற வடை ஏதோ ஒரு மூலையில் கிடந்த பசியை தூண்டி விட்டிருந்தது.
‘போனவொடன மொதல்ல சோறாக்குணும்.. ரேசனரிசி சோறு முளுங்க முடியாதும்பாப்ல.. நொய்யரிசி கெடக்கு.. அதுல கஞ்சி வச்சுடுணும்.. பருப்பு தொவயல் தொட்டுக்கிட்டு நாலஞ்சு டம்ளர் கஞ்சி ஆங்கமா குடிச்சாப்புலன்னா மாமன் பொளச்சுக்கும்..’ அவளுக்கும் நாவில் நீர் ஊறியது. சமையலை நினைக்கும் போதே காலியாக இருக்கும் தண்ணீர் குடம் நினைவிலாடியது. ‘மொதல்ல போயி தண்ணி புடிக்கணும்..’ நடையை விரைசலாக்கினாள் தனலெட்சுமி.
கிணற்றடிக்கு அவள் தாமதித்து வந்ததால் அவளின் நீரை வேறொத்தி எடுத்துக் கொண்டிருந்தாள். இயலாமை.. ஆற்றாமை.. பசி.. என எல்லாம் சேர்ந்துக் கொள்ள அந்த பெண்ணை மூர்க்கமாக பிடித்து தள்ளினாள் தனலெட்சுமி. ‘தாலியறுத்த மூதி.. ஆசுத்திரிக்கு போனா அப்டியே போயிடுவோம்னு நெனச்சியாடீ..”
“ஏய்.. வாய அடக்குடீ நாதாறி முண்ட.. பட்டா போட்டா எளுதி வச்சிருக்கு ஒன் பேர்ல..” கத்திக் கொண்டே அந்த பெண் அரையளவு நிரம்பியிருந்த தன் குடத்தை எடுத்து தள்ளி வைக்க “நாத்தமெடுத்த முண்;ட.. எந்தண்ணிய ஒளியவா வக்கிற..?” கிரீச்சிட்டு கத்திய தனலெட்சுமி அந்த நீரை எடுத்து தன் குடத்துக்குள் நிரப்பிக் கொள்ள எத்தனித்தாள். “கேனு போட்டு எவளோ ரொப்பி வப்பாளாம்.. மகாராணியம்மா குந்துனாப்பல ஊத்திக்கிட்டு கௌம்புவாங்களாம்.. ஒனக்கு ஊளியம் பாக்க நான் ஒண்ணும் ஒன் கள்ள புருசனில்லடீ..” வாய் வார்த்தைகள் கனத்து, விலக்கி விட ஆளின்றி கைகலப்பிற்கு மாறியதில் களைத்துப் போனாள் தனலெட்சுமி.
நிரப்பிய குடங்களை இடுப்பில் ஒன்றும் தலையில் ஒன்றுமாக வைத்து கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள். நடந்து முடிந்திருந்த சண்டையில் ஆடை குலைந்து கிடந்தது. தலைமுடி அவிழ்ந்து போயிருந்தது. அதை சட்டை செய்யும் நிலையில் இல்லை அவள். வேகமாக குடிசைக்குள் நுழைந்தவள் ஆஸ்பத்திரிக்கென்று தனியாக ஒரு குடம் நீரை ஒதுக்கி நகர்த்தி வைத்தாள். வயிறு உணவிற்காக கத்தியது. விறகடுப்பை மூட்டினாள். “சோறாக்கிட்டீயாம்மா..” ஆவலாக அவளருகே வந்தான் சேதுபதி. தெரு மண்ணே உடலாக மாறியது போலிருந்தான். “இருடா.. செத்த.. இப்ப தான் ஒலயே கொதிக்குது..” என்றாள் அலுப்பாக. குளிக்க வேண்டும் போலிருந்தது. கொடியடுப்பில் சட்டியை வைத்து துவையலுக்கு பருப்பை வறுக்க தொடங்கினாள்.
கயிற்றுக்கட்டிலிலிருந்து தலையை தூக்கி பார்த்த மாமியாரை பார்த்து கத்தினாள்.. “உக்கார வச்சு சோறு போடுற அளகு பெத்த மவன பெத்து வச்சிருக்க.. சோறாக்கியாச்சியா.. ஆக்கியாச்சான்னு எட்டி எட்டி பாக்கறதுக்கு..” பருப்பு பொரியும் வாசம் வயிற்று பசியை அதிகப்படுத்தியது. நொய்யரிசி சட்டுன்னு வெந்துடும்.. அதுக்குள்ள தொவயலு அரச்சுப்புடுணும்..’ அம்மியில் அரைத்துக் கொண்டே நீர் குடத்தை பார்த்துக் கொண்டாள்.
‘ஆசுத்திரிக்கு அம்மாம் தொலவு நடக்குணும்.. பேசாம சேதுபதி பயல பாயி தலவாணிய தூக்கிக்க சொல்லிட்டு கஞ்சியையும் கொடத்தையும் நான் தூக்கிக்க வேண்டியதுதான்.. பேச்சு தொணைக்குமாச்சு..’ பசி கைகளின் விறுவிறுப்பை கூட்டியது.
நொய்யரிசி கஞ்சி வெந்து வாசம் வந்தது. மருத்துவமனைக்;கு எடுத்து வைத்த நீர் குடத்தை நகர்த்தி வைத்து விட்டு அந்த இடத்தில் சோற்றுப்பானையை இறக்கி வைத்தாள் தனலெட்சுமி. அந்த நேரம் பார்த்து மூக்கில் வியர்த்தவனாக உள்ளே ஓடி வந்தான் சேதுபதி. சிறிய குடிசை வீடு அது. பின்புறத்தை காட்டி குனிந்தவாறிருந்த தாயின் மீது வந்த வேகத்தில் மோதியதில் தனலெட்சுமி எகிறி முன்னே விழ ஆஸ்பத்திரிக்கென ஒதுக்கி வைத்திருந்த குடம் கவிழ்ந்து நீர் வீட்டை நிறைத்தது.
தடுமாறி நிமிர்ந்த தனலெட்சுமி வந்த கோபத்தில் பிளாஸ்டிக் கேனில் கட்டுவதற்காக நேக்காக செதுக்கி அங்கே வைக்கப்பட்டிருந்த கழியால் சேதுபதியின் தலையில் ஓங்கியடித்தாள். பயத்தில் ஒடுங்கி ஒண்டியவன் விழுந்த அடியில் தடுமாறி கீழே சாய்ந்தான். பிறகு அவன் எழவேயில்லை. அதற்கு பிறகு தனலெட்சுமியும் பேசவேயில்லை. அவளை நோக்கி குற்றம் சாட்ட நீட்டப்பட்ட கரங்களால் கூட அவளை பேச வைக்க முடியவில்லை.
அது கோர்ட் என்பதும் நான் நீதிபதி என்பதும் அது தீர்ப்பு சொல்ல வேண்டிய நேரம் என்பதும் எனக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது. சுதாரித்து நிமிர்ந்தேன். நெடுநாட்களுக்கு பிறகு பேசியதில் களைத்திருந்தாள் தனலெட்சுமி. அவளின் தலை குனிந்திருந்தது – குருவியின் தலையைப் போல. அதில் சமுதாயம் என்ற பனங்காயின் சுமையை ஏற்ற விரும்பவில்லை நான்.

ழூழூழூ

Series Navigationநாயினும் கடையேன்நான்…காலம் தோறும் இசைக்கும் தமிழ் மற்றும் தொன்ம வளங்களும்
author

கலைச்செல்வி

Similar Posts

6 Comments

  1. Avatar
    ரெ.கா. says:

    இந்தக் கதையைப் படிக்கும்போது எனக்கெழும் கேள்வி: இந்த ஏழைகளுக்குக் கைகொடுக்க அரசாங்கம் ஒன்றுமே செய்வதில்லையா? அல்லது அரசாங்கம் கொடுக்கின்ற உதவிகளை கேட்டுப் பெற இந்த ஏழைகளுக்குத் தெரிவதில்லையா? விவசாயிகளுக்கு அடிப்படை வருமானம் வரும்படியாக வாரத்துக்குச் சில நாட்கள் அரசாங்கம் கட்டாய வேலை கொடுக்கும் திட்டம் என்று ஒன்று இருப்பதாகப் படித்த நினைவு. குழந்தை நலம் காக்கும் அரசு திட்டங்கள்? மாநில அரசு, மத்திய அரசு ஒன்றும் செய்வதில்லையா? அரசு வழங்கும் மானியத்தில் மாற்றுப் பயிர்கள் பயிர் செய்து விவசாயிகள் தழைப்பதாக ‘மக்கள் தொலைக்காட்சியில் தொடர்ந்து காட்டுகிறார்ர்களே! இவர்களுக்கு ஏன் வாய்க்கவில்லை? நீங்கள் கதையில் சோகரசம் பிழிவதற்காக இந்திய விவசாய வறுமையை ரொம்ப மிகைப்படுத்திவிட்டீர்கள் என்று தோன்றுகிறது. சட்டம், ஒழுங்கு ஒன்றுமில்லாத ஆப்பிரிக்க நாடுகளில் சாஹேல் பகுதிகளில் நிகழ்வது போன்ற பஞ்சமா இருக்கிறது இந்தியாவில்?

    1. Avatar
      மு.வேலாயுதம் says:

      சில வருடங்களுக்கு முன்னர் என் தந்தையாரின் பிறந்த ஊரான காரியாண்டி ( திருநெல்வேலி மாவட்டம் ) சுற்றுவட்டார பகுதியில் தண்ணீர் பஞ்சம் இக்கதையை காட்டிலும் கேடு. இப்பொழுது எப்படியோ?

      நம்மூரில் நிறைய பேருக்கு அரசாங்க உதவிகள் தெரிவதில்லை என்பதும் கேரள மக்கள் இவ்விடயத்தில் முன்னேறியுள்ளனர் என்பதும் உண்மை.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    கலைச்செல்வியின் ” நீர் வழிப்பாதை ” பரிசு சிறுகதை ஒரு கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் உண்டாகும் அவலங்களை அப்படியே தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டியுள்ளது. அதற்கு தனலட்சுமியை குற்றவாளி கூண்டில் நிற்க வைத்து அவள் மூலமாக அந்த சோகத்தை விவரித்து அதை நீதிபதி தன்னுடைய மன ஆழத்தில் உண்டான பாதிப்பை நமக்குக் கூறுவது போன்று கதையைக் கொண்டு சென்றுள்ள விதம் அருமை. குடிக்கு அடிமையான மாரியப்பன், அதற்கு காரணமான தோணதொணக்கும் மாமியார், விவசாயம் போய் உணவக வேலை , பஞ்சம் , பசி. நீர் சேகரிக்க அலைவது, தீராத மன உளைச்சல் போன்ற அனைத்தும் கற்பனை என்று சொல்லிவிடமுடியாது. இன்றும் பல ஊர்களில் இந்நிலை நீடிக்கிறது என்றே எண்ணுகிறேன். அந்த பரிதாபத்தைதான் கதாசிரியர் புனைவாக வடித்துள்ளார் என்றும் எண்ணுகிறேன். நிறைவு என்ற உணர்வு மனதளவில் ஏற்படாதவரை குற்றங்கள் குறையப் போவதில்லை என்னும் கதையின் கருப்பொருள் ஓரளவு உண்மையே. காரணம் மனிதன் எந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேறியிருந்தாலும் அந்த ” நிறைவு ” என்பதை உணராமல்தான் தொடர்ந்து வாழ்ந்து வருகிறான். ..வாழ்த்துகள் கலைச்செல்வி… அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      kalaiselvi says:

      உண்மையான தரவுகளின் அடிப்படையில் உண்டானது தான் இந்த கதை. நிதர்சனத்தை என்னால் சொல்ல முடிந்தது இந்த அளவுக்கு தான். ஆனால் யதார்த்த நிலை இதனினும் கொடிது. படித்தமைக்கும் பகிர்ந்தமைக்கும் நன்றி டாக்டர் சார்

  3. Avatar
    kalaiselvi says:

    உண்மையான தரவுகளின் அடிப்படையில் உண்டானது தான் இந்த கதை. நிதர்சனத்தை என்னால் சொல்ல முடிந்தது இந்த அளவுக்கு தான். ஆனால் யதார்த்த நிலை இதனினும் கொடிது. படித்தமைக்கும் பகிர்ந்தமைக்கும் நன்றி டாக்டர் சார்

  4. Avatar
    S.P.MARIAPPAN says:

    நீர்வழிப்பாதை சிறுகதை படித்துமுடித்த போது என் கண்களில் நீர் கசிந்துவிட்டது…. போதையால் எத்தனையோ குடும்பத்தலைவிகள் படும் கஷ்டங்கள் சொல்லிட இயலாது………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *