இடிந்த வீடு எழுப்பப்படும்

This entry is part 3 of 7 in the series 21 அக்டோபர் 2018

 

அன்பு உள்ளங்களே

ஆதரிக்கும் உறவுகளே

அன்னைத் தமிழின் அருந்தவச் செல்வங்களே

அத்துனை பேர் வாழ்விலும் ஆனந்தமே என்றும் பொங்க

அன்பு மலர் தூவி அத்துனை பேர் ஆசிகளையும் யாசிக்கும்

உங்கள் ஆனந்தி பேசுகிறேன்

என்று தொடங்கியதுமே கரவொலி. ஒரு குடம் பால் தலையில் ஊற்றிய சிலிர்ப்பு.

 

சிங்கை வாழ்க்கை சரிப்படாது என்று அறந்தாங்கிக்கே ஓட நினைத்த என் கால்களைக் கட்டிப்போட்டது அந்தக் கரவொலிதான். நான் என் கணவர் செந்தூர்ப்பாண்டியோடு சிங்கை வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன.  நான் சம்பாதிக்கத் தேவையில்லையாம். ‘இல்லத்தரசியாகவே இரு. உன் பாதையில் ஒரு முள்ளாக நான் என்றுமே இருக்கமாட்டேன். நீ விரும்பிய வகையில் சுதந்திரமாக இரு.’ என்றார் செந்தூர்ப்பாண்டி.  வணிகவியல் இளங்கலை படித்தவள் நான். இங்குள்ள‍ அலுவலகங்களில் வேலை செய்ய முடியும் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை. கதை, கவியரங்கம், மேடைப்பேச்சு பட்டிமன்றங்கள் என்றெல்லாம் ஒரு நாயகியாக வாழ்ந்த நான் வெறும் இல்லத்தரசியா? ஏற்க முடியவில்லை. அப்போதுதான் ஒரு பட்டிமன்ற அமைப்பு எனக்கு வாய்ப்புத் தந்தது. தொடர்ந்தன வாய்ப்புக்கள். வெளியே செல்கிறேன். தெரியாத முகங்கள் என்னோடு தன்படம் எடுத்துக் கொள்கின்றன. பெரியோர்கள் என்னை ஆசீர்வதித்தனர். பல அமைப்புக்கள் பேச அழைத்தன. என் திறமையை சிறு வயதுமுதலே ரசித்தவன்தான் செந்தூர்ப்பாண்டி. என் தாய்மாமன். நான் எப்போது பேசினாலும் எங்கிருந்தாலும் வந்துவிடுவான். என் சிறகுகள் வெட்டப்படக்கூடாது என்பதற்காகவே என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியவன். இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும். சிங்கையை விட்டுச் செல்வது இப்போது வலிக்கிறது. எனக்கு முதல் வாய்ப்புத் தந்த அந்த அமைப்பு நடத்தும் அன்னையர் தின நிகழ்வில் நான்  பேசவேண்டும் என்று அழைத்தது. நான் பேசும் எல்லா நிகழ்வுகளிலுமே ஏற்பாட்டாளர்களிடம் நான் கேட்பது ஒன்றுதான். ‘எனக்கு நீங்கள் நினைவுப்பரிசு தர விரும்பினால் வெள்ளியாகக் கொடுங்கள். பொன்னாடையோ கேடயமோ தயவுசெய்து வேண்டாம்’. ஒரு ரசிகர் கேட்டார். ‘நீங்கள் இப்படிக் கேட்டால் உங்கள் தேவைக்கு உங்கள் கணவர் காசு கொடுப்பதில்லை என்று நினைக்கமாட்டார்களா?’ நான் சொன்னேன். ‘நான் வேலை செய்யவில்லை. என் தேவைக்கு என் திறமையைக் கொண்டு கிடைக்கும் பரிசை நான் காசாகக் கேட்கிறேன். அப்படிக் கேட்பதை என் கணவர் அனுமதிக்கிறார். இதை மண்டையில் போட்டுக் கொள்வதை விடுத்து உங்கள் சொந்த வேலையை நீங்கள் பார்க்கலாமே.’ அவர் மன்னிப்புக் கேட்டார். ‘யார் எதைச் சொன்னால் என்ன? உனக்கு எது சரியென்று படுகிறதோ அதைச் செய்.’ என்றார் செந்தூர்ப்பாண்டி. எனக்காகவே இவர் படைக்கப்பட்டாரோ? அன்னையர் தின நிகழ்வில் ‘என் அம்மாவும் நானும்’  என்று பேசவேண்டுமாம். எதைப் பேசுவது என்று சிந்திக்கிறேன்.

 

தொடக்கநிலை1. அப்பா அறந்தாங்கி  உயர்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியர். அப்பாவின் மிதிவண்டியில் 8 மணிக்குப் பள்ளி செல்வேன். 4 மணிக்குத் திரும்புவேன். 3 மணியிலிருந்தே அம்மா எனக்காக திண்ணையில் காத்துக் கொண்டிருப்பார். எங்கு சென்றாலும் அம்மா என்னை நடக்கவிட்டதில்லை. என்னைத் தூக்கித் தூக்கியே அம்மாவுக்கு இடுப்பு நிரந்தரமாக வளைந்தே விட்டது. யார் சொன்னாலும் இறக்கிவிட மாட்டாராம். என் கைகளால் நான் சாப்பிட்டதே இல்லை. அம்மாவின் கைதான் என் கை. இரவில் படுக்கையை ஈரமாக்கிவிடும் பழக்கம் இருந்தது. அதற்காக அம்மா எனக்குத் தனி படுக்கை போட்டதில்லை. தன் பக்கத்திலேயே படுக்கப்போட்டுக் கொள்வார். 12 மணிக்கு அழகான கண்ணாடி ஓவியத்தைத் தூக்குவதுபோல் தூக்கி கழிவறை விட்டு மீண்டும் அதே நிலையில் படுக்கவைத்துவிடுவார். இரவில் அப்படி ஒன்று நடக்கிறது என்று நாலைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் எனக்குத் தெரிந்தது. அப்போதிருந்தே நான் நன்றாகப் பேசுவேன்.

தொடக்கநிலை இறுதியாண்டு. பள்ளிகளுக்கிடையே வசனத்துடன் மாறுவேடப்போட்டி. இளங்கோவன் என்ற பையனும் நன்றாகப் பேசுவான். எப்போதுமே எனக்கும் அவனுக்கும்தான் போட்டி. அவன் மனோகரா வேடமிட்டு ‘அழைத்துவரச் சொல்லவில்லை வேந்தே இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்’  என்று சிவாஜியாக நடிக்கப் போகிறானாம்.  அம்மா எனக்கு மனோகரா வசனப்புத்தகத்தை வாங்கித்தந்து மனோகரனின் அம்மா கண்ணாம்பா பேசும் ‘பொறுத்தது போதும் மகனே பொங்கி எழு’  என்ற வசனத்தை பேசவேண்டும் என்றார். பலமுறை நடித்துப் பார்த்தேன். குளிக்கும்போதுகூட நான் பேசிக்கொண்டே குளிப்பதை அம்மாவும் அப்பாவும் ஒட்டுக் கேட்டுவிட்டு நான் வெளியாகும்போது ஓடிவிடுவார்கள். அந்தப் போட்டியில் முதல்பரிசு எனக்குத்தான். தினத்தந்தியில் அது முதல் பக்கச் செய்தியானது. ’12 வயது கண்ணாம்பா’ என்று தலைப்பிட்டது. நல்ல உயரம். நல்ல அழகு, திறமை. அறந்தாங்கி ஒரு நாள் தேசிய அளவில் பேசப்படுமாம்.இதெல்லாம் எப்போதும் எல்லாரும் சொல்வது.

 

ஒன்பதாம் வகுப்பு. என் அறிவியல் ஆசிரியர் அன்று ‘பொருட்களின் இயலாமை விதி’ என்று யாருக்குமே முழுக்கப்  புரிய இயலாத ஒரு விதியை தலைதெறிக்கக் கத்திக் கொண்டிருந்தார். நான் நாளை பேசவேண்டிய ஒரு பேச்சுக்காக என் பேச்சை அசைபோட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று ‘இயலாமை விதி என்றால் என்ன ஆனந்தி’ என்று என்னை நிற்க வைத்தார். நான் நட்டுவைத்த மூங்கிலாய் நின்றேன். ‘என்னடீ, எவனெ நெனச்சிக்கிட்டிருக்கே’ என்று புருவங்கள் உயர்த்தினார்.40 மாணவர்களும் சிரித்தார்கள். என் தலையில் உலக்கையால் நெல் குத்துவதுபோல் உணர்ந்தேன். அந்தச் சிரிப்பு என்னைக் கொன்றது. கண்ணீர் உப்பில் இமை முடிகள் கொட்டிவிடும் அளவுக்கு அழுதேன். வீடு வந்தேன். அம்மா வழக்கம்போல் திண்ணையில் காத்துக் கொண்டிருந்தார்.அம்மாவைக் கட்டிக்கொண்டு கத்தினேன். அந்த ‘டீ’ இதுவரை என் செவிகள் கேட்காத வார்த்தை. அந்த வயதில் ஒருத்தி ஒருவனை நினைப்பாள் என்ற அறிவுகூட எனக்கு இருந்ததில்லை. ஆனால் அம்மா எதையுமே விசாரிக்கவில்லை. முகத்தைக் கழுவிவிட்டார். ஒரு குவளை பால் கொடுத்தார். அப்படியே அம்மாவின் மடியில் வாந்தி எடுத்தேன்..அம்மாவை மீண்டும் கட்டிக் கொண்டேன். மடியிலேயே அம்மா படுக்கவைத்தார். உடம்பு லேசாக சுட்டது. நெற்றியில் சுக்குப் பத்துப் போட்டார். உடம்பு நடுங்கியது. 7 மணிக்கு ஒரு வாய் சோற்றில் பருப்புக்குழம்பு விட்டு உருளை மசியலோடு ஊட்டினார்.  எற்கனவே இரைப்பையில் கிடந்ததையும் சேர்த்து வாந்தி எடுத்தேன். இப்போதுதான் அம்மா கேட்டார். ‘என்ன நடந்தது’ நான் மறக்கவேண்டும் என்பதற்காக அம்மா கொடுத்த தவணை அப்போதுதான் முடிந்தது. ‘என்ன நடந்தது’ மீண்டும் கேட்டார். சொன்னேன். தேம்பினேன். சில சொற்களை விழுங்கினேன். அம்மா தொடர்ந்தார். ‘இவ்வளவுதானே. உன்னைவிட அந்த ஆசிரியருக்கு 25 வயது அதிகம். நீ அவருக்கு மகள் மாதிரி. நீ வகுப்புக்கே முதல் மாணவி. நீ பின் தங்கிவிடக்கூடாது என்ற அக்கறையாக அது இருக்கலாம். மற்ற மாணவர்கள் சிரித்திருக்கலாம். உன் பேச்சைக்கேட்டு 400 பேர் கைதட்டுகிறார்களே. அதை நினைத்துக் கொள். இந்த 40 பேரா உன் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறார்கள்? எனக்குத் திருமணமான புதிதில் கேட்கக்கூடாத ஒரு வார்த்தையை உன் அப்பா கேட்டுவிட்டார். இவரோடு வாழவே  கூடாது  என்று முடிவு செய்து அடுத்த நாளே அம்மாவீட்டுக்குப் போய்விடவேண்டுமென்று முடிவு செய்துவிட்டேன். உன் அப்பா பள்ளிக்கூடம் போய்விட்டார். மீண்டும் யோசித்தேன். பிறகு? பிறகு? அந்தக் கேள்வி என்னை மூர்க்கமாகத் தள்ளிவிடுவதுபோல் நின்றது. நான் ஒரு விவாக ரத்துப் பெறவேண்டும். பிறகு? வெறொருவனை மணக்கவேண்டும். பிறகு? அவன் எப்படி இருப்பானோ? என் சுமையை இறக்க என் அப்பா அம்மாவுக்கு ஏன் சுமை ஏற்றவேண்டும்? எனக்காக அவர்கள் பட்டது போதாதா? முடிவை மாற்றிக் கொண்டேன். சகித்தேன். நீ பிறந்தாய். உன் அப்பாவை நான் பிறகு புரிந்துகொண்டேன். நான் மட்டும் அப்போது பிரிந்திருந்தால் நீ பிறந்திருக்கவே மாட்டாய். ஆனந்தி. கெட்டவர்களை கடவுள் ஏன் உடனுக்குடன் தண்டிப்பதில்லை தெரியுமா? நாளை அவர்களே திருந்தி பலரைத் திருத்தும் சீர்திருத்தவாதியாகக் கூட ஆகலாம். ‘அம்மா இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தபோது திருச்சி வானொலியில் நீங்கள் கேட்டவை ஓடிக்கொண்டிருந்தது. நான் கேட்காமலேயே அது இசைத்துக் கொண்டிருந்தது. திடீரென்று என் செவிகள் அந்தப் பாட்டின் பக்கம் திரும்பியபோது இந்த வரிகள் ‘அன்புமொழி கேட்டுவிட்டால் துன்ப நிலை மாறிவிடும் . அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறிவிடும். அமைதியான நதியினிலே……’ அந்த வரிகள், அம்மாவின் சொற்கள் என்னை திருப்பிப் போட்டது. அன்றுமுதல் கண்ணதாசனை என் ஆசானாக்கிக் கொண்டேன். கண்ணதாசன் பாடல்கள் எழுதிய பாட்டுப்புத்தகங்களைச் சேர்த்தேன். என்னைப் புரட்டிப்போட்ட வரிகளை எனக்குள் புதைத்துக் கொண்டேன். ஒவ்வொரு பேச்சிலும் தோண்டி எடுத்து மேற்கோளிட்டேன். அகத்துணர்வை மையப்படுத்தி பேசத் தொடங்கினேன். வெளியூர் பள்ளிக்கூடங்களிலும் என்னைப் பேச அழைத்தார்கள். அத்தனையும் அம்மா தந்த மாற்றமல்லவா?

இப்போது நான் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரியில் வணிகவியல் படித்துக் கொண்டிருக்கிறேன். இலக்கிய விழா. துண்டறிக்கையில் முதலாவதாக நக்கீரன் (திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரி மாணவர்) பாட்டு என்று குறிப்பிட்டு அடுத்து ஆனந்தியின் பேச்சு . தலைப்பு ‘அம்மா’ என்று தெரிவித்திருந்தார்கள். முதலாவதாகக் குறிப்பிடும் அளவுக்கு அவன் நல்ல பாடகனாம். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் என் தோழி சாந்தினியின் அண்ணன் என்று பிறகு தெரிந்துகொண்டேன். இலக்கியவிழா தொடங்கிவிட்டது. ‘இப்போது நக்கீரன்’ என்றதுமே கரவொலி தொடர்ந்தது. நக்கீரன் பாடினான். ‘அமைதியான நதியினிலே ஓடம்…..’ மழை முடிந்து ஒரு குருவி உடம்பைச் சிலிர்ப்பதுபோல் உணர்ந்தேன். டி.எம். எஸ்ஸுக்குப் பதில் நக்கீரனே பாடியிருக்கலாம் என்றார்கள். பாடல் தொடர்ந்தது . அந்த வார்த்தைக்காகக் காத்திருந்தேன். வந்தது. ‘அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்ப நிலை மாறிவிடும்…….’குண்டுமல்லிக் குவியலுக்குள் குதித்ததுபோல் உணர்ந்தேன். நக்கீரன் எனக்குள் மெதுவாக நூழைந்தான். ஒன்பதாம் வகுப்பில் அந்த ஆசிரியர் சொன்னாரே ‘எவனெ நெனச்சிக்கிட்டு……….’ இப்போது அர்த்தம் புரிந்தது. அவனையே நினைத்தேன். மணந்தால் நக்கீரன். இல்லையேல் நஞ்சு  என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். சாந்தினி ஒரு நாள் வீட்டுக்கு அழைத்தாள். அவள் அக்காவுக்கு நிச்சயதார்த்தமாம். நக்கீரனையே நினைத்துக் கொண்டிருந்த எனக்கு இப்படி ஒரு வாய்ப்பா?  அது சரி. இது என்ன ஒருதலைக் காதலோ? சந்தேகித்தேன். அவனும் என்னை நினைக்கிறானா? கேட்டுக் கொண்டேன். சாந்தினி வீட்டுக்குப் போனேன். ‘இப்பவாவது வந்தியே. நீ வர்றேன்னு நக்கீரன்ட்ட சொல்லிட்டேன். எப்ப வருவே எப்ப வருவேன்னு உயிர வாங்கிட்டான். ‘ என்றாள். குளத்தில் மழை. ஒரு கெண்டையாகத் துள்ளினேன். அவனும் விரும்புகிறான். வீட்டுக்குப் போனவுடன் முதல்வேலையாக அம்மாவிடம் சொல்லிவிடவேண்டும். துடித்தேன். வீட்டுக்குத் திரும்பினேன். வீட்டின் முகப்பில் நாலைந்து புதுமுகங்கள். ‘உங்கள் வேலையாகத்தான் அவர் போயிருக்கிறார். நாளைக்கு வந்துவிடுவார். வந்ததும் தெரியப்படுத்துகிறேன்.’ அம்மா சொல்லிக் கொண்டிருந்தார். தொடர்ந்து இரண்டு காவல் அதிகாரிகள். அவர்களுக்கும் அம்மா அந்த பதிலையே சொன்னார். நான் அம்மாவிடம் கேட்டேன். ‘பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்குள் மோதலாம். அப்பாவிடம் ஏதோ கேட்கவேண்டுமாம்’ என்றார். அம்மா என்னிடம் முதன்முறையாகப் பொய் சொல்கிறார். பிறகுதான் கேள்விப்பட்டேன். அப்பா ஒரு ஏலச்சீட்டு நடத்தினார். இரண்டு லட்சத்தை எடுத்துக்கொண்டு ஒருவன் தலைமறைவாகிவிட்டான். அப்பா சிக்கிக் கொண்டார். காவல்துறையில் அப்பாமீது புகார். அதில் பாதியையாவது செலுத்திவிடுவோம் என்ற எண்ணத்தில் தெரிந்தவர்கள் உறவினர்கள் எல்லாரையும் பார்த்து எப்படியாவது பணத்தைப் புரட்டிவிடலாம் என்ற நினைப்பில் அப்பா வெளியூர் சென்றதாகப் பிறகு தெரிந்துகொண்டேன். நக்கீரன் எண்ணங்களை அப்படியே விழுங்கிவிட்டேன். அப்பா நடுஇரவில் வருவார். வாயே தெரியாமல் தாடி. ஒவ்வொரு நாளும் எங்களைத் தின்றபடி கழிகிறது. அம்மா ஒருநாள் மூக்குப்பொட்டு, தோடு இல்லாமல் பட்டுப்போன முருங்கைப் போத்தானார். எனக்குக் கொஞ்சம் சோறு அப்போதும் ஊட்டிவிட்டார். அதைத்தவிர வேறு சோறில்லை. அம்மாவுக்கு? துள்ளித் திரிந்த கெண்டை தூண்டிலில் மாட்டிக் கொண்டது. துடித்தேன். என் கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விடுகின்றன.

 

ஒரு நாள் அம்மாவின் அலமாரியைத் திறந்தேன். கதவுகளின் உள் பக்கத்தில் ஓரங்குல இடமில்லாமல் என் படங்கள்தான். பரிசுகள் வாங்கியது, பத்திரிகைகளில் வந்தது எல்லாமும். இரண்டே இரண்டு நைந்துபோன சேலைகள். அப்போது இடிவிழுவதுபோல் ஒரு சத்தம். எங்கள் தார்சு வீட்டின் மேற்கூரையிலிருந்து ஒரு ‘புள்ளமருது’ மரம் கீழே விழுந்துவிட்டது. எல்லாத்தையும் எல்லாவகையிலும் இழந்துவிட்டோமா? இன்னும் இழப்போமோ? வற்றிய குளத்தின் நடுவே ஒரு வேலிக்கருவை மட்டும் ஆடிக்கொண்டிருக்கிறது. அப்பாவின் அலமாரியைத் திறந்தேன். இரண்டு மூன்று பழைய சட்டைகள் நாலு முழ வேட்டிகள். துருப்பிடித்த ஒரு ரேசர். பிளைடு வாங்கவே முடியாமல்தான் தாடி வளர்க்கிறாரா? வாழ்க்கை சினிமாவாகிவிட்டது. அப்போதுதான் உறுதி எடுத்தேன். எனக்கென்று ஒரு வேலை கிடைத்தால் அம்மாவுக்கு 100 சேலை வாங்குவேன். அப்பாவுக்கு நாற்பது சட்டைகள் வாங்குவேன்.

 

அப்பா எப்படியோ ஒரு லட்சம் புரட்டி பாதியைக் கொடுத்துவிட்டார். காவல்துறையிடம் எட்டுமாதம் அவகாசம் கேட்டிருக்கிறார். நிலத்தை விற்க ஓடிக்கொண்டிருக்கிறார். அந்த வலியிலும் அப்பா பகுதிநேர முதுகலைப் பட்டப் படிப்பைத் தொடர்வது எனக்கு நம்பிக்கையைத் தந்தது. அப்பாவுக்குள் ஒரு நம்பிக்கை விளக்கு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. வீட்டின் மேற்கூரை ஒழுகத் தொடங்கியிருக்கிறது.

 

கல்லூரியில் ஆண்டு இறுதிவிழா. முதல்நிலை மாணவியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். நடிகர் ஜெமினி கணேசன் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறார். அவர் கையில் பரிசு வாங்கவேண்டும். பல சுழல்களைத் தாண்டி கப்பல் தெளிவாக ஓடத்தொடங்குவதாக உணர்கிறேன். அப்பா சொன்னார். ‘ஆனந்தி! எதையும் நினைத்துக் கலங்காதே. எல்லாத்தையும் சமாளிப்பேன். இடிந்த வீடு நிச்சயம் எழுப்பப்படும். கூட்டங்களில் அடிக்கடி சொல்வாயே. ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும். தேடிவரும் காலம் வந்தால் செல்வமெல்லாம் ஓடிவரும்..’ சொல்லிக்கொண்டே அப்பா சிரிக்கிறார். தாடிக்கிடையிலும் அதே ஒளி. விருது வாங்கும் நிகழ்ச்சிக்கு அம்மாவை அழைத்துப்போக நினைத்தேன். அப்பாவுக்கு அன்று தேர்வு. அம்மா வருவதாகத்தான் சொன்னார். நான் புறப்பட ஏற்பாடுகள் செய்கிறேன். அம்மா எழுந்திருக்கவே இல்லை. முழங்கால் வலியாம். காலை ஊன்றமுடியவில்லை என்றார். மெதுவாகத் தூக்கிவிட்டேன். காலை லேசாக ஊன்றிவிட்டு மீண்டும் சுருண்டார். ஒரு குதிரை படுத்திருப்பதை அப்போதுதான் நான் பார்க்கிறேன். நான் மட்டும்தான் அந்த விருதை வாங்கச் சென்றேன். மாணவர்களின் கைதட்டல்கள் எனக்குள் சோகமாய் இசைத்தது. வீட்டுக்கு வந்தேன். அம்மா வழக்கம்போல் நடக்கிறார். அந்தக் கோலத்தில் என்னோடு வருவதைத் தவிர்க்கத்தான் அந்த முழங்கால் வலி நாடகம். அம்மா இரண்டாம் முறையாகப் பொய் சொல்லியிருக்கிறார். அந்த விருதைப் பார்க்கிறேன். அதன் நடுவின் அம்மாவின் அந்த நைந்த சேலைதான் தெரிகிறது. அம்மாவின் முகம் பார்க்கிறேன். முகத்துக்கு நடுவே அந்த நைந்துபோன சேலைதான் தெரிகிறது. அதே நாள் அப்பா சுண்டிவிட்ட காசு தரையில் உற்சாகமாய்ச் சுற்றுவதுபோல் வந்தார். கையில் ஒரு மஞ்சள் பை. கட்டுக்கட்டாக 3 லட்சத்தை எடுத்து அம்மாவின் மடியில் கொட்டினார். என்னைப்பார்த்தார். ‘தேடிவரும் காலம் வந்தா ……’ சிரித்தார். ‘தேர்வுகள் முடிந்துவிட்டது’. அவர் எந்தத் தேர்வைச் சொல்கிறார். அவர் படித்த முதுகலைத் தேர்வா…. வாழ்க்கைத் தேர்வா…. எங்கள் இருவரையும் அப்படியே அணைத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீரால் என் உள்ளந்தலையை நனைந்தார். அப்பா சொன்னார். ‘கடனையெல்லாம் கொடுத்துவிடலாம். வீட்டில் தார்சை இடித்துவிட்டு கான்கிரீட் போட்டுவிடலாம். ஆனந்திக்கு ஒரு வாழ்க்கையையும் அமைத்துவிடலாம்’. அப்போதுதான் என் தாய்மாமன் என் தாத்தா பாட்டியோடு வீட்டுக்கு வருகிறான். தாய்மாமனுக்கு என்னைக் கேட்கிறார்கள். அப்பாவும் அம்மாவும் உள்ளேபோய் பேசிக்கொள்கிறார்கள். நானும் என் அறைக்குள் என்னை ஒளித்துக் கொண்டேன். அம்மாவும் அப்பாவும் இப்படியே சந்தோசமாக இருக்கட்டும் அவர்கள் எடுக்கும் முடிவை ஏற்போம். நக்கீரனைப் பற்றிச் சொல்வதும் விஷம் தருவதும் ஒன்றுதான் என்று எனக்குத் தோன்றியது. என்னை எதுவுமே கேட்கவில்லை. அப்பா சம்மதித்தார். அம்மாவும்தான்

 

ஆவிடையார் கோயிலில் எங்கள் திருமணம் . செந்தூர்ப்பாண்டி கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலை முடித்து சிங்கப்பூரில் ஒரு வங்கியில் சேர்ந்து 6 மாதங்கள் ஆகியிருந்தன. நானும் செந்தூர்ப்பாண்டியோடு சிங்கைக்கு சென்றுவிடவேண்டுமாம். அம்மாவுக்கு முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை . அதுவும் அப்போது முடிந்திருந்தது. ஆனாலும் அம்மா நடக்கமுடியாது. அம்மாவையும் அழைத்துக்கொண்டு நான் சிங்கை செல்ல ஏற்பாடாகிறது. அப்பா பத்திர வேலைகளை முடித்துவிட்டு வருவதாகச் சொன்னார்.

 

இப்போது நிகழ்காலத்துக்கு வருகிறேன்

 

சிங்கப்பூர் வந்ததிலிருந்து எந்த நிகழ்ச்சியில் பேசினாலும் கிடைத்த காசில் இரண்டு மூன்று சேலைகள் அம்மாவுக்கு வாங்கிவிடுவேன். அம்மா நடக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சேலையை உடுத்திப் பார்த்தேன். 97 சேலைகள் சேர்த்துவிட்டேன். அப்பாவுக்கு 16 அங்குல அளவில் 20 கோட்லியான் சட்டைகளும் சேர்த்துவிட்டேன். இதோ அந்த அன்னையர் தின நிகழ்வில் என்ன பேசவேண்டும் என்பதை அசைபோட்டு சீரணித்துவிட்டேன்.  நிகழ்ச்சியில் என் பேச்சைக்கேட்ட ஒரு அம்மா சொன்னார். ‘நீ ஒருத்திபோதும்ம்மா உன் பெற்றொருக்கு. உன்னைப் பார்த்துக் கொண்டே அவர்கள் பசியாறிவிடுவார்கள்’ என்றார். அருகிலிருந்த அம்மா சக்கரநாற்காலியில் நெகிழ்ந்தார்.

 

100 சேலை வைராக்கியம் நிறைவேறிவிட்டது. அப்பா வரலாறு முதுகலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டார். தேசிய அளவில் நல்லாசிரியர் விருதுக்கு அவர் தேர்வாகியிருக்கிறார். வாழ்க்கைக் குளம் ததும்பி வழிகிறது. நான் அம்மா செந்தூர்ப்பாண்டி எல்லாரும் இப்போது விமான நிலையத்தில். எங்கள் மூன்று பெட்டிகளிலும் அம்மாவின் சேலைகள் அழகாகத் தூங்குகின்றன. விமானம் வானத்தில் பறக்கிறது. நான் ஆனந்தத்தில் மிதக்கிறேன். ஊர் போய்ச் சேரும் மறுநாள் எல்லாரும் டில்லிக்குப் போகிறோம். அப்பா நல்லாசிரியர் விருது வாங்குவதைப் பார்க்கிறோம். வீட்டின் கான்கிரீட் வேலைகள் முடிந்து முறைப்படி பால்காய்ச்சி குடிபோகப் போகிறோம். ஒரு பணிப்பெண்ணை அம்மாவுக்கு அமர்த்திவிட்டு நானும் செந்தூர்ப்பாண்டியும் சிங்கப்பூருக்குத் திரும்பவிருக்கிறோம். அம்மாவும் அப்பாவும் ஒரு மாதத்தில் சிங்கப்பூர் வருவார்கள். மறக்காமல் அப்பாவுக்கு பிடித்த இந்தியாவின் சீரோ சட்டைகள் 20 வாங்கி 40 சட்டைகளையும் கொடுத்துவிட்டேன். இதோ நாங்கள் சிங்கைக்குப் பறந்துகொண்டிருக்கிறோம். அப்பா சொன்னதை மீண்டும் நினைத்துக் கொள்கிறேன். ‘இடிந்த வீடு எழுப்பப்படும்’ நான் ஒரு வார்த்தை சேர்த்துக் கொண்டேன் ‘கம்பீரமாக எழுப்பப்படும்’

 

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationவெறிப்பத்து2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *