– பி.கே. சிவகுமார்
அசோகமித்திரனின் பத்தாவது சிறுகதை, மூன்று ஜதை இருப்புப்பாதைகள்.
அசோகமித்திரன் இந்தக் கதைக்குத் தலைப்பு வைக்க நிறைய யோசித்தமாதிரி தெரியவில்லை. கதையைப் படித்தால் இதைவிட நல்ல தலைப்பு இருக்கலாம் எனத் தோன்றும். தலைப்புகளில் அதிகம் யோசிக்காத அசோகமித்திரன் வார்த்தைகளில் கவனம் காட்டுகிறார். முக்கியமாக, அவர் கதைகளில் அந்தக் காலத்தில் பிராமண வீடுகளில் பேசப்பட்ட, இன்றும் கணிசமாகப் பேசப்படுகிற பிராமண பாஷையின், அது கொண்டிருந்த அதற்கேயுரிய கொச்சை மொழியின், அல்லது மணிப்பிரவாளத்தின் தாக்கம் அதிகம் இல்லை. பிராமண வாழ்க்கையைக் கூட அதிகம் உரைநடைத் தமிழிலேயே அசோகமித்திரன் 1950களில் எழுத ஆரம்பித்த நாளில் இருந்து பதிவு செய்கிறார். இந்த முடிவை அவர் எதனால் எடுத்தார் எனத் தெரியவில்லை. தன் கதைகள் பிராமணர்களைக் குறித்தது என்ற குறுகிய வட்டத்துக்குள் நின்றுவிடக் கூடாது என்றா? தன் கதைகள் பெரும்பான்மை சமூகத்தினர் நெருக்கமாக உணரும் அளவுக்குப் பொதுமொழியில் எழுதப்பட வேண்டும் என்றா? வேறு காரணங்கள் உண்டா? எதுவாயினும் இது அசோகமித்திரன் எடுத்த விவேகமான முடிவு. மணிப்பிரவாளமும் சம்ஸ்கிருதமும் கலந்த தமிழை அவர் முடிந்தவரை இயல்பாகத் தவிர்த்து எழுதுவது தமிழின்பால் அவருக்கு இருக்கிற நேசத்தையே காட்டுகிறது.
என்ன இப்படிச் சொல்கிறீர்கள். இந்தக் கதையின் தலைப்பிலேயே ஜதை என்கிற வார்த்தை இருக்கிறதே என்கிறீர்களா? நான் மொழியில் சமூக பாதிப்புக்கேற்ப வார்த்தைகள் அடைகிற மாற்றங்களைக் கவனிக்கிற குணம் சிறிது கொண்டவன். கலைஞரே – 1974 வரை என நினைக்கிறேன் – மத்திய சர்க்கார் என – சர்க்கார் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். அதனால் இந்த வார்த்தை பிராமண வார்த்தை இல்லை. தமிழில் அப்போது சகஜமாகப் புழங்கிய வார்த்தைதான். இப்போதும் பயன்படுத்தப்படலாம்.
மேலும் இந்த இடத்தில் அசோகமித்திரனுக்கு ஜதை, ஜோடி ஆகிய வார்த்தைகளுக்கான நுட்பமான வித்தியாசம் தெரிந்திருக்கிறது. ஜோடி என்கிற வார்த்தை ஒன்றாகச் சேர்ந்து இருப்பதைக் குறிப்பது. ஜதை என்பது இணைந்து இருப்பது அல்ல, ஆனால் ஒன்றில்லாமல் இன்னொன்று இருக்க முடியாதது. ஜெயமோகனின் மொழியாளுமையைக் குறித்து எழுதும்போது ஒருமுறை – விமலாதித்த மாமல்லன் என நினைக்கிறேன் – ஜெயமோகன் புல்முனை என எழுதியதை விமர்சித்து நுனி என்பதே சரியான வார்த்தை என்பதைச் சுட்டியிருந்தார். இத்தகைய சரியான வார்த்தைகளின் தேர்வு அசோகமித்திரனுக்குப் பிரச்னையில்லை. ஜெயமோகனாவது மலையாளத்தின் செல்வாக்கு இருந்தபோதும் தமிழ் புழங்கும் அந்தக் கால கன்யாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர். அங்கு பிறந்து வளர்ந்தவர். அசோகமித்திரன் பிறந்ததில் (1931) இருந்து 21 வருடங்கள் செகந்தராபாத்தில் வாழந்தவர். தந்தையாரின் மறைவுக்குப் பின் தன்னுடைய 21வது வயதில் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இந்தக் கதை உட்பட 10 கதைகளை அசோகமித்திரன் எழுதிய – 1950களில் – அவருடைய முதல் எட்டுவருட சென்னை வாழ்க்கையில் – அவர் தமிழில் சரியான சொற்களைப் பயன்படுத்தவில்லை என்று யாரும் சொன்னால் அதற்கான சலுகைகளைப் பெறும் காரணம் அவருக்கு இருந்தது. ஆனாலும் அவர் வார்த்தைகளில் கவனம் காட்டியிருக்கிறார். ஒன்றே போல் தோன்றும் வார்த்தைகளுக்கிடையேயான நுட்பமான வேறுபாடு அவருக்குத் தெரிந்திருக்கிறது.
அசோகமித்திரன் எழுத்தின் மீதுள்ள பிரியத்தால் – அவரை நேரடியாக அறியாவிட்டாலும் – அவருக்குத் தமிழ் மீது நேசம் என அடித்து விடுகிறேன் என்கிறீர்களா? இந்தக் கதையின் தலைப்பின் இன்னொரு வார்த்தை, இருப்புப்பாதைகள். அசோகமித்திரன் அப்போது அதிகம் புழக்கத்தில் இருந்த, இப்போதும் இருக்கிற, தண்டவாளங்கள் என்ற தமிழ் வார்த்தையை வைத்திருக்கலாம். ஆனால் இருப்புப்பாதைகள் என்கிற தூய, நல்ல தமிழைத் தேர்ந்தெடுக்கிறார். இருப்புப்பாதைகள் என்கிற பிரயோகத்தை 1959-ல் ரயில்வே நிலையங்களில் மட்டுமே பார்த்திருக்கலாம். ஆனால் அசோகமித்திரனுக்கு அது ஒரு நல்ல தமிழ்ச்சொல் எனப் பிடித்திருக்கிறது.
மொழி மீதான நேசம் என்பது அதை அறிவித்துக் கொள்வது மட்டுமல்ல. ஒருவர் அறிந்தும் அறியாமலும் அவர் எழுத்தில், பேச்சில் வருவதும்தான்.
கதையை வாசித்தல் என்பது சும்மா படித்துவிட்டுப் பிடித்தது, பிடிக்கவில்லை என்பதல்ல. இதையெல்லாம் கவனிப்பதுதான். சிறுகதை எழுத மட்டும் அல்ல, எழுத விரும்புகிறவர்கள், இலக்கிய ஆர்வமுள்ளவர்கள் அனைவருமே கவனிக்க வேண்டிய விஷயங்கள் தான் இவை.
அசோகமித்திரன் தனிப்பட்ட வாழ்க்கையில், வீட்டில், பிராமண பாஷை பேசினாரா எனத் தெரியாது. மொழிக்குப் பதில் பாஷை என்கிற சொல்லை பிராமண பேச்சு வழக்கைச் சொல்லும்போது தெரிந்தே பாவிக்கிறேன். ஏனெனில் அது மொழியல்ல. ஒரு பேச்சு வடிவமே. வேறு நல்ல சொல் எனக்குத் தெரியவரும்வரை, இத்தகைய இருக்கிற சொற்களை நான் பயன்படுத்துவதுண்டு. ஒருவேளை, தனிவாழ்க்கையில் அவர் வளர்ந்த சூழலால் அவரிடம் அந்தத் தாக்கம் இருந்தது என்றாலும், எழுத்தில் அதைக் கொண்டுவராத விவேகம் அவரிடம் இருந்திருக்கிறது.
அதேபோல் இந்தக் கதையில் ஹிருதயம் என்கிற அக்கால சொல்லாட்சிக்குப் பதில் இதயம் என எழுதுகிறார். நான்காம் இலக்கமிட்ட என்ற பிரயோகத்தில் எண்ணுடைய என எழுதாமல் இலக்கமிட்ட என்கிற மேலான சொல்லைப் பாவிக்கிறார். அதே நேரம், சரீரம் என அப்போது இருந்த வார்த்தையை பாவிக்கிறார். உடல் என எழுதியிருக்கலாமே எனத் தோன்றலாம். கலைஞருக்கே 1974 வரை சர்க்கார் என்ற வார்த்தை சகஜமாக வந்திருக்கிறது என்னும்போது, அதே சலுகையை அசோகமித்திரனுக்கும் கொடுப்பதுதானே நியாயம்? ஜன சஞ்சாரம் போன்ற்ஃ வார்த்தைகள் கதையில் உண்டு. பொதுமக்கள் பின்னால் வந்த சொல். அந்தக் காலத்தில் பாவிக்கப்பட்ட சொல், பொதுஜனம் தான். அதனால் அ.மி.யும் அதைச் செய்திருக்கிறார். சஞ்சாரம் என்று பிற்காலத்தில் தன் படைப்பொன்றுக்கு எஸ். ராமகிருஷ்ணன் தலைப்பிட்ட நினைவு. எஸ்.ரா வை அதற்காகப் பொறுக்கலாம் எனில் அசோகமித்திரனையும்.
இந்தக் கதை குறித்த பதிவு – அசோகமித்திரன் கதைகளில் வார்த்தைகளின் தேர்வு குறித்த பதிவாக – இந்தக் கதையை உதாரணமாக வைத்து நீண்டுவிட்டது. அசோகமித்திரன் கதைகளில் வார்த்தைகளின் தேர்வைப் பிறகதைகள் வைத்தும் செய்யலாம். அந்த ஆய்வை நான் ஆரம்பித்து வைத்துள்ளேன். பிறர் இந்தத் திரியைத் தொடர்வது வரும் காலத்தில் நடக்கும்.
அடுத்த பதிவில் இந்தக் கதையைக் குறித்து பார்ப்போம்.
– பி.கே. சிவகுமார்
– ஜூலை 20, 2025
– அசோகமித்திரன் சிறுகதைகள் – தொகுப்பு 1 – கவிதா பப்ளிகேஷன்ஸ்
#அசோகமித்திரன்
- மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் – 3
- வண்டி
- காடன் கண்டது – பிரமிள் – சிறுகதை குறித்த கலந்துரையாடல்
- குளிர்வித்தால் குளிர்கின்றேன்
- பூஜ்யக் கனவுகள்
- அசோகமித்திரனின் “ஒற்றன்”
- அப்பாவின் திண்ணை
- சொல்லவேண்டிய சில…..மூத்த குடிமக்களும் சமூகமும்
- யாசகப்பொழுதில் துளிர்த்து
- நடக்காததன் மெய்
- அருகில் வரும் வாழ்க்கை
- கவிதைகள்
- மகிழ்ச்சி மறைப்பு வயது
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 10
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 11
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 12