– பி.கே. சிவகுமார்
2003-ல் கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட அசோகமித்திரனின் 2000 ஆண்டுவரையிலான சிறுகதைகளின் இரு தொகுப்புகளில், முதல் தொகுப்பின் இரண்டாவது கதை – இந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும். இதுவும் 1956ல் எழுதப்பட்டு இருக்கிறது.
கதை என்று சொல்வதைவிட ஒரு நிகழ்வு. அதனால் ஏற்படும் சிந்தனைகள் எனச் சொல்லலாம். மூன்றே கால் பக்கக் கதைதான்.
தொகுப்பின் முதல் கதையைப் போல இதுவும் நாடகம் குறித்துதான். கதையின் மையப்பாத்திரமும் நாடகத்தின் நாயகிதான். கண்டெடுத்துக், கஷ்டப்பட்டு பயிற்சி கொடுத்து, தயார் செய்து, நாடகத்தில் நாயகியாக வளர்த்தெடுத்து, கொஞ்சம் பேரும் புகழும், பின்னாடி ஆட்களும், சினிமா வாய்ப்பும் வருகிற நாடக நாயகி, மூன்று வருடங்களில் – இந்த ஒரு ஞாயிறு மட்டும் நான் வராமல் சமாளித்துக் கொண்டு விடுவீர்களா எனக் கேட்கிறாள். அதுவும் அப்போதுதான் ஒரு நாடகம் வெற்றியடைந்து, அவனுக்கும் அதனால் சமூக அங்கீகாரமும் கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது.
அப்படிக் கேட்டுப் போன முன்னாள் நாயகி இந்திரா திரும்பவேயில்லை. இந்த நாயகி விஷயத்திலும் இதுதான் நடக்கப் போகிறது என நாடகக் கம்பெனியின் முதலாளி, இயக்குநர், கதாநாயகன் என எல்லாமுமான அவனுக்குத் தெரிகிறது.
“அவளுக்கு எஜமானனாகவும் ஆசானாகவும் அவளுடைய எதிர்காலத்தைச் சமைப்பவனாகவும் பல தருணங்களில் அவளுடைய பெண்மைக்கு உரியவனாகவும் அவன் இருந்த மூன்று வருட காலத்தில்” என்று போகிறபோக்கில் சொல்கிற சொற்றொடரில் அவர்கள் உறவையும், அந்தப் பிரிவு ஒரு நாடக நாயகியின் பிரிவாக மட்டும் இருக்காது என்பதையும் அசோகமித்திரன் சொல்லிவிடுகிறார்.
மூன்று வருடங்களுக்கு முன் முந்தைய நாயகி இந்திரா இதேபோல் விட்டுவிட்டுப் போனபோது அவன் மிகவும் சோர்ந்திருந்ததையும், அப்போது இந்த நாயகி மக்குகளில் மக்குவாகவும், மிகவும் பயந்தவளாகவும், கூன்முதுகு கொண்டவளாகவும், குளறுவாயும் மேடை பயமும் நிறைந்தவளாகவும் ஓர் அயோக்கிய ஏஜெண்ட் மூலம் 16 வயதுப் பெண்ணாக தன்முன் வந்து நின்றதையும் அவன் நினைவுகூர்கிறான்.
விட்டுப் போகிறவளுக்குச் சினிமா வாய்ப்புகளும் செல்வந்தர்களும் காத்துக் கிடக்கலாம் என உணர்கிறான். இன்னும் இரண்டே வருடத்தில் உலகமே அவள் காலடியில் இருக்கலாம். இந்த மூன்று வருடத்தில் நடிப்பிலும் அழகிலும் அந்த அளவு தேர்ந்துவிட்டாள் என அவனுக்குத் தெரிந்திருக்கிறது.
இப்படியே ஒவ்வொரு நாடக நாயகியும் மூன்று வருடத்துக்கு ஒருமுறை விட்டுவிட்டுப் போய்க் கொண்டிருந்தால் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்படுகிறது. கடைசியில் அவனுக்கு அவளை அப்படியே தரதரவெனப் படுக்கையறைக்கு இழுத்துச் சென்று, அவள் மீது பாய்ந்து அவளைக் கசக்கிப் பிழிய வேண்டும் என்கிற வேகம் உண்டாவதைச் சொல்வதோடு கதை முடிந்து விடுகிறது.
தொழிலின் இழப்பைவிட, அவனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உண்டாகும் துணையின் இழப்பே வருத்தத்தையும் கோபத்தையும் தருகிறது என்பதை முடிவில் அறிகிறோம். இதைக் குறிப்பால் உணர்த்துவதுபோல் முன்னாள் நாயகி இந்திரா விட்டுப்போனபோது மிகவும் சோர்ந்துபோய் நிராசையில் இருந்தான் என்பதைக் கதையினூடே அசோகமித்திரன் கோடிட்டுக் காட்டுவதைப் புரிந்து கொண்டால் இந்த முடிவையும் புரிந்து கொள்ள முடியும்.
இந்தக் கதை முழுக்க முழுக்க அவன் பார்வையில் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. நாடகத்தில் இருந்து சினிமாவுக்குப் போய் பணமும் புகழும் பெறவேண்டும் என்பது எல்லா நாடக நாயகிகளுக்கும் இருக்கக் கூடிய இயல்பான ஆசை என்பதை அவன் புரிந்து கொண்டவனாகத் தெரியவில்லை. மாறாக அதைப் பார்த்து எரிச்சலும், கோபமும் கொள்பவனாகவும் அது நியாயமில்லை என்று நினைக்கிற சுயநலம் கொண்டவனாகவும் இருக்கிறான்.
இந்தக் கதை நாயகியின் பக்கம் நின்று எதையும் பேசவில்லை. மாறாக நாயகனின் பார்வையில் சொல்லப்பட்டு, நாயகி குறித்த ஓர் எதிர்மறை சித்திரத்தையே வாசகர் மனதில் எழுப்புகிறது.
நல்லவேளையாக, இக்கதையைப் படித்த நவீன பெண்ணியவாதிகள் யாரும் இந்த விஷயத்தில் அசோகமித்திரன் தலையை உருட்டவில்லை.
– பி.கே. சிவகுமார்
– ஜூலை 5, 2025
#அசோகமித்திரன்