ஜயமுண்டு பயமில்லை

This entry is part 36 of 44 in the series 30 அக்டோபர் 2011

காற்றில் மிதந்து வருகிற மாதிரி பரவச நிலையில் வந்துகொண்டிருந்த கவிஞரை அவர்கள் எதிர்கொண்டனர்.

விடியிருளில் நிழலுருவாய்த்தான் அவரது வடிவம் புலப்பட்டது. ஆனால் அவரது நடை, உடை, பாவனைகள் வருவது அவர்களுடைய கவிஞர்தான் என்பத்தை வெகு எளிதாய்ப் புலப்படுத்திவிட்டது

கவிஞர் அருகில் வந்த பிறகு அவரது நிறம் மங்கிய கறுப்பு அல்பாகா கோட்டில் எல்லாம் மணல் படர்ந்து கிடப்பதும் தலையில் குலைந்துபோன பாகையிலும் திட்டுத் திட்டாக மணல் அப்பி யிருப்பதும் தெளிவாகவே தென்பட்டது.

“என்ன பாரதி இது, நாங்களானால் காலை நேர நடைக்காகக் கடலோரம் போகிறோம் என்றால் நீ அங்கிருந்து வருகிறாய்!” என்றார், மண்டையம்.

கவிஞர் பதில் சொல்லாமல் சிரித்தார். கசங்கிப்போன கோட்டில் ஆங்காங்கே ஒட்டியிருந்த மணலை அப்போதுதான் கவனித்தவர்போல் தட்டிவிட்டுக்கொண்டார். . அவசரமாகச் சுற்றியிருந்ததால் நெகிழ்ந்து காற்றில் அலை பாய்ந்துகொண்டிருந்த தலைப்பாகையை சரி செய்துகொண்டார்..

“ராத்திரி பூராவும் கடல் கரையிலேயே படுத்துக் கிடந்துட்டு, வறயாக்கும். இருந்து சூரியோதயத்தையும் தரிசிச்சு கிரமப்படி நமஸ்காரம் பண்ணிட்டு வர வேண்டியதுதானே? நாங்க என்னடான்னா என்ன ஆகுமோ, ஏதாகுமோன்னு ஒருத்தருக்கொருத்தர் யோசனையிலே உழண்டுண்டு இருக்கோம். நீ பாட்டுக்கு கடலோர மணல் வெளியிலே வேளைகெட்ட வேளையிலே புரண்டுண்டும் பகல்ல தோப்பு துரவுன்னு சுத்திண்டும் திரியறே” என்று உரிமையுடன் கடிந்துகொண்டார், ஐயர்.

“நேத்து இருட்டினப்புறம் கடோலரப் பக்கம் போய் வரலாம்னு தோணித்து. என்னைப் பார்த்ததும் .சமுத்திர ராஜனுக்கு என்ன சந்தோஷமோ, ஒரேயடியாக ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தான். அந்தக் கரிய நிறப் பெருவெளியாய்க் கிடக்கும் சமுத்திர ராஜனோட தாண்டவம் கிருஷ்ணனின் காளிங்க மர்த்தனமாய் தெரிஞ்சதில் இந்தக் கவிராஜன் லயித்துப் போயிட்டேன். நேரம் போனதே தெரியலே. பிரக்ஞை வந்து சுற்றுமுற்றும் பார்த்தா பொழுது விடியத் தொடங்கிவிட்டிருக்கு! என்ன செய்யலாம்?” என்று சமாதானம் சொன்னார், கவிஞர்.

“நேத்துலேருந்து அரவிந்த பாபு எங்கே நம்ம கவிஞரைக் காணலேன்னு கேட்டுண்டே இருக்கார். எல்லாரும் கலந்து பேசணுங்கறார். அவ்ருக்கு என்ன பதில் சொல்லறதுன்னே தெரியலே. உன்னை எங்கேயெல்லாம் தேடறது?” என்றார் ஐயர்.

“அப்படி என்ன தலைபோகிற காரியம் ஸ்ரீமான் வராகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்வாள் அவர்களே? பிரிட்டிஷ்காரனுக்கும் ஃப்ரெஞ்சுக்காரனுக்கும் கண்ணுல மண்ணைத் தூவற மாயாவி நீங்கள் கூட இருக்கும்போது மந்திராலோசனைக்கு வேறு ஒருத்தர் வேணுமா என்ன? அதுவும் என்னை மாதிரி வெறும் பாட்டுக் கட்டிண்டு திரியற விவரம் போதாத ஆள் இருந்துதான் ஆகணுங்கற அவசியம் என்ன?”

“சும்மா அலட்டாதீர்! நீர் என்ன லேசுப்பட்ட ஆளா” என்றார் மண்டையம் ஸ்ரீநிவாஸாச்சாரியார்..

“சரி, அப்படி என்ன தலை போகிற விஷயமாம்?”

“எல்லாம் அந்த எத்ராங்ஷேர் விவகாரந்தான்” என்றார் வ.வே.சு. ஐயர்.

“ஓ, அந்தப் பூச்சாண்டியா, பார்த்துடலாம் ஒரு கை” என்று சிரித்தவாறே நகரத் தொடங்கினார், கவிஞர்.

“என்ன அவ்வளவு அலட்சியமா சொல்லிட்டீர்? இது தலைபோற விஷயம்னு தெரியாதாக்கும்” என்றார், ஸ்ரீநி.

“ஜயமுண்டு பயமில்லை” என்று சொல்லியவாறே காற்றில் மிதந்து போனார், கவிஞர்.

அனைவரும் அவர் போவதையே வியப்புடன் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

“இவருக்கு இருக்கிற கவலையில்லாத மனம் நமக்கெல்லாம் கொடுத்து வைக்கவில்லை பாருங்கள்” என்று பெருமூச்செறிந்தார், ஸ்ரீநிவாஸாச்சாரியார்.

“அது பராசக்தியின் குழந்தை, ஸ்வாமி! அதற்கு ஏது கவலை, பயம் எல்லாம்? ஆனால் நாம்தான் இந்தப் பிரச்சினைக்கு எல்லார் சார்பிலும் ஒரு தீர்வு கண்டாக வேண்டும். அவரை எதற்கு தொந்தரவு செய்ய வேண்டும்? அவர் பாட்டுக்கு ஆனந்தமாகக் கவிதை வெள்ளத்தில் திளைத்துக்கொண்டிருக்கட்டும்னு விட்டுடறதுதான் நல்லது. ஆனா அரவிந்த பாபுதான் தீர்மானமா இருக்கார், ஆலோசனைக் கூட்டத்திலே நம்ம கவிஞரும் இருந்தாகணும்னு” என்று சலித்துக்கொண்டார், ஐயர்.

“சுதேசிகள் எல்லாம் என்ன ஆகப்போகிறதோன்னு கவலைப் பட்டுண்டு இருக்கறச்சே ஜயமுண்டு பயமில்லையாம்! என்ன துணிச்சல்!” என்றார் நாகசாமி.

“கொஞ்ச நாள் முன்னாடிதான் அவர் இந்தப் பாட்டைப் போட்டிருக்கார். பாண்டிச்சேரி சட்டசபையிலே இந்த எத்ராங்ஷேர்…அதான் அந்நியர் அனுமதி மசோதா தாக்கலாகி விவாதம் தொடங்கின சேதி கேழ்விப் பட்டதுமே இவர் ஜயமுண்டு பயமில்லை மனமேன்னு பாடத் தொடங்கிட்டார். கேட்டுக் கேட்டு எனக்கே மனப் பாடம் ஆயிடுத்து” என்றார், வ. ராமஸ்வாமி.
“அப்படியா? எங்கே பாடுங்கோ கொஞ்சம் கேட்கலாம்” என்று ஆவலுடன் கேட்டார், ஸ்ரீநிவாஸாச்சாரியார்.

“எனக்கு அவர் மாதிரி பாட வராதே! அவர் பாடினா அதோட கம்பீரமே தனிதான். அந்த ஆவேசமும் உணர்ச்சி பாவமும் என்னால் கொண்டு வர முடியாதே” என்று தயங்கினார், ராமஸ்வாமி.

சிறு வயது, அரவிந்தருக்கு உதவியாக இருந்துகொண்டே கவிஞரிடமும் தேவதா விசுவாசம் ராமஸ்வாமிக்கு. கவிஞரைத் தேடிக்கொண்டு போகும் போதெல்லாம், வாரும் ஒய் வ.ரா. என்று கவிஞர் வரவேற்கையில் ராமஸ்வாமிக்குப் பெருமிதம் தாங்காது. எழுத்துலகில் பிரவேசித்தால் வ.ரா. என்கிற பெயருடன்தான் பிரவேசிக்க வேண்டும் என்று சங்கற்பித்துக்கொள்வார்.

“எனக்கென்னவோ அவரை இதிலெல்லாம் ஈடுபடுத்தித் தொந்தரவு செய்ய வேண்டாம்னுதான் தோணறது. அவருக்கு இநதச் சட்டம் ஷரத்து, வழக்கு, விசாரணை இதிலெல்லாம் கவனம் போகாது. இதுக்கெல்லாம் உபாயம் தேடக் கூடிய மனநிலை அவருக்குக் கிடையாது. ஆனால் அரவிந்த பாபுதான் என்னவோ பாரதி, பாரதி என்கிறார்,” என்று சலித்துக் கொண்டார், வ.வே.சு. ஐயர்.

+++

புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்திருந்த சுதேசிகளுக்குப் புதிதாக ஒரு சோதனை. அதிலும் இப்போது வந்திருப்பது பெரும் சோதனை.
ஆங்கிலேயனுடன் வெட்டுப் பழி குத்துப் பழி என்று விரோதம் பாராட்டும் ஃபிரெஞ்சுக்காரனுக்கு இப்போது திடீரென ஆங்கிலேயனுடன் அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

1911-12 களில் ஜெர்மனியின் கெய்ஸர் ஃபிரான்ஸை எல்லாவிதங்களிலும் துன்புறுத்தத் தொடங்கியது முதலே இது ஏதோ விபரீத்தில்தான் முடியப்போகிற்து என்று ஃப்ரெஞ்ச் இந்தியா என அறியப்படும் புதுச்சேரியில் வசிக்கும் சுதேசிகள் பலரும் கவலைப்பட ஆரம்பித்து விட்டார்கள்.

“ஜெர்மனி கொடுக்கிற தொல்லை தாங்காமல் சுய மரியாதையை விட்டுக்கொடுத்து, பழைய பகைமைகளை யெல்லாம் மறந்து அசட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டு பிரிட்டிஷ்காரனிடம் குலாவவேண்டிய நிர்பந்தம் ஃப்ரான்சுக்கு. சந்தர்ப்பத்தை பிரிட்டிஷ்காரன் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவற மாட்டான். உலகத்திலே இருக்கிற ஃப்ரெஞ்சு காலனிகள் எதையாவது தன் பெயருக்கு மாற்றித் தரும்படிக் கேட்டாலும் கேட்பான். குறைந்தது இங்கே பாண்டிச்சேரியில இருக்கிற நம்மையெல்லாம் ஒப்படைக்கும்படிக் கேட்டாலும் கேட்பான். அவன் கண்ணுக்கு நாம்தான் ராஜத் துவேஷிகள் ஆச்சே” என்று நண்பர்கள் வட்டத்தில் ஐரோப்பிய அரசியலை விவரித்தார், வ.வே.சு. ஐயர்.

அவர் சொன்னதுபோலவே காய்கள் நகர்ந்தன. ஆனால் ஃப்ரான்ஸின் பிரதமராகப் பதவியேற்ற புவாங்கரே, ஃப்ரெஞ்சுக் கொடி பறக்கும் எந்தப் பகுதியையும் யாருக்கும் தாரை வார்க்க மாட்டோம் என்று சொன்னதோடு முக்கியமாக துய்ப்ளே பெருமித உணர்வுடன் கீழைக் கடலை மேற்பார்வை பார்க்கிற மாதிரி பிரமாண்ட சிலையாய் நிற்கிற பாண்டிச்சேரியை விட்டுக் கொடுக்கும் பேச்சே இல்லை என்று பிரகடனம் செய்ததால் புதுச்சேரி சுதேசிகளிடையே புதிய நம்பிக்கை பிறந்தது.

பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குப் பொறுக்கவில்லை. ஃபிரஞ்சுப் பகுதிகளில் தம்மிச்சையாகக் குடியேறியிருப்பவர்களை வெளியேற்றும் சட்டத்தை யாவது இயற்ற வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கியது. ஃபிரான்சும் வேறு வழியின்றி அதற்கு உடன்பட்டது.
புதுச்சேரி சட்டசபையில் அந்தியர் (எத்ராங்ஷேர்) அனுமதி மசோதா விவாதத்துக்கு வந்தது முதலே சுதேசிகளுக்க்கு அதன் விளைவு எப்படியிருக்கும் என்று தெரிந்துவிட்டது. புதுச்சேரி எல்லையில் கழுகைப் போல் காத்துக் கொண்டிருக்கும் பிரிட்டிஷ் அரசாங்கப் போலீஸ் தங்களையெல்லாம் கொத்திக்கொண்டு போய்விடும் என்பதை உணர்ந்திருந்த அவர்களுக்கு இப்படியொரு சட்டத்தை இயற்றுமாறு பிரிட்டிஷ் அரசு ஃபிரான்ஸை நிர்பந்தம் செய்திருப்பதே தங்களையெல்லாம் ஒரே வலை வீச்சில் பிடித்துக்கொண்டு போய்விட வேண்டும் என்கிற பேராசையினால்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டிய விஷயமா என்ன!

+++
அரவிந்த பாபுவின் அறையில் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். கவிஞர் இன்னும் வரவில்லை.

“பாரதிக்குத் தகவல் கொடுத்திருக்கிறீர்கள் அல்லவா? எங்கே இன்னும் காணவில்லை அவரை?” என்று கேட்டார், அரவிந்தர்.

‘அவர் வந்துதான் என்ன ஆகப் போகிறது! அவர் வாழ்கிற உலகமே வேறு! இந்த மாதிரி விவகாரங்களுக்கெல்லாம் அவரிடமிருந்து என்ன பரிகாரம் கிடைத்துவிடும்?’ என்று நாகசாமி.தமக்குள் முனகிக் கொண்டிருக்கும்போதே புயலெனப் பிரவேசித்தார், கவிஞர்.

“என்ன அரவிநத பாபு, சதுரங்கப் பலகையை எடுத்து வைக்கச் சொல்லுங்களேன், போடலாம் ஒரு ஆட்டம்” என்றவாறு உத்சாகத்துடன் அரவிந்தர் அருகில் போய் அமர்ந்துகொண்டார்,. கவிஞர்

கவிஞருக்கு சதுரங்கம் எல்லாம் அவ்வளவாகப் பழக்கம் கிடையாது. ஆனால் ராஜா, ராணி, ஆனை, குதிரை, காலாட்படை என்றெல்லாம் பார்க்கும்போது அவருக்குள் ரஜோ குணம் பொங்கி அட்டகாசம் செய்யத் தொட்ங்கிவிடுவார்.

“பாரதி, இப்போது நாம் விளையாடும் நாட்டத்தில் இல்லை. ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதித்து என்ன முடிவெடுக்கலாம் என்று ஆலோசிக்கத்தான் கூடியிருக்கிறோம்” என்று பொறுமையாக அவருக்கு பதிலளித்தார், அரவிந்தர்.

“தீர ஆலோசித்துச் சரியான முடிவு எடுப்பதற்குத்தான் நீங்கள், ஐயர் எல்லாம் இருக்கிறீர்களே, அப்புறம் எதற்கு விவாதம், ஆலோசனைக் கூட்டம் எல்லாம்?” என்று விளையாட்டாகவே கேட்டார், கவிஞர்.

“இடையில் ஒரு நல்ல சேதி வந்திருக்கிறது. ஐந்து கெளரவ மாஜிஸ்திரேட்டுகள் இன்னாரை எனக்கு நன்றாகத் தெரியும். இவர் ஃப்ரெஞ்ச் இந்தியாவில் வசிக்கத் தகுதி வாய்ந்தவர் என்று சான்றுப் பத்திரம் கொடுத்தால் அந்த நபரை புதுச்சேரியில் இருக்க அனுமதிக்கலாம் என்று ஒரு திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்களாம். அந்த மாதிரி ஒரு சான்று சுதேசிகளுக்கு எங்கே கிடைக்கப் போகிறது என்கிற அலட்சியத்தில் பிரிட்டிஷ் இந்திய அரசு அந்தத் திருத்தத்தை எதிர்க்கவில்லையாம். சட்டம் அந்தத் திருத்தத்துடனேயே இன்று நிறைவேறிவிடும் போலிருக்கிறது” என்று அறிவித்தார், வ.வே.சு.

“சட்டம் நிறைவேறிவிட்டால் உடனே நமக்கு ஓலை வந்துவிடும். வெளியேறு, இல்லாவிட்டால் சான்று பத்திரம் தாக்கல் செய் என்று” என்றார், அரவிந்தர்.

“விஷயம்தான் வெட்ட வெளிச்சமாகிவிட்டதே, அப்ப்புறமென்ன, நான் வருகிறேன்” என்று எழுந்துகொண்டார், கவிஞர்.

“ஓய், ராமஸ்வாமி, நாளை காலமே எட்டு மணிக்கு அகத்துக்கு வந்துவிடும்” என்று வ.ரா.விடம் உத்தரவு போடுவது போல் சொல்லிவிட்டு வந்த வேகத்தில் கவிஞர் புறப்பட்டார்.

“அதற்குள் என்ன அவசரம்?” என்றார், மண்டையம்.

“ஜயமுண்டு பயமில்லை மனமே” என்றவாறு திரும்பிக் பார்க்காமல் விரைந்தார், கவிஞர்.

+++
மறுநாள் காலை கவிஞரின் வீட்டுக்கு ராமஸ்வாமி சென்றபோது கவிஞர் தயாராக இருந்தார். வ. ரா.வைப் பார்த்ததும் ‘புறப்படுவோமா’ என்றார். உடனே அவர் புறப்பட்டும் ஆயிற்று. வாய் திறக்காமல் பின்தொடர்ந்தார், வ. ரா.

கால் நடையாகவே கலவை சங்கரச் செட்டியார் வீடு வரை வந்துவிட்டார்கள். இங்கே எங்கே வந்திருக்கிறோம் என்று வ. ரா. யோசித்துக் கொண்டிருக்கும்போதே விடுவிடு வென்று செட்டியார் வீட்டுக்குள் நுழைந்துவிட்டார், கவிஞர்.

கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார், சங்கரச் செட்டியார்.
கவிஞரைக் கண்டதும் முகம் மலர எழுந்துகொண்டார்.

“வரணும் ஸ்வாமி, வரணும்” என்று பய பக்தியுடன் கைகளைக் கூப்பினார், செட்டியார்.

“என்ன செட்டியார்வாள், நீங்கள் எல்லாம் பக்க பலமாக இருந்தும் நாங்கள் எல்லோரும் வெளியே போய்விடும்படியாக ஒரு புதுச் சட்டம் வந்திருக்கிறதே, தெரியாதா?” என்று கேட்டார், கவிஞர்.

“நா ராத்திரிதான் பட்டணத்துலேருந்து திரும்பி வந்தேன். இங்கே என்ன விசேஷம்னே தெரியாதே” என்றார் செட்டியார்.

“அந்நியர்கள் புதுச்சேரியைவிட்டு வெளியே போய்விட வேணும்னு சட்டம் வந்தாச்சு. நாங்கள்ளாம் இனிமே இங்க இருக்க முடியாது.”

“இருக்க முடியாதா? அதென்ன உங்களையெல்லாம் வெளியே அனுப்பிவிட அவ்வளவு சுலபமா அனுமதிச்சுடுவோமா” என்று உறுமினார், செட்டியார்.

“சட்டம்னு வந்துட்டா யார் என்ன பண்ண முடியும்? அரவிந்தர், வ.வே.சு. எல்லாரும் ஐரோப்பாவிலே எந்த தேசத்துக்காவது போயிடலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டா. வேணுமானா ஒரு ஷரத்து இருக்கு, சட்டத்துலே. அஞ்சு கெளரவ மாஜிஸ்திரேட்டுகள் இன்னார் எனக்குத் தெரிஞ்சவர், இவர் இங்கே இருக்கலாம்னு அத்தாட்சிப் பத்திரம் கொடுத்தா இருக்கலாம்.”

சங்கரச் செட்டியார் முகம் மேலும் மலர்ந்தது.

“அட, நானே ஒரு கெளரவ மாஜிஸ்திரேட்டுதான், ஸ்வாமி! மீதி நாலு பேரையும் இன்னும் ரெண்டு மணி நேரத்துல கண்டு பிடிச்சுக் கையெழுத்தும் வாங்கிடலாம். நீங்க எல்லார் கிட்டேயிருந்தும் பத்திரம் தயார் பண்ணிக் கொண்டு வாங்க. அத்தாட்சிக் கையெழுத்துக்கு நா ஏற்பாடு பண்ணிடறேன்” என்றார் செட்டியார்.

“வந்தனம். வந்த வேலை முடிஞ்சுது. ராத்திரியே பராசக்தி எனக்கு இன்னாரைப் போய்ப் பாருன்னு அடையாளம் காட்டிட்டா. அதான் பொழுது விடிஞ்சதும் நேரா உங்களைப் பார்க்க வந்தேன். அப்ப நான் புறப்படவா?”

“என்ன ஸ்வாமீ, உங்க வேலையை எவ்வளவு சுளுவா முடிச்சுக் கொடுத்திருக்கேன். அதுக்குப் பரிசு எதுவும் தர வேண்டாமா?”

“பரிசா? கொடுத்தால் போகிறது. கேளுங்கள் என்ன வேணும்னு. எவ்வளவு பெரிய காரியத்தை அனாயாசமாகச் செய்து முடித்திருக்கிறீகள்! எவ்வளவு பரிசு கொடுத்தாலும் தகுமே!”

“ஆமா. பெரிய பரிசாகத்தான் கேட்கிறேன். புதிசா ஒரு பாட்டுப் பாடுங்கள்!” .

“அவ்வளவுதானே!” என்றார் கவிஞர். ஊஞ்சலில் துள்ளி அமர்ந்து பாடலானார்:

‘ஜயமுண்டு பயமில்லை மனமே..’

==================================================================
ஆதாரம்: 1. வ. ரா. எழுதிய ‘மகா கவி பாரதியார்.’
2. டாக்டர் வி. வெங்கட்ராமன் எழுதிய ’பாரதிக்குத் தடை’
(சுதந்திரா பதிப்பகம், ராஜபாளையம் 606 117)

Series Navigationகைப்பேசி பேசினால்ஜீ வி த ம்
author

மலர்மன்னன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    malarmannan says:

    இச்சிறுகதை அமுதசுரபி தீபாவளி மலர் 2011-ல் வெளிவந்தது.
    -மலர்மன்னன்

  2. Avatar
    V. Srinivasan says:

    மகாகவி பாரதியைக் குறித்த பல அருமையான ஆழங்களைத் தொடும் இந்த கதை ஒரு வரப் பிரசாதம்.
    இதுபோன்ற பல சம்பவங்கள் – கதை என்று சொல்ல மனசு வரவில்லை, தொடர்ந்து வெளி வரவேண்டும்.
    பாரதியைப் பற்றி துளியும் தெரியாத பல ஜீவன்களுக்கு, இத்தகைய அறிமுகம் மிக அவசியம்.
    வெளியிட்ட திண்ணை நண்பர்களுக்கு நன்றி.
    பாரதி எந்த சூழலிலே எப்படி இருந்தார், என்ன மனோலயத்திலே திளைத்தார் என்பது, சிலருக்கேனும் புரிந்தால் நல்லதுதானே ?
    நன்றி.
    ஸ்ரீனிவாசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *