மிதிலாவிலாஸ்-19

This entry is part 9 of 25 in the series 17 மே 2015

Yaddana_profile_0தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி

gaurikirubanandan
தமிழில்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com
ஆனால்.. சித்தார்த்தாவை பார்க்காமல் அவளால் இருக்க முடியவில்லை. இனிமேல் தன்னுடைய யோசனைகளை எல்லாம் அவனைப் பற்றித்தான் இருக்க வேண்டும். இந்த பத்தொன்பது வருடங்களாக சித்தார்த்தா துரதிர்ஷ்டவசமாக இழந்த சந்தோஷம், ஆயிரம் மடங்காய் தாயின் அன்பு வடிவத்தின் அவனுக்கு கிடைக்க வேண்டும். கடவுள் உயிருக்கு உயிரான நினைவுச் சின்னத்தை பத்திரமாக தன்னிடம் ஒப்படைத்து இருக்கிறார். கண்ணின் இமைபோல் அதனை பாதுகாக்க வேண்டும். அவள் உடல் மிதிலாவிலாசில் தரிக்கவில்லை. சித்தார்த்தாவை கண்ணால் பார்ப்பதற்கு துடிதுடித்துக் கொண்டிருந்தது.
ஒரு முடிவுக்கு வந்து விட்டவளாக மைதிலி செருப்பை மாட்டிக் கொண்டு, பேக்கை எடுத்துக் கொண்டாள். அறையைத் தாண்டி படிகளில் வேகமாக இறங்கி வரும்போது ராஜம்மா எதிரே வந்தாள்.
“அம்மா! மதியம் சாப்பாட்டுக்கு என்ன செய்யட்டும்?”
“ஏதோ ஒன்றை பண்ணு ராஜம்மாமா. இது போன்ற சின்ன விஷயத்திற்கு என்னை தொந்தரவு செய்யாதே” என்று சொல்லிவிட்டு போய் விட்டாள்.
கார் கேட்டைத் தாண்டிக் கொண்டு இருக்கும் போது மைதிலியின் மனம் சிறகு விரித்த பறவையாய் வானத்தில் பறப்பது போல் இருந்தது.
*****
மைதிலி இரண்டு கைகளிலும் கனமாக பாக்கெட்டுகளை சுமந்து கொண்டு சித்தார்த்தாவின் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தாள்.
அன்னம்மா புடவையின் கிழிசலை தைத்தபடி உட்கார்ந்து இருந்தாள்.
“என்ன? வேலை முடிந்து விட்டதா? ஓய்வாக இருக்கீங்களே?” சிரித்தபடி அன்னம்மாவிடம் குசலம் விசாரித்தாள்.
“வேலையா? அசல் தொடங்கினால்தானே? நேற்று இரவு முதல் அவன் என்னிடம் கோபித்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறான். நீங்க வாங்கிக் கொடுத்த சாமான்களை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்திருக்கிறான், திருப்பிக் கொடுப்பதற்கு” என்றாள் அன்னம்மா.
“எதுக்கு?” வியப்புடன் கேட்டாள் மைதிலி.
“எங்கள் தலையில் சனி பகவான் உட்கார்ந்து இருக்கிறான்.” அன்னம்மா தலையில் அடித்துக் கொண்டாள். “கடவுள் உங்கள் ரூபத்தில் வந்து எங்களுக்கு கொஞ்சம் சாப்பாடு கொடுத்தால், அதைச் சாப்பிட விடாமல் தடுக்கிறான். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றால் இதுதான் போலும்.”
“சித்தூ எங்கே?”
“அறையில் இருக்கிறான். ஜெயா வந்திருக்கிறாள். பேசிக் கொண்டிருக்கிறான்.”
மைதிலி வேகமாக அடியெடுத்து வைத்தவளாய் அவன் அறையை நோக்கி வந்தாள். சித்தூ தரையில் அமர்ந்து கொண்டு பேப்பர் மீது ட்ரெஸ் டிசைன்ஸ் ஸ்கெட்ச் வரைந்து கொண்டிருந்தான். பக்கத்திலேயே சற்று குள்ளமாய், பூசிய உடல்வாகுடன் ஒரு பெண் மைதிலியைப் பார்த்ததும் சித்தார்த்தா பக்கம் திரும்பினாள். ஏற்கனவே மைதிலியின் குரலைக் கேட்டு விட்டது போல் சித்தார்த்தா எழுந்து நின்றான்.
“சித்தூ!” ஏதோ சொல்லப் போன மைதிலி பக்கத்தில் ஜெயாவைப் பார்த்ததும் நின்றுவிட்டாள்.
இந்தப் பெண்தானா ஜெயா? கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஜெயாவும் மைதிலியை பரிசீலிப்பது போல் பார்த்தாள்.
“ஜெயா! நீ வீட்டுக்குப் போ” சித்தார்த்தா சொன்னான்.
ஜெயா எழுந்துகொண்டாள். சித்தூவின் பக்கம் பார்த்தாள். அவன் பார்வையைத் தாழ்த்தி சீரியஸ் ஆக தான் வரைந்த ஸ்கெட்ச்சுகளை பார்த்துக் கொண்டிருந்தான். ஜெயா என்ன நினைத்துக் கொண்டாளோ? வேறு எதுவும் சொல்லவில்லை.
மைதிலியின் பக்கத்திலிருந்து ஜெயா போகும்போது மைதிலி நட்பு வெளிபடுத்தும் விதமாக முறுவலித்தாள்.
ஜெயா அதை லட்சியம் செய்யாதவள் போல் வெறுப்புடன் பார்த்துக் கொண்டே போய்விட்டாள்.
மைதிலி பாக்கெட்டுகளை கொண்டு வந்து அவன் பக்கத்தில் வைத்துக் கொண்டே, “பாட்டியை சத்தம் போட்டாயாமே? நான்தான் சாமானை வரவழைத்தேன்” என்றாள்.
அவன் பதில் பேசவில்லை.
“உன் நல்லது கேட்டதை நான் பார்க்கக் கூடாதா?”
அவன் பதில் சொல்லவில்லை. மைதிலி அவன் முன்னால் பரத்தி இருந்த ஸ்கெட்ச் காகிதங்களைப் பார்த்தாள். அவற்றைப் பார்த்துவிட்டு, “இந்த கருப்பு நிறத்திற்கு மஞ்சள் நிறம் ரொம்ப எடுப்பு” என்று சொல்லிக் கொண்டே அவன் பக்கத்தில் அமர்ந்து மளமளவென்று மற்ற காகிதங்களை பார்த்தாள். “அற்புதமாக இருக்கு. இவ்வளவு நன்றாக எப்படிப் போடுகிறாய்?”
அவன் எதிரே இருந்த பாடப் புத்தகங்களை காண்பித்தான். “இதற்கு முன் அவற்றிலிருந்து இன்ஸ்பிரேஷன் எடுத்துக் கொண்டு சுதந்திரமாக டிசைன் செய்து கொண்டிருந்தேன். இப்போது நானாக வரைந்த டிசைன்களுக்கு எங்கேயாவது ஒற்றுமை இருக்கிறதா என்று சரி பார்க்கிறேன்” என்றான்.
“குட்! நீ இது போலவே உன் வேலையில் மனதை செலுத்து. மற்ற விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.” சொல்லும்போதே அவள் கண்கள் ஈரமாயின.
“பார்! உனக்காக டிரெஸ் வாங்கி வந்திருக்கிறேன்” என்று பேக்கிலிருந்து விலை உயர்ந்த ஆடைகளை அவன் மடியில் வைத்தாள். அவன் அவற்றின் ஸ்பரிசம் கூட தன்மீது படுவதை விடும்பாதவன் போல் ஸ்கேலால் அவற்றை மடியிலிருந்து கீழே தள்ளிவிட்டான்.
“என்ன இது?”
“எனக்கு வேண்டியதை நானே கேட்கிறேன். நீங்கள் இதுபோல் நான் கேட்காததை வாங்கி வந்து உங்கள் பணத்தை வியர்த்தம் ஆக்க வேண்டாம். எங்களை பிச்சைக்காரர்களாக மாற்ற வேண்டாம்.”
மைதிலி திகைத்துப் போய்விட்டாள். ஒரு நிமிடம் அவளால் பேச முடியவில்லை.
“நான் உனக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்தால் அது தவறா?” அவள் குரலில் ஆவேசம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
“கேட்காத போது கொடுப்பது தவறுதான். அதிலும் எதிராளி வேதனைக்கு உள்ளாக்கி, தம் பெருமையை பறைசாற்றுவதற்காக கொடுக்க நினைப்பது இன்னும் தவறு.”
“என்ன சொல்கிறாய் என்று உனக்குப் புரிகிறதா?”
“தெரியும். உங்களிடம் எனக்கு மதிப்பு இருக்கிறது. அந்த மதிப்பை பாழடிக்காதீங்க. சார் எனக்கு அட்வான்ஸ் கொடுத்து இருக்கிறார். அதைக் கொண்டு வீட்டு வாடகை பாக்கி, மளிகைக் கடையில் இருந்த பழைய கணக்கு எல்லாம் தீர்த்து விட்டேன். இந்த மாதம் நாங்கள் பசி பட்டினியால் சாகப் போவதில்லை. அடுத்த மாதம் முதல் எங்களுக்கு எந்த குறையும் இருக்காது.” அவன் கை திரும்பவும் ஸ்கெட்ச் வரையத் தொடங்கியது. ஏற்கனவே வரைந்த டிசைனுக்கு மேலும் மெருகேற்றிக் கொண்டிருந்தான். அவன் குரலில் ஆவேசம் கொஞ்சமும் இருக்கவில்லை. இருக்கும் விஷயத்தை நேரடியாக சொல்வது போல் இருந்தது.
வெளியில் ஜெயா அன்னம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். “நம் தெருவில் எல்லோரும் பேசிக்கொள்ளும் காருக்குச் சொந்தகாரம்மா இவள்தானா?” சொந்தகாரம்மா என்ற வார்த்தையை வேண்டுமென்றே அழுத்தமாக உச்சரித்தாள். அதில் வெறுப்பும் கலந்து இருந்தது.
“ஆமாம். எங்களுக்கு இல்லாத போது யாரும் ஏன் என்று கேட்டது இல்லை. கொஞ்சம் கருணையுடன் யாரோ எங்களை வந்து ஆதரித்தால் எல்லோருக்கு பொறாமை! தீசல்!”
“வார்த்தைகள் சரியாக வரட்டும். எங்க அப்பா உங்களுக்கு நிறைய தடவை கடன் கொடுத்து இருக்கிறார். நானே உங்களிடம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன்.”
“அந்தக் கடனை நாங்கள் தீர்க்கவில்லையா? ஜெயா! நீ அவனுடைய வருங்கால மனைவி. நீயே இப்படி பேசினால் எப்படி? ஏற்கனவே அவனுக்கு கோபம் அதிகம். நீயாவது அவனுக்கு எடுத்து சொல்லும்மா.”
“அப்படிச் சொல்லுங்கள், நல்லா இருக்கு. என்ன கிழிசலை தைக்கிறீங்களா? நான் தைத்துத் தரட்டுமா?”
காவல் காப்பது போல் ஜெயா அங்கேயே ஸ்திரமாக உட்கார்ந்து விட்டாள். அவள் கண்கள் சித்தூவின் அறையின் மீதே இருந்தன. காதுகளை தீட்டிக் கொண்டு அவர்களுடைய உரையாடலை கேட்கத் தயாராக இருந்தாள்.
ஜெயாவின் வார்த்தைகளை மைதிலியுடன் சித்தார்த்தாவும் கேட்டான். வெளியே வந்தவன், “வீட்டுக்கு போ ஜெயா” என்றான்.
“நான் இங்கே இருந்தால் உனக்கு என்ன நஷ்டம்?” என்றாள் ஜெயா.
மைதிலி பேக்கிலிருந்து விளம்பரத்தை எடுத்துக் காண்பித்தாள்.
“நான் காலையிலேயே பார்த்து விட்டேன்” என்றான்.
“ரொம்ப நன்றாக இருக்கு இல்லையா?”
அவன் தலையை அசைத்தான். “போட்டோகிராபர் சரியாக படம் எடுத்திருக்கிறார்.” தனக்குத்தானே பேசிக்கொள்வது போல் சொன்னான். அவன் கவனம் திரும்பவும் ஸ்கெட்ச் பக்கம் திரும்பியது. மௌனச் சுவரின் பின்னால் போய்விட்டான்.
மைதிலி குனிந்திருக்கும் அவன் தலையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தலையை வருடி கொடுக்க வேண்டும் என்று அவளது உயிர் துடித்துக் கொண்டிருந்தது. அவன் என்ன நினைத்துக் கொள்வானோ என்று தயக்கமாகவும் இருந்தது. அவன் வார்த்தைகள் அவள் சந்தோஷத்திற்கு லகான் போட்டது போல் பின் வாங்கச் செய்தது.
“இவ்வளவு திறமை உனக்கு எங்கிருந்து வந்தது?” டிசைன்களை பார்த்துக் கொண்டே சொன்னாள்.
அவன் பதில் சொல்லவில்லை.
“பேசு.. ஏதாவது பேசு. இப்படி மௌனமாக இருக்காதே.” அவள் குரலில் கட்டுப்பாடு இழந்துக் கொண்டிருந்த ஆவேசம் கலந்த வேண்டுகோள்.
அவன் நிமிர்ந்து பார்த்தான். அவனால் அவள் முகத்தின் மீதிருந்து பார்வையைத் திருப்பிக் கொள்ள முடியவில்லை. அவள் கண்களில் அந்த கண்ணீர் திரை ஏன்? எதற்காக அந்த வேண்டுகோள்? அவனுக்குப் புரியவில்லை.
அவனைப் பார்த்துக்கொண்டே சொன்னாள். “சித்தூ! நீ எனக்கு எந்த அளவுக்கு வேண்டுமோ உனக்குத் தெரியாது. என்னால் சொல்லவும் முடியவில்லை. உன்னிடம் வருவது, உன்னைப் பார்ப்பது எனக்கு வெறிப் பிடித்த சந்தோஷத்தைக் கொடுக்கும். என்னை தவறாக நினைக்காதே ப்ளீஸ்!”
அவன் பார்வை திரும்பவும் தரைமீது பரத்தியிருந்த பேப்பர் மீது விழுந்தது. அவன் வரைந்து கொண்டிருந்த ஸ்கெட்ச் பேனா தீர்ந்து விட்டது.
“அடடா! அதற்குள் தீர்ந்து விட்டது” என்று சொன்னான்.
“நான் போய் வாங்கி வருகிறேன்.” உடனே எழுந்துகொள்ளப் போனாள்.
“வேண்டாம்.” அவன் எழுந்துகொண்டான். ஆணியில் மாட்டியிருந்த பழைய சட்டையை எடுத்து அணிந்துக்கொண்டு வெளியில் போய் விட்டான்.
“உன்னைத்தான்? எங்கே போகிறாய்?” ஜெயா கேட்டாள்.
அவன் பதில் சொல்லவில்லை. போய்விட்டான்.
சித்தூ திரும்பி வரவே இல்லை. மைதிலி காத்திருந்து காத்திருந்து திரும்பி விட்டாள்.

Series Navigationசுப்ரபாரதிமணியனின் நான்கு நாவல்கள் : ஆய்வரங்குதொடுவானம் 68 – நான் இனி வேலூர் வாசி
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *