எனது இலக்கிய அனுபவங்கள் – 13 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 5 (கி.கஸ்தூரிரங்கன்)

This entry is part 17 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

கணையாழி 1965ல் தொடங்கப்பட்டது. ஓராண்டுக்குப் பிறகுதான் எனக்கு அது பார்க்கக் கிடைத்தது. உடனே சந்தா அனுப்பி வைத்தேன். அப்போது அதன் விலை 40 பைசா தான். அதோடு, முதல் இதழிலிருந்தே வாங்கிச் சேகரிக்கும் என் வழக்கப்படி, விட்டுப்போன இதழ்களைக் கேட்டு ஆசிரியர் கஸ்தூரிரங்கள் அவர்களுக்கு எழுதினேன். சில இதழ்களே கிடைத்தன. எஞ்சியவற்றை அதன் சென்னை அலுவலகத்தின் பொறுப்பாளரான திரு.அசோகமித்திரன் அவர்களிடம் கேட்டு, அவரும் அன்போடு, விட்டுப் போனவற்றைத் தேடி வாங்கி அனுப்பினார்.

பிறகு சென்னைக்கு கஸ்தூரிரங்கன் அவர்கள் வந்த பிறகு, சென்னை சென்ற போதெல்லாம் அவரைச் சந்தித்து வந்தேன். பந்தா எதுவும் காட்டாமல் புன் முறுவலுடன் வரவேற்று அன்போடு பேசுவார். 1972ல் ‘கணையாழி’யில் என் முதல் பிரவேசமாய் ‘வாருமையா வாசகரே’ என்ற கவிதை வெளியானது. அதற்கு ரூ.5 சன்மானமாக வந்தது. சிறு பத்திரிகைகளில் சன்மானமெல்லாம் அப்போது (ஏன் இப்போதும் தான்) கிடையாது. பிறகு 1978ல் ‘தி.ஜா நினைவுக் குறுநாவல் போட்டி’யில் அந்த ஆண்டுக்கான 12 பரிசுக் குறுநாவல்களில் என்னுடைய ‘அசல் திரும்பவில்லை’யும் தேர்வாகிப் பிரசுரமானதில் புதிய உற்சாகமும் படைப்பார்வமும் மிகுந்தது. அந்தப் பிரசுரத்துக்கு ரூ.200 சன்மானம் வந்தது. சன்மானம் அப்போதைக்கு அதிகம் என்பதோடு கணையாழியின் அங்கீகாரம் கிடைத்தது பெரிய வரமாக எனக்குப் பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் 3 குறுநாவல்கள் – ‘இனி ஒரு தடவை’, ‘யானை இளைத்தால்’, ‘மீட்பு’ ஆகியவை அதே திட்டத்தில் வெளியாயின. ‘இனி ஒரு தடவை’ குறு நாவலை கஸ்தூரிரங்கள் அவர்களும், ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்த திரு.இ.பா அவர்களும் அடுத்து அவர்களைச் சந்தித்தபோது பாராட்டிப் பேசியது என் இலக்கிய வாழ்வில் மறக்க முடியாதது.

பிறகு சந்தித்தபோதெல்லாம் ‘கணையாழி விமர்சனத்’துக்கு வந்த நூல்களைக் கொடுத்து விமர்சனம் எழுத வைத்தார். அது கணையாழியில் எழுத எனக்கு நிரந்தர இடத்தைப் பெற உதவியது. பின்னர் 1995ல் ‘கணையாழி’ தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவுற்றதை ஒட்டி புதிய அம்சங்களைச் சேர்த்த வகையில், என்னை ‘கணையாழி’ யின் தொடக்கம் முதல் ஒவ்வோரு இதழாக ‘தணையாழியின் பரிணாம வளர்ச்சி’ என்ற தலைப்பில் கணையாழியின் இலக்கியப் பணியை விமர்சித்து எழுத வைத்தார். 2000 வரை 5 ஆண்டுகள் தொடர்ந்து எழுதிய அத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிட்டியது. அதனால் எனக்கு இலக்கிய உலகில் பரவலான அறிமுகம் கிட்டியது.

ஒவ்வொரு இதழாக எழுதினால் அதிக காலம் பிடிக்குமே, அதற்குப் பதிலாக ஒவ்வொரு ஆண்டாக எழுதலாமே என்று நான் கேட்டபோது ‘அது பற்றிக் கவலை வேண்டாம். ஒவ்வொரு இதழாகவே எழுதுங்கள்’ என்றார் ஆசிரியர். இது பற்றி ஒரு எள்ளலான விமர்சனம் ‘தினமணி கதிரி’ல் வந்தது. அப்போது அதன் ஆசிரியராக இருந்த திரு.மாலன் அவர்கள், ‘படித்ததில் பிடித்தது’,’படித்ததில் இடித்தது’ என்ற தலைப்பில் வாரம் தோறும் எழுதி வந்தர். ஒரு வாரம் என் தொடரைப் பற்றிக் குறிப்பிட்டு, ‘ஒவ்வொரு மாதமாக எழுதினால் 30 ஆண்டுகளை எழுதி முடிக்க 30 ஆண்டுகள் ஆகுமே அது சாத்யமா?’ என்று இடித்திருந்தார்.

பிறகு ‘கணையாழி’ தசராவில் பொறுப்பில் வந்த பிறகு சில மாதங்கள் கழித்து, ‘புதிய அமசங்களைப் புகுத்த இருப்பதால் இத் தொடரைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாமா?’ என்று அப்போதைய ஆசிரியரிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தது. ‘சரி’ என்பதைத் தவிர வேறு நான் என்ன எழுத முடியும்? அதை ஒட்டி, செவியாறலாக எனக்குக் கிடைத்த தகவல் என் மீது கி.க அவர்கள் கொண்டிருந்த அபிமானத்தை உறுதிப் படுத்தியது. இடநெருக்கடியால் எனது தொடர் நிறுத்தப்பட உள்ளதாகக் கேள்விப்பட்ட கி.க அவர்கள், ‘இட நெருக்கடிதான் காரணமென்றால் நான் எழுதி வரும் கடைசிப் பக்கங்களை நிறுத்தி, அதைத் தொடருங்கள்’ என்று சொன்னதாகக் கேள்விப்பட்டேன். அதற்கு என் மீது அவர் கொண்ட அபிமானம் என்பதை விட, கணையாழியின் இலக்கியப்பணி பற்றி அடுத்த தலைமுறை அறிந்து கொள்ளும் வாய்ப்பு போகிறதே என்ற ஆதங்கமே காரணம் என்று நான் நினைத்தேன். 2005 உடன் அத்தொடர் முழுமை பெறாது நிறுத்தப்பட்டது.

பிறகு, ‘கலைஞன் பதிப்பக’ உரிமையாளர் திரு.மா.நந்தன் அவர்கள் கணையாழி இதழ் தொகுப்பினை வெளியிட விரும்பி கி.க அவர்களை அணுகியபோது, என்னைத் தொடர்பு கொண்டு எழுத ஏற்பாடு செய்தார். முதல் பத்தாண்டு இதழ்களைத் தொகுத்து ‘கணையாழி களஞ்சியம்’ என்ற தலைப்பில் முதல் தொகுதி என் தயாரிப்பில் வெளியாயிற்று. இதற்கிடையில் ‘கணையாழியின் 30 ஆண்டு இதழ்களையும் இணையத்தில் ஏற்ற திரு.அரவிந்தன்(கனிமொழியின் தற்போதைய கணவர்) உதவியில் முயன்றபோது, கி.க அவர்கள் தங்களிடம் கூட இல்லாது என்னிடம் மட்டுமே அத்தனை இதழ்களும் இருந்ததால், அவற்றை அனுப்பித் தருமாறும், இணையத்தில் ஏற்றியதும் திருப்பி அனுப்பி வைப்பதாகவும் என்னைக் கேட்டுக் கொண்டார். பொக்கிஷம் போல பழைய இதழ்களைப் பைன்ட் செய்து வைத்துப் பாதுகாத்து வந்த எனக்கு, திரும்பக் கிடைக்கும் நம்பிக்கை இல்லாத்தால் யாரையும் நம்பி அனுப்பி இழக்க மனமில்லை. ஆனால் என் மதிப்பிற்குரிய ஆசிரியரின் வேண்டுகோளை மறுக்கத் தயங்கிய போது, ‘பயப்படாதீர்கள்! நிச்சயம் பத்திரமாய்த் திருப்பித் தந்து விடுகிறேன்’ என்று கி.க அவர்கள் தொலைபேசியில் உறுதி அளித்ததின் பேரில் அரை மனதுடன் லாரி சர்வீஸ் மூலம் 30 ஆண்டு கணையாழியின் பைன்ட் வால்யூம்களையும் அவருக்கு அனுப்பி வைத்தேன். அதனால் ‘கணையாழி களஞ்சியத்’தின் அடுத்தடுத்த தொகுப்புகளை என்னால் தயாரிக்க முடியவில்லை. கி.க அவர்கள் திரு இ.பா, மற்றும் என்.எஸ்.ஜகந்நாதன் ஆகியோரைக் கொண்டு மீதி 3 தொகுதிகளையும் தயாரிக்கச் செய்தார்.

இதனிடையே அரவிந்தன் அவர்கள் மூலம் இணையத்தில் ‘கணையாழி’யை ஏற்றச் செய்த முயற்சி ஆரம்பத்திலேயே ஏதோ காரணங்களால தொடர முடியாது போய் விட்டது. அதை அறிந்த நான் கி.க அவர்களுக்குப் போன் செய்து, எனது கணையாழி வால்யூம்களைத் திருப்பித் தருமாறு கேட்டேன். அதற்கு கி.க வெகு சாதாரணமாக சொன்ன பதில் என் நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது. ‘சாரி சபாநாயகம். தொகுப்புக்காக பைன்டுகள் பிரிக்கபட்டதால் அவை சிதைத்து போய்விட்டன!’ என்று கொஞ்சமும் தன் உறுதி மொழியின் உறுத்தலின்றி அவர் சொன்ன போது, கொஞ்ச நேரம் கொஞ்சிவிட்டுத் தருவதாக நம் குழந்தையை அழைத்துப்பொன ஒருவர் திருப்பிக் கேட்கையில், ‘சாரி குழந்தை இறந்து போய் விட்டது!’ என்று சொன்னால் நம் மனம் என்ன பாடுபடுமோ அத்தகைய வேதனையை அப்போது நான் அனுபவித்தேன். அதன் பிறகு சூடு கண்டபூனையாய், பல நெருங்கிய நண்பர்கள் என் இதர தொகுப்புகளைக் கேட்டு என்ன உறுதி மொழி கொடுத்தாலும் கொடுப்பதில்லை. 0

Series Navigationநன்றிக்கடன்என்று வருமந்த ஆற்றல்?
author

வே.சபாநாயகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *