ஜே கே சார் – கௌதமன் – வாசக அனுபவம்

This entry is part 3 of 3 in the series 1 செப்டம்பர் 2024
  • பி.கே. சிவகுமார்

கௌதம் சாரின் ஜே கே சார் புத்தகத்தை இரண்டு வாரங்களில் நிதானமாகப் படித்து முடித்தேன். ஏறக்குறைய முதல் 125 பக்கங்கள் வரை நிதானமாகப் போய்ப் பின்னர் ஒரே மூச்சில் ஒரு நாளில் படித்து முடிக்கும்படி இருந்தது. ஒரு புத்தகத்தைப் படித்து முடிக்க நான் எடுத்துக் கொள்ளும் நேரம் புத்தகத்தைவிட அதிகமாக என் மனநிலையைப் பொருத்தது. ஆனாலும் இந்நூலில் முதலில் கௌதமன் சார் தன் வாழ்க்கைக் குறித்துக் கொடுக்கும் அறிமுகங்களை அறிந்த பின்னரே நுழைய முடிகிறது.

இது ஜே கே வைப் பேசுகிற அளவுக்கு அல்லது அதற்கும் மேலேயே கௌதமன் சாரின் வாழ்க்கை, வாசிப்பு, ரசனை, விருப்பு வெறுப்புகள் குறித்தும் பேசுகிறது. அதனால் இது கௌதமன் சாரைக் குறித்த நூலும் தான்.

நூல் முழுக்க இப்படி ஜே கே வைப் பற்றிப் பேசும்போது தன்னைக் குறித்தும் கௌதமன் சார் எழுதிச் செல்வது ஆசிரியரை வாசகர் நன்கறிந்து நூலைப் புரிந்து கொள்ள உதவும். மேலும் நூலுக்கு ஒரு பர்சனல் டச்சையும் தருகிறது.

ஆனால் – எது பலமோ அதுவே பலவீனமும் ஆகிறது என்பதற்கேற்ப, ஜே கே குறித்த தகவல்கள், அனுபவங்கள், அவரிடம் இருந்து வந்த கவித்துவம் மிக்க தரிசனம் போன்ற நினைவில் நிற்கும் வாக்கியங்கள், அவர் எழுத்தில் நிறைய இல்லாது பேச்சில் சரளமாகப் புழங்கிய அனைவரும் ரசித்த நகைச்சுவை ஆகியவற்றை மட்டும் எதிர்பார்த்து வருகிற ஜே கே வின் அணுக்க வாசகர்க்கு இந்நூல் அரைக் கோப்பை மட்டும் நிரம்பிய தேநீரே ஆகும். அவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக ஜே கே வைக் குறித்து இருந்திருக்கலாம் என நினைக்கக் கூடும்.

இதை இன்னொரு விதமாகவும் யோசிக்கலாம். ஜெயகாந்தனை அறிந்தவர்கள் அவரின் நெருக்கமான நண்பர்களையும் அறிய விரும்புவார்கள். அந்த வகையில் கௌதமன் சாரைக் குறித்த விவரங்கள் வாசகருக்கு உதவும். ஜெயகாந்தன் கனியத் தொடங்கிய காலம் முதல் அவர் மறைவு வரை ஏறக்குறைய 22 ஆண்டுகளுக்கு மேல் அவருடனான உறவை இந்நூலில் விரிவாகத் தன் வாழ்வோடு இணைத்து கௌதமன் சார் பதிவு செய்துள்ளார்.

இந்நூலை வாசிக்கும்போது – சிறுவயது முதல் கௌதமன் சார் கைகொண்டு வரும் பிரம்மாண்டமான தொடர் வாசிப்பும், விசாலமான திரைப்பட ஆர்வமும் அவற்றை அவர் நினைவில் கொண்டு எழுதுகிற திறமும் வியக்க வைக்கிறது. நூலின் இறுதியில் பின்னிணைப்பாக அவற்றின் பட்டியலை தந்திருப்பது பலருக்கும் உதவும். ஜே கே வுக்கு இவரைப் பிடித்துப் போக இவரின் இந்த ஆழ்ந்த வாசிப்பும், திரையறிவும் காரணமாக இருந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

கௌதமன் சார் தன் கட்டுப்பாடு மிக்க, கல்வியில் நாட்டம் செலுத்த வற்புறுத்திய நடுத்தர வர்க்கப் பெற்றோரைப் பற்றி எழுதும்போது மட்டும், அவர் சிறுவயதுக் கசப்புகளின் கசடுகள் இன்னும் அவர் பாத்திரத்தில் மீதமிருந்து, பெற்றோரைக் குறித்த முழுவதுமான எதிர்மறைச் சித்திரத்தை அளித்துவிட்டதோ எனத் தோன்றுகிறது. ஜே கே குறித்த பதிவுகளில் தன் நடுநிலை தவறக்கூடாது என்கிற ஜாக்கிரதையுடன் எழுதிய கௌதமன் சார், பெற்றோர் விஷயத்தில் அவர்கள் தரப்பிலிருந்தும் பார்த்து அவர்கள் குறித்து எழுதியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

கௌதமன் சார் வாழ்க்கை குறித்த இத்தகைய தன்வரலாற்றுக் கூறுகள் நூலெங்கும் உடன் வருகின்றன. அந்த விதத்தில் இந்நூலுக்கு ஒருவர் வாசகராகக், கௌதமன் சார், எனவும் தலைப்பு வைக்கலாம்.

1994ல் காமராஜர் அரங்கத்தில் நடந்த ஜே கே மணிவிழாவில் அவர் பேச்சை நானும் நேரில் கேட்டிருக்கிறேன். அந்த அற்புதமான பேச்சை நேரில் கேட்ட கௌதமன் சார் அதன் பெரும்பகுதியை இந்நூலில் கொடுத்திருக்கிறார். 1990களில் இருந்து – மின்னணு ஒளி / ஒலிப்பதிவு சாத்தியமான பின் – அந்த உரை உட்பட ஜே கே வின் பல உரைகள் ஒளி அல்லது ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அவற்றை எல்லாம் யார் வைத்திருக்கிறார்கள் எனத் தேடிக் கண்டுபிடித்து இணையத்தில் ஏற்றுகிற திட்டத்தை நான் இந்தியாவில் இருந்திருந்தால் முன்னெடுத்து இருப்பேன். ஜே கே சஹ்ருதயர்கள் யாரேனும் இதைச் செய்ய வேண்டும். விழாக் குழுவால் ஒலி ஒளிப்பதிவு செய்யப்பட்டும் எனக்குத் தெரிந்து பொதுவில் கிடைக்காத ஜே கே வின் மணிவிழாப் பேச்சின் பெரும்பகுதியைத் தேடியெடுத்து இந்நூலில் கொடுத்திருக்கிற கௌதமன் சார் பாராட்டுக்குரியவர். ஜே கேவின் சிறந்த உரைகளில் அதுவும் ஒன்று.

உன்னைப் போல் ஒருவன் நூலைக் குறித்து விரிவாக எழுதி, ஜே கே வை நவீன தமிழ்ச் சினிமாவின் தந்தை என்று கௌதமன் சார் முன்மொழிவதெல்லாம் பல்லாண்டுகளாக நண்பர்களுக்குள் நாங்கள் பேசி மகிழ்ந்ததைப் பிறர் மூலம் கேட்கிற மகிழ்ச்சி தருகிறது. தமிழின் முதல் தலித்திய நாவலும் திரைப்படமும் கூட அதுதான். ஆனால் அத்தகைய லேபிள்கள் இல்லாமல் ஜே கே அதை எழுதினார். அவர் தலித்தும் அல்ல என்று பல்லாண்டுகளுக்கு முன் ஒரு நண்பர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

ஜே கேவின் பாரிசுக்குப் போ தமிழில் இசைக்காக தி ஜாவின் மோகமுள்ளை விடப் பேசப்பட்டிருக்க வேண்டும். மோகமுள் கூட இசைக்காகப் பேசப்பட்டதைவிட யமுனா மீது பாபு கொண்ட மையலுக்காகவே அதிகம் பேசப்பட்டது. ஆனால் பாரிசுக்குப் போ நாவல் சமீப காலங்களில் மறுவாசிப்பில் அல்லது புதிய தலைமுறையால் உரிய முக்கியத்துவம் பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது. கௌதமன் சார் பாரிசுக்குப் போ நாவல் குறித்த சரியான மதிப்பீட்டை இந்நூலில் அளிக்கிறார். மேலும் காதல் விஷயத்திலும் கூட பாரிசுக்குப் போவின் லலிதா சாரங்கன் உறவானது அன்னா கரினினா நாவல் வரிசையில் வைக்கத் தக்கது என்பதை கௌதமன் சார் சரியாகச் சொல்கிறார்.

ஜே கே 2000ல் அமெரிக்காவில் என் வீட்டுக்கு இரவு உணவுக்கு வந்தபோது, என் தந்தையார் அவருடன் பேச அவரை அழைத்து ஸ்பீக்கரில் போட்டுக் கொடுத்தேன். அப்போது என் தந்தையார் ஜே கே விடம் “திருவாசகம் கிடைத்ததா ஜே கே” எனக் கேட்டார். ஜே கே பதிலுக்கு இல்லை என்றார். அப்போது 31 வயதான நான் அப்பாவியாக, “என்னிடம் திருவாசகம் பிரதி இருக்கிறது. தருகிறேன்” என்றேன். ஜே கே பதிலேதும் சொல்லவில்லை. நாட்கள் கழிந்து பிறகொரு முறை நண்பர்களுடனான உரையாடலில்போது ஜே கே சொன்னதில் இருந்து திருவாசகம், சிவமூலிகை, மருந்து என்பனவெல்லாம் ஜே கே குழாம் பயன்படுத்தும் புகைவகை எனத் தெரிந்தது. கௌதமன் சாரும் என் மாதிரியான பெயர்க் குழப்பங்களுக்கு உள்ளாகித் தெளிந்திருக்கிறார் என்பதைப் படிக்கையில் புன்னகை வந்தது.

என் தந்தையைவிட 9 வயது மூத்தவரான, என்னை விட 35 வயதுகள் மூத்தவரான ஜே கே விடம் பழகுவதில் – என் தந்தையாரிடம் நான் அவ்வப்போது எதிர்கொள்ள நேர்ந்த அளவுக்குக் கூட – தலைமுறை இடைவெளிப் பிரச்னைகள் உண்டாகவில்லை. ஜே கே அந்த விதத்தில் மாறும் காலத்துக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டே வந்தவர். என்னை அமெரிக்காவில் சந்தித்துவிட்டு வந்தபின் என் தந்தையாரிடம் “உன்னைவிட சிவகுமார் எனக்கு நெருக்கமாகி விட்டார்” என்று ஜே கே என் தந்தையாரை டீஸ் செய்வதுபோல சிரித்தபடியே சொன்னாராம். அது உண்மையெனில், அது ஜே கே வாலேயே சாத்தியமானது. கௌதமன் சார் தன்னைவிட 30 வயது மூத்தவரான ஜே கே தன்னை நண்பராக எப்படித் தலைமுறை இடைவெளிகளைத் தாண்டி நடத்தினார் என்பதை விரிவாகச் சொல்கிறார். இவை ஜே கேவைக் குறித்த மிகைக் கற்பனைக் கதைகள் மட்டும் செவியுற்றோருக்கு ஆச்சரியம் தரலாம்.

தினமும் குடித்தாலும் ஜே கே குடிகாரர் அல்ல. எந்தப் பழக்கத்துக்கும் நாம் அடிமையாகக் கூடாது, அதை நமக்கு அடிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றவர். அமெரிக்காவில் ஒரு விருந்தில், உங்கள் மதுவுக்கு எதைக் கலப்பீர்கள் என்ற கேள்விக்கு (ஐசா, சோடாவா, தண்ணீரா என்ற பொருளில் எழுப்பப்பட்ட கேள்வி) – நேரத்தை என்று ஜே கே பட்டென்று பதில் சொன்னார். உடன் இருந்தவர்கள் கைதட்டினார்கள். அப்படி ஜே கே நிதானமாகக் குடிப்பவர். மூன்றாவது ரவுண்டுக்கு மேல் பொதுவாகப் போகமாட்டார். மூன்றாவது ரவுண்டையே கடைசி வரை முடிக்காமல் வைத்திருந்து எல்லாரும் முடித்தபின் முடிப்பார். மதுவும் புகையும் அவர் இன்புற்றுத் துய்க்கவே அன்றி, உளறவோ, வாந்தியெடுக்கவோ அடுத்த நாள் தலைவலியென்று புலம்பவோ அல்ல என்கிற தெளிவு கொண்டவர். கனவான் போல குடிக்கவும் குடித்த பின் கனவானைவிட மேன்மையாக நடந்து கொள்ளவும் தெரிந்தவர் அவர். அப்படி அறிந்து பயன்படுத்தியதாலேயே அவரால் உடல்நலம் கெடாமல் வாழ்நாள் முழுவதும் (கடைசி சில வருடங்கள் தவிர) அவற்றோடு இருக்க முடிந்தது எனலாம். அதே மாதிரி போகிற இடங்களில் கிடைக்கிற உணவை ரசித்துச் சாப்பிடுகிறவர். உணவு, ருசி ஆகியவற்றின் மீது கோரிக்கைகள் வைக்காதவர். (இதை நான் அவருடனான அமெரிக்க அனுபவத்துக்குப் பின் எழுதிய – ஜெயகாந்தன் என்னும் மனிதர் – கட்டுரையிலும் இதை எழுதியுள்ளேன்.) ஜே கே வை நன்கறிந்த பலருக்கும் இவை தெரிந்த விஷயம் தான் என்றாலும் – கௌதமன் சார் எழுத்தின் மூலம் இது பலருக்கும் சென்றடையும்.

கௌதமன் சார் இந்நூல் குறித்து ஜே கே படைப்புகள் குறித்தத் தன் விரிவான பார்வையையும் முன்வைத்துச் செல்கிறார். அவை சில இடங்களில் ஜே கேவின் பார்வையில் இருந்து வேறுபட்டவை. அந்தப் பார்வைக்கு நியாயமாகத் தான் வாசித்த பிற விவரங்களைத் தருகிறார். ஆனால் ஜே கே இருந்தவரை அவர் நாவல்கள் தொகுப்பின் வெளியீட்டு விழாவில் உரையாற்றியது தவிர – வேறெங்கும் ஜே கே வுடன் அவர் படைப்புகள் குறித்து விரிவாகப் பேசியதில்லை என அவர் நூலில் சொல்வதில் இருந்து தெரிகிறது. இவற்றை ஜே கே இருந்தபோதே கௌதமன் சார் சொல்லியிருந்தாலும் ஜே கே உடன் பதில் சொல்லாமல் கேட்டிருப்பார். சிலவற்றுக்கு ஆமோதித்து இருக்கலாம். சிலவற்றுக்குப் பிறிதொரு பேச்சுவாக்கில் போகிறபோக்கில் பதில் சொல்லியிருக்கலாம். அப்படித் தன் வாசகப் பார்வையை ஜே கேவிடம் அவர் பகிர்ந்து அவர் பதில் என்னவாக இருந்திருக்கும் என்று அறிகிற அனுபவத்தைக் கௌதமன் சார் தவறவிட்டுவிட்டார் என்று தோன்றுகிறது.

ஜே கே எழுதிய இமயத்துக்கு அப்பால் என்கிற டால்ஸ்டாய் குறித்த குறித்துத் தன் தரப்பு தரவுகளோடு இந்நூலில் கௌதமன் சார் விமர்சனம் வைக்கிறார். ஜே கே டால்ஸ்டாயை இந்திய ரிஷிகளில் ஒருவரைப் போல் பார்த்தவர். ஒருவர் எப்படி இருந்தார் என்பதும் ஒருவரை நாம் எப்படிப்
பார்க்கிறோம் என்பதும் இருவேறு விஷயங்கள். இதை நாம் புரிந்து கொண்டால், ஜே கே டால்ஸ்டாயை எவ்விதம் பார்த்தார் என்பதையும் புரிந்து கொள்ள முடியும். இந்த இடத்தில் ஜே கே வின் கட்டுரைத் தொகுப்பில் வாசித்த அவர் ஜே கிருஷ்ணமூர்த்தி குறித்து எழுதிய கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. அதில் ஜே கே சொன்னமாதிரி ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்லவில்லை என ஒரு வாசகர் எழுதியதற்கு, ஏற்றுக் கொண்டு சரி இதை நான் சொல்கிறேன் என ஜே கே எழுதியிருப்பார். அடுத்த தரப்பு சொல்வதன் மீது சரிபார்க்காமல் நம்பிக்கை வைக்கும் பண்பு எப்போதும் ஜே கே விடம் இருந்தது. இது தமிழ் எழுத்தாளர்களில் அரிய குணம். அப்படி இமயத்துக்கு அப்பால் குறித்த தன் பார்வையைக் கௌதமன் சார் ஜே கே விடம் பகிர்ந்திருந்தால் – சரிதான் ஆனால் இது டால்ஸ்டாயைக் குறித்த என் புரிதல் – அதற்குக் காரணம் என மேற்கொண்டு சொல்லியிருப்பார் என நினைக்கிறேன்.

இமயத்துக்கு அப்பால் நூலின் குறைகளைச் சொன்ன கௌதமன் சாரிடம் அவர் நூலின் ஒரு தகவல் பிழையையும் சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என நம்புகிறேன். அம்ஷன்குமார் இயக்கிய ஒருத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர் அம்ஷன் என நூலில் வருகிறது. நானறிந்து அத்திரைப்படம் அம்ஷனுடன் அவர் நண்பர்கள் சிலர் (கோபால் ராஜாராம் உட்பட) இணைந்து தயாரித்ததுதான். ஒரு தயாரிப்பாளர் பெயர் இருந்தால் நல்லது எனத் திரையில் அம்ஷன் பெயர் மட்டும் தயாரிப்பாளராக வந்திருக்கலாம்.

ஜே கே விடம் இருந்த தருணங்களில் அவர் பேசுவதைக் கேட்கிற வாய்ப்புக் கிடைத்தால், நினைத்துப் பார்த்து ரசிக்கிற அளவுக்கு அவரிடமிருந்து புதிய கோணங்களும் புதிய சிந்தனைக் கீற்றுகளும், ஊடாடும் நகைச்சுவையும், கவிதை வரிகளும் பிறந்து கொண்டே இருக்கும். ஒரு கலைஞனை அணுக்கமாக அறிவது என்பது உடன் குடிப்பதோ, புகைப்பதோ, பயணிப்பதோ, நேரம் செலவிடுவதோ அன்று. அத்தகைய தருணங்களைப் பதிவு செய்வதன் மூலமே அடுத்தவர் அக்கலைஞனை உள்ளார்ந்து அறிய இயலும். இந்நூலில் அத்தகைய தருணங்கள் உண்டு. ஆனால் கௌதமன் சார் ஜே கே வுடன் செலழித்த பொழுதுகளுக்கு நியாயம் சேர்க்கிற அளவுக்குப் போதுமானவையாக இல்லை. கௌதமன் சாரின் அசாத்தியமான நினைவுத் திறனுக்கு அவற்றை இன்னும் நூலில் கொண்டு வந்திருக்கலாம்.

என் தந்தையார் பி.ச. குப்புசாமி ஹிந்து தமிழ் திசை நாளிதழில் ஜெயகாந்தனோடு பல்லாண்டு தொடர் எழுதுவதற்கு முன் அதற்கு ஏற்பாடு செய்தவரான சஹ்ருதயர் தினமணி நடராஜன் சாருடன் ஜெயகாந்தனைச் சந்தித்துத் தொடர் எழுதவிருக்கிற வாய்ப்பைச் சொல்லி, எழுதலாம்னு இருக்கேன் ஜேகே என்று அவரின் அனுமதியை எதிர்பார்த்தாராம். ஜேகேயுடனான என் தந்தையாரின் உறவு குரு சீடரின் உறவை ஒத்தது எனினும் ஜேகேவுடன் ஏறக்குறைய 60 ஆண்டுகள் இருந்தவர். ஜேகே இறந்தவுடன் ஜேகே பிரிக்கச் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போன ஒரு கவரை அவர் துணைவியார் என் தந்தையாரிடம் கொடுத்தே ஜேகே குடும்ப உறுப்பினர்கள் முன் பிரிக்கச் சொன்னார். என் தந்தையார் அந்த அளவுக்கு ஜேகேவையும் அவர் மனதையும் அறிந்தவர். ஜேகே முகம் சுளிக்கிற அளவுக்கு எதையும் எழுதிவிடக் கூடியவர் அல்லர். ஆனால் என் தந்தையார் தொடர் எழுதுகிறேன் எனச் சொன்னதும், “நெருக்கமாகத் தெரியும் என்பதற்காக தெரிந்ததை எல்லாம் எழுதிவிடக் கூடாது” என்ற ஒரு வாக்கியத்தை மட்டும் ஜேகே சொன்னார் என என் சமீப இந்தியப் பயணத்திலும் தினமணி நடராஜன் சார் என்னிடம் சொன்னார். இந்தக் காரணத்தினாலேயே பலர் கேட்டும் ஜே கே தன்னுடைய சபை உரையாடல்கள் மின்னணு கருவிகள் மூலம் பதிவு செய்யப்படுவதை விரும்பவில்லை. இதன் பொருள் ஜே கே பொதுவில் பகிரத்தகாத விஷயங்களைப் பேசுகிறவர் என்பதல்ல. ஜே கே சொன்ன பொருளில், தொனியில் அவை பதிவு செய்யப்படாமல் போகும் ஆபத்து பெரிதும் உண்டு என்பதுதான். இப்படி ஜே கே குறித்து எழுதுவது என்பது கத்தியின் மீது நடக்கிற காரியம்தான். அந்த விஷயத்தில் கௌதமன் சார் இந்நூலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

நூலில் என் தந்தையார் குறித்தும், நான் வளர்ந்த ஊரான திருப்பத்தூர், ஒரு வருடம் வசித்த நாகராஜம்பட்டி, என் தந்தையாரின் உள்ளூர் நெருங்கிய நண்பர்கள் (ஜே கே குழாம் நண்பர்களும் கூட) மற்றும் திருப்பத்தூர் நண்பர்கள் ஜே கேவைக் கொண்டாடிய விதம் ஆகியன விரிவாக இடம்பெற்றுள்ளன. திருப்பத்தூருக்கும் ஜெயகாந்தனுக்கும் இருந்த இந்த முக்கியமான உறவை ஏனோ ஜெயகாந்தன் குறித்த இரு ஆவணப்படங்களும் கோடிட்டுக் கூட காட்டவில்லை. முன்னர் கலைஞன் பதிப்பக மாசிலாமணி போன்றோ இதுகுறித்துச் சில வார்த்தைகள் பதிவு செய்திருந்தாலும், இவ்வளவு விரிவாக அந்தத் தொடர்பை, உறவை இந்நூலில் எடுத்துச் சொன்ன முதல் நபர் கௌதமன் சார்தான். அதற்காக அவருக்கு நன்றிகள்.

நூல் அமைப்பைப் பொருத்தவரை ஜே கே உடனான அனுபவங்களைச் சொல்வதை ஒரு பாகமாகவும், ஜே கே படைப்புகள் குறித்த கௌதமன் சார் பார்வையை
ஒரு பாகமாகவும் பிரித்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஜே கே குறித்த அனுபவங்கள் படிக்க வேகமாக ஓடுகின்றன. ஜே கே படைப்புகள் குறித்த பார்வைகள் அவ்வேகத்துக்குத் தொய்வை உண்டாக்குகின்றன. வாசிக்கிற எல்லாரும் விமர்சகர் தான். விமர்சனம் ஒருவரின் ரசனை, கோட்பாடுகள் சார்ந்தது. இந்நூலை என்னைப் போன்ற ஒருவர் வாசிப்பதன் நோக்கம ஜே கே என்கிற ஆளுமையின் அறியாத பக்கங்களை அறிவதுதான். ஜே கே படைப்புகள் குறித்த கௌதமன் சாரின் பார்வையை அறிவது என்னைப் போன்றோர்க்கு இரண்டாம் பட்சம்தான். ஆகையால் நூலை இவ்விதம் பிரித்திருந்தால் வாசிப்புக்கு இன்னும் உதவியிருக்கக் கூடும்.

இந்நூல் ஜே கேவை நன்கறிந்தவர்களுக்குப் புதியதாய் ஏதும் சொல்கிறதா என்கிற கேள்வி முக்கியம் இல்லை. அவர்களுக்கும் கூட ஜே கே வின் நினைவுத் திறனுக்குச் சாட்சியாக கௌதமன் சார் சொல்கிற நிகழ்ச்சிகள் போன்றவை புதியவை. ஜே கே வை எழுத்தைத் தாண்டி அறியாதவர்களுக்கு ஜே கே வின் ஆளுமை குறித்து என்ன சொல்கிறது என்பதே முக்கியம். என்னைப் போன்ற வாசகர்க்கு நான் புத்தகம் வழியே ஏறக்குறைய 20 ஆண்டுகள் முன்னறிந்த ஜெ. ஶ்ரீசந்திரன் யார் என்கிற விவரம் உட்படப் புதிய தகவல்கள் இருந்தன. ஜேகே அளவுக்கு கௌதமன் சாரும், காந்தியையும் டால்ஸ்டாயையும் படித்திருக்கிறார் என்றும் இந்நூலால் உணரமுடியும்.

ஜே கேவை எழுத்தைத் தாண்டி அறியாதவர்களுக்கு அவர் ஆளுமையின் சித்திரம் ஒன்றை நேர்மையாகத் தீட்ட முயல்கிறது என்பது இந்நூலின் பலம். ஜே கே வைப் போலவே – எந்த நெருடலையும் பொறுத்துக் கொள்ளாத, சுயமரியாதை மிக்க, அரசியலில் ஜே கேவுக்குப் பல நேரங்களில் எதிர்ப்பார்வை கொண்ட, ஒருவர் ஜே கேவின் நல்ல நண்பராக இருக்க முடியும் என்பது புதிதல்ல. அவர்கள் மனம் திறந்து ஜே கேவைக்குறித்துச் சொல்கிறவை முக்கியமானவை. அதில் பலர் ஜெ கேவைக் குறித்துக் கட்டுரைகள் மட்டுமே எழுதியுள்ளனர். விரிவான முதல் நூல் கௌதமன் சாருடையது தான்.

ஜே கேவைக் குறித்து வந்துள்ள நூல்களில் சிறந்ததாக பி.ச. குப்புசாமி எழுதிய ஜெயகாந்தனோடு பல்லாண்டு தொடரை இந்நூலில் கௌதமன் சாரும் சொல்கிறார். அதற்கு அடுத்தபடியாக, ஜெயகாந்தன் மணிவிழாவுக்குப் பின் அவர் தொகுத்து வெளியிட்ட ஜே கே பற்றி அவரின் பல நண்பர்களும் எழுதிய நானும் எனது நண்பர்களும் நூலைக் குறிப்பிடுவேன். என்னளவில் அந்த வரிசையில் மூன்றாவதாக வைக்கத்தக்க நூல் கௌதமன் சாரின் இந்நூல்.

ஜே கேவைக் குறித்து எழுதியதன் மூலம் தன் வாழ்க்கையையும் திரும்ப விரிவாகப் பார்க்கும் வாய்ப்புப் பெற்று, ஏற்கனவே முயன்ற எழுத்தை மீண்டும் தொடங்கி, தன்னை எழுத்தாளராகப் புத்துயிர்ப்பு செய்திருக்கிறார் கௌதமன் சார். ஜே கே விடமிருந்து அதைத் தொடங்கிய அவருக்கு வாழ்த்துகள்.

புத்தக வெளியீடு: ஜே கே சார் – கௌதமன் – டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் வெளியீடு – விலை ரூ. 500

Series Navigationவலி வாங்குதல்
author

பி கே சிவகுமார்

Similar Posts

Comments

  1. Avatar
    R.jayanandan says:

    சிவகுமாரின் நீண்ட பார்வையில், ஜே.கே.வை
    தரிசிக்க முடிந்தது. ஜே.கே.வுடன்,கெளதம்சாரின் நீண்ட நெடும்பயணம் ,மீண்டும், ஜே.கே.வை பல கோணங்களில் பார்க்க முடிகின்றது.

    -ஜெயானந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *